படம் | PRESS EXAMINER

இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச முக்கியத்தவம் பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதை விட இலங்கைத் தமிழரசுக் கட்சி என்றுதான் அழைக்க வேண்டும் என வேறு சிலர் காரணமும் கூறுகின்றனர். உள்ளக முரண்பாடுகள், முதலமைச்சா விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் செயற்பாடுகள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், தமிழர்களின் சமகால அரசியல் முக்கியத்துவதை குறைத்துள்ளன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய கட்சிகளையும் அரவணைத்துச் செல்ல முடியாத நிலையில் சம்பந்தன் இருக்கின்றார் என்ற குற்றச் சாட்டுக்கள் தற்போது அதிகரித்துள்ளன.

வெளிப்படைத் தன்மையில்லை

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை அரசு முன்வைக்கவில்லை என்பது வேறு, அது 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பிரச்சினை. தற்போது வடக்கு – கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட நிலையில் வட மாகாண சபையின் அதிகாரங்களை உரிய முறையில் செயற்படுத்த அரசு அனுமதிக்கவில்லை என்பதும் இருக்கின்ற அதிகாரங்களைப் பிடிங்கி எடுக்கின்றார்கள் என்பதும் சர்வதேச ரீதியாக தெரிந்த விடயங்கள். இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள், மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணையும், அதன் மூலமான நிரந்த அரசியல் தீர்வுக்கும் பல தரப்புகளும் அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான காலகட்டத்தில் தலைமையை ஏற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தளவுக்கு பொறுப்புடன் செயற்படுகின்றது என்பது கேள்வியாகும்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 38 உள்ளூராட்சி சபைகளில் 90 வீதமான சபைகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது ஆட்சியில் வைத்திருக்கின்றது. கிழக்கு மாகாண சபையில் 14 உறுப்பினர்கள், வட மாகாண சபையில் 30 உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் 16 உறுப்பினர்கள். ஆகவே, குறைந்தபட்சம் இத்தனை உறுப்பினர்களையும் வட மாகாணத்தின் ஆட்சி ஒன்றையும் வைத்துக் கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுகின்றதா? நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டம், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் ஆகிய கூட்டங்களைக்கூட தலைமை உரிய நேரத்தில் கூட்டுகின்றதா? அல்லது இவர்களுடன் ஆலோசித்து ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்களா என்ற கேள்விகள், சந்தேகங்கள் வலுப் பெற்றுள்ளன.

கூட்டுப்பொறுப்பு இல்லை

யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளை விட ஒரு தேசிய இயக்கம் போன்ற செயற்பாடு ஒன்றுக்காகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மக்கள் தொடர்ந்தும் ஆதரரித்து வந்தனர். ஆனால், இங்கு சாதாரண கட்சி அரசியல் செயற்பாட்டு முறைகள் கூட இல்லாத நிலையில் சில குறிப்பிட்ட நபர்களுடைய விருப்பு வெறுப்புகளுடன் கூட்டமைப்பு செயற்படுவதாக விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர். குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம், அதுவும் சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா என்ற மூன்று நபர்களுடைய தனிப்பட்ட முடிவுகள்தான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவாகவும், அதுவுவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீர்மானமாகவும் காண்பிக்கப்படுகின்றது.

இதுதான் தற்போதைய பிரதான முரப்பாண்டுக்கு காரணமாக அமைகின்றது. இதனை மூன்று வகையாக பார்க்கலாம். ஒன்று – சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் என்ற மூன்று நபர்களுடைய செயற்பாடுகள். இரண்டாவது – கூட்டமைப்புக்குள் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் இல்லை. குறிப்பாக தனிநபர் முடிவுகள் ஏனைய உறுப்பினர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மூன்றாவது – தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எனக் கூறிக்கொண்டு தமிழரசுக் கட்சியால் புலம்பெயர் நாடுகளில் சேர்க்கப்படும் நிதிக்கும் கணக்கு காண்பிக்கப்படுவதில்லை. இந்த மூன்று வகையான விடயங்களும் கூட்டமைப்புக்குள் பல நெருக்கடிகளையும் சந்தேகங்களையும் உருவாக்கியுள்ளன. இதனால், தமிழர் அரசியலுக்கான அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்க முடியாத நிலையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தாளும் தந்திரத்திற்குள் இலகுவாக எடுபடக்கூடிய நிலையும் தோன்றியுள்ளன.

முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அதேவேளை, வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள 38 உள்ளூராட்சி சபைகளில் 90 சதவீதமானவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியில் இயங்குகின்றன. ஆனால், அந்த உள்ளூராட்சி சபைகள் எவ்வாறு செயற்படுகின்றன, சபைகளுக்குரிய வருமானங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இருக்கின்ற வளங்களை கொண்டு போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறான உதவிகளை செய்யலாம் என்பது போன்ற திட்டங்கள் எதுவும் கூட்டமைப்பின் தலைமையால் வகுக்கப்படவில்லை. உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களை வருடத்துக்கு ஒரு தடவையேனும் சம்பந்தன் சந்தித்து உரையாடுவதில்லை.

சிங்கள அரசியல் கட்சிகளின் தலைமைகள் தங்கள் சார்பான உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களை அழைத்து உரையாடுவார்கள். ஏனெனில், சாதாரண மக்களின் மன உணர்வுகள் அந்த உறுப்பினர்களுக்குத்தான் தெரியும்.

ஆகவே, அந்த உரையாடல் மூலம் கட்சியைப் பலப்படுத்தலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. ஆனால், கூட்டமைப்பிடம் அவ்வாறான பண்புகள் இல்லை எனலாம். அதேவேளை, வட மாகாண சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் நான்கு பேர் அமைச்சர்கள், ஒருவர் தவிசாளர், ஒருவர் முதலமைச்சர். இந்த ஆறு பேரையும் தவிர ஏனைய 24 உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாடுவதில்லை என்றும், இந்த ஆறு பேருமே சகல முடிவுகளையும் எடுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. நான்கு அமைச்சுகளும் முதலமைச்சரின் கீழ் 16 திணைக்களங்களும் உள்ளன.

இருக்கின்ற அதிகாரங்கள்?

இந்த 24 உறுப்பினர்களுக்கும் இவற்றை பகிர்ந்தளித்து நிர்வாகத்தை இலகுவாக்கலாம். ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் அவ்வாறான திட்டங்கள் இருந்ததாக கடந்த இரண்டு வருட ஆட்சியில் காண முடியவில்லையென சிலர் குற்றம் சுமத்துகின்றனர். ஆகவே, அரசு அரசியல் அதிகாரங்களை வழங்கவில்லை என்பது ஒரு புறம், மறுபுறத்தில் இருக்கின்ற அதிகாரங்களை சரியாக தமக்குள்ளே பரவாலாக்கம் செய்து செயற்படுத்த முடியாத நிலையில் வட மாகாண சபையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் காணப்படுகின்றது. எனவே, 1920களில் தேசிய இயக்கத்தின் பிளவுடன் ஆரம்பித்த இன முரண்பாடு, அதன் பின்னரான 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டம் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டங்களினால் சர்வதேசத்தைப் பேச வைத்தது. ஆனால், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சுழலில்?