Photo, DW
உயர் நீதிமன்றம் அதன் முன்னால் விசாரணைக்கு வந்த உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான வழக்குகளில் மன்னன் சாலமனுக்கு இருந்த விவேகத்துடன் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த தேர்தல்களை தடுப்பதற்கு அரசாங்கம் உச்சபட்சத்துக்கு முயற்சிக்கின்றது என்று கவலைகொண்ட எதிரணி கட்சிகளினால் முதல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல்களை இரத்து செய்யுமாறு அல்லது ஒத்திவைக்குமாறு அரசாங்கத்திடமிருந்து தேர்தல் ஆணைக்குழு கடுமையான நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அரசாங்கம் மேற்கொள்கின்ற பல்வேறு முயற்சிகளை எதிரணி தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் விளக்கிக் கூறியிருக்கிறார். தேர்தல்களை நடத்துவதற்கு போதுமான நிதி இல்லை என்ற அரசாங்கத்தின் ஏற்றுக்கொள்ளமுடியாத அறிவிப்பும் அந்த முயற்சிகளில் ஒன்று.
ஆனால், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் தேர்தல் ஆணைக்குழு தேர்தல் தினமாக மார்ச் 9ஆம் திகதியை அறிவித்து தொடர்ந்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. தேர்தல்களை நடத்துவதாக ஆணைக்குழு உறுதியளித்திருப்பதால் மேற்கொண்டு தலையிடவேண்டிய தேவை இல்லை என்று உயர்நீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறியது.
இரண்டாவது வழக்கை தற்போதைய தருணத்தில் தேர்தல்களை நடத்தக்கூடியதாக நாட்டின் பொருளாதார நிலைவரம் இல்லை என்று முறையிட்டு மனுதாரர் ஒருவர் தாக்கல் செய்தார். சட்டப் பிரகாரமான நடைமுறைகளை மனுதாரர் பின்பற்றவில்லை என்ற ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை பெப்ரவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. அந்த திகதியளவில் கணிசமான அளவுக்கு முன்னேற்றம் கண்டுவிடும். அரசாங்க ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான தினம் அதற்கு முதல் நாளாகும்.
தேர்தல் ஆணைக்குழு உட்பட இரண்டாவது மனுவை எதிர்க்கும் தரப்புகள் தேர்தல் செயன்முறைகள் திரும்பிவர முடியாத ஒரு கட்டத்தை அடைந்துவிட்டன என்று உறுதியாக வாதிடக்கூடியதாக இருக்கும். பொருளாதார நெருக்கடி நீண்டகாலத்துக்கு தொடரக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதும் அரசாங்கத்திடம் நிதியில்லை என்று நியாயம் கற்பித்து சகல தேர்தல்களும் ஒத்திவைக்கப்படக்கூடும் என்பதுமே இந்த வழக்கில் உட்கிடையாக இருக்கக்கூடிய ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தலாகும்.
தேர்தல் செயன்முறைகள் சமூக மட்டத்தில் இப்போது முழுவீச்சில் முன்னெடுக்கப்படுகின்றன. குழப்பங்கள் இல்லாமல் நாடுபூராவும் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதற்காக அரசாங்கத்தைப் பாராட்டவேண்டும். மறுபுறத்தில், பொருளாதார இடர்பாடுகளுக்கும் வரி அதிகரிப்புகளுக்கும் எதிராக கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய நகரங்களில் சிவில் சமூக குழுக்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களை பொலிஸார் தடுத்துவருகின்றனர். யாருக்கு வாக்களிப்பது என்று வாக்காளர்கள் தீர்மானிக்கக்கூடியதாக உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முன்னரான காலப்பகுதியில் உகந்த சூழ்நிலை உருவாக்கப்படவேண்டியது அவசியமாகும். அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த தங்களது அக்கறைகளை மக்கள் வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை இது வழங்கும்.
கடுமையான குற்றச்சாட்டு
தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை அரசாங்கம் முயற்சித்துப் பார்த்தது. உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் எதிர்மறையான மனநிலையின் முன்கூட்டிய எச்சரிக்கை அறிகுறியாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்து அவர்களிடம் கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதியின் செயல் அமைந்தது.
