Photo, TAMIL GUARDIAN

மனிதர்கள் தங்களுடைய கருத்துக்களைப் ‘பேசுவதற்கு’ சட்டரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தக்கூடிய இடம் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு, அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது என்று  ஒருமுறை எழுத்தாளர்/ சமூக செயற்பாட்டாளர் அருந்ததிராய் குறிப்பிட்டிருந்தார்.  இலங்கையைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்றது. அதன் பின்னணியில் சிறுபான்மை – பெரும்பான்மை என்ற ஏற்றத்தாழ்வு அரசியல், பொருளாதாரம், பண்பாடு என்று எல்லாத்திசைகளிலும் விரிந்துள்ளது. ஊடகவியலைப் பொறுத்த வரையிலும்  பெரும்பான்மை – சிறுபான்மை என்ற தரப்புக்கள் இருக்கவே செய்கின்றன. தேசிய ஊடகங்கள் நாடுமுழுவதும் இயங்கினாலும் அவை ஒரே நாளில் வெவ்வேறு செய்திகளுக்கே முக்கியம் கொடுத்து செய்திகளை அறிக்கையிடுவது மொத்த நாட்டின் முரண்களையும் தெளிவுபடுத்துகின்றது. உதாரணமாக, போர் முடிவடைந்த நாளில் பெரும்பான்மை தரப்பு சார் ஊடகங்கள் போர் வெற்றிக் கொண்டாட்டங்களை அறிக்கையிடுகின்றன. சிறுபான்மை தரப்பு சார் ஊடகங்களோ போரில் கொல்லப்பட்ட மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை அறிக்கையிடுகின்றன. இந்த முரண் தொடர்ந்தும் இருந்துகொண்டே இருக்கின்றது. இப்பின்னணியில் இலங்கையில் நவீன ஊடகவியல் என்பது எவ்வாறு இயங்கின்றது அதன் பின்னணிகள் பிரச்சினைகளைப் பற்றி மூன்று தமிழ் ஊடகவியலாளர்களுடன் நிகழ்த்தப்பட்ட உரையாடல்களின் பின்னர் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

நவீன தொழில்நுட்ப பேச்சு சுதந்திரத்திற்கான பெரிய இலத்திரனியல் வெளி ஒன்றை இணையம் ஊடாக ஏற்படுத்தி தந்திருக்கிறது என்ற மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்று சமூக வலைத்தளங்களில், இணையப்பக்கங்களில் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் கருத்துக்களைப் பகிர்கிறார்கள். ‘ஊடகத்துறை’ இன்று அனைவரும் செய்தி ஒன்றை அறிக்கையிட முடியும் என்று குறிப்பிடுகிறது. நம்முடைய கருத்து சுதந்திரத்தினுடைய வெளி விரிந்துள்ளது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், இணையமே நம்மை அதிகமாக கண்காணிக்கவும், நமது அந்தரங்கமான விடயங்களில் இருந்து நாம் பகிரும் கருத்துவரை நம்மை கண்காணிக்கிறது என்றும் நம்மைத் திருடுகின்றது என்று ஒருபக்கத்தில் அதிர்ச்சியடைய வைக்கிறார்கள். அதேவேளை, மெய்யான நபர்களைக்காட்டிலும் போலியான கணக்குகளும், பக்கங்களும், அடிப்படை அறமோ உண்மையோ அற்ற தகவல்களுமே இந்த இணையவெளி எங்கும் அதிகமாகக் கிடக்கின்றது என்றும் புள்ளி விபரங்கள் எச்சரிக்கின்றன. “அனைவரும் செய்திகளை அறிக்கையிட முடியும்” என்பது ஒரு வகையில் போலியான அல்லது அர்த்தமற்ற ஒன்றாகவே பெரும்பான்மையாக இருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்பின்னணியில் இன்று  இணைய வெளியைத்தாண்டி அல்லது இணைய வெளி உள்ளடங்கலாக உண்மையான செய்திகள், ஆதாரங்கள், உறுதிப்படுத்தப்பட்ட மூலங்கள், ஊடக அடிப்படையான அறம் மற்றும் உழைப்பு என்பவற்றோடு இயங்க கூடிய ‘தொழில்சார் ஊடகவியலாளர்களின்’ வகிபங்கும் அவர்களுடைய கருத்து சுதந்திர வெளியும் சமகாலத்தில் எப்படிப்பட்டது என்பதையே இலங்கையில் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யத்தக்க  தமிழ் ஊடகவியலாளர்கள் மூவருடன் நாடத்திய உரையாடலின் பின்னரான கட்டுரை இது.

