பட மூலம், SRILANKABRIEF

ஒரு சிறு பிள்ளையாக 2007இல் “மிக் விமானக் கொள்வனவு மோசடி” என்ற சொற்றொடரை முதலில் நான் கேள்விப்பட்டபோது, எனது தந்தையின் செய்திப் பத்திரிகையில் அந்த சொற்களை அச்சிட்டமைக்காக, ஒரு இரண்டு வருடங்களுக்கும் குறைவான ஒரு காலத்திற்குள் என்னை, அது எனது வாழ்க்கையின் மிகவும் கறுப்பான ஒரு நாளன்று அவரது திறந்த கல்லறை மீது நிற்க வைக்கும் என ஒருபோதும் நான் எதிர்பார்த்திருக்கவில்லை. சண்டே லீடர் பத்திரிகையில் ‘மிக் விமானக் கொள்வனவு மோசடி’ பற்றி எனது தந்தை வெளிப்படுத்தியிருக்காது  விட்டால், அவர் இன்று இன்னமும் உயிரோடு இருந்திருப்பார், இன்னமும் எழுதிக் கொண்டு, இன்னமும் தவறான செயல்களை வெளிப்படுத்திக் கொண்டு, அதிகாரங்களுக்கு எதிராக உயர்ந்து நின்று கொண்டிருப்பார் என்பது எனக்கு இப்போது நன்கு தெளிவாகிறது. தன்னை ஒரு புனிதனாக காட்டிக் கொண்டிருக்கும் ஒரு நபரை அம்பலப்படுத்துவதிலுள்ள ஆபத்துகளை எனது தந்தை அறிந்திருந்தார். ஆயினும் அந்த ஆபத்து தனது பணியினை மேற்கொள்ளுவதிலிருந்து அவரைத் தடுத்து நிறுத்தவில்லை.

இன்று, அவர் இறந்து 12 வருடங்கள் ஆன பின்னரும் கூட, மக்களில் பலரும் மிக் விமானக் கொள்வனவு மோசடி பற்றிய உண்மைகள் பற்றி அறியாது உள்ளனர். எனது தந்தையைக் கொன்றவர்கள் நீதியின் முன் கொண்டுவரப்படுவது தேசிய நலனிற்கானது என்பதை நான் வற்புறுத்துவதற்கு முயல்கையில், மிக் விமானக் கொள்வனவு மோசடி பற்றி எளிய முறையில் தெளிவுபடுத்துவது உதவியாக இருக்கும். ஒரு சிறிய எண்ணிக்கையான இலங்கைத் துப்பறிவாளர்களின் சிறந்த பணிகள் இந்த மோசடி பற்றிய கற்பனைக்கு இடம்வைக்கவில்லை. ஒரு படம் 1000 சொற்களுக்கு சமனானது என்ற ஒரு கூற்றுக்கமைய, கீழே ‘மிக் விமானக் கொள்வனவு மோசடி’ பற்றிய ஒரு படத்தை 1,000 சொற்களுடன் விளக்குவதற்கு நான் முயல்கிறேன்.

ஜனவரி 2006இல், விமானப் படைத் தளபதி டொனால்ட் பெரெரா, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சண்டையிடுவதற்கு இலங்கை விமனப் படைக்கு குண்டு வீச்சு விமானங்களை வாங்குவதற்காக ஒரு கேள்வி மனுவைத் திறப்பதற்கு விரும்புகிறார். அடுத்த மாதத்தில், உக்ரேனிய அதிகாரிகள் சிலரும் சிங்கப்பூர் வர்த்தகர்கள் சிலரும் உதயங்க வீரதுங்கவுடன் இலங்கை வருகின்றனர். உக்ரேனிய அதிகாரிகளும் வீரதுங்கவும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷவைச் சந்திக்கின்றனர். சந்திப்பின் பின்னர், திறந்த கேள்வி மனுவைக் கோருவதற்கான திட்டம் வெளியே வீசப்பட்டு, இலங்கை விமானப் படைக்கான குண்டுவீச்சு விமானங்களை உக்ரேனிய நிறுவனமான உக்ரின்மாஷ் என்பதிடமிருந்து மட்டும் கொள்வனவு செய்வதற்கான ஒரு முனைவு உதயங்க வீரதுங்கவினால் கொண்டு வரப்படுகிறது.

