Photo, REUTERS/Dinuka Liyanawatte

எதிரணி அரசியல் கட்சிகள், பெருமளவு தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் கடந்தவாரம் கொழும்பில் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. ஆர்ப்பாட்டக் குழுக்களை விடவும் கட்டுறுதியான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. பாரிய பொலிஸ் படையணி ஆர்ப்பாட்டக்காரர்களின் பாதையை மறித்துநின்றது.

பொது வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்று பொலிஸார் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதைத் தொடர்ந்து மிகவும் குறுகிய முறையில் சட்டத்தை வியாக்கியானம் செய்யத்தொடங்கிய அரசாங்கம் வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் ஆர்ப்பாட்டங்களுக்கான இடங்களின் வீச்செல்லையை மட்டுப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருக்கிறது.

மக்கள் ஆர்ப்பாட்டப் பகுதிகளின் நிலைமை 6 மாதங்களுக்கு முன்பிருந்தததை விடவும் மிகவும் குறிப்பிடத்தக்களவுக்கு மாறியிருக்கிறது. அந்த நேரத்தில் போராட்ட இயக்கம் உச்சக்கட்டத்தை எட்டி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவை பதவிவிலக வைத்தது. வீதிகள் மாத்திரமல்ல, முழு நாடுமே போராட்டத்தில் இணைந்தது போன்று இருந்தது. தவறான ஆட்சி முறையினாலும் ஊழலினாலும் நாட்டை வங்குரோத்து அடையச்செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்பது அப்போது போராட்ட இயக்கத்தின் முக்கிய முழக்கமாக விளங்கியது. அரசாங்கத்தின் சில தலைவர்கள் கடற்படைத் தளங்களுக்குச் சென்று தங்கியிருப்பதாகவும் தங்களது படகுகளுக்கு எரிபொருட்கள் கிடைக்காததால் அந்தக் கடற்படடைத் தளங்களை மீனவர்கள் முற்றுகையிட  முயற்சிப்பதாகவும் கூட வதந்திகள் கிளம்பின.

அந்த நிலைவரங்களுக்கு முற்றிலும் வேறுபட்ட முறையில், கடந்த வாரம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளினதும் தொழிற்சங்கங்களினதும் தலைவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பு படைகளுடன் மோதுவதற்கு விரும்பவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறிச்செல்ல முடியாதவாறு பொலிஸார் தடைகளை போட்ட இடத்திலேயே போராட்டத்தை அந்தத் தலைவர்கள்  கைவிட்டனர். மாணவர்களும் தீவிரபோக்குடைய அரசியல் செயற்பாட்டாளர்களும் அவர்களை நோக்கி கூச்சலிட்டு கேலிசெய்ததைக் காணக்கூடியதாக இருந்தது. பொலிஸாரின் தடைகளை தாங்கள் தகர்த்து விழுத்தும்போது அந்தத் தலைவர்கள் தங்களுடன் இணைந்து நிற்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

வன்முறைக்கு வழிவகுக்கக்கூடிய மோதலை தவிர்த்ததன் மூலம் பிரதான போக்கு அரசியல் தலைவர்கள் அமைதியைப் பேணினர். ஆனால், நாட்டு மக்களை வறுமைப்படுத்திய அநீதியான செயல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மக்களுக்கு இருக்கும் உரிமையை பேணிக்காக்க அவர்கள் தவறிவிட்டார்கள்.

மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை தங்களது முதல் முன்னுரிமையாகக் கருதுபவர்கள் மக்கள் போராட்டங்களை அனுமதிக்க மறுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கைதுசெய்து தடுத்துவைத்து துன்புறுத்தும் அரசாங்கத்தின் செயலை கடுமையாக கண்டனம் செய்கின்றனர். கடந்தவார ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறக்கூடியதாக பொலிஸ் ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளை பொலிஸார் பயன்படுத்தக்கூடாது என்று வலியுறுத்திக்கேட்டருந்தது. அமைதிவழி போராட்டத்தை நடத்துவதற்கு அனுமதியைப் பெறுமாறு பொலிஸார் தங்களுக்கு அறிவுறுத்தியது குறித்து தொழிற்சங்கங்களும் மக்கள் அமைப்புக்களும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டுசென்றதை அடுத்தே அவ்வாறு அது வலியுறுத்தியது.

