Photo, Ishara S.kodikara/AFP, THE GUARDIAN

நல்ல விடயங்கள்

மார்ச் 22, 2023 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திற்கெதிரான சட்ட மூலம் நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபின் பெரும்பாலான பகுதிகளை மீளக் குறிப்பிடும் சட்ட மூலமாகக் காணப்படுகின்றது. கைதினைக் குறிப்பிட்டு ஆவணமொன்று வழங்கப்படல், பெண்கள் மீதான சோதனைகள் பெண் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படல், மொழிபெயர்ப்புக்கான அணுகல் அத்துடன் தடுப்புக்காவல் ஆணை ஒன்றின் கீழ் தடுத்து வைக்கப்படும் நபர்கள் 14 நாட்களுக்கு ஒரு தடவை நீதவானின் முன் முன்னிலைப்படுத்தப்படல் போன்ற அடிப்படையாகக் காணப்படும் சட்டத்தின் தக்கவாறான நடைமுறைக்கான உரிமைகள் போன்றனவும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ளடங்குவதை அவதானிக்க முடிகின்றது. எனினும், அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க இந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் போதுமானவையா? அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களினால் பயங்கரவாதத்தை முறியடித்தல் என்ற போர்வையில் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற துஷ்பிரயோகங்களை முன் தடுக்க இவை போதுமானவையா? என்பன போன்ற கேள்விகள் எம்முன்னே தோன்றுகின்றன.

தீய விடயங்கள்

ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் அடிப்படையில் அமைந்த, சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணம் ஒன்று பயங்கரவாதத்துக்கு வழங்கப்படாமை, ஒரு செயற்பாட்டை பயங்கரவாதக் குற்றமாக கருதுவதற்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்று அலகுகள் ஒன்றிணைக்கப்பட்டு அளிக்கை செய்யப்பட வேண்டும். சட்ட மூலத்தில் வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணம் இந்த நியமத்தை பின்பற்றியொழுகியதாக அமையவில்லை. குறித்த அலகுகள் பின்வருமாறு:

  • மரணத்தை அல்லது தீவிரமான உடற் காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள், அல்லது பணயக் கைதிகளைப் பிடித்தல், அத்துடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு எதிராக தீவிரமான அல்லது தீவிர உடலியல் வன்முறையில் ஈடுபடல்,
  • ‘பயங்கர நிலை ஒன்றை தூண்டும், சனத்தொகை ஒன்றை பயமுறுத்தும், அல்லது அரசாங்கம் அல்லது சர்வதேச நிறுவனம் ஒன்றை எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளாதிருக்க நிர்ப்பந்திக்கும்’ நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள்,
  • பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சர்வதேச நெறிமுறைகளினால் வரையறுக்கப்பட்ட அத்துடன் அவற்றின் பரப்பு எல்லைக்குள் காணப்படும் குற்றங்களை உருவாக்கும் வகையில் அமைந்த செயற்பாடுகள்.

எனவே, பயங்கரவாதத்தின் வரைவிலக்கணத்தின் பரப்பு எல்லைக்குள் இந்த அனைத்து அலகுகளும் உள்ளடங்கும் வகையில் கருதப்படும் செயற்பாடு அமைந்திருக்க வேண்டும். இதன் பொருள், தேசிய சட்டங்களின் கீழ் அல்லது சர்வதேச சட்டங்களின் கீழ் குற்றங்களாகக் கருதப்படும் அனைத்துக் குற்றங்களும் பயங்கரவாதக் குற்றங்கள் என்பதற்குள் உள்ளடங்காது என்பதாகும். மேலும், குறித்த வரைவிலக்கணம் துல்லியமானதாக அமைந்திருப்பது மாத்திரமன்றி அது தேவை, விகிதாசாரம் அத்துடன் சட்டபூர்வம் ஆகிய கொள்கைகளை பின்பற்றியொழுகும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும். இதற்கு முரணாக, பயங்கரவாதத்திற்கெதிரான சட்ட மூலம் பயங்கரவாதத்துக்கு வழங்கும் வரைவிலக்கணம் பரந்ததாகவும் ‘இலங்கையின் அல்லது வேறேதேனும் இறைமைகொண்ட நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு முரணாகச் செயலாற்றுதல் அல்லது இறைமையை மீறுதல்’  என்பன போன்ற வரையறுக்கப்படாத அலகுகளையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

இலங்கையின் சூழமைவை கருத்திற்கொள்ளும் போது, வரலாற்று ரீதியாக, பிராந்திய ஆட்சி முறை போன்ற குறிப்பிட்ட சில அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு ஆதரித்து வாதிடுவது கூட இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு அல்லது இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் விடயம் என முத்திரை குத்தப்படலாம் என்பது கரிசனைக்குரிய விடயமொன்றாக அமைகின்றது.