குமணன், கிரிசாந், தமிழ்மதி இவர்கள் மூவரும் வட பகுதியைச் சேர்ந்த ஊடகவியளார்கள். அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் தொழில்சார் இணைய ஊடகங்களில் பணியாற்றிவருபவர்கள். சமகாலத்தில் இலங்கைச் சிறுபான்மைச் சூழலில் நிகழக்கூடிய எரிகின்ற பிரச்சினைகளை அறிக்கையிடுபவர்கள், அதன் பின்னணியில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளக் கூடிய சமகால நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் பலவகைகளிலும் எதிர்கொள்பவர்கள். அவர்களிடம் சமகால ஊடகவியலை ஒட்டி மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன.

  1. சமகாலத்தில் இணைய வெளி வியாபித்துள்ள சூழலில் தொழில் முறையான ஊடகவியலில் உள்ள பிரச்சினைகள்?
  2. தாங்கள் அறிக்கையிடும் முக்கியமான பிரச்சினைகள் எவை, அவற்றை அறிக்கையிடுவதில் உள்ள சிக்கல்கள்?
  3. சமகாலப் பிரச்சினைகளை அறிக்கையிடும் போது ஏற்படக்கூடிய அதிகாரத் தரப்பு சார்ந்த நெருக்கடிகள்?

இணைய ஊடகங்களின் வருகை என்பது ஊடகவியலில் ‘பிரஜைகள் ஊடகவியல்’ என்ற புதிய வெளியைத் திறந்துள்ளது. செய்தி ஒன்றை சமூகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து கொண்டு வந்து சேர்க்கத்தக்கவாறு அனைவருமே ‘கைத்தொலைபேசிகள்’ மூலம் புகைப்படங்களை எடுக்கவும் செய்திகளை அறிக்கையிடவும் முடியும். இன்று பெரும்பாலான இணைய ஊடகங்கள் அவ்வாறே தங்களுடைய ‘பிரஜை ஊடகவியலாளர்கள்’ மூலம் செய்திகளைப் பெறுகின்றனர்.  ஆனால், இங்கே  தொழில்சார் ஊடகவியலாளர்கள், அச்செய்திகள் பற்றிய உண்மைத்தன்மை, அறம் மற்றும் செய்திகளை அறிக்கையிடும் முறைமை தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர். இன்று ஆயிரக்கணக்கான இணைத்தளங்கள் பதிவு செய்யப்படாமல் இயங்குகின்றன, சமூக அறவியல் சார்ந்தோ, சட்டம் சார்ந்த அறவியல் சார்ந்தோ அவை கதைப்பதில்லை. அவை வெறுமனே மக்களை குறித்த தளங்களுக்குள் நுழையச்செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டவை. அதனால் அவற்றின் நோக்கம் செய்தியாளர் ஒருவருக்கு இருக்க வேண்டிய அடிப்படையான சமூக அக்கறையில் இருந்து வருவதில்லை. சட்ட நடைமுறைகளை மதிப்பதில்லை. சைபர் வெளிக்குரிய கட்டற்ற தன்மை இணைய ஊடகவெளி என்பது நம்பகத்தன்மை அற்றதாகவும் கலாசார பிறழ்வுகள் கொண்டதாகவுமே பெரும்பாலும் இருக்கின்றன.

