படம் | Lakruwan Wannuarachchi/AFP/GettyImages, Amnesty
குரங்குகளிலிருந்து மனிதர்கள் கூர்ப்படைந்து உருவாகும் போக்கில் நடுவே நியாண்டதால் என்னும் ஓர் இனமாகவும் வளர்ச்சியடைந்திருக்கின்றனர். இந்த நியாண்டதால் இனம் இற்றைக்கு கிட்டத்தட்ட 50,000 வருடங்களுக்கு முன்னர் ஆசிய ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்திருக்கின்றது. கிட்டத்தட்ட 300,000 வருடங்களுக்கு முன்னர் இவை தோற்றமளித்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. அனேகமாக இவை விலங்கு வாழ்க்கை வாழ்ந்தாலும், இவை தோலினாலான அங்கி அணிந்திருக்கின்றன, நெருப்பை உபயோகித்திருக்கின்றன. இவற்றிலும் மேலாக இந்த இனம் பற்றிய ஆச்சரிய தகவல் என்னவெனில், அவை தமது இனத்தவர்களின் மரணத்தையொட்டி துக்கம் அனுஷ்டித்திருக்கின்றன. இறந்த இனத்தவரை வைத்துக்கொண்டு அவை அனுசரித்த சடங்குகளின் அடையாளங்கள் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு மனிதன் என நாகரிகம் அடையும் காலத்துக்கு முன்னரேயே இறந்தவருக்கு மரியாதை செலுத்துவதென்பது குரங்கு மனிதனுக்கே அவசியமானதொன்றாகத் தெரிந்திருக்கின்றது. இன்று எங்கள் நாட்டிலோ, இறந்த மனிதர்களுக்காய் துக்கம் அனுஷ்டிக்கவிடாமல், 21ஆம் நூற்றாண்டின் நாகரிக மனிதர்களாகிய எம்மை, நியாண்டதால் காலத்துக்கு முந்தைய காலத்துக்கு அனுப்பியிருக்கின்றது எமது அரசு.
இந்த மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை வடக்கின் தமிழ் மக்கள் அனுஷ்டிக்க விடாமல் இலங்கை அரசின் இராணுவமும் புலனாய்வுத் துறையும் தடுப்பதற்காக நடத்திய அட்டகாசமோ சொல்ல முடியாது. கோயிலுக்குப் போகத்தடை, வைத்தியசாலைக்குச் சென்று இரத்ததானம் கொடுக்கத் தடை, கீரிமலைக்குச் சென்று பிதிர்க்கடன்கள் செய்யத் தடை, பல்கலைக்கழக சமூகம் ஒன்று சேரத்தடை, ஏன்ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஒன்று சேரவும் தடை! தத்தமது இழப்புக்களை மக்கள் ஒன்று கூடி நினைவு கூரும்பொழுது அங்கு ஒரு பொதுவான அடையாளம் தோற்றுவிக்கப்படுகின்றது. அப்பொதுவான அடையாளமே ஒரு பொதுப் போராட்டத்திற்கு இட்டுச் செல்லுகின்றது. இதனால்தான், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் மிரட்டலுக்குள்ளாக்கப்பட்ட பொழுதும், யாழ் பல்கலைக்கழக அரங்கினைச் சுற்றிவளைத்து இராணுவமும் புலனாய்வுத் துறையினரும் காவல் இருந்தபோதும், இவற்றை எதிர்த்து பல்கலைக்கழக சமூகம் முள்ளிவாய்க்கால் இழப்புக்களை அனுஷ்டித்தது. அந்த வகையில் இறந்தவர்களை நினைவு கூருவது ஒரு அரசியல் செயற்பாடு என அரசும் இராணுவமும் கணித்தது சரியே. அத்துடன், அவ்வரசியல் செயற்பாட்டுக்குத் தலைமைத்துவம் கொடுக்கவல்லவர்கள் தாயகத்தில் வாழும், அதுவும் வடக்குத் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களே என்பதையும் அது சரியாகத்தான் எடை போட்டது. இல்லாவிடில், வெள்ளவத்தை பிள்ளையார் கோவிலைச் சுற்றி பொலிஸையும் இராணுவத்தினரையும் குவித்திருப்பார்களே. மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திலும்இவர்களை இறக்கியிருப்பார்களே. முள்ளிவாய்க்கால் நிகழ்வென்பது கொழும்புத் தமிழருக்கும் கிழக்குத் தமிழருக்கும் வடக்குத் தமிழருக்குப் போன்ற அதே இழப்புத்தானே. ஆனால், அவர்கள் கூட்டாக இதனை அனுஷ்டிக்கும் அரசியல் செயற்பாட்டில் இறங்க மாட்டார்கள் என்பதனை அரசு கணித்து வைத்திருந்திருக்கின்றது. இதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு, இனிமேலும் முன்பு போலவே வடக்கினை மையப்படுத்தியே ஈழத்தமிழர் போராட்டம் தொடரும் எனவும் நாம் கூறி விடலாம்.
