Photo, Dinuka Liyanawatte/Reuters, CNN
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள கதையை வெளிப்படுத்துவதாகக் கூறும் சனல் 4 விவரணக் காணொளி அந்தத் தாக்குதல்களுக்கு பின்னணியில் இருந்திருக்கக்கூடியவர் யார்? அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள்? என்பது பற்றி நாட்டில் விவாதத்தை மீண்டும் வைத்திருக்கிறது. இதற்கு விடை காண்பது சுலபமானது அல்ல.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களினதும் அதில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களினதும் அடையாளங்கள் தெரிந்தவையே. எட்டு தற்கொலைக் குண்டுதாரிகள் மரணமடைந்தார்கள். 269 அப்பாவி குடிமக்களும் மரணமடைந்தா்கள். குண்டுதாரிகள் சகலரும் முஸ்லிம்கள். அவர்களில் சிலர் மிகவும் படித்தவர்கள் என்பதுடன் வசதிபடைத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக நம்பிய ஒரு இலட்சியத்துக்காக அன்றி மற்றும்படி அவர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கமாட்டார்கள்.
பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்கள, தமிழ்க் கத்தோலிக்கர்கள். 45 பேர் வெளிநாட்டவர்கள். பலியானவர்களில் பெரும் எண்ணிக்கையான சிறுவர்களும் அடங்குவர். அவர்களில் மூவர் ஸ்கொட்லாந்தின் மிகப்பெரிய நிலச்சுவாந்தாரின் மூன்று பிள்ளைகள்.
எந்தவிதத்தில் நோக்கினாலும் இது சர்வதேச விசாரணையையும் சர்வதேச நீதியையும் வேண்டிநிற்கும் ஒரு சர்வதேசக் குற்றச்செயல். பதவியில் இருந்த அரசாங்கத்தை மலினப்படுத்துவதன் மூலமாக முன்னர் ஆட்சியில் இருந்தவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்குக் களத்தை அமைப்பதற்குச் சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள் என்ற ஒரு கதையை சனல் 4 விவரணக் காணொளியைத் தயாரித்தவர்கள் கூறுகிறார்கள்.
நாட்டின் தேசிய பாதுகாப்புக் கட்டமைப்பின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் 7 மாதங்கள் கழித்து நடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்கு வழிவகுத்தது. வெளிநாடுகளில் தஞ்சம் கோருபவர்கள் சிலர் கூறும் விபரங்களைக் கொண்டிருக்கும் சனல் 4 விவரணக் காணொளி நாட்டின் புலனாய்வு இயந்திரத்தின் சில பிரிவினர் கோட்டபாய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றிபெறுவதற்கு வசதியான சூழ்நிலையை தோற்றுவிப்பதற்கு தற்கொலைக் குண்டுதாரிகளுடன் சேர்ந்து சதி செய்தார்கள் என்று கூறுகிறது.
ஈவிரக்கமற்ற இந்தச் குற்றச்செயலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுபவர்களும் மற்றவர்களும் கோட்டபாய ராஜபக்ஷ தேர்தலில் வெற்றிபெறுவதற்கு உதவ தற்கொலைக் குண்டுதாரிகள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருப்பார்கள் என்று கூறுவதில் தர்க்க நியாயம் இல்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர் தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது முஸ்லிம்களுக்கு எதிரான பெரிய கலவரங்களினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கை முஸ்லிம்கள் அவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று சர்வ வல்லமையும் கொண்டவராக வருவதை விரும்பியிருக்கமுடியாது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் பகைமை வரலாறு ஒன்று இல்லாதபோது தற்கொலைக் குண்டுதாரிகள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சமூகங்களை இலக்காகத் தெரிவு செய்திருப்பதற்கான சாத்தியத்தையும் மேற்சொன்ன காரணம் இல்லாமல் செய்கிறது.
