Photo, AP photo, Eranga Jayawardena, Baynews9

2008 டிசம்பர் மாதம் சர்வதேச மனித உரிமை தினத்தை கண்டி மனித உரிமைகள் அலுவலகத்தினால்  (HROK)க் கொண்டாடும் நோக்கில் மனித உரிமை சிறப்பு விருது வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டது. அன்று விருதினைப் பெற்றுக்கொண்ட இரு மருத்துவர்கள், மதகுரு, அருட் சகோதரி, இராணுவ அதிகாரி, பொலிஸ் அதிகாரி, பாலியல் வல்லுறவுக்கோ அல்லது சித்திரவதைக்கோ உள்ளாகி உயிர்பிழைத்த நபர்கள் மற்றும் சித்திரவதைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட நபர்களின் அன்னையர், மனைவியருடன் விருது பெறுவோனாக நானும் இருந்தேன். அவர்களுள் பெரும்பான்மையானோர் பெண்களாவர். அன்று முதல் HROKஇனால் மனித உரிமைகள் சிறப்பு விருது வழங்கும் விழா மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடும் மரபு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 2008ஆம் ஆண்டின் பின்னர் இவ்வாறு HROKஇனால் நடாத்தப்பட்ட மனித உரிமைகள் சிறப்பு விருது விழாக்களில் விருது பெறுவோர்களுள் சிறைச்சாலை அதிகாரி, ஊடகவியலாளர், சட்டத்தரணி, மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாலியல் வல்லுறவு அல்லது சித்திரவதைக்கு உள்ளாகி உயிர் பிழைத்த நபர்கள் ஆகியோருடன் 1980களின் இறுதிப்பகுதியிலிருந்து காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களும் உள்ளடங்குகின்றனர். விருது பெறுவோர்களில் இந்நாட்டின் பல்வேறு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆண்களும் பெண்களும் உள்ளடங்குவர்.

2008ஆம் ஆண்டிலிருந்து HROKஇனால் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு மாத்திரமன்றி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வேறு மனித உரிமைகள் நிகழ்ச்சிகளிலும் நான் ஏறக்குறைய இடைவிடாது பங்குபற்றியுள்ளேன்.

அதன் பணிப்பாளரிடமிருந்தும், சிறியதாக இருந்தாலும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் வினைத்திறன் மிக்க பணிக்குழாமிடமிருந்தும் மனித உரிமைகள் தொடர்பிலான எனது செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் குறிப்பிடத்தக்க அளவில் ஊக்கத்தையும் துணிவையும் நான் பெற்றிருக்கிறேன். குறிப்பாக அவர்களது முற்றுமுழுதான அணுகல் மற்றும் உரிமைகள் மீறப்பட்ட நபர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்பத்தவர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் தொடர்பிலான அவர்களது மனிதநேயமும், அன்பும், கருணையும் பொருந்திய மனப்பாங்கு உட்பட அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட விடயங்கள் ஏராளம். அவர்கள் மேற்கொள்ளும் அனைத்துச் செயற்பாடுகளிலும் சிறைக்கைதிகள், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நபர்கள், அவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து மெற்கொள்ளும் செயற்பாடுகள் மிகவும் குறிப்பிடத்தக்க பணிகளாகும்.

இந்த ஆண்டிலும் டிசம்பர் 11ஆம் திகதி கண்டியில் நடைபெறவிருந்த மேற்கூறிய வருடாந்த சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வில் பங்குபற்றுவதற்கு நான் உத்தேசித்திருந்தேன். பல இளம் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் என்னுடன் அவ்விழாவில் பங்குபற்றுவதற்கு திட்டமிட்டிருந்தனர். இந்தத் தடவை அதன் தொனிப்பொருளான “சிறைக்கைதிகளது கௌரவம் மற்றும் மனிதாபிமான நிலைமைகளுக்காக அவர்களது உரிமைகளை உறுதிசெய்க.” இது எங்களை ஈர்த்தது மட்டுமன்றி எமக்கு நன்கு பரிச்சயமானதாகவும் இருந்தது. முன்னாள் சிறைக்கைதிகள், சிறைக்கைதிகளின் குடும்பங்கள், சமயத்தலைவர்கள், சட்டத்தரணிகள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள், பொலிஸ் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இவ்வாண்டுக்கான விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். நியாயமான வழக்கு விசாரணையையும் சட்டவாட்சியையும் மேம்படுத்துவதில் ஆற்றிய பங்களிப்புக்கு அங்கீகாரமும் பாராட்டும் வழங்குமுகமாக சிறைக்கைதிகளின் குடும்பங்களுக்கும் விருது வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் இவ்வாண்டுக்கான விழாவில் பங்குபற்றுவதற்கு நான் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன்.

