Photo: Jim Huylebroek for The New York Times

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமைக்கு யார் காரணம் என்ற அரசியல் பழி சுமத்தல்கள் தாரளமாக இணையத்தில் வெளிவரத்தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பைடன் தனது உரையில் அரசியல் பழி சுமத்தல் விளையாட்டை மிக சாமர்த்தியமாக நகர்த்தியுள்ளார். அதற்கு இணையாக அவரது எதிர்த்தரப்பினரும் அவரை தாரளமாக பழி சுமத்தியுள்ளனர். 2010இல் விக்கிலீக்ஸ் வெளியிட்ட இராணுவ ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு 2010 அமெரிக்க மேற்குலக அரசின் அரசியல் – இராணுவ நகர்வு, ஆப்கானிஸ்தான் சார்ந்து மட்டுமல்ல, ஈராக்கிலும் தோல்வியைத் தழுவியுள்ளது என அம்பலப்படுத்திய போது, தோல்வியை ஏற்பதற்குப் பதிலாக ஆவணங்களைப் பகிரங்கப்படுத்தியதற்காக விக்கிலீக்ஸை அமெரிக்கா குற்றஞ் சாட்டியது. அந்த ஆவணங்களில் அமெரிக்க -மேற்குலக படைகளால் ஆப்கானிஸ்தான் சாதாரண பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டிருந்ததை அவதானிக்கலாம்.

முதலாவது ஆங்கில – ஆப்கானிஸ்தான் போர் 1839இல், பிரித்தானியா, ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த போது ஆரம்பித்தது. முதன் முறை பிரித்தானியப் படைகள் தோற்கடிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டது. ஆனால், ஆப்கானிஸ்தானைப் பழிவாங்குவதற்காக மீண்டும் பிரித்தானியா படையெடுத்து பெண்களை வன்புணர்ந்து மக்களைக் கொன்றொழித்தது, இதை மறைக்கப்பட்ட வரலாறாகவே ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன.

அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்தெதிரான யுத்தி என்பது ஜோர்ஜ் புஷ் நிர்வாகத்தின் கீழ் 4b(D) உத்தி என அழைக்கப்பட்டது. ஆனால், ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரையில் உரிய இலக்கு எட்டப்பட்டதா என்பது கேள்விக்குறியே. 9/11 பின்னர் அமெரிக்கா தனது இராணுவத் தலையீட்டின் மூலம் வன் அணுகுமுறையை பயன்படுத்தியிருந்தது. இதில் வலிந்து சென்று தாக்குதல் (offensive) உத்தி எதிர்பார்த்ததற்கு எதிரான விளைவை உருவாக்கியிருந்தது. பயங்கரவாதத்திற்கெதிரான போரில் இராணுவத் தலையீட்டு முறைமையே பெரும் செல்வாக்கைச் செலுத்தியிருந்தது. இராணுவத் தலையீடு இரண்டு அணுகுமுறையைக் கொண்டிருந்தன. ஒன்று – நேரடியான இராணுவத் தலையீடு, இரண்டு – மறைமுக இராணுவத் தலையீடு. ஆனால், அமெரிக்கா முதலாவதான நேரடித் தலையீட்டையே தனது பிரதான அணுகுமுறையாகக் கொண்டது. நேரடியான அணுகுமுறையில் அமெரிக்க படைக்கட்டுமானம் பயங்கரவாதத்தை அது தோற்றம் பெறும் நாடுகளிலே அவற்றை சண்டையிட்டு, கைப்பற்றி அழிப்பதான உத்திதான் ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்டது. 20 வருட அமெரிக்க – மேற்குலக இராணுவ முயற்சிகள் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்ததா என்பது கேள்விக்குறியே.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க தலையீட்டால் – வெளியக திணிப்பால் கட்டமைக்கப்பட்ட தேச – அரச கட்டுமானம் தோல்வியில் முடிந்ததை ஈராக், ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல வியட்நாம் கூட எடுத்துக் காட்டியதை மறுக்க முடியாது. அமெரிக்காவின் கண்காணிப்பை, பாதுகாப்பை மையப்படுத்திய தேச – அரச கட்டுமான மாதிரி, மக்கள் நலன் மைய தேச – அரச கட்டுமான மாதிரியை இடம்பெயர்த்தியிருந்தது என்பதையும் அவதானிக்க வேண்டும். பாதுகாப்பு என்பது மக்கள் நலன் சார்ந்தது என்று வாதிட்டால் பாதுகாப்பு மட்டும் தானா மக்கள் நலன் சார்ந்தது என்றும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது.  அமெரிக்காவின் பாதுகாப்பை மையப்படுத்திய தேச – அரச கட்டுமான மாதிரியில் குறிப்பாக ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமையிலிருந்து அவதானிக்கின்ற போது, தலிபான் குழுவை எதிரியாகக் கட்டமைத்து, ஆப்கானிஸ்தான் தேச – அரச கட்டுமான வெளியில் அவர்களைப் புறந்தள்ளி, ஆபத்தான ‘மற்றமையாக’ கட்டமைத்ததையும் அவதானிப்புக்கு உட்படுத்துவது அவசியமானது. பாதுகாப்பை மையப்படுத்திய தேச – அரச கட்டுமானம் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மீண்டும் சமச்சீரற்ற போர்ச்சூழலை உருவாக்கியது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் முள்ளிவாய்க்காலிலும் நடந்த போர்களின் தோல்வி என்பது அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கெதிரான போரின் தோல்வியாகும்.

