படம் | JDSrilanka
அவரே சரியென்று நிரூபித்துவிடுவதே அரசின் நோக்கமா?
பிரபாகரன் இறந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அவரது கோட்பாடுகளைப் பரப்பவது இங்கு எனது நோக்கமல்ல. ஏனென்றால், இந்தக் கருத்துரையைப் படித்துவிட்டு, நான் ஒருவகையில் அவரை நினைவுகூர முற்படுவதாகக் குறைபட்டுக்கொண்டு விசாரணையாளர்கள் யாரும் எனது வீட்டுக் கதவைத் தட்டுவதை நான் விரும்பவில்லை. ஆனாலும், நான் உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும்.
பிரபாகரனைத் தமிழர்கள் மறந்துவிட வேண்டும் என்று இலங்கை அரசு சொல்லுகின்றது. ஆனால், அவரை அவர்கள் மறந்துவிடாத மாதிரியான காரியங்களையே திரும்பத் திரும்ப அது செய்தபடி உள்ளது. என்னுடைய வீட்டுத் தெருவிலோ, கிராமத்துச் சந்திகளிலோ கடந்த ஒன்றரை, இரண்டு வருடங்களாக எந்தச் சீருடை தரித்த படைச் சிப்பாயையும் நான் கண்டதில்லை. அவர்கள் இந்தப் பக்கம் வருவதுமில்லை; வரவேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை. நான் நடமாடித் திரிகின்ற ஏனைய ஊர்களிலும் நகர்களிலும் ஆங்காங்கே படை வீரர்கள் நிலைகொண்டுள்ளார்கள். ஆனால், உண்மையாகவே அச்சுறுத்தும் பாணியில் அவர்கள் நடமாடுவதில்லை. ஆனால், மே மாதம் 18ஆம் திகதிக்கு உரிய தனித்த வேறுபாடு என்ன…?
அந்த ஒரு நாளில் மட்டும், ஆயுதம் தரித்த படைச் சிப்பாய்கள் மிதிவண்டிகளில் குறைந்தது நான்கு தடவைகள் எனது வீட்டுத் தெருவில் ரோந்து போனார்கள். அயற் சந்திகளில் வழமைக்கு மாறாய் குழுமி நின்றார்கள். பக்கத்து நகரில் குவிக்கப்பட்டிருந்தார்கள். யாழ்ப்பாணமும் கிளிநொச்சியும் போர் நடவடிக்கைக் களங்கள் போல இருந்தன. சந்திகள், கடைத் தெருக்கள், பாடசாலை வாசல்கள், கோயிற் சூழல்கள் எங்கும் படைச் சிப்பாய்கள். சில வீதிகளுக்கு குறுக்கே தடைகளைப் போட்டு கனரக ஆயுதங்களுடன் மறித்து நின்றார்கள்; நாளேடுகளின் அலுவலகங்களை முற்றுகையிட்டிருந்தார்கள்; பல்கலைக்கழகத்தை மூடி, சூழல் எங்கும் பரவி நின்றார்கள். யாழ்ப்பாண நகரில், தனது அரசியற் கட்சியின் செயலகத்துக்குச் சென்ற வடக்கு மாகாண சபையின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், அந்த வீதிக்கு உள்ளேகூடச் செல்ல முடியாது தடுக்கப்பட்டார். தனது மேலதிகாரியைத் தொடர்புக் கருவியில் அழைத்து உரையாடிய பின்பு, “இந்த இடம் உயர் காப்பு வலயம். உள்ளே செல்ல உங்களை அனுமதிக்க முடியாது” என அங்கே நிறுத்தப்பட்டிருந்த சிறிய படை அணியின் பொறுப்பாளன் தன்னிடம் திடமாகக் கூறியதாக சிவஞானம் என்னிடம் சொன்னார்.