நீதிமன்ற உத்தரவும் அதன் தாக்கமும் 

கண்டி பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க கண்டி மேலதிக நீதவான் மேற்படி விழாவை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக நான் கேள்விப்பட்ட செய்தியானது என்னை வியப்பிலாழ்த்தியதோடு நான் மிகுந்த ஏமாற்றத்துக்கும் உள்ளானேன். அந்த நீதிமன்ற உத்தரவு குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 106(1) பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்டிருந்ததோடு, அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: “நீதவான் ஒருவரது அபிப்பிராயத்தின்படி, உடனடியாக தடைசெய்தல் அல்லது அவசர மாற்று நடவடிக்கை மேற்கொள்ளல் பொருத்தமாகவுள்ள சந்தர்ப்பங்களில் குறித்தவொரு செயலிலிருந்து தவிர்ந்துகொள்ளுமாறு அல்லது தமது வசமுள்ள அல்லது தம்மால் முகாமை செய்யப்படும் ஒரு சொத்து தொடர்பில் ஏதேனுமொரு நடவடிக்கை எடுக்குமாறு ஒரு நபருக்கு உத்தரவிடுவதன் மூலம் சட்டரீதியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நபரொருவருக்கு ஏற்படும் தடையை, பிரச்சினையை அல்லது சேதத்தை அல்லது அவ்வாறானதொன்று நிகழக்கூடிய அபாயகரமான நிலைமை அல்லது மனித உயிருக்கு, ஆரோக்கியத்துக்கு அல்லது பாதுகாப்புக்கு ஏற்படத்தக்க ஆபத்து அல்லது கிளர்ச்சி அல்லது குழப்பநிலையைத் தடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றோ அல்லது அதனைத் தடுப்பதற்கு அந்த உத்தரவு ஏதுவாகும் என்றோ நீதவான் கருதினால், அந்த செயலிலிருந்து தவிர்ந்துகொள்ளுமாறு நீதவான் குறித்த நபருக்கு அவ்வாறான உத்தரவொன்றைப் பிறப்பிக்க இயலும்.”

எவ்வாறாயினும், டிசம்பர் 9ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது யாதெனில், பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்பதாகும். அதற்கடுத்த தினமான டிசம்பர் 10ஆம் திகதி HROK அமைப்பினால் நீதவான் நீதிமன்றத்துக்கு தெளிவுபடுத்தப்பட்டதோடு, அதன் பின்னர் மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருடன் (SDIG) இடம்பெற்ற சந்திப்பில் விழாவின் தன்மை மற்றும் பின்னணி குறித்த விடயங்கள் விரிவாக முன்வைக்கப்பட்டன. இருப்பினும், நீதிமன்ற உத்தரவு நீக்கப்படாததோடு, துரதிர்ஷ்டவசமாக விழாவை நடாத்த முடியவில்லை. கண்டி மனித உரிமைகள் அலுவலகத்தின் (HROK) கருத்தின்படி, பொலிஸாரின் சந்தேகம் அல்லது புரிதலானது விழா சட்டவிரோதமான ஒன்றாக இல்லாதபோதிலும் விழாவை நடத்துவது தொடர்பில் உவப்பில்லாத சில வெளி நபர்கள் இடைஞ்சல்களை அல்லது குழப்பநிலையைத் தோற்றுவிக்கக்கூடும் என்பதாகும்.

பொதுவாக உற்சாகமுள்ளவர்களாக இருக்கும் அதன் பணிப்பாளரும் பணிக்குழாமும் முகங்கொடுத்த கடுமையான பிரச்சினை யாதெனில், இவ்விழாவில் பங்குபற்றுவதற்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சிறைக்கைதிகளின் குடும்பத்தவர்களுக்கு திடீரென ஏற்பட்ட இந்த மாற்றம் குறித்து எவ்வாறு விளக்கிச்சொல்வது என்பதாகும். அந்த சிறைக்கைதிகளின் குடும்பங்களுக்கு இவ்வாறான ஒரு விழாவில் முக்கியத்துவம் பெறுவது இதுவே முதல் தடவை. சிலர் இதற்கெனவே புதிய ஆடை அணிகலன்களை கொள்வனவு செய்திருந்ததோடு, தொலைதூரப் பிரதேசங்களைச் சேர்ந்த சிலர் ஏற்கனவே தமது இல்லங்களிலிருந்து வெளியேறியோ, புறப்படுவதற்கு ஆயத்தமாகவோ இருந்ததனால் அவர்களை மீண்டும் திருப்பி அனுப்ப நேரிட்டது.