ஊடகவியலாளர் கிரிசாந் பிரஜைகள் ஊடகவியலில் சில காத்திரமான விடயங்கள் நடைபெறுவதையும் சொல்லியிருந்தார்

“பிரஜைகள் ஊடகவியல் என்பது வந்த பிறகு செய்தி சேகரிப்பின் எல்லைகள் விரிவடைந்தன. பத்திரிக்கை ஒன்று செய்தியை அறிக்கையிடும் போது அதன் வணிகப் பின்புலத்தினால் தீர்மானிக்கப்படும் பக்க அளவுகளும், செய்தி முக்கியத்துவங்களுக்கு ஏற்றவாறு தரப்படுத்தப்படும் போதும் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களை அறிக்கையிடக்கூடிய செய்திகளைச் சேகரிக்க கூடிய ஊடகவியலாளர்களின் எல்லாச் செய்திகளும் பிரசுரமாகும் என்பதில்லை. ஆனால், பிரஜைகள் ஊடகவியல் பத்திரிக்கைகள் கொண்டிருக்கக்கூடிய எல்லைகளை இணையம் மூலம் தாண்டுகின்றன. மக்களின் விளிம்பு நிலையில் உள்ள கதைகள் செய்திகளாக மாறுகின்றன. தொழில்சார் ஊடகவியலாளர்களின் கண்காணிப்பு வழிகாட்டுதல் அல்லது ஊடகவியல் நிறுவனங்களின் வழிகாட்டுதல் மூலம் பிரஜைகள் ஊடகவியல் அறிவூட்டப்படவும் கண்காணிக்கப்படவும் இயலுமாகவிருந்தால், மக்களின் சகல பிரச்சினைகளும் கருத்துச்சுதந்திரமும் இன்னும் விரிவடையும்” என்றார்.

பிரஜைகள் ஊடகவியலோடு சார்ந்து இயங்கக்கூடிய நபர்களை, பத்திரிகையாளர்களை அரசாங்கம் கண்காணிக்கவே செய்கிறது. தேசிய பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, கலாசார பாதுகாப்பு முதலானவற்றிற்காக இணைய வெளி அரசினால் கண்காணிக்கப்பட வேண்டும் என்பது சரிதான், ஆனால், அது மக்களில் கருத்துச் சுதந்திரத்தையும் சேர்த்துக் கண்காணிக்கப்படவோ அச்சுறுத்தப்படவோ செய்யும் போது அது பெரிய பிரச்சினையாக மாறுகின்றது. நாட்டில் ஏற்பட்ட  பொருளாதார நெருக்கடியின் பின்னர் ஏற்பட்ட ‘அரகலய’ போராட்டங்களின் பின்னர் மிலேச்சத்தனமாக மக்கள் ஊட்கவியல் சார்ந்து செய்திகளைப் பகிர்ந்தவர்கள், போராட்டங்களுக்கு ஆதரவளித்தவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர், பின்னர் பலரும் அதன் அடிப்படையில் கைதுசெய்யவும்பட்டனர். சிங்கள மக்களுக்கே இதே நிலை இருக்கும் போது ஏற்கனவே அச்சத்துடனும் அச்சுறுத்தலுடனும் இனவாத ஒடுக்குமுறைகளின் பல்வேறு பின்னணிகளில் இருக்கக்கூடிய சிறுபான்மை மக்கள் பெரும்பாலும் போராட்டத்தை ‘வேடிக்கை பார்க்கும்’ திராணியுடனேயே இருக்க முடிந்தது. மேலும் சிறுபான்மை மக்கள் சார்ந்து இருக்கக்கூடிய எரிகின்ற பிரச்சினைகளை அறிக்கையிடுவதில் பிரஜைகள் ஊடகவியலுக்கு பயமும் தயக்கமும் இருக்கின்றது. சொல்லப்போனால் தொழில்சார் ஊடகவியலாளர்களில் கூட ஒரு சிலரே அவற்றை நேரடியாக களத்தில் நின்று அறிக்கையிடுகின்றனர். அவர்களும் அதிகாரத்தரப்பினால் மிகவும் அச்சுறுத்தலுக்கும் கண்காணிப்புக்கும் உள்ளாகின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரையில் நீண்டகாலமாக ஊடகவியல் சார்ந்து நெருக்கடிகளைக் கொடுக்கக்கூடிய ‘எரிகின்ற’ பிரச்சினைகளின் மூலமாக இலங்கையின் ‘இனப்பிரச்சினையே’ இருந்துவருகின்றது. பொருளாதார நெருக்கடி, உயிர்த்த ஞாயிறு தாக்குல் போன்ற பிரச்சினைகள் கூட குறிப்பிட்ட காலத்தில் அணைந்துவிடுகின்றன. இறுதி உள்நாட்டுப் போருக்குப் பிறகு இனப்பிரச்சினையும் போர்காலமும் உருவாக்கிய பல்வேறு எரிகின்ற பிரச்சினைகள் இருந்தன. குறிப்பாக போர்காலத்தில் ‘வலிந்து காணாமலாக்கப்பட்ட’ மக்களின் நிலைபற்றிய போராட்டங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி சிங்கள மக்களிடையே காணாமலாக்கப்பட்டவர்களை முன்னிட்டும் எழுந்தன. குறிப்பாக முன்னாள் போராளிகள், சரணடைந்த மக்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என்று பலரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். வடக்கு கிழக்கில் அது போருக்குப் பின்னர் பெரியளவான போராட்டமாக முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் இலங்கைக்கு அழுத்தங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இப்போராட்டங்கள் முக்கியமாக ’தாய்மார்களின்’ போராட்டம் என்று அறியப்படுகிறது. வடக்கு கிழக்கில் உள்ள தொழில்சார் ஊடகவியலாளர்கள் இதனை திறம்பட அறிக்கையிட்டு வருகின்றனர். முக்கியமாக இப்போராட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , காணொளிகள் உலகெங்கும் குறித்த பிரச்சினையைக் கொண்டு சேர்த்தன.