குறிப்பிட்ட குழுக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறையைத் தூண்டுதல் என்பவற்றை குற்றமாக்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயத்தின் (ICCPR) பகுதி ஒன்று இச்சட்ட மூலத்தில் மீளக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக இந்த விடயங்கள் சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழான குற்றங்கள் என்ற நிலையில் இருந்து பயங்கரவாத குற்றங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. குடியியல் உரிமைகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ICCPR இன் இப்பகுதி அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களினால் சக்திக சத்குமார மற்றும் அஹ்னாப் ஜஸீம் போன்ற எழுத்தாளர்கள் மற்றும் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை அடக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு அவர்களை சிறையிலடைக்கப் பயன்படுத்தப்பட்ட அதேவேளை, குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய பொது பல சேனா அமைப்பின் ஞானசார தேரோவுக்கு எதிராக இச்சட்டத்தின் கீழ் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்புடையதாக, பயங்கரவாதத்திற்கெதிரான சட்ட மூலத்தில் கொலைக்கான தண்டனையாக மரண தண்டனை உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் அதற்காக மேன்முறையீடு செய்யும் வேளை, அம்மேன்முறையீட்டின் மீதான விசாரணை முடிவடையும் வரை மரண தண்டனை நிறைவேற்றப்படலாகாது என இச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதற்கான தவணை நீடிப்பு நடைமுறை இலங்கையில் 1976ஆம் ஆண்டு தொடக்கம் அமுலில் காணப்படுவதை இச்சட்ட மூலத்தை வரைந்தவர்கள் அறியவில்லை எனத் தோன்றுகின்றது. மேலும், ஜனாதிபதி மரண தண்டனையை அமுல்படுத்தப் போவதில்லை என சட்டமா அதிபர் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்திருந்தார்.

அவசட்சணமான விடயங்கள்

முந்தைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தைப் போன்றே பயங்கரவாதத்திற்கெதிரான சட்ட மூலமும் குற்றங்களை இடம்பெறுவதை முன்னதாகவே தடுத்தல் உள்ளடங்கலாக ஆயுதப் படைகளுக்கு பரந்த சட்ட அமுலாக்கல் அதிகாரங்களை வழங்கியுள்ளது. உதாரணமாக “(ஒரு நபர்) குற்றமொன்றைப் புரிந்துள்ளார் என நம்புவதற்கு நியாயமான அடிப்படைகள் காணப்படும் நிலையில்” இராணுவ அதிகாரியொருவர் நபர் ஒருவரைக் கைது செய்யும் அதிகாரம் மிக்கவராகக் காணப்படுகின்றார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் மீறல்களைக் கருத்திற்கொள்ளும் போது, இவ்விடயம் பரந்த அளவில் பொருள்கோடல் கொள்ளப்பட்டு, சான்றுகள் எவையும் அற்ற நிலையிலும் உரிய நடைமுறை பின்பற்றப்படாமல் மக்கள் கைது செய்யப்படுவதற்கு பயன்படுத்தப்படலாம். விசாரணைகள் மேற்கொள்ளப்பட முன்னர் அல்லது கைதினை மேற்கொள்வதற்கு போதிய அடிப்படைகள் உள்ளனவா என்பதை உறுதி செய்வதற்கு அவசியமான சான்றுகள் சேகரிக்கப்பட முன்னர் நபர்கள் கைது செய்யப்படும் போக்கை நோக்கும் வேளை இவ்விடயம் கரிசனைக்குரிய விடயமாக அமைகின்றது.