சண்டைக் கலைகளில் வல்லுனரான பிரபல புரூஸ் லீ ஒரு திரைப்படத்தில் “நீ தோல்வியை ஒப்புக் கொள்ளாதவரை தோற்க மாட்டாய்” என்கிறார். அதாவது, தோல்வியென்பது வெளிச்சக்திகளினால் தோற்றுவிக்கப்படுவதல்ல, மாறாக எமது மன நிலையே வெற்றி தோல்வியினை நிர்ணயிக்கின்றது என்பதுதான் இதன் கருத்தாகும். 2009ஆம் ஆண்டுக்குப் பின்பான காலகட்டத்தில் வடக்கில் தமிழ் மக்களின் போக்குகளை அவதானித்தால் இதனை நாம் உணரக்கூடும். முதலில் தோல்வியடைந்த மனப்பான்மையே மேலோங்கியிருந்தது. அப்பொழுதெல்லாம் இராணுவத்தினை எதிர்த்து முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஷ்டிப்பதற்கு மக்கள் தயாராகவில்லை. பின்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் நிறைவேற்றப்பட ஆரம்பித்தன. அந்த நேரத்தில் தமிழினம் விழித்துக்கொண்டது எனலாம். பின்பு அது வட மாகாண சபைத் தேர்தல்களில் வாக்களிக்கச் சென்றபொழுது தாம் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை என்கின்ற செய்தியைத் தெளிவாகத் தென்னிலங்கைக்கு எடுத்துரைத்தது. வட மாகாண சபையின் வெளிப்பாடே இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தின அனுஷ்டிப்புப் போராட்டத்திற்கு இட்டுச் சென்றிருக்கின்றது என்றால் மிகையாகாது. இந்தத் தடவை வடக்கின் பலவிடங்களில் மாகாண சபை உறுப்பினர்களே இதற்குத் தலைமை தாங்கியிருக்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினமானது ஏனைய அரசியல் போராட்டங்களைவிடவும் அனுகூலங்கள் வாய்ந்தது. உதாரணமாக, காணியுரிமைகள் எனப் பேசப்போனால், இந்த நாட்டின் நிலவளம் எல்லோருக்கும் சொந்தம். யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் குடியமர முடியுமா என்றெல்லாம் எதிர்த்தரப்பினர் வாதாட வந்து விடுவார்கள். அல்லது காணாமற்போனோரைப் பற்றிப் பேசப் போனால், ஒரு யுத்தத்தில் இதெல்லாம் சகஜம் என மழுப்பி விடுவார்கள். ஆனால், இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதென்பது இங்கு குறிப்பிட்டது போலவே நியாண்டதால் மனிதன் காலத்திலிருந்து ஒவ்வொரு மனித சமூகத்திலும் ஒவ்வொரு கலாசாரத்திலும் அனுசரிக்கப்பட்டு வரும் சடங்காகும். இதனை யாருமே நிராகரிக்க முடியாது. வடக்கில் நடந்த சம்பவங்கள் பற்றி நான் பேசிய ஒவ்வொரு சிங்களவரும் மிகவும் சங்கடத்துக்குள்ளானதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்குக்கூட ஏன் இப்படி முட்டாள்தனமாக அரசு நடந்து கொண்டிருக்கின்றது என முணுமுணுக்காமல் இருக்க முடியவில்லை. இதனைத்தான் வாய்ப்பு என்பேன். அதனால்தான் இந்த அரசியல் போராட்டமானது வெறுமனே இந்த மே 18 உடன் முடிவடையக் கூடாது. இனி அடுத்த மே 18இற்குதான் இது மீள பார்க்கப்படும் என்றிருக்கக் கூடாது. இந்தச் சூட்டோடு தொடரவேண்டும். அதில் எங்கள் ஒவ்வொருவருடைய பொறுப்பும் இருக்கின்றது.
நாம் ஒவ்வொருவரும் எந்த சந்தர்ப்பத்திலும் யாராவதொரு சிங்களவரை சந்திக்க நோந்தால் முள்ளிவாய்க்கால் நினைவு அனுஷ்டிப்பு சம்பவங்களைப் பற்றி அவருடன் பேச வேண்டும். இறந்தவர்களை நினைவு கூர முயன்றபோது நடந்தது அவர்களுக்குத் தெரியுமா? ஏன் அவ்வாறு இலங்கை அரசு நடந்து கொண்டது? இச்சம்பவங்களிலிருந்து அவர் புரிந்துகொள்வது என்ன என்று நாம் எளிமையானதோர் கலந்துரையாடலை ஆரம்பிக்கலாம். இது இந்நாட்டில் தமிழ் மக்கள் அரசியல் அதிகாரமற்று ஒதுக்கப்படும் நிலையைப் பற்றிய புள்ளிக்கு இட்டுச் செல்லும். தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த விரும்பாமல், யுத்த காலத்தில் நிகழ்ந்த அநீதிகளை அவை உண்மையிலேயே நடந்தன என ஏற்றுக் கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டிருக்கும் சிங்கள மக்களுடன் நாம் தொடர்பாடுவதற்கு இதுவே நல்ல ஆரம்பமாகும். மகாத்மா காந்தியின் அஹிம்சா நெறியின் முக்கியமான அம்சம் எதிர்த்தரப்பினரின் மனதை மாற்றுவதாகும். இதற்கான பல படிமுறைகளை அவர் விபரித்திருக்கின்றார். அவற்றுள், தம்முடைய குறைகளை ஓர் ஒழுங்கு ரீதியாக மனந்திறந்து பேசுதல் முக்கிய நடவடிக்கையாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. ஆனால், நாம் வழக்கமாக அப்படி நடப்பதில்லையே. எம்மத்தியில் யாராவதொரு சிங்களவர் இருந்தால் வெறுமனே புன்னகைத்துக்கொண்டிருந்துவிட்டு அவர் அப்பால் போன பின்பல்லவா உண்மையான அரசியலைப் பேசுகின்றோம். இதற்கு மாறாக, நாம் சிங்களப் பொதுமக்களுடன் மனந்திறந்து அளவளாவும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் எமது போராட்டத்தினை முன்கொண்டு செல்லும் ஒரு நடவடிக்கை என்பதை உணரவேண்டும்.
தினக்குரல் பத்திரிகைக்காக சாந்தி சச்சிதானந்தம் எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.