ஊடகவியலாளர் குமணன், கடந்த சில ஆண்டுகளாக இப்போராட்டத்தை விரிவாக அறிக்கையிடுகிறார். முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என்று அனைத்து இடங்களிலும் நடைபெறும் போராட்டங்களை புகைப்படம் மூலமும் செய்திக்கதைகள் மூலமும் பதிவு செய்கிறார். இத்தாய்மார்களின் போராட்டங்களில் பதிவுசெய்த புகைப்படங்களை ‘உத்தரிப்புக்களின் அல்பம்’ என்ற புகைப்படக் கண்காட்சியின் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்தார். இவ் அறிக்கையிடலின் போது புலனாய்வாளர்கள், பொலிஸாரின் அச்சுறுத்தல்களையும் கண்காணிப்பையும் குமணன் ஏராளம் எதிர்கொண்டிருக்கிறார்.  வெளிப்படையாகவே ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’ என்பதை அத்தரப்பு உணரவைத்துக்கொண்டே இருக்கிறது. விசாரணைகள், கண்காணிப்புக்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

“மக்கள் போராட்டங்களை அறிக்கையிடச்செல்லும் போது , இராணுவத்தினரோ பொலிஸாரோ ‘ஐசியைக் காட்டுங்கள்’ என்று தொடங்கும் தோரணையில் இருந்து அந்த அச்சுறுத்தல் ஆரம்பிக்கின்றது, முக்கியமாக ஊடகவியலில் ‘எரிகின்ற பிரச்சினைகளுக்குள்’ வராமல் பல ஊடகவியலாளர்கள் விலகிக்கொள்வது இவ்வகையான அச்சுறுத்தல்களால்தான்.

முக்கியமாக வருடாவருடம் பல்கலைக்கழகங்களின் ஊடகத்துறையில் இருந்து ஏராளம் மாணவர்கள் வெளியேறுகின்றார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ‘எரிகின்ற பிரச்சினையையோ’ ‘அரசியல் சார்ந்த’ விடயங்களையோ அறிக்கையிடுவதைத் தவிர்த்து விடுகின்றார்கள். போர்க்காலத்தில் இருந்த அச்சம் இன்றும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. குறிப்பாக பெண்கள் அரசியலில் ஈடுபடக் காட்டும் தயக்கத்தைப் போலவே ஊடகவியலிலும் தயக்கங்களும் பயங்களும் இல்லாமல் இல்லை. அதை ஆர்வம் சார்ந்த பிரச்சினை என்பதைவிட பயம் சார்ந்த பிரச்சினையாகவும், அச்சுறுத்தல் சார்ந்த பிரச்சினையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்”  என்றார் சுயாதீன ஊடகவியலாளர் தமிழ் மதி.

