Photo, The Hindu
ஒரு சிறுவன் என்ற முறையில் எனது நினைவிலிருக்கும் முதலாவது சுதந்திர தினக் கொண்டாட்டம் 1984 இல் இடம்பெற்ற கொண்டாட்டமாகும். அதனை இன்னமும் நான் நினைவில் வைத்திருக்கிறேன்; ஏனெனில், அக்கொண்டாட்டங்கள் எனது ஊரான களுத்துறையில் இடம்பெற்றன. அது முழு அளவிலான இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கட்டுகுருந்த ஓட்டப் போட்டி மைதானத்தில் அரை நாள் நிகழ்வாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. களுத்துறை பிரதேசத்தை சூழவுள்ள அனைத்து பெரிய பாடசாலைகளிலும் படிக்கும் வளர்ந்த மாணவர்கள் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார்கள். எனது மூத்த சகோதரரும் அதில் அடக்கம். இதற்கான ஒத்திகைகள் பல நாட்கள் இடம்பெற்றன. ஆனால், எனது சகோதரரோ அல்லது அவருடைய நண்பர்களோ அது குறித்து அலுத்துக் கொண்டதை நான் பார்க்கவில்லை. நகரின் வழமையான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டிருந்த போதிலும், எவரும் அது குறித்து புகார் சொல்லவில்லை. அத்தகைய பாரியளவிலான ஒரு கொண்டாட்டத்திற்கான தேவை குறித்தோ அல்லது அது தொடர்பாக பெருந்தொகைப் பணத்தைச் செலவிடுவதற்கான தேவை குறித்தோ எவரும் கேள்வியெழுப்பியதாகத் தெரியவில்லை. அந்த நாட்களில் வாழ்க்கை மிகவும் எளிமையாக இருந்து வந்தது. வேறு கேளிக்கைகள் எவையும் இல்லாதிருந்த நிலையில் மக்கள் இத்தகைய அரிதான குறுக்கீடுகளை விரும்பியிருக்கக் கூட முடியும். இந்தப் பாரிய கொண்டாட்டம் காரணமாக உள்ளூர் பாதைகள் செப்பனிடப்பட்டதுடன், தேசிய செய்திப் பத்திரிகைகளில் களுத்துறை தொடர்பான செய்திகள் இடம்பெற்றன. அந்த நாட்களைப் பொறுத்தவரையில் அவை இரண்டும் அரிய நிகழ்வுகளாகும்.
இப்பொழுது கால இயந்திரத்தை முன்னோக்கித் தள்ளி 2002 – 2004 கால கட்டத்துக்கு வருவோம். மற்றொரு விசேட கொண்டாட்டம் குறித்த ஒரு சில செய்திகளை வாசித்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், இந்தத் தடவை அது சுதந்திரம் குறித்த செய்திகளாக இருக்கவில்லை. உண்மையிலேயே அதற்கு நேர்மாறானதாக இருந்தது. போர்த்துக்கேயர்கள் இலங்கையைக் கைப்பற்றிய தமது 500ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பொருட்டு போர்த்துக்கல் நாட்டுக்கு அழைப்பு விடுப்பது தொடர்பாக அரசாங்க மட்டத்தில் ஒரு சில பேச்சுவார்த்தைகள் அப்பொழுது இடம்பெற்று வந்தன. அச்சந்தர்ப்பத்தில் நான் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றிருந்ததுடன், அது தொடர்பாக மேலும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு இணையத்தையே நம்ப வேண்டியிருந்தது. அது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. இது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு சம்பவமாக இருந்து வந்ததுடன், டிஜிடல் ஊடகம் அப்பொழுது அதன் குழந்தைப் பருவத்தில் இருந்தது. அத்தகைய கொண்டாட்டமொன்றுக்கு இலங்கையின் முன்னைய காலனித்துவ எஜமான் நாடொன்றுக்கு அழைப்பு விடுக்கும் யோசனை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் சிறிதளவுக்கு மட்டுமே எதிர்ப்பு நிலவி வந்ததையும் என்னால் உணர முடிந்தது. எனது நினைவிற்கு எட்டிய வரையில் அந்தத் திட்டம் ஒருபோதும் நிறைவேறவில்லை என்றே தெரிகிறது. அநேகமாக 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசாங்க மாற்றம் இதற்கான காரணமாக இருந்திருக்க முடியும்.
