Photo, REUTERS
இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் தேர்தல் காலங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவது அரசியல் கலாசாரத்தின் ஒரு பொதுவான பண்பாகக் காணப்படுகின்றது. தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைச் செலவுசெய்து தேர்தலில் வெற்றி பெறுவது, வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்குவது, பொருட்களை பகிர்ந்தளிப்பது, அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வது, வன்முறைகளில் ஈடுபடுவது போன்ற இன்னொரன்ன ஒழுக்கத்துக்குப் புறம்பான வழிமுறைகள் ஊடாக பதவிக்கு வருவதை நாம் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலே காணமுடியும்.
இப்பின்புலத்திலேயே மிக நீண்டகாலமாக சிவில் சமூக அமைப்புகள், ஊடகவியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் இலங்கையில் தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டமொன்றினைக் கொண்டுவர வேண்டும் என அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்கள். ஆயினும், அதற்கு சாதகமானதொரு பதிலை அரசாங்கம் நீண்டகாலம் வழங்கவில்லை. அரசியல்வாதிகள் தனது தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு சட்டமொன்று கொண்டுவரப்படுவதை விரும்பவில்லை என்பதே யதார்த்தமாகும். அது அவர்களுடைய வெற்றியின் சாத்தியப்பாட்டைத் தடுத்துவிடும் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் காணப்படலாம். தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்த சட்டமொன்று நீண்டகாலம் இல்லாத காரணத்தினால் தகுதி இல்லாத, சட்டத்துக்கு புறம்பான தொழில்களில் ஈடுபடுகின்ற, நாடாளுமன்ற அரசியலுக்குப் பொருத்தமற்ற பலர் தமது பண மற்றும் ஆள் பலத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்கும் ஏனைய அரசியல் நிறுவனங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுகின்ற நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறைகளே நாட்டினுடைய தற்போதைய நிலைமைக்கும், ஊழல் மோசடிகளுக்கும், அரசாங்கத்தின் தோல்விக்கும், தவறான கொள்கைகளுக்கும் காரணம் என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் பணத்திற்காக, பொருட்களுக்காக வாக்களித்தமையும் மற்றும் தவறான அரசியல்வாதிகளை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்தமை என்பன இலங்கையில் தோல்வியடைந்த அரசு ஒன்று உருவாகுவதற்கு அடிப்படையாக அமைந்த காரணிகளாகும். நாட்டின் தற்போதைய வங்குரோத்து நிலைமைக்கு இதுவே பிரதான காரணமென பலர் வாதிடுகின்றனர்.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டப் பின்னர தேர்தல் செயன்முறையில் ஊழல் மோசடிகள் மிக வேகமாகவே அதிகரித்துள்ளன. 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனோடு இணைந்த வகையில் தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளும் இல்லாது செய்யப்பட்டன. உண்மையில், இத்தகைய சட்ட ஏற்பாடுகள் 1978ஆம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் நடைமுறையில் இருந்தது. விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தேர்தல் அரசியல் மிக மோசமான ஊழல் மற்றும் மோசடிகள் மலிந்த ஒரு செயன்முறையாக மாறிவிட்டது என்பது சமூகத்தில் நிலவும் பொதுக் கருத்தாகும். இந்நிலைமையினைப் போக்க வேண்டும் என்ற தொடர்ச்சியான அழுத்தத்தின் பின்புலத்திலேயே 2023ஆம் ஆண்டு மூன்றாம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டம் (Regulation of Election Expenditure Act) ஜனவரி 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உலகில் 49 நாடுகளில் தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் உண்டு. சுமார் 143 நாடுகளில் தேர்தல் நிறைவடைந்தப் பின்னர் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து கணக்கறிக்கைகள் தேர்தல்களை நிர்வகிக்கும் நிறுவனத்தினால் கோரப்படுகின்றது. இவை அந்நாடுகளின் சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், பல நாடுகளில் வேட்பாளர்கள் தேர்தல் காலங்களில் நன்கொடை வாங்குதல் மற்றும் கோபரேட் கம்பனிகளிடம் பணம் பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்கு சட்ட ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன.
