Photo, LAPRENSALATINA

2022 தொடக்கத்தில் தீவிரமடையத் தொடங்கிய பொருளாதார நெருக்கடி அதன் உடனடித் தாக்கத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்தியது. பெருமளவு மக்கள் வீதிகளில் இறங்கி தொடங்கிய போராட்டங்கள் இறுதியில் பிரமாண்டமான மக்கள் வெள்ளமாக அதிகார பீடங்களுக்குள் பிரவேசித்தது. இப்போது ஒரு வருடம் கழித்து பொருளாதார நெருக்கடி கட்டுப்பாட்டுக்குள் வரும் அறிகுறிகளை காட்டத்தொடங்கியிருக்கிறது.

நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி சில நாட்களில் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சவால்களை சமாளிக்கக்கூடிய உறுதியுடையதாக தன்னை காட்டிக்கொள்கிறது. ஆனால், வெற்றி நிலைபேறானதாக இருக்கவேண்டுமானால் அரசாங்கம் மூன்று துறைகளில் அதன் அணுகுமுறையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டியது அவசியமாகும்.

முதலாவதாக, தீர்மானிக்கப்படாத எதிர்காலத்தில் அல்ல, விரைவாக உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவிக்கவேண்டும். தேர்தல்கள் மக்கள் அல்லது அவர்களின் ஆட்சியாளர்கள் விரும்பும்போது நடத்தப்படவேண்டியவை என்ற ஒரு போலியான வாதம் முன்வைக்கப்படுகிறது. தேர்தல்கள் ஜனநாயகத்தின் தவிர்க்கமுடியாத அங்கங்கள். உண்மையில் அந்தத் தேர்தல்கள் தேர்தல் ஆணைக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் ஏப்ரில் 25ஆம் திகதி நடத்தப்படவேண்டியது அவசியமாகும். ஆனால், தேவையான நிதி வளங்களை அரசாங்கம் ஒதுக்கவேண்டியிருப்பதால் அந்தத் திகதியில் தேர்தல்கள் சாத்தியமா என்ற சந்தேகம் தொடருகிறது. உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான பணம் அரசாங்கத்தின் ஒரு நாள் செலவினத்தையும் விட குறைவானது என்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தன்னிடம் பணம் இல்லை என்று அரசாங்கம் கூறுகின்ற காரணம் நம்பக்கூடியதாக இல்லை.

பிரச்சினைக்குரிய இரண்டாவது விவகாரம் நீதித்துறைக்குச் சவால் விடுக்கும் அரசாங்கத்தின் செயலாகும். ஜனநாயக முறைமை என்பது ஆட்சிமுறையின் பல்வேறு நிறுவனங்களும் அவற்றின் அதிகாரங்களைப் பிரயோகிக்கும் விதங்களை ஒழுங்கமைப்பதற்கு அவசியமான தடுப்புக்களையும் சமப்படுத்தல்களையும் (Checks and Balances) அடிப்படையாகக் கொண்ட முறைமையாகும். நீதித்துறை அரசின் மூன்று முக்கிய அங்கங்களில் ஒன்றாகும். அதன் அதியுயர் நிறுவனமான உயர்நீதிமன்றம் தேர்தல்களை தாமதிப்பதற்கு பணம் இல்லை என்ற காரணத்தை அரசாங்கம் கூறமுடியாது என்று கூறியிருக்கிறது. இந்தத் தீர்ப்பை மதித்து நடக்கவேண்டியது அவசியமாகும்.

அதை அலட்சியம் செய்வது ஆட்சிமுறையில் நெருக்கடியை தோற்றுவிக்கும். ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியின் விளைவான சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும் அரசாங்கத்துக்கு இது மேலும் பிரச்சினைகளை அதிகரிக்கும் என்பதுடன் இலங்கையில் முதலீடுகளை செய்ய முன்வரக்கூடியவர்களுக்கு எதிர்மறையான செய்தியொன்றை விடுப்பதாக அமையும். சட்டத்தின் ஆட்சி மதிக்கப்படாத ஒரு சூழ்நிலையில் தங்களது முதலீடுகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகக்கூடும் என்று அவர்கள் கவலையடைவார்கள். துரதிர்ஷ்டவசமாக திறைசேரிக்கு உத்தரவைப் பிறப்பித்த உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவால் விடுப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

தற்போது இடம்பெறுகின்ற வீதிப் போராட்டங்களை பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தி தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுடன் தொடர்புடையதே மூன்றாவது பிரச்சினைக்குரிய விவகாரமாகும். போராட்டங்களை நடத்துபவர்களுக்கு அவர்கள் வீதிகளில் இறங்கி சுதந்திரமாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான உரிமையை அரசாங்கம் மறுக்கிறது. அத்தகைய போராட்டங்கள் மக்களின் வழமையான பொருளாதார வாழ்வை சீர்குலைக்கும் என்பதுடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கும் ஒரு தடையாக இருக்கும் என்று அரசாங்கம் காரணம் கூறுகிறது.