பொலிஸ் ஒழுங்குவிதிகளின் 77ஆவது பிரிவின்படி அமைதிவழி போராட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டியது. இலங்கையின் அரசியலமைப்பே நாட்டின் அதியுயர் சட்டம் என்றும் அடிப்படை உரிமைகளை மீறுவது பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரும் என்றும் ஆணைக்குழு எச்சரித்தது.

மறுபுறத்தில், இலங்கையின் 6 முக்கிய வர்த்தக சம்மேளனங்கள் கூட்டாக அறிக்கையொன்றை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்கள் பொருளாதாரத்தை நிலையுறுதிப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை பாதிக்கும் என்பதால் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தன. ஆர்ப்பாட்டங்களினால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளம்பரம் பொருளாதார மீட்சிக்காக குறிப்பாக சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை தடம்புரட்டிவிடும் என்று அந்த சம்மேளனங்கள் கூறின.

இலங்கை வர்த்தக சம்மேளனம், இலங்கை இளம் தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனம், இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம், இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம், கைத்தொழில் மற்றும் வர்த்தக பெண்கள் சம்மேளனம் ஆகியவையே கூட்டறிக்கையை வெளியிட்டவையாகும்.

அரசியல் உறுதிப்பாடே இன்றைய தேவை என்ற எடுத்துரைப்பின் மூலமாக தற்போதைக்கு பொதுப் பிரசார போராட்டத்தில் அரசாங்கம் வெற்றியடைகின்றது போன்று தெரிகிறது. வரிக்குறைப்புகள், இரசாயன பசளை வகைகளுக்கு தடை, பாரிய ஊழல் மோசடிகளை கண்டும் காணாமல் இருந்தமை போன்ற முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகளின் விளைவாக 70 சதவீதத்துக்கும் அதிகமான பணவீக்கமும் 100 வீதம் உணவுப் பணவீக்கமும் ஏற்பட்ட பின்புலத்தில் நோக்கும்போது பொருளாதார மீட்சிக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய தேவை மறுதலிக்கமுடியாத ஒரு உண்மையாகும்.

தற்போதைய சூழ்நிலையில் அரசியல் உறுதிப்பாட்டுக்கான தேவை குறித்த வர்த்தக சம்மேளனங்களின் வலியுறுத்தல் முற்றிலும் உண்மையே. வறியவர்களைப் பொறுத்தவரையிலும் சரி பணக்காரர்களைப் பொறுத்தவரையிலும் சரி பொருளாதார மீட்சி அவசியம். அதற்கு அரசியல் உறுதிப்பாடு முக்கியமானது. ஆனால், அரசியல் உறுதிப்பாடு தேவை என்பது ஒருபுறமிருக்க, சர்வதேச நாணய நிதியம் காலத்தை இழுத்தடிப்பது நிலைவரங்கள் நாம் நினைப்பது போன்று மேம்பாடு அடைவதாக இல்லை என்பதையே உணர்த்துகிறது.

தற்போதைய சஞ்சலமான நிலைமையை சிறப்பாக விளக்கக்கூடிய மாற்று கருத்தாடல் ஒன்று இருக்கிறது. ஆனால், அது தற்போது மௌனப்படுத்தப்பட்டிருக்கிறது. அறகலய போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கையொன்று எழுந்தது. தேசிய பொருளாதாரத்தை வங்குரோத்து அடையச்செய்தவர்கள் தண்டிக்கப்பட்டு, அவர்கள் சூறையாடிய சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு தேசிய திறைசேரியிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று இளம் போராட்டக்காரர்கள் கோரினார்கள். ஆனால், போராட்டங்கள் அடக்கியொடுக்கப்பட்டு அதன் தலைவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில் பொறுப்புக்கூறல் பற்றிய பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகளோ அல்லது வர்த்தக சம்மேளனங்களோ இப்போது முக்கியத்துவம் கொடுப்பதாக இல்லை. ஊழலுடன் வாழவேண்டிய தேவை ஏதோ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று போல நிலைமை இருக்கும் துரதிர்ஷ்டம்.

