Photo, REUTERS/ The Telegraph
மக்கள் போராட்ங்களைக் கையாளுவதில் அரசாங்கத்தின் அடங்குமுறைக் கொள்கைக்கு ஒரு தடுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போடுகின்றார் போன்று தெரிகிறது. ஆனால், இதை அவர் எப்போதோ செய்திருக்கவேண்டும். கொழும்பில் முக்கிய பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திடுவதற்கு அவர் முதலில் எடுத்த தீர்மானம் அரசாங்கத்தின் சொந்த மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட மனித உரிமைகள் அமைப்புக்களின் கடுமையான கண்டனத்துக்குள்ளானது. பாதுகாப்புத் துறையினால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகின்ற இந்தத் தீர்மானம் வர்த்தக மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகளுக்குப் பாதகமாக அமையும் என்று வர்த்தக சமூகமும் முறைப்பாடு செய்தது.
உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனத்தின் ஐயப்பாடான சட்ட முகாந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அது ரத்துச் செய்யப்பட்டமையை விளங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. உயர் பாதுகாப்பு வலயங்கள் உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழேயே பிரகடனம் செய்யப்படவிருந்தன. அறிவிக்கப்பட்ட புதிய ஒழுங்கு விதிகளுக்கும் அந்த சட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
போர்க் காலப்பகுதியில் வடக்கிலும் கிழக்கிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட உயர் பாதுகாப்பு வலயக் கோட்பாடு முன்கூட்டியே விசேட அனுமதியைப் பெறாமல் வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதைக்கூட பெரும் சிக்லானதாக்கியிருக்கும். அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் உரிமைகள் மீறப்படுவதாக முறையிட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்படவிருக்கும் இலங்கை மீதான தீர்மானத்தையும் ஜனாதிபதி கவனத்தில் எடுத்திருக்கக்கூடும்.
அந்தத் தீர்மானத்துக்கு 26 நாடுகள் இணை அனுசரணை வழங்குவதற்கு இணங்கியிருந்தன. அவற்றில் பத்து நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போது உறுப்புரிமையைக் கொண்டிருக்கின்றன. மனித உரிமைகள் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் பார்வையில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறது. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் நாட்டுக்கு இப்போது அவசியமாக தேவைப்படுகின்ற சர்வதேச அனுதாபத்தையும் ஆதரவையும் குறைத்துவிடலாம்.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கடந்த கால செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், மக்கள் கிளர்ச்சியை கையாளுவதில் மிகவும் வேறுபட்ட முறையில் நுட்பமான அணுகுமுறையைக் கையாளுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதனால் போராட்ட இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாதுகாப்புப் படைகளை பயன்படுத்துவதில் அவர் காட்டிய நாட்டம் அதிர்ச்சியைத் தந்தது. உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனத்தை ரத்துச் செய்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி போராட்ட இயக்கத்தை கையாளுவதில் அரசாங்கம் கடைப்பிடித்துவரும் கொள்கையையும் மாற்றியமைப்பது குறித்து சிந்திக்கவேண்டியது அவசியமாகும். போராட்ட இயக்கம் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் வீதிகளில் குழப்பநிலை மூலமாக பொருளாதாரத்தை மேலும் நிலைகுலையச் செய்துவிடும் என்ற நியாயப்பாட்டின் அடிப்படையில் அதை ஒடுக்குவதிலேயே இதுவரையான அரசாங்கம் அதன் கவனத்தைக் குவித்தது.
ஆனால், இலங்கையின் ஜனநாயக முறைமையில் ஒடுக்குமுறைக் கொள்கை பயன்தருவது சாத்தியமில்லை. தேர்தல்களுக்குப் போவதற்கு தயங்குகின்ற ஒரு அரசாங்கம் தன்னைப் பாதுகாக்க பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தக்கூடாது. இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்ட ஒன்றாகவே கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனத்தை வாபஸ் பெற்றுக்கொண்ட ஜனாதிபதியின் செயலை நோக்கலாம்.
மன்னிப்பு பிரகடனம்
இலங்கைக்கு பெருமளவு சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கு பேச்சுவார்த்தைகளை நடத்தும் பொறுப்பை திறமையாகக் கையாளக்கூடியவர் ஜனாதிபதி விக்கிரமசிங்க என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வெளிநாடுகளுக்கான தனது அண்மைய விஜயங்களின்போது முக்கியமான உலகத் தலைவர்கைளச் சந்தித்துப் பேசி தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஜனாதிபதி பெற்றிருக்கிறார். ஆனால், இலங்கை மக்களின் அங்கீகாரத்தையும் அவர் பெறவேண்டியது முக்கியமானதாகும். தனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை அவர் வென்றெடுக்கவேண்டிய தேவை இருக்கிறது.
நாடாளுமன்றத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து தனது நிலையை வலுப்படுத்திக்கொண்ட ஜனாதிபதி போராட்ட இயக்கம் உருவெடுத்ததற்கான அடிப்படைக் காரணிகளைக் கையாளுவதில் முனைப்புடன் செயற்படவேண்டுமேயன்றி, அதன் வெளிப்பாடுகளை அழிப்பதில் தீவிரம் காட்டலாகாது. பொருளாதார நெருக்கடி சனத்தொகையில் வறிய பிரிவினர் மீது ஏற்படுத்தியிருக்கும் படுமோசமான தாக்கத்தை நேரடியாகக் கையாளுவதற்கு அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பதை நாட்டு மக்களுக்கு கூறவேண்டியது அவசியமாகும்.
போராட்ட இயக்கத்தில் பங்கேற்றதற்காக கைதுசெய்யப்பட்டவர்கள் சட்டத்தின் கொடுங்கரங்களினால் வதைக்கப்படக்கூடாது என்ற அபிப்பிராயம் மக்கள் மத்தியில் பரந்தளவில் இருக்கிறது. தற்போது ஜெனீவாவிலும் இலங்கையிலும் அரசாங்கத்தின் பேச்சாளர்கள் நாடு எதிர்நோக்குகின்ற பிரச்சினைளின் கடுமையை நிராகரிக்கின்றார்கள். போர்க் காலப்பகுதியில் இடம்பெற்ற அத்துமீறல்களை அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் ஜெனீவாவிலும் உள்நாட்டிலும் நிராகரித்தன.
இனத்துவ சமூகங்களை ஒன்றுடன் மற்றதை மோதவிட்ட இனப்பிரச்சினையின் தன்மையின் விளைவாக போர்கால அத்துமீறல்களை நிராகரித்த அரசாங்கங்களின் போக்கை சனத்தொகையில் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனோபாவத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், பொருளாதார நெருக்கடி வறியவர்கள் மீது ஏற்படுத்துகின்ற தாக்கத்தை நிராகரிப்பது இலங்கையில் எந்த சமூகத்திடம் இருந்தும் அரசாங்கத்துக்கு ஆதரவை கிடைக்கச்செய்யாது; அறகலயவின் உச்சக்கட்டத்தில் நடந்தததைப் போன்று பெரும்பான்மையான மக்களை அரசாங்கத்துக்கு எதிராகவே திருப்பிவிடும்.
போராட்ட இயக்கத்தில் பங்கேற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டவர்கள் சகலருக்கும் பொது மன்னிப்பை பிரகடனம் செய்வதே அரசியல் முதிர்ச்சியும் விவேகமும் கொண்ட ஒரு தலைவருக்கு உகந்த செயலாக இருக்கும். இந்தக் கைதுகள் தொடர்பிலான சர்ச்சை தேசிய, சர்வதேச மட்டங்களில் மனித உரிமைகள் அமைப்புக்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியிருக்கும் அக்கறையை கவனத்தில் எடுத்து இத்தகைய ஒரு மன்னிப்பை ஜனாதிபதி அறிவிக்கவேண்டும்.
போராட்ட இயக்கத்தில் பங்கேற்ற சிலர் வன்முறைகளில் ஈடுபட்டார்கள் அல்லது அந்த வன்முறைகளை ஆதரித்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களை கைது செய்யும் தற்போதைய நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. பெறுமதியான கலை வேலைப்பாடுகளையும் குடும்ப நூலகத்தையும் கொண்டிருந்த ஜனாதிபதியின் சொந்த பரம்பரை வீடு உட்பட அரசாங்க அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாகப்பட்ட சம்பவங்களில் சம்பந்தப்பட்டதாக ஏனையவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சிலர் நீதிமன்றங்களின் முன் குற்றஞ்சாட்டப்படாமலேயே கைது செய்யப்படுகிறார்கள்.
பெருந்தன்மை, மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது, நேர்மை ஆகியவை சமுதாயத்தை பிணைக்கின்ற சக்திமிகு பண்புகளாகும். உள்நாட்டுப்போரின்போதும் ஜனதா விமுக்தி பெரமுன கிளர்ச்சியின்போதும் தங்கள் சொந்த வீடுகளை இழந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தனது பெருந்தன்மையை வெளிக்காட்டுவதற்கு ஜனாதிபதிக்கு இது ஒரு சந்தர்ப்பமாகும்.
