Photo, GETTY IMAGES

அறிமுகம்

யுத்தத்தின் கோரப்பிடியிலிலிருந்து விடுபட்டுள்ள இலங்கை போன்ற நாடானது தனது பிரஜைகளை ஓரங்கட்டி அவர்கள் மீது பரந்தளவில் திணிக்கப்பட்டுள்ள கடுமையான சட்டங்களை அகற்றியிருக்க வேண்டும். இருந்தும், உள்நாட்டு[i] மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு [ii]பதிலளிக்கும் வகையில் தொடர்ந்து வரும் அரசாங்கங்களால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களால் 40 வருடங்களாக பிரஜைகளின் மீது குறிப்பாக சிறுபான்மை மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத்துக்கெதிரான சட்டத்தின் (PTA) அடுத்த முயற்சியாக கடந்த மார்ச் 17ஆம் திகதி புதிய பயங்கரவாதத்துக்கெதிரான சட்டக்கோவை (ATA) முன்மொழியப்பட்டுள்ளது.

வழங்கப்பட்டுள்ள பரந்த அதிகாரத்துக்கான எவ்வித நியாயப்பாடுகளும் இல்லை

முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தில் சிவில் சமூகம், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சிறுபான்மை உட்பட ஏனையோரின் சட்டபூர்வமான, அமைதியான செயற்பாடுகளையும் அரசாங்கத்துக்கெதிரான மாற்றுக்கருத்துகளையும் ஒடுக்கும் வகையில்  நிறைவேற்று அதிகாரம் பாவிக்கப்பட இருப்பதை அரசாங்கம் ATA மூலம் வெளிப்படுத்தியுள்ளது. வழங்கப்பட்டுள்ள பரந்த அதிகாரத்துக்கான எவ்வித நியாயப்பாடுகளும் இல்லை. வழமையைப்போல இம்முறையும் முன்மொழியப்பட்டுள்ள சட்டமூல வரைவில் இருக்கும் ஏற்பாடுகளுக்கான சூழமைவும் நோக்கமும் குறிப்பிடப்படவில்லை. ATAயின் முன்னுரையின் படி, நாட்டின் பொருளாதாரமானது பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதனால் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு கட்டுப்படுவதோடு உலகின் ஏனைய இறைமையுள்ள நாடுகளையும் பாதுகாப்பதற்கான உறுதியையும் அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட எந்த நோக்கங்களும் ATAயின் ஏற்பாடுகளில் பிரதிபலிக்கப்படவில்லை.

ATAயில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா வகையான குற்றங்களுக்குமான சட்டங்கள் பரந்தளவில் குறிப்பிடப்பட்டிருப்பினும் உண்மையில் இம்முன்மொழிவானது அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் பிரஜைகளுக்கெதிரான பிரேரணையாகவே கொள்ளப்படவேண்டும்.

பொதுமக்களின் எழுச்சியின் போது முடுக்கிவிடப்பட்டுள்ள ATA

இலங்கையானது பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்நேரத்தில் அரசாங்கம் கொண்டுவந்துள்ள கொள்கைகள் மக்களின் மீது பலத்த அடியாக விழும் நேரத்தில் ATA அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாது மத்தியதர மக்களின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கியிருப்பது வாடிக்கையாயுள்ள நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை குறிவைத்தே ATA வரையப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியிலும் உயர்தட்டு மக்களின் நலன்களை பாதுகாப்பதற்காக, போராட்டக்காரர்கள் ‘தீவிரவாதிகளாக’ காட்டப்பட்டுள்ளார்கள். இதன்மூலம் தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டமூல வரைபானது ஜனநாயகத்துக்கெதிரான சட்டமூலமாககொள்ளப்படவேண்டும்.

முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமானது

  1. பயங்கரவாதம் என்ற குடையின் கீழ் பரந்தளவிலான குற்றங்களை உள்ளடக்கியுள்ளது.
  2. அசாதாரணமான கைது மற்றும் தடுத்துவைத்தலை தொடர்ந்தும் நிலைநிறுத்தியுள்ளதோடு விரிவுபடுத்தியுமுள்ளது.
  3. பொலிஸாருக்கு விசாரணை மேற்கொள்ளும் அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளது.
  4. குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கும் அதிகாரத்தை சட்டமா அதிபருக்கு விரிவாக்கியுள்ளது.
  5. அமைப்புகளை தடைசெய்தல், ஊரடங்கை அமுல்படுத்தல், தடுக்கப்பட்ட பிரதேசங்களை (உயர்பாதுகாப்பு வலயங்களை போல) பிரகடனப்படுத்தல், புனர்வாழ்வு மையங்களை நிறுவுதல் போன்ற விடயங்களில் ஜனாதிபதிக்கு பரந்தளவிலான அதிகாரங்கள் வழங்கியுள்ளது.

