“பத்து வருடங்களின் பின்னரும் கூட இன்னமும் என்னை ‘கொட்டியா’ என அழைக்கிறார்கள்”, ரீ. ரமேஷ்குமார், 43, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பொய் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்.

ரமேஷ்குமார் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திகனயில் தனது முச்சக்கர வண்டியில் ஒருவரை வாடகைக்கு அழைத்துச் சென்றார். அந்தப் பயணியை அவர் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென வெள்ளை வான் ஒன்றில் வந்த ஒரு குழு அவரை எதிர்கொண்டது. அந்தக் குழு ரமேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தி, அவருடைய கண்களைக் கட்டி, அந்த வானுக்குள் தள்ளியது – அதன் பின்னர் அவருடைய வாழ்க்கை ஒருபோதும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை.

அவரை ஒரு கைவிடப்பட்ட வீட்டுக்கு கடத்திச் சென்று, நான்கு நாட்கள் தடுத்துவைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அதன் பின்னர் ஒரு வார காலத்துக்கு அவர் வேறொரு இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டார். “அந்த இடம் குறித்து என்னால் எந்தவொரு விடயத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், என்னுடைய சகோதரரின் பையும், சப்பாத்துக்களும் அங்கு சுவரில் தொங்கவிடப்பட்டிருந்தன. அதன் காரணமாக, எனது சகோதரரும் என்னுடன் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்ற விடயத்தை மட்டும் நான் தெரிந்து கொண்டேன்.” அடுத்த நாள் ரமேஷ்குமார் கண்டி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், பல மாத காலம் அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்.

“பயங்கரவாதத் தடைச் சட்டம் என அழைக்கப்படும் ஒரு விடயத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் நான் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் சொன்னார்கள்.” தன்னிச்சையான கைது மற்றும் தடுத்து வைப்பு என்பவற்றுக்கு இடமளிக்கும் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979ஆம் ஆண்டில் ஒரு தற்காலிக ஏற்பாடாக நிறைவேற்றப்பட்ட காலம் தொடக்கம்  மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தினதும், விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்த பிரஜைகளினதும் கரிசனைக்குரிய ஒரு விடயமாக இருந்து வந்துள்ளது. அண்மையில் மாணவ செயற்பாட்டாளர் வசந்த முதலிகேயை எத்தகைய சாட்சிகளும் இல்லாத விதத்தில் கைதுசெய்து, ஆறு மாத காலம் தடுத்து வைப்பதற்கென பயன்படுத்தப்பட்ட இச்சட்டம் மீண்டும் மீண்டும் நியாயமற்ற தடுத்து வைப்புக்கள் மற்றும் நாட்டின் அரசியல் கைதிகளை சித்திரவதை செய்தல் என்பவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு இடம்பெற்ற அறகலய போராட்டத்தை அடுத்து இத்தகைய செயல்கள் நிகழ்ந்துள்ளன.

ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான 2022 மனித உரிமைகள் அறிக்கையின் பிரகாரம், பயங்கரவாதத் தடைச் சட்டம் குற்றம் சாட்டப்பட்டவரால் எந்தவொரு நேரத்திலும் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குமூலத்தையும் சாட்சியமாக ஏற்றுக் கொள்வதற்கு நீதிமன்றங்களுக்கு அனுமதியளிப்பதுடன், சித்திரவதை மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் குற்ற வாக்குமூலங்கள் தொடர்பாக எத்தகைய விதிவிலக்குகளும் இருந்து வரவில்லை. பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் பொழுது வழங்கப்படும் குற்ற வாக்குமூலங்களை நீதிமன்றங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கு இடமளிக்கும் உறுப்புரையை நீக்காமல், சித்திரவதைக்கெதிரான பாதுகாப்பு தொடர்பான நீதித்துறை மேற்பார்வையை உள்வாங்குவற்கென மார்ச் 22ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நாடாளுமன்றம் திருத்தியமைத்தது. பயங்கரவாதத் தடைச் சட்டம் மேலும் திருத்தப்பட வேண்டும் என்றும், இறுதியில் அது முற்றாக நீக்கப்பட்டு, சர்வதேச தரநியமங்களுடன் இணைந்து செல்லக்கூடிய ஒரு சட்டவாக்கம் எடுத்துவரப்பட வேண்டும் என்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசு சாரா அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளன.