அரசியல்சார் போராட்டங்களைத் தவிர, இராணுவத்துடன் நேரடியாகத் தொடர்புபடும் ‘காணிப்பிரச்சினைகளை’ செய்தியாக்குவதிலும் அவற்றை ஆதாரப்படுத்துவதிலும் சிறுபான்மை தரப்பின்  ஊடகவியலாளர்கள் பெருமளவு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றார்கள். வடக்கு கிழக்கில் போர்க்காலத்தில் இராணுவ நிலைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட ‘பூர்வீக’ நிலங்களை விடுவிக்க கோரி போருக்குப் பின்னர் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. வலிகாமம், கேப்பாபிலவு போன்ற இடங்களில் நடாத்தப்பட்ட போராட்டங்களின் போது போராட்டங்களில் பங்குபற்றும் மக்களையும், ஊடகவியலாளர்களையும் இராணுவத்தினர் வீடியோக்கள் மூலம் வெளிப்படையாகவே பதிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் பதிவு செய்வதை ஊடகவியலாளர்கள் பதிவு செய்ய முற்படும் போது அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்ச்சியாக பல மக்கள் போராட்டங்களின் போது நடைபெற்றுவருகின்றது. கமராவைப் பறிப்பது, தரவுகளை அழிப்பது என்று பல கோணங்களில் இவ் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தவண்ணமுள்ளன.

போருக்குப் பிறகு, போரில் மாண்ட மக்களை நினைவு கூர்வதில் ஒவ்வொரு அரசாங்கம் மாறும் போது அந்நினைவகூரல் நிகழ்வுகள் அனுமதிக்கப்படும் விதங்கள் மாறுபட்டுக்கொண்டே இருந்தன.  இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்படும் வரை நினைவுகூரல் நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டிருந்தன. அந்நினைவுகூரல் நாட்களில் இராணுவ கண்காணிப்புக்களும் கெடுபிடிகளும் அதிகமிருந்தன. அந்நேரத்தில் நடைபெறக்கூடிய நினைவு கூரல் நிகழ்வுகளை அறிக்கையிடும் சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்கள் கண்காணிப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர். அதன் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையோடு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு நினைவுகூரல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் நடைபெற்றன. ஆனால், பின்னர் அரசாங்கம் மாறிய போது திரும்பவும் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கான அனுமதிகள் நெருக்கப்பட்டன. அவ்வேளைகளில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் இறுக்கப்பட்டன. மாண்டவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை செய்தியிடச்சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன. 2022இல் ‘அரகலய’ மக்கள் போராட்டத்தின் பின்னர் அரசாங்கத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றத்தின் பின் அரசாங்கம் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு அனுமதித்தது. ஆனால், கண்காணிப்புக்களும் பொலிஸ் கெடுபிடிகளும் இருக்கவே செய்தன என்று ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“நினைவுகூரல்களுக்கான நடைமுறையும் அனுமதியும் ஒவ்வொரு அரசாங்கத்தின் அரசியல் நலன்கள் சார்ந்து பகடையாக முன் நிறுத்தப்படுகின்றது. அது மக்களின் உரிமை சார்ந்த, மானிட அறம் சார்ந்த ஒன்றாக அன்று அரசியல் காரண காரியங்களுக்கு பயன்படுத்துவதைத்தான் காண்கின்றோம். ஒவ்வொரு நினைவுகூரல் நிகழ்வுகளிலும் கெடுபிடிகளின் அளவு மட்டம் மட்டுமே மாறுகின்றது. ஆனால், கெடுபிடிகளோ கண்காணிப்புக்களோ இல்லாமல் இருந்ததில்லை” என்று குறிப்பிடுகிறார் ஊடகவியலாளர் குமணன்.