தற்போதைய ஆப்கானிஸ்தான் நிலைமை அமெரிக்கா வெளிநாட்டுக் கொள்கையின் விளைவானது என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்வதாயில்லை, அந்தப் பிழையை திருத்திக் கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகள் நடப்பதாகவும் தெரியவில்லை. அமெரிக்காவின் ‘இதயத்தையும் மனத்தையும் (winning the mind and hearts) வெல்லுதல் உத்தியின் செயற்திறன் தனிமையும் சிக்கலுக்குட்படுத்தப்படுகின்றது. காபூல் அமெரிக்கப் படைகளின் முக்கிய நகரமாக விளங்கியது. அமெரிக்கா பெரும்பகுதி முதலீட்டை அங்கு தான் மேற்கொண்டது.

‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்பதில் பயங்கரவாதத்தை யார் வரைவிலக்கணம் செய்தார்கள் அல்லது பொருள் விளக்கம் கொடுத்தார்கள் என அரசியல் அவதானத்திற்கு உட்படுத்தினால், தெளிவற்ற மங்கலான தன்மை வெளிப்படுவது திண்ணம். 21ஆம் நூற்றாண்டில் குறிப்பாக 09/11 க்குப் பின்னர் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் தவறாகப் பயன்படுத்தப்பட்ட பதமுமாக ‘பயங்கரவாதம்’ உள்ளதென்பதை சந்தேகத்திற்கிடமின்றி ஏற்றுக் கொள்ளலாம். அப்பதம் பற்றி எங்களுக்குத் தெரியும், ஆனால் உண்மையாகத் தெரியாது என்ற இருமை (ஆம், இல்லை என்ற) சட்டிக்குள் விழ நேர்கின்றது. 9/11க்குப் பின்னர் மிகப் பரவலாக பொருட் செறிவற்றதாக பிரபலப்படுத்தப்பட்ட பதமாக ‘பயங்கரவாதம்’ உள்ளது.

சமீர் கந்தேசா (Opendemocracy -14.08.2021) பயங்கரவாதத்தின் மூக்குக் கண்ணாடி அல்லது காட்சி (Spectacle of Terror) என்ற கட்டுரையில் பிரஞ்சு மெய்யியலாளர் Debord னுடைய நூல், மூக்குக் கண்ணாடிகளின் உலகம் (சமூகம்) (Society of the spectacle) அடிப்படையாகக் கொண்ட விளக்கத்தை கொடுக்க முனைவது இங்கு பொருத்தமாகப்படுகின்றது. Debord தனது நூலில் கண்ணாடி அணிந்தவர்களின் சமூகத்தை இரண்டாகப் பிரிக்கின்றார். ஒன்றை மிகச் செறிவானதாகவும் மற்றையதை மிக நெகிழ்வானதாகவும், முன்னையதில் ஆளுமைகளைக் கொண்ட வழிபாட்டு மரபு, அதில் பாசிசத்தை குறிப்பிட்டு, ஹிட்லர், ஸ்ராலின், மாவோ சேதுங் போன்றவர்களைக் குறிப்பிடுகின்றார். பின்னையதில் போருக்குப் பின்னரான நுகர்வுச் சமூகத்தை குறிப்பாக விளம்பரங்களால் ஆட்கொள்ளப்பட்ட சமூகத்தை அதிலே தொழிலாளி என்பவன் உற்பத்தியில் மட்டும் பங்காளியாக இல்லாமல், நுகர்விலும் பங்காளியாக உள்ளான். இவ்வாறு தான் முதலாளித்துவம் தனது திரட்டப்பட்ட பிரச்சினைகளை தேச – அரசு கட்டுமான கட்புலத்திற்குள் நின்று தீர்க்க முற்படுகின்றது எனக் குறிப்பிடுகின்றார்.