குறிப்பாக, வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சித்திரவதை மற்றும் பொலிஸ் கொடூரம் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக மனித உரிமைகள் அமைப்புக்களும், சிவில் சமூக அமைப்புக்களும் குற்றம் சாட்டியுள்ளன. ஒரு வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்வதற்கென அல்லது சாட்சியத்தைப் பெற்றுக் கொள்வதற்கென பொலிஸார் சந்தேக நபர்கள் மீது தாக்குதல் நடத்தி, சித்திரவதை செய்திருப்பது தொடர்பான பல அறிக்கைகள் கிடைத்திருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முன்னைய வருடங்களைப் போலவே, சித்திரவதை, மோசமாக நடத்தப்பட்டமை, பலவந்தமாக வாக்குமூலங்கள் பெறப்பட்டமை மற்றும் சட்டத்தரணிகளையும், குடும்ப உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படாமை போன்ற விடயங்கள் குறித்து கைது செய்யப்பட்ட நபர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள். இவ்வருடத்தின் போது பொலிஸாருக்கு எதிராக சுமார் 1200 முறைபாடுகள் கிடைத்திருப்பதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு நவம்பர் 15ஆம் திகதி அறிவித்தது.

தான் ஒருபோதும் வட பிரதேசத்துக்கு சென்றிருக்கவில்லை எனக் கூறும் ரமேஷ்குமார், இந்த கொடூரமான சட்டத்தின் கீழ் சிறைபடுத்தப்பட்டிருந்த பொழுது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எடுத்து விளக்குகிறார். “அவர்கள் எங்களை கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலையத்துக்கும், கண்டி பொலிஸ் நிலையத்துக்கும் இடையில் நாளாந்தம் அழைத்துச் சென்றார்கள் என்ற விடயத்தை நான் பின்னர் தெரிந்து கொண்டேன் – ஒவ்வொரு இரவும் அவர்கள் எம்மை சித்திரவதை செய்தார்கள்​ “அவர்கள் ப்ளாஸ்டிக் பைகளை எமது தலைகளில் போட்டு மூடி, சிகரட்களை கொளுத்தி எமது முகங்களில் போடுவார்கள். அப்பொழுது அந்த ப்ளாஸ்டிக் பைகள் உருகி எமது தோல்களில் வடியும். அவர்கள் ஒரு முறை எனது அந்தரங்க உறுப்பை மிக கடுமையாக நசுக்கினார்கள். அதன் காரணமாக ஒரு வார காலம் நான் சிறுநீர் கழிக்கும் போது இரத்தக் கசிவு ஏற்பட்டது.”

அவருடைய கைது இடம்பெற்று இரண்டு மாதங்களின் பின்னர் கண்டியில் செயற்பட்டு வரும் ஓர் அரசு சாரா அமைப்பான மனித உரிமைகள் அலுவலகத்தின் பணிப்பாளர் அருட் தந்தை நந்தன மனதுங்க, ரமேஷ்குமாரின் விவகாரத்தில் தலையிட்டதுடன், இறுதியில் அவருடைய குடும்பத்தினர் ராமேஷ்குமாரை  சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். அவர் பதினான்கு நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், வழக்கறிஞரின் பிரதிநிதித்துவம் இல்லாத விதத்தில் அவ்விதம் ஆஜர்படுத்தப்பட்டார். “என்னை தடுத்து வைத்திருந்த ஐந்து வருட காலப் பிரிவில் ஒரு சட்டத்தரணியை சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு வழங்கப்படவில்லை. எம்மை சந்தித்த அனைவரிடமும் நாங்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றோம் என்ற விடயத்தை கூறினோம். ஆனால், எமக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.” தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் ஒரு முயற்சியாக சிறைக்கூட அறைச் சுவர்களில் தனது தலையை மோதியதை ரமேஷ்குமார் நினைவு கூருகிறார்.

