Photo, AP Photo/Eranga Jayawardena

தமிழ்த் தேசிய அரசியலில் அநேகமாக எல்லா முடிவையும் எடுக்கும் ஆளாக இப்போது சுமந்திரன் வளர்ச்சியடைந்துள்ளாரா? அல்லது தமிழ்ச் சூழலில் அப்படியொரு நிலை உருவாகியுள்ளதா? அல்லது அப்படிக் கருதப்படுகிறதா?

ஏனென்றால், தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை வெற்றியடைய வைப்பதற்கும் சுமந்திரன் தேவைப்படுகிறார். தமிழரசுக் கட்சியின் தலைவிதியைத் தீர்மானிப்பதற்கும் சுமந்திரனே தேவையாக இருக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் உட்பட அனைத்துத் தேர்தல்களையும்  கையாள்வது, பதவியில் இருக்கும் ஆட்சியாளர்களோடு தொடர்புகளைப் பேணுவது, அவர்களைக் கையாள்வது, வெளிநாட்டுப் பிரதிநிதிகளோடு பேசுவது, முஸ்லிம்கள், மலையக மக்கள் என ஏனைய சமூகத்தினரோடு அரசியல் உறவைக் கொண்டிருப்பது எனச் சகலவற்றிலும் சுமந்திரனின் அடையாளமும் முன்னணிப்பாத்திரமுமே உள்ளது.

இதை மேலும் விரிவாகப் பார்க்கலாம்.

சிலருடைய ஆர்வக்கோளாறினால் விளையாட்டாகத் தொடங்கப்பட்ட “தமிழ்ப்பொது வேட்பாளர்” விடயம் இப்பொழுது விடவும் முடியாது – தொடவும் முடியாத என்ற நிலைக்குள்ளாகியுள்ளது. இருந்தாலும் எப்படியாவது இதை வெற்றியடைய வைக்க வேண்டும் எனச் சிலர் தலையைக் கொடுத்து இரவு பகலாக வேலைசெய்கிறார்கள். இதனால் இந்த “விடாமுயற்சி விக்கிரமாதித்தியன்”களான “சிவில் சமூகப் பிரமுகர்கள்” கூடச் சில நாட்களுக்கு முன்பு சுமந்திரனைச் சந்திக்க வேண்டியதாயிற்று.

உண்மையில் சுமந்திரனுடன் சந்திப்பைச் செய்வதற்கு இவர்களில் எவருக்கும் உடன்பாடில்லை. ஆனாலும் அதைவிட்டால் வேறு வழியில்லை என்ற நிலையிலேயே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

இதற்கான தூண்டலைச் செய்தவர் வட மாகாணசபையின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவர். அதைச் சிவில் பிரமுகர்களால் தவிர்க்க முடியாமல்போய் விட்டது.

“சுமந்திரனைச் சமாதானப்படுத்தி (Convince பண்ணி)னால்தான் தமிழரசுக் கட்சி, பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும். தமிழரசுக் கட்சி ஆதரவளித்தால்தான், ஏனைய கட்சிகளெல்லாம் இதை ஆதரிக்கும். இதைத் தவிர்த்து விக்கினேஸ்வரனோ சுரேஸ் பிரேமச்சந்திரனோ சிவில்பிரதிநிதிகளோ இந்த விடயத்தில்  தனியே எதையும் செய்ய முடியாது என்றாகி விட்டது. ஆகவே, நீங்கள் தலையைப் பிடிக்க வேணும். தலையைப் பிடித்தால்தான் வால்களெல்லாம் கட்டுப்பாட்டுக்கு வரும்” என்று சொல்லியிருக்கிறார் அந்த முன்னாள் அமைச்சர். எனவே, உலகமெல்லாம் சுற்றி வருவதை விடவும் சுமந்திரனைப் பிடித்தால் போதும் என்ற கட்டத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது.