பூகோளமயப்படுத்தப்பட்ட பொய்மைக்குள்ளும், பொய்மைப்படுத்தப்பட்ட பூகோளத்திற்குள்ளும் இருந்து, தான் அணிந்து கொண்ட மூக்குக் கண்ணாடிக்குள்ளான உலகத்தை நுகர்வதற்கு தள்ளப்பட்ட நிலையில், பூகோள அரசியலில் அமெரிக்காவின் அதிகார எழுச்சியையும் அதன் வகிபாகத்தையும் இதன் பின்னணியிலிருந்து ஆராய வேண்டிய சூழல் எழுகின்றது. உள்ளக, வெளியக அச்சுறுத்தலை ஒரு அரசு எவ்வாறு கட்டமைக்க முயலுகின்றது என்பது ஆழ்ந்து அவதானிக்கப்பட வேண்டியது

சமீர் கந்தேசா தனது கட்டுரையில் Debord ஐ மேற்கோள் காட்டும் போது பின்வருமாறு கூறுகின்றார். “மேற்கூறப்பட்ட அடிப்படையில் ஜனநாயகம் தன் எதிரியையும், பயங்கரவாதத்தையும் தானே கட்டமைத்துக் கொள்கின்றது. அவ்வாறான ஜனநாயகம் எதிரியை மையமாகக் கொண்டு தன்னை மதிப்பிடுகின்றதேயொழிய அதனுடைய விளைவைக் கொண்டல்ல. பயங்கரவாதத்தின் கதையை அரசுதான் கட்டமைக்கின்றது. அது பற்றி அரசு அறிவுரை வழங்குகின்றது. பார்வையாளர்கள் பயங்கரவாதம் பற்றி எதுவுமே தெரிய வேண்டிய அவசியம் இல்லை, ஆனால், தங்களை நம்பவைக்கின்ற அளவிற்கு மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது. அதுவே ஜனநாயகமாகும்’ எனக் குறிப்பிடுகின்றார்.

‘பயங்கரவாதத்திற்கெதிரான போரை 9/11 க்குப் பின்னரான அரசியல் சூழலின் பல தேச – அரசுகள் ஒரு தொழிற்பேட்டையாகவே உருவாக்கி விட்டன. அவ்வாறான பயங்கரவாதத்திற்கெதிரான தொழிற்பேட்டையில் பல்வேறு முதலீட்டாளர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். இந்த அரசியல் சூழலில்தான் பாதுகாப்பை மையப்படுத்திய ஏற்கனவே கூறிய தேச – அரச கட்டுமான மாதிரி உருவெடுத்துக் கொள்கின்றது. இந்த நவதாராளவாத ஜனநாயக மாதிரியில் தொழிநுட்ப தொடர் புதுப்பித்தல் என்பது நுகர்தலுக்காக தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. பயங்கரவாதத்தைப் பற்றிய புதிய அறிவும், புரிதலும் எப்போதும் நடந்து கொண்டேயிருக்கின்ற போது தான் பாதுகாப்பை மையப்படுத்திய தேச – அரச கட்டுமான நிலைத்திருத்தல் அர்த்தம் பெறுகின்றது. இதன் பின்னணியில்தான் பின்வரும் தொழிநுட்ப முறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. முதலாவது அமைப்பு ஒருங்கிணைப்பு (systems integration) பயோமட்றிக்ஸ், அபாயகரம் அல்லாத ஆயுத உற்பத்தி (non – lethal weapons) தகவல் சேகரித்தலும், ஆய்வும் (data mining and link analysis technologies), மீநுண் (nano) தொழிநுட்பம்.

பெரும்பாலான அமெரிக்க – மேற்குலக ஊடகங்கள் ஆப்கானிஸ்தான் பிரச்சினையை பயங்கரவாதத்திற்கெதிரான போர் வில்லைகளுக்கூடாகவே பார்க்கின்றன. அதையேதான் பார்வையாளர்களும் நுகர வேண்டும் என எதிர்பார்க்கின்றன. ஆப்கானிஸ்தான் போரை பன்முறை அணுகுமுறை முறையியலை கொண்டு ஆய்கின்ற போதுதான் அதனுடைய உண்மைத் தன்மை தெரிய வரும். ஜூலியன் அசாஞ் ஆப்கானிஸ்தான் போரை இன்னொரு கோணத்தில் பார்க்கின்றார்.

“The goal is not to completely subjugate Afghanistan. The goal is to use Afghanistan to wash money out of the tax bases in the United States and the tax bases of European countries through Afghanistan and back into the hands of transnational security apparatus.”

