Photo, @anuradisanayake
புதிய வருடம் பிறப்பதற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் அறிவித்த பிரகாரம் தேசிய தேர்தல்கள் நடைபெறுமானால் அடுத்த வருடம் இலங்கை அரசியல் பரபரப்பானதாக இருக்கப்போகிறது.
கடந்த வெள்ளிக்கிழமையும் கூட ஜனாதிபதித் தேர்தல்கள் குறித்துப் பேசினார். அடுத்த வருடம் முதலில் ஜனாதிபதித் தேர்தலையும் அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலையும் பிறகு மாகாண சபை தேர்தலையும் நடத்துவதே தனது திட்டம் என்றும் அவ்வாறு செய்வதன் மூலமாக அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்வதற்கு அல்லது புதிய அரசியலமைப்பை வரைவது குறித்து ஆராய்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தேர்தல்கள் பற்றிய பேச்சுக்கள் என்று வரும்போது இப்போது பிரதான பாரம்பரிய அரசியல் கட்சிகள் கடந்த காலத்தைப் போன்று உற்சாகமில்லாத மனநிலையில் இருப்பதை குறிப்பாக அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
என்னதான் ஜனாதிபதி விக்கிரமசிங்க தேர்தல்களைப் பற்றி அறிவிப்புக்களை அடிக்கடி செய்தாலும், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதை கூறுவதற்கு மறுத்து வருகிறார். பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்திய பின்னரே தேர்தலில் களமிறங்குவது குறித்து தீர்மானிக்கப்போவதாக அவர் கூறுகிறார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பொறுத்தவரை அதன் தலைவர்கள் எந்தத் தேர்தல் நடந்தாலும் தங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று கூறிவருகின்ற போதிலும், அவர்களுக்கு உண்மை நிலை விளங்கும்.
கடந்த வருடத்தைய பொருளாதார நெருக்கடிக்கு மூன்று ராஜபக்ஷ சகோதரர்கள் பொறுப்பு என்று கடந்த மாதம் உயர்நீதிமன்றம் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புக்குப் பிறகு ராஜபக்ஷர்களின் மக்கள் செல்வாக்கு மேலும் தாழ்ந்த நிலைக்குச் சென்றிருக்கிறது.
அதை நன்கு உணர்ந்தவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்களது ஆட்சிக்கால பொருளாதாரச் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் ஒரு பிரயத்தனமாக பெருவாரியான புள்ளிவிபரங்களுடன் கூடிய அறிக்கை ஒன்றை இரு வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பானவர்கள் என்று உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பவர்களில் ஒருவரான இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் கைவரிசை தெரிவதாக அவதானிகள் கூறுகிறார்கள்.
2015 ஜனவரியில் பதவியில் இருந்து இறங்கியபோது துடிப்பான ஒரு பொருளாதாரத்தையே கையளித்துவிட்டுச் சென்றதாகவும் அதற்கு பிறகு பதவிக்கு வந்த ‘நல்லாட்சி’ என்று சொல்லப்பட்ட மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளே பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணம் என்பதுமே அந்த அறிக்கையின் சாராம்சம்.
2015 ஜனவரியில் செய்ததைப் போன்ற அரசியல் தவறை நாட்டு மக்கள் மீண்டும் செய்யக்கூடாது என்று அறிக்கையின் இறுதியில் மஹிந்த கூறியிருப்பது தங்களையே மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவரவேண்டும் என்று மக்களுக்கு அவர் வழங்கும் ‘ஆலோசனை’ என்பதை தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்?
ராஜபக்ஷர்களைப் பொறுத்தவரை ஒன்றில் தாங்கள் அதிகாரத்துக்கு மீண்டும் வரவேண்டும் அல்லது கடந்தகால தவறுகளுக்காக தங்களைப் பொறுப்புக்கூற வைக்காத அரசாங்கம் ஒன்று பதவிக்கு வருவதை உறுதிசெய்யவேண்டும். அதை அடிப்படையாகக் கொண்டதாகவே அவர்களின் வியூகங்கள் அமையும். அதனால் அவர்களிடம் இருந்தும் தெளிவான அறிவிப்புக்கள் வருவதாக இல்லை.