அவருடைய கைதின் ஐந்து ஆண்டுகளின் பின்னர் இறுதியாக ரமேஷ்குமாரின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்றுக் கொண்டதுடன், அதன் விளைவாக உயர் நீதிமன்றம் அவரை விளக்க மறியலில் வைக்குமாறு கட்டளையிட்டது. ஆனால், தான் அனுபவித்து வரும் இந்தத் துன்பம் முடிவுக்கு வர வேண்டுமென்ற எதிர்பார்ப்பிலேயே இவ்விதம் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக அவர் கூறுகிறார். ரமேஷ்குமாரின் கைது மற்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என்பன தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகாம் எனக் கூறப்பட்ட ஒரு முகாமுக்குள் இருந்த அவருடைய புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். அவை அவர் தென்னிந்தியாவுக்கு சபரிமலை யாத்திரை சென்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என ரமேஷ்குமார் உறுதிப்படுத்துகிறார். சபரிமலை உலகின் மிகப் பெரும் யாத்திரை தலங்களில் ஒன்றாக இருந்து வருவதுடன், வருடாந்தம் சுமார் 10 – 15 மில்லியன் ஆண் யாத்திரிகர்கள் அங்கு செல்கிறார்கள். “சம்பிரதாயங்களின் பிரகாரம் அந்த யாத்திரையின் போது நாங்கள் கறுப்பு ஆடைகளையே அணிகிறோம். அந்த யாத்திரைத் தலத்தில் இத்தகைய ஆடைகளுடன் எடுக்கப்பட்ட என்னுடைய புகைப்படமே எனக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது” என்கிறார் அவர். அவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பொழுது பயங்கரவாத செயல்கள் தொடர்பான குற்ற வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கென அப்புகைப்படங்களே பயன்படுத்தப்பட்டிருந்தன.

ரமேஷ்குமார் உயர் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், அருட் தந்தை நந்தன உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அடிப்படை உரிமைகள் மனுவொன்றின் கீழ் இந்த வழக்கை முன்னெடுத்துச் சென்றார். அதன் விளைவாக இரண்டு வருடங்களின் பின்னர்  ரமேஷ்குமார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்தக் கைது மற்றும் சித்திரவதை என்பவற்றுடன் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் தமது செயற்பாடுகளுக்கு பொறுப்புக் கூற வைக்கப்படவில்லை; எச்சரிக்கப்படவுமில்லை. அவர்களில் சிலர் இப்பொழுது ஓய்வு பெற்று, வசதி வாய்ப்புக்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். நான் இன்னமும் எனது முச்சக்கர வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்கிறேன் என்கிறார் ரமேஷ்குமார்.

அடையாளம் மறைக்கப்பட்டிருக்கும் ரமேஷ்குமாரின் சகோதரர் கைது செய்யப்பட்ட பொழுது, இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற செய்யப்பட்டார். “நாங்கள் சிறையிலடைக்கப்பட்டிருந்த பொழுது எதிர்கொண்ட கடும் மன உளைச்சல் மற்றும் பாதிப்பு என்பன அவரை வாய் பேச முடியாதவராக ஆக்கியுள்ளன” என ரமேஷ்குமார் கூறுகிறார். அவரால் இப்பொழுது எவருடனும் தொடர்பு கொள்ள முடியாது. குடும்பத்தினர் அவரை பராமரித்து வருகிறார்கள்.

புவனக எஸ் பெரேரா

From Pilgrim to Terrorist என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.