ஆர்ப்பாட்டங்களைச் செய்பவர்கள் பெரும்பாலும் தொழிற்சங்கங்களையும் அரசாங்க பல்கலைக்கழகங்களையும் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் ஆர்ப்பாட்டங்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தையும் நீர்ப்பீரங்கித் தாக்குதல்களையும் தடியடியையும் மேற்கொள்ளும் காட்சிகளை அனேகமாக தினமும் ஊடகங்களில் நாம் பார்க்கிறோம். இராணுவ உடையில் வந்தவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொல்லுகளினால் தாக்குதல் நடத்தியதையும் ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது. சிவில் அமைதியின்மையை ஒடுக்குவதற்கு இராணுவத்தைப் பயன்படுத்துவது ஒரு சட்ட மீறலாகும். குறிப்பாக அண்மைய சம்பவத்தில் இராணுவ உடையில் வந்தவர்கள் அவர்களுக்குரிய அடையாளப் பட்டிகளை அணிந்திருக்கவில்லை. இது அவர்கள் கொடூரமாக நடந்துகொண்டாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிச்செல்வதற்கான வாய்ப்பை கொடுக்கிறது.

அமெரிக்க நிலைப்பாடு

படைபலத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் பிரச்சினையை தீர்ககப்போவதில்லை. ஆர்ப்பாடடங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் அதை கைவிடுவதற்கான சாத்தியமில்லை. அவர்கள் நாட்டின் பொருளாதார மீட்சிக்காக பெரிய விலையை செலுத்தவேண்டியவர்கள் என்று எதிர்பார்க்கப்படும் சனத்தொகையின் அடிமட்டங்களில் உள்ள 80 சதவீதத்தினரைச் சேர்ந்தவர்கள்.

பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் சனத்தொகையின் வறிய பிரிவுகள் மீது விகித சமானமற்ற முறையில் சுமையை ஏற்றுகின்றன. இதை அண்மைய மின்கட்டண அதிகரிப்பில் காணக்கூடியதாக இருக்கிறது. சமூகத்தின் உயர்மட்டங்களில் இருப்பவர்களையும் விட அடிமட்டங்களில் உள்ளவர்களே மின்கட்டண அதிகரிப்பால் பெரிதும் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டங்களை அடக்குமுறை வழிவகைகளின் ஊடாக வெற்றிகொள்வதற்கு முயற்சிப்பதற்குப் பதிலாக அரசாங்கம் நாடு முகங்கொடுக்கின்ற பன்முகப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு அடிப்படைக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியமாகும். முதலில் அரசாங்கம் நாட்டின் ஆட்சிமுறையின் அடிப்படை ஜனநாயகம் என்பதை கருத்திற்கொள்ளவேண்டும். சட்டத்தின் பிரகாரம் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்துக்கு எழுச்சியைக் கொடுக்கும்.

தேர்தல்கள் தொடர்பிலான சட்டங்களை அவமதிப்பது நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அரசாங்கத்தின் நியாயப்பாட்டை அரித்துச் செல்கிறது. இதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சட்ட மகாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஷங் தெளிவாகக் கூறியிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமெரிக்க தூதுவர் அந்தத் தேர்தல்கள் சிவில் சமூக அமைப்புக்களுடன் பங்காளிகளாகச் சேர்ந்து மக்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் நேரடியாக நியாயம் கேட்பதற்கான ஆற்றலை அவர்களுக்கு கொடுக்கும் என்று சொன்னார். நீதித்துறையினதும் ஆர்ப்பாட்டங்களைச் செய்வதற்கான உரிமையினதும் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“உலகம் பூராவும் ஜனநாயகங்கள் நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஜனநாயகம் நிலைக்கமுடியாது…. தங்களது அக்கறைகளுக்காக அமைதியான முறையில் குரல் கொடுப்பதற்கும் தங்களது அரசாங்கத்தில் பங்கேற்பதற்கும் ஒவ்வொரு இலங்கையருக்கும் உள்ள உரிமைக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு அசைக்கமுடியாததாகும். அந்த உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற சுதந்திரமான தேர்தல்களைப் பொறுத்தவரை இலங்கை பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்டிருக்கிறது ” என்றும் அவர் தமதுரையில் கூறினார்.

கொள்கைகள் மறுபரிசீலனை

தற்போதைய நெருக்கடியில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுத்து மீண்டும் அபிவிருத்திப் பாதையில் செல்வதற்கு இலங்கை நம்பிக்கையுடன் காத்திருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பின்னால் இருக்கும் பெரிய வல்லாதிக்க நாடாக விளங்குவதால் அமெரிக்க தூதுவரின் கருத்துக்களை விசேட கவனத்துடன் பரிசீலிக்கவேண்டிய தேவை இருக்கிறது. உண்மையில் அரசாங்கம் அதன் பொருளாதார மறுசீரமைப்புக் கொள்கைகளையும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளையும் மறுபரிசீலனை செய்யவேண்டியது அவசியமாகும். அதற்கு அமெரிக்காவின் நல்லெண்ணத்தினால் உதவமுடியும்.