சந்திப்பின்போது “பொதுவேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும்? அதற்கான அவசரமென்ன?” என்றொரு சாதாரண கேள்வியைத் தூக்கிப்போட்டிருக்கிறார் சுமந்திரன். சென்றவர்கள் கொஞ்சம் ஆடிப்போய் விட்டார்கள். இருந்தாலும் “இந்தத் தேர்தலில் போட்டியிடும் முன்னிலை வேட்பாளர்கள் எல்லோரும் சிங்களவர்கள். இவர்களில் எவரும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரக்கூடியவர்களில்லை. அதைப்பற்றிப்  பேசவே தயங்குகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு வாக்களிப்பதை விட, இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, சிதறுண்டிருக்கும் தமிழ்த் தரப்பையெல்லாம் ஒன்றாகக் கொண்டு வரலாம். தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை தென்னிலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தெரியப்படுத்த முடியும். இது இன்றைய சூழலில் அவசியமானது….” என்று சொன்னார்கள்.

இதற்குப் பதிலளித்த சுமந்திரன், “தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. யார் யாரெல்லாம் போட்டியிடுவார்கள் என்று கூட இன்னும் உறுதியாகவில்லை. போட்டியிடும் தரப்பிலிருந்து தேர்தல் விஞ்ஞாபனங்களும் வரவில்லை. அதற்குள் எதற்கு இந்த அவசரமெல்லாம்? இப்போதுள்ள சூழலில் எல்லோரையும் நாம் சமனிலையில் வைத்தே பார்க்கிறோம். இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பு இதைப்பற்றி மக்களுடன் கலந்தாலோசிப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார்.

சிவில் சமூகப் பிரதிநிதிகளால் சுமந்திரனை எந்த நிலையிலும் வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. இறுதியில் “இதைப்பற்றி நாம் தொடர்ந்து விவாதிப்போம். அதற்குரிய ஏற்பாட்டைச் செய்கிறேன்” என்று சுமந்திரனே தொடர்ந்து கொண்டிருந்த தடுமாற்றத்துக்கு ஒரு முடிவைச் சொல்லி அனுப்பிவைத்தார்.

சுமந்திரன் சொன்னதைப்போல அடுத்துவரும் ஜூன் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ்ப்பொதுவேட்பாளர் பற்றிய பொதுவிவாதம் நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பையும் சுமந்திரனே விடுத்துள்ளார். இதற்கிடையில் தமக்குச் சாதகமான வகையில் சிவில் அணியினர் வணிகர் கழகம், கூட்டுறவுச் சபை என ஓடியோடி பல்வேறு தரப்பினர்களையும் சந்திந்து ஆதரவு கோரிவருகின்றனர். இப்படியான உசாரோடு மக்களுக்கான வேலையைக் களத்திலிறங்கிச் செய்திருந்தால், தமிழ்ச்சமூகம் இன்று கொஞ்சமாவது முன்னேற்றத்தைக் கண்டிருக்கும். பல பிரச்சினைகளுக்குத் தீர்வையும் எட்டியிருக்கலாம். நாட்டை விட்டு வெளியேறுவோரின் தொகையும் கணிசமாகக் குறைந்திருக்கும். இவர்களுடைய சொல்லுக்கும் பெறுமதி கிடைத்திருக்கும்.  இப்படி ஆட்பிடிப்பதற்கு ஆதரவு சேர்ப்பதற்குமாக அலைந்து திரிய வேண்டி வந்திருக்காது. பொதுவேட்பாளரைப் பற்றிய பொதுவிவாதத்தின்போது இவ்வாறான விசயங்கள் எல்லாம் பேசப்படவும் கூடும்.

எனவே, ஒரு விடயம் மிகத் தெளிவாகியுள்ளது. தமிழ்த் தேசியப் பரப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்த்தால், சுமந்திரன்தான் எதையும் தீர்மானிப்பவராக இருக்கிறார் என. சுமந்திரனை மீறித் தமிழரசுக் கட்சியினாலும் எந்த முடிவுக்கும் செல்ல முடியாது. அதனுடைய புதிய தலைவர் தெரிவு உட்பட கட்சியின் அத்தனை நடவடிக்கைகளும் இன்று சுமந்திரனில்தான் தங்கியுள்ளன. இது சற்று மிகைப்படுத்தப்பட்ட கூற்று எனச் சுமந்திரனே இதனை மறுக்கலாம். ஆனால், உண்மை என்னவென்று எல்லோருக்கும் தெரியும். என்பதால்தான் சுமந்திரனிடம் பொதுவேட்பாளருக்கான அணி பகிரங்கமாகச் சரணடைந்திருக்கிறது. ஆனால், சுமந்திரனோ பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டுக்கு எதிரானவர். அதை அவர் பகிரங்கமாகவே சொல்லியும் வருகிறார்.