இலங்கையில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டப் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இடம்பெறவிருந்தது. ஆயினும், தேர்தல் பிற்போடப்பட்ட காரணத்தினால் இந்தச் சட்டத்தை பிரயோகிக்க முடியவில்லை. நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல், அடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்களில் இச்சட்டத்தினை பயன்படுத்தும் வாய்ப்புண்டு. ஊழல் மோசடிகள் மலிந்துக் காணப்படும் நாட்டில் இத்தகையதொரு சட்டம் கொண்டுவரப்பட்டமை ஜனநாயக வெற்றி என்று கருத வேண்டும். மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூற முடியும். அரசியல்வாதிகளுடைய பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும், தேர்தல் செயல்முறையில் காணப்படுகின்ற பொறுப்பற்ற தன்மையைக் கட்டுப்படுத்துவதற்கும், ஊழல் மோசடிகளைக் குறைப்பதற்கும் இச்சட்டம் கைகொடுக்கும் என நம்புகின்றோம். இச் சட்டத்தினுடைய உள்ளடக்கம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய சில அறிமுக குறிப்புகளை வழங்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் முக்கியத்துவம்
இலங்கை பிரஜைகள் தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தைப்பற்றி அறிந்திருப்பதும் அதனைப் பயன்படுத்துவதும் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் பணச் செலவை கட்டுப்படுத்த உதவும் என அண்மையில் தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு. சமன் ரத்நாயக்க அவர்கள் குறிப்பிட்டார். இதனை எமக்குள்ள ஒரு கூட்டுப்பொறுப்பாக கருத வேண்டும். தேர்தல் காலங்களில் அதிகளவில் கருப்புப் பணம் பயன்படுத்தப்படுவதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டு காணப்படுகின்றது. தேர்தல் செலவீனத்தை கட்டுப்படுத்தாவிட்டால் அரசியல்வாதிகள் பதவிக்கு வந்தப் பின்னர் பொதுமக்களுடைய நலன்கள், கோரிக்கைகள் மற்றும் வாக்குறுதிகளை மறந்துவிட்டு தான் தேர்தல்காலத்தில் செலவு செய்த பணத்தை மீட்டெடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பர் என்பதனை நாம் கடந்தக் காலங்களில் அவதானித்தோம். இதற்கு விதிவிலக்கான அரசியல்வாதிகளும் உள்ளனர் என்பதனை குறிப்பிட வேண்டும்.
கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மொனராகலை பிரதேச சபைக்கு போட்டியிட்ட ஹர்சக பிரிய திசாநாயக்க என்பவர் நான்கு கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பிரசாரத்துக்காகச் செலவு செய்தமை வெளிக்கொண்டு வரப்பட்டது. அவர் போட்டியிட்ட மதுரகெய்ய வட்டாரத்தின் மொத்த வாக்காளர்கள் தொகை 1700 பேர் ஆகும். சுமார் 1700 வாக்காளர்கள் இருக்கின்ற ஒரு வட்டாரத்தில் நான்கு கோடி ரூபாய் பணத்தை செலவு செய்து வெற்றி பெற்று பின்னர் அந்த சபையின் தலைவராக நியமனம் பெற்றார். திசாநாயக்க வாக்காளர்களை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கியமையினை எதிர்த்து தேர்தலை கண்காணிக்கின்ற பெப்ரல் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மத்திய நிலையம் என்பன மொனராகலை மாவட்ட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. திசாநாயக்க வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கியமைக்கான ஆதாரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்டன. போதிய சாட்சியங்கள் இருந்தமையால், மொனராகலை மாவட்ட மேல் நீதிமன்றத்தின் நீதிபதி திசாநாயக்கவை பதவியில் இருந்து நீக்குமாறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றினை வழங்கினார். அதன்படி திசாநாயக்கவின் பதவி பறிக்கப்பட்டது. இத்தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கும் என நம்பலாம். தேர்தல் செலவினங்களை கட்டுப்படுத்த அவசியமான சட்ட ஏற்பாடுகள் இன்மையே இத்தகைய நிலைமை ஏற்பட காரணமாக அமைந்தது. திசாநாயக்க செலவு செய்த நான்கு கோடி ரூபாய் பணம் பொது மக்களின் அபிவிருத்திக்காக பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்டப் பணம் என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. இது ஒரு உதாரணம் மாத்திரமே ஆகும். இத்தகையதொரு பின்புலத்தில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாக காணப்படுகின்றது. ஆகவே, இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் பொதுமக்கள் மத்தியில் இடம்பெற வேண்டிய தேவையொன்று இன்று காணப்படுகிறது. இது மிகவும் அவசரமானத் தேவையாகும். இப்பணியில் ஊடகங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு முக்கியப் பங்குண்டு.