அவர்கள் ஏதாவது ஒரு சமூகத்தை தங்கள் தாக்குதல்களுக்கு இலக்காக தெரிவுசெய்வதாக இருந்தால் அது பௌத்தர்களாகவே இருந்திருக்கக்கூடும். பௌத்தர்களில் சில பிரிவினர் பிக்குமாரின் தலைமையில் பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களில் ஈடுபட்டார்கள். அதனால் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் ‘வெளிச்சூத்திரதாரி’ இருந்திருக்கவேண்டும்.
தோல்விகண்ட விசாரணைகள்
குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு குறைந்தபட்சம் இரு மாதங்களாக நாட்டில் குறிப்பாக நகரப் பகுதிகளில் பீதி நிலவியது என்பது அந்தத் தாக்குதல்களில் இருந்த அதிர்ச்சிகரமான அம்சத்தை வெளிக்காட்டியது. ஏக காலத்தில் ஒரே மாதிரியான ஆறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த மிகவும் கச்சிதமும் நுட்பமும் நிறைந்த திட்டமிடல் அதை நடத்தியவர்களிடம் முப்பது வருடகாலமாக அரசாங்கத்துக்கு எதிராகப் போரில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளிடமும் இருந்திராத உட்கட்டமைப்பு ஒன்று இருந்தது என்பதை உணர்த்தியது.
இதை உணர்ந்த நிலையில், குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு நீண்டகாலமாக மக்கள் மத்தியில் ஒரு நெருக்கடிக்குள் வாழ்கிறோம் என்ற எண்ணம் தொடர்ந்து நீடித்தது. கிறிஸ்தவர்கள் மாத்திரமல்ல ஏனைய சமூகத்தவர்கள் மத்தியிலும் அடுத்த இலக்கு தாங்களாக இருக்கக்கூடுமோ என்ற பீதி நிலவியது.
அத்தகைய பயங்கரமான உட்கட்டமைப்பை பெரும்பாலும் கொண்டிருக்கக் கூடியவர்கள் அந்தநேரத்தில் ஐரோப்பாவையும் மத்திய கிழக்கையும் இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) இயக்கத்தவர்களாகவே இருக்கமுடியும் என்று நம்பப்பட்டது. ஆனால், பதற்ற நிலை தணிந்து அரசாங்கம் மாறியதும் அந்த இயக்கம் இலங்கையில் எந்த அக்கறையையும் காட்டவுமில்லை. எந்த வடிவிலும் அது மீளத் தோன்றவுமில்லை.
உயிர்த்த குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னரான கடந்த நான்கு வருட காலப்பகுதியில் அரசாங்கம் பல்வேறு விசாரணைகளை நடத்தியது. குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு விரைவாக மே 22, 2019 சபாநாயகர் நியமித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு 23 அக்டோபர் 2019 அதன் அறிக்கையைக் கையளித்தது. அந்தக் குழுவில் பல்வேறு அரசியல் கட்சிகள் அங்கம் வகித்த நிலையில் அதனால் கருத்தொருமிப்புடனான முடிவுகளுக்கு வருவது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இது எதிர்பார்த்திருக்கக்கூடியதே.
அதைத் தொடர்ந்து 22 செப்டெம்பர் 2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தார். அது சிரமம் மிகுந்த விசாரணைகளுக்குப் பிறகு பல தொகுதிகள் கொண்ட அறிக்கையை பெப்ரவரி 1, 2021 கையளித்தது. அந்த அறிக்கையை அரசாங்கம் பொதுமக்களுக்கு வெளியிடாதது மாத்திரமல்ல, முழு அறிக்கையையும் கோரிய திருச்சபைகளுக்கு கூட கொடுக்கவில்லை.
அதேவேளை, அடுத்து முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் விசாரணைகள் மோசமான திருப்பத்தை எடுத்தது. உயர்மட்ட பொலிஸ் விசாரணையாளர்களில் சிலர் தாங்கள் சட்டமீறல்களைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்களில் ஒருவர் தான் கொடுமைப்படுத்தப்படக்கூடும் என்ற பயத்தில் நாட்டைவிட்டு தப்பியோடினார். இந்த விசாரணையாளரின் குரலை சனல் 4 விவரணக் காணொளியில் கேட்கக்கூடியதாக இருந்தது.