முன்மொழியப்பட்ட ATAவின் விதிகளை சுருக்கமாகப் பார்த்தால், அது PTAயை விட மோசமானது என்பது நிரூபணமாகிறது. PTAயில் காணப்பட்ட ‘ஒப்புதல் பிரிவு’ நீக்கப்பட்டுள்ளதோடு கைதுகள் மீதான நீதித்துறை மேற்பார்வை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கைதுகள் மீதான நீதித்துறை மேற்பார்வையை ஈடுசெய்ய தடுப்பு உத்தரவுகளின் அதிகாரம் பெருமளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதோடு அறிமுகப்படுத்தப்பட்ட நீதித்துறை மேற்பார்வை பொருளற்றதாக மாறுகின்றது.

  1. பயங்கரவாதக் குற்றம் என்பதன் வரையறையை விரிவுபடுத்துகிறது

குற்றங்களுக்கெதிரான சாதாரண பாதுகாப்புகளை நீக்கும் ஒரு சட்டமானது ஒரு குற்றம் நிகழும் சூழ்நிலைகள் மற்றும் அவற்றை குற்றங்களாக நோக்கக்கூடிய சந்தர்ப்பங்களை துல்லியமாக வழங்கி இருக்கவேண்டும். இது அவ்வாறான சட்டங்கள் முறையற்ற மற்றும் நியாயமற்ற வழிகளில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளை குறைக்கும். அதனால்தான் பயங்கரவாதம் என்ற வரையறை தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும்.

ATAவில் முன்மொழியப்பட்ட பிரிவு 3(2)இல் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பது, தனியார் சொத்துகளைத் திருடுவது மற்றும் சட்டவரைவில் பரந்தளவில் குரிப்பிடப்பட்டுள்ள ஏனைய பயங்கரவாத குற்றச்செயல்களை மேற்கொள்ள இணையும் கூட்டங்களில் அங்கத்தவராக இருப்பது என 13 வகையான பயங்கரவாத குற்றச்செயல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கொடுக்கப்பட்டுள்ள வரைவிலக்கணத்தின்படி, பயங்கரவாத நிகழ்வுகள் என அரசாங்கம் கருதுவது,

– குடிநீர் மாசுபடுதலில் அரசின் தலையீட்டுக்கெதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட ரத்துபஸ்வல ஆர்ப்பாட்டம், எரிபொருள் விநியோகம் தொடர்பில் ரம்புக்கனையில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை, மீதொட்டமுல்ல குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டும் அரச தீர்மானம், ஹம்பாந்தோட்டை கைத்தொழில் அபிவிருத்தி வலயங்கள் போன்ற திட்டங்கள் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பேரில் நகர்ப்புற மக்கள் வெளியேற்றம், பெருந்தோட்ட அபிவிருத்திக்காக நடைபெரும் நில அபகரிப்பு மற்றும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி பொதுமக்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள்

  • தொழிற்சங்க வேலை நிறுத்தம்
  • வெகுஜன குடிமைப் போராட்டங்கள் மற்றும் கீழ்ப்படியாமை நடவடிக்கைகள் (2018இல் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போராட்டம் மற்றும் 2022இன் GGG)
  • தேசிய நலனுக்குத் தீங்கானதாகக் கருதப்படும் விமர்சனம் (திஸ்ஸநாயகம் போன்றோரின் கைதுகள் மற்றும் வழக்குகள் போன்றவை (இன வெறுப்பை தூண்டும் வெளியீடுகள் மூலம் பணம் வசூலித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட திஸ்ஸநாயகம்), அசாத் சாலி (பொதுபல சேனா மீதான அவரது விமர்சனங்கள் இன ஒற்றுமையின்மைக்கு தூண்டுதலாகக் கூறப்பட்டது).
  • மனித உரிமை ஆர்வலர்கள் (ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தைபிரவீன் ஆகியோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்தபோது இடம்பெற்ற கைது மற்றும் தடுத்துவைப்பு போன்றவை)

பிரிவு 3(2) வரையறையானது சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளை முற்றிலும் மீறுகிறது. வரைவிலக்கணமானது குற்றங்களின் நீண்ட பட்டியலைக் கொண்டுள்ளது. இந்த குற்றங்களில் பல, சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களாக இருக்க வேண்டும். இருப்பினும், அவற்றை ‘பயங்கரவாத குற்றங்கள்’ என்று மறுவடிவமைப்பது அடிப்படையில் நாட்டிற்கு அச்சுறுத்தலாகும்.