ஜூன் 2006இல் ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராக அவர் நியமனம் செய்யப்பட்ட பின்னரும் கூட, இந்தப் பேரம் இறுதிப்படுத்தப்படுகையில்,  உக்ரேனியர்கள் சார்பாக இலங்கை விமானப் படையுடன் வீரதுங்கவே நேரடியாக இப்பேரத்தைக் கையாண்டார். உக்ரின்மாஷ் உக்ரேனிய அரசாங்கத்தால் உரிமை கொண்டிருக்கப்பட்ட ஒரு நிறுவனமாகவும், ‘மிக் பேரம்’ அரசாங்கத்திற்கு அரசாங்கம் என்பதன் அடிப்படையிலான ஒரு பரிவர்த்தனை என்பதால் கேள்வி மனுக்கள் கோரப்படவில்லையென இலங்கை பாதுகாப்பு அமைச்சு நியாயப்படுத்திய வேளையில், இலங்கை விமானப் படை மற்றும் உக்ரின்மாஷ் என்பவற்றுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம், மிக் குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் பராமரித்தல் சேவைகளுக்கான அனைத்துக் கொடுப்பனவுகளும் ஐக்கிய இராச்சியத்திலுள்ள முகவரியைக் கொண்ட “பெலிமிஸ்ஸா ஹோல்டிங்ஸ் லிமிட்டெட்” என்ற நிறுவனத்திற்கு மேற்கொள்ளப்படல் வேண்டுமெனத் தெரிவித்தது.

விமானப் படை மற்றும் உக்ரேனியர்களுக்கிடையிலான ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின்படி, பெலிமிஸ்ஸா நிறுவனத்திற்கு, இலங்கை மொத்தமான ஒரு தொகையாக 4,661,944.24 அமெரிக்க டொலர்கள் கொடுப்பனவு செய்தது. கோட்டபாய ராஜபக்‌ஷவைப் பொறுத்த வரை, மிக் விமானங்கள் வந்து சேர்ந்தன, அளிக்கப்பட்ட சேவைகளுக்காக, இணங்கிக் கொள்ளப்பட்ட தொகை கொடுப்பனவு செய்யப்பட்டு விட்டது.

ஆனால், பத்திகையாளர்கள் ஏதோ தவறு நடந்திருப்பதை முகர்ந்து பிடித்தனர். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் இக்பால் அத்தாஸ் என்பரே மிக் விமானக் கொள்வனவில் சந்தேகத்திற்குரிய விடயம் ஏதோ நடந்திருப்பதை, 2006 இல் முதன் முதலில் தெரிவித்திருந்தார். 2006இல் விமானப் படையினர் மிக் விமானமொன்றுக்கு 2.462 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுப்பனவு செய்திருப்பதையும், அது 2000ஆம் ஆண்டில் அதே போன்ற விமானத்திற்கு சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் கொடுப்பனவு செய்த தொகையை விட இரண்டு மடங்கு விலையாக இருந்ததை, அவர் சுட்டிக் காட்டினார்.  2007இல், ஒரு தொடரான கட்டுரைகளில், எனது தந்தை இந்த விடயத்தை ஆழமாக ஆராய்ந்து, ஒரு கேள்வி மனு நடைமுறைக்குப் பதிலாக உக்ரேனியர்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்குத் தீர்மானித்ததில் கோட்டபாய ராஜபக்‌ஷ நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததை நிரூபித்ததுடன், அதில் வீரதுங்க மற்றும் சிங்கப்பூர்வாசிகளின் சம்பந்தப்படுதல்களையும் வெளிப்படுத்தியதுடன், ஐக்கிய இராச்சியத்தில் “பெலிமிஸ்ஸா ஹோல்டிங்ஸ்” என்றழைக்கப்படும் நிறுவனமே இருக்கவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் வெளிப்படுத்தினார்.

2009இல் எனது தந்தை கொல்லப்படும் போது இந்தத் தகவல் துணுக்குகள் அனைத்தையும் ஒன்றுபடுத்தி ஒன்றாக இணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். ஏறத்தாழ ஒரு தசாப்தத்தின் பின்னர், உக்ரேயன், ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் பிரிட்டிஷ் வேர்ஜின் தீவுகள் அரசாங்கங்களினால் பகிரப்பட்ட சான்றுகள் சம்பந்தப்பட்ட ஒரு கடுமையான பல்தேசிய முயற்சியின் பின்னர் பொலிஸ் புலன்விசாரிப்போர்கள் தங்கள் பணியை முடித்தனர்.