ஆனால், தேர்தல்கள் தொடர்பில் மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பேசுகின்ற அரசியல் இயக்கமாக தேசிய மக்கள் சக்தியை காணமுடிகிறது. அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவே ஜனாதிபதித் தேர்தலில் இன்றைய நிலையில் முன்னரங்க வேட்பாளராக விளங்கும் ஒரு தோற்றப்பாடு அரசியல் பரப்பில் காணப்படுகிறது. ஊடகங்களையும் அவர் அண்மைக்காலமாக ஆக்கிரமித்து நிற்கிறார்.
நாட்டு மக்களில் இளைஞர்கள் உட்பட அதிகப்பெரும்பான்மையானவர்கள் தேர்தல்களில் மாத்திரமல்ல, அரசியல் கட்சி முறைமையிலும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்றும் சகல கட்சிகளும் சேர்ந்து பெறக்கூடிய வாக்குகளும் கூட மொத்த வாக்குகளில் ஐம்பது சதவீதத்தை தாண்டப்போவதில்லை என்றும் இவ்வருட நடுப்பகுதியில் நுவரெலியாவில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய சட்ட மகாநாட்டில் ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறியதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.
அண்மைக்கால கருத்துக் கணிப்புக்கள் சகலதுமே தேசிய மக்கள் சக்தியே மக்கள் செல்வாக்கில் முன்னிலையில் இருப்பதை வெளிக்காட்டின.
இறுதியாக அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு (Sri Lanka Opinion Tracker Survey of the Institute of Health Policy) ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறக்கூடிய அளவுக்கு திசாநாயக்கவின் மக்கள் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகக் கூட தெரிவித்தது.
திசாநாயக்கவுக்கு 51 சதவீதமும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 30 சதவீதமும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு 13 சதவீதமும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகக் களமிறங்கக்கூடியவருக்கு 6 சதவீதமும் மக்கள் ஆதரவு இருப்பதாக அது கூறியது.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், சர்வதேச அமைப்புக்கள், சிந்தனை குழாம்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் கூட இந்தக் கருத்துக் கணிப்புக்களினால் மருட்சிக்குள்ளாகியிருக்கின்றன.
கொழும்பிலும் மாகாணங்களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையான மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து செய்யப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின் நம்பகத்தன்மை குறித்து பலருக்கு சந்தேகம் இருக்கலாம். கருத்துக் கணிப்புகளில் மக்கள் கூறுகின்றவற்றுக்கும் அவர்கள் வாக்களிக்கும் முறைக்கும் இடையில் வேறுபாடு இருக்கலாம். அதற்கு பல தேர்தல்களை உதாரணமாகக் கூறமுடியும்.
ஆனால், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் விளைவாகவும் பிரதான அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பின் விளைவாகவும் இலங்கையர்கள் மத்தியில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற அரசியல் மனப்போக்கை கருத்திற்கொண்டு நோக்கும்போது மேற்கூறப்பட்ட தரவுகளின் பிரகாரம் அல்லது அவற்றை ஓரளவுக்கு ஒத்த முறையில் மக்கள் வாக்களித்தால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் ஜனாதிபதித் தேர்தலில் முதலாவது சுற்று வாக்கெடுப்பில் எந்த வேட்பாளருக்கும் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காமல் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் சில அவதானிகள் கூறுகிறார்கள்
கடந்த வாரம் ‘சண்டே ரைம்ஸ்’ அரசியல் விவகார ஆசிரியருக்கு அநுரகுமார திசாநாயக்க வழங்கிய நேர்காணலில் 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு 3.1 சதவீத வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவேண்டுமானால் 1500 சதவீதம் அதன் வாக்குகள் அதிகரிக்கவேண்டும் என்று அவரிடம் சுட்டிக் காட்டப்பட்டது.