ATAஇல் உள்ள வரைவிலக்கணம் UN நெறிமுறைகளை மீறுகிறது.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பயங்கரவாதத்தை வரையறுக்கும் முயற்சிகள் பின்வரும் கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்:

  • அ. வரையறுக்கப்பட்ட குற்றங்கள் (பயங்கரவாதத்திற்கு எதிராக வரையப்பட்ட 10 சர்வதேச உடன்படிக்கைகளில் காணப்படும் ‘தூண்டுதல் குற்றங்கள்’ என விவரிக்கப்பட்டுள்ளவை) மற்றும்
  • பகுதி 1 நோக்கம் – கொலை, கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்தல், அல்லது பணயக்கைதிகளாக வைத்திருத்தல்
  • பகுதி 2 நோக்கம் – பயங்கரவாத நிலையைத் தூண்டுதல்/ மக்களை மிரட்டுதல்/ அரசு அல்லது சர்வதேச அமைப்பைச் செய்ய அல்லது தவிர்க்கும்படி கட்டாயப்படுத்துதல்

பயங்கரவாதம் எனும் குற்றத்தை உறுதிசெய்ய நோக்கத்தின் இரு பகுதிகளும் இருக்க வேண்டும்.

சர்வதேச விதிமுறைகளின்படி, குற்றங்களை சுருக்கமாக வரையறுப்பதில் ATA தோல்வியடைந்துள்ளது. மேலும் பயங்கரவாதத்துக்கெதிராக வரையப்பட்ட 10 சாசனங்களையும் கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளது. கீழ்வரும் நிலைகளில் மாத்திரமே பயங்கரவாத குற்றங்கள் நிகழ முடியுமென்ற சர்வதேச உடன்படிக்கைகளின் நிலைப்பாடுகளை ATA பூர்த்திசெய்ய தவறியுள்ளது.

– கொலை, கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்தல் அல்லது பணயக்கைதிகளாக வைத்திருத்தல்

– பயங்கரவாத நிலையைத் தூண்டுதல்/ மக்களை மிரட்டுதல்/ அரசு அல்லது சர்வதேச அமைப்பைச் செய்ய அல்லது தவிர்க்கும்படி கட்டாயப்படுத்துதல்.

ATAயில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகமான குற்றங்கள் தெளிவற்றதாகவும் மிகையானவையாகவும் சேர்க்கப்பட்டுள்ளன.

பிரிவு 10ன் படி (அ) பயங்கரவாதம் என்ற தவறைப் பொதுமக்கள் புரிவதற்கு, ஆயத்தஞ்செய்வதற்கு அல்லது ஏவிவிடுவதற்கு அவர்களை நேரடியாக அல்லது; நேரடியாகவல்லாமல்; ஊக்குவிப்பதற்கு அல்லது; தூண்டுவதற்குப் பொதுமக்களுள் சிலரினால் அல்லது எல்லோரினாலும் விளங்கிக்கொள்ளக் கூடிய சாத்தியங்கொண்ட கூற்றொன்றை வெளியிடுகின்ற அல்லது வெளியிடச் செய்விக்கின்ற அல்லது ஏதேனும் சொல்லை அல்லது சொற்களைப் பேசுகின்ற, எவையேனும் சைகைகளை அல்லது புலப்படத்தக்க குறிப்பீடுகளைச் செயகின்ற, அல்லது (ஆ) பயங்கரவாதம் என்ற தவறைப் புரிவதற்கு ஆயத்தஞ்செய்வதற்கு அல்லது ஏவிவிடுவதற்குப் பொதுமக்களை நேரடியாக அல்லது நேரடியாகவல்லாமல் ஊக்குவிப்பதற்கு அல்லது தூண்டுவதற்கு உட்கருதுகின்ற செயல்கள் பயங்கரவாத செயல்களாக கொள்ளத்தக்கன. இதன்படி பார்க்கும் போது சாதாரண குற்றங்கள் கூட பயங்கரவாத குற்றங்களாக உள்ளடக்கப்பட்டுள்ள இவ்வரைபின் படி யாரொருவர் ஏதேனுமொரு விடயத்தை வெளியிடும் போது அதனை ‘பயங்கரவாதம்’ என்ற தவறைப் புரிவதற்கு அல்லது ஆயத்தஞ்செய்வதற்கு அல்லது ஏவிவிடுவதற்கான செயல் என பொருள்கோடல் செய்வது கடினமான காரியமாக இராது.