உக்ரின்மாஷ் பதிவுகளில், மிக் விமானங்களுக்காக இலங்கையுடன் அரசாங்கத்திற்கு அரசாங்கம் என்ற பரிவர்த்தனை தொடர்பாக எந்த தடயங்களும் இல்லை என்பது வெளிப்பட்டது. உக்ரேனியர்கள் மிக் விமானங்களை, இலங்கை அரசாங்கத்தின் சார்பாக செயற்பட்ட, சிங்கப்பூரிலுள்ள டி.எஸ்.அலையன்ஸ என்றழைக்கப்படும் ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்தனர். டி.எஸ். அலையன்ஸ் நிறுவனம் உக்ரேனியர்களுக்கு 14,661,944.24 அமெரிக்க டொலர்களை கொடுப்பனவு செய்யவில்லை, பதிலுக்கு அரைவாசித் தொகையான கூ 7,833,000 அமெரிக்க டொலர்களையே கொடுப்பனவு செய்தனர். டி.எஸ்.அலையன்ஸ், சிங்கப்பூர் மருத்துவ உபகரண விற்பனை வர்த்தகப் புள்ளியான லீ தியான் சூ என்ற பெயர் கொண்ட ஒருவருக்கு சொந்தமாக இருந்ததுடன், அவரை எனது தந்தை தனது புலனாய்வுகளில் வெளிப்படுத்தியிருந்தார்.

மர்மமான ‘பெலிமிஸ்ஸா ஹோல்டிங்ஸ்’ பிரிட்டிஷ் வேர்ஜின் தீவுகளிலுள்ள ஒரு ஷெல் நிறுவனம் என்பதுடன் அது, இதே லீ தியான் சூ மற்றும் அவரது சகோதரன் லீ தியான் பொக் ஆகியோர்களுக்குச் சொந்தமாக இருந்தது. லீ தியான் சூ இன் மனைவி ந லே கிம் (Ng Lay Khim) இந்நிறுவனத்தின் ஒரு பணிப்பாளர் என்பதுடன் லீ இன் தனிப்பட்ட சட்டத்தரணி லிம் கிம் லார்க் என்பவர் நிறுவனத்தின் செயலாளராகவும் இருந்தார். ஷெல் நிறுவனம் லீ குடும்பம் மற்றும் டி.எஸ்.அலையன்ஸ் என்பவற்றுடனான தொடர்பை இலங்கை அதிகாரிகளிடமிருந்து மறைத்து வந்தது. ஏனெனில், இலங்கை விமானப் படையால் அவர்கள் கறுப்புப் பட்டியலிடப்பட்டிருந்தனர்.

மிக் விமானக் கொள்வனவு மோசடியின் முக்கியமான அம்சங்கள்:

  1. சிங்கப்பூர் லீ குடும்பம் இலங்கை விமானப் படைக்குச் செலுத்துவதற்காக பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக உக்ரின்மாஷ் நிறுவனத்திற்கு 7,833,000 அமெரிக்க டொலர்களை கொடுப்பனவு செய்தது.
  2. இலங்கை விமானப் படை, இதனை அறியாமல் லீ குடும்பத்திற்கு 14,661,944.24 அமெரிக்க டொலர் தொகையை அதே பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக, 87% மேலதிகரிப்புடன் கொடுப்பனவு செய்தது.
  3. இலங்கை விமானப்படை அவர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொண்டது. அதனால், அவர்கள் இந்த மோசடி பற்றி ஏதும் அறியாதிருந்தனர்.

எனவே, சிங்கப்பூர் லீ குடும்பம் ஈட்டிக் கொண்ட 87% தரகுப் பணமான  6,828,944.24 டொலர்களுக்கு என்ன நடந்தது? பொலிஸ் புலன்விசாரணையாளர்கள் மிக் விமானக் கொள்வனவு மோசடியின் அத்திவாரத்தை முழுமையாகக் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே, கோட்டபாய ராஜபக்‌ஷ பொலிஸ் புலன்விசாரணையை மூடியது, துரதிர்ஷ்டமானது. ஆனாலும், பொலிஸ் புலன்விசாரணையாளர்கள் பணத்தின் ஒரு சில தொகைகளை தேடிப் பிடிப்பதற்கு இயலுமாகவிருந்தனர்.

லீ குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றிலிருந்து குறைந்தபட்சம் 400,397 அமெரிக்க டொலர் தொகை, நீங்கள் முன்னொரு போதும் கேள்விப்பட்டிருக்க முடியாத ‘லெலும் துமிந்த மன்னம்பெரும’ என்ற பெயருடைய ஒரு கழிவுநீர்ப் பொறியியலாளரால் பேணப்படும் கம்பளை – வர்த்தக வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த மன்னம்பெரும என்பவர், உதயங்க வீரதுங்கவின் சகோதரியை திருமணம் செய்தவராவர், அதாவது அவர்கள் இருவரும் மைத்துனர் முறை உறவினர்களாவர்.

இலங்கைத் துப்பறிவாளர்கள், குறைந்தது மற்றொரு சந்தேகத்திற்குரிய 80,000 அமெரிக்க டொலர்கள் மதிப்பான பரிவர்த்தனையை வீரதுங்கவின் மைத்துனர் கணக்கில் கண்டறிந்தனர். ஆனாலும், அவர்களது புலன்விசாரணை நிறுத்தப்படுவதற்கு முன்பாக மிக் விமான மோசடியுடனான அதன் தொடர்பை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை போல் தெரிகிறது. எவ்வாறாயினும், மன்னம்பெரும இப்பணத்தின் பெரும் பகுதியை என்ன செய்தார் என்பதை அவர்களால் கண்டறிவதற்கு இயலுமாக இருந்தது.

குறைந்தது 324,971.66 அமெரிக்க டொலர் தொகை மன்னம்பெருமவினால், துபாயிலுள்ள ஸ்டார் கிகா எஸ்டாபிளிஷ்மென்ட் என்ற வீட்டு மனை அபிவிருத்தி செய்யும் ஒரு நிறுவனத்திற்கு, கோல்ட்கிரெறஸ்ட் வியூ 2 என்றழைக்கப்படும் அஜ்மானிலுள்ள ஒரு கூட்டுமனைத் தொகுதியில் 3403 இலக்கம் கொண்ட ஒரு மேல் தள (Penthouse) வீட்டைக் கொள்வனவு செய்வதற்கான ஒரு முதற் கட்ட கொடுப்பனவாக அனுப்பப்பட்டிருந்தது. அம்மனைக்கான பதிவு கொள்வனவு செய்பவராக உதயங்க வீரதுங்கவைக் காண்பித்தது. இந்தக் கொள்வனவை நிரூபிக்கும் ஒரு அம்சமே, இதே மனையில் வீரதுங்கவை நாடு கடத்துவதற்காக துபாய் பொலிஸ் கண்டுபிடித்து கைது செய்து, கை விலங்கிட்டதாகும்.

எனவே, இதுவே மிக் விமானக் கொள்வனவு மோசடியாகும். தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்காக உபயோகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்யும் சிங்கப்பூர் வியாபாரிகளுக்கு இலங்கை 87% தரகுப் பணத்தை கொடுப்பனவு செய்தது. சிங்கப்பூர் வியாபாரிகள் குறைந்தது ஒரு 400,000 அமெரிக்க டொலர் தொகையை ராஜபக்‌ஷவின் மைத்துனருக்குக் கையூட்டாக கொடுப்பனவு செய்தது, அதனை வீரதுங்க துபாயில் தனக்கென ஒரு தனியான வீட்டு மனைத் தொகுதியை வாங்குவதற்கு உபயோகித்ததை நாங்கள் அறிவோம்.

ராஜபக்‌ஷவின் ஒரு சகோதரர் மிஸ்டர் டென் பர்சன்ட் (திரு. பத்து வீதம்) என பெரிதும் அறிப்படுகிறார். எனது தந்தை உயிரோடு இருந்து தனது புலனாய்வைப் பூர்த்தி செய்து நீதிமன்றத்தில் சாட்சியளித்திருந்தால், மற்றொரு சகோதரர் திரு. எண்பத்தேழு வீதம் என அழைக்கப்படுவதற்கு உரிய பொருத்தமானவரென்பதை இலங்கையர்கள் உணர்ந்திருப்பர். வேறுவிதத்தில் சான்றுகள் நிரூபிக்கும் முன்னர், எனது தந்தை இறக்க வேண்டுமென ஏன் இந்தத் தீயவர்கள் தீர்மானித்தனர் என்பதை அறிந்தவளாக நான் இருக்கிறேன்.

அஹிம்சா விக்ரமதுங்க