நில ஆக்கிரமிப்பைப் போலவே சிறுபான்மை மக்களை அடையாளப்படுத்தக் கூடிய மரபுரிமை சார் இடங்கள், நிலங்கள் மீது இராணுவமயப்படுத்தலின் ஒரு பகுதியாக பெளத்த ஆலயங்களை, சிலைகளை அமைப்பது கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துவருகின்றது. தொல்லியல்சார் அரச திணைக்களங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன. குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை போன்ற இடங்களில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அறிக்கையிடுவது ஊடகவியலாளர்கள் களத்தில் மிகுந்த அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கின்றார்கள். ஆக்கிரமிப்புக்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் மக்களும் அதை ஆவணப்படுத்த முயலும் ஊடகவியலாளர்களும் அச்சுற்றுத்தப்பட்டும் வழமையாகிவிட்ட ‘வீடியோ பதிவுகளும்’ நடைபெறுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் போருக்குப் பிறகு அரசியல் மாற்றங்கள் பலவும் நிகழ்ந்த போதிலும் சிறுபான்மை மக்கள் குரலற்றவர்களாகவும், இனவாதத்தின் கொடிய நகங்களால் அச்சுறுத்தப்பட்டுக்கொண்டுமே இருக்கின்றார்கள். இவ்விடத்தில் ஊடகத்துறையைப் பொறுத்தவரையிலும் சிறுபான்மை தரப்பு இன அடிப்படையான பாகுபடுத்தலுடனேயே அரசியல் அல்லது அதிகார தரப்பினால் நடத்தப்படுகின்றது. குறிப்பாக ஊடகவியலாளர்கள் ‘புலிகள்’ என்று சொல்லியே அச்சுறுத்தப்படுகின்றார்கள். கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஊடகவியலாளர்கள் மீதான ஒடுக்குமுறை, வன் செயல்கள் அவர்களைப் புலிகள் அல்லது புலி ஆதரவாளர்கள் என்றே அச்சுறுத்தப்பட்டார்கள். தற்பொழுதும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, நினைவு கூரல்கள் போன்றவற்றை அறிக்கையிடும் போதும் இதே மனநிலையுடனேயே ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள்.

தமிழ் ஊடகவியலைப் பொறுத்தவரையில் சிங்கள ஊடகங்களைப் போலவே  அரசியல் கொள்கைகள் சார்ந்த , கட்சிகள் சார்ந்த ஊடகங்களும் இயங்குகின்றன. எல்லா கட்சிகளும் தங்களுக்கென்று இணைய, அச்சு, இலத்திரணியல் ஊடகங்களை நடாத்திக்கொண்டிருக்கின்றன. அதே வேளை சுயாதீனமான ஊடகங்களும் இயங்கிவருகின்றன.  சுயாதீனமாக இயங்க கூடிய ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு பற்றி, அல்லது நடைமுறையில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள், விசாரணைகள் முதலான சந்தர்ப்பங்களில் அவர்களுக்குரிய பாதுகாப்பு , சட்ட உதவிகள் ஆலோசனைகள் எவ்வாறு கிடைக்கின்றது என்பது பற்றி இவ் ஊடகவியலாளர்களிடம் வினவியிருந்தோம்.

“தேசிய அளவில் இயங்கக்கூடிய ஊடகவியல் அமைப்புக்கள், உள்ளூர் ஊடகவியல் அமைப்புக்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் சில சட்டத்தரணிகள், அவர்கள் சார் அமைப்புக்கள் பிரச்சினைகளின் போது குரல்கொடுக்கவும் ஆலோசனைகளை வழங்கவும் செய்கின்றன” என்பதை உறுதிப்படுத்தினார்கள். ஆயினும், எல்லா ஊடகவியலாளர்களுக்கும் இவ்வாறான உதவிகள் கிடைக்கின்றதா என்ற கேள்வி இருப்பதாக குமணன் சுட்டிக்காட்டினார். குறிப்பாக சுயாதீனமாக இயங்கக்கூடிய, அவ்வளவு பொது வெளியில் அறியப்படாத ஊடகவியலாளர்கள் எந்தவித சிவில் அமைப்புக்களினதோ, சுயாதீன அமைப்புக்களினதோ, தொழிற்சங்கங்களினதோ உதவிகளுக்கு வெளியிலேயே அச்சுறுத்தலோடு இயங்க வேண்டியுள்ளதையும் குறிப்பிட வேண்டும்.

