பட மூலம், AP Photo/Eranga Jayawardena photo, News.Yahoo

“மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் ஒரு சிறந்த பங்கீட்டைத் தரும் என முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டதால் 35 – 40% ஆன அவர்களின் வாக்குகளை எங்களால் பெற முடிந்தது” என வெற்றி பெற்ற பொதுஜன பெரமுனை கட்சியின் தேசிய பட்டியலில் நியமிக்கப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகளில் ஒருவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த இலக்கங்களை, எவ்வாறு அவர் பெற்றுக்கொண்டார் என்பது மர்மமாக உள்ளது. அப்படியாக இருந்தாலும் கூட, அவரது கூற்றுப்படி, 60 – 65% ஆன முஸ்லிம் வாக்காளர்கள், பொதுஜன பெரமுனை கட்சி தேர்தலில் வெற்றி பெறும் என அறிந்து கொண்டே, அக்கட்சியை நிராகரிப்பதற்கு முடிவு செய்தனர். வழமையாக காற்றடிக்கும் திசையில் பயணித்து தேர்தலில் வெற்றி பெறுபவருக்கே வாக்களிக்கின்ற இந்தச் சமூகத்தைப் பொறுத்தவரை, இந்த நிலைமை ஒரு வரலாற்று ரீதியான மாற்றமாகும். முஸ்லிம் தரப்புகளால் அளிக்கப்பட்ட பழுதான வாக்குகள் மற்றும் குறைவான வாக்களிப்பைக் கழித்துப் பார்ப்பின், எஞ்சிய வாக்குகளின் ஒரு கணிசமான சதவீதம் புதிதாக உருவாக்கப்பட்ட சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச) கட்சிக்கு சார்பாகவே சென்றுள்ளன. அதேசமயம், முஸ்லிம் வாக்காளர்கள், வரலாற்று ரீதியாக முஸ்லிம் கோட்டையாக இருந்த, ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியை இம்முறை நிராகரித்துள்ளனர். “பிரியாணி சாப்பிட்டுவிட்டு யு.என்.பி இற்கு (ஐ.தே.க) வாக்களிப்பது” என்பது முஸ்லிம் அரசியல் கலாச்சாரம் பற்றிக் குறிப்பிடும் ஒரு பிரபலமான கூற்றாகும். எனினும், 2020 இலான இந்த மாற்றத்தை ஒருவர் எப்படி விளக்குவார்? இது, இனிமேல் தேசிய கட்சிகள் முஸ்லிம் வாக்குகளை ஈட்டிக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்கான ஒரு புதிய போக்கின் ஆரம்பமா அல்லது விசேட சந்தர்ப்ப சூழ்நிலைகள் நிர்ப்பந்திக்குமாற் போல், ஓர் அசாதாரணமான நிலையா? இந்தக் கட்டுரையாளர், விசேட சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒரு புதிய தலைமுறை முஸ்லிம்களின் வாக்களிப்பு நடத்தையில் ஒரு திருப்புமுனையை நிர்ப்பந்தித்தன என நம்புகிறார்.

முதலில், ஏனைய சமூகங்களுடன் முஸ்லிம் வாக்காளர்களின் ஒரு பெரும் பகுதியினர் இள வயதினர் மட்டுமன்றி முந்தைய தலைமுறையினரை விட அரசியல் ரீதியாக கூடுதல் அறிவுள்ளவர்களாகவும் மற்றும் விவேகமானவர்களாகவும் உள்ளனர்.  இந்த வாக்காளர்களுக்கு, தேர்தலின் போது வெறுமனே தெளிவில்லாத மற்றும் வெற்று வாக்குறுதிகளை விட, போட்டியிடும் கட்சிகளின் சம்பந்தப்பட்ட தலைவர்களின் சாதனைகள் மற்றும் தோல்விகள் பற்றிய உண்மையான அடைதல்களின் பதிவுகளே பொருட்டாக உள்ளன. இது, முன்னர் பார்த்திராத ஒரு புதிய முன்னேற்றமாகும். அதன் அடிப்படையில் பிரதான இரண்டு கட்சிகளின் தலைவர்களான, பொதுஜன பெரமுனவின் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், முஸ்லிம் சமூகத்தை, விசேடமாக 2009 இன் பின்னர் மோசமாக கைவிட்டுள்ளனர்.

