படம் | FLICKR

கொல்லப்பட்ட, காணாமல்போன சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் மைத்திரிபால – ரணில் அரசு, தமிழ் ஊடகவியலாளர்கள் குறித்து இதுவரை எதுவித விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை என இலங்கையின் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினரும் தினக்குரல் வார இதழின் ஆசிரியருமான பாரதி ராஜநாயகம் கூறுகிறார்.

இன சமத்துவ அடிப்படையில் அரசு செயற்படுவதாக இருந்தால் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனக் கூறும் பாரதி ராஜநாயகம், சிலவேளை விசாரணை தொடங்குவதன் மூலம் சங்கடத்துக்கு முகம் கொடுக்க வேண்டிய சூல்நிலை அரசுக்கு ஏற்படுவதைத் தவிர்க்கவே விசாரணை பட்டியலில் இருந்து தமிழ் ஊடகவியலாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்.

‘மாற்றம்’ தளத்துக்கு வழங்கிய நேர்க்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாரதி ராஜநாயகம் மேலும் கூறுகையில் (கீழே வீடியோ வடிவிலும் நேர்க்காணலை முழுமையாகப் பார்க்கலாம்),

“கடந்த காலங்களில் கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பாக புதிய அரசு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த விசாரணைகளில் பாரியளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

IMG_8591

இன்னும் தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை

இருந்தபோதிலும் வடக்கு – கிழக்கு மற்றும் கொழும்பில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பாக எதுவித விசாரணையும் நடத்தப்படவில்லை. கடந்த காலங்களிலும் விசாரணைகள் நடத்தப்பட்டிருக்கவில்லை, புதிய அரசு பதவியேற்ற பின்பும் கூட எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

இந்த நிலைமையில் தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுவது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. ஏனென்றால், தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடக்கூடிய நிலைமைதான் நாட்டில் காணப்படுகிறது.

கடந்த காலங்களில் காணப்பட்ட அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள் காரணமாக 30இற்கும் மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களும்கூட இன்னும் நாட்டுக்கு வரமுடியாததொரு சூழ்நிலைதான் காணப்படுகிறது. தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகளுக்குப் பொறுப்பானவர்கள், அச்சுறுத்தல் விடுத்தவர்கள் இனங்காணப்பட்டு தண்டனை வழங்காத ஒரு நிலைமைதான் இதற்குக் காரணமாக உள்ளது.

சங்கடம் ஏற்படும் என்பதால் விசாரணை இல்லை

இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதும், தமிழ் ஊடகவியலாளர்கள், குறிப்பாக சொல்லப்போனால், யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட நிமலராஜன், கொழும்பில் கொல்லப்பட்ட சிவராம், மட்டக்களப்பில் கொல்லப்பட்ட நடேசன், திருகோணமலையில் கொல்லப்பட்ட சுகிர்தராஜன் போன்றவர்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவருமே இராணுவத்தை விமர்சித்தவர்கள் அல்லது அரசை விமர்சித்தவர்கள் என்பதனால் அவர்கள் அனைவரும் தமிழ் தேசியவாதிகளாக இனங்காணப்பட்டிருக்கிறார்கள். அவர்களது கொலைகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதால் ஒருவேளை தங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசு நினைக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால், நிமலராஜன் கொல்லப்பட்டபோது ஆட்சியில் இருந்தவர் சந்திரிக்கா குமாரதுங்க. இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்தால் நிச்சயமாக அரசுக்கு சங்கடம் ஏற்படக்கூடும். இதுபோன்ற சில காரணங்களாலும் அரசு தயங்குகிறது.

ஊடகப் பணியாளர்களுக்கும் நீதி வேண்டும்

இருந்தபோதிலும், இந்த நாடு இன சமத்துவ அடிப்படையில் செயற்படுவதாக இருந்தால் – ஊடக சுதந்திரம் இரு இனத்தவருக்கும் பொதுவாக இருக்க வேண்டுமாக இருந்தால் – தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகளும் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.

அதேபோல், யாழ். உதயன் பத்திரிகை அலுவலக தாக்குதலின் போதும், பத்திரிகை விநியோகத்தின் போதும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு.

ஊடக அமைப்புகளின் பொறுப்பு

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவுகள் பெருமளவில் வெளிநாடுகளில்தான் வசிக்கின்றனர். இங்கு இருக்கும் ஒரு சிலரும், தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடக்கூடும் என்ற அச்சத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களான தங்களது உறவுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர்.

இருப்பினும், ஊடகவியலாளர்களுக்காக குரல்கொடுத்து வரும் தமிழ் – சிங்கள ஊடக அமைப்புகள் இது தொடர்பாக தற்போது குரல்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன்” – என்றார் அவர்.

வீடியோ வடிவில் நேர்க்காணலை முழுமையாகக் கீழே காணலாம்.