Photo, Buddhika Weerasinghe/Getty Images, BLOOMBERG
இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்தவாரமும் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீண்டதொரு உரையை நிகழ்த்தினார். தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை விளக்கிக்கூறிய அவர் எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பைக் கோரினார்.
பொருளாதாரம் முற்றுமுழுதாக வீழ்ச்சி கண்டுவிட்டது. அதை மீட்டெடுப்பது, அதுவும் வெளிநாட்டுச் செலாவணி ஆபத்தான அளவுக்கு கீழ்மட்டத்தில் இருக்கும் நிலையில் சுலபமான காரியம் அல்ல. நெருக்கடிக்கு மத்தியிலும் மக்கள் பசியில் வாடாதிருப்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறிய அவர் கொழும்பு வந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவை எதிரணி அரசியல் கட்சிகளுடன் பேசுமாறு தான் கேட்டுக்கொண்டதாகவும் முதலில் செய்யவேண்டியது நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு அதனிடமிருந்து கடனுதவியைப் பெறுவதேயாகும் என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற பகிஷ்கரிப்பைக் கைவிட்டு முக்கியமான சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பைத் தருமாறு எதிரணி கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் பொருளாதாரம் உறுதிநிலைப்படுத்தப்பட்டதும் நாட்டு மக்கள் புதிய பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து புதிய அரசாங்கத்துக்கு ஆணையை வழங்கலாம் என்றும் சொன்னார்.
பிரதமரின் உரை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துக்கு இன்றைய நெருக்கடியான கட்டத்தில் காலஅவகாசத்தை வேண்டுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால், கடந்தவாரம் எதிரணி கட்சிகள் அரசாங்கம் தொடர்பில் எடுத்திருக்கும் நிலைப்பாடுகள் அதற்கு முற்றிலும் முரணாக அமைந்திருந்ததையே காணக்கூடியதாக இருந்தது.
பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய கோட்டபாய – விக்கிரமசிங்க அரசாங்கம் அரசியல், பொருளாதார, சமூக உறுதிப்பாட்டை மீளநிலைநிறுத்துவதற்காக அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டியதுடன் அதனால் உடனடியாக பதவி விலகி நாடாளுமன்றம் புதிய ஜனாதிபதியையும் பிரதமரையும் சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் ஒன்றின் கீழ் அமைச்சரவையொன்றையும் தெரிவுசெய்ய வழிவிடவேண்டும் என்று கேட்டிருக்கிறது.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றிவிட்டது என்று கூறிய அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல இலங்கை அதன் தற்போதைய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நிதி நிறுவனங்களும் வெளிநாடுகளும் உதவப்போவதில்லை என்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தமுடியும் என்பதும் சர்வதேச நிதி நிறுவனங்களினதும் நாடுகளினதும் நம்பிக்கையைப் பெறமுடியும் என்பதுமே கிரியெல்லவின் நிலைப்பாடு.
சமகி ஜன பலவேகயவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச புதிதாக பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கெனவே முன்வைத்திருந்தார். ஆனால், கிரியெல்ல முன்வைத்த சர்வகட்சி இடைக்கால அரசாங்க கோரிக்கை குறித்து எத்தகைய அபிப்பிராயத்தை பிரேமதாச கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கடந்த மாத முற்பகுதியில் பிரதமர் பொறுப்பை ஏற்கவருமாறு கேட்டபோது பிரேமதாச காட்டிய தயக்கத்தினால் அவர் சவால்களுக்கு முகங்கொடுக்க துணிச்சல் இல்லாதவர் என்ற ஒரு படிமம் அரசியல் அரங்கில் ஏற்பட்டிருந்தது. அதை மாற்றியமைக்க இப்போது சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க ஒத்துழைக்கும் மனநிலையில் அவர் இருக்கிறாரோ தெரியவில்லை. அல்லாவிட்டால் கிரியெல்ல அத்தகையதொரு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கமாட்டார் என நம்பலாம்.
அடுத்ததாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டபாய – விக்கிமசிங்க அரசாங்கம் பதவியில் இருக்கும்வரை சர்வதேச நிதி நிறுவனங்களும் உதவி வழங்கும் நாடுகளும் இலங்கையை பொருளாதார – அரசியல் நெருக்கடியில் இருந்து மீட்க முன்வரப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.
சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் கடந்தவாரம் செய்தியாளர் மகாநாட்டில் உரையாற்றிய சிறிசேன இன்றைய அரசாங்கம் உடனடியாக பதவி விலகி அங்கம் வகிக்கும் கட்சிகளை உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கமொன்றை 15 பேர் கொண்ட அமைச்சரவையுடன் அமைக்க வழிவிடுவதே நெருக்கடியில் இருந்து மீள ஒரே வழி என்று வலியுறுத்தினார். அத்துடன், 6 மாதகாலத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கூறிய அவர் 2015 – 19 அரசாங்கத்தில் தனக்கும் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நிலவியதைப் போன்ற போட்டி தற்போது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் மூண்டிருப்பதாகவும் அது நாட்டு நிலைவரத்தை மேலும் மோசமாக்கும் ஆபத்தைக் கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)வைப் பொறுத்தவரை நாட்டை மீட்டெடுக்க குறிப்பிட்ட ஒரு காலகட்டத்துக்கு சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் ஒன்றில் பங்கேற்பதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது. ஆனால் 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் அது நிபந்தனை விதிக்கிறது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலகவேண்டும் என்று முன்னர் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்த ஜே.வி.பி. தற்போது நிலைப்பாட்டை தளர்த்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
சுதந்திர இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் கண்டிராத படுமோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகளுக்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் பரவலாக நிலவுகிறது. அதனால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வு எதிரணி கட்சிகளிடம் இல்லாமல் இல்லை. ஆனால், அவை தற்போதைய அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தயாரில்லை. சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் என்ற கோரிக்கை அதன் விளைவாகவே எழுகிறது.
நாடாளுமன்றத்தில் சுயாதீன குழுவாக இயங்கும் 53 பேரைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிருப்தியாளர்கள் குழுவும் சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. அத்தகைய ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு தாங்கள் முதலில் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை என்று அந்தக் குழுவின் முக்கியமானவர்களில் ஒருவரான பொதுநிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறியிருக்கிறார். தாங்கள் அமைச்சர் பதவிகளை எதிர்பார்க்கவில்லையென்றும் அதனால் தான் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு பிரேமதாசவின் சமகி ஜன பலவேகயவை அழைத்ததாகவும் கடந்த வாரம் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் தமிழ் தேசிய கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் தான் கதைத்ததாகவும் அவர் அதற்கு சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை தனது கட்சி வெளியில் இருந்து ஆதரிக்கும் என்று பதிலளித்ததாகவும் கூட யாப்பா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் விக்கிரமசிங்க பதவியேற்ற பிறகு அமைக்கப்பட்ட அமைச்சரவையை ஒரு சர்வகட்சி அமைச்சரவையாக காட்டும் முயற்சியிலேயே சமகி ஜன பலவேகயவையும் சுதந்திர கட்சியையும் சேர்ந்த சிலர் கவர்ந்திழுக்கப்பட்டனர். ஆனால், அது தனிநபர்கள் தங்கள் கட்சிகளைக் கைவிட்டு அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொண்ட செயலாகப் போனதே தவிர சர்வகட்சி அரசாங்க தோற்றப்பாட்டைத் தரவில்லை. இதனிடையே ஜனாதிபதியை சந்திக்கும் ஆளும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கேட்கவும் தவறுவதில்லை.
எதிரணி கட்சிகளைப் பொறுத்தவரை கோட்டபாய – விக்கிரமசிங்க அரசாங்கம் தோல்வி கண்டுவிட்டது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன. அதனால் அவர்கள் ஒத்துழைப்புக் கோரி பிரதமர் விடுக்கும் அழைப்புக்கு செவிசாய்க்கும் மனநிலையில் இல்லை என்றே தெரிகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அவசியமான அரசியல் உறுதிப்பாடு கானல் நீராகவே இருக்கிறது. எதிரணியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு புதிதாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி முன்வருவார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ராஜபக்ஷர்களைப் பொறுத்தவரை அரசியலில் இருந்து முற்றாகவே ஓரங்கட்டப்படாதிருப்பதை உறுதிசெய்வதற்கான வியூகங்களையே அவர்கள் வகுக்கிறார்கள் என்று தெரிகிறது.
எது எவ்வாறிருந்தாலும், தற்போதைய நாடாளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களின் வகைதொகையைப் பார்க்கும்போது உருப்படியான அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. ஏனென்றால், நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியால் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் கூட கட்சி அரசியலை முன்னெடுப்பதில்தான் தலைவர்கள் எனப்படுவோர் அக்கறை காட்டுகிறார்கள். அதனால் உண்மையான அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்க மக்களின் புதிய ஆணையுடன் கூடிய நாடாளுமன்றம் ஒன்று தேவை.
ஆனால், தற்போதைய நெருக்கடி நிலையில் தேர்தல் ஒன்றுக்கு நாட்டினால் முகங்கொடுக்க முடியாது. அடுத்த மார்ச் மாதத்துக்கு பிறகு தேர்தல் ஒன்றுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டபாய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவிடம் அண்மையில் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், மார்ச் அளவில் நாடளாவிய தேர்தல் ஒன்றை நடத்தக்கூடிய அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் தணிவு ஏற்படக்கூடியதாக இருக்குமா என்பது முக்கியமான கேள்வி. பிரதமர் விக்கிரமசிங்க பொருளாதார நிலைவரம் குறித்து செய்கின்ற அறிவிப்புக்கள் சில வருடங்களுக்கு நாடு பாரிய நெருக்கடிக்குள் மூழ்கியிருக்கப்போகிறது என்பதையே உணர்த்தி நிற்கின்றன. அதனால் பொருளாதார நெருக்கடியும் அரசியல் உறுதிப்பாடின்மையும் தொடருவதற்கான அறிகுறிகளே காணப்படுகின்றன.
வீரகத்தி தனபாலசிங்கம்