பட மூலம், Gihan De Chickera

2018 செப்டம்பர் 11இல் அமைச்சரவை “Counter Terrorism Act – CTA” – பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. எல்டிடிஈ உடனான யுத்த காலத்தின் போது அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக அமுல் செய்யப்படும் வகையில் நாடாளுமன்றத்தில் இது சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாறப்பன இந்த நகல் சட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். அமைச்சர்கள் விஜேதாஸ ராஜபக்‌ஷ மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோருடன் இணைந்துதான் அவர் அதை சமர்ப்பித்துள்ளார். இவர்கள் இருவருமே அவர்களின் முஸ்லிம் விரோத மனோபாவத்துக்காக நன்கு அறியப்பட்டவர்கள். இந்தச் சட்டம் அவ்வளவு கடுமையானதாக இல்லை என்றும் அவர்கள் அமைச்சரவையில் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்கள் மீது அலட்சியமாக இருந்து வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ முன்வைத்துள்ள திருத்தங்களுக்கு இணங்கியுள்ளார்.

இந்த நகல் சட்டமூலம் குறித்து விரிவாகப் பேச நான் விரும்பவில்லை. ஆனால், இந்த சட்டமூலம் ஏன் இப்போது தேவை என்ற கேள்வியை இங்கே எழுப்புவது முறையாகும். இவ்வாறான ஒரு சட்டமூலத்தை நிறைவேற்றினால் அதை இந்த நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கலாம் என்று விஜேதாஸ ராஜபக்‌ஷவும் சம்பிக்க ரணவக்கவும் எண்ணக்கூடும். தங்களுடைய அரசியல் இலக்கை அடைந்து கொள்வதற்காக சமூகங்களைப் பிளவுபடுத்தி வைக்கவும் இதைப் பயன்படுத்தலாம் என்பதும் அவர்களின் எண்ணமாக இருக்கலாம். இந்த சட்டமூலத்தை நிச்சயமாக சிங்கள பௌத்த தீவிரவாதத்துக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும் அவர்கள் அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. இந்த நாட்டில் முஸ்லிம்கள் அடிக்கடி பௌத்த தீவிரவாதத்தின் விளைவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. கடந்த ஆட்சியிலும் சரி இன்றைய ஆட்சியிலும் சரி இந்த நிலை நீடிக்கவே செய்கின்றது.

2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டது முதல் அது மீண்டும் தலையெடுப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இந்த நாட்டில் இதுவரை தென்படவில்லை. இந்த நாட்டில் இப்போது இடம்பெறும் ஒரேயொரு பயங்கரவாதம் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையில் பௌத்த சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் மட்டுமே. இதில் பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படை என்பனவற்றின் தலையீடும் உள்ளது. ஆனால், அரசாங்கம் இந்த விடயத்தில் குருட்டுத்தனமாவே நடந்து கொள்கின்றது.

இவ்வாறானதோர் சூழ்நிலையில் CTA இன் தேவைக்கான அவசியம் என்ன? நாடு இன்றைய சூழலில் மிக மோசமானதோர் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கடந்து கொண்டிருக்கின்றது. கொழுந்து விட்டு எரியும் பல பிரச்சினைகள் அவசர கவனத்தை வேண்டி நிற்கின்றன. ஆனால், அவை அலட்சியம் செய்யப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் பல வன்முறைகளுக்கு முகம் கொடுத்தனர். அதனால் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் நம்பிக்கையோடு மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். சட்டத்தையும் ஒழுங்கையும் நீதியையும் நியாயத்தையும், பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநாட்டி சகலரும் ஒன்றிணைந்து வாழக்கூடிய நல்லிணக்க சூழலை அவர் உருவாக்குவார் என்று முஸ்லிம்கள் முழுமையாக நம்பியதால் தான் அவருக்கு வாக்களித்தனர். ஆனால், அவர் பதவிக்கு வந்து ஓரிரு மாதங்களிலேயே அவரின் சுயரூபத்தைப் புரிந்து கொண்ட முஸ்லிம்கள் அவருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை உணர்ந்து திகைப்படைந்தனர்.