பிரிவு 11இன் படி ஒரு பயஙகரவாத வெளியீட்டை விநியோகித்தல், சுற்றிவழங்குதல், கொடுத்தல், விற்பனைசெய்தல், கடனாகக் கொடுத்தல், விற்பனைக்காக முனைதல், பெற்றுக்கொள்ளல், வாசித்தல் அல்லது பார்த்தல், ஒரு கொடை அல்லது விற்பனை மூலம் அதனைப் பெறுவதற்கு அவர்களை இயலச்செய்யும் சேவையொன்றை ஏனையோருக்கு வழங்குதல் அல்லது ஒரு பயங்கரவாத வெளியீட்டின் உள்ளீடுகளை இலத்திரனியல் முறையில் கடத்துதல் போன்றவை பயங்கரவாத செயல்களாகும். பயங்கரவாதம் என்பது ‘பயங்கரவாத வெளியீடு’ என்பதாக பொருள்கோடல் செய்யப்படும் போது அதன் அர்த்தம் மேலும் விரிவாக்கப்படுகின்றது.

முன்மொழியப்பட்டுள்ள வரைபின் 12ஆம் பிரிவின் படி ‘பயங்கரவாதம்’ குறித்த அறிவுறுத்தல்களை பெறுதல், வழங்குதல் அல்லது பயிற்சிபெறுவதும் பயங்கரவாத குற்றமாகும். இதன்படி, ஆர்ப்பாட்டங்களை எங்கு, எப்படி நடத்துவது, என்ன பதாகைகளை ஏந்துவது போன்ற அறிவுறைகளை பெறுவதும் வழங்குவதும் கூட இதன் மூலம் அர்த்தம் கொள்ளப்படும் அபாயம் இருக்கின்றது. முன்மொழியப்பட்டுள்ள தண்டனையானது 15 வருட கடுங்காவல் சிறைதண்டனையும் 10 லட்ச ரூபா தண்டப்பணமுமாகும்.

16ஆம் பிரிவின்படி இச்சட்டத்தின் நியதிகளின்படி விடுக்கப்பட்ட ஒரு சட்டமுறையான பணிப்புரை அல்லது கட்டளைக்கு முரணாகச் செயலாற்றுகின்றவரும் அல்லது அதனை மீறிச் செயலாற்றுகின்றவரும் அல்லது இணங்கியொழுகுவதற்கு வேண்டுமென்று தவறுகின்றவரும் அல்லது அசட்டை செய்கின்றவரும் கூட குற்றவாளிகளாகக் கருதப்படுவர். 16ஆம் பிரிவு, 61ஆம் பிரிவோடு இணைத்து வாசிக்கத்தக்கதாக இருக்கிறது. பிரிவு 61ஆனது இச்சட்டத்தின்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் மேற்கொள்ள அதிகாரமளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறிப்பிடுகின்றது. அவையாவன: (அ) ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட இடப்பரப்பினுள் அல்லது; வளவுகளினுள் பிரவேசிக்காதிருத்தல்;

(ஆ) குறித்துரைக்கப்பட்ட இடப்பரப்பொன்றை அல்லது வளவுகளை விட்டுச்செல்லல்; (இ) குறித்துரைக்கப்பட்ட இடப்பரப்பொன்றை அல்லது வளவுகளை விட்டுச்செல்லாது அத்தகைய இடப்பரப்பினுள் அல்லது வளவுகளினுள் தொடர்ந்திருத்தல்; (ஈ) ஏதேனும் வீதியில் பிரயாணஞ்செய்யாதிருத்தல்; (உ) எதனையும் இடம்பெயர்க்காதிருத்தல் அல்லது எவருக்கும் போக்குவரத்தை வழங்காதிருத்தல்; (ஊ) குறித்துரைக்கப்பட்ட பொதுப்போக்குவரத்து முறைமையொன்றின் தொழிற்பாட்டை இடைநிறுத்துதல்; (எ) ஏதேனும் அமைவிடத்திலிருந்து குறித்தவொரு புறப்பொருளை, வாகனத்தை, கலத்தை அல்லது வானூர்தியை நீக்குதல்; (ஏ) வாகனம், கலம், கப்பல் அல்லது வானூர்தியொன்று அதன் தற்போதைய நிலையில் தொடர்ந்திருப்பதைத் தேவைப்படுத்துதல்; (ஐ) மேலதிக அறிவித்தல் வழங்கப்படும் வரை, கலம் அல்லது கப்பலொன்று குறித்துரைக்கப்பட்டதோடு இடப்பரப்பினுள் கடற்பயணத்தைச் செய்யாதிருத்தல்; (ஒ) வானூர்தியொன்று குறித்துரைக்கப்பட்ட வான்வெளிக்கு வெளியே அல்லது அதனுள் பறக்காதிருத்தல்; (ஓ) ஏதேனும் குறித்த அமைவிடத்தில் ஒன்று கூடாதிருத்தல்; (ஒள) குறித்தவொரு கூட்டம், பேரணி அல்லது ஊர்வலத்தை நடாத்தாதிருத்தல்; அத்துடன்; (க) ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட செயற்பாட்டில் ஈடுபடாதிருத்தல்.