தங்கள் வீடுகளை இழந்த அரசாங்க உறுப்பினர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிடுகிறது. அரசாங்கத்தின் தவறுகளினால் உயிர்களை இழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கும் – குறிப்பாக எரிபொருட்களை பெறுவதற்காக நீண்ட வரிசைகளில் இரவுபகலாக காத்திருந்து மரணமடைந்தவர்கள் மற்றும் தரம் குறைந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததனால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு – இழப்பீடுகளை வழங்கவேண்டியது அவசியமாகும்.
உண்மையை ஏற்றுக்கொள்தல்
சிறுவர்களைப் பாதிக்கின்ற சத்துணவுப் பற்றாக்குறை மற்றும் குறை வளர்ச்சி தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களினால் செய்யப்பட்ட ஆய்வுகளின் உண்மைத்தன்மையை அரசாங்கம் தற்போது நிராகரிக்கிறது. கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கூட, எரிபொருள் கொள்வனவு மற்றும் பெரிய ஒப்பந்தங்களில் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்ற ஊழல்களையும் அவர்கள் நிராகரிக்கிறார்கள். இத்தகைய போக்கு பிரச்சினைகளைத் தணிப்பதற்கு கிஞ்சித்தும் உதவாது. நியாயமான பெற்றோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மின்சார விநியோகங்களை சுட்டிக்காட்டி வழமையான நிலை ஏற்படுவது போன்ற எண்ணத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால், உயர்ந்த விலைகளில் வாங்கக்கூடியவர்களுக்கே பாவனைப் பொருட்கள் கிடைக்கின்றன.
ஏற்றத்தாழ்வான விநியோகத்தின் சுமையை அரசாங்கம் நிராகரிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. உறுதியான அரசியல் சூழ்நிலையில் ஆட்சி செய்யவேண்டுமானால் இந்த மக்களின் ஆதரவு அரசாங்கத்துக்குத் தேவை.
பிரச்சினைகள் இல்லை என்று நிராகரிப்பதற்குப் பதிலாக பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இது நாட்டுக்குள் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கும் சர்வதேச ரீதியாக விவாதிக்கப்படுகின்ற பிரச்சினைகளுக்கும் பொருந்தும். நிராகரிப்புகள் ஜெனீவாவில் எடுபடவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதன் காரணத்தினால்தான் ஒன்பது தீர்மானங்களை அரசாங்கம் எதிர்நோக்கவேண்டியேற்பட்டது. ஒவ்வொரு தீர்மானமும் படிப்படியாக கடுமையானவையாகி கையாளுவதற்கு சிக்கலானவையாக மாறின.
இவ்வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும் தீர்மானம் ஐ.நாவின் சான்றுகள் சேகரிக்கும் பொறிமுறைக்கு மேலும் கூடுதல் ஆதரவைக் கோருகிறது. இலங்கையின் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்களினால் இழைக்கப்பட்டிருக்கக்கூடிய குற்றங்களை உலகின் எந்தப் பகுதியிலும் நாடுகள் விசாரணை செய்வதற்கு சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்துவதற்கு ஆதரவை வழங்குவதற்கே அந்த பொறிமுறை அமைக்கப்பட்டது.
சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அரசாங்கம் இயன்றவரை பயன்படுத்தவேண்டும். மனித உரிமைகள் பேரவையில் தீர்மான வரைவு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் சர்வதேச சமூகத்தின் பார்வை இலங்கை மீது குவிந்திருக்கிறது. வியாழனன்று வாக்கெடுப்புக்கு விடப்படவிருக்கும் தீர்மான வரைவில் மாற்றங்களைச் செய்வதற்கு காலம் கடந்துவிட்டது என்கிற அதேவேளை, தீர்மானத்தை முன்னெடுக்கின்ற நாடுகளின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்கு இன்னமும் கூட அரசாங்கம் முயற்சிக்கமுடியும்.
போராட்ட இயக்கத்தில் பங்கேற்றதற்காக கைதுசெய்யப்பட்டிருப்பவர்களுக்கு மன்னிப்பை அளிப்பதாக அறிவித்தால் அதனால் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சுதந்திரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் அக்கறைகளுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயாராயிருக்கிறது என்ற சமிக்ஞையை கொடுக்கமுடியும். கடந்த கால உரிமை மீறல்கள், அவற்றுக்கான கவலை தெரிவிப்பு மற்றும் பொறுப்புக்கூறலை அங்கீகரிக்கின்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றின் அங்கமாக இந்த மன்னிப்புக்கான சாத்தியம் குறித்து ஆராயமுடியும்.
கலாநிதி ஜெகான் பெரேரா