இராணுவத்தின் அதிகரிக்கப்பட்ட தலையீடு பொலிஸ் செயற்பாட்டின் சிறந்த கொள்கைகளை மீறுவதாக அமைகின்றது, மேலும், சட்ட அமுலாக்கத்தை இராணுவ மயமாக்குகின்றது. அத்துடன், இது அவசரகால நிலையை ஒத்த நிலையை உருவாக்க வழிவகுக்கின்றது. ஆயுதப்படைகள் தாம் கைதுசெய்த நபர்களை உடனடியாக அல்லது சாத்தியமான அளவு விரைவாக பொலிஸாரிடம் கையளிக்க வேண்டும் என்ற நிலை மாற்றப்பட்டு அவ்வாறான கையளிப்புகளுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இராணுவம் சட்ட அமுலாக்கத்துக்கு பயிற்றப்பட்ட அமைப்பாக இல்லாத நிலையில் இவ்விடயம் துஷ்பிரயோகங்களுக்கு வழி சமைக்கும் விடயமாக அமைகின்றது. வன்முறைப் பயன்பாடு இறுதி வழியாக அல்லாமல் முதல் தருணங்களிலேயே பிரயோகிக்கப்படுவதை இவ்வேற்பாடு ஏதுவாக்குகின்றது. வரலாற்று ரீதியாக இராணுவம் மேற்கொண்ட பாரிய மனித உரிமை மீறல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

எந்தவொரு நபர், வாகனம், நீர் வாகனம், புகையிரதம் அல்லது எந்தவொரு வளாகத்தையும் முன் அனுமதி, ஆணை அல்லது மேற்பார்வையின்றி சோதனை செய்யும் அதிகாரத்தை ஆயுதப்படை அல்லது கரையோரக் காவல் படையின் எந்த ஒரு உறுப்பினருக்கும் இச்சட்ட மூலம் வழங்கியுள்ளது, இது அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்க முடியும். இதேபோன்று, எந்த ஒரு பொருள் அல்லது ஆவணத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை இச்சட்ட மூலம் அனுமதிக்கின்றது.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் (DIG) ஒருவருக்கு அதிகபட்சம் ஒரு வருடம் வரையான தடுப்புக்காவல் ஆணையினை வழங்க முடியும். தடுப்புக்காவல் ஆணைக்கான காலப்பகுதி நிறைவுற்ற பின்னர் குறித்த நபர் மேலும் ஒரு வருடத்துக்கு விளக்கமறியல் தடுப்புக்காவலில் வைக்கப்பட முடியும். எனவே, இங்கு தடுப்புக்காவல் ஆணை மேலதிக தடுப்புக்காவலை தூண்டும் விடயமாக ஆகின்றது. எனவே, பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவி நிலையிலுள்ள நபர் ஒருவருக்கு தடுப்புக்காவல் ஆணையினை வழங்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பது நபர் ஒருவரின் தடுப்புக்காவலை மேலும் நீடிப்புக்கு உட்படுத்தும் சாத்தியத்தை ஏற்படுத்துகின்றது. தடுப்புக்காவல் ஆணை ஒன்று நீதவான ஒருவரிடம் சமர்ப்பிக்கப்படும் வேளை ‘அத்தகைய தடுப்புக்காவல் ஆணையை நடைமுறைப்படுத்த உத்தரவிடுவது’ நீதவானுக்கு தேவைப்படுத்தப்பட்டுள்ளது. நீதவான் ஒருவரின் மேற்பார்வைக் கடமை என்பது ஆணை நீக்கப்படுவதன் தேவை மற்றும் அதன் சட்ட ரீதியான தன்மையை சோதனை செய்வதாகும், எனவே, இங்கு நீதவான் செயற்படும் மேற்பார்வை பொறிமுறையாக அன்றி இறப்பர் முத்திரையிடும் பொறிமுறையாக ஆக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், நீதவானின் மேற்பார்வை காணப்படுவது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் பல ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ள அவ்வேற்பாடுகள் தொடர்புபட்ட உண்மையான அதிகாரங்கள் பொலிஸாருக்கே வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் கோரும் அடிப்படைகளுள் நீதவான் திருப்தியடையும் அடிப்படை ஒன்றின் கீழேயே நபர் ஒருவரை விடுதலை செய்யலாம்.