இச்சட்டம் நீதியான மற்றும் நேர்மையான தேர்தல் ஒன்றை நடாத்த உதவும் என நம்பமுடியும். மக்கள் நேர்மையான, தகுதி வாய்ந்த மற்றும் நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய திறானியினைக் கொண்ட அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு இதன் மூலம் ஏற்படும். விலைகொடுத்து வாக்காளர்களை வாங்குகின்ற அரசியல் கலாசாரத்தினை இதன் மூலம் சவாலுக்குட்படுத்த முடியும். இன்று தேர்தல் காலங்களில் வாக்காளர்கள் நுகர்வோராக (consumer) மாற்றப்படுகின்றார்கள். அரசுக்கும் பிரஜைகளுக்கும் (state -citizen) இடையிலான உறவு நுகர்வோருக்கும் வியாபாரிகளுக்கும் (consumer and businessmen) இடையிலான உறவாக தேர்தல் காலங்களில் மாறிவிடுகின்றது. அரசியல்வாதிகள் வாக்காளர்களை நுகர்வு பொருளாக பார்க்கின்றார்கள். இதற்கு தேர்தல் காலத்தில் பயன்படுத்தப்படுகின்ற பணம் முக்கிய செல்வாக்கு செலுத்துகின்றது. ஏனென்றால் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் விருப்பு வாக்குமுறை அறிமுகப்படுத்தப்பட்டமையானது, தேர்தல் செலவினங்கள் உச்சகட்டத்தை அடைவதற்கு பாரியளவில் செல்வாக்கு செலுத்தியுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகளைவிட தனிப்பட்டவர்களே தேர்தல் காலத்தில் முக்கியத்துவம் பெறுகின்றார்கள். வாக்காளர்களும் கட்சியின் கொள்கைகள் மற்றும் கருத்தியலை புறந்தள்ளிவிட்டு தனி நபர்களுக்கே முன்னுரிமை வழங்கும் நிலை எழுச்சிப்பெற்றுள்ளது. இது பெரிதும் வருந்ததக்க விடயமாகும். தேர்தல் காலத்தில் வாக்காளர்கள் தனி நபர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு வேட்பாளர்கள் செலவு செய்கின்ற பணத்தொகை பெரியளவில் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதனை நாங்கள் மனம் கொள்ள வேண்டும். ஆகவேதான் விகிதாசார தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்பது பற்றியும் விருப்பு வாக்கு முறையை ஒழிக்க வேண்டும் என்பது பற்றியும் தொடர்ச்சியாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
இப்பின்புலத்தில், இப்புதிய சட்டத்தைப் பயன்படுத்தி தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு மற்றும் அதனைக் கண்காணிப்பதற்கு எமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரத்துக்காக மேற்கொள்ளும் சகல (கூட்டங்களை நடாத்துதல், பதாதைகள், போஸ்டர், துண்டு பிரசுரம், விளம்பரங்கள், போக்குவரத்து, இசை நிகழ்ச்சி, மேடைகளை அமைத்தல், உணவு, பொருட்களைப் பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட) செலவுகளையும் நாம் கண்காணித்து அந்தத் தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க முடியும். ஒரு வேட்பாளருக்கு அவருடைய நண்பரொருவர் 20 நாளைக்கு தமது சொந்த வாகனத்தைத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்துவதற்கு வழங்கியிருந்தால் அது குறித்த விபரங்களை கூட குறிப்பிட வேண்டும். வாகனமொன்றினை வாடகைக்கு பெற்றுக்கொண்டால் ஒரு நாளைக்கு செலுத்தவேண்டிய கூலி எவ்வளவு என்ற அடிப்படையில் 20 நாளைக்கு கணிப்பிட வேண்டும். அண்மையில் நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலே போட்டியிடுவதற்கு தனக்கு விருப்பம் இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலுக்கு முன்னரேயே குறிப்பிட்டார். ஊடகவியலாளர்கள் ஏனென்று கேட்டபோது, தேர்தல் செலவுகளை தன்னால் ஈடுசெய்ய முடியாது, அந்தளவுக்கு தன்னிடம் நிதி வசதி இல்லை எனக் குறிப்பிட்டார். இலங்கையிலும் இந்நிலைமையே காணப்படுகின்றது. சாதாரண குடும்ப பின்புலத்தைச் சேர்ந்த, தகுதிவாய்ந்த மற்றும் திறமையுடைய ஒரு நபரால் எமது நாட்டில் தற்போது இருக்கின்ற தேர்தல் முறைமையில் அல்லது மோசடி கலாசாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவது கடினமானது. அதற்குப் பிரதான காரணம் தேர்தல் செலவு என்பதனை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்நிலைமையானது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீதும் பாராளுமன்ற அரசியல் மீதும் இலங்கை பிரஜைகள் மத்தியில் பாரிய அவநம்பிக்கை ஏற்படுவதற்கு வழிசெய்துள்ளது. மாற்றுக் கொள்கைக்கான நிலையம் 2024ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வொன்றில் பாராளுமன்றத்தின் மீது 20 விகிதமான மக்களும் அரசியல் கட்சிகளின் மீது 19 விகிதமான மக்களும் நம்பிக்கை வைத்திருப்பது வெளிக்கொண்டுவரப்பட்டது. இந்நிலை தொடர்ந்தால் ஆபத்தான விளைவுகள் எதிர்காலத்தில் உருவாகலாம். ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாக சிலர் இதனை வியாக்கியானம் செய்கின்றார்கள்.