1971ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை பாரிய வன்முறைக் காலப்பகுதிகளுக்கு முகங்கொடுத்தது. அவற்றின் உண்மையும் பொறப்புக்கூறலும் இன்னமும் மறைந்தே கிடக்கிறது. 1988/ 1989 கிளர்ச்சிக் காலப்பகுதியில் இறந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இதுவரை தெரியாது. அது ஆயிரக்கணக்கில் இருக்கலாம்.
அந்தக் கிளர்ச்சிகளில் உயிர்தப்பி வாழ்பவர்களும் அவர்களின் குடும்பங்களும் இன்னமும் அந்த நினைவுகளுடனேயே வாழ்கிறார்கள். உண்மையும் நீதியும் வெளிக்கிளம்பும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான்கு தசாப்தங்கள் கடந்தும் எதையும் காணமுடியவில்லை.
2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த உள்நாட்டுப்போரில் இதை விடவும் கூடுதல் எண்ணிக்கையானவர்கள் மரணமடைந்தார்கள், காணாமல்போனார்கள். அவர்களின் குடும்பங்களும் அந்த நினைவுகளுடன் வாழ்வதுடன் உண்மை கண்டறியப்பட்டு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் கொண்டிருக்கிறார்கள்.
நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புதல்
2009ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தது முதல் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கேள்விக்குட்படுத்தப்படும் சில நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருந்துவருகிறது. 2015 தொடக்கம் 2018 வரை ஒரு குறுகிய காலப்பகுதிக்கு ஐக்கிய நாடுகள் தீர்மானங்களுடன் ஒத்துழைப்பதற்கு இலங்கை இணங்கியதுடன் நாட்டுக்கு அனுகூலமான அறிவிப்புகளையும் காணக்கூடியதாக இருந்தது. ஆனால், மீண்டும் இலங்கை பாதகமான நிலைமைக்கு திரும்பியிருக்கிறது போன்று தெரிகிறது.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் மிகவும் அடிப்படையானது பொறுப்புக்கூறல் இன்மையாகும் என்று குறிப்பிட்டார்.
போர்க் காலப்பகுதியின் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்களுக்கு மேலதிகமாக விசாரிக்கப்படவேண்டிய மக்களுக்கு எதிரான விவகாரங்களின் பட்டியலில் ஐக்கிய நாடுகள் முறைமை இப்போது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களையும் திடீர்ப் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களையும் சேர்த்திருக்கிறது. இவை உண்மை மற்றும் பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டியவையாகின்றன.
நம்பிக்கையும் நல்லெண்ணமும் இன்மையே இலங்கையில் இன்று ஆட்சிமுறையின் பிரதான பிரச்சினையாகும். இதை மீளக்கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும். மக்களும் அரசாங்கத்தை நம்பவில்லை,அரசாங்கமும் மக்களை நம்பவில்லை என்றே தோன்றுகிறது.
நம்பிக்கை ஏற்படவேண்டுமானால் வெளிப்படைத் தன்மையும் உண்மையும் இருக்கவேண்டியது அவசியமாகும். உண்மையைக் கண்டறிவதற்கு அரசாங்கம் முன்னெடுத்த விசாரணைகளின் தொடர்ச்சியான தோல்விகளின் விளைவாக அரசாங்கத்தில் நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. அதனால், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு விசாரணையையும் மக்கள் அக்கறையுடன் நோக்கப்போவதில்லை. அதை காலத்தை கடத்தும் ஒரு செயலாகவே அவர்கள் கருதுவார்கள்.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணைக்குழு ஒன்றை நியமித்திருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் சூத்திரதாரி ஒருவர் இருந்ததாக முன்னாள் சட்டமா அதிபரினால் கூறப்பட்ட குற்றச்சாட்டை விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பதற்கான தனது உத்தேசத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த இரு விசாரணைகள் நிறைவுபெற்றதும் அவற்றின் அறிக்கைகள் அடுத்து முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
ஐயகோ, ஜனாதிபதியின் இந்த முன்மொழிவுகள் ஏற்கெனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படாத விசாரணைக் குழுக்களையும் அவற்றின் அறிக்கைகளையும் ஒத்தவையாகவே தெரிகிறது.
முன்னைய உள்நாட்டு விசாரணைகளின் ஊடாக குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்திருக்கக்கூடியவர்கள் அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களைப் பொறுப்புக்கூறவைக்கத் தவறியமையே சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக எழுவதற்கு வழிவகுத்தது. உண்மையையும் நீதியையும் பெறுவதற்கு சர்வதேச விசாரணையை பிரதானமாக கத்தோலிக்க திருச்சபையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் கோரிநிற்கின்றன.
சனல் 4 விவரணக் காணொளி வெளியான பிறகு சர்வதேச ஆதரவுடனான விசாரணைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கோரிக்கை விடுத்திருக்கிறார். உண்மை வெளிவருவதற்கு எதிராக வலிமையான சக்திகள் அணிதிரண்டு நிற்பதற்கு மத்தியில், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் உண்மையில் பயங்கரவாதிகளின் செயலா அல்லது சிலரை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்கு தீட்டப்பட்ட சதித்திட்டம் ஒன்றின் விளைவா என்பதை மக்கள் தெரிந்துகொள்ளக்கூடியதாக சந்தேகங்களைத் தெளிவுபடுத்த நம்பகமான விசாரணை தேவை என்று துணிச்சலுடன் அவர் கூறியிருக்கிறார்.
அறகலய போராட்ட இயக்கத்தினால் பதவியில் இருந்து விரட்டப்பட்ட ஜனாதிபதிக்குப் பதிலாக பதவிக்கு வந்த ஜனாதிபதியும் அதே பாதையைத் தொடருவது ஒரு முரண்நகையாகும் என்றும் பிரேமதாச கூறியிருக்கிறார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் பாதிக்கப்பட்டவர்களினதும் கத்தோலிக்கத் திருச்சபை போன்ற அவர்களின் பிரதிநிதிகளினதும் துடிப்பான பங்கேற்புடன் சர்வதேச ஆதரவுடன் சம்பந்தப்பட்ட சகல தரப்புகளையும் உள்ளடக்கிய சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான அகல்விரிவான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். ஐக்கிய நாடுகளின் இந்த கோரிக்கை உள்நாட்டுப் போரின்போது இறந்துபோன அல்லது காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களின் கதி பற்றிய உண்மையைக் கண்டறிய தமிழ் மக்கள் கோருகின்ற விசாரணையை ஒத்ததாக இருக்கிறது.
இந்தப் பிரச்சினைகளில் சம்பந்தப்பட்டவர்கள் உண்மை வெளிவருவதை விரும்பவில்லை என்ற அறிவுபூர்வமான முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.
சர்வதேச பங்கேற்புடனான அத்தகைய விசாரணை உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் மாத்திரமல்ல உள்நாட்டுப்போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சி தொடர்பிலும் பொறுப்புக்கூறலையும் நீதியையும் உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் மெய்யான நோக்கங்களில் இலங்கை மக்களும் பாதிக்கப்பட்டவர்களும் சர்வதேச சமூகமும் நம்பிக்கை வைக்க உதவும்.
அத்தகைய விசாரணை ஒரு மேலதிக பயனாக, சர்வதேச உதவி உச்சபட்சமாக தேவைப்படுகின்ற ஒரு நேரத்தில் நாட்டுக்கு உதவமுடியும்.
கலாநிதி ஜெகான் பெரேரா