எனவே, குறித்த நபர் பொலிஸார் வழங்கும் அடிப்படைகளின் கீழ் விடுதலை செய்யப்பட முடியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் தேவைப்பாடு மாத்திரமே நீதவானுக்கு முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டம் ஏற்படுத்தியுள்ளது. தடுப்புக்காவலில் வைக்கப்பட வேண்டிய நபர் ஒருவரை விடுவிக்க வேண்டும் என பொலிஸ் கோருகின்றதா என பொலிஸ் அமைப்பின் மீதான சோதனையாக நீதவான் செயற்பட வேண்டிய தேவைப்பாட்டை சட்ட மூலம் ஏற்படுத்தியுள்ளது. தடுப்புக்காவலில் வைக்கப்பட தேவையற்ற நபர் ஒருவரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்துள்ளதா என சோதனை செய்யும் தேவைப்பாடு நீதவானிடம் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

பொலிஸார் நபர் ஒருவரின் தொடர்ச்சியான தடுத்து வைத்தலைக் கோரும் வேளை ‘இந்தச் சட்டத்தின் கீழ் குற்றமொன்றைப் புரிந்துள்ளார் என நம்புவதற்கான காரணங்கள் இல்லாத போதும்’ அந்நபரை விடுதலை செய்யும் அதிகாரம் நீதவானுக்கு வழங்கப்படவில்லை. எனினும், பிணையில் மாத்திரம் அந்நபரை விடுவிக்கலாம். முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் நீதவானின் கருத்தை பொலிஸாரின் கருத்து மேலோங்கி நிற்கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இது நீதவானின் அதிகாரத்தை குறைப்பதாக அமைந்துள்ளது.

அது இன்னும் மோசமடைகின்றது…

சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரை மீளவும் பொலிஸ் தடுப்புக் காவலுக்கு தடுப்புக் காவல் ஆணை ஒன்றைப் பயன்படுத்தி எடுக்கும் வல்லமையை வழங்கும் பிரிவுகள் இச்சட்ட மூலத்தில் காணப்படுகின்றன. குறித்த நபர் குற்றம் ஒன்றை மேற்கொள்ள அல்லது தப்பியோட முயல்கின்றார் என ‘நம்ப இயலுமான தகவல்களை பெறும்’ வேளை பொலிஸாரால் இதனை மேற்கொள்ள முடியும் என சட்ட மூலம் குறிப்பிடுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட சித்திரவதை போன்ற அதிகமான மீறல்கள் சிறைச்சாலைகளில் அன்றி பொலிஸ் நிலையங்களிலேயே மேற்கொள்ளப்பட்டதாகப் பதிவாகியுள்ள நிலையில், இவ்வாறு நபர்களை மீளவும் பொலிஸ் தடுப்புக் காவலுக்கு உட்படுத்தும் ஏற்பாடு அந்நபர்கள் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்படும் சாத்தியத்தை மேலும் அதிகரிக்கின்றது.

அதேபோன்று, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவு ஒன்றில் நபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்படும் இடத்தை மாற்றும் அதிகாரம் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டிருந்தது. இவ்வேற்பாடு முன்மொழியப்படும் புதிய சட்டத்திலும் அவ்வாறே பின்பற்றப்படவுள்ளது. இவ்வாறான வகையில், விளக்கமறியலில் வைக்கப்படும் இடங்கள் மாற்றப்படும் வேளைகளில் கடந்த காலங்களில் பாரிய மீறல்கள் இடம் பெற்றதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மேற்பார்வையை குறைப்பதற்கான முயற்சிகள்

முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் அடிப்படை உரிமை மீறல்கள் பற்றிய முறைப்பாடுகளை பெறவும் அவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமாந்திரமான அமைப்பொன்றாக சுயாதீன பரிசீலனைக் குழாம் (IRP) உருவாக்கபடவுள்ளமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை குறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் சூட்சுமமான நகர்வொன்றாகவே காணப்படுகின்றது.

அடிப்படை உரிமைகள் மீதான மீறல்கள் பற்றிய முறைப்பாடுகளைப் பெறல் மற்றும் அவற்றினை விசாரணை செய்தல் என்பன இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அடிப்படை செயற்பாடுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இந்நிலையில், சுயாதீன பரிசீலனைக் குழாம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்று எவ்வாறு செயற்பட முடியும் என்ற கேள்வி எழுகின்றது. உதாரணமாக, இரு அமைப்புகளும் ஒரே முறைபாட்டை பெற்றால் என்ன நடக்கும்?