தேர்தல் செலவினை தீர்மானிப்பது எப்படி
இச்சட்டம் தேர்தல் செலவுகளை வரையறை செய்யும் அதிகாரத்தினை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்குகின்றது. அதன்படி கடந்த ஆண்டில் இடம்பெற இருந்த உள்ளூராட்சி தேர்தலுக்கு தேர்தல் செலவு எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது என்பதனை நாம் விளங்கிக்கொள்வது அவசியமாகும். ஒரு குறிப்பிட்ட பிரதேச சபை பிரிவுக்குள் வாழுகின்ற மொத்த வாக்காளர்களை அடையாளம் கண்டு அதில் ஒரு வாக்காளருக்கு 20 ரூபாயை ஒரு வேட்பாளர் செலவிட முடியும் என்பதனை தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பிரதேச சபை எல்லைக்குள் இருபதாயிரம் வாக்காளர்கள் இருப்பார்களாயின், தலா 20 ரூபாய் என்ற அடிப்படையில் இருபதாயிரம் வாக்களார்களுக்கு வேட்பாளர் ஒருவர் செலவு செய்ய முடியும். இதுவே இந்தத் தேர்தல் செலவுக்கான வரையறை என்பதனை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது. தேர்தல் செலவுகளை ஆணைக்குழு நிர்ணயிக்கின்ற போது தேர்தல் தொகுதியின் புவியியல் பிரதேசம் மற்றும் சனத்தொகை செறிவை கவனத்தில் எடுக்கின்றது.
அந்தவகையில், நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு இச்சட்டத்தின் கீழ் தேர்தல் செலவு நிர்ணயிக்கப்படும். வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து ஐந்து நாட்களுக்குள் கட்சியினுடைய செயலாளர்களை மற்றும் சுயாதீன குழுக்களின் தலைவர்களை அழைத்து தேர்தல் ஆணைக்குழு தேர்தல் செலவின் எல்லையை தீர்மானிக்கின்ற அதிகாரத்தை கொண்டுள்ளது. தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் சகல அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தேர்தல் ஆணைக்குழுவில் அல்லது அந்தந்த மாவட்டத்தில் இருக்கின்ற தெரிவத்தாட்சி அலுவலர் காரியாலயத்தில் சென்று செலவு தொடர்பான அறிக்கையினை ஒப்படைக்க வேண்டும். அவ்வறிக்கையில் ஒவ்வொரு வேட்பாளரும் பயன்படுத்திய சொந்த நிதி எவ்வளவு? தமக்கு உள்நாட்டில் நன்கொடையாக கிடைக்கப்பெற்ற நிதி எவ்வளவு? பரிசாக கிடைக்கப்பெற்றவை? வங்கி வைப்புக்கள் எவ்வளவு? போன்ற எல்லா விபரங்களையும் உள்ளடக்கியதாக கணக்கறிக்கைகளை ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும். கணக்கறிக்கைகளில் பொய்யான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது போதிய ஆதராங்களுடன் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டால் குறித்த பிரதிநிதியின் குடியியல் உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் மூன்று ஆண்டுகளுக்கு பறிக்கப்படும். அந்த மூன்று ஆண்டுகளுக்கு குறித்த நபர் வாக்களிக்கவோ, தேர்தலில் போட்டியிடவோ முடியாது. மேலும், அவர் ஏதேனும் ஒரு அரசியல் நிறுவனத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தால் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்பதையும் இந்த சட்டம் குறிப்பிடுகின்றது. அத்துடன், ஏனைய தேர்தல் சட்ட ஏற்பாடுகளுக்கமைய அபராதமும் விதிக்கப்படும்.
தேர்தல் செலவுகளில் மோசடிகள் நடைபெறுகின்ற பட்சத்தில் அல்லது பொய்யான தகவல்கள் வழங்கப்படும் போது அது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு அத்தகைய முறைப்பாடுகள் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படும். இச்சட்டம் அரச சொத்துக்களை பயன்படுத்துவதைத் தடை செய்கின்றது. சர்வதேச நன்கொடைகளை மற்றும் வெளிநாட்டில் இருப்போரிடமிருந்து (உறவினர், நண்பர்கள், வர்த்தகர்கள், கம்பனிகள்) பரிசுப் பொருட்களை வாங்குவதனைத் தடை செய்கின்றது. அதுமட்டுமல்லாது பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ அல்லது சுயேட்சை குழுவுக்கோ நன்கொடை அல்லது பரிசு பொருட்களை வழங்க முடியாது என்பதையும் இந்தச் சட்டம் தெளிவாக குறிப்பிடுகின்றது. அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலங்களிலே வங்கிகளியிலே வைப்பீடு செய்யப்படுகின்ற அனைத்து பண விபரங்களும் தேர்தல் செலவினத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் செலவு தொடர்பான கணக்கறிக்கைகளை பொது மக்கள் பார்வையிட முடியுமா?