ATAயானது வரம்பற்ற குற்றங்களை உருவாக்கியுள்ளதோடு அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகமாகும். அதேவேளையில், இவ்வரைபின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத குற்றங்களை வரையறுப்பதற்கான ஆரம்ப எல்லை மிக குறுகியதாக இருப்பதோடு அவை தொடர்பான நிறைவேற்று அதிகாரங்களும் எல்லையற்று வழங்கப்பட்டிருப்பதானது சர்வதேச நியமங்களை மீறுவதாகவே இருக்கின்றது. இதன்மூலம் சட்டபூர்வமாக மேற்கொள்ளப்படும் பேச்சு, ஊடக செயற்பாடுகள் மற்றும் ஏனைய ஜனநாயக நடவடிக்கைகள் பயங்கரவாதம் எனும் போர்வைக்குள் ஈர்க்கப்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதன் உருவாக்கமே துஷ்பிரயோகத்தை ஏற்பாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. அரசாங்கத்துக்கெதிரான மக்களின் விமர்சனத்தையும் எதிர்ப்பையும் ‘பயங்கரவாதம்’ என வரையறுப்பதன் மூலம் அரச அதிகாரிகளுக்கான அதிகாரங்கள் ஈடில்லாத வகையில் வழங்கப்பட்டுள்ளன.

  1. அசாதாரண சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்படும் கைதுகளும் தடுத்துவைக்கும் அதிகாரமும் தொடரப்படும் நிலை

பயங்கரவாதம் என விரிவாக வரைவிலக்கணப்படுத்தப்பட்ட செயல்களுக்கு ஆயுதப்படைகள் மற்றும் கரையோர காவற்படைகளுக்கு கைதுசெய்யும் அதிகாரத்தை விரிவுபடுத்துவது முறையற்றதாகும். மேலும் நீதிமன்ற மீளாய்வில்லாத ‘தடுப்பாணை’ என்ற நிறைவேற்று அதிகாரத்தைப் பலப்படுத்தி மிக நீண்ட காலத்துக்கு ஒருவரின் பௌதீக தனியுரிமையை அபகரிக்கும் நிலையை ஏற்படுத்துவது ஏற்புடையதல்ல. சாதாரண தண்டனைச் சட்டத்தை எல்லா வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளோடும் நடைமுறையில் வைத்திருப்பதே சாலச்சிறந்ததாகும். நீதிமன்ற மீளாய்வற்ற தடுப்பாணை எவ்வகையிலும் நியாயம் காணவே முடியாத ஏற்பாடாகும்.

முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தின்படி சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு 48 மணிநேரங்களுக்குள் நீதவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டும். தடுப்பாணை வழங்கப்பட்டிருப்பின் அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை நீதவான் வழங்குவார். சந்தேக நபரை விடுதலை செய்யும் அதிகாரம் நீதவானுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனில், பிரிவு 28(2)(ப்)(ஈஇ)ன் படி, சந்தேக நபரை கைதுசெய்த பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஏதாவதொரு காரணத்தின் அடிப்படையில் விண்ணப்பிக்கும் பட்சத்தில் நியாயமான அடிப்படையில் விண்ணப்பிக்கப்பட்டதாக நீதவான் கருதும் நிலையிலேயே அவரால் குறித்த சந்தேகநபரை விடுவிக்க முடியும்.

பிரிவு 31ன் படி தடுப்பாணையானது பிரதி பொலிஸ்மா அதிபரால் வழங்கப்பட முடியும். முன்னர் இவ்வதிகாரம் பாதுகாப்பு அமைச்சரிடமே இருந்தது. இதன் மூலம் தடுப்பாணை வழங்கும் அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதோடு துஷ்பிரயோகிக்கப்படும் வாய்ப்புகளும் அதனால் உருவாகியுள்ளது புலனாகிறது. தடுப்பாணை வழங்கும் அதிகாரத்துக்கான அடிப்படையான காரணங்கள் நீதித்துறை சார் அதிகாரிகளே வழங்கவேண்டும் என்றிருந்த நிலை இல்லாமலாகி தடுப்பாணை வழங்கும் அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளதன் மூலம் அரசாங்கமானது முன்னைய சட்டமூலத்தை கடந்து வந்து மோசமான மனித உரிமை மீறல்களை தெளிவாகவே மேற்கொண்டுள்ளது.