மேலும், முறைப்பாடு ஒன்றைப் பெற்றுக்கொண்ட பின்னர் என்ன நடவடிக்கைகளை எடுக்க அல்லது என்ன தீர்வுகளை வழங்க சுயாதீன பரிசீலனைக் குழாமுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என சட்ட மூலத்தில் குறிப்பிடப்படவில்லை. இப்பிரிவின் உறுப்புரை ஒன்றில் குறித்த குழாம் பெறும் முறைப்பாடுகள் பற்றி கடுமையான இரகசியத்தன்மை பேணப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வேற்பாடு, பெறப்படும் மீறல் குற்றச்சாட்டுக்கள் பொது மக்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்படுவதைத் தடுத்து குற்றமிழைத்தோரை பாதுகாக்கும் நோக்கமே அன்றி முறைப்பாடு மேற்கொள்வோரின் பாதுகாப்பு அல்லது அந்தரங்கத்தை கருத்திற்கொண்டு ஏற்படுத்தப்பட்டதாக தோன்றவில்லை.

‘தடுப்புக்காவல் ஆரம்பமானதில் இருந்து’ 72 மணித்தியாலங்களுக்குள் கைது பற்றிய அறிவித்தல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படுவதை இச்சட்ட மூலம் தேவைப்படுத்தியுள்ளது. எனினும், ‘கைது செய்யப்பட்ட நேரம் அல்லது தடுத்து வைத்தல் ஆரம்பமானதில் இருந்து’ 48 மணி நேரத்துக்குள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீளாய்வுச் சபை மற்றும் சுயாதீன பரிசீலனைக் குழாம் ஆகிய இரண்டு மேற்பார்வை அமைப்புகள் முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மீளாய்வுச் சபையின் தவிசாளராக பாதுகாப்பு செயலாளர் உள்ள அதேவேளை சுயாதீன பரிசீலனைக் குழாமின் உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளனர். எனவே, இவை இரண்டும் சுயாதீனமாகச் செயற்பட முடியாதவை என்பதால் அவற்றினால் நோக்கத்தை எட்ட முடியாது. ஏனெனில், இவற்றினால் பொலிஸார் மேற்கொள்ளும் அதிகார துஷ்பிரயோகங்களைத் தடுக்க முடியாது.

நடவடிக்கைகள் வழமை போன்றே: கட்டுப்படுத்த முடியாத நிறைவேற்று அதிகாரம்

பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கு ஏற்ப, நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் தவறொன்றாக அமைகின்ற ஏதேனும் செயலில் ஈடுபடுவதாக அல்லது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்துகின்ற சட்டமுரணான வழிமுறையொன்றில் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக ‘நம்புவதற்கு நியாயமான ஏதுக்களை’ கொண்டுள்ளவிடத்து அவற்றை தடை செய்யும் அதிகாரத்தை இச்சட்ட மூலம் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. குறித்த அமைப்புக்கள் உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்ளல், ஒன்று கூடல்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதைத் தடுத்தல் போன்ற பல விடயங்கள் இத்தடைகளில் உள்ளடங்குகின்றன. இத்தடை முதலில் ஒரு வருடத்துக்கு விதிக்கப்படுவதுடன் அக்கால நிறைவில் மீண்டும் ஒரு வருடம் விதிக்கப்படலாம், இவ்வாறு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படலாம். இவ்வாறான தடைக்கான வெளிப்படையான தொடர் செயன்முறை அல்லது புறவய அளவுகோல்கள் எவையும் குறிப்பிடப்படாததுடன் தடை நீடிப்புக்கு சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேவைப்பாடுகள் கூட ஏற்படுத்தப்படவில்லை. இத்தீர்மானத்துக்கான மேன்முறையீடு ஆணையை பிறப்பித்தவரிடமே மேற்கொள்ளும் நிலை உள்ளதுடன் மேன்முறையீட்டு தொடர் செயன்முறையில் வெளிப்படைத் தன்மையினை நிலைநாட்டும் எந்தவித பொறிமுறைகளும் காணப்படவில்லை. மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடுவது மாத்திரமே இங்கு தீர்வாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிகமாக, பொலிஸ் மா அதிபர் அல்லது முப்படைகளின் தளபதிகளின் பரிந்துரைக்கு ஏற்ப எந்தவொரு இடத்தையும் ‘தடைசெய்யப்பட்ட இடமாக’ பிரகடனம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தின் மீது எந்த ஒரு எல்லையும் இல்லாததோடு குறித்த இடம் எவ்வளவு காலத்துக்கு தடைசெய்யப்பட்ட இடமாக இருக்க முடியும் என்ற வரையறையும் குறிப்பிடப்படவில்லை.

