“கைதுசெய்யப்படுவதற்கு முன்னால் சுதந்திரமான நபராக நான் செயற்பட்டு வந்தேன். அது எனது பேச்சாக இருக்கலாம், எனது எழுத்தாக இருக்கலாம், சமூக ரீதியான தொடர்பாடல்கள் அனைத்தும் மிக சுதந்திரமாகவே காணப்பட்டது. ஆனால், இப்போது இந்த அடிப்படையான சுதந்திரத்தை கூட அனுபவிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். அது சாதாரணமாக, சந்தைக்குச் செல்வது, பள்ளிவாசலுக்குச் செல்வது, உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதாகக் கூட இருக்கலாம். அவ்வாறு நான் பொது இடங்களுக்குச் செல்லும் போது எல்லோராலும் நான் கண்காணிக்கப்படுவதைப் போன்று உணர்கிறேன். அதேபோல, சிறைக்குச் சென்றவர், பிரச்சினைக்குரியவர், தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்டவர் என்ற பார்வையில் நோக்கப்படுவதையும் நான் உணர்கிறேன்.”
75ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடனும் அபிமானத்துடனும் கொண்டாடுமாறு நாட்டு மக்களிடம் அழைப்பு விடுத்திருக்கும் அரசாங்கம் ஓர் இளம் கவிஞரின் அடிப்படை உரிமையை – சுதந்திரத்தை வழங்க மறுத்துவருவதை மேலுள்ள கூற்று எமக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
‘நவரசம்’ எனும் கவிதைப் புத்தகத்தின் ஊடாக ‘அடிப்படைவாதக் கருத்துக்களைப் பரப்புதல்’, சிறுவர்களுக்கு அதிதீவிரவாத கருத்துக்களைக் கற்பித்தல்’ எனும் குற்றச்சாட்டின் கீழ் இளம் கவிஞர் அஹ்னப் ஜஸீம் 2020 மே மாதம் 16ஆம் திகதி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். உறவுகளை சந்திக்கவிடாமல், சட்டத்தரணிகளை அணுகவிடாமல், பல தடுப்பு நிலையங்களுக்கு மாற்றப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு ஒரு வருடங்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் 2021 டிசம்பர் மாதமளவில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
“நான் விடுதலையாகி ஒரு வருடத்தையும் தாண்டிவிட்டது. ஆனால், இன்னும் எனக்கெதிரான வழக்கு இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. முழுமையான சுதந்திரத்தை இன்னும் என்னால் உணரமுடியவில்லை” – மாற்றத்துடனான நேர்க்காணலின்போது அஹ்னப் ஜஸீம் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
முழுமையான நேர்க்காணலை கீழே காணலாம்.