Photo, SCROLL.IN

எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகளுக்கு எதிராக அரசாங்கங்கள் நீதித்துறையைப் பயன்படுத்துவது என்பது இன்று பெருமளவுக்கு  வழமையானதாகிவிட்டது. அதுவும் குறிப்பாக எமது தெற்காசிய நாடுகளில் இந்தப் போக்கு அண்மைக்காலமாக தீவிரமடைந்திருக்கிறது. இலங்கையில் இதற்கு பல உதாரணங்களைக் கூறமுடியும்.

மிகவும் பிந்திய உதாரணங்களாக இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு குற்றவியல் அவதூறு வழக்கு ஒன்றில் இருவாரங்களுக்கு முன்னர் குஜராத் மாநில நீதிமன்றம் ஒன்று விதித்த இரு வருட சிறைத்தண்டனையையும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் தொடுக்கும் பல வழக்குகளையும் கூறமுடியும்.

எதிரணி தலைவர்கள் அடுத்த தேர்தல்களில் பங்கேற்பதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டே அரசாங்கங்கள் அவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்கின்றன. பல வழக்குகள் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலும் அமைவதை காணக்கூடியதாக இருக்கிறது.

ராகுலுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு அவரின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

2019 லோக்சபா தேர்தலின்போது கர்நாடகா மாநிலத்தில் பிரசாரக்கூட்டம் ஒன்றில் ‘மோடிகள்’ குறித்து ராகுல் தெரிவித்த கருத்தே அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

“என் மனதில் ஒரு கேள்வி எழுகிறது. இந்த கள்வர்கள் எல்லோரும் மோடி, மோடி, மோடி என்ற கடைசிப்பெயரை ஏன் கொண்டிருக்கிறார்கள்? நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி. மேலும் ஆராயப்போனால் மேலும் பல மோடிகள் வருவார்கள் ” என்று அவர் கூறினார். நிரவ் மோடி, லலித் மோடி என்பவர்கள் நிதி மோசடிகளை செய்துவிட்டு இந்தியாவை விட்டு தப்பிச்சென்று வெளிநாடுகளில் வாழும் பெரும் கோர்ப்பரேட் முதலாளிகள். இவர்களின் பெயர்கள் ‘இன்டர்போலின்’ பட்டியலில் இருக்கிறது. லலித் மோடி கிரிக்கெட் நிருவாகியாகவும் இருந்தவர். இந்தியன் பிரிமியர் லீக்கை தாபித்து அதன் தொடக்க கால தலைவராகவும் இருந்தவர்.

மோடிகள் சகலரும் ‘கள்வர்கள்’ என்று வியாக்கியானம் செய்யப்படக்கூடியதான தொனியில் அமைந்த ராகுலின் பேச்சு மோடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற வகையிலும் தனிப்பட்ட முறையிலும் தனக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் சட்ட சபையின் பாரதிய ஜனதா உறுப்பினர்களில் ஒருவரான புர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கைத் தொடுத்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அதை நிறுத்திவைக்கும்படி அவரே நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ததை அடுத்து நான்கு வருடங்களாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.

திடீரென்று புர்னேஷ் மோடி அந்த மனுவை இவ்வருடம் பெப்ரவரி மாதம் திரும்பப்பெற்றுக்கொண்டதையடுத்து சில வாரங்களுக்குள்ளாக துரிதமாக வழக்கை விசாரணை செய்த குஜராத் நீதிமன்றம் ராகுலுக்கு இரு வருட சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், அவரை உடனடியாகவே பிணையில் விடுதலை செய்த அந்த நீதிமன்றம் மேல்நிலை நீதிமன்றம் ஒன்றில் மேன்முறையீடு செய்வதற்கு அனுமதிக்குமுகமாக தண்டனையை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தியது.

தீர்ப்புக்கு மறுதினமே ராகுலை லோக்சபா உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்ற செயலகம் தகுதிநீக்கம் செய்தது. உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து அவர் வெளியேறுவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக ராகுல் அடுத்தவருடம் நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தலில் மாத்திரமல்ல, சிறைத்தண்டனை காலமான இரு வருடங்கள் உட்பட எட்டு வருடங்களுக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாமல் போகக்கூடிய ஆபத்து இருக்கிறது. மேன்முறையீட்டு வழக்கில் மேல்நிலை நீதிமன்றம் வழங்கக்கூடிய தீர்ப்பில்தான் அவரின் அரசியல் எதிர்காலம் தங்கியிருக்கிறது.