அதற்கு பதிலளித்த திசாநாயக்க, “அரசியல் கணிதம் அல்ல, அது சமூக அறிவியல். அவ்வாறு வாக்குகளை அதிகரிப்பது கணிதத்தின் அடிப்படையில் யதார்த்தமில்லாததாகத் தோன்றலாம். ஆனால், சமூக அறிவியலின் பிரகாரம் அது சாத்தியமாகும்” என்று கூறினார்.
இத்தகைய பின்னணியில் ஜே.வி.பியின் தேர்தல் வரலாற்றில் இதுகாலவரையான அதன் செயற்பாடுகளை ஒரு தடவை திரும்பிப் பார்ப்பது உகந்ததாக இருக்கும்.
ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர 1982 அக்டோபர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சந்தர்ப்பமே அந்தக் கட்சியின் முதல் தேர்தல் அனுபவமாகும். அதுவே இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலுமாகும்.
அதில் விஜேவீரவுக்கு வெறுமனே 275,000 வாக்குகளே கிடைத்தன. ஆனால், அவரால் பழம்பெரும் இடதுசாரித் தலைவரான கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வாவை விடவும் கூடுதலான வாக்குகளைப் பெறக்கூடியதாக இருந்தது.
1983 கறுப்பு ஜூலை இனவன்செயல்களை அடுத்து ஜெயவர்தன அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டதற்குப் பிறகு 1994ஆம் ஆண்டிலேயே ஜே.வி.பி. மீணடும் தேர்தலில் போட்டியிட்டது.
1994 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான பொதுஜன முன்னணியின் வேட்பாளரான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிராக ஜே.வி.பி. அதன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான நிஹால் கலப்பதியை நிறுத்தியது.
ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்த திருமதி குமாரதுங்கவை ஆதரிக்க தீர்மானத்ததை அடுத்து ஜே.வி.பி. போட்டியில் இருந்து விலகினாலும் கலப்பதியின் நியமனப்பத்திரம் வாபஸ் பெறப்படவில்லை. அதனால் அவரது பெயரும் சி்ன்னமும் வாக்குச்சீட்டில் இடம்பெற்றது. அவருக்கு 22, 749 (0.03 சதவீதம்) வாக்குகள் கிடைத்தன.
பிறகு 1999 டிசம்பர் ஜனாதிபதி தேர்தலில் தனது இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைக் கேட்ட திருமதி குமாரதுங்கவை எதிர்த்து ஜே.வி.பியின் வேட்பாளராகப் போட்டியிட்ட நந்தன குணதிலகவுக்கு 344, 173 (4.08 சதவீதம்) வாக்குகள் கிடைத்தன.
2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் அந்தக் கட்சி சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்தது.
அதற்குப் பிறகு நடைபெற்ற 2010 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எதிரணியின் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை ஜே.வி.பி. ஆதரித்தது.
அதேபோன்றே 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலிலும் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஜே.வி.பி. ஆதரித்தது.
இறுதியாக நடைபெற்ற 2019 ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவை எதிர்த்து ஜே.வி.பியின் புதிய அவதாரமான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க போட்டியிட்டு 418,533 (3.16 சதவீதம்) வாக்குகளைப் பெற்றார்.
நாடாளுமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை, ஜே.வி.பி. முதற்தடவையாக 1994 ஆகஸ்ட் தேர்தலில் போட்டியிட்டு மொத்தம் 90,078 (1.13 சதவீதம்) வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை வென்றெடுத்தது.
2000 நாடாளுமன்றத் தேர்தலில் அந்த கட்சிக்கு 518,774 (6.00 சதவீதம்) வாக்குகள் கிடைத்து பத்து ஆசனங்களைக் கைப்பற்றக்கூடியதாக இருந்தது.
