Photo, COLOMBO GAZETTE
இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு பல தசாப்தங்களாக மாறிமாறி ஆட்சிசெய்துவந்த இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இன்று முன்னரைப் போன்று மக்கள் செல்வாக்குடன் இல்லை. பழைய கட்சிகளாக இருந்தாலும் அவை பிரதான கட்சிகள் என்ற தகுதியைக் கொண்டவையாக இல்லை.
தனியான பெரிய கட்சியாக நீண்டகாலமாக இயங்கிவந்த ஐக்கிய தேசிய கட்சி கடந்த பொதுத்தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூட வென்றெடுக்கவில்லை. அதற்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பயன்படுத்தி பத்து மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றம் வந்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்கள் கிளர்ச்சியை அடுத்து மாற்றமடைந்த அரசியல் கோலங்களுக்கு மத்தியில் கடந்த வருடம் ஜூலையில் நாட்டின் ஜனாதிபதியாகவும் கூட தெரிவான ‘அதிசயம்’ நடந்தது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திர கட்சி ராஜபக்ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டதால் நாடாளுமன்றத்தில் 14 ஆசனங்களைப் பெறக்கூடியதாக இருந்தது. தனியாக போட்டியிட்டிருந்தால் அதன் மக்கள் செல்வாக்கின் இலட்சணம் தெரியவந்திருக்கும்.
சுதந்திர கட்சியை 2005 தொடக்கம் பத்து வருடங்கள் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்த ராஜபக்ஷர்கள் 2016 பிற்பகுதியில் தங்களுக்கென்று பொதுஜன பெரமுனவை தொடங்கியதை அடுத்து சுதந்திர கட்சியின் வாக்கு வங்கி அவர்களுடன் சென்றது. ராஜபக்ஷர்கள் பொதுஜன பெரமுனவை ஒரு குறுகிய காலத்திற்குள் மக்கள் செல்வாக்கைக் கூடுதலாகக் கொண்ட ஒரு கட்சியாகக் கட்டியெழுப்பி ஆட்சியதிகாரத்தை மீண்டும் கைப்பற்றினார்கள்.
ஆனால், எந்தளவு விரைவாக தங்கள் கட்சியை அவர்கள் நாட்டின் முதன்மையான அரசியல் சக்தியாகக் கட்டியெழுப்பினார்களோ அந்தளவு விரைவாக தவறான ஆட்சி காரணமாக இன்று மக்கள் செல்வாக்கை இழந்து நிற்கிறார்கள்.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக்கு எதிராக பல வருடங்களாக கிளர்ச்சி செய்த சஜித் பிரேமதாச அதில் தோல்விகண்டு இறுதியில் ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினார். ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி புதிய கட்சியுடன் சென்றுவிட்டதை கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நிரூபித்தது.
ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திர கட்சியும் பல தசாப்தங்களாக பாரம்பரியமான பிரதான அரசியல் கட்சிகளாக விளங்கிய நிலை மாறி பொதுஜன பெரமுனவும் ஐக்கிய மக்கள் சக்தியும் புதிய பிரதான அரசியல் கட்சிகளாக விளங்கும் நிலை தோன்றலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாற்றமடைந்துவரும் அரசியல் நிலைவரங்கள் அவ்வாறான ஒரு தோற்றப்பாட்டுக்கு இடமளிப்பதாக இல்லை எனலாம். தற்போது எம்மால் காணக்கூடியதாக இருக்கும் புதிய அணிசேருகைகள் இலங்கையின் அரசியல் பரப்பை பெருமளவுக்கு மாற்றிவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
தனிக்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலை இப்போது இல்லை. அவ்வாறு இருந்த நிலை நீண்டகாலத்துக்கு முன்னரே மாறி கூட்டணி அரசியல் யுகம் தொடங்கியது.
ஐக்கிய தேசிய கட்சி தனியொரு பெரிய கட்சியாக விளங்கிய காலத்தில் எப்போதும் தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டது. சுதந்திர கட்சி அதன் வரலாற்றால் ஒருபோதும் தனித்துப் போட்டியிட்டதில்லை. விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் வந்த பிறகுதான் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் கூட்டணியை அமைக்கத்தொடங்கியது. ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டு எல்லாம் அவர் காலத்தில் வந்ததே.