தேர்தல் தொடர்பான எல்லா செலவுகளையும் ஆவணப்படுத்தி சரியான கணக்கறிக்கையை தயாரித்து அதனைக் கட்சியின் செயலாளர்கள் உறுதி செய்து, பின்னர் சமாதான நீதிவானின் சான்றிதழுடன் 21 நாட்களுக்குள் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து 10 நாட்களுக்குள் கணக்கு விபரங்களை பொது மக்கள் பார்வையிட முடியும் என்ற தகவலை இலங்கையில் வெளிவருகின்ற பிரதான பத்திரிகைகளில் (தமிழ் சிங்களம், ஆங்கில) ஆணைக்குழு பிரசுரிக்கும். பொது மக்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அல்லது தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சென்று அவற்றை பார்வையிடலாம், பரிசோதிக்கலாம். அதன் மூலம் பொதுமக்கள் இக்கணக்குகளில் உள்ள குறைப்பாடுகள், தவறுகள், மோசடிகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்ள மற்றும் அவற்றை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கப்பெறுகின்றது. அரசியல் கட்சிகள் 21 நாட்களுக்குள் இந்தத் தகவல்களை வழங்காவிட்டால் அது சட்டத்துக்குப் புறம்பான விடயமாகும். அது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகளையும் இச்சட்டம் வழங்குகின்றது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
உண்மையில், இத்தகையதொரு சட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாக இருந்தால் (உலக அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்ற பொழுது) வினைத்திறன் மிக்க அமுலாக்க நிறுவனம் ஒன்று அவசியமாகும் (effective enforcement). தேர்தல் ஆணைக்குழுவால் மாத்திரம் இந்தக் காரியத்தை தனித்து செய்ய முடியாது. ஆணைக்குழு குறைந்தளவிலான மனித மற்றம் நிதி வளம் மற்றும் ஏனைய மட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. ஆகவேதான் தேர்தல் ஆணைக்குழு இச்செயற்பாட்டினை ஏனைய பல நிறுவனங்களோடு இணைந்து செய்ய முற்படுகின்றது. அந்த வகையில் சட்டமா அதிபர் காரியாலயம், கணக்காய்வாளர் காரியாலயம், தேசிய பொலிஸ் ஆணைக்குழு, உள்நாட்டு இறைவரி திணைக்களம், மனித உரிமை ஆணைக்குழு, தேர்தல்களை கண்காணிக்கின்ற அமைப்புக்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இலங்கையின் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு, பொது நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவலகள் அமைச்சு என பல அமைப்புகளோடு சேர்ந்து இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டங்களை வகுத்து வருகின்றது. தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் செய்கின்ற செலவுகளை கண்காணிப்பதற்கான ஒரு பொறிமுறையினையும் தேர்தல் ஆணைக்குழு சிவில் அமைப்புகளின் உதவியுடன் தயாரித்து வருவதனை அறிய முடிகின்றது. இவை நடைமுறைக்கு வருகின்றப் பொழுது இந்த ஆண்டில் நடக்கவிருக்கின்ற தேர்தல்களில் தேர்தல் செலவுகளை ஒரு குறிப்பிட்டளவுக்காவது கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பு கிட்டும். முழுமையான வெற்றியைப் பெற முடியாவிட்டாலும்கூட, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், ஊழல் மோசடிகளைக் குறைப்பதற்குமான வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம். இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகள் மிகவும் இறுக்கமானதாக இருப்பதனால் அரசியல்வாதிகள் அல்லது வேட்பாளர்கள் மத்தியில் இச்சட்டம் ஒருவகையான அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. ஆகவே, இச்சட்டம் தொடர்பான பரந்தக் கலந்துரையாடல்கள் சகல மட்டங்களிலும் தீவிரமாக இடம்பெற வேண்டும். அது அரசியல்வாதிகளுக்கு ஒரு செய்தியினை வழங்குவதாக அமையும்.
இச்சட்டத்தின் நோக்கங்களை அடைந்துகொள்வதில் ஊடகங்களுக்கு பெரிய பொறுப்புண்டு. அரசியல்வாதிகள் நடாத்துகின்ற கூட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளில் ஊடகங்களின் தலையீடு காணப்படுகின்றன. ஆகவே, ஊடகவியலாளர்களுக்கு தேர்தல் காலங்களில் வேட்பாளர்களின் செலவு தொடர்பான விடயங்களை ஆவணப்படுத்துவதற்கும் அது தொடர்பான தகவல்களை திரட்டுவதற்குமான வாய்ப்பு கிடைக்கின்றது. பின்னர் வேட்பாளர்கள் தேர்தல் செலவு தொடர்பாக பொய்யான தகவல்களை வழங்க முற்படும் பொழுது அவற்றை சவாலுக்குட்படுத்துவதற்கு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு கிட்டும். உண்மையில், இச்சட்டத்தினை அமுலாக்குவதில் கூட்டிணைந்த அணுகுமுறையொன்று அவசியமாகும்.