இறந்தவர்களை நினைத்து அஞ்சலிக்கும் நிகழ்வுகளுக்கு அதிகாரபூர்வத் தடைகள் ஏற்கனவே போடப்பட்டிருந்தன. அதையும் மீறி எவரும் எதுவும் செய்துவிடக் கூடாது என்பதற்காகப் படையினர் பட்டவர்த்தனமாக இறக்கிவிடப்பட்டிருந்தனர். சாதாரண உடைகளில் மோட்டார் சைக்கிள்களில் அலைந்து திரிந்த புலனாய்வாளர்களின் எண்ணிக்கை, சீருடைகளில் இறக்கிவிடப்பட்டிருந்தவர்களை விடவும் அதிகம். அச்சமூட்டுகின்ற தோறனையில் அவர்கள் செயற்பட்டார்கள். ஆலயங்களில் தீபம் ஏற்றி வணங்க முற்பட்ட தமிழ் கூட்டமைப்பு ஆட்களையும் கூடிநின்ற மக்களையும், ஊடகவியலாளர்களுடன் கலந்துவந்து அவர்கள் படம்பிடித்தார்கள். முகங்களுக்கு நேரே தொலைபேசிகளைப் பிடித்து, தாம் புலனாய்வாளர்கள் என்பது இனந்தெரியும்படியாகவே படம்பிடித்தார்கள். “நீங்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ளப்படுகின்றீர்கள்” என்ற செய்தியைச் சொல்லும் விதமாகப் படம்பிடித்தார்கள்; தோற்றங்களால் பயமுறுத்தினார்கள்; நடத்தைகளால் எச்சரித்தார்கள். ஒரு சாதாரண தமிழனின் மனதில் இவையெல்லாம் எத்தகைய எண்ண ஓட்டங்களை ஏற்படுத்தும்…? இத்தகைய நகர்வுகளைச் செய்வதற்குப் பின்னால் இருக்கக்கூடிய ஞானம் என்ன… இவையெல்லாமே பிரபாகரனை மறக்கச் செய்வதற்கான முயற்சிகளா அல்லது தமிழர்களின் மனங்களில் அவரை நிலைக்கச் செய்வதற்கான முயற்சிகளா…?
“சிங்கள பௌத்த பெரும்பான்மைவாதக் கோட்பாட்டோடு இயங்குகின்ற இலங்கையின் ஆளும் வர்க்கம், தானாக மனமிரங்கித் தமிழ் பேசும் மக்களைச் சமதையாக நடத்தாது” என்பதுதான் பிரபாகரனின் மூலக்கொள்கையாக இருந்துவந்தது. அந்த மூலத்திலிருந்துதான் அவர் ஆயுத அரசியலை முன்னெடுத்தார்; முதன்மைப்படுத்தினார். “தானாக மனமிரங்கித் தமிழர்களைச் சமதையாக நடத்தும் மனோபாவம் இல்லாத சிங்கள ஆளும் வர்க்கத்தை இறங்கிவர வைப்பதற்கான ஒரு வழிமுறைதான் ஆயுத அழுத்தம் என்று தனது கொள்கையை அவர் நியாயப்படுத்தினார். அவரது அந்த மூலக்கொள்கையைச் சரியானது எனப் பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு புறச்சூழலே – மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகளாலும் அவர் வாழ்ந்த காலம் முழுவதும் பேணப்பட்டும் வந்தது. தற்போது பிரபாகரனும் இறந்து, அவர் நடாத்திய ஆயுதப் போராட்டமும் முடிக்கப்பட்டுவிட்ட பின்பும் கூட – அதே புறச்சூழலே தொடர்ந்தும் பேணப்படுகின்றது.
முப்பது ஆண்டுகளாக இந்த நாட்டிலே ஒரு போர் நிகழ்ந்தது. ஏறக்குறைய 50,000 பேர் வரையானோர் அந்தப் போரின் கடைசி நான்கு மாத காலத்துக்குள் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல்போய்விட்டார்கள் என உலகக் கணிப்புகள் கூறுகின்றன. அரசு தானே அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது இழப்புக்களைப் பதிவுசெய்தார்கள். அந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அந்தத் துயர்களுக்கு அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கின்றது. தானே அமைத்த ஆணைக்குழுவாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட துயரங்களுக்காகத் தனது நாட்டின் குடிமக்களைக் கண்ணீர்சிந்தக்கூட விடாமல் ஒர் அரசு தடுக்கின்றது எனில் – அது, ஒருவகையான சர்வாதிகாரப் போக்கு என்று தானே பொருள்…? அதைவிடவும் கொடுமை என்னவெனில், தனது குடிமக்களுள் ஒரு இனத் தரப்பினருக்குத் துயரங்களைத் தந்த போரின் வெற்றியைத் தனது குடிமக்களுள் இன்னொரு இனத் தரப்பினருக்கு மட்டும் உரித்தானது ஆக்கிவிட்டு, அந்த இன்னொரு இனத் தரப்பினரோடு தானும் சேர்ந்து நின்றுகொண்டு ஓர் அரசு ஆண்டுதோறும் வெற்றி விழாக்களை எடுக்கின்றது எனில் அது, ஒருவகையான இனக்குரோத ஆட்சிமுறை என்றுதானே பொருள்…? பேசுகின்ற மொழியின் அடிப்படையிலான வேறுபாட்டைக் கொண்ட இரு மக்கள் இனங்கள் வாழும் ஒரு நாட்டின் தேசிய நினைவு நிகழ்வு ஒன்று, ஓர் இனத்திற்கு அதீத வெற்றிக் களிப்பையும் அடுத்த இனத்திற்குக் கொடுந்துயரத்தையும் கொடுக்கின்றதெனில், அந்த நினைவு நிகழ்வை ஆண்டுதோறும் முன்னெடுக்கின்ற அரசின் ஆட்சி முறைமை சமத்துவமற்றது என்றுதானே பொருள்…?