பிரிவு 31(6)ன் படி உருவாக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட தடுத்து வைத்தல் இடங்களானவை நீதிமன்ற அல்லது சிறைச்சாலைகள் அமைப்பின் மேற்பார்வையில்லாமல் பொலிஸாரின் மேற்பார்வையில் இயங்கும் மையங்களாகவே உருவாக்கப்பட்டுள்ளன. தடுத்து வைக்கும் மையங்கள் சித்திரவதை மையங்களாக இருப்பது இலங்கை வரலாற்றில் புதிதல்ல. இச்சட்ட வரைபின் ஏற்பாடானது சித்திரவதையைத் தடுக்கும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை விதிகளையே மீறுவதாக இருக்கின்றது. சந்தேக நபரொருவர் விசாரணை மேற்கொள்வோரின் காவலில் இருக்கும் காரணம் என்ன? நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் சந்தேகநபரொருவர் காவலில் வைக்கப்படுவதன் மூலம் விசாரணை மேற்கொள்வோரின் நலன்களிலிருந்து வேறாக்கப்பட்டு சந்தேகநபர் பாதுகாக்கப்படுகின்றார். இதன்மூலம் விசாரணைகள் நடைபெறுவது தடுக்கமுடியாததாக மாறுகின்றது. பிரிவு 38ன் படி தடுத்து வைக்கப்படுவதற்கான உயர்ந்தபட்ச கால எல்லை 12 மாதங்களாகும். பிரிவு 41 ஆனது ஒரு சந்தேக நபரின் மீது வழக்கு உருவாக்கப்பட்டு நீதிமன்ற காவலிலிருந்து அகற்றப்பட்டு தடுத்து வைக்கப்படுவதற்கான அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்குகின்றது. இம்மொத்த ஏற்பாடுமே நியாயமற்றதாகவும் அசாதாரணமாகவுமே காணப்படுகின்றது.

  1. குற்றத்தை ஒப்புக்கொள்வதற்காக வழக்கு தொடர்வதை நிறுத்தும் வகையில் நபர்களை சட்டமா அதிபர் வலியுறுத்தும் சூழமைவு உருவாக்கப்படும் நிலை

பிரிவு 71ன் படி, சட்டமா அதிபருக்கு இச்சட்ட மூல வரைபின் கீழ் குற்றவழக்கு பதியப்பட்ட ஒருவரின் குற்றவழக்கை அதிகபட்சமாக 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரால் மேல்நீதிமன்றத்தின் தண்டனை வழங்கும் ஆணையை மீளப்பெற்று பின்வரும் நிபந்தனைகளின் கீழ் ஒத்திவைக்க முடியும்: கழிவிரக்கத்தையும் மன்னிப்பையும் பகிரங்கமாக வெளிப்படுத்துதல், பலிக்குட்படுத்தப்பட்டோருக்கான இழப்பீட்டை வழங்குதல், குறித்துரைக்கப்பட்ட புனர்வாழ்வு நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றல், இச்சட்டத்தின் கீழான தவறொன்றைப் புரிவதிலிருந்து தவிர்ந்திருப்பதென அந்நபர் பகிரங்கமாகப் பொறுப்பேற்றல், குறித்துரைக்கப்பட்ட சமூக சேவையில் ஈடுபடுதல், ஏதேனும் குற்றம்பகரும் தவறை அல்லது சமாதானக்குலைவைப் புரிவதிலிருந்து தவிர்ந்திருத்தல். இவ்வாறான நிபந்தனைகள் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை குற்றத்துக்கு ஒப்புக்கொள்வதன் மூலம் இழுபறி நிலையில் போகும் தடுத்து வைத்தல் மற்றும் குற்றவழக்குகளை தவிர்க்க முடியுமென்ற நிலைக்கு கொண்டுவரச்செய்யும் ஏற்பாடாகவே கொள்ள முடியும்.

  1. ‘தடைசெய்யப்பட்ட அமைப்புகளாக’ ‘பிரகடனப்படுத்தும் நிறைவேற்று அதிகாரம், ‘மட்டுப்படுத்தற் கட்டளை’, ஊரடங்குக்கட்டளைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள்