பிரஜைகளின் பொறுப்பு
இச்சட்டம் சாதகமான பெறுபேறுகளைப் பெற்றுத்தர வேண்டுமாயின் துடிப்பு மிக்க அல்லது செயலூக்கமுள்ள பிரஜைகள் (active citizens) அவசியமாகும். பிரஜைகளின் பங்களிப்பும் ஆதரவும் இல்லாமல் இச்சட்டத்தை அமுல்படுத்துவது கடினமான காரியமாகும். தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று தன்னார்வ குழுக்களை உருவாக்குவதன் மூலம் இச்சட்டத்தின் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அது தேர்தல் செலவுகளைக் கண்காணிக்க மற்றும் தகவல்களைத் திரட்ட முடியும். இந்தச் சட்டத்தினை மதிக்காது மோசடி செய்வோரை, பொய்யான தகவல்களை முன்வைப்போரை ஊடகங்களின் வாயிலாக அம்பலப்படுத்த வேண்டும். அதேபோன்று மோசடிக்காரர்களின் தேர்தல் செலவு தொடர்பான விபரங்களை தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். அதேவேளை, இச்சட்டம் பற்றிய தெளிவினை ஏற்படுத்த சமூக ஊடகங்களை வினைத்திறன் மிக்க வகையில் பயன்படுத்துவது, இளைஞர்களை அதற்காக அணிதிரட்டுவது மற்றும் சட்டம் பற்றி சிறு அறிவூட்டல் வீடியோப் பதிவுகளை சமூக ஊடகங்களில் பிகிர்வது என்பன இன்றைய சூழலிள் பயனுள்ள செய்பாடுகளாக அமையும்.
அரகலய போராட்டத்துக்குப் பின்னர் அரசியல் தொடர்பான விழிப்புணர்வு இலங்கையில் அதிகரித்திருக்கின்றது. ஆகவே, பிரஜைகளின் அரசியல் எழுத்தறிவு இத்தகைய சட்டங்களின் வெற்றிக்கு பெரிதும் அவசியமாக இருக்கும். மேற்குலக நாடுகளில் இச்சட்டம் மிகச் சிறப்பாக இயங்குவதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு மக்கள் மத்தியில் காணப்படுகின்ற அரசியல் விழிப்புணர்வு பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றது. அந்நிலைமை இலங்கையிலும் உருவாக வேண்டும்.
அதேபோல், இச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இன்று வளர்ச்சி அடைந்திருக்கின்ற தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். தேர்தல் செலவினங்களைக் கண்காணிப்பதற்கு, அதுபற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு தகவல் தொழில்நுட்பத்தை இயன்ற அளவுக்கு பயன்படுத்துவது அவசியமாகும். இன்று எழுச்சிப்பெற்று வரும் செயற்கை நுண்ணறிவு (AI) பெரிதும் பயன்படும். அதேபோல் தேர்தல் சட்டங்களில் செய்யப்பட்ட இன்னும் சில மாற்றங்களையும் பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக, தேர்தல் காலங்களிலே பதாதைகளை வைப்பது, பொது இடங்களில் வேட்பாளர்களின் பெயர்களை எழுதுவது, புகைப்படங்களைக் காட்சிப்படுத்துவது, அலங்கரிப்பது போன்ற தேர்தல் சட்டங்களை மீறும் செயற்பாடுகளுக்கு இதுவரைக்காலமும் 100 – 500 ரூபாய் வரையிலான அபராதம் மாத்திரமே விதிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு அச்சட்டத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. அதன்படி இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் ஒரு இலட்சம் தொடக்கம் ஐந்து இலட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும்.
இச்சட்டத்திலே ஒரு சில குறைபாடுகள் இருக்கின்றன என்பதனையும் குறிப்பிடுவது பொருத்தமாகும். உதாரணமாக, ஜனாதிபதித் தேர்தலிலே வெற்றி பெறுகின்றவர் தமது செலவு விபரங்களை 21 நாட்களில் சமர்ப்பிக்காவிட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனென்றால், ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் விடுபாட்டுரிமை வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், வேட்பாளர்கள் பொய் தகவலை வழங்குவதனைக் தடுப்பதற்கான வழிமுறைகள் இச்சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எவ்வாறாயினும் குறைபாடுகளுக்கு மத்தியிலேனும் இத்தகையதொரு சட்டம் இலங்கையில் உருவாக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகவே நாம் கருத வேண்டும். இச்சட்டம் கிட்டதட்ட வலது குறைந்த குழந்தை ஒன்றுக்கு ஒப்பான நிலையில் காணப்படுகின்றது. ஆகவே, இதிலுள்ள குறைபாடுகளை கலைவதற்குக் கூட்டிணைந்த முறையில் சகல தரப்பினரும் செயற்படுவதன் மூலம் சில திருத்தங்களை எதிர்காலத்தில் கொண்டுவர முடியும்.