பொருளாதார மறுசீரமைப்பின் பிரதான சுமையை சனத்தொகையின் வறிய பிரிவுகள் மீது ஏற்றமுடியாது. உதாரணமாக, தற்போதைய வரிக்கட்டமைப்பு அதிகரிக்கப்பட்ட நேரடி வரிகள் மற்றும் மறைமுக வரிகள் மூலமாக நடுத்தர வர்க்கங்களை இரு தடவைகள் உறிஞ்சுகிறது. தனிநபர்கள் என்ற முறையிலும் குடும்பங்கள் என்ற வகையிலும் அந்த நடுத்தர வர்க்கங்கள் பொருளாதார நிலைத்தன்மையின் ஓரங்களில் நெருக்கடிகளுடன் வாழ்கிறார்கள். பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தை மறுபரிசீலனை செய்யாவிட்டால் இரண்டாவது அறகலயவில் அது  நாட்டு மக்களை வீதிகளில் இறக்கக்கூடும்.

கடந்த வருட ஆரம்பத்தில் நாட்டுப்புறங்களில் உள்ள விவசாயிகளே முதலில் சிறிய குழுக்களாக ஆர்ப்பாட்டங்களை தொடங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களும் அடுத்து மரவேலை செய்பவர்களும் இறுதியாக நகர மையங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தவர்களும் இணைந்தார்கள். அதைப் போன்ற ஒரு தோற்றப்பாட்டை இன்று காணக்கடியதாக இருக்கிறது. தொழிற்சங்கங்களும் துறைசார் நிபுணத்துவ வர்க்கத்தவர்களும் உட்பட மேலும் மேலும் குழுக்கள் போராட்டங்களில் இணைகின்றார்கள்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி தேர்தலுக்கான தேவை குறித்து அரசாங்கத்தை நம்பச்செய்வதற்கு எதிரணி அரசியல் கட்சிகளை ஓரணியில் கொண்டுவருவதற்கு அண்மையில் சிவில் சமூக அமைப்புக்கள் முன்முயற்சியொன்றை மேற்கொண்டன. வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கான சிவில் சமூகக் கட்டமைப்பினால் (Civil Society Collective for Protection of Franchise) ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்றில் வைத்து ‘வாக்களிப்பதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கு பொதுமக்கள் பிரதிநிதிகளின் சூளுரை’ (Public representatives pledge to protecting the right to vote) என்ற ஆவணத்தில் கைச்சாத்திடுவதற்கு எதிரணியின் பிரதான அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் ஒன்றுகூடினார்கள். வேறுபட்ட கோட்பாடுகளையும் இனச்சார்புகளையும் கொண்ட அரசியல் கட்சிகளாக அவை இருந்தபோதிலும் ஜனநாயக வாக்குரிமையைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய கடமையில் ஒன்றாக நின்றன.

நீதித்துறையின் தீர்ப்புக்களையும் சட்டத்தின் ஆட்சியுடன் தொடர்புடைய அரசியலமைப்பு ஏற்பாடுகளையும் அரசாங்கம் மதித்து நடக்கவேண்டியது அவசியமாகும். உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற அது இன்றியமையாததாகும். அத்தகைய நம்பிக்கை இல்லாமல் பொருளாதார மீட்சிக்கான வாய்ப்புக்கள் அறவே நடைமுறைச்  சாத்தியமில்லை. அரசாங்கத்தின் கொள்கைகள் தெளிவானவையாக இருப்பதையும் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலவுகிறது என்பதையும் அறிய முதலீட்டாளர்கள் அக்கறை காட்டுவார்கள்.

பொருளாதார மறுசீரமைப்புத் திட்டம், தேர்தல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரம் போன்ற முக்கியமான பிரச்சினைகளில் மக்ளினதும் எதிரணி அரசியல் கட்சிகளினதும் சிவில் சமூகத்தினதும் குரல்களுக்கு அரசாங்கம் செவிமடுக்கவேண்டியதும் கூடுதல் முக்கியத்துவமுடையதாகும். இவர்களிடம் இருந்து தனிமைப்பட்டால் அது அரசாங்கம் முழுமையாக நாட்டம் கொண்டிருக்கின்ற பொருளாதார மீட்சிக்கும் அரசியல் உறுதிப்பாட்டுக்கும் உகந்ததல்ல. அரசாங்கத்தின் அபிவிருத்தி மூலோபாயங்களுக்கு சமூகத்தின் மனமுவந்த ஒத்துழைப்பு தேவை. இல்லையானால் சஞ்சலமான ஒரு அமைதியே நிலவும். அதனால் நாடு துரிதமான பொருளாதார வளர்ச்சிப்பாதையில் பயணத்தை முடுக்கிவிடுவதற்கு தேவையான வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவரமுடியாது.

கலாநிதி ஜெகான் பெரேரா