Photo, SELVARAJA RAJASEGAR

ஆளும் கட்சி மெதுவாக ஆனால் உறுதியாக நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு செயற்படத் தொடங்குகின்றது. ஆளும் கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நீக்கப்பட்டமை இதன் ஒரு அறிகுறியாகும். கடந்த வருடம் பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வேறுபட்டதாக ஒரு மறுசீரமைப்பு பாத்திரத்தை வகிக்கத்தொடங்கிய அதன் சில உறுப்பினர்களில் அவரும் ஒருவர். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் மறுசீரமைப்புப் பிரிவின் உறுப்பினரான டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக செயற்பட்டு பேராசிரியர் அவருக்கு வாக்களித்தார்.

ஆனால், பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வேறுவிதமாக சிந்தித்து எதிர்க்கட்சி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்தனர். தங்களின் போக்கை மாற்றிக்கொள்ளாத ஆளும் கட்சி உறுப்பினர்களின் வாக்குகளிலேயே விக்கிரமசிங்க தனது வெற்றிக்குத் தங்கியிருந்தார். அழகப்பெரும் வெற்றி பெற்றிருப்பாரேயானால், பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஆட்சிமுறைமையில் மாற்றம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு ஆளும் கட்சிக்குள் இருக்கக்கூடிய மறுசீரமைப்புக்கு விருப்பமுடையவர்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவைப் பெற்றிருக்க முடியும்.

கடந்த வருட நடுப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவையும் அவரது அரசாங்கத்தையும் அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிந்த போராட்ட இயக்கத்தின் போர்க்குரல் ஒரு முறைமை மாற்றமேயாகும். இதுவே பதவியில் இருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவும் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வீட்டுக்குப் போகவேண்டும் என்று கோரிய சுலோகங்களில் பிரதிபலித்து நின்ற ஒரு அரசியல் மற்றும் தார்மீக நிலைப்பாடாகும். ‘முறைமை மாற்றம்’ என்பதன் அர்த்தத்தை பலர் தெரிந்திருக்காவிட்டாலும் கூட ‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற சுலோகம் நாட்டின் மூலை முடுக்கெங்கும் தெளிவாக விளங்கிக் கொள்ளப்பட்டது.

மக்களின் ஆணையுடன் புதிய உறுப்பினர்களைக் கொண்ட புதியதொரு அரசாங்கத்தை தோற்றுவிக்கக்கூடிய புதிய தேர்தல்களுக்கான உட்கிடையான அழைப்பே அந்த சுலோகமாகும். ஊழலை இல்லாதொழிக்கவேண்டும் என்பதும் அந்த நேரத்தைய சுலோகங்களின் பட்டியலில் முதன்மையானதாக இருந்தது. ஊழல் தொடர்ந்தும் பொருளாதாரத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. கடந்த வருடம் 9 சதவீதத்தினால் சுருங்கிய பொருளாதாரம் இவ்வருடம் மேலும் 4 சதவீதத்தினால் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல்களுக்கும் பொறுப்புக்கூறலுக்கும் போராட்ட இயக்கம் முன்வைத்த கோரிக்கைகளில் எதுவுமே நிறைவேறவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. மக்களின் தற்போதைய விருப்புவெறுப்பை தெரிந்துகொள்வதற்கு உள்ளூராட்சி தேர்தல்களும் கூட நடத்தப்படவும் இல்லை, ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது பொறுப்புக் கூறவைப்பதற்கு சிறிதளவேனும் நடவடிக்கை எடுக்கப்படவும் இல்லை.

நைட்ரிக் அமிலத்தை ஏற்றிக்கொண்டு வந்தபோது இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்து சுற்றுச்சூழலுக்கும் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்துக்கும் பேரளவு அழிவை ஏற்படுத்திய  ‘எக்ஸ்பிரஸ் பேர்ள் ‘ என்ற கொள்கலன் கப்பல் விவகாரத்தில் ஊழல் பிரச்சினை மீண்டும் அம்பலத்துக்கு வந்திருக்கிறது. இந்தக் கப்பல் அனர்த்தத்துடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு இலஞ்சமாக இலங்கையர் ஒருவரின் வெளிநாட்டு வங்கிக் கணக்கிற்கு 25 கோடி அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டிருப்பது தொடர்பான விபரங்கள் தனக்கு கிடைக்கப்பெற்றிருப்பதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்த அதிர்ச்சி தரும் தகவலை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இந்த இலஞ்ச விவகாரம் தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறு அவர் பொலிஸாரைப் பணித்திருக்கிறார். விசாரணையில் இருந்து வெளிவரக்கூடிய தகவல்களுக்காக காத்திருக்கவேண்டியிருக்கிறது.

