2009 மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வழியாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்த இந்தத் தாய், தன்னுடைய 33 வயதான மகனை இராணுவத்திடம் கையளித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தமையால் தான் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படலாம் என்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரமறுத்த போதிலும் தாயார் அவரை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறார். அவ்வாறு அழைத்துவந்த மகனை விசாரணையின் பின்னர் விடுவிப்பதாகக் கூறி தன் கண்முன்னே அழைத்துச் சென்ற இராணுவத்தினர், 11 வருடங்களாகியும் விடுதலை செய்யவில்லை.

மகனைத் தேடி நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று களைத்துவிட்டார். மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியரும் கூற, படுக்கையில் இருக்கும் தன்னுடைய தாய்க்கு பணிவிடை செய்வதே முழுநேர வேலையாக மாறிவிட்டது அவருக்கு. இருந்தாலும் எங்கு போராட்டம் நடந்தாலும் அந்த இடத்தில் ஆஜராகிவிடுவார்.

உக்கிரமாக போர் இடம்பெற்றபோது மகனை கண்ட இடத்திலிருந்து இராணுவத்திடம் கையளித்த இடம்வரை பயணம் செய்து அன்று நடந்த சம்பவத்தை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

இன்று அனுஷ்டிக்கப்படும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு அவரைப் பின்தொடர்ந்து பதிவுசெய்த காணொளியை இங்கு தருகிறோம்.