Photo, The New York Times
இலங்கை அரசாங்கம் கடந்த செப்டெம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடன் கண்ட உடன்பாட்டுக்கு அதன் நிறைவேற்று சபை ஏழு மாதங்களுக்கு பிறகு கடந்தவாரம் (மார்ச் 20) அங்கீகாரம் வழங்கியதையடுத்து விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியாக (Extended Fund Facility) 300 கோடி அமெரிக்க டொலர்கள் கடனுதவி கிடைத்திருக்கிறது.
நான்கு வருட காலத்தில் எட்டு தவணைகளில் வழங்கப்படவிருக்கும் இந்த கடனுதவியின் முதல் தவணைக் கொடுப்பனவு 30 கோடி 30 இலட்சம் டொலர்கள் உடனடியாகவே கடந்த வாரம் கிடைத்தது. இதில் 12 கோடி 10 இலட்சம் டொலர்கள் இந்தியாவிடம் இருந்து பெற்ற தொடர் கடனை (Credit Line) திருப்பிச் செலுத்துவதற்கான முதல் தவணைக் கொடுப்பனவுக்கு பயன்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கு முற்றுமுழுதாக நாணய நிதியத்தின் இந்தக் கடனுதவியை நம்பியிருக்கும் அரசாங்கம் ஒரே குதூகலத்தில் இருக்கிறது. நிறைவேற்று சபை உடன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்கிய செய்தி வெளியான உடனே கொழும்பில் அரசாங்க ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இவர்கள் பெரும்பாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களே என்று கூறப்படுகிறது. கட்சியின் தலைமையகம் ஸ்ரீகோத்தாவின் முன்பாகவும் பட்டாசுகள் வெடித்தன.
வெளிநாட்டுக் கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலையை பிரகடனம் செய்து பிறகு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கு நாணய நிதியத்திடமிருந்து கடனுதவி கிடைக்கப்பெற்ற வேறு எந்தவொரு நாட்டிலாவது பட்டாசு வெடித்து கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருக்குமோ தெரியவில்லை.
உள்நாட்டுப் போரில் அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட பிறகு ராஜபக்ஷர்களிடம் காணப்பட்டதைப் போன்ற குதூகலத்தை ‘பொருளாதாரப் போரை’ வெற்றி கொண்டவராக தன்னை காட்டிக்கொள்ளும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் இப்போது காணக்கூடியதாக இருந்தது.
இலங்கை இனிமேலும் வங்குரோத்து அடைந்த நாடாக கணிக்கப்படமாட்டாது. தனது கடனை மறுசீரமைக்கக்கூடிய ஆற்றல் கொண்ட நாடு என்று இலங்கையை நாணய நிதியம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதையடுத்து வழமையான பொருளாதார நடவடிக்கைகளை தொடரக்கூடியதாக இருக்கும் என்று நிறைவேற்று சபையின் அங்கீகாரம் கிடைத்த உடனடியாகவே விக்கிரமசிங்க அறிவித்தார்.
நாணய நிதியத்தின் கடனுதவி முற்றிலும் புதியதொரு யுகத்துக்குள் பிரவேசிப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பை இலங்கைக்கு வழங்குகின்றது என்பது போன்று மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் முயற்சிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. கடன் மறசீரமைப்பு மாத்திரமல்ல நாட்டின் எதிர்காலமே நாணய நிதியத்துடனான உடன்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலேயே தங்கியிருக்கிறது என்று கூறும் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை இந்த உடன்பாட்டை கைவிட்டால் இலங்கைக்கு மீட்சி இல்லை என்ற நிலைப்பாட்டை கொண்டவராக இருக்கிறார் என்பது தெளிவானது.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உடன்பாட்டை சமர்ப்பித்து விசேட உரையாற்றிய ஜனாதிபதி ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கக்கூடிய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மேலதிகமாக பல சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் நாணய நிதியத்தின் விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி செயற்திட்டத்தின் மூலமாக புதியதொரு நிதிக்கலாசாரம் உருவாக்கப்படும் என்றும் கூறினார். இந்த உடன்பாட்டுடன் மாத்திரம் இலங்கை திருப்திப்பட்டுவிட முடியாது. இது முடிவு அல்ல. இன்னொரு நீண்ட பயணத்தின் தொடக்கம் என்று அவர் பிரகடனம் செய்தார்.
நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன் காரணமாகவே அதன் கடனுதவி கிடைக்கப்பெற்றிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் செயற்பாடுகளையே அரசாங்கம் ‘பொருளாதார சீர்திருத்தங்கள்’ என்று சொல்கிறது.
விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட் மற்றும் 2023 பட்ஜெட் மூலமாக ஏற்கெனவே நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் கணிசமானளவுக்கு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் மூலமாக அதிகரிக்கப்பட்ட நேரடி வரிகளும் மறைமுக வரிகளும் சேவைகள் கட்டணங்களும் ஏற்கெனவே மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கின்றன. பொருளாதார சீர்திருத்தங்கள் என்று கூறிக்கொண்டு நாணய நிதியத்தின் வழிகாட்டலில் அரசாங்கம் வரும் நாட்களில் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள், வானளாவ உயர்ந்திருக்கும் வாழ்க்கைச் செலவின் சுமையில் இருந்து விடுபடுவதற்கு கிடைக்கப்பெற்றிருக்கும் கடனுதவியின் மூலம் நிவாரணங்களை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றத்தை தரக்கூடாது.
வரும் நாட்களில் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்வு, எரிபொருட்கள் உட்பட அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகள் குறைப்பு தொடர்பில் அரசாங்கம் தெளிவான சில சமிக்ஞைகளைக் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.
தற்போதைய தடவையுடன் சேர்த்து இலங்கை இதுவரையில் நாணய நிதியத்தை 17 தடவைகள் நாடியிருக்கிறது. முன்னைய சந்தர்ப்பங்களில் காணப்பட்ட உடன்பாடுகளின் நிபந்தனைகளை இலங்கை அரசாங்கங்கள் ஒருபோதும் முற்றாக நிறைவேற்றவில்லை. அதனால் கடனுதவியின் முழுத்தொகையையும் அந்த அரசாங்கங்களினால் பெறமுடியவில்லை.
நாணய நிதியத்துடனான உடன்பாடுகளை மதிப்பதில்லை என்ற ஒரு கெட்டபெயர் இலங்கைக்கு இருந்தது. ஆனால், முதற்தடவையாக தற்போதைய அரசாங்கம் முழு நிபந்தனைகளையும் நிறைவேற்றியிருக்கிறது என்று கடந்த வாரம் அமைச்சரவை பேச்சாளரான பந்துல குணவர்தன கூறினார்.
மக்களின் அதிருப்தியை சம்பாதிக்கூடிய கடுமையான தீர்மானங்களை எடுக்கத் தயங்கிய காரணத்தினால் கடந்த காலத்தில் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்ற அரசாங்கங்கள் தவறியிருக்கக்கூடும்.
ஆனால், தற்போதைய அரசாங்கத்திடம் அத்தகைய தயக்கம் எதையும் காணவில்லை. முன்னைய ஆட்சியாளர்களின் ஊழல் முறைகேடுகள் மற்றும் தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாக இலங்கை அதன் வரலாற்றில் இதுவரை காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவேண்டுமானால் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று விக்கிரமசிங்க அரசாங்கம் மக்களை ஒரு விதமான ‘பணயக்கைதிகளாக’ வைத்திருக்கிறது.
வழமையாக அமெரிக்கா மற்றும் மேற்குலக வல்லாதிக்க நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற பல்தரப்பு நிதி நிறுவனங்களை நாடுவதை எதிர்க்கின்ற ஜனதா விமுக்தி பெரமுன போன்ற இடதுசாரி கட்சிகளினால் கூட நாணய நிதியத்தை அரசாங்கம் நாடுவதை எதிர்க்கமுடியவில்லை. இது நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றுவதனால் ஏற்படக்கூடிய எதிர்கால பாதக விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் அரசாங்கம் அதன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வசதியான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது. உருப்படியான மாற்றுத் திட்டங்களை எதிரணியினால் முன்வைக்க முடியாமல் இருப்பது அரசாங்கத்துக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
பொருளாதார மீட்சிக்கான சகல நடவடிக்கைகளும் நாணய நிதியத்தின் மூலோபாயத் திட்டத்தின் பிரகாரமே முன்னெடுக்கப்படவிருக்கின்றன என்பது வெட்ட வெளிச்சமானது. நிபந்தனைகளில் சிலவற்றை அரசாங்கம் இன்னமும் பகிரங்கமாக கூறவில்லை என்ற குற்றச்சாட்டும் எதிரணி கட்சிகளிடமிருந்து வருகிறது.
அதேவேளை, கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசிய விக்கிரமசிங்க தெற்காசியாவிலேயே மிகவும் சிறந்த ஊழல் தடுப்புச்சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தனது அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது என்று அறிவித்தார். ஆனால், தற்போதைய நாடாளுமன்றத்தை வைத்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக உருப்படியான நடவடிக்கைகளை ஜனாதிபதியினால் எடுக்கக்கூடியதாக இருக்கும் என்று மக்கள் நம்பமாட்டார்கள்.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று வரும்போது அண்மைய கடந்த கால பொருளாதாரக் குற்றங்களைச் செய்தவர்களைப் பொறுப்புக்கூற வைக்கவேண்டியது முக்கியமான விடயமாகும்.
ஆனால், கடந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்து கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய விக்கிரமசிங்க வங்குரோத்து நிலையடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து நிலையுறுதிப்படுத்துவதே தனது முன்னுரிமைக்குரிய பணி என்றும் கடந்த கால பொருளாதாரக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் விவகாரத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறியது ராஜபக்ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற ஆதரவில் ஆட்சியை நடத்தும் அவருக்கு அது விடயத்தில் இருக்கும் சிக்கலை தெளிவாக உணர்த்துகிறது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் ஆட்சிமுறைச் சீர்திருத்தங்களுக்கும் நாணய நிதியம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இதை இலங்கையை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்ததில் ஊழலுக்கும் தவறான ஆட்சிமுறைக்கும் இருக்கும் பிரதான பங்கின் பின்னணியிலேயே நோக்கவேண்டும்.
ஆசியப் பிராந்தியத்தில் ஆட்சிமுறை நாணய நிதியத்தின் உன்னிப்பான கண்காணிப்பின் கீழ் வருகின்ற முதல் நாடாக இலங்கை இருக்கிறது என்று அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இலங்கையில் நிலவும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகளையும் ஆட்சிமுறைக் குறைபாடுகள் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் கண்காணித்து கிரமமான அறிக்கைகளை நாணய நிதியம் வெளியிடும். இது உடன்பாட்டின் முக்கியமான ஒரு மைல்கல் என்று அதன் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அந்த அறிக்கைகளைப் பொறுத்தே கடனுதவியின் அடுத்தடுத்த கட்ட கொடுப்பனவுகள் அமையக்கூடும். ஒட்டுமொத்தத்தில் இலங்கையின் ஆட்சி நிருவாகம் நாணய நிதியத்தின் ராடாருக்குள்’ வருகிறது.
வீரகத்தி தனபாலசிங்கம்