தேர்தல் காலத்தில் உலகில் பல நாடுகளில் நாம் அவதானிக்கின்ற பிரதான பிரச்சினை யாதெனில் electoral bonds என்று சொல்லப்படுகின்ற தேர்தல் பிணையாகும். குறிப்பாக, பெரும் வர்த்தகர்கள் அல்லது வர்த்தக உயர்குழாம் மற்றும் பல்தேசிய கம்பெனிகள் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கான பணத்தை வழங்கி அரசியல்வாதிகளோடு ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்கின்றார்கள். அவ்வொப்பந்தம் என்னவென்றால் குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது அரசியல்வாதி பதவிக்கு வந்த பின்னர் தமக்கு என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் முன்கூட்டியே தீர்மானித்து விடுகின்றார்கள். தமது வியாபார நோக்கங்களை அடைந்துக்கொள்ள கோடிக்கணக்கான பணத்தை கோப்ரேட் கம்பனிகள் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் வழங்குகின்றன. இத்தகைய நடைமுறைகளினால் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள பிரதான தாக்கம் என்னவென்றால், மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சமூக ஒப்பந்தம் (social contract) மிக மோசமாக மறுதலிக்கப்படுவதாகும். வேறு வகையில் கூறுவதாயின், அரசியல்வாதிகள் சமூக ஒப்பந்தத்தை அப்பட்டமாகவே மீறுகின்றார்கள் எனலாம். இதனால் பெரும் வர்த்தகர்களுடைய நலன்களுக்காக, தேவைகளுக்காக அரசாங்கத்தைக் கொண்டு நடத்த வேண்டிய நிலைக்கு அரசியல்வாதிகள் தள்ளப்படுகின்றார்கள். ஆகவே, உயர்குழாம் அரசியல்வாதிகளும் வர்த்தகர்களும் அரச நிறுவனங்களையும் அரசாங்கத்தையும் கைப்பற்றி விடுகின்றார்கள். தமக்கு ஏற்ற வகையில் கொள்கைகளை உருவாக்கிக்கொள்வதற்கு அரசாங்கத்தைப் பயன்படுத்துகின்றார்கள்.
இப்போக்கானது வெறுமனே பிரநிதித்துவ ஜனநாயகத்தின் மீது மட்டுமின்றி ஒட்டுமொத்த ஜனநாயக ஆட்சியின் மீதும் பிரஜைகள் மத்தியில் விரக்தியினையும் அவநம்பிக்கையினையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், தேர்தல் ஆகக் குறைந்த ஜனநாயகத்தினை மாத்திரமே தமக்கு வழங்குவதாக பிரஜைகள் எண்ணுகின்றார்கள். ஜனநாயக ஆட்சியின் வீழ்ச்சிக்கு தேர்தல் காலப் பிணையும் முக்கிய செல்வாக்கு செலுத்துவதாக பல ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, (முன்னர் இந்தியா) போன்ற நாடுகளைக்கூட விலைக்கொடுத்து வாங்க முடியும் என்ற நிலை இதனால் உருவாகியுள்ளது. ஆகவேதான், உலகில் இடம்பெறுகின்ற மக்கள் போராட்டங்கள் பலவற்றில் ஆட்சி செயன்முறையில் மக்கள் நேரடியாக பங்குப்பற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அழுத்தமாக முன்வைக்கப்படுகின்றது.
அரகலயப்போராட்டத்தின் போது இலங்கையில் மக்கள் சபையினை (People’s Council) உருவாக்க வேண்டும் எனவும் அது நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் எனவும் அதற்கு அரசியல் அமைப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும் கோரினார்கள். இலங்கையில் மீளழைத்தல் முறையை (Re-call election) அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோசமும் அக்காலப்பகுதியில் எழுச்சிப்பெற்றது. 1986ஆம் ஆண்டு கௌத்தமாலா நாட்டின் ஜனாதிபதியாக இருந்த வினிசியோ செரெசோ என்பவர் தன்னிடம் 10 விகிதமான அதிகாரங்கள் மாத்திரமே உண்டு எனவும் ஏனைய அதிகாரங்கள் வர்த்தக உயர்குழாம் மற்றும் கோப்ரேட் கம்பனிகளிடமும் காணப்படுவதாகக் பகிரங்கமாக குறிப்பிட்டார். இதன் மூலம் ஒட்டுமொத்த அரசினையும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் கைப்பற்றி வைத்திருப்பதனை வெளிப்படுத்தினார். இதனால் தம்மால் நாட்டுக்கு அவசியமான மற்றும் மக்கள் நலன் பேண் கொள்கைகளை, சட்டங்களை உருவாக்க முடியவில்லை என்பதனை எடுத்துக்காட்டினார்.