தேர்தல்களுக்கான திகதியை தீர்மானிப்பதற்கு முன்னதாக கல்வியமைச்சு அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைக்குழு கலந்தாராய்ந்ததா என்பதும் அந்த கேள்விகளில் ஒன்று. இது ஆணைக்குழுவின் சுதந்திரத்தில் வேண்டாத ஒரு தலையீடு என்று கண்டனங்கள் கிளம்பின. ஜனாதிபதி பதவியேற்பதற்கு முன்னதாக போராட்ட இயக்கத்துக்கு முகங்கொடுக்க முடியாமல் மக்களிடம் இருந்து தப்பியோடிக்கொண்டிருந்த தனது அரசாங்கத்தின் ஏனைய உறுப்பினர்களின் நலன்களை அவர் பாதுகாக்கின்றார் என்ற கடுமையான குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த குற்றச்சாட்டை சமாளிக்கவேண்டியவராக அவர் இருக்கிறார்.
போராட்ட இயக்கத்தை அடக்கியொடுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்த முறை குறித்து மக்கள் மத்தியில் கடுமையான வெறுப்புணர்ச்சி தொடருகிறது. இந்த காரணத்துக்காகத்தான் பெருமளவு வளங்களும் நிதியும் செலவாகும் என்ற போதிலும் கூட தேர்தல்கள் முக்கியமானவையாகின்றன. அரசாங்கமும் கொள்கை வகுப்பாளர்களும் மக்களின் ஆணையையும் நியாயப்பாட்டையும் கொண்டவர்களாக இருப்பதை விடவும் வேறு எதுவும் ஜனநாயக சமுதாயம் ஒன்றுக்கு முக்கியமானதாக இருக்கமுடியாது.
ஊழல்தனமானவர்கள் என்று நம்பப்படும் அரசாங்கத் தலைவர்கள் பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டை பொருட்படுத்தாதவர்களாக தொடர்ந்தும் நடந்துகொள்வது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதியும் அவரது ஆலோசகர்களும் இவையெல்லாவற்றையும் மறுத்துக்கொண்டு இருக்கவோ அல்லது மீண்டும் பழைய நிலவரமே ஏற்படுத்தப்பட்டிருப்பது தொடர்பில் மக்களின் கோபத்தையோ கருத்தில் எடுக்காமல் இருக்கவோ முடியாது.
வழமையான கேள்விப்பத்திர நடைமுறைக்கு வெளியே மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு தற்போது மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் இதற்கு ஒரு உதாரணமாகும். இது தொடர்பில் இலங்கை மருத்துவர்கள் கல்லூரி, இலங்கை சத்திரசிகிச்சை நிபுணர்கள் கல்லூரி, இலங்கை மகப்பேற்று மற்றும் குழந்தை மருத்துவர்கள் கல்லூரி ஆகியவற்றின் கவுன்சில் அதன் ஆட்சேபனைகளை தெரிவித்திருக்கிறது.
வழமையாக மருந்து ஒன்றை இறக்குமதி செய்வதற்கு முன்னதாக தேசிய மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அதை மதிப்பீடு செய்து பதிவுசெய்யவேண்டும் என்று அந்த அதிகாரசபை வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. ஆனால், இறுதியாக நடைபெற்ற அதிகாரசபையின் மருந்துப்பொருட்கள் மதிப்பீட்டு குழுவின் கூட்டத்தில் இந்திய தொடர் கடனுதவியின் மூலமாக கொள்வனவு செய்யப்படவிருக்கும் பெருந்தொகையான சுமார் 330 மருந்துப்பொருட்களின் பட்டியல் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டது. இவற்றில் எதுவுமே அதிகாரசபையினால் மதிப்பிடு செய்யப்படவோ அல்லது பதிவுசெய்யப்படவோ இல்லை.
பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகள்
துரதிர்ஷ்டவசமானதும் கவலைக்குரியதுமான இந்த நிகழ்வுப்போக்குகள் கடன் மீளச் செலுத்துதலில் நிலைபேறான தனமையை ஏற்படுத்துதல் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கையை வென்றெடுப்பது மற்றும் இன, மத சிறுபான்மை சமூகத்தவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பது உட்பட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடைப்பிடிக்கின்ற மிகவும் நேர்மறையான நிலைப்பாடுகளை மலினப்படுத்துகின்றன.
இன, மத சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு காணப்படவேண்டிய அரசியல் தீர்வு நிலைபேறான ஒரு யதார்த்தமாக வேண்டும் என்ற ஜனாதிபதியின் கூற்று இவற்றில் மிகவும் முக்கியமானதாகும். அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் தொடர்பில் புரிந்துணர்வுடனும் ஒருவகை துணிச்சலுடனும் இரு பொருள்படுதலுக்கு அப்பாற்பட்ட முறையில் அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். தற்போதைய அரசியல் தலைவர்களில் எவரும் அத்தகைய துணிச்சலை வெளிப்படுத்தத் தயாராக இருந்ததில்லை.
ஜனாதிபதியாக ஒரு குறுகிய காலத்துக்குள் விக்கிரமசிங்க வட பகுதிக்கு மூன்று தடவைகள் விஜயம் செய்திருக்கிறார். போரினால் நிர்மூலமான அந்தப் பகுதியின் சிவில் சமூகத்துக்கும் அரசியல் தலைவர்களுக்கும் நேசக்கரத்தை நீட்டுகிறார். வட பகுதி நாட்டின் ஏனைய பகுதிகளினதும் கண்டி, காலி, மாத்தறை போன்ற ஏனைய நகரங்களினிதும் வளர்ச்சியை எட்டிப்பிடிப்பதற்கு கணிசமான முதலீடுகளை வேண்டிநிற்கிறது.
மிகவும் அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின்போது அவர் வட பகுதியின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலான தனது நோக்கை வெளிப்படுத்தியதுடன் நீண்டகாலமாக இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலங்களின் ஒரு பகுதி அதன் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுவதையும் உறுதிசெய்தார். சுதந்திரதின கொண்டாட்டத்தின்போது தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்படுவதை ஜனாதிபதி உறுதிசெய்தார். சந்தேகத்துக்கிடமின்றி அது சிறியதொரு நல்லெண்ணச் சமிக்ஞை என்றாலும் நாட்டின் நான்கு பிரதான இனத்துவ சமூகங்களில் மூன்று சமூகங்களினால் முதல் மொழியாக பேசப்படுகின்ற தமிழ்மொழிக்கு சமத்துவ அங்கீகாரம் வழங்கவேண்டிய அவசியத்தை உருவகப்படுத்தி நிற்கிறது.
ஆனால், ஜனாதிபதியின் இந்த நேர்மறையான உணர்வுகளும் நடவடிக்கைகளும் அவர் தனது பக்கத்தில் இருப்பதாக நம்புகின்றவர்களின் அதிகார அரசியல் தேவைப்பாடுளினாலும் நிர்ப்பந்தங்களினாலும் மலினப்படுத்தப்படுகின்றன. உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான பிரச்சினையும் அதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு முயற்சிகளும் மக்களின் கண்களில் தார்மீக நியாயப்பாடு இல்லாததாக தோன்றுகின்ற அரசாங்கம் ஒன்றைத் தொடர்ந்து நடத்த ஜனாதிபதி விரும்புகிறார் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது.
ஊழல்தனமானவர்கள் என்று பரவலாக நம்பப்பட்ட அரசாங்கத் தலைவர்கள் மீண்டும் பதவிகளில் அமர்த்தப்பட்டு பாதுகாக்கப்படுவதும் மக்கள் போராட்ட இயக்கத்தின் இளைய தலைவர்களும் முதிய தலைவர்களும் கொடுமைப்படுத்தப்படுவதும் ஜனாதிபதியின் உன்னதமான பொருளாதார சீர்திருத்த முயற்சிகளையும் இன, மத சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையும் ஆதரிக்க விரும்புகின்றவர்களிடம் இருந்து கூட அவரை தூரவிலக்குகிறது.
கலாநிதி ஜெகான் பெரேரா