Photo, TAMILGUARDIAN
கடந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க வழக்கொன்றின் போது 2019 மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்த மூன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென வவுனியா உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது. அந்த மூன்று உறுப்பினர்களும் அன்று தொடக்கம் காணாமற் போயிருப்பதுடன், அவர்களுடைய மனைவிமார் அது தொடர்பாக ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்கள்.
தமது கணவன்மாரை இராணுவத்திடம் ஒப்படைத்ததாக அப்பெண்கள் வழங்கிய சாட்சியத்தை தான் நம்புவதாகக் கூறிய நீதிபதி, இராணுவம் அவர்களை ஆஜர் செய்யத் தவறினால் அந்த நபர்கள் காணாமற் போன சந்தர்ப்ப சூழ்நிலைகளை எடுத்து விளக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
ஓர் ஆட்கொணர்வு மனு என்பது, பொது அல்லது தனியார் கட்டுக்காவலின் கீழ் சட்ட விரோதமாக அல்லது பொருத்தமற்ற விதத்தில் வைக்கப்பட்டிருக்கும் நபரொருவரை ஆஜர்படுத்துமாறு நிர்ப்பந்திப்பதற்கு, அவரை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்வதற்கு அல்லது சட்டத்தின் பிரகாரம் அந்த விடயத்தைக் கையாளுமாறு கேட்டுக் கொள்வதற்கு கிடைக்கும் ஒரு நிவாரணமாகும். இராணுவத் தளபதி, 58ஆவது படையணியின் தளபதி மற்றும் முல்லைத்தீவு இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த விண்ணப்பங்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், சம்பவம் நடந்த இடம் தொடர்பாக நியாயாதிக்கத்தைக் கொண்டிருக்கும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இது தொடர்பாக ஒரு விசாரணையை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென வவுனியா மேல் நீதிமன்றம் பணிப்புரை வழங்கியிருந்தது. இந்த விசாரணை முடிவடைவதற்கு ஒன்பது ஆண்டுகள் எடுத்தன.
போரின் கடைசி நாட்களின் போது ஷெல் தாக்குதல்கள் மற்றும் குண்டுத் தாக்குதல்கள் என்பவற்றிலிருந்து தப்பிக் கொள்வதற்காக தாம் தப்பியோடிய போது நிலவிய கடும் திகில் மற்றும் குழப்ப நிலை என்பவற்றை அப்பெண்கள் எடுத்து விளக்கியிருந்தார்கள். அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்தை சென்றடைந்த பொழுது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எவரும் இருப்பின் அவர்கள் சரணடைய வேண்டுமென்றும், ஒரு விசாரணையின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நிலையில், அப்பெண்கள் தமது கணவன்மார் சரணடைய வேண்டுமென அவர்களைத் தூண்டினார்கள். அது தமது கணவன்மாரை அவர்கள் பார்த்த கடைசித் தடவை என்றும், இராணுவ ஆளணியினர் அவர்களை இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் ஏற்றி, எடுத்துச் சென்றதைப் பார்த்ததாகவும் அப்பெண்மணிகள் கூறினார்கள்.
58ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சாணக்கிய குணவர்தன இராணுவத்தின் சார்பில் சாட்சியமளிப்பதற்கென சட்டமா அதிபரினால் அழைக்கப்பட்டிருந்தார். எவரும் கைது செய்யப்பட்டதனையோ அல்லது தடுத்து வைக்கப்பட்டதனையோ அவர் மறுத்தார். ஆனால், குறுக்கு விசாரணையின் போது 2009 மே 17, 18 மற்றும் 19 ஆகிய தினங்களில் ஆட்கள் இராணுவத்திடம் சரணடைந்ததையும், அவ்விதம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஒரு பதிவேட்டை இராணுவம் வைத்திருந்தது என்பதனையும் அவர் ஏற்றுக் கொண்டார். எவ்வாறிருப்பினும், மேஜர் ஜெனரல் குணவர்தன அந்தப் பதிவேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினார். ஆனால், அதற்குப் பதிலாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்டிருந்த ஒரு பதிவேட்டை அவர் எடுத்து வந்திருந்தார்.
அந்த மூன்று நபர்களும் இராணுவத்திடம் சரணடைந்திருந்தார்கள் என அளிக்கப்பட்ட சாட்சியம் குறித்து நீதிமன்றம் திருப்தியடைந்திருப்பதாகக் கூறிய நீதிபதி, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது இராணுவத்தின் பொறுப்பாகுமென சொன்னார். இராணுவம் மார்ச் 22 ஆம் திகதி (இன்று) அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென கட்டளையிடப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் இதே மாதிரியான ஒரு கட்டளை வழங்கப்பட்டிருந்தது. போரின் இறுதிக் கட்டத்தின் போது முல்லைத்தீவில் வைத்து தனது குடும்ப உறுப்பினர்களால் ஆயுதப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரொருவரை ஆஜர்படுத்த வேண்டுமென வவுனியா உயர்நீதிமன்றம் இராணுவத்துக்கு கட்டளையிட்டது.
இராணுவம் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தவறினால் அவர் காணாமற்போன சந்தர்ப்ப சூழ்நிலைகளை அது எடுத்து விளக்க வேண்டுமெனக் கூறிய நீதிமன்றம், அதனை நிரூபிக்கும் பொறுப்பை இராணுவம் கொண்டிருப்பதாக மேலும் கூறினார்.
இராணுவத்தின் சார்பில் சாட்சியமளித்த சாட்சி ஒருவர் குறிப்பிட்ட தினத்தின் போது சரணடைந்தவர்களை ஆவணப்படுத்திய ஒரு பதிவேடு இருப்பதை ஏற்றுக் கொண்ட பின்னர், காணாமல்போன நபர் ஆயுதப் படையினரின் கட்டுக்காவல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தார் என்பதை நீதிமன்றம் நம்புவதாக நீதிபதி குறிப்பிட்டார். ஆனால், அந்தப் பதிவேட்டை சாட்சி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறினார்.
இந்த ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்த மூன்று பெண்களில் ஒருவர் அனந்தி சசிதரன் ஆவார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அரசியல் பிரிவின் தலைவராக இருந்து வந்த தனது கணவரான எழிலனை அன்றைய தினம் அவர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வேண்டுமென அனுப்பி வைத்திருந்தார். பின்னர் அவருடைய கணவர் காணாமற் போயிருந்தார். தன்னுடைய கணவர் மீண்டும் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையிலேயே சரணடையுமாறு அவர் கணவரிடம் கூறியிருந்தார். கணவர் அவ்விதம் திரும்பி வராத பொழுது அனந்தி அவரைத் தேடத் தொடங்கியதுடன், அதனைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். அனந்தி தனது விடயத்தை ஜெனீவாவில் ஐ.நா. மன்றத்துக்கு எடுத்துச் சென்றதுடன், போர்க் குற்றங்களுக்கு வகைப் பொறுப்புக் கூற வேண்டிய ஓர் அரங்கு என்ற முறையில் நாடாளுமன்றத்திற்குள் பிரேவேசிப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
நீதிமன்றத் தீர்ப்பின் முக்கியத்துவம் குறித்த கேள்விகளுக்கு அனந்தி பதிலளித்ததுடன், நீதிக்கான தனது போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் எனக் குறிப்பிட்டார்.
உங்கள் கணவரை ஆஜர்படுத்துமாறு இராணுவத்தைக் கோரும் நீதிமன்ற தீர்ப்பு எவ்வளவு முக்கியமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
18.05.2009 இல் இலட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்த இடத்தில் இலங்கை இராணுவத்திடம் நிராயுதபாணியாக கையளித்திருந்தேன்.
ICRC, HRC மற்றும் புனர்வாழ்வு அமைச்சர்கள், ஜனாதிபதி, பிரதமர் என்று சகலரிடமும் முறையிட்டேன். 2009 இலேயே ஐ.நா. மன்றத்திடமும் முறையிட்டிருந்தேன். ஒரு பதிலும் இல்லை.
2013 இல் ஆட்கொணர்வு மறுவழக்கு வவுனியா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சரணடைந்த சம்பவம் முல்லைத்தீவு எல்லைக்குள் நடந்தபடியால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது.
இக்காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தாலும், இராணுவ புலனாய்வாளர்களாலும் பல அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன். நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியில் புலனாய்வாளர்கள் எனது வாகனத்தை பின் தொடர்வதும், அச்சுறுத்துகின்ற வகையில் கண்காணிப்பதும், எனக்கு எதிராக CSD பண்ணையில் வேலை செய்கின்ற முன்னாள் போராளிகள், போராளிகளின் மனைவிமாரை கொண்டு போராட்டம் செய்வது, அவர்களைக் கொண்டு எனக்கு எதிராக கோசங்களை எழுப்புவது எல்லாமே நடந்தது. ஆனாலும் வழக்குகளுக்குத் தொடர்ந்து சென்று வந்தேன்.
இன்று வவுனியா உயர் நீதிமன்றில் எனது ஆட்கொணர்வு மனு வழக்கிற்கான தீர்ப்பு வந்துள்ளது என்பது ஒரு நம்பிக்கையையும் தெம்பையும் தந்திருக்கிறது. அறம் வெல்லும் என்ற நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது.
அது உங்களை எப்படி உணர வைத்தது?
நான் பட்ட கஷ்டங்கள், துன்பங்கள், அவமானங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு கிடைச்சிருக்கு. மனக்காயம் கொஞ்சம் ஆறியமாதிரி இருக்கிறது..
அறம் வெல்லும் என்ற நம்பிக்கை துளிர் விட்டிருக்கு. இன்னும் நம்பிக்கையுடன், வலுவாக அறம் சார்ந்து போராடக்கூடிய மன எழுச்சி ஏற்பட்டிருக்கு.
இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கு நீங்கள் மேற்கொண்ட செயல்முறை என்ன?
18.05.2009 இல் என் கணவரை சரணடையக் கொடுத்துவிட்டு, அரச உத்தியோகத்தருக்கான சொற்ப சம்பளத்தில் பிள்ளைகளை வளர்க்க, கல்வியை ஊட்ட, பாதுகாப்பாக வைத்திருக்க என்று பலவகையில் பொருளாதார ரீதியாகவும் உளரீதியாகவும் போராட வேண்டியவளாக இருந்தேன். இலங்கை இராணுவத்தின் விசாரணை, இலங்கை புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் எல்லாமே இருந்தது.
முதன் முதலாக 2011இல் எனது மூன்று பிள்ளைகளையும் கொழும்பிற்கு பஸ்ஸில் கூட்டிக்கொண்டு சட்டத்தரணி ரத்னவேல் அவர்களைச் சந்தித்து எனது கணவரை சரணடைய கொடுத்த சம்பவத்தை விசாரித்து ஆட்கொணர்வு மனு வழக்கு தாக்கல் செய்து தருமாறு கோரியிருந்தேன்.
ரத்னவேல் சேர் சொன்னார் இவ்வழக்கு மிகவும் அச்சுறுத்தலானது, நீங்கள் தனியாக இதில் ஈடுபடுவதை விட இன்னும் சிலரை சேர்த்து இவ்வழக்கை தாக்கல் செய்யலாம் என்றார். இந்த வழக்கிற்கான பணம் எதுவும் தரத் தேவையில்லை எனவும் சொன்னார்.
எனவே, 2011 இல் கிளிநொச்சியில் எனது அலுவலக கடமை நேரம் முடிந்தபின் பஸ்ஸில் சென்று பல போராளிகளின் மனைவியார், தாய்மார்களைச் சந்த்தித்தேன். அதேபோல் யாழ்ப்பாணத்தில் சனி, ஞாயிறு நாட்களில் பஸ்ஸில் சென்று போராளிகளின் மனைவியாரைச் சந்தித்தேன். சுமார் 25 பேர் வரை சந்தித்தேன். இதில் நான்கு பேர் என்னுடன் சேர்ந்து வழக்குத் தாக்கல் செய்ய உடன்பட்டனர்.
பின்னர் இந்த நான்கு பேரையும் கொழும்பிற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து ரத்னவேல் சேருடன் கடமையாற்றிய சட்டத்தரணி மங்களேஸ்வரி அவர்களின் உதவியுடன் வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அந்த நெருக்கடியான காலப்பகுதியில் CHRD யில் கடமையாற்றிய பலர் எங்களுக்கு அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தனர். குறிப்பாக சட்டத்தரணி மங்களேஸ்வரி மிகவும் துணிச்சலாக பக்கபலமாக இருந்தார்.