அண்மையில், கொழும்பில் ஒரு பொது நிகழ்வில் சந்தித்தபோது பயங்கரவாத முறியடிப்புத் துறை கலாநிதி றொஹான் குணரட்ண என்னைக் கேட்டார், “பிரபாகரன் எவ்வளவு பெரிய கொடுமைக்காரர். கடைசிப் போர் சமயத்தில் தனது மக்களையே நூற்றுக்கணக்கில் சுட்டுத்தள்ளுவதற்கு அவர் உத்தரவிட்டார். அதையெல்லாம் தமிழ் மக்கள் மறந்துவிட்டார்களா என்ன?” றொஹான் குணரட்ண இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படுகின்றவர். அவருக்கு நான் சொன்னேன், “உங்களுடைய ஆட்கள்தானே அவரில் இருக்கும் கோபங்களைத் தமிழர்கள் மறந்துவிடும்படியான காரியங்களைத் திரும்பத் திரும்பச் செய்கின்றார்கள். நீங்கள் சொல்லுவது போல கடைசிக் காலத்தில் புலிகளால் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருந்தால், அந்த உயிர்களையும் சேர்த்து நினைவுகொள்ளுவதற்குத் தன்னும் அரசு தமிழர்களை அனுமதிக்கவில்லையே.” பதிலுக்கு அவர் எதுவும் சொல்லவில்லை.
அமெரிக்க வரலாற்றில் நான் பார்த்த அழகான விடயம் ஒன்று உண்டு. 1800களில் – அமெரிக்காவில் – மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் உரித்தான அதிகாரங்கள் தொடர்பிலும், மாநிலங்கள் மீதான மத்திய அரசின் ஆதிக்க விரிவாக்கம் தொடர்பிலும் பல தசாப்தங்களாக அரசியற் பதற்றம் நிலவி வந்தது. 1861இல் ஏப்ரஹாம் லிங்கன் ஜனாதிபதியாகப் பொறுப்பு ஏற்றதன் பின்பு, அது ஒரு கொடூரமான உள்நாட்டுப் போராக வெடித்தது. வடக்கு மாநிலங்களை மையமாகக் கொண்ட ஐக்கிய அமெரிக்க (United States of America) மத்திய அரசிற்கு எதிராகத் திரண்ட 11 தென் மாநிலங்கள் ‘கூட்டாட்சி அமெரிக்கா’ (Confederate States of America) என்று தம்மைச் சுயபிரகடனம் செய்து அந்த உள்நாட்டுப் போரைத் தொடுத்தன. நான்கு ஆண்டுகளாக நீண்டு, முப்பது இலட்சம் போர் வீரர்கள் பங்கேற்று, ஆறு இலட்சத்து இருபதாயிரம் பேர் கொல்லப்பட்ட அந்தக் கொடூரமான உள்நாட்டுப் போர் – ‘கூட்டாட்சி அமெரிக்கா’ மாநிலங்களின் சரணடைவோடு முடிவுக்கு வந்தது. போர் முடிவுக்கு வருவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் ஏப்ரஹாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டுவிட்ட போதும், அந்தப் போருக்குத் தலைமையேற்று வெற்றிகொண்டு நாட்டை ஒருமைப்படுத்திய பெருமை அவருக்கே உரித்தாக்கப்பட்டது. போரின் முடிவுக்குப் பின்னர், ஐக்கிய அமெரிக்க மத்திய அரசு செய்த முதன்மையான காரியங்களுள் ஒன்று, ஐக்கிய அமெரிக்க மத்திய அரசுடனான போரில் உயிரிழந்த தமது போராளி வீரர்களை அதிகாரபூர்வமாக நினைவுகூர்வதற்கு அந்த 11 மாநிலங்களுக்கும் இருந்த உணர்வையும் உரிமையையும் மதித்ததுதான். அலபாமா, ஆகன்ஸாஸ், புளோரிடா, ஜோஜியா, லூஸியான, மிஸிஸிப்பி, நோர்த் கரோலினா, சவுத் கரோலினா, ரென்னஸீ, ரெக்ஸாஸ், வேஜினியா ஆகிய அந்த தென் மாநிலங்களில் இந்த ‘கூட்டாட்சி நினைவு நாள்’ (Confederate Memorial Day) மாநில மட்டத்திலான அரச விடுமுறை நாட்களாக இன்றும் கொள்ளப்படுகின்றன. இந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த ஐக்கிய அமெரிக்க மத்திய அரசின் படைவீரர்களுக்கான தேசிய நினைவு நாள் (Memorial Day) நாடு தழுவிய வணக்க நாளாகத் தனியான வேறு ஒரு நாளில் கொள்ளப்படுகின்ற போதும், ‘கூட்டாட்சி அமெரிக்கா’ மாநிலங்களைச் சரணடையச் செய்து போரை முடிவுக்குக் கொண்டுவந்த வெற்றிவிழா எதுவும் அமெரிக்காவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதில்லை.
அத்தோடு, அந்த உள்நாட்டுப் போரில் ஐக்கிய அமெரிக்க மத்திய அரசின் படைகளை வழிநடாத்திய ஒரு முதன்மைத் தளபதி ஜெனரல் ஜோன் அலெக்ஸாண்டர் லோகன்தான் தனது படையினருக்கான இந்த தேசிய நினைவு நாள் (Memorial Day) 1868ஆம் ஆண்டில் அரச விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்தப்படுவதற்கு உழைத்தார். ஆனால், அந்த எண்ணம் அவரது மனதில் தானாக உதித்தது அல்ல. ஏனெனில், தமது படைவீரர்களுக்கான நினைவு நாளை (Confederate Memorial Day) ‘கூட்டாட்சி அமெரிக்க’ மாநிலங்கள் ஏற்கனவே கடைப்பிடிக்கத் தொடங்கியிருந்தன.
“தமக்குச் சரியானது எனவும் நியாயமானது எனவும் கருதிய ஒர் இலட்சியத்திற்காகப் போராடி உயிர்நீத்த தமது நண்பர்களையும் உறவினர்களையும் ஆண்டுதோறும் நினைவு கொள்கின்ற தெற்கு மக்களின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி எங்களது ஐக்கிய அமெரிக்க வீரர்களையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் என நான் எண்ணினேன்” என ஜெனரல் லோகன் தன்னிடம் கூறியதாக, “ஒரு போர் வீரனது மனைவியின் நினைவுகள்” என்ற தனது நூலில் அவரது மனைவி குறிப்பிடுகின்றார்.
இத்தகைய நற்சிந்தனைகளிலும், நல்லியல்புகளிலும், நற்செயல்களிலுமிருந்துதானே நல்லிணக்க முயற்சிகள் வேர்விட்டுச் செழிக்க முடியும்…? மாறாக, இறந்து போனவர்களுக்காகக் கண்ணீர் சிந்தவும், இறை நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்களுக்கான கடமைக் கிரியைகளை முடிக்கவும், காணாமல் போனவர்கள் பற்றிய உணர்வுகளை மனதில் கொள்ளவும் தடைகள் போடப்படுகின்றபோது பிரபாகரனின் கோட்பாடுகள் தானே நியாயப்படுத்தப்படுகின்றன…?
தமிழ் குடிமக்கள் எதை நினைக்க வேண்டும், எதை விரும்ப வேண்டும், எதை உணர வேண்டும், எதைச் சிந்திக்க வேண்டும் போன்ற விடயங்களே அரசால் நிர்ப்பந்தங்கள் போலத் திணிக்கப்படும் போது பிரபாகரன் சொல்லிவந்தவையே சரியானவை என்ற எண்ணம் சாதாரண தமிழ் மக்களின் மனதில் இயல்பாகவே எழாதா…?
இந்த கருத்துரையை நான் எழுதுவதன் நோக்கம் மீண்டும் வன்முறையைத் தூண்டுவதோ அல்லது “பயங்கரவாதம்” மீள உருவாகுவதற்கான கருத்துப் பரப்பலைச் செய்வதோ அல்ல. மாறாக, அடுத்தவர்கள் இவற்றைச் செய்கின்றார்கள் என்று குற்றம்சாட்டுகின்ற அரசே இந்த மூன்றையும் செய்கின்றது என்று எனது மனதில் எழுகின்ற எண்ணத்தைச் சொல்லுவது மட்டுமேயாகும்.
தினக்குரல் பத்திரிகைக்காக திருச்சிற்றம்பலம் பரந்தாமன் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.