அந்தப் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளை இப்போது அக்கறைகொண்ட சிவில் அமைப்புக்களும் தனிநபர்களும் நீதிமன்றங்களை நாடி கையாளுவதையே காணக்கூடியதாக இருக்கிறது. ஒரு வழக்கை விசாரணை செய்வதற்கு ஏற்றுக்கொண்டிருக்கும் உயர்நீதிமன்றம் அரசாங்க திணைக்களங்கள் அறிக்கைகளையும் கேள்விகளுக்கு பதில்களையும் தரவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

போராட்ட இயக்கத்தை ஒடுக்கியதன் மூலமும் எரிபொருள் நிலையங்களின் முன்பாக வாகன வரிசைகளை இல்லாமல் செய்ததன் மூலமும் வழமைநிலை ஏற்பட்டதைப் போன்ற ஒரு வெளித்தோற்றத்தைக் காண்பிப்பதில் அரசாங்கம் கண்டிருக்கும் வெற்றி மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார இடர்பாடுகளை மறைக்கிறது. போராட்டங்கள் அடங்கிப்போன பிறகு அநுராதபுரத்திலும் குருநாகலிலும் சமூகத்தலைவர்களுடன் நடத்திய சந்திப்புகள் வழமைநிலைத் தோற்றம் ஒரு ஏமாற்று என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. ஆளும் கட்சியின் கோட்டைகளாக விளங்கும் இந்த இரு  பகுதிகளிலும் அரசாங்கத்தின் மீது கடுமையான அதிருப்தி நிலவுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தாங்கள் எதிர்நோக்குகின்ற பொருளாதார இடர்பாடுகள் குறித்து மக்கள் தெரிவித்த கருத்துகள், என்னதான் வர்த்தக சம்மேளனங்களின் நல்லெண்ணமும் புரிந்துணர்வு இருந்தாலும், அரசாங்கத்துக்கு தீமைக்கான முன்னறிகுறிகளாகவே தெரிகின்றன.

தங்கள் வயல்களுக்குத் தேவையான பசளையில் மூன்றில் ஒரு பங்கே கிடைக்கிறது என்று விவசாயிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தலைவர்கள் கூறுகிறார்கள். விவசாயத்துக்கு தேவையான உள்ளீடுகளின் விலைகள் கடுமையாக அதிகரித்துவிட்ட நிலையில் தங்களின் செலவும் விளைச்சலின் பெறுமதியும் கூட சமமானதாக அமையக்கூடிய நிலை இல்லை என்று அவர்கள் கணிப்பிட்டுகிறார்கள்.

ஞாயிறு பாடசாலை சிறுவர்கள் காலையில் மயங்கி விழுகிறார்கள். அவர்கள் காலையில் சாப்பிடுவதில்லை என்று ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் கூறுகிறார்கள். முன்னர் அவர்கள் சாப்பிட்ட பிஸ்கட்டுகளைக் கூட வாங்குவது இப்போது கட்டுப்படியாகாமல் போய்விட்டது. பிஸ்கட் கம்பனிகள் விலைகளை மூன்று, நான்கு மடங்கால் அதிகரித்துவிட்டன. இந்தப் பிரச்சினைகள் ஆர்ப்பாட்டங்களைப் போன்று வெளியில் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், சமுதாயத்தின் அடிமட்டத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவு இல்லை என்பதை அவை உறுதிசெய்கின்றன.

பிரதான போக்கு எதிரணிக் கட்சிகளினால் நடத்தப்படுகின்ற போராட்டங்கள் ஜனநாயகத்தின் ஒரு அடிப்படை பாகமாகும். அறகலயவின் முதற்கட்டம் இந்த தந்திரோபாயத்தின் ஒரு தெளிவான உதாரணமாகும். அது மக்களை ஒன்றிணைத்தது. மக்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதற்கான ஒரு வழிவகையாக அது அமைந்தது. அது இலங்கை மக்களினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்த்தது.

மறுபுறத்தில், பிரச்சினைகளை அடக்குவது பின்னர் ஒரு கட்டத்தில் அவை வெடிப்பதற்கே வழிவகுக்கும். பிரச்சினைகளைக் கையாண்டு உணர்ச்சியும் பதற்றமும் பெருகுவதைத் தடுப்பது நாட்டின் உறுதிப்பாட்டுக்கும் நிலைபேறான தன்மைக்கும் நல்லது. போராட்டக்காரர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பாதுகாப்புப் படைகள் முட்டுக்கொடுத்து சீரில்லாத முறையில் சட்டங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற ஆபத்தான நிலையே உருவாகும்.

கலாநிதி ஜெகான் பெரேரா