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலத்தில் அதன் ஆசிரியர் அமெரிக்க உதவித்திட்டம் பற்றிக் குறிப்பிடுகையில் உதவித் திட்டமாக வரும் நன்கொடைகள் எல்லாமே மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு திரும்ப வேண்டும் என்ற இலக்கோடு தான் உத்திகள் வரையப்பட்டுள்ளன எனக் குறிப்பிடுகின்றார். அதே கோணத்தில் தான் அமெரிக்காவும், மேற்குலகும், ஏனைய நாடுகளும் கொடுத்த நன்கொடையை நோக்க வேண்டியுள்ளது.

9/11 க்குப் பின்னர் மத்திய கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்திற்கெதிரான போர் பூகோள ரீதியில் அமெரிக்காவிலும், மேற்குலகிலும் இஸ்லாமிய வெறுப்பை உருவாக்கியிருக்கிறது. இஸ்லாமிய வெறுப்பு பல இடங்களில் பல்வேறு வடிவங்களில் வெளிவந்ததை ஊடகங்கள் ஆவணப்படுத்தியிருந்தன. இஸ்லாமிய அச்சத்தினால் (Islamaphobia), அதன் விளைவால் அல்லது அதனைக் காரணங்காட்டி பல வலதுசாரி அடிப்படைவாதக் குழுக்களின் எழுச்சியையும் அவதானிக்கலாம். இந்த வலதுசாரி அடிப்படைவாதிகளின் அடிப்படைக் கோரிக்கையாக, அமெரிக்காவையும், மேற்குலகையும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திலிருந்து காப்பாற்றுவதாக பிரதிபலிக்கப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக மத்திய கிழக்கில் அமெரிக்க -மேற்குலக எதிர்ப்பு உருவானது. ஒன்றிற்கொன்று எதிரான துருவமயப்படுத்தல் நல்லிணக்கத்தையோ, உலக அமைதியையோ கொண்டுவருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

அமெரிக்க – மேற்குலக நாடுகளின் பயங்கரவாதத்திற்கெதிரான போரினூடு கைப்பற்றப்பட்ட நாடுகளில், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில், தாராளவாத ஜனநாயக முறைமையை நடைமுறைப்படுத்தல், மேற்குலக பாணியில் ஆளுகை முறைமையை அறிமுகப்படுத்துவதினூடாக மத்திய கிழக்கில் அரசியல் இயந்திரத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அமெரிக்கா முயற்சித்தது. இது நவ காலனித்துவத்தின் பிந்தைய வடிவமாகும். நவதாராளவாத ஜனநாயக முறைமையில் அமெரிக்க – மேற்குலக பண்பாடு இரண்டறக் கலந்திருப்பதையும், குறிப்பாக முதலாளித்துவ விழுமியங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதையும் அவதானிக்க வேண்டும்.

புவிசார் அரசியல் ரீதியாக அமெரிக்க – மேற்குல கூட்டிணைவு, தனது புவிசார் ஆதிக்க அரசியலில் பின்னடைவைச் சந்தித்துள்ளதா என்ற கேள்விக்கு, ஆப்கானிஸ்தானில் நிகழும் புதிய கூட்டிணைவின் அதிகார இடப்பெயர்த்தலை அவதானிப்பது அவசியமாகும். ரஷ்ய – சீன – பாகிஸ்தான் கூட்டிணைவு முன்னர் கூறிய கூட்டிணைவின் ஆதிக்கப் பரம்பலுக்கு தடையாக இருக்கப் போகின்றது. பெரும்பாலும் சீனா இக்கூட்டிணைவின் மூத்த சகோதரர் (big brother) பாத்திரத்தை எடுக்க முனையும். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சீனா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தப்போகின்றது. Wakhan இடைவெளியும், ஆப்கானிஸ்தான் – சீன எல்லையும் புவிசார் அரசியலின் மையமாக மாறக் கூடிய சாத்தியப்பாடுகள் வெளிவருகின்றன. இது கைகூடும் போது சீனாவுக்கு ஆப்கானிஸ்தான் ஊடாக மேற்கு ஆசியாவிற்கும், மத்திய கிழக்கிற்குமான வெளிகள் திறக்கப்படுகின்றன (Paul Rager 13.08.2021). அதே நேரத்தில் சீனா தனது பொருளாதார நலன்களை எவ்வாறு விருத்தி செய்ய வேண்டுமென்பதில் குறிப்பாக இருக்கின்றது. அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கனிய வள அகழ்வு அபிவிருத்தி போன்ற செயற்பாடுகள் தொடர்கின்றன.

எழில் ராஜன்