அடுத்த கட்டமாக ஐந்து பேரை இணைத்து வழக்கு தாக்கல் செய்தோம். இதில் பல சரணடைந்தவர்களின் மனைவியர் இதே வழக்கினை தாக்கல் செய்வதற்கு உடன்படவில்லை. தங்களுக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், அரசு தங்களை பழிவாங்கும், பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் மறுத்துவிட்டனர்.
இந்தத் தீர்ப்பால் என்ன நடக்கும் என்று நம்புகிறீர்கள்?
இந்தத் தீர்ப்பு காணாமற்போனவர்களுக்காக போராடும் ஏனையோருக்கு முன்னுதாரணம். ஆயிரக்கணக்கானவர்கள் சரணடைந்தார்கள். எனவே, ஏனையவர்களும் வழக்குகளை தாக்கல் செய்ய முன்வர வேண்டும். இனி பாதுகாப்பு தரப்பிலிருந்து என்ன வெளிப்பாடு வரப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நீங்கள் ஜெனிவா சென்ற போது சர்வதேச சமூகம் உங்களுக்கு உதவியாக இருந்ததா?
ஜெனிவா சென்றபோது அங்குள்ள தமிழ் அமைப்புக்கள் எங்களுக்கு எதுவுமே செய்துவிடவில்லை. ஆனாலும், நீதி கோருகின்ற பொது வேலைத்திட்டத்திற்கு 2014 இலிருந்து இன்றுவரை முன்னெடுத்து வருகிறேன்.
2014/ 2015 களில் சர்வதேசம் எங்கள் கருத்துக்களை செவிமடுத்தது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானிய, சுவிஸ் போன்ற நாடுகள் போரில் சாட்சியாக என் குரலை செவிமடுத்தது.
ஆனால், சர்வதேசம் உருவாக்கிய நல்லாட்சிக்கு பின் சாத்தியமான எதுவும் நடக்கவில்லை. சர்வதேச விசாரணை என்பதை வலியுறுத்தினோம். 30/1 தீர்மானம் கலப்பு பொறிமுறை என்றது. பின்னர் வலுவிழந்த தீர்மானங்கள் நீர்த்துப் போனதாக இருக்கின்றது.
2013/ 2015௧ளில் நாடுகளும் சரி, சர்வதேச நிறுவனங்களும் சரி எங்களுக்கான நீதியை பெற்றுத்தருவதில் கரிசனைக் காட்டியது. இதன் காரணமாக போர் சாட்சியாக என்னையும் முன்னிலைப்படுத்தியது. இலங்கையில் ஏற்பட்ட 2015 ஆட்சி மாற்றத்தின் பின் எல்லாமே மாறிவிட்டது. ஆனாலும், தொடர்ந்து எனது நீதிகோரிய பயணம் தொடர்கின்றது.
மனித உரிமைகள் பேரவையில் எத்தனை முறை உரையாற்றினீர்கள்?
நான் 2014 தொடக்கம் இன்றுவரை 15 தடவைக்கு மேல் ஐ.நா. சபையில் பேசியுள்ளேன்
முடிவு என்னவாக இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?
நல்ல முடிவுக்காக இன்றும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இன்றும் போராடவேண்டிய தேவை உள்ளது.
உலக நாடுகள் தங்கள் நலன் சார்ந்து சிந்திக்கின்றனவே தவிர மனித நேயம் காக்கப்படுவதில்லை. மனித உரிமை என்பது வலுவிழந்தவர்களை கையாள எடுத்துக்கொள்ளும் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.
13 வருடங்கள் கடந்தும் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், தடை செய்யப்பட்ட நச்சு குண்டுகள், கொத்து குண்டுகள் கொண்டும் கொள்ளப்பட்டும் தமிழர்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று கண்டுகொள்ளத் தவறிய ஐக்கிய நாடுகள் சபையை என்னவென்று சொல்வது?
இறுதியில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளதா?
காலம் கடந்தாலும் நீதியைப் பெற்றுக்கொள்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இலட்சக்கணக்கான மக்களின் ஆன்மாக்கள், இனவிடுதலைக்காக தங்கள் உன்னதமான உயிரை ஆகுதியாக்கிய ஆயிரக்கணக்கான மாவீரர்களின் தியாயங்கள் வீண்போகாது. நீதியை பெற்றுக்கொள்ள போராடுவோம். அறம் வெல்லும்.
Military to Face a Day of Reckoning Over the Disappeared என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளியான நேர்க்காணலின் தமிழாக்கம்.