ஏதிர்கொள்ள வேண்டிய சவால்கள்
இச்சட்டத்தில் உள்ள ஒரு முக்கிய குறைபாடு என்னவென்றால், அரசியல் கட்சிகள் தேர்தல் செலவினங்கள் தொடர்பான பொய்யான தரவுகளை வழங்கினால் அல்லது மோசடிகளில் ஈடுபட்டால் அதற்கெதிராக தேர்தல் ஆணைக்குழு நேரடியாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கின்ற அதிகாரம் வழங்கப்படாமையாகும். பொதுவில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேரடியாக வழக்கு தாக்கல் செய்யும் அதிகாரம் சட்டத்தில் வழங்கப்படவில்லை. தொடர்ச்சியாகவே இவ்வதிகாரத்தைத் தேர்தல் ஆணைக்குழு கோரி வருகின்றது. ஆனால், இதுவரையில் இவ்வதிகாரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆயினும், ஏனைய அரச திணைக்களங்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு நேரடியாக வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரம் உண்டு. உதாரணமாக சுற்றாடல், தொல்பொருளியல், வனவிலங்கு போன்ற திணைக்களங்களைக் குறிப்பிடலாம்.
இலங்கை போன்ற ஊழல் மோசடி நிறைந்த அரசியல் கலாச்சாரத்தைக் கொண்ட நாடுகளில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது பல்வேறு சவால்கள் ஏற்படலாம். அத்தகைய சவால்களுக்கு நாம் எப்படி முகம் கொடுப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது மிகவும் அவசியமாகும்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல் சிறந்த அமுலாக்க பொறிமுறை ஒன்றை தேர்தல் ஆணைக்குழு கட்டியெழுப்ப வேண்டும். பல்வேறு தரப்பினோடு சேர்ந்து கூட்டிணைந்த முறையில் இச்செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும். மிக முக்கியமாக, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து தேர்தல் செலவினத்தை கட்டுப்படுத்தும் சட்டத்தை தாம் வாசித்து விளங்கிக் கொண்டோம், அதன் நிபந்தனைகளை (terms and conditions) ஏற்றுக்கொள்கின்றோம் என்ற எழுத்துமூல உறுதிமொழியை ஆணைக்குழு பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். சகல வேட்பாளர்களிடம் இருந்தும் இதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வேட்புமனுவுடன் இவ்வுறுதிமொழி பத்திரத்தினையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இரட்டைக் குடியுரிமை தொடர்பான உறுதிமொழி ஒன்றினையும் இம்முறை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, தேர்தல் செலவு தொடர்பான முறைப்பாடுகளை பொலிஸ் நிலையத்திலேயே மேற்கொள்ள முடியும் என்றபோதிலும், பொலிஸில் மட்டும் தங்கி இருக்காமல் அதற்கு அப்பால் சென்றும் முறைப்பாடு செய்வதற்கு, விசாரணைகளை செய்வதற்கான பொறிமுறையொன்றும் உருவாக்கப்பட வேண்டும். ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு ஊடாக அல்லது தேசிய கணக்காய்வாளர் நாயகத்தின் காரியாலயத்தின் ஊடாக முறைப்பாடுகளை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொலிஸ் நிலையத்தினை மாத்திரம் தங்கியிருப்பது எந்த அளவுக்கு தாக்ககரமாக இருக்கும் என்று தெரியவில்லை. பொதுமக்கள் மத்தியிலே பொலிஸ் அதிகாரிகள் பற்றிய பெரியளவிலான அதிருப்தி மற்றும் அவநம்பிக்கை காணப்படுவதை நாம் மேற்கொண்ட பல ஆய்வுகளிலே அடையாளம் கண்டுள்ளோம். அதேவேளை, இச்சட்டம் பற்றிய தெளிவினை ஏற்படுத்த சமூக ஊடகங்களை வினைத்திறன் மிக்க வகையில் பயன்படுத்துவது, இளைஞர்களை அதற்காக அணிதிரட்டுவது, சட்டம் பற்றி சிறு அறிவூட்டல் வீடியோக்களை பதிவு செய்வது என்பன முக்கியமான விடயமாக இருக்கும். விகிதாசார பிரதிநிதித்துவ முறை இந்த நாட்டிலே அறிமுகப்படுத்தப்பட்டு 46 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த 46 ஆண்டுகளில் நாம் இப்படியானதொரு நடைமுறையினை கையாளவில்லை. ஆகவே திடீரென இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்ற போது சவால்கள் ஏற்படலாம்.
ஒட்டுமொத்தத்தில் தேர்தல் செயல்முறையில் பொறுப்பு கூறலையும் வெளிப்படைத்தன்மையையும் ஏற்படுத்த இச்சட்டத்தினை வினைத்திறன் மிக்க வகையில் பயன்படுத்த வேண்டும். அது இலங்கையில் எதிர்காலத்தில் புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்ப பெரிதும் உதவியாக அமையும். இவ்விளக்கினை கூட்டு முயற்சியின் ஊடாக அடைந்துக்கொள்ள முடியும்.
கலாநிதி இரா.ரமேஷ்
சிரேஸ்ட விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்