பிரிவு 82ன் படி தடைசெய்தற் கட்டளைகள் ஜனாதிபதியால் வழங்கப்படுவனவாகும். ஏதேனும் ஒரு இயக்கம், முன்மொழியப்பட்டுள்ள இச்சட்டமூலத்தில் குறிபிடப்பட்டுள்ள குற்றச்செயல்களை புரிந்ததான முகாந்திரத்தின் அடிப்படையிலோ, தேசிய பாதுகாப்புக்கு அல்லது ஏனைய நாடுகளின் பாதுகாப்புக்கு பங்கம் விளையும்படி நடப்பதாகவோ அறியப்படின் ஜனாதிபதியால் அவ்வமைப்பானது தடைசெய்தற் கட்டளையின் மூலம் தடைசெய்யப்படலாம். இதன் விளைவாக யாரும் அவ்வமைப்பின் அங்கத்தவராக மாறுவதிலிருந்தும், அவ்வமைப்பானது யாரையும் அங்கத்தவராக ஆக்குவதிலிருந்தும், அவ்வமைப்பின் குறிக்கோள்களுக்கேற்ப யாரும் நடப்பதிலிருந்தும், கூட்டங்களையோ செடற்பாடுகளையோ கூட்டுவதிலிருந்தும் நடத்துவதிலிருந்தும், வங்கிக்கணக்குகளை பேணுவதிலிருந்தும் நிதிசார் செயற்பாடுகளில் ஈடுபடுவதிலிருந்தும், உடன்படிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்தும், நிதிசேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும், நிதி மாற்றீடுகளில் ஈடுபடுவதிலிருந்தும், அவ்வமைப்பின் பேரில் ஆதரவு திரட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவதிலிருந்தும், அவ்வமைப்பின் குறிக்கோளகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் வெளியீடுகள் குறித்தும் தடைசெய்தற் கட்டளைகளை வழங்கலாம். பிரிவு 82(7)(அ) படி தடைசெய்தற் கட்டளை ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படலாம். பின்னர் ஒவ்வொரு வருடமும் நீடிக்கப்படலாம்.

பிரிவு 83ன் படி வழங்கப்படும் மட்டுப்படுத்தற்கட்டளைகளை ஜனாதிபதி மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள அதிகாரமளிக்கப்பட்டுள்ளார். இதன் உப பிரிவின் படி, மட்டுப்படுத்தற் கட்டளையானது, (அ) வதிவிடத்துக்கு வெளியேயான நடமாட்டம்; (ஆ) வெளிநாடுகளுக்குப் பயணஞ்செய்தல்; (இ) இலங்கையினுள் பயணஞ்செய்தல்; (ஈ) வதிவிடத்துக்கும் தொழிலிடத்துக்கும் இடையேயான வழமையான மார்க்கத்துக்கு வெளியே பயணஞ்செய்தல்; (உ) கட்டளையிற் குறித்துரைக்கப்படவேண்டியவாறான குறிப்பிட்ட ஆட்களுடனான தொடர்பாடல் அல்லது சேருகை அல்லது இரண்டும்; அல்லது (ஊ) இச்சட்டத்தின் கீழான தவறொன்றைப் புரிவதனை வசதிப்படுத்தக்கூடிய குறித்த சில குறித்துரைக்கப்பட்ட செயறபாடுகளில் ஈடுபடுதல் என்பவற்றை குற்றங்களாகக் காண்கின்றது.

ஜனாதிபதி அலுவலகமானது இது தொடர்பில் நீதிமன்றின் மீது நெருக்குவாரம் செய்யும் நிலை உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஒரு குற்றம் நிகழும் வேளையில் அது தொடர்பில் இக்கட்டளையை விண்ணப்பிக்கும் தேவை ஜனாதிபதிக்கு வழங்கப்படத்தேவையில்லை, அவ்விடயம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றின் முன் கொண்டுவரப்பட வேண்டியதாகும். பயணத்தடை போன்ற கட்டளைகள் நீதிபதியினால் கொண்டுவரப்பட வேண்டியதாகும். மேலும் இக்கட்டளையால் தடுக்கப்பட்ட நபர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நீதிமன்ற மேன்முறையீட்டு நீதிமன்றமாகும் – அதாவது புவியியல் ரீதியில் மிக அருகிலிருக்கும் நீதிமன்றமாகும். இதன்மூலம் நீதியை வேண்டும் செயற்பாடு மேலும் கடினமாக்கப்படுகின்றது.

இவ்வர்த்தமானியின் மூலம் ஜனாதிபதி ஊரடங்கு கட்டளைகளை வழங்கும் அதிகாரத்தை பெறுகிறார்.