2001 டிசம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் 815,353 (9.10 சதவீதம்) வாக்குகளைப் பெற்ற ஜே.வி.பி. 16 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டது.
2004 ஏப்ரில் நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திர கட்சியுடன் இணைந்து அமைத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூலமாக போட்டியிட்டு 4,223, 970 (45.60 சதவீதம்) வாக்குகளைப் பெற்ற ஜே.வி.பி. 39 ஆசனங்களைக் கைப்பற்றியது. இதுவே அந்த கட்சிக்கு அதன் வரலாற்றில் கிடைத்த அதிகூடிய எண்ணிக்கை ஆசனங்களாகும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டிருக்காவிட்டால் அவ்வாறு பெருமளவு ஆசனங்களை ஒருபோதும் ஜே.வி.பியினால் கைப்பற்றியிருக்க முடியாது. அதன் பிறகு வந்த தேர்தல்கள் தெளிவாக நிரூபித்தன.
2010 ஏப்ரில் நாடாளுமன்றத் தேர்தலில் 441,251 (5.49 சதவீதம்) வாங்குகபை் பெற்று 4 உறுப்பினர்களுடன் மாத்திரமே ஜே.வி.பி. நாடாளுமன்றத்துக்கு வந்தது. மீண்டும் 2015 ஆகஸ்ட் நாடாளுமன்றத் தேர்தலில் 553,994 (4.87 சதவீதம்) வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களையும் இறுதியாக 2020 ஆகஸ்ட் நாடாளுமன்றத் தேர்தலில் 445,958 (3.84 சதவீதம்) வாக்குகளுடன் 3 ஆசனங்களையும் ஜே.வி.பி. கைப்பற்றியது.
இந்த விபரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இரு சந்தர்ப்பங்களை தவிர மற்றும்படி ஜே.வி.பி. சராசரியாக 3 இலட்சத்துக்கும் 5 இலட்சத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் வாக்கு வங்கியைக் கொண்டதாக இருந்து வந்திருப்பதைக் காணமுடியும்.
அத்தகைய ஒரு நிலையில் இருந்து ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறக்கூடிய அளவுக்கு ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியை நாட்டு மக்கள் ஆதரிக்கப்போகிறார்களா? திசாநாயக்க கூறிய சமூக அறிவியல் அத்தகைய பிரமாண்டமான மாற்றம் ஒன்றை அடுத்த வருடம் ஏற்படுத்தப்போகிறதா?
ஜனாதிபதித் தேர்தல்களில் எத்தனை பேர் போட்டியிட்டாலும், இறுதியில் இரு பிரதான வேட்பாளர்களுக்கும் இடையிலேயே உண்மையான போட்டி இருக்கும். மூன்றாவது வேட்பாளரும் அவருக்குப் பின்னால் வருபவர்களும் பொருட்படுத்தக்கூடிய அளவுக்கு வாக்குகளைப் பெறுவதில்லை. ஜே.வி.பி. அவ்வாறான ஒரு கட்சியாக இருந்து வந்ததை கண்டதே இதுவரையான எமது அனுபவமாக இருக்கிறது.
ஆனால், கருத்துக் கணிப்புக்களின் அடிப்படையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களில் ஒருவராக திசாநாயக்க விளங்கப்போவதாக கூறப்படுகின்ற நிலையில் ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டை அதன் கடந்த கால செயற்பாடுகளின் அடிப்படையில் இனிமேலும் மதிப்பிடுவது பொருத்தமானதாக இருக்காது.
திசாநாயக்க ஜனாதிபதியாக வருவாரா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால், அடுத்த தேசிய தேர்தல்களுக்குப் பிறகு இலங்கையின் அரசியல் கோலங்களில் பாரிய மாறுதல்களைக் காணக்கூடியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வீரகத்தி தனபாலசிங்கம்