மேலும், ஊடகவியல்சார் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் போன்றவை அரசோ அதன் அதிகாரமோ ‘பயங்கரவாதிகள்’ என்ற அச்சுறுத்தலைக் காட்டி கைதுகள், விசாரணைகளைச் செய்யும்போது பெரியளவில் வினைத்திறனாக ஒரு ஊடகவியலாளருடன் நிற்பது என்பதும் சந்தேகமே. ஒரு அளவுக்கு மேல் அவை ஊடகவியலாளார்களை ‘கைவிடவே’ செய்கின்றன. பொதுவில் மக்கள்  ஒரு சில பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்களையும் அதன் பெயர்களையும் மட்டுமே அறிந்திருக்கிறார்கள். அவர்கள் ஊடகவியலாளர்கள் பற்றி அறிந்ததும் சொற்பமானதே. குறிப்பாக பிரஜைகள் ஊடகவியல், இணைய ஊடகவியல் என்று வரும்போதும் மக்களின் அறிதலும், அச்சுறுத்தல்கள் வரும் போது அவர்களின் குரல்களும் அவ்வளவாக ஒலிப்பதில்லை. அரசியல் மயப்படாத ‘பொதுப்புத்தி’ தொடர்ந்தும் பெருமளவான மக்களிடம் இருந்துவருகின்றது. அரசியல் விழிப்புணர்வு, சமூக பங்குபற்றுதல் என்பவற்றில் ஒரு அங்கமாக ஊடகவியல் மீதான மக்களின் கரிசனையும் இருக்க வேண்டும். செய்திகளும், செய்தி அறிக்கைகளும் மக்களை அறிவூட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் ஆபத்தான உழைப்பாகும்.  மக்களை சமூகவயப்படுத்துதல், அரசியல் மயப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஊடகவியலின் பங்குமுக்கியமானது. முதலாளித்துவமும், எதேச்சதிகாரமும் உலகம் முழுவதும்  ஊடகவியலை தங்களுடைய நலன்களுக்குள் இழுத்துக்கொண்டுவிட்டன. எஞ்சி இருக்கும் குறைவான ‘அறமுள்ள’ ஊடகவியல் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுகின்றது. ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் ஊடகவியலில் இருந்த அச்சுறுத்தல் அதன் பிறகு தணிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நேரடியாக இயங்காமல் பல்வேறு தந்திரமான வழிமுறைகளில் இயங்குகின்றது. பயங்கரவாத அச்சுறுத்தல், பாதுகாப்பு என்பவற்றினைக் கொண்டு மக்களுக்கான ஜனநாயகக் குரலை ஒடுக்க முயற்சித்துக்கொண்டே இருக்கின்றது.

மக்களின் அரசியல் விழிப்புணர்வும் சமூக அக்கறையும் கூட்டுச்சேர்வதன் மூலமே ஊடகவியல் என்னும் ஜனநாயகத்தின் முக்கிய நெடுந்தூணை பாதுகாக்க முடியும். போருக்குப் பிறகு இன நல்லிணக்கம் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வேறுபாடுகளைக் கடந்து ஊடகவியலே முதலில் சமத்துவத்தையும் நல்லுறவையும் அடைந்திருக்க வேண்டும். ஒரே நாட்டில் சிங்கள ஊடகங்கள் ஒரு பக்க செய்தியையும் தமிழ் ஊடகங்கள் இன்னொரு பக்க செய்தியையும் அறிக்கையிடுகின்றன. சிறுபான்மை தரப்புக்களின் குரல்களை பெரும்பான்மை ஊடகங்கள் கவனப்படுத்த வேண்டும். சிறுபான்மை மக்களின் ஊடகவியலில் நடைபெறும் உரையாடல்கள், செய்திகளை அறிந்திருக்க வேண்டும். அதிகாரம்  இனவாதத்தைப் பயன்படுத்தி தன்னை தக்கவைக்க முயற்சிக்கும் போது தேசிய அளவில் எல்லா ஊடகங்களும் அதற்கு எதிராக ‘ஒரே குரலில்’ பேச வேண்டும். ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படும் போது பெரும்பான்மை மக்களிடமிருந்தும், அவர்கள்சார் அமைப்புக்களிடமிருந்தும் கரங்கங்கள் நீண்டுவந்து உதவிகளைச் செய்ய வேண்டும். பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களும் உரையாடிக்கொள்ளவும், பரஸ்பரம் பிரச்சினைகளை, நியாயங்களை அறிந்துகொள்ளவுமான வெளியை ஊடகங்களும் அதுசார்ந்து இயங்கும் ஊடகவியலாளர்களுமே ஏற்படுத்த முடியும்.

யதார்த்தன்