பொறுப்புக்கூறல் இல்லாமை

அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களை பொறுப்புக்கூறவைப்பதற்கு எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படாமல் இருப்பது பெரும் வேதனைக்குரியது. அதேவேளை விவகாரங்கள் ஒளிவுமறைவின்றி கையாளப்படுவதாகவும் இல்லை. இந்த இரு விடயங்களையுமே தற்போது ஒடுக்கப்பட்டிருக்கும் போராட்ட இயக்கம் முக்கியமான கோரிக்கையாக முன்வைத்தது. பல விவகாரங்கள் மூடுமந்திரமாகவே இருக்கின்றன. அண்மையில் மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா மாயமானது. இரு வாரங்களாகியும் பணம் எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்தோ அல்லது எவ்வாறு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்தோ எந்தத் தகவலும் இல்லை. வெளிப்படைத்தன்மையை காணமுடியவில்லை. பணம்  எங்கே, யாரால் காணாமலாக்கப்பட்டது என்பது குறித்து எந்த விளக்கமும் தரப்படவில்லை.

கோடிக்கணக்கான ரூபாக்களை மத்தியவங்கி அச்சிட்டுக்கொண்டிருக்கும் பின்னணியிலேயே 50 இலட்சம் ரூபா பணக்கட்டுகள் காணாமல் போனது என்பது கவனத்தில் எடுக்கப்படவேண்டியதாகும். ஒரு விசித்திரமான விடயம் என்னவென்றால்  பொறுப்புக்கூறல் என்ற கோட்பாடு இலங்கையில் இருக்கிறது. ஆனால், அரசாங்கத்தில் அது நடைமுறையில் இல்லை. தனியார் வங்கிகளில் ஊழியர்கள் தங்களது கடமைகளின்போது பணத்தைக் கையாளுவதில் தவறிழைத்தால் அவர்களின் சம்பளத்தில் இருந்து அந்தப் பணம் அறவிடப்படுகிறது.

கீழ் மட்டங்களில் உள்ளவர்கள் மீது ஒழுங்கு கட்டுப்பாடு திணிக்கப்படும் போக்கை பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் கையாளுகின்ற விவகாரத்திலும் காணக்கூடியதாக இருக்கிறது. மக்கள் மீது பெருமளவு வரிகளை சுமத்தியும் பெருமளவு ஊழியர்கள் குறைப்புக்கு வழிவகுக்கக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துக்கொண்டுமே சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம்  உடன்பாட்டை செய்திருக்கிறது. பொருளாதார மறுசீரமைப்பின் சுமை நடுத்தர வர்க்கத்தவர்கள் மீதும் அவர்களுக்கு கீழ் உள்ள மக்கள் பிரிவினர் மீதும் விகிதாசாரப் பொருத்தமில்லாத வகையில் சுமத்தப்படுகிறது. நிலையான வருமானம் பெறுபவர்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கைச் செலவு வானளாவ உயர்ந்துசென்று கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் உயர்ந்தளவு வரிகளையும் செலுத்தவேண்டியிருக்கிறது. அவர்களுக்கு இரட்டைச் சுமை.

மறுசீரமைப்புக்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் விற்பனைக்கும் அரசாங்கம் விடுக்கும் அழைப்பு அரசியல் தலைவர்களின் அரசியல் ஞானத்துக்கும் தொலைநோக்கிற்குமான சான்றாக காட்சிப்படுத்தப்படுகிறது. அரசாங்க சேவை அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பணியாளர்களைக் கொண்டிருக்கிறது.அரசாங்கம் நிருவகிக்கும் நிறுவனங்கள் பாரிய நட்டத்தில் இயங்குகின்றன. ஆனால், இதற்காக அரசியல் தலைவர்கள் தங்களது அரசியல் அனுகூலத்துக்காக இந்த நிறுவனங்களில் பெரும் எண்ணிக்கையில் நியமனங்களை செய்த ஊழியர்களை குறைசொல்வது நியாயமற்றதாகும்.