இதனால் உண்டாகக் கூடிய அரசியல் சாதக – பாதக அம்சங்களையும் சுமந்திரன் அறிவார். இருந்தாலும் ஜனநாயக அடிப்படையில் இதைப்பற்றிய விவாதமொன்றுக்கு அவர் முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது. இதுதான் சுமந்திரனின் இயல்பும் சிறப்புமாகும். பொதுச் சூழல் என்னவாக உள்ளது? பொது அபிப்பிராயம் எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்த்து, அதற்கேற்ற மாதிரிக் கதைக்காமல் (விழுந்த பக்கத்துக்குக் குறியைச் சுடாமல்) எது சரியாக இருக்கிறதோ, தான் எதைச் சரியென நம்புகிறாரோ அதைத் துணிந்துரைப்பதே சுமந்திரனின் வழமை. இதனால்தான் அவர் யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், “யாரும் என்னைத் துரோகி என்று சொல்வார்கள் என்பதற்காக என்னுடைய கருத்தைச் சொல்லாமல் விட மாட்டேன். என்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டேன்” என்று சொன்னதுமாகும்.

அரசியலில் எப்போதும் சரியான பார்வையும் அதை முன்னெடுக்கக்கூடிய துணிவும் அவசியமானவை. இவையிரண்டும் இல்லையென்றால், எத்தகைய மகத்தான கருத்தும் (கொள்கையும்) பயனற்றதாகி – பெறுமதியற்றதாகி – விடும். யாரும் மிகச் சிறந்த அறிவாளிகளாக இருக்கலாம். ஆனால், அந்த அறிவைச் செயலாக்கக் கூடிய ஆற்றலும் ஆளுமையும் வேண்டும். கூடவே சமகாலத்தன்மை மிக அவசியமானது.

சுமந்திரன் சமகாலத்தன்மைக்கு நெருக்கமானவர். அவர் முன்னெடுக்க முயற்சிப்பது, சமகால அரசியல் (Contemporary Politics). இதற்குக் காரணம், அவர் ஒரு  நவீனத்துவவாதி (Modernist)யாக இருப்பதாகும். அவருடைய அரசியற் தன்மை, ஏறக்குறைய நவீனத்தன்மைக்குரியது (Modern politics). எவரோடும் உரையாடக் கூடியது. இது முக்கியமான ஒன்று. நம்மிடம் எவ்வளவு சரிகள், நியாயங்கள் இருக்கிறது என்பது முக்கியமல்ல, எதிரே உள்ளவர்கள் அதை எப்படிப் பார்க்கிறார்கள்? எந்தளவுக்கு ஏற்றுக் கொள்கிறார்கள்? என்பதே முக்கியமானது. ஒரு கவிதையில் உள்ளதைப்போல, “என்னுடைய சொற்களுக்கு எதிராளியின் மனதில் இன்னோர் அர்த்தம் உள்ளது” என்பதை ஆழ்ந்து புரிந்து கொள்வது அவசியமானது. இந்தப் புரிதலின்மையினால்தான் தமிழ்ச் சமூகத்தின் மாபெரும் தியாகங்களும் பேரிழப்புகளும் பயனற்றவை என்ற நிலைக்கு வந்தது.

சமகாலத்தன்மையைக் கொண்ட எவரும் நவீனத்துவவாதிகளாகவே இருப்பர். அதைப்போல நவீனத்துவவாதிகள் சமகாலத்தன்மையோடு, எதிர்காலத்தைக்குறித்துத் தீர்க்கமாகச் சிந்திப்போராகவும் இருப்பர்.