இது தொடர்பில் செய்தி வெளியிட்ட சில ஊடகங்களின் அறிக்கைப்படுத்தல்கள் முற்றிலும் பக்கசார்பானதும் தொழின்முறை நெறிமுறைகளை மீறியனவாகவும் காணப்பட்டன. அவற்றில் உள்ளடங்கியிருந்த பிழையான, தவறாக வழிநடத்தத்தக்க தகவல்கள் காரணமாக HROK அல்லது அதன் பணிப்பாளர் சபை மற்றும் குறித்த விருதினைப் பெறுவோர் மீது வன்மம் ஏற்படுத்துதல், எதிர்ப்பு மற்றும் வன்முறையைத் தூண்டக்கூடிய நிலைமை காணப்பட்டது. நிகழ்வுடன் தொடர்புடைய முதன்மை தரப்பினரான HROK அமைப்பிடமிருந்து அது தொடர்பில் விசாரித்தறிய வேண்டும் என்கிற குறைந்தபட்ச ஊடக நெறிமுறையைக்கூட அந்த ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் பின்பற்றத்தவறியுள்ளனர். விருது வழங்குவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இந்த ஊடகச் செய்திகள் காரணமாக மேலதிக சங்கடத்துக்கும் அதிர்ச்சிக்கும் முகங்கொடுத்தனர்.  வெகுஜன ஊடகப்பரப்பில் உள்ள சிங்கள மொழி தினசரியொன்றில் வெளியிடப்பட்ட செய்தி காரணமாக சிறைக்கைதியொருவரின் மகள் கதறி அழுதார். தனது பிள்ளையின் பாட்டனார் சிறையில் இருப்பதன் காரணமாக தனது பிள்ளையும் பாகுபாடுகளுக்கும் அவமதிப்புக்கும் உள்ளாகுமோ என அவர் வினவுகிறார்.

சிறைக்கைதிகளது குடும்பங்கள் அனுபவிக்கும் போராட்டங்களை அறிந்துகொள்ளலும் ஏற்றுக்கொள்ளலும்

“சிறைக்கைதிகளும் மனிதர்களே” என இலங்கையின் மிகப்பெரிய சிறைச்சாலையின் முன்னால் அமைந்துள்ள சுவரில் வாசகமொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  சிறைச்சாலையினுள்ளே அவ் வாசகத்துக்கு முற்றிலும் எதிரான யதார்த்தமொன்றே காணப்படுகின்றபோதிலும் அது நிச்சயமாக முக்கியமானதொரு கோட்பாடு ஆகும். எனினும், சிறைக்கைதிகளின் குடும்பங்கள் முகங்கொடுக்கும் சவால்களை நோக்கும்போது, “சிறைக்கைதிகளின் குடும்பத்தவர்களும் மனிதர்களே” எனும் தொனிப்பொருளும் வெகுஜனத் தளத்துக்கு கொண்டுவர வேண்டியதொடு கருத்து என்பதைப் புறக்கணிக்க முடியாது.

சிறைச்சாலை சென்றுவந்த, முன்னாள் சிறைக்கைதிகள் பலரை சந்தித்துள்ள, சில சிறைக்கைதிகளின் குடும்பங்களுடன் நெருங்கிப்பழகியுள்ள ஒருவன் என்ற வகையில் அவர்கள் முகங்கொடுக்கும் பல்வேறு சவால்களுக்கும், குடும்பம், அயலவர்கள், சமூகம், ஊடகம், சட்டம் மற்றும் அரசியல் முதலான வெவ்வேறு தளங்களுக்குள் உள்ளடங்கும் அவர்களது போராட்டங்களுக்கும் மத்தியில் அவர்கள் வெளிக்காட்டியுள்ள துணிவையும் திடசங்கற்பத்தையும் போற்ற வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன்.

சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்களுள் பெரும்பான்மையானவர்கள் சந்தேகநபர்களாக இருப்பதுடன் எமது அரசியலமைப்பு மற்றும் சர்வதேச நியமங்களின் படி அவர்கள் நீதிமன்ற நடைமுறையொன்றின் மூலம் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்படாத வரைக்கும் நிரபராதிகள் எனக் கருதப்படுதல் வேண்டும். அநேகமான சந்தேகநபர்களை சிறைப்படுத்தியிருப்பது, விளக்கமறியலில் வைப்பது – பிணை வழங்குதல் விதிவிலக்காக ஆகியுள்ள சூழ்நிலையும், பிணை வழங்கப்படும்போது அதற்குப் போதுமான பிணையை முன்வைப்பதற்கான இயலுமை இல்லாதிருக்கும் நிலைமையும் ஆகும்.  இன்னும் பலர் சிறைப்படுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம் சிறு குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட தண்டப்பணத்தைச் செலுத்துவதற்கு இயலாமை ஆகும்.  நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவிப்பதற்கு இன்னுமொரு காரணம் வழக்கு விசாரணை ஆரம்பிப்பதற்கும் முடிவடைவதற்கும் இடையில் பல ஆண்டு காலம் கடந்து விடுவது ஆகும். அண்மையில் வெளியான ஊடகச் செய்திகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஒரு சந்தேகநபரை 15 ஆண்டுகள் சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்ததன் பின்னர் குற்றமற்றவரென விடுதலை செய்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கைதிகளை பல ஆண்டுகள் தடுத்து வைத்திருந்துவிட்டு விடுவித்த அல்லது குற்றமற்றவரென விடுதலை செய்த பல சம்பவங்களில் இது ஒரு சம்பவம் மட்டுமே. அதேபோன்று ஆயுள் தண்டனை அல்லது மரணதண்டனை விதிக்கப்பட்டு மிகவும் கடுமையான குற்றங்களுக்காக குற்றவாளி ஆக்கப்பட்டுள்ள நபர்களும் உள்ளனர் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.

இழைத்த அல்லது இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றங்களுக்காக அந்த குற்றவாளிகளுடைய அல்லது சந்தேக நபர்களுடைய பிள்ளைகள், வாழ்க்கைத்துணைவர், பெற்றோர் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் தண்டனைக்கு உள்ளாகக்கூடாது என்றபோதிலும், இறுதியில் அவர்களும் அந்த குற்றங்கள் அல்லது குற்றச்சாட்டுகளினால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு நபர் சிறைவாசம் அனுபவிக்கும் காரணம் எதுவாக இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு வகையான சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். ஒரு சில நிமிடங்கள் நீடிக்கும் சந்திப்புக்காக தொலைதூரங்களுக்குப் பிரயாணிக்க நேர்கின்றமை மற்றும் அநேகமான சிறைச்சாலைகளில் சிறைக்கைதிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இடையிலான சந்திப்புகளை மனிதத்தன்மையுடன் நிகழ்த்துவதற்கு அனுமதி வழங்கும் வகையில் பொருத்தமான விதிமுறைகள் இன்மை ஆகிய காரணங்களால் சிறைக்கைதிகளை சந்திக்கச் செல்வது என்பது முற்றிலும் கடினமான ஒரு செயலாக உள்ளது. குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதையும் கொவிட்-19 காரணமாக இரத்துச் செய்யவோ அல்லது வரையறுக்கவோ நேர்ந்தது. சிறைப்படுத்தப்பட்டுள்ள தமது குடும்ப உறுப்பினர்களின் நிலைமை – குறிப்பாக சிறைச்சாலைகளில் கொவிட்-19 பரவியமை, கடந்த வாரம் பதுளை சிறைச்சாலையில் நிகழ்ந்த தாக்குதல் மற்றும் 2020ஆம் ஆண்டு மஹர சிறைச்சாலையிலும் 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையிலும் நிகழ்ந்த படுகொலைகள் போன்ற பிரச்சினைக்குரிய காலகட்டங்களில் – எவ்வாறானதாக உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள குடும்பத்தவர்கள் பதைபதைப்புடன் இருந்தனர். அநேகமான சிறைக்கைதிகள் தமது குடும்பங்களுக்காக வருமானம் ஈட்டுவோராக இருந்ததுடன் திடீரென வேறு பொருளீட்டல் முறைகளுக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் அந்தக் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது. குடும்பத்திடமிருந்து பிரிந்திருத்தல் உளரீதியான மற்றும் மனவெழுச்சி ரீதியான பாதிப்புகளுக்கு வழிகோலும். சமூகத்திடமிருந்து முன்வைக்கப்படும் விமர்சனங்கள், குறிப்பாக போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மட்டுமன்றி அவர்கள் இனரீதியான, மதரீதியான சிறுபான்மையினராக உள்ளபோது சமூகத்திடமிருந்து எதிர்கொள்ள நேர்கிற அவமதிப்புகள் மற்றும் நிந்தனைகள் குடும்பங்கள் மீது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். முதியவர்களான பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இதன் காரணமாக கடுமையான சங்கடத்துக்கும் சிரமங்களுக்கும் உள்ளாகின்றனர். சிறைப்படுத்தப்பட்டவர்களுள் பெரும்பான்மையானவர்கள் ஆண்களாக உள்ளதால் பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்கிறது.