அரசியல் விவாதம் தலைகீழாக்கப்பட்டிருக்கிறது. தவறான முகாமைத்துவத்தின் மூலமாக பொருளாதார குற்றங்களை செய்தமைக்காக அரசியல் தலைவர்களைப் பொறுப்புக்கூற வைப்பது குறித்து அல்ல அவர்களினால் நியமிக்கப்பட்ட  ஊழியர்கள் அவர்கள் செய்கின்ற வேலைக்கு பொருத்தமில்லாத அளவுக்கு பெருமளவு சம்பளத்தையும் வேறு கொடுப்பனவுகளையும் பெறுவதாகக் குற்றச்சாட்டை அவர்கள் மீது திருப்பும் வகையில் விவாதம் திரும்பியிருக்கிறது.

கடந்தகால தவறான பொருளாதார முகாமைத்துவம், ஊழல் மற்றும் அரசாங்கச் சொத்துக்கள் சூறையாடலுக்குப் பொறுப்புக்கூற வைப்பதற்கு எந்தவொரு முயற்சியும் முன்னெடுக்கப்படாமல் இருக்கின்றமை பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய தற்போதைய  விவாதத்தில் காணமுடியாமல் இருக்கும் இன்னொரு பரிமாணமாகும். அரசாங்கம் அந்த அரசியல் தலைலர்களைப் பொறுப்புக்கூற வைக்கவில்லை. பதிலாக போராட்ட இயக்கத்தின் உச்சக்கட்டத்தில் அந்தத் தலைவர்களின் வீடுகள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டமையால் அவர்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் மற்றும் மனவேதனைக்காக பரிவு காட்டப்படுகிறது.

அவ்வாறு பரிவு காட்டப்படுவதை விளங்கிக்கொள்ளமுடியும். ஆனால், அது பாதிப்புக்குள்ளான சகல தரப்பினர் மீதான பரிவாக இருக்கவேண்டும். சாதாரண குடிமக்களுடன் ஒப்பிடும்போது அரசியல்வாதிகள் வேறுபட்ட முறையில் நடத்தப்படுவது மக்கள் மத்தியில் கோபத்தைக் கிளறும். கடந்தகால போர், பயங்கரவாதம் மற்றும் கலவரங்களின்போது பெருமளவு குடிமக்கள் உடமைகளை இழந்தார்கள். அவர்களுக்கு அரசாங்கங்கள் உகந்த முறையில் இழப்பீடுகளை வழங்கவில்லை. கணிசமான எண்ணிக்கையானவர்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை.

நிறைவேறக்கூடிய கனவு

ஊழல் பிரச்சினையைக் கையாளுவதில் அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய விருப்பமின்மை அல்லது இயலாமையை அதன் வேர்களில்தான் தேடவேண்டும். அரசாங்கமும் ஜனாதிபதியும் அவர்களின் தொடர்ச்சியான இருப்புக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நம்பியிருக்கிறார்கள். இந்த அரசாங்கத்தின் அணுகுமுறை குறைந்தபட்சம் நான்கு தசாப்தங்களாக இருந்த நலிவடைந்த நிலைக்கு நாட்டை கொண்டுசெல்லும் வேதனையான சூழ்நிலை இருக்கிறது. பொறுப்புக்கூறலையும் மறுசீரமைப்பையும் உறுதிசெய்வதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தயாரில்லாததாக இருந்துவந்திருக்கிறது. அதனால் ஆளும் கட்சியினதும் அதன் தலைவர்களினதும் பணயக்கைதியாக அரசாங்கம் இருக்கிறது.

தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து அரசாங்க உறுப்பினர்கள் சிலர் பேசத்தொடங்கியிரு்கிறார்கள். அவ்வாறு தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக இருந்தால் ஊழலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது உட்பட உண்மையான அதிகாரப்பகிர்வை நோக்கிய முயற்சியாக தெளிவான இலக்குகளின் அடிப்படையில் அமையவேண்டும். ஊழலைக் கையாளுவதற்கு மேலாக அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது நோக்கமாக இருக்கக்கூடாது.

மக்கள் விரும்புகின்ற துரித பொருளாதார வளர்ச்சி இலங்கையில் ஏற்படவேண்டுமானால், தவறான பொருளாதார முகாமைத்துவம், பொதுச்சொத்து சூறையாடல் மற்றும் பழைய கடன்களை மீளச்செலுத்துவதற்கு அரசாங்கங்கள் பணத்தைப் பெற்ற மோசடித்தனமான முதலீட்டுத் திட்டங்கள் (போன்சி திட்டங்கள்) எல்லாமே மாறவேண்டும். மக்களை அல்ல நேர்மையீனமாகவும் ஊழல்தனமாகவும் செயற்பட்டுவருகின்ற தலைவர்களையே குறைகூறவேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் 25 சதவீதமானவற்றை அரசாங்கம் நிறைவேற்றியிருக்கின்ற அதேவேளை, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பிலான கடப்பாடுகளை நிறைவேற்ற அது தவறிவிட்டது  என்று முன்னணி நிபுணத்துவ நிறுவனமான ‘ வெறிடே றிசேர்ச் ‘ சுட்டிக்காட்டியிருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டம் மீதான காலப்பொருத்தமான முன்னேற்றம் இரு பயன்களைக் கொண்டிருக்கிறது. முதலாவது, பல நடவடிக்கைகளில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய பொருளாதார பயன்கள். இரண்டாவது, இலங்கையின் ஆட்சிமுறையில் நம்பிக்கையை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும். அது பழைய கடன் சுமையை மறுசீரமைப்பதற்குப் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் எதிர்காலப் பொருளாதார மீட்சிக்கான பயணத்தை துரிதப்படுத்தவும் உதவும்.

1970 களில் இலங்கை முக்கியமான சகல அம்சங்களிலும் (அதாவது மக்களுக்கான சமூக நலன்புரி சேவைகளை உறுதிப்படுத்தல், வெளியுறவுக் கொள்கையில் அணிசேராமை, பொருளாதாரத்தை முதலில் தாராளமயமாக்கிய தெற்காசியப் பிராந்திய வளர்முக நாடுகளில் ஒன்று) மூன்றாம் உலகின் ஒரு தலைமை நாடாக விளங்கியது. உகந்த தலைமைத்துவம் இருந்தால் அந்த பாரம்பரியத்தை இலங்கை மீண்டும் தனதாக்கிக்கொள்ளமுடியும். 450 வருடகால காலனித்துவ ஆட்சிக்கும் அதனுடன் வந்த சுரண்டலுக்கும் பிறகு சுதந்திரம் பெற்ற வேளையில் இலங்கை  ‘கிழக்கின் சுவிட்ஸர்லாந்தாக’ வரக்கூடிய ஆற்றலுடன் முழு ஆசியாவிலுமே பொருளாதாரத் தலைமைத்துவ நாடுகளில் ஒன்றாக விளங்கியது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இலங்கைக்கு இயல்பாக அமைந்த இயற்கை வளங்களும் அதன் மக்களின் இயல்பான ஆற்றல்களும் (புலம்பெயர்ந்த நாடுகளில் இலங்கையர்கள் சாதிக்கின்ற வெற்றிகளின் மூலமாக அந்த ஆற்றல்கள் நிரூபிக்கப்படுகின்றன) கடந்துபோன வருடங்களில் இழந்துபோன வாய்ப்புக்களை துரிதமாக எட்டிப்பிடிக்க வகைசெய்யும் என்பது எமது நம்பிக்கை. ஆனால், நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுக்க முறையும் சகலரையும் (வடக்கையும் தெற்கையும் வசதி படைத்தவர்களையும் வறியவர்களையும்) இந்தப் பயணத்தில் அழைத்துச் செல்லும் ஆர்வமும் இருக்கவேண்டியது அவசியமாகும்.

கலாநிதி ஜெகான் பெரேரா