இதை நாம் அரசியலில் மட்டுமல்ல, நடை, உடை, பாவனை உள்ளிட்ட அனைத்திலும் அவதானிக்க முடியும். இவர்களோடு சமூகத்துக்கு எப்போதும் ஒரு ஒவ்வாமை – முரண் – இருக்கும். சமனிலையில் சமூகத்தோடும் இவர்களுக்கு மறைமுகமாக ஒவ்வாமை – முரண்  – காணப்படும். ஆனால், இவர்களுக்குப் பின்னால்தான் சமூகம் தன்னை மெல்ல மெல்ல ஒழுங்கமைத்துச் செல்வது, மாற்றம் இவ்வாறானவர்களாலேயே நிகழ்வது. இதனால் இவர்களே  வரலாற்றில் முன்னோடிகளாகக் கருதப்படுகிறார்கள். முன்னோடிகளின் காலில் முள் குத்தியே தீரும். அவர்கள் நடப்பது புதிய பாதை அல்லவா!

இதற்கு மாறாக ஒருசாரார் உள்ளனர். தங்களுடைய கைகளில் அப்பிள் (Apple Mobile phone) கைபேசியை வைத்திருப்பார்கள். நவநாகரீகமாக உடுத்திக் கொள்வார்கள். பிள்ளைகளைப் புதிய – நவீன துறைகளில் படிப்பிப்பார்கள். நவீனமாக வீட்டைக் கட்டுவார்கள், புதிய Model வாகனங்களை, புத்தம் புதிய பொருட்களையெல்லாம் வாங்கிக் கொள்வார்கள். ஆனால், அவர்களுடைய சிந்தனையும் நடைமுறையும் கடந்த காலத்துள் – இறந்த காலத்துள் – புதையுண்டிருக்கும். அவர்கள் அடிப்படையில் இறந்தகால மனிதர்களே (Dead people).

ஆனால், சுமந்திரனுக்கு எப்போதும் இந்தத் தருணம் (This is the opportunity) முக்கியமானது. அதையும் விட முக்கியமானது எதிர்காலமாகும். அதைப்பற்றியே அவர் சிந்திக்கிறார்.  அவருடைய நேர்காணல்கள், உரைகள், அணுகுமுறைகள், நவடிக்கைகளில் இதை அவதானிக்க முடியும். ஒப்பீட்டளவில் அவர் கூடியபட்சமான ஜனநாயகவாதி. இதனால்தான் அவர் முஸ்லிம்களோடும் நெருக்கமாக – அவர்கள் நெருங்கக் கூடிய ஒருவராக இருக்கிறார். தமிழ்த் தேசியப் பரப்பில் சுமந்திரன் அளவுக்கு முஸ்லிம்களோடு நெருக்கமான தலைவர்கள் குறைவு. இன்னொருவர் திரு. சம்மந்தன். இதைப்போல சிங்களப்பரப்பிலும் மலையக மக்களோடும் சுமந்திரனுக்கு ஊடாட்ட உறவுண்டு. நாடாவிய பிரச்சினைகளில் அவர் காட்டுகின்ற ஆர்வமும் அவற்றில் சுமந்திரன் நிகழ்த்துகின்ற இடையீடுகள், தலையீடுகளும் அவருக்கான பரந்த அறிமுகத்தையும் முக்கியத்துவத்தையும் அதிகரித்திருக்கின்றன (இருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் சுமந்திரனும் சம்மந்தனும் தனிப்பட நடந்து கொள்ளும் விதம் ஒரு அரசியற் தலைவர்களுக்குரியதாக இருப்பதில்லை. குறிப்பாக பலரையும் இணைத்துப் பயணிக்கும் பொறுமையும் நிதானமும் இருவரிடத்திலும் குறைந்தே உள்ளது. இது பெருங்குறைபாடாகும்).

சுமந்திரனுடைய தமிழரசுக் கட்சியோ கடந்தகாலம் – சமகாலம் என இரண்டிலும் அல்லாடிக் கொண்டிருப்பது. இந்த இழுபறியும் மோதலுமே சிறிதரன் – சுமந்திரன் அணி மோதல்கூட. சிறிதரன் கடந்த காலத்தின் அடைக்கோழியாகவும் சுமந்திரன் புதிய காலத்துக்கான குஞ்சுப் பறவையாகவும் உள்ளனர். ஆயினும், இதுதான் அவருக்கு உள்ளூரில் எதிர்ப்பையும் வெளியே கவர்ச்சியையும் கொடுக்கிறது.

தமிழ்த் தேசிய அரசியற்பரப்பிலுள்ள பலரும் அறிந்தோ அறியாமலோ கடந்தகாலத்தில் உறைந்தவர்களாகவே (Nostalgist) உள்ளனர். அவர்களுக்கு அதொரு சுவையான இன்பம். அதொரு பொற்காலம். தங்க நினைவு. அவர்களுடைய அரசியலும்தான் அப்படியிருக்கும். ஆனால், சொந்த வாழ்க்கையோ சமகாலத்தோடு – Apple Mobile phone னோடு மிகத் தீவிரமாகப் பிணைந்திருக்கும். இந்த முரணைப் பற்றி அவர்கள் மனந்திறந்து ஒரு நிமிடம் யோசித்தால் போதும், நல் மாற்றங்கள் நிகழும்.

மிகச் சிலரே இதைக் கடந்தவர்கள். புதிய சகாப்தம் (Entering into a new era) ஒன்றுக்குச் செல்ல வேண்டுமானால், இறந்த காலத்திலிருந்து மீண்டெழ (Resurgence from past-end politics) வேண்டும். அரசியல் அர்த்தத்தில் சொல்வதானால், கடந்தகாலப் படிப்பினைகளிலிருந்து பெற்றுக் கொண்ட அறிவைக் கொண்டு நிகழ்காலத்தைக் கட்டியெழுப்ப  வேண்டும். அதிலிருந்து எதிர்காலத்தை மேம்படுத்த முடியும். அதற்கு இந்தத் தருணத்தை – இந்தச் சந்தர்ப்பத்தை – இந்தக் காலத்தைச் சரியாக, உரிய முறையில் விளங்கிச் செயற்பட வேண்டும். அதாவது தன்னுடைய காலமாக உணர்தல் – Perception in his own time. அப்படிச் சிந்தித்தால்தான் கிடைத்த வாய்ப்பைத் தன்னுடையதாக (Taking his turn) மாற்றிக் கொள்ள முடியும். ஏறக்குறைய சுமந்திரன் அப்படிச் சிந்திக்கிறார் என்றே தெரிகிறது. என்பதால்தான் தன்னால் இந்தக் காலத்தை மாற்ற முடியும் என அவரால் நம்ப முடிகிறது. ஆனால், அதற்கு நிறைய வேலை செய்ய வேண்டும். அதைத் தனியே செய்ய முடியாது. அதற்கான ஆளணி, கட்டமைப்புகள், செயற்றிட்டங்கள், மக்கள் இணைப்புகள், அர்ப்பணிப்பான உழைப்பு எனப் பலவும் தேவை. அதற்கான பயிற்சியை – முயற்சியை அவர் எடுக்க வேண்டும். முக்கியமாக மக்களுடனான உறவையும் அரசியற் பரப்பில் யதார்த்தமாகச் சிந்திக்கக் கூடிய தரப்புகளின் இணைவையும் சாத்தியப்படுத்த வேண்டும்.

இதுவரையில் சுமந்திரன் போட்டதெல்லாம் சிறு புள்ளியே. இனி அதை வளர்த்து ஒரு வடிவமாக்க வேண்டுமானால் அதற்கான வேலைகள் அவசியமாகும். எந்தச் சிறு வாய்ப்பையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஆற்றல் அவரிடம் உண்டு என்பதால், வாய்ப்புகளை உருவாக்கும் ஆற்றலையும் அவரால் வளர்த்துக் கொள்ள முடியும் என நம்புகிறேன். இதற்கு அவர் மக்களிடம் பல படிகள் இறங்கி வர வேண்டும். இல்லையென்றால் வரலாற்றின் தெரிவு வேறொன்றாகிவிடும்.

கருணாகரன்