Photo, The Hindu

‘இரத்தம் சிந்தாமல் கிடைத்த சுதந்திரம்’ என்ற ‘கருத்தாக்கம்’ இலங்கை தீவில் அறவே மதிப்பிழந்து போயிருப்பதற்கு முக்கியமான பல காரணங்கள் உள்ளன.

சுதந்திர இலங்கை (பெப்ரவரி 04, 1948) அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது தொடர்பாக கடுமையான ஒரு சர்ச்சை இடம்பெற்று வருகின்றது. சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கென 300 மில்லியன் இலங்கை ரூபாவை விரயம் செய்வது பயனுள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுவதுடன் இணைந்த விதத்தில் இந்தச் சர்ச்சை தோன்றியுள்ளது.

இலங்கை அரசாங்கம் ஆடம்பரமான செலவு கூடிய உத்தியோகபூர்வ சுதந்திர தினக் கொண்டாட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்தது ஏன்? நாடு அழிவுகரமான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டு வருவதுடன், பல்லாயிரக்கணக்கான வறிய குடிமக்கள் பட்டினியை எதிர்கொண்டிருக்கிறார்கள். சுதந்திரத்தின் பின்னர் நாட்டின் சாதனை எனக் கொண்டாடுவதற்கு பெரிதாக எதுவும் இல்லாத நிலையில் இந்த அளவுக்கு பொதுமக்களின் வரிப்பணத்தை ஏன் விரயம் செய்ய வேண்டும்?

மற்றொரு சர்ச்சையும் உருவாகிக் கொண்டிருக்கிறது. பெப்ரவரி மாதம் முடிவடைவதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படவிருக்கின்றன. நாடு ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் அதே வேளையில் ஒரு தேர்தலுக்கென மக்களின் வரிப்பணத்தை செலவு செய்வது விவேகபூர்வமான ஒரு காரியமாக இருந்து வர முடியுமா என்பது தொடர்பாகவும் ஒரு விவாதம் இடம்பெற்று வருகின்றது. அது ஜனநாயகம் மற்றும் பொதுமக்கள் நலனோம்பல் என்பவற்றுக்கெதிராக ஆளும் மேட்டுக்குடியினரின் சுயநல அக்கறைகளை எடுத்துக் காட்டுகின்றது. மக்களின் உடனடித் தேவையொன்றாக இருந்து வராத ஒரு தேர்தலுக்கென செலவிடுவதற்கு திரைசேறியில் பணம் இல்லை என ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கின்றது. அதேவேளையில், தேர்தலில் படுதோல்வியடைவதைத் தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு ஆளும் கூட்டணி இதனை ஒரு போலிச் சாக்காக முன்வைத்து வருகின்றது என எதிர்க்கட்சி சுட்டிக் காட்டுகின்றது. தேர்தல் ஆணைக்குழுவினால் இந்தத் தேர்தலுக்கென ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அது நடத்தப்படுமா என்பது மற்றொரு பிரச்சினையாகும். அதேவேளையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் – அது தொடர்பாக பொதுமக்களின் ஆர்வம் இல்லாதிருந்து வரும் நிலையிலும் கூட – திட்டமிட்ட விதத்தில் இடம்பெறவுள்ளன.

இலங்கையில் 1948 இல் இடம்பெற்ற நிகழ்வு உத்தியோகபூர்வ வட்டாரங்களுக்கு வெளியில் ஒரு பெரிய பாதிப்பை எடுத்து வந்திருக்கவில்லை. இதற்கான ஒரு சில காரணங்கள், சுதந்திரத்துக்கான இலங்கையின் திட்டவட்டமான பயணத்தில் வேரூன்றியுள்ளன. ஏனையவை காலனித்துவ ஆட்சியாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறிச் சென்ற பின்னர் இலங்கை அரசாங்கங்கள் நிகழ்த்திய சாதனைகள் அல்லது அவற்றின் தோல்விகள்  என்பவற்றுடன் சம்பந்தப்பட்டுள்ளன.

கொண்டாட்டங்கள் தொடர்பான எந்தவொரு உரையாடலிலும் இருக்கும் முக்கிய விடயம் இலங்கையின் ‘தேசிய வீரர்கள்’ பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து இரத்தம் சிந்தாமல் அரசியல் சுதந்திரத்தைப் வென்றுள்ளார்கள் என்பதாகும் – ஏனைய நாடுகளில் நிலைமை இதற்கு மாறானதாகும். பல நாடுகளில் சுதந்திரத்திற்கான பயணம் வன்முறையுடன் கூடியதாக இருந்து வந்துள்ளது. ‘இரத்தம் சிந்தாமல் கிடைக்கும் சுதந்திரம்’ என்ற இந்த கருதுகோள், அதன் உள்ளார்ந்த வரையறைகள் காரணமாக இலங்கையின் அனைத்து மக்களினதும் போற்றுதலுக்கு உரியதாக இருந்து வரவில்லை.

உரையாடலின் வேர்கள்

தேசிய பெருமிதத்துடன் கூடிய ஒரு நிகழ்வு என்ற முறையில் சுதந்திரத்தைக் கொண்டாட முடியுமா என்ற சந்தேகத்துடன் கூடிய உரையாடல் நான்கு வேர்களைக் கொண்டுள்ளது – சிங்கள தேசியவாதம், தமிழ் தேசியவாதம், சோசலிசம் மற்றும் அறிவுப் புலம்.

இலங்கைக்கு முழுமையான அரசியல் இறைமையை வழங்கத் தவறியமை குறித்து சிங்கள தேசியவாதிகள் காலனித்துவ ஆட்சியாளர்கள் மீது ஆத்திரமுற்றிருந்தனர். உள்நாட்டு தேசியவாதத் தலைவர்கள் முழுமையான சுதந்திரம் மற்றும் இறைமை என்பவற்றை பெற்றுக் கொள்வதற்கென போராட்டங்களை நடத்தாமல் இருந்தமை குறித்து  அவர்கள் மனவருத்தத்தில் இருந்தார்கள். 1947 இன் சோல்பரி அரசியல் யாப்பு ஓரளவு சுதந்திரம் மற்றும் முழுமையற்ற இறைமை என்பவற்றை மட்டுமே உள்ளடக்கியிருந்தது என்பதே அவர்களுடைய வாதமாகும். மேலும், அரசியல் யாப்பு மதச் சார்பற்றதாக இருந்து வருவது குறித்தும், பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களின் விசேட உரிமைகளை அங்கீகரிக்காமை குறித்தும் அவர்கள் கவலை கொண்டிருந்தனர். இந்திய முன்மாதிரியின் மூலம் ஓரளவுக்கு தூண்டப்பட்ட சிங்கள தேசியவாதிகள், பௌத்த மதத்திற்கு ஒரு விசேட அந்தஸ்து வழங்கப்படும் ஓர் அரசியல் யாப்பைக் கொண்ட ஒரு குடியரசாக இலங்கை உருவாக வேண்டும் என 1952 அளவிலேயே யோசனைகளை முன்வைத்திருந்தார்கள்.

தமிழ் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில், சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் உருவாகும் ஆட்சி முறை பெரும்பான்மை மக்களின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தக் கூடிய உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டிருக்க முடியும் என்ற அச்சம் அவர்களுக்கு மத்தியில் நிலவியது. அரசாங்கத்தில் ஏதேனுமொரு வகையிலான பெரும்பான்மை மேலாதிக்கம் இடம்பெறுவதனை தடுத்துக் கொள்ளும் பொருட்டு சட்ட சபையில் அனைத்து சிறுபான்மையினருக்கும் சம விகிதத்திலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதே 1948க்கு முன் தமிழ் தேசியவாதிகளின் முதன்மையான கோரிக்கையாக இருந்து வந்தது. எவ்வாறிருப்பினும், சுதந்திர அரசியல் யாப்பு பாரபட்சமான சட்டவாக்கங்களுக்கு எதிராக மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பினை வழங்கியது. சட்டவாக்க இயல்பிலான பாரபட்சம் காட்டப்படாமை என்ற விடயம் ஒரு பொய்யான வாக்குறுதி என்பதனை புரிந்துகொண்ட தமிழ் தலைவர்கள் பிராந்திய சுயாட்சியை ஆதரித்துப் பேசினார்கள். அதற்கென சுதந்திரத்துக்குப் பிற்பட்ட அரசியல் யாப்பு ஒழுங்கில் ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

உள்ளூர் மேட்டுக்குடியினரால் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் சுதந்திரம் முழுமையற்றது என்ற சிங்கள தேசியவாதிகளின் வாதத்தை இடதுசாரி விமர்சகர்களும் ஏற்றுக் கொண்டார்கள். ஒரு சோசலிச குடியரசு மட்டுமே அனைத்து இலங்கையர்களுக்குமான முழுமையான சுதந்திரத்தையும், இறைமையையும் உறுதிப்படுத்த முடியுமென இடதுசாரிகள் கருதினார்கள். எனவே, 1948 சுதந்திர தினக் கொண்டாட்டம் ‘பிற்போக்கு’ அரசியல் மேட்டுக்குடியினரால் முன்னெடுக்கப்பட்ட ஒரு வெற்று அரசியல் நாடகமாகவே இருந்து வந்தது. இந்தப் பின்னணியிலேயே இடதுசாரி கட்சிகள் சிங்களத் தேசியவாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டாக இணைந்து 1970 – 72 காலப் பிரிவில் இலங்கை ‘சோசலிச ஜனநாயக குடியரசை’ ஸ்தாபிப்பதற்கு முன்வந்திருந்தன.

இடதுசாரி விமர்சனங்களினால் ஓரளவுக்குத் தூண்டப்பட்டிருந்த இது தொடர்பான கல்விப்புலம் சார் சந்தேக உணர்வு, இலங்கையின் சுதந்திரத்துக்கான தீவிரமான காலனித்துவ எதிர்ப்பு மக்கள் இயக்கமொன்று இல்லாதிருந்தமையால் எமது சுதந்திரம் முழுமையற்ற இயல்பைக் கொண்டுள்ளது என்ற விடயத்தில் வேரூன்றியிருந்தது. சுதந்திரம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்ட ‘காலனித்துவத்தினால் போஷிக்கப்பட்ட இலங்கையின் முதலாளித்துவ வகுப்பினர்’, காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து பொருளாதார, அரசியல் மற்றும் கலாசாரப் பிணைப்புக்களை துண்டித்துக் கொள்ளும் விடயத்துக்கு ஒரு போதும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கவில்லை என அந்தத் தரப்பு வாதிட்டது.

பொதுமக்களின் பிரக்ஞையில் வேரூன்றிப் போயிருக்கும் மற்றொரு விடயம், இலங்கையின் முதலாளித்துவ மேட்டுக்குடியினர் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூட்டாக இணைந்து பழமை பேண் கொள்கையை பின்பற்றிய விடயம், இந்தியாவில் இடம்பெற்றதைப் போல தீவிரவாத காலனித்துவ எதிர்ப்பு மக்கள் இயக்கமொன்றுக்கு தலைமை தாங்குவதிலிருந்தும் அவர்களை தடுத்திருந்தன என்பதாகும். இந்தியத் தேசிய காங்கிரஸ், அதன் தலைவர்கள் மற்றும் தேசியவாத போராட்டத்தில் பொதுமக்கள் அணிதிரட்டப்பட்ட உத்தி என்பன தொடர்பான ஒப்பீடுகளுடன் இணைந்த விதத்தில் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. எனவே, கலாசார ரீதியில் ஆங்கில கலாசாரத்துடன் நெருக்கமான விதத்தில் பிணைந்திருந்த இலங்கையின் மேட்டுக்குடி வர்க்கத்தினர், மக்கள் போராட்டமொன்றுக்கு ஊடாக காலனித்துவ ஆட்சியாளர்கள் வெளியேறிச் செல்வதனை நிர்ப்பந்திப்பதற்குப் பதிலாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் தெரிவையே மேற்கொண்டிருந்தார்கள்.

1950 களின் தொடக்கத்திலிருந்து இலங்கையில் இடம்பெற்று வந்த முதன்மையான அரசியல் விவாதம் சுதந்திரத்தின் அரசியல் – அரசியல் யாப்பு சட்டகம் தொடர்பானதாகவே இருந்து வந்தது. சுதந்திரத்துக்குப் பிற்பட்ட அரசியல் ஒழுங்கின் ஒட்டுமொத்த சட்டகத்தின் லிபரல் ஜனநாயக இயல்பு குறித்து குறைந்தபட்ச அளவிலான கருத்தொற்றுமையே நிலவி வந்தது. இடதுசாரிகள் கூட சோசலிச ஆட்சியின் கீழ் மட்டுமே முழுமையான சுதந்திரம் மற்றும் இறைமை என்பன சாத்தியமாகும் என்ற நிபந்தனைக்கு அமைவாக, அந்தக் கருத்தை ஆதரித்தார்கள்.

செனட் சபை ஒழிக்கப்பட்டு, இலங்கை ஒரு குடியரசாக ஆக்கப்பட்டு, சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதே சீர்திருத்தம் தொடர்பாக இடதுசாரிகள் முன்வைத்த முதன்மையான வாதமாகும். சீர்திருத்தம் தொடர்பான சிங்கள தேசியவாதிகளின் வாதங்கள் இலங்கையை ஒரு பௌத்த குடியரசாக மாற்றியமைத்தல், பௌத்த சமயத்தை பாதுகாப்பது தொடர்பான அரச கடப்பாட்டினை எடுத்து வருதல், சிங்கள பௌத்தர்களின் உரிமைகளையும் மற்றும் அவர்களுடைய கலாசார உரிமைகளையும் மீள எடுத்து வருதல், சிங்கள மொழியை அரச கரும மொழியாக ஆக்குதல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அதே வேளையில், தமிழ் தேசியவாத தரப்பினால் முன்வைக்கப்பட்ட முதன்மையான கோரிக்கை, சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இலங்கை அரசு, தமிழர்களுக்கு பிராந்திய சுயாட்சியை வழங்கும் பொருட்டு சமஷ்டி அமைப்பொன்றுக்குள் மீள் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

1972 இன் முதலாவது குடியரசு அரசியல் யாப்பு – 1948 இன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதலாவது முக்கியமான கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தம் – சிங்கள தேசியவாதிகளின் முன்மொழிவுகளினதும், அதேபோல இடதுசாரிகளின் முன்மொழிவுகளினதும் ஒரு கலவையைக் கொண்டிருந்தது. ஆனால், அது தமிழ் தேசியவாதிகளின் சீர்திருத்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு மறுத்திருந்தது.

குறுகிய கால அமைதி

தென்னாசியாவில் 1948 இல் இலங்கை ஒரு விதிவிலக்காக இருந்து வந்ததற்கான காரணம் அமைதியான விதத்தில், வன்முறை சாராத இயல்பில் அது தனது சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டமையாகும். எவ்வாறிருப்பினும், இந்தச் சமூக மற்றும் அரசியல் அமைதி குறுகிய காலம் மட்டுமே நீடித்தது. 1970 களின் தொடக்கத்திலிருந்து அரசுக்கும், பிரஜைகளுக்கும் இடையிலான வன்முறையுடன் கூடிய மோதல்கள் அரசியலில் ஒரு விதிமுறையாக உருவாகியிருந்தன. பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை கோரும் விதத்தில் சிங்கள சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆயுதக் கிளர்ச்சி 1971 இல் இடம் பெற்றது. 1987 தொடக்கம் 1989 வரையிலான காலப் பிரிவின் போது இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சி இடம்பெற்றதுடன், அதுவும் மிகவும் கொடூரமான விதத்தில் அடக்கப்பட்டது.

வடக்கு தமிழ் சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சி 1983 இல் ஆரம்பித்ததுடன், அது தமிழ் ‘தேசத்திற்கு’ சுயாட்சியைக் கோரியது. இது தொடர்ச்சியாக இடம்பெற்ற உள்நாட்டு போரொன்றுக்கு வழிகோலியது. அரசு எதிர் பிரஜைகள் மோதலில் மனித இழப்பு மிகப் பாரிய அளவில் ஏற்பட்டதுடன், எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்த  உத்தியோகபூர்வமான எண்ணிக்கை இதுவரையில் கிடைக்கவில்லை.

இவ்விதம் நீண்டகாலமாக இடம்பெற்று வந்திருக்கும் சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்பு நிலை இலங்கையின் அரசியல் சுதந்திரத்தின் பொருள் தொடர்பான மிகவும் முக்கியமான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போதைய பொருளாதார வீழ்ச்சியுடன் இணைந்த நெருக்கடி, இலங்கையில் அரசியல் மேட்டுக்குடியினரின் கொள்கை மற்றும் ஆட்சி என்பவற்றின் தோல்விகளைத் தொடர்ந்து அதே விதத்தில் முன்னெடுத்துச் செல்வது தொடர்பான புதிய கேள்விகளை எழுப்புகின்றது. முன்னர் மானிட அபிவிருத்திச் சாதனைகளில் மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக பெருமிதமடைந்த இலங்கை, இப்பொழுது உயர் அளவிலான போஷாக்குக் குறைபாடுகளுடன் கூடிய பிள்ளைகளைக் கொண்டிருக்கும் உலகின் பத்து நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது.

இவை அனைத்தையும் ஒன்றாக எடுத்து நோக்கும் பொழுது, இலங்கையின் அரசியல் மற்றும் நிர்வாக வர்க்க மேட்டுக்குடியினர் இலங்கை பிரஜைகளுக்கு இருண்ட எதிர்காலமொன்றை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதற்கான பயங்கரமான ஒரு சான்றாக அவை இருந்து வருவதனை பார்க்க முடிகிறது.

சுதந்திரத்தின் பொருள் தொடர்பாக தாம் தொடர்ந்து சந்தேகங்களைக் கொண்டிருக்கும் நிலையில், சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கென பல கோடிகளில் பொதுமக்களின் பணத்தை விரயம் செய்வதற்கு தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எத்தகைய தார்மீக உரிமைகளும் இல்லை என குடிமக்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்புவது நியாயமானதாகும்.

ஜயதேவ உயன்கொட

(இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற தகைசார் அரசறிவியல் துறை பேராசிரியர் ஆவார்)

“Little to celebrate in Sri Lanka at 75” என்ற தலைப்பில் The Hindu தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.