காலச் சக்கரத்தை மேலும் வேகமாக இரு தசாப்தங்கள் நகர்த்தும் பொழுது நாங்கள் இன்றைய கால கட்டத்துக்கு வருகிறோம். இந்த ஆண்டு இலங்கை காலனித்துவ எஜமானர்களுக்கு பிரியாவிடை கொடுத்த 75ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. நாடு அநேகமாக வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதுடன், சம்பளங்களை செலுத்துவதற்கோ, தேர்தல்களை நடத்துவதற்கோ, அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கோ அரசாங்கத்திடம் போதியளவில் பணம் இல்லை. ஆனால், 75ஆவது சுதந்திர தினத்தை ஆடம்பரமான விதத்தில் பெரும் பணச் செலவில் கொண்டாடுகிறது. இந்தத் தடவை தென்படும் ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசம் அது தொடர்பான பொதுமக்களின் எதிர்வினையாகும். இதற்கு முன்னர் நான் எடுத்து விளக்கிய இரண்டு சம்பவங்களைப் போலன்றி, காலத்துக்கு ஒவ்வாத அநாவசியமான செலவுகள் குறித்து மிகவும் வலுவான விதத்தில் இந்தத் தடவை பொதுமக்கள் கூக்குரல் எழுப்பி வருவதனை அவதானிக்க முடிகின்றது.
இறந்த காலத்திலிருந்தும், நிகழ் காலத்திலிருந்தும் எடுக்கப்பட்ட மேலே குறிப்பிடப்பட்ட மூன்று கதைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவையாகத் தென்பட்டாலும் கூட, ஒன்றை மற்றொன்றுடன் இணைக்கும் ஓர் இழை இருந்து வருவதனை என்னால் அவதானிக்க முடிகிறது. அந்த இழை இந்த மூன்று நிகழ்வுகளின் போதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வகித்து வந்திருக்கும் பாத்திரமாகும். 1984 இல் எனது சொந்த ஊரில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட பொழுது இளம் விக்கிரமசிங்க அந்த நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்களில் ஒருவராக இருந்து வந்தார். அப்போதைய கல்வி அமைச்சர் என்ற முறையில் பாடசாலை பிள்ளைகளை ஒன்று திரட்டி, அணிவகுப்புக்கு எடுத்து வரும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், அந்தப் பிரதேசத்தில் அடிக்கடி அவருடைய நடமாட்டமும் காணப்பட்டது. இலங்கையை கைப்பற்றிய தமது 500ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கென போர்த்துக்கேய அரசாங்கத்துக்கு அழைப்பு விடுப்பது தொடர்பான கருத்து சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தார். இறுதியாக, இப்பொழுது இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி என்ற முறையில் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார். இந்தக் கால அட்டவணை இத்துடன் நின்றுவிடவில்லை; தனது வாழ்நாளில் பெருந்தொகையான சுதந்திர தினக் கொண்டாட்டங்களுடன் சம்பந்தப்பட்டிருந்த அந்த மனிதர் 100ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் தொடர்பாகவும் ஏற்கனவே ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றார். “நாங்கள் எமது 100 ஆவது சுதந்திர தினத்தை 2048ஆம் ஆண்டில் கொண்டாடும் பொழுது இலங்கை முழுமையாக அபிவிருத்தியடைந்த ஒரு நாடாக இருக்கும்” என ஒரு சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் பொழுது அவர் கூறியிருந்தார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்து கேலிக் கூத்தானதா அல்லது ஒரு கிண்டலாக இருந்து வந்ததா என எனக்கு சரியாகத் தெரியாது. ஒரு வேளை அது இரண்டுமாக இருந்து வர முடியும். என்னைப் பொறுத்தவரையில் சுமார் அரை நூற்றாண்டு காலம் நாட்டில் அதிகாரமிக்க முக்கியமான பல அரசியல் பதவிகளை வகித்து வந்திருக்கும் ஒரு முன்னணி அரசியல்வாதி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இன்னும் 25 ஆண்டுகள் தேவை எனக் கூறுவது வேடிக்கையானதாகும். அரசியல் மேட்டுக்குடியினர் நாட்டு மக்களை கடந்த 75 வருட காலமும், அநேகமாக அடுத்து வரும் 25 வருட காலமும் படு முட்டாள்களாக வைத்திருப்பது அவரைப் பொறுத்தவரையில் நக்கலடிக்கும் ஒரு செயலாக இருந்து வர முடியும். சுதந்திர தின நாடகம் பல வருட காலம் அரசியல் மேட்டுக்குடியினரால்/ அரசியல் குடும்பங்களினால் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்துள்ளது என்பதற்கு இந்தக் கூற்றே ஓர் உதாரணமாக இருக்கின்றது. மக்களை அழுத்திக் கொண்டிருக்கும் ஏனைய பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்கான ஒரு வசதியான கேடயமாக ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்தத் தடவை 100ஆவது சுதந்திர தினம் தொடர்பான அபிவிருத்திக் குறிக்கோள்களை அதனுடன் இணைத்து, மேலும் 25 வருட காலம் எமக்குத் தேவைப்படுகின்றது எனக் கூறுவதன் மூலம் ஜனாதிபதி அதனை அடுத்த மட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். எமது அரசியல்வாதிகளினால் இலங்கையின் எதிர்காலம் குறித்து முன்வைக்கப்படும் எந்த விதமான எதிர்கால திட்டங்களும் அவர்களுடைய கடந்த கால சாதனைகளின் பின்னணியில் வைத்து மதிப்பிடப்படுதல் வேண்டும். பிரித்தானியர்கள் 1948 இல் நாட்டிலிருந்து வெளியேறிய பொழுது, இலங்கை ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இருந்தது. இப்பொழுது சுமார் ஐம்பது நாடுகளின் பட்டியலில் அது முப்பதாவது இடத்தில் இருக்கின்றது. தற்பொழுது ஆசியாவின் தலைசிறந்த பொருளாதாரமாக சிங்கப்பூர் இருந்து வருவதுடன், எமது மிகச் சிறிய அயல்நாடான மாலை தீவுகள் அந்தப் பட்டியலில் பதினைந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த இரு தீவு நாடுகளும் இலங்கையைப் போலவே பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகளாக இருந்து வந்தவையாகும். அவையிரண்டும் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து இரு தசாப்தங்களுக்குப் பின்னர் சுதந்திரம் பெற்றுக் கொண்ட நாடுகளாக இருந்து வருகின்றன. இலங்கையைப் போலன்றி அந்நாடுகள் அளவில் மிகச் சிறியவையாக இருந்து வருவதுடன், தம்மைச் சூழவிருக்கும் கடலைத் தவிர வேறு இயற்கை வளங்கள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. நாங்களும் அந்தக் கடல் வளத்தைக் கொண்டிருக்கின்றோம். அந்நாடுகள் அபிவிருத்தி ஏணியில் ஏறிக் கொண்டிருந்த பொழுது நாங்கள் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தோம். ஏன்? ஜனாதிபதி விக்கிரமசிங்கவும், அவர் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கலாசாரமும் அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்கான குறிக்கோள்களை உருவாக்கிக் கொள்வதற்கு முன்னர் அவ்வாறு செய்வதற்கான நியாயப்படுத்தல்களை முன்வைக்க வேண்டும்.
இராணுவ அணிவகுப்புகள் மற்றும் துப்பாக்கி வேட்டுகள் தீர்த்து வைக்கப்படுவதுடன் இணைந்த விதத்தில் நடத்தப்படும் அணிவகுப்பு மரியாதைகள் என்பவற்றினால் ஒரு விதமான போலித் தேசியவாதம் அல்லது தேச பக்தி தூண்டப்பட்டு வருகின்றது. உண்மையான பிரச்சினைகளை மூடி மறைப்பதற்கான வசதியான கேடயங்களாக இவை இருந்து வருகின்றன. சுதந்திரம், ஜனநாயகம், நாட்டின் இறைமை போன்ற சொற்களில் போர்த்தப்பட்டு இந்த நிகழ்வு எம்முன் வைக்கப்படும் பொழுது, பலர் அதனை சரிவர புரிந்து கொள்வதில்லை. அதன் காரணமாக ஆடம்பரமான சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான தேவை குறித்து கேள்வி எழுப்புவதற்கு எவரும் துணிவதில்லை. இறுதியில் இதற்கான செலவுத் தொகைகள் அனைத்தும் மக்களின் வரிப் பணத்தில் இருந்தே செலுத்தப்படுகின்றன. அநேகமாக முதல் தடவையாக சுதந்திரத்தின் பெயரில் மேற்கொள்ளப்படவிருக்கும் அநாவசிய செலவுகளுக்கெதிராக இந்தத் தடவை குரல்கள் எழுப்பப்படுவதனை என்னால் அவதானிக்க முடிகின்றது. தற்போது மக்கள் எதிர்கொண்டு வரும் சிரமங்கள் மற்றும் பொருளாதார முடக்கம் என்பவற்றின் அடிப்படையில் பிரதானமாக இந்த எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. அதனை எதிர்ப்பதற்கான ஒரே ஒரு காரணமாக அது மட்டும் இருந்து வர வேண்டுமா? சுதந்திரம் என்பதன் பொருள் என்ன என்ற கேள்வியை நாங்கள் கேட்கக் கூடாதா? இறுதியாக, பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு எம்மை நிர்ப்பந்திக்கும் ஒரு காரணம் இருந்து வருகின்றதா?
பெருந்தொகையான நாடுகள் ஒரு சில வரலாற்றுக் காரணங்களின் அடிப்படையில் ஒரு தேசிய தினத்தை அங்கீகரித்திருந்த போதிலும், அத்தினங்கள் அனைத்தும் சுதந்திர தினம் என அழைக்கப்படுவதில்லை. எம்மைப் போன்ற காலனித்துவ வரலாற்றைக் கொண்டிருக்கும் நாடுகளில் நிலவி வரும் ஒரு கருதுகோளாகவே சுதந்திர தினம் என்ற கருதுகோள் இருந்து வருகின்றது. இராணுவ நடவடிக்கைகளுக்கு ஊடாக அல்லது ஏனைய கடுமையான பிரயத்தனங்களுக்கு ஊடாக காலனித்துவ ஆட்சியாளர்களை விரட்டியடித்து விட்டு, சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கும் நாடுகளைப் பொறுத்தவரையில், தமது நாடு சுதந்திரமடைந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்கான வலுவான காரணங்கள் இருந்து வருகின்றன என்பதே எனது அபிப்பிராயமாகும். ஐக்கிய அமெரிக்கா, அல்ஜீரியா மற்றும் தென் அமெரிக்காவில் இருக்கும் பல நாடுகள் இதற்கான மிகச் சிறந்த உதாரணங்களாகும். ஏனைய பல முன்னைய காலனித்துவ நாடுகளின் நிலைமை வேறு. அதாவது, அந்நாடுகளை ஆட்சி செய்து வந்த காலனித்துவ ஆட்சியாளர்கள் அவற்றைப் பராமரித்து வருவதில் பிரச்சினைகளை எதிர்கொண்ட பொழுது (அல்லது கொள்ளையடிப்பதற்கு வேறு எதுவும் எஞ்சியிராத நிலையில்) அந்நாடுகளுக்கு சுதந்திரத்தை வழங்கினார்கள். ஒரு பாரிய சாம்ராஜ்ஜியத்தை வைத்திருப்பதில் பொருளாதார ஆதாயங்கள் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்ற விடயத்தை இரண்டாவது உலகப் போரின் பின்னர் பிரிட்டிஷ் பேரரசு உணர்ந்து கொண்ட பொழுது, அது அறுபது காலனித்துவ நாடுகளிலிருந்து வெளியேறுவதென தீர்மானித்தது. எமது நாடு அந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட பொழுது அந்த ஏற்பாடும் கூட டொமினியன் அந்தஸ்து நிபந்தனையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது. அதாவது, அரச தலைவர் தொடர்ந்தும் பிரிட்டிஷ் மகாராணியாக இருந்து வர வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே எமக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. இலங்கை 1972 மே மாதம் 22ஆம் திகதி ஒரு குடியரசாக பிரகடனம் செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்நிலைமை மாற்றமடைந்தது. பெப்ரவரி 04ஆம் திகதி நாங்கள் கொண்டாடும் நிகழ்வு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தாமாகவே முன்வந்து இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்ற ஒரு நிகழ்வாகும். நாங்கள் உண்மையில் எந்தவொரு சுதந்திரத்தையும் போராடிப் பெற்றுக் கொண்டிருக்கவில்லை. அர்த்தபூர்வமான ஒரு தேசிய தினம் எமக்குத் தேவையாக இருந்து வருவதாக நாம் கருதினால் மே 22ஆம் திகதி அதற்கு பொருத்தமானதாக இருந்து வரும்.
பேராசிரியர் ஹிரோஷன் ஹெட்டியாரச்சி
February 4: Has It Ever Been Relevant? என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.