உதாரணத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஜேர்மன் விஜயத்தின் போது யூதர்களின் ஹொலோகோஸ்ட் நூதனசாலைக்கு விஜயம் செய்தமை உள்ளுரில் மட்டும் அன்றி சர்வதேச அரங்கிலும் முஸ்லிம்களை ஆச்சரியத்துக்கு ஆளாக்கியது. உலகம் முழுவதும் வாழும் சமாதானத்தை விரும்பும் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள அப்பாவி பலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் இழைத்து வரும் கொடுமைகளுக்கான ஒரு அங்கீகாரமாகத்தான் இந்த விஜயம் அமைந்தது.

இலங்கை முஸ்லிம்களும் இதனால் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தனர். இந்தக் காயம் ஆறுவதற்கு முன்பே யுத்தக் குற்றவாளியான முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளாயர் இலங்கை அரசாங்கத்தின் கௌரவ அதிதியாக நாட்டுக்கு அழைக்கப்பட்டார். இவரும் இவரது சகாவான அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டமைக்கும் அந்த நாட்டின் பழம் பெரும் வளங்களும் ஏனைய செல்வங்களும் சூறையாடப்பட்டமைக்கும் பொறுப்புக் கூற வேண்டிவர்கள். ஈராக் என்ற ஒரு செல்வம் மிக்க அரபு நாட்டின் அடித்தளக் கட்டமைப்பையே நாசமாக்கியவர்கள் தான் இவர்கள்.

மேலைத்தேச சார்புடைய பிரதமர் ரணிலின் செயற்பாடுகளையும் முஸ்லிம்கள் மறந்து விடவில்லை. ஈராக் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் ஆக்கிரமிப்பு நடத்திய போது அதை கண்டிக்க மறுத்த மற்றும் மறந்த ஒரேயொரு மூன்றாம் உலகத் தலைவர் அன்றைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான். இந்த ஆக்கிரமிப்பை அரசு கண்டிக்க வேண்டும் என்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பிய போது அதைச் செய்ய வேண்டுமானால் அரசாங்கத்தில் இருந்து விலகி இருந்து செய்யலாம் என்று கூறியவரும் இவர்தான்.

டொனி பிளயர் தனது விஜயத்தின் போது ரணில் மைத்திரி ஆகிய இரு தலைவர்களையும் சந்தித்தார். இதில் ரணில் எப்போதுமே ஐரோப்பிய அமெரிக்க மற்றும் யுத்த வெறி கொண்ட இஸ்ரேலின் சிறந்த நண்பனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மிகவும் கேவலமான இன்னொரு விடயம் தான் லக்ஷ்மன் கதிர்காமர் நினைவு மண்டபத்தில், லக்மன் கதிர்காமர் நினைவுப் பேருரை வழங்க டொனி பிளாயர் அழைக்கப்பட்டமை. மனித விழுமியங்கள் எதையும் இந்த அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்பதையே இது சுட்டிக் காட்டுகின்றது. இந்த நாடு 1960 களிலும் 1970 முற்பகுதி வரையிலும் மிகவும் துணிச்சலான சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டிருந்த ஒரு நாடு என்பதும் இங்கே நினைவூட்டத்தக்கது.

இவ்வாறான பின்னணியின் நடுவே தான் முஸ்லிம்கள் மீதான பரவலான தாக்குதல்களும் தொடர்ந்தன. அப்போது பேராசிரியர் சரத் விஜேசூரிய தலைமையில் சிங்கள மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று 2017 ஜூன் மாதத்தில் கூட்டாக ஜனாதிபதியைச் சந்தித்தது. முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் பரவலான தாக்குதல்களை நிறுத்துமாறு அவரை இந்தக் குழு கேட்டுக் கொண்டது. ஆனால், இந்தக் கோரிக்கையை செவிமடுக்க மறுத்த ஜனாதிபதி அவை அரசை கவிழ்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியால் தூண்டிவிடப்படும் செயற்பாடுகள் எனக் கூறி சமாளித்தார்.

எவ்வாறாயினும் சில மாதங்கள் கழித்து 2018 மார்ச்சில் நூற்றுக் கணக்கானவர்களை உள்ளடக்கிய சிங்கள பௌத்த குழுக்கள் மத்திய மலைநாட்டின அம்பதென்ன பகுதியில் ஒன்று கூடி பின்னர் அம்பாறை, தெல்தெனிய, திகன, அக்குறனை என பல இடங்களில் தமது இனவாதச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்து விட்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை என்பது வெறுமனே தற்செயலாக இடம்பெற்ற ஒன்றல்ல. அது நன்கு திட்டமிடப்பட்ட கருத்தியலினதும் அரசியல் நிகழ்ச்சி நிரலினதும் பின்னணியைக் கொண்டது என்பதே புத்திஜீவிகள் பலரின் பரவலான கருத்தாக இருந்தது. சிலர் அதை வேறு விதமாக மிகைப்படுத்தினர். தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரப்பாடற்ற நிலையில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு அரசாங்கத்தால் அரங்கேற்றப்பட்ட ஒரு விடயம் என விளக்கமளித்தனர்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி. என். டீ. உடுகம இதுபற்றிக் கூறுகையில்: சமூக ஊடகங்கள் வாயிலாக சில குழுக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வெறுப்பு பிரசாரத்தின் தொடர்ச்சியாகவே இந்தப் பரவலான வன்முறைகளும் இடம்பெறுகின்றன. சமய வெறுப்புணர்வையும் கண்டி மாவட்டத்திலும் ஏனைய இடங்களிலும் வன்முறைகளைத் தூண்டிவிட்டவர்களையும் சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இத்தகைய வன்முறைகளில் நேரடியாகப் பங்கேற்றவர்களுக்கு எதிராக மட்டும் அன்றி அவற்றைத் தூண்டிவிட்டவர்களுக்கு எதிராகவும், இந்த வன்முறைகளுக்கு அமைப்பு ரீதியான பலத்தை கொடுத்தவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என குறிப்பாக நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

இத்தகைய குறுகிய நோக்கம் கொண்ட குழுவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட நபர்களுக்கும் அமைப்புக்களுக்கும் எதிராகத் தீர்க்கமான முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இத்தகைய சம்பவங்கள் தொடரும் என்பது மட்டும் அல்ல அவை அதிகரிக்கவும் இடமுண்டு என்பதே ஆணைக்குழுவின் நம்பிக்கையாகும். நல்லாட்சி, சமாதானமான எதிர்காலம் போன்ற நம்பிக்கைகளை விதைத்த இந்த அரசாங்கம் அவற்றை எல்லாம் மீறி இனவாதிகளை தூண்டிவிட்டு தங்களைத் தாக்கி வருவதாக முஸ்லிம்கள் நம்பத் தொடங்கி உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், யார் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதான் மிகவும் வெற்கக்கேடான ஒரு நிலை. ஜனாதிபதி சிறிசேன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட எவரையும் சென்று பார்வையிடவில்லை. ஆனால், அவசர அவசரமாக ஓடிச் சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இப்போது இந்த சூழ்ச்சிகளின் தொடராக அம்பாறையில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் இறக்காமம் மாயக்கல் பிரதேசத்தில் பௌத்த மடம் ஒன்றை நிறுவ இனவாதிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது அங்கு பெரும் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது. அரசாங்கம் இந்த விடயத்திலும் இனவாதிகளின் பக்கம் உள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இந்த அரசு பதவிக்கு வந்து மூன்றரை வருடங்கள் கழிந்துள்ள நிலையில் சகல துறைகளிலும் அது வழங்கிய வாக்குறியை நிறைவேற்றத் தவறியுள்ளது.

முஸ்லிம்கள் மீது அடுத்தடுத்து தொடர்ந்து தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் மூலம் தம்மைப் பொருத்தமட்டில் மஹிந்த ராஜபக்‌ஷ அரசுக்கும் ரணில் மைத்திரி அரசுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் கிடையாது என முஸ்லிம்கள் எண்ணுகின்றனர்.

இன்னொரு புறத்தில் அரசாங்கத்தின் மிக மோசமான வெளிநாட்டு கொள்கை முடிவுகள் காரணமாக மியன்மார் அரசை ஆட்டிப் படைக்கும் அந்த நாட்டின் இராணுவத்தால் றோஹிங்யா இன முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன ஒழிப்பு தாக்குதல்களையும் இந்த அரசு கண்டிக்கத் தவறியது.