மனித உரிமைகள் தின விழாவின்போது போற்றுதலுக்கு உரியவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்திரண்டு பேரில் இருபத்தொரு பேர் (21/22) அன்னையர், மனைவியர், மகள்கள், மற்றும் உதவியாளர்கள் ஆகிய வெவ்வேறு வகிபாகங்களைக்கொண்ட பெண்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான சிறப்புக்குரிய நபர்களை பாராட்டுவதற்காக, விருது வழங்குவதனூடாக அவர்களது குடும்பங்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அவர்கள் நல்கிய பங்களிப்பை அங்கீகரிப்பதன் மூலம் அவர்களுக்கு உரித்தான கண்ணியத்தை உறுதிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. இந்நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வருகிற பல்வேறு இனக்குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இக்குழு பல்லாண்டுகளாக ஒன்றிணைந்து செயற்பட்டு சமூகத்தில் இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவது தொடர்பில் எடுத்துக்காட்டக்கூடிய சிறந்ததோர் உதாரணமாகத் திகழ்கிறது.

மனித உரிமைகள் பார்வைக்கோணம்

2021 டிசம்பர் 6ஆம் திகதி – அதாவது, நீதிமன்ற உத்தரவு வழங்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் SC FR 9/2011ஐ மேற்கோள் காட்டி SC FR 531/2012 என்ற இலக்கமுடைய வழக்கில் அளிக்கப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பில் சந்தேகநபரொருவருக்குப் பதிலாக அவரது வாழ்க்கைத்துணைவரை அல்லது குடும்ப உறுப்பினரை அல்லது வேறோர் உறவினரை கைது செய்வதும் தடுத்து வைப்பதும் அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகளை மீறும் செயல்கள் எனவும் அவ்வாறான செயல்களைக் கண்டித்து அதைரியப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நபர் இழைத்த அல்லது இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றங்களுக்காக அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பொறுப்புக்கூறவோ தண்டனைக்கு உள்ளாகவோ வேண்டியதில்லை என்கிற விரிவான கோட்பாடு இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது. போற்றுதலுக்குப் பொருத்தமானவர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களிடமிருந்து அவ்வாய்ப்பைத் தட்டிப்பறிப்பதற்குக் காரணம் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஏதேனுமொரு குற்றத்தை இழைத்தமை அல்லது அவ்வாறு குற்றமிழைத்ததாக குற்றச்சாட்டப்பட்டமை எனின் அது மேற்கூறிய கோட்பாட்டினை மீறும் ஒரு செயலாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவதற்காக விழாவொன்றை ஏற்பாடு செய்வதென்பது எமது அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களினால் உறுதிப்படுத்தப்பட்ட கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடலுக்கான சுதந்திரம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது ஆகும். அவ்வாறான சமூக மட்டத்தில் முக்கியமானதும் நியாயமானதுமான விழாவொன்றுக்கு எதிராக யாரோ ஒரு நபர் அல்லது குழு சட்டத்துக்குப் புறம்பான முறையில் இடைஞ்சல் ஏற்படுத்தத் திட்டமிடுவார்களெனில், அவ்வாறான இடைஞ்சல்களை தடுத்து அவ்வாறு இடைஞ்சல் ஏற்படுத்திய அல்லது ஏற்படுத்தப்போகும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், குறித்த விழாவை இடைஞ்சல்கள் ஏதுமின்றி நிகழ்த்துவதற்கு ஏற்ற சிறந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவது பொலிஸாரின் பொறுப்பாகும்.

எதிர்வரும் காலங்களில் மேற்படி விழாவை எந்தவிதமான இடைஞ்சல்களுமின்றி நடத்துவதற்கு பொலிஸாரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வாய்ப்பை உருவாக்கித்தருவார்கள் என நான் எதிர்பார்ப்பதோடு, சிறைக்கைதிகளின் குடும்பங்களின் போராட்டங்களைப் பாராட்டி சிறைக்கைதிகளைப் போன்று அவர்தம் குடும்பத்தவர்களும் மனிதர்களே என்கிற கருத்தை பிரபல்யப்படுத்துவதற்காக அவ்விழாவில் பங்குகொள்வதற்கு நானும் இணைகிறேன்.

ருக்கி பெர்னாண்டோ

Families of Prisoners are Human Beings என்ற தலைப்பில் டிசம்பர் 19ஆம் திகதி ‘கிறவுண்ட்விவ்ஸ்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு.