Photo, Karibu Foundation, Amila Udagedara

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் ஒவ்வொரு குடும்பங்கள் மற்றும் பெண்களின் மீதும் சுமத்தப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் கடனைப் பெறுவது பெண்கள் தமது நிதித் தேவையை சமாளிக்கும் ஒரு வழியாக இருக்கின்றது. இது மேலும் அவர்கள் சுரண்டப்படுவதற்கும், உடமையிழப்பிற்கு ஆளாவதற்கும் வழிவகுக்கின்றது.

யுத்தத்திற்குப் பின்னரான வடக்கு மற்றும் கிழக்கில் நுண்கடன் ஒரு முக்கிய பிரச்சினையாகப் பரிணாமித்தது. 2018இல் நுண்கடன் நிறுவனங்களின் செயற்பாடுகளை குறைக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கொவிட் காலத்தில் கடன் மீளச்செலுத்தும் கால அவகாசங்களும் நீடிக்கப்பட்டது. எனினும், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் நுண்நிதிக் கடன்கள் மற்றும் குடும்பக் கடன்கள் அதிகரிப்பதை மீண்டும் அவதானிக்க முடிகின்றது. அன்று நுண்கடன் நிதிநிறுவனங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தற்காலிக தீர்வையே கொடுத்திருந்தது. தற்போது நாம் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள நீண்டகால தாக்கம் வித்தியாசமானதும் புதிரானதுமான சூழலை உருவாக்கியுள்ளது.

நுண்நிதிச் செயற்பாடுகள்

நுண்நிதி நிறுவனங்கள் முன்பைவிட மிகவும் துரிதமாக தமது கடன் வழங்கலை செய்கின்றன. குறிப்பாக தனியார் நிதி நிறுவனங்கள் ஒன்லைன் கடன்கள் என்ற புதிய பரிமானத்தை பெற்று சமூக வலைத்தளங்களிற்கூடாக மிகக் குறைந்த நேரத்தில் கடன்களை வழங்குகின்றன. அது தவிர நாட் கடன்கள், கிழமைக் கடன்கள் மற்றும் மாதக் கடன்கள் என வீடு தேடி வந்து நுண்நிதி நிறுவனங்களால் கடன்கள் வழங்கப்படுகின்றது. சிறு வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களால் நாள் வட்டிக் கடன்கள் போன்றவையும் பெறப்படுகின்றன. மேலும், உள்ளூர் கடைகளில் கடனிற்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கூடாக உருவாக்கப்பட்ட சிறு குழுக்கள், நிதிக் கூட்டுறவு அமைப்புக்கள் மற்றும் சமுர்த்தி போன்றவற்றிலும் கடன்களைப் பெறுகின்றார்கள்.

கடன்களை மீளச்செலுத்துவதற்கு மீண்டும் கடன்களைப் பெறுவதும், அதற்காக வாரத்தில் பாதி நாட்கள் குழுக்கூட்டங்களுக்குச் செல்வதும் கிராமங்களிலுள்ள பெண்களின் வாழ்வியலாகவும் மாறியுள்ளது. வாராந்தம் சிறு குழுக் கூட்டங்களில் பங்கேற்பதிலும் சேமிப்பு செய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஏனெனில், சேமிப்பு மற்றும் ஒழுங்கான வரவு என்பவற்றுக்கூடாக அவசர தேவைகளுக்கு உடனடியாக ஓரளவு பெரிய கடன்களைப் பெறத் தகுதியானவர்களாக தம்மை உறுதிப்படுத்துவதற்காக. ஆனால், அவர்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியை சேமிப்பதை விட, சிறு கடன்களைப் பெற்றே சேமிப்புக்களைச் செய்ய முடிகின்றது. பெரிய நிதித் தொகையாக தேவைப்படும் போது நுண்நிதி நிறுவனங்களின் கடன்களை அதிகூடிய வட்டிவீதங்களில் பெறுகின்றார்கள். இக்கடன்களை மீளச்செலுத்துவதற்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன்களை வழங்கும் சமூக நிறுவனங்களிடமிருந்து (கூட்டுறவுகள், மகளிர் சங்கங்கள், கிராமிய அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் சமுர்த்தி) கடன்களைப் பெறுகின்றார்கள். இவ்வகையாக, நெருக்கடியின் மத்தியில் நுண்நிதிச் செயற்பாடுகளினால் பெண்கள் மீளமுடியாத கடன்பொறிக்குள் தள்ளப்படும் அபாயநிலை உருவாகியுள்ளது.

குடும்பக் கடன்களின் நிலை

நெருக்கடிக்கு முன் வாழ்வாதாரத்திற்காக குறிப்பாக கால்நடை வளர்ப்புக்காக கடன்களை பெற்றவர்கள், தற்போது தீவனம் உட்பட பராமரிக்கும் செலவுகள் அதிகரித்துள்ளதால், வாழ்வாதாரச் செயற்பாடுகளை நிறுத்தி கால்நடைகளை விற்கின்றனர். வருமானங்கள் குறைவடைந்ததால் வாழ்வாதாரத்தை தொடர மேலும் கடன் வாங்கத் தயங்குகின்றனர். விவசாய மற்றும் வீட்டு உபகரணங்கள் உட்பட சிறிய சொத்துக்களை வைத்திருப்பவர்கள் அவற்றை அடகு வைத்து அல்லது விற்று விடுகின்றார்கள். இவ்வகையாக வாழ்வாதார இழப்புக்களும், உடைமையிழப்புகளும் அதிகரிப்பதால் மக்கள் மேலும் கடன்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்போது கடன் பெறுபவர்கள் அதை வாழ்வாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக கடன்களைப் பெறவில்லை, அவர்களின் வாழ்வாதாரமே கடன்கள் தான்.

மக்களின் நிதித் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது – இது வெறுமனே அவர்களின் ஆடம்பர செலவுகளால் அதிகரிக்கப்படவில்லை. மாறாக தற்போது நிலவும் அதிகூடிய வாழ்க்கைச் செலவினால் அடிப்படைத் தேவைகளை சராசரிக்கும் குறைவாக பூர்த்திசெய்யும் போது கூட அதிகரிக்கின்றது. பெண்கள் தங்கள் உணவு முறைகளை மாற்றி, உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்த பிறகும் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க நுண்கடன்களை நம்புகின்றனர்.

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குப் போதுமான வருமானத்தை பெறமாட்டார்கள் என்பதை நன்கு அறிந்தே கடனைப் பெறுகின்றார்கள் – இது பசியைத் தடுப்பதற்கான ஒரு குருட்டு நம்பிக்கையுடனான சமாளிப்பு முறையாகும். மக்களுக்கு கடன் வட்டி வீதங்கள் மற்றும் குடும்ப வரவு – செலவு பற்றிய சரியான புரிதல் இல்லாததால் அவர்கள் கடன்பொறிக்குள் சிக்கவில்லை. ஆபத்தானதென தெரிந்தும் வாழ்வதற்கு வேறு வழியில்லாததாலேயே சிக்குகின்றார்கள். இது விரைவில் மற்றொரு குடும்பக்கடன் நெருக்கடியை உருவாக்கப்போகின்றது.

நெருக்கடியை எதிர்நோக்கும் பெண்களுக்கு அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. மாறாக, சர்வதேச நாணய நிதியமும் ஜனாதிபதியும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதற்காக தங்களை வாழ்த்திக் கொள்கின்றனர். அவர்கள் வளர்ந்துவரும் குடும்பக் கடன் நெருக்கடியைக் கண்டும் பாராமுகமாக இருக்கின்றார்கள்.

கடன்படு நிலை ஏன் உருவாகியுள்ளது?

அரச திட்டங்கள் மற்றும் கொள்கைகளிலுள்ள குறைபாடுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் மற்றும் அந்த நெருக்கடிகளில் இருந்து வெளிவருவதற்கான தீர்வுகள் சாதாரண மக்கள் தலைகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள மறைமுக வரி மற்றும் மின்சார வரி அதிகரிப்புக்கள் மக்கள் மீது பாரிய சுமையாக மாறியுள்ளது. ஆனால், மக்களால் செலுத்தப்படும் வரிகளுக்கான அடிப்படையான சேவைகளான உணவுப் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றை முன்பிருந்ததை விட அரசாங்கம் மட்டுப்படுத்த எத்தனிப்பது மிகவும் வேடிக்கையானதும் வேதனையானதுமான விடயமாகும்.

ஏற்கனவே வருமானங்களை இழந்துபோயிருந்த மக்கள் மீது புதிதாக ஏற்றப்பட்ட சுமைகள் நிதிப் புழக்கத்திற்கான தேவையை மேலும் அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் தேவைகளை அணுகுவதற்கு தமது சிறிய சொத்துகளை அடகு வைத்தல், விற்றல் அல்லது கடன்களைப் பெறுதல் போன்றனவே வழிகளாக இருக்கின்றன. மக்களின் இந்தத் தேவைப்பாடுகளை வாய்ப்பாகப் பயன்படுத்தி நிதிநிறுவனங்கள் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள குடிமக்களை இலக்குவைத்து கடன் வலைகளை வீசி வருகின்றன.

இந்த நிலைமை உருவாகுவதற்கு கடனை மையமாகக் கொண்ட நீண்டகால பொருளாதாரக் கொள்கைகளும் காரணமாகும். கடந்த காலத்தில் மக்கள் கடன்பொறிக்குள் சிக்கியதற்குக் காரணம் அவர்களின் ஆடம்பரச் செலவுகளும், நிதி அறிவு இல்லாததுமே என்று குற்றம்சாட்டிய அமைப்புக்கள் தற்போது அரசு பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்காக மக்கள் கடன்பொறிக்குள் சிக்குகிறார்கள் என்ற உண்மையையாவது ஏற்றுக்கொள்வார்களா?

மாற்றுத்தீர்வுகள்

கடந்த காலத்தில் நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுள் வட்டிவீதக் கட்டுப்பாடு, கடன் மன்னிப்பு மற்றும் கடன்களை கட்டுவதற்கான கால அவகாசம் போன்றன முக்கியமாக இருந்தன. மேலும் பெண்கள் சிறு குழுக்களாக இணைவதற்கூடாக வாராந்தம் சேமிப்புகளை செய்து தேவைப்படும்போது மிகவும் இலகுவாக கடன்களை பெறும் செயற்பாடு, நியாயமான வட்டிவீதத்திலான கடன் அணுகலை விரிவுபடுத்தும் செயற்பாடுகள் மக்களை நுண்கடன் பொறிகளிலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்பட்ட தீர்வுகளாகும். ஆனால், அத்தீர்வுகள் மக்கள் பாரிய  பொருளாதார அதிர்ச்சியினால் மீண்டும் கடன்பொறிக்குள் சிக்குவதை முற்றிலும் தடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலம் உண்மையான கடன் பிரச்சனைக்கு தீர்வு காணுமா? கடன் தேவைகள் அதிகரித்துக் கொண்டு செல்வதற்கான காரணங்கள் என்ன என்பதை விளங்கி அதற்கு மாற்றுத் தீர்வுகளை தேடாமல், தொடர்ந்தும் கடன்களைப் பெறுவதற்கான ஒழுங்கமைப்புகளையே நாம் தேடிக்கொண்டு இருக்கப்போகின்றோமா?

கடந்த ஐந்து தசாப்தங்களாக நிலவிவரும் கிராமியப் பொருளாதாரத்தின் நிதிமயமாக்கல் மற்றும் பெண்களின் உழைப்பையும், உடைமைகளையும் சுரண்டும் நுண்நிதித்திட்டம் ஒரு பாரிய நெருக்கடியின் மத்தியில் பொருத்தமில்லாமல் போகின்றது. நுண்நிதி எனும் கருத்தை மறுபரிசீலனை செய்து அது பெண்களை வலுவூட்டுகின்றது என்ற கட்டுக்கதையை உடைக்க வேண்டியுள்ளது. பொருளாதார நெருக்கடியின் சுமையை பெண்கள் மேல் சுமத்துவதை தவிர்க்க வேண்டும். மாறாக, உணவுப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தத் தேவையான முதலீடுகளை வழங்க அரசாங்கம் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும்.

சுகன்யா காண்டீபன்
நியந்தினி கதிர்காமர்

எழுத்தாளர்கள் பொருளாதார நீதிக்கான பெண்ணியக் குழுமத்தின் உறுப்பினர்கள். சுகன்யா காண்டீபன் – வடக்கில் நிதிக் கூட்டுறவுகளுடன் கடந்த ஆறு வருடங்களாக ஆய்வு வேலைகளில் ஈடுபடுகிறார். நியந்தினி கதிர்காமர் – கல்வித்துறையில் முதுமானிப்பட்ட மாணவியும் பெண்ணிய ஆய்வாளருமாவார்.