இந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் அதற்கு பொறுப்பான அதிகாரி அல்லது ‘தடை செய்யப்பட்ட இடத்தின் மீதான அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு என்பன சட்ட ரீதியாக வழங்கப்பட்ட எந்த ஒரு நபரும்’ அவ்விடத்திற்குள் உள்நுழைய முடியுமான மற்றும் அங்கு தங்கியிருக்க முடியுமான நபர்களின் வகைகளைக் குறிப்பிட முடியும் எனவும் ஏனையோர் அங்கு நுழைவதற்கான நிபந்தனைகளைத் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது தீவிர பிரச்சினைக்குரிய விடயமாகக் காணப்படுகின்றது.

எனவே, பொது மக்கள் ஆர்ப்பாட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் காலி முகத்திடல் போன்ற இடமொன்று தடைசெய்யப்பட்ட பகுதியாக பிரகடனம் செய்யப்பட்டு, நிலைமையின் நெருக்கடிக்கு ஏற்ப யாரால் உள்நுழைய முடியும் என மேற்பார்வை செய்யப்பட இயலாத சந்தர்ப்பத்தில் பொறுப்புடைய அதிகாரி அந்த இடத்தில் தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்ளும் நிலை உருவாகும்.

சட்டமா அதிபரினால் குற்றப்பகர்வை அல்லது குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளை இடைநிறுத்தம் செய்ய பரிந்துரை செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கான ஒழுங்கு விதிகளை வழங்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு அளிக்கும் ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. அவ்வாறான புனர்வாழ்வு தொடர் செயன்முறைகளில் இழைக்கப்படும் துஷ்பிரயோகங்களின் வரலாறு அத்துடன் நபர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க போதிய சான்றுகளை திரட்ட முடியாத நிலையில் குறித்த நபர்களை புனர்வாழ்வு செயன்முறைக்கு ‘சம்மதிக்க வைக்க’ மேற்கொள்ளப்படும் பலவந்தப்படுத்தல்கள் என்பவற்றை கருத்திற் கொள்ளும் வேளை குறித்த ஏற்பாடுகள் கரிசனைக்குரியனவாகக் காணப்படுகின்றன.

இலங்கையில் பல தசாப்தங்களாக அரசாங்கங்கள் தண்டனை விலக்கு உள்ளனவாகக் காணப்படுவதுடன் நாட்டையும் மக்களையும் பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாத்தல் என்ற போர்வையில் சொந்த மக்களுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகத்தை மேற்கொள்வதையும் அவர்களின் உரிமைகளை மீறுவதையும் வழமையாக மேற்கொண்டு வருகின்றன. நடைமுறையில், இவ்வாறான அரச நடவடிக்கைகள் நாட்டு மக்களுக்கு ஆழமான பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன் அரசாங்கங்கள் பொறுப்புக் கூறலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுகின்றன. எனவே, சட்டமொன்று உருவாக்கப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இந்தச் சட்டம் எவ்வாறு துஷ்பிரயோகிக்கப்படலாம். அத்துடன், மீறல்களை தடுப்பதற்கு உறுதியான மனித உரிமைக் காப்புகளை எவ்வாறு நாம் உறுதி செய்ய முடியும் என்பனவே அச்சட்டம் தொடர்பில் ஒவ்வொரு குடிமகனும் கேட்க வேண்டிய கேள்விகளாகவுள்ளன.

அம்பிகா சற்குணநாதன்

(கட்டுரையாளர் ஒரு மனித உரிமைகள் சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமாவார்)

The Morning பத்திரிகையில் 26ஆம் திகதி மார்ச் மாதம் 2023 வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.