கடந்த நூற்றாண்டில் சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணிகள் தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த சில தடவைகளில் கூட தேசிய ரீதியில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற கட்சியாக ஐக்கிய தேசிய கட்சியே விளங்கியது. அதன் காரணத்தினால்தான் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையை அறிமுகப்படுத்தினார். தனது கட்சி நெடுகவும் நாடாளுமன்ற தேர்தல்களில் கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்திருக்கக்கூடும்.
ஆனால், தனது மருமகனின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி ஒரு நாள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் ஒரு ஆசனத்தைக் கூட வென்றெடுக்கமுடியாத அளவுக்கு மக்கள் செல்வாக்கை இழந்துபோகும் என்று ஜெயவர்தன கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.
இது இவ்வாறிருக்க, உள்ளூராட்சி தேர்தல்களுக்கான நியமனங்கள் தற்போது கோரப்பட்டுவரும் நிலையில் தென்னிலங்கை அரசியல் பரப்பிலும் வடக்கு கிழக்கில் தமிழர் அரசியல் பரப்பிலும் புதிய அணிசேருகைகள் இடம்பெறத்தொடங்கியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
எந்தவிதமான கொள்கை இணக்கப்பாடும் இல்லாத போதிலும் வெறுமனே அரசியல் அனுகூலத்துக்காக ‘சகவாழ்வை’ நடத்திவரும் பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டுச் சேர்ந்து உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருக்கின்றன. சில உள்ளூராட்சி சபைகளில் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் தனியாகவும் வேறு சில உள்ளூராட்சி சபைகளில் பொதுஜன பெரமுன தாமரை மொட்டு சின்னத்தில் தனியாகவும் ஏனைய உள்ளூராட்சி சபைகளில் இரு கட்சிகளும் இணைந்து பொதுச் சின்னத்திலும் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தங்களது கட்சியை மீளக்கட்டியெழுப்பி ‘ஒன்றாக எழுவது’ குறித்து சில மாதங்களுக்கு முன்னர் பேசிய ராஜபக்ஷர்கள் சில கூட்டங்களை நடத்திப் பார்த்துவிட்டு தங்களைப் பற்றிய மக்களின் மனநிலையை புரிந்து கொண்டவர்களாக இறுதியில் ஐக்கிய தேசிய கட்சியுடன் தேர்தல் கூட்டணியை அமைக்கிறார்கள். உண்மையில் ராஜபக்ஷர்களை விட்டால் கணக்கில் எடுக்கக்கூடிய வேறு எந்த கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டுச் சேர முன்வந்திருக்காது.
இதனிடையே, உள்ளூராட்சி தேர்தல்களில் தனது கட்சி போட்டியிடுவதாக இருந்தாலும், பிரசாரங்களில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க அறிவித்திருக்கிறார். இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றுமே கண்டிராத மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதியாக பதவியேற்ற விக்கிரமசிங்க, தனக்குரிய ஆணை, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தவிர தேர்தல்களுக்கு செல்வதல்ல என்று அவர் தனது முடிவுக்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்.
ஆனால், உண்மையில் உள்ளூராட்சி தேர்தல்களில் தனது கட்சியின் மிகக் குறைவான வெற்றி வாய்ப்புகள் பற்றிய ஜனாதிபதியின் மதிப்பீடே அவரை பிரசாரங்களில் இருந்து ஒதுங்கியிருக்கும் முடிவை எடுக்க வைத்திருக்கலாம் என்பதே அவதானிகள் பலரினதும் அபிப்பிராயமாக இருக்கிறது.
அதேவேளை, ஆளும் பொதுஜன பெரமுன கூட்டணியில் இருந்து வெளியேறி நாடாளுமன்றத்தில் சுயாதீனமான குழுக்களாக இயங்கும் நான்கு தரப்பினர் – சுதந்திர கட்சி, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தலைமயிலான உத்தர லங்கா சபாவ, டலஸ் அழகப்பெரும தலைமையிலான நிதஹஸ் லங்கா சபாவ, அநுரா பிரியதர்சன யாப்பா தலைமையிலான குழு – சுதந்திர மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கூட்டணியை அமைத்து ஹெலிகொப்டர் சின்னத்தில் போட்டியிடத் தீரமானித்துள்ளன.
ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஏற்கெனவே பல அமைப்புக்கள் குழுக்களுடன் சேர்ந்து ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியாக இயங்கிக்கொண்டிருக்கிறது. சஜித் பிரேமதாச மாத்திரமே கூட்டணி பற்றி பெரிதாக பேசாமல் இருக்கிறார்.
தமிழர் அரசியலில் புதிய கூட்டுக்கள்
தமிழர் அரசியல் பரப்பிலும் புதிய கூட்டணிகள் உருவாகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான இலங்கை தமிழரசு கட்சி உள்ளூராட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்ததைத் அடுத்து இறுதியாக எஞ்சியிருந்த ஏனைய அங்கத்துவக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கமும் (ரெலோ) தமிழீழ மக்கள் விடுதலை கழகமும் (புளொட் ) கூட்டமைப்பில் முன்னர் அங்கத்துவம் வகித்த கட்சிகளையும் வேறு சில குழுக்களையும் இணைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்திருக்கின்றன.
தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுவதற்கு தீர்மானித்தாலும், கூட்டமைப்பு அப்படியே இரு்கிறது. விலகிச்சென்றவர்கள் மீண்டும் இணைவதால் அது பலமடைகிறது என்று ரெலோவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடந்தவாரம் வவுனியாவில் செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறினார்.
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), ஸ்ரீகாந்தா – சிவாஜிலிங்கத்தின் தமிழ் தேசிய கட்சி ஆகியவையே புதிதாக இணையவிருப்பவை என்றும் சுழற்சி முறையிலான தலைமைத்துவத்துடன் இயங்கவிருக்கும் கூட்டமைப்பு பொதுச் சின்னத்தில் போட்டியிடும் என்றும் அடைக்கலநாதன் தெரிவித்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய முன்னணியையும் இணைந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.
இரு தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக இயங்கிவரும் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் கட்சிகள் வெளியேறியிருந்த போதிலும், பிரதான அங்கத்துவக் கட்சியான தமிழரசு கட்சி தேர்தல் ஒன்றில் தனியாகப் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பது இதுவே முதற்தடவையாகும்.
கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டுவிட்டு பிறகு உள்ளூராட்சி சபைகளின் நிருவாகத்தை சேர்ந்து அமைக்கலாம் என்பதே தனிவழி போவதற்கு எடுத்த முடிவுக்கு தமிழரசு கட்சி கற்பிக்கின்ற நியாயமாகும். ஆனால், ரெலோவும் சித்தார்த்தனின் புளொட்டும் தற்போது முன்னெடுக்கின்ற நடவடிக்கைளை பார்க்கும்போது மீண்டும் ஒன்றிணைந்து அவர்கள் செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் தோன்றும் என்று நம்புவதற்கில்லை.
உள்ளூராட்சி தேர்தல்களுக்கு நியமனப்பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துவருகின்ற போதிலும், தேர்தல்கள் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் குறித்த சந்தேகங்கள் தொடரவே செய்கின்றன. தேர்தல் நடைபெற்றால் மாத்திரமே அரசியல் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் இன்று இருக்கக்கூடிய செல்வாக்கின் இலட்சணம் வெளிச்சத்துக்கு வரும்.
அதேவேளை, தமிழர் அரசியல் பரப்பில் தற்போது இடம்பெறுகின்ற புதிய அணிசேருகைகள் எதிர்காலத் தேர்தல்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் சிதறடிக்கக்கூடிய ஆபத்து குறித்த அச்சம் தமிழர் நலன்களில் அக்கறைகொண்ட அவதானிகளினால் வெளிப்படுத்தப்படுகிறது.
இறுதியாக தென்னிலங்கை அரசியலில் இடம்பெறுகின்ற புதிய அணிசேருகைகளில் ஒரு விசித்திரமான அம்சத்தை அவதானிக்க முடிகிறது.
அதாவது, கடந்த பொதுத்தேர்தலில் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட கட்சியின் தலைவர் மக்கள் கிளர்ச்சியினால் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதியாக ஆட்சிசெய்கிறார். இரு கட்சிகளும் சேர்ந்து இப்போது தேர்தலில் போட்டியிடவிருக்கின்றன. மக்களின் வெறுப்புக்குள்ளான இவ்விரு தரப்பினரும் ‘ஒன்றாக எழுவார்களா’ அல்லது ஒன்றாக மூழ்குவார்களா?
வீரகத்தி தனபாலசிங்கம்