இந்திய உச்சநீதிமன்றம் பத்து வருடங்களுக்கு முன்னர் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றின் பிரகாரம் நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டு இரு வருடங்கள் அல்லது அதற்கும் கூடுதலான கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினரின் அல்லது மாநில சட்டசபை உறுப்பினரின் பதவி உடனடியாகவே முடிவுக்கு வந்துவிடும். சிறைவாசத்துக்குப் பிறகு 6 வருடங்கள் அவர் மக்களால் தெரிவு செய்யப்படும் எந்தவொரு பதவிக்கும் தேர்தலில் போட்டியிடமுடியாது.

கலாநிதி மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது உச்சநீதிமன்றத்தின் அந்தத் தீர்மானத்தை மாற்றியமைக்க நாடாளுமன்றத்தில் அவசரச்சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். ஆனால், அதை கடுமையாக எதிர்த்த ராகுல் செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் அந்தச் சட்டமூலத்தின் பிரதியை கிழித்தெறிந்தார். அதையடுத்து மன்மோகன் சிங் சட்டத்தை நிறைவேற்றும் முயற்சியை கைவிடவேண்டியதாயிற்று.

குற்றவாளிகளாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டசபை உறுப்பினர்களும் தொடர்ந்தும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருக்கக்கூடாது என்ற நேர்மையான காரணத்துக்காக ராகுல் தங்களது காங்கிரஸ் அரசாங்கத்தின் பிரதமரே கொண்டுவந்த சட்டத்துக்கு எதிர்ப்பை வெளிக்காட்டியிருக்கக்கூடும். ஆனால், அந்த எதிர்ப்பு ஒருநாள் தனக்கே வினையாக வரும் என்று அவர் ஒருபோதும் நினைத்திருக்கமாட்டார்.

குஜராத் நீதிமன்ற தீர்ப்பும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அவரின் தகுதி நீக்கமும் இந்தியாவுக்கு மூன்று பிரதமர்களைத் தந்த பிரபல்யமான அரசியல் குடும்பத்தின் வாரிசான 52 வயதான ராகுலுக்கு மக்கள் மத்தியில் பெருமளவு அனுதாபத்தைக் கொண்டுவருமா? அவரது அரசியல் எதிர்காலத்துக்கு அனுகூலமாக அமையுமா அல்லது பின்னடைவாக அமையுமா? என்று இந்திய அரசியல் அரங்கிலும் ஊடகங்களிலும் வாதங்கள் மூண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராடப்போவதாக கூறியிருக்கும் ராகுல் இந்தியாவின் குரலுக்கான தனது போராட்டத்தில் எந்த விலையையும் செலுத்தத்தயாராயிருப்பதாக சூளுரைத்திருக்கிறார். முக்கியமான எதிர்க்கட்சித் தலைவரான அவருக்கு குஜராத் நீதிமன்றம் ஓரளவு மென்மையான தண்டனையை வழங்கியிருக்கலாம் என்று சில அரசியல்வாதிகளும் அவதானிகளும் கருத்து வெளியிட்டிருந்தார்கள்.

மோடிகள் குறித்து ராகுல் பேசிய கர்நாடக மாநிலத்தின் நீதிமன்றம் ஒன்றிலேயே அவருக்கு எதிரான குற்றவியல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்றும் குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டமை முற்றுமுழுதாக அரசியல் நோக்கம் கொண்ட செயல் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இது தொடர்பிலான சட்ட ரீதியான சர்ச்சைகள் கிளம்புவதற்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுலின் தகுதிநீக்கம் நீதிமன்றத்தின் தீர்ப்பின் இயல்பான விளைவு. சட்டத்தின் முன்னால் சகலரும் சமத்துவமானவர்களே என்று ஆளும் பாரதிய ஜனதா கூறிய அதேவேளை, தீர்ப்பு வழங்கப்பட்ட தினம் இந்திய ஜனநாயகத்துக்கு கரிநாள் என்றும் ராகுலினதும் எதிர்க்கட்சிகளினதும் குரல்களை ஒடுக்குவதன் மூலம் ஜனநாயகத்தின் கழுத்தை திருகுவதற்கு ஆளும் கட்சி முயற்சிக்கின்றது என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.​ குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்நிலை நீதிமன்றம் ஒன்றில் வைத்து தள்ளுபடி செய்யமுடியும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

ராகுல் குற்றவாளியாகக் காணப்பட்ட சூழ்நிலை சற்று வித்தியாசமானது என்று இந்தியாவின் முக்கியமான பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. அவருக்கு எதிராக வழக்கை தொடுத்துவிட்டு பிறகு அதை விசாரணை செய்யாமல் நிறுத்திவைக்குமாறு மனுத் தாக்கல் செய்தவர் நான்கு வருடங்களுக்குப் பிறகு சடுதியாக பெப்ரவரியில் அதை பாரதிய ஜனதாவின் உயர்மட்டத்தின் தூண்டுதலின் பேரில்தான் திரும்பப்பெற்றிருக்கவேண்டும் என்பதே இந்திய அரசியல் அரங்கில் பரவலான கருத்து.

பெரு முதலாளித்துவ நிறுவனமான அதானி குழுமத்தின் கோர்ப்பரேட் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்வதற்கு நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய கூட்டு நாடாளுமன்ற குழுவொன்றை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையின் விளைவாக சபை நடவடிக்கைகள் அடிக்கடி குழப்பத்துக்குள்ளான ஒரு சூழ்நிலையில் ராகுலுக்கு எதிரான தீர்ப்பு வந்திருப்பதை அவதானிகள் குறிப்பாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்களான பிரதமர் மோடிக்கும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானிக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய தொடர்புகள் குறித்து ராகுல் அண்மைக்காலமாக நாடாளுமன்றத்தில் காரசாரமாக பேசிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுலை அரசியலுக்கு பொருத்தமில்லாத – விவேகமில்லாத ஒரு அரசியல்வாதி என்று நீண்டகாலமாக விமர்சனம் செய்துவந்திருக்கும் பாரதிய ஜனதா தலைவர்கள் இப்போது அவரை அதுவும் அடுத்தவருடம் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அச்சுறுத்தலாக நோக்குகிறார்களா?

ராகுல் தலைமையில் ஐந்து மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு கடந்த ஜனவரியில் முடிவுக்கு வந்த ஐக்கிய பாரத யாத்திரை (பாரத் ஜோடோ யாத்ரா) அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மக்கள் மத்தியில் பெருமளவு ஆதரவை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறும் காங்கிரஸ் தலைவர்கள் அதனால் மோடியும் பாரதிய ஜனதாவும் குழம்பிப்போயிருப்பதாக நம்புகிறார்கள். அடுத்த தேர்தலில் பங்கேற்க முடியாதவாறு ராகுலை ஓரங்கட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்பது அவர்களின்  குற்றச்சாட்டு.

ராகுலுக்கு எதிரான தீர்ப்பும் தகுதி நீக்கமும் காங்கிரஸிடம் இருந்து நீண்டகாலமாக தூரவிலகியிருந்த எதிரணி அரசியல் கட்சிகளின் தலைவர்களின் ஆதரவை அவருக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் உடனடியாகவே தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்கள்.

இது நாளடைவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக பரந்துபட்ட அரசியல் கூட்டணியொன்றுக்கு வழிவகுக்கக்கூடும் என்று அவதானிகள் எதிர்பார்க்கிறார்கள். அடுத்த பொதுத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு பாரிய சவாலை தோற்றுவிப்பதற்கு எதிரணி தலைவர்களிடமிருந்து வெளிப்பட்ட நல்லெண்ணத்தைப் பயன்படுத்தி மெகா கூட்டணியொன்றை அமைக்க முயற்சிப்பதே ராகுலைப் பொறுத்தவரை அரசியல் சாதுரியமான செயலாக அமையும்.

ஆனால், ஐக்கிய பாரத யாத்திரைக்குப் பிறகு நடைபெற்ற சில மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க செயற்பாட்டை வெளிக்காட்டவில்லை. அதேவேளை, கடந்த சில நாட்களாக ராகுலுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் நடத்திய அமைதிவழி போராட்டங்களும் கவனத்தை ஈர்க்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை.

தீர்ப்பும் தகுதி நீக்கமும் ராகுல் மீது மக்கள் மத்தியில் ஒரு அனுதாப அலையை தோற்றுவித்து காங்கிரஸின் தேர்தல் வாய்ப்புக்களை அதிகரிக்குமா என்பதையும் அவருக்கு நேர்ந்த கதியை மோடி அரசாங்கத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி தேர்தல் சவாலை தோற்றுவிக்க  வலுவான ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தமுடியுமா என்பதையும் அடுத்துவரும் அரசியல் நிகழ்வுப்போக்குகள் உணர்த்தும்.

வீரகத்தி தனபாலசிங்கம்