உலகம் முழுவதும் முஸ்லிம்களைப் பாதிக்கும் எல்லா விடயத்திலும் இந்த அரசு பொழுதுபோக்காகவே செயற்பட்டுள்ளது. உதாரணத்துக்கு அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பிரான்ஸ், ரஷ்யா என எல்லா முஸ்லிம் விரோத சர்வதேச சக்திகளும் சேர்ந்து ஒன்பது முஸ்லிம் நாடுகளை குண்டுவீசி தாக்கி அழித்து ஒரு கோடி பத்து லட்சத்துக்கும் அதிகமான உயிர்களைக் கொன்று குவித்து ஐந்து கோடிக்கும் அதிகமானவர்களை அகதிகளாக்கி முகாம்களுககுள் முடக்கியுள்ளனர். இன்று இந்த சக்திகள் அனைத்துக்கும் இந்த நாட்டில் பிரதான இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது சதித் திட்டத்தின் ஓர் அங்கமாக இங்கும் முஸ்லிம் விரோத நிகழ்ச்சி நிரலுடன் ஒன்று திரண்டுள்ளனர். பயங்கரவாத முறியடிப்பு சட்டம் போன்ற சட்டங்களை இவர்களுக்கான ஆயுதமாக வழங்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இவர்கள் அரசாங்கத்தின் ஆதரவை அனுபவிக்கின்றனர். பிரதான ஊடகப் பிரிவுக்குள் இவர்கள் ஊடுருவி இருப்பதாக பலரும் சந்தேகிக்கின்றனர். இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய அளவிலான சதித் திட்டம் ஒன்றுடன் இவர்கள் காத்திருப்பதாகவே அறிவுபூர்வமாக சிந்திக்கும் முஸ்லிம்கள் சந்தேகிக்கின்றனர்.

வாஷிங்டன் – டெல்அவிவ் – புதுடில்லி என்ற சட்டகத்துக்குள் செயற்படும் முஸ்லிம்களுக்கு எதிரான தீய சக்திக்குள் இந்த அரசாங்கம் இப்போது மாட்டிக் கொண்டுள்ளமை நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.

இந்த தீய கூட்டணியின் தோற்றம் சோவியத் யூனியனின் சரிவோடு தொடங்கியது. சர்வதேச விடயங்களைப் பொறுத்தமட்டில் நிரந்தர நண்பர்கள் கிடையாது, நிரந்தர நலன்கள் மட்டுமே உள்ளன என்ற பழம்பெரும் கூற்றுக்கு இசைவாக இந்த மூன்று சக்திகளும் ஒரே அச்சில் ஒன்றிணைந்துள்ளன.

அமெரிக்க இராஜாங்க செயலாளரும் தீவிர சுவிஷேச கிறிஸ்தவரும் முஸ்லிம்களுக்கு எதிரான தீவிர யுத்த வெறியருமான மைக் பொம்பியோ அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இந்தக் கூட்டணிக்கான உத்தரவாதத்தை அளித்துள்ளார். அவருடன் டொனால்ட் டிரம்ப்பின் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மெட்டிஸ், தீவிர யூத ஆதரவாளர் ஜோன் பொல்டன் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டமை இந்தக் கூட்டணியை மேலும் வலுவுள்ளதாக்கி உள்ளது. சுவிஸேஷ கிறிஸ்தவ பிரிவு, யூத பிரிவு இந்து பயங்கரவாதிகளான ராஷ்டிரிய சுயம்சேவாக் சங் ஆர்எஸ்எஸ் ஆகிய மூன்று பிரிவுகளும் முஸ்லிம்களுக்கு எதிரான நாசகாரத் திட்டங்களுடன் கைகோர்த்துள்ளன.

இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இந்த மூன்று தரப்பினரிடமும் இருப்பது ஒரே கொள்கைதான். ஒரே நோக்கம்தான். இந்த மூன்று சக்திகளுக்கும் அவர்களின் உள்ளூர் கூலிப்டையினருக்கும் இந்த நாட்டின் அரசாங்கம் கதவுகளைத் தாராளமாகத் திறந்துவிட்டுள்ளது. சிங்கள சமூகத்தில் பொறுப்புள்ள சக்திகள் இதற்கு எதிராக எழுந்து நிற்காவிட்டால், உலகளாவிய மட்டத்தில் அழிவுகளை ஏற்படுத்தும் இந்தச் சக்திகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், எல்லோரதும் விருப்பத்துக்கு எதிராக இந்த நாடு ஒரு கொலைக்களமாக மாறுவதை தடுக்க முடியாமல் போய்விடும்.

எவ்வாறேனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய ஐக்கிய நாடுகள் உரையின் பின் ஒரு சிறிய நம்பிக்கை கீறல் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் வெளிநாடுகளின் தலையீடடுக்கு அவசியமில்லை என்று கூறியுள்ள அவர் இஸ்ரேலின் கெடுபிடிகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலஸ்தீன மக்களின் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதான் ஒரு சிறிய நம்பிக்கையாகத் துளிர் விட்டுள்ளது.

லத்தீப் பாரூக்