அந்த வருடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன், கடும்போக்கு தேசியவாத பௌத்த குழுக்களால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை அலைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, இவ்விரண்டு தலைவர்களும் முஸ்லிம்களுக்கு அனுதாபமாக ஒரு விரலையேனும் அசைக்கவில்லை. அத்தகைய அனைத்துக் குழுக்களுள்ளும், கூச்சலிட்டு எதிர்க்கும் அதன் பொதுச் செயலாளராக வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரைக் கொண்ட பொதுபலசேனா, மிகவும் முனைப்பாக இருந்தது. இலங்கை முஸ்லிம் காங்கிரஸினால் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்திற்கு (யு.என்.எச்.சி.ஆர்) சமர்ப்பித்த அறிக்கையின் படி, தனியே 2013இல் மட்டும் முஸ்லிம்களுக்கு எதிராக மொத்தமாக 51 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பதுடன், அதில் பலவற்றில் பொதுபலசேனா முனைப்பாக பங்கு கொண்டிருந்தது. ஓர் ஓய்வுபெற்ற கல்விமானால் குறிப்பிடப்பட்டவாறு, அவற்றுள் பல சம்பவங்கள் “முக்கியத்துவம் அற்றவை” என்பது உண்மையானாலும் கூட, அவை அந்தச் சமயத்தில் அதிகாரத்திலிருந்த அரசாங்கங்களின் சட்டத்தை அமுல்படுத்துவோர்களின் தவறுதலையே பிரதிபலிக்கின்றன. இந்தத் தவறுகை அளுத்கம பிரதேசத்தில் 2014 ஜூன் மாத நடுப்பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான மிக மோசமான வன்முறைகளில் தெள்ளத் தெளிவாக இருந்ததுடன், அவை ஏனைய வன்முறைத் தொடர்களிற்கும் ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கின. அந்தக் கலவரங்களின் போது மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகவும், தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்தனர். அவர்கள் கலவரங்களை நிறுத்துவதற்கு அல்லது அவை மோசமடைவதற்கு முன், இறுதிவரை எதனையுமே செய்யவில்லை. அவர்கள் நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் வெளிப்படையானது. பௌத்த வாக்கு வங்கியை குழப்புவதற்கும் மற்றும் 2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றி வாய்ப்புகளைப் பங்கப்படுத்துவதற்கும் அவர்கள் விரும்பவில்லை. முஸ்லிம்களின் காயத்தின் மேல் உப்பு தடவுமாற் போல, 2014  செப்டெம்பரில், பொதுபலசேனாவின் விசேட அழைப்பின் பேரில் இலங்கை வந்த மியன்மார் தேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் இனவழித்தலுடன் நெருக்கமாக சம்பந்தப்பட்ட 999 இயக்கத்தின் ஒரு பௌத்த துறவியான அசின் விராத்துவிற்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ செங்கம்பள வரவேற்பளித்தார். அளுத்கம கலவரங்கள் மற்றும் அதன் பின்னர் முஸ்லிம்கள் மீதான அவமதிப்பு என்பன 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவை முஸ்லிம் சமூகம் நிராகரிப்பதற்கு காரணமாக அமைந்தன.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான, நல்லாட்சி அரசாங்கமும் அதே கொள்கையைக் கடைப்பிடித்ததுடன், 2015 மற்றும் 2019 இற்கிடையில், இலங்கையில் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஏற்பட்ட போது எதனையும் செய்யாதிருந்தது. அவர்களது செயலின்மையும் மற்றும் இயலாமையும், தேசிய தவ்கீத் ஜமாத் போன்ற சஹ்ரானின் பயங்கரவாதக் குழுக்கள், ஏப்ரல் 2019 இல்,  உயிர்த்த ஞாயிறன்று கொடூரமான படுகொலைகளை மேற்கொள்வதற்கு வழிவகுத்ததுடன், அவை பொதுபல சேனாவினால் மீளவும் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான மேலும் பரவலான கலவரங்களை இயல்பாகவே தூண்டியது. விராத்துவிற்கு மஹிந்த ராஜபக்‌ஷ வரவேற்பளித்தது போன்றே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முஸ்லிம்களின் பாதிப்பிற்கு மேலும் அவமதிப்பளிக்கும் வகையில், நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக ஆறு வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த பொதுபல சேனாவின் ஞானசார தேரரிற்கு பொது மன்னிப்பளித்து விடுதலை செய்தார். ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவுடன் இதில் உடனின்றார். இதனால், 2020 இல் ரணில் விக்கிரமசிங்கவையும் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியையும் நிராகரிப்பதை தவிர முஸ்லிம்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை.

நவம்பர் 2019 இல், இனத்துவ – மத ரீதியில் இறுக்கமாக போட்டியிடப்பட்ட தேர்தலில் கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக வந்த பின்னர், முஸ்லிம்கள் அவரிடமிருந்து நீதியை எதிர்பார்த்தனர். அவரின் கீழ் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் இருக்கவில்லை என்பது உண்மையே. ஆனாலும், முஸ்லிம்களைக் காயப்படுத்துவதற்கு வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றன. நெலும்தெனியாவில் ஒரு பள்ளிவாசலுக்கு முன்பாக நடு இரவில் புத்தர் சிலையை நிறுவியமை, மஹரவிலுள்ள மற்றொரு பள்ளிவாசல் சிறைக் காவலர்களால் பொழுதுபோக்கும் இடமாக மாற்றப்பட்டமை, கொவிட்-19 தொற்றில் உயிரிழந்த முஸ்லிம்களின் உடலங்களை, அவை வாழும் உயிர்களுக்கு வைரசைக் கடத்துகின்றன என விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்படாத ஒரு வாதத்தின் அடிப்படையில், தகனம் செய்வதற்கு சுகாதார திணைக்களம் தீர்மானித்தமையை “ஒரு நாடு ஒரு சட்டம்” என்ற ஓர் அரசியல் வாதத்தின் அடிப்படையில் ஜனாதிபதியால் அனுமதிக்கப்பட்டமை என்பன உண்மையில் முஸ்லிம் சமூகத்தை காயப்படுத்தின. இதேவேளை, முஸ்லிம்களுக்கு எதிராக தங்களது குரோதம் மற்றும் வெறுப்புணர்வையும் பரப்புவதற்கு, பொதுபல சேன மற்றும் ஏனைய கடும்போக்கு தேசியவாத பௌத்த குழுக்கள், தேர்தல் அவசியத்தின் காரணங்களுக்காக, கண்டு கொள்ளாமல் விடப்பட்டன. பொதுஜன பெரமுனைவின் ராஜபக்‌ஷவை முஸ்லிம் வாக்காளர்கள் நிராகரிப்பதற்கு இவை அனைத்தும் பங்களித்தன. இதனால், விரக்தியின் காரணமாக சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதைத் தவிர முஸ்லிம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் உண்மையில் வேறு தெரிவு எதனையும் கொண்டிருக்கவில்லை. இது, அவர்கள் சஜித்தின் கொள்கைகளையோ அல்லது கருத்தியலையோ ஆதரிப்பதாக கருதவில்லை.

ஆகையினால், முஸ்லிம்களின் வாக்களிப்பு நடத்தையில், 2020 தேர்தல், ஒரு திருப்பு முனையைக் குறிக்கின்றது என முடிவு செய்வது உசிதமானதாகும். வெற்றியடையும் சாத்தியம் கொண்டவருக்கு வரலாற்று ரீதியாக வாக்களிக்கும் ஒரு மாதிரியை முஸ்லிம் சமூகம் தொடரும் என எந்தவொரு அரசியல் கட்சியும் இனியும் இலேசாக அனுமானித்துக் கொள்ளக்கூடாது. பதிலுக்கு கட்சிகள் தங்களது வாக்குகளை முஸ்லிம்களிடமிருந்து ஈட்டிக் கொள்ளுதல் வேண்டும். இது முஸ்லிம் இனத்துவக் கட்சிகளுக்கும் பொருத்தமாகிறது, எவ்வாறெனினும் அவை புதிய தலைமுறை முஸ்லிம்களால் மதிப்பிழந்து போயுள்ளன. எந்தவொரு அரசாங்கத்திடமிருந்தும் முஸ்லிம்களுக்கு இனியும் விசேட வரப்பிரசாதங்கள் எதுவும் தேவையில்லை, ஆனால், அவர்களது ஜனநாயக உரிமைகளான நீதி மற்றும் ஒப்புரவான தன்மை என்பன மட்டுமே அவர்களுக்குத் தேவை. ராஜபக்‌ஷ அவற்றை அவர்களுக்கு வழங்குவாரா?

கலாநிதி அமீர் அலி

Muslim Voting In 2020 Elections: An Aberration Or A Turning Point? என்ற தலைப்பில் கொழும்பு ரெலிகிராப்பில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.