பிரிவு 85(1)இன் படி ஜனாதிபதி தடைசெய்யப்பட்ட பிரதேசங்களை பிரகடனப்படுத்தும் அதிகாரத்தைப் பெறுகிறார். இதன்மூலம் வான்படை அல்லது கரையோர பாதுகாப்புப்படையின் இயக்குனரின் பரிந்துரையின்படி நேரத்துக்கு நேரம் எப்பிரதேசத்தையும் தடைசெய்யப்பட்ட பகுதியாக பிரகடனம் செய்யும் அதிகாரத்தை இவ்வர்த்தமானி மூலம் ஜனாதிபதி பெறுகின்றார். இதன்மூலம் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உள்நுழையும் அனுமதி, புகைப்படங்களை எடுக்கும் அனுமதி, கானொளி அல்லது திட்ட உருவரைகளை உருவாக்கும் அனுமதி போன்றன தடைசெய்யப்படலாம். காலவரையறை குறிப்பிடப்படாததால் இக்கட்டளை நிரந்தரமானதாக மாறும் அபாயமும் உள்ளது. இவ்வேற்பாடானது, பொதுமக்களை குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு உள்நுழைய அனுமதி மறுக்கும் கட்டளைகளைப் பெற பொலிஸார் நீதிமன்றங்களுக்குச் செல்லும் நிலையை இல்லாமலாக்கி இவ்வாறான கட்டளைகள் பொது அமைதியை குலைக்கும் நடவடிக்கைகளுக்கெதிரான ஏற்பாடாக காட்டும் முயற்சியாக நீதிமன்றங்களுக்குக் காட்டுவதாக கொள்ளப்படலாம். இது யுத்த காலத்தில் நடைமுறையில் இருந்த உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு ஒப்பான ஏற்பாடாக க் காணப்படுகின்றது.

பிரிவு 71இன் படி சட்டமா அதிபரின் பரிந்துரையின் படி குற்றவழக்குகள் ஒத்திவைக்கப்பட்டவர்கள் மற்றும் பிரிவு 77இன் படி குற்றப்பத்திரங்கள் சுமத்தப்பட்டவர்களின் மீது பிரிவு 100(1)ன் படி ஜனாதிபதி புனர்வாழ்வு செயற்றிட்டங்களுக்கான ஒழுங்குமுறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை பெறுகின்றார். இதன் மூலம் அரசாங்கம் ஏற்கனவே கடைபிடித்து வந்த நடைமுறைக்கான நியாயப்பாட்டை வழங்கவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உடனடியான விடுதலைக்காக புனர்வாழ்வை தெரிவுசெய்ய பலவந்தப்படுத்தும் நிலைக்குக் கொண்டுவரும் ஏற்பாடாகவுமே இப்பிரிவை கொள்ளலாம். இம்முறை மூலம் சட்டமா அதிபர் ஒரு சந்தேக நபரின் மீது வழக்குத்தொடராத போதும் அந்நபர் தண்டனைக்கு உள்ளாக்கப்படும் அல்லது ‘கட்டுப்படுத்திவைக்கப்படும் அபாயம் ஏற்படுகின்றது. அதாவது, பயங்கரவாதம் என்ற பரந்தளவிலான வரைவிலக்கணத்தினால் காரணமே இல்லாமல் கைதுசெய்யப்பட்ட ஒருவர் உடனடியான விடுதலைக்காக குற்றத்தை ஒப்புக்கொண்டு புனர்வாழ்வை தெரிவுசெய்யும் நிலைக்கு ஒருவர் தள்ளப்படுகின்றார்.

  1. முன்மொழியப்பட்டுள்ள இச்சட்டமூலத்தின் கட்டளைகள்/ அறிவுறுத்தல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான கைது, தடுத்துவைப்பு மற்றும் ஏனைய அபாயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட குற்றமற்ற பிரஜையொருவருக்கான எவ்வித இழப்பீடும் இவ்வரைபில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இதன்மூலம் பிரஜைகள் இச்சட்டமூலத்தின் பயன்பாட்டால் பாரிய சிக்கலுக்குள் தள்ளப்படுகின்றார்கள்.

எர்மிஸா டேகல்

28 மார்ச் 2023 அன்று ft.lk தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.

 

[i] 2018ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்துக்கெதிரான சட்டமூல வரைபு மற்றும் PTAக்கு எதிரான நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட பிரச்சாரங்கள் மற்றும் வெளியீடுகள்

[ii] ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் செய்யப்பட்ட உறுதிமொழியின் வடிவத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தடைக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை, ஏழு ஐ.நா. சிறப்பு நடைமுறை ஆணை வைத்திருப்பவர்கள் PTA தொடர்பான தற்காலிக செயல்நிறுத்தத்தை கோரியமை, நாட்டின் அறிக்கைகள் மற்றும் சித்திரவதை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்களின் கடிதங்கள், இதனால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் ஒரு தீர்மானத்திற்கான நிபந்தனைகளின் ஒரு பகுதியை உருவாக்கியமை, மேலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் இலங்கை மீது ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம்