Photo, Reuters/Dinuka Liyanawatte, THE JAKARTA POST

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்தைய காலப் பிரிவின் போது நாட்டில் பொதுவாக இடம்பெற்று வந்த இனத்துவ ஒருங்கிணைப்புச் செயன்முறை காலனித்துவ ஆட்சியின் போது பெருமளவுக்குக் குறைவடைந்தது. இனத்துவ அடையாளங்கள் போஷித்து வளர்க்கப்பட்டு, வலியுறுத்தப்பட்ட நிலையில் இது நிகழ்ந்தது. ஜனரஞ்சக ஆதரவைத் திரட்டுவதற்கென பௌத்த அடையாளத்தைப் பயன்படுத்திக் கொண்ட காலனித்துவ எதிர் இயக்கமொன்றினாலேயே நவீன சிங்கள தேசியவாதம் 19ஆம் நூற்றாண்டில் எழுச்சியடைந்ததாக வாதிட முடியும். பௌத்த மதம் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாக சித்தரித்துக் காட்டப்பட்டது; முதலில் கிறிஸ்தவ மிஷனரிமாரிடமிருந்தும், பிற்காலத்தில் பிரிட்டிஷ் முதலாளித்துவ நலன்களிலிருந்தும் இந்த அச்சுறுத்தல் தோன்றுவதாகக் கருதப்பட்டது. குறிப்பாக, பெருந்தோட்ட கைத்தொழில் வடிவிலும், மதுப் பழக்கம் அதிகரித்து வருவதை உள்ளிட்ட விதத்திலான அதன் மோசமான தாக்கங்கள் என்பவற்றின் வடிவிலும் இது இடம்பெறுவதாகக் கருதப்பட்டது.

மிஷனரிகளுக்கான ஒரு சவாலாகவும், பௌத்த மதத்திற்கு “பாரம்பரிய அனுசரணையை” வழங்கும் விடயத்தில் அரசு தோல்வியடைந்திருக்கும் நிலைக்கான ஓர் எதிர்வினையாகவும் சமயம் தொடர்பான விவாதங்களில் ஈடுபட வருமாறு பௌத்த பிக்குகள் கிறிஸ்தவர்களுக்கு அறைகூவல் விடுத்தார்கள் (உதாரணம் 1862 இன் பாணந்துறை விவாதங்கள்). அநகாரிக தர்மபால போன்ற முன்னோடி சிங்கள தேசியவாதிகள் ஒரு மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்கினார்கள். பௌத்த மதம், பௌத்த சமய (தம்ம) பாடசாலைகள், ஒரு பௌத்த கொடி, ஒழுக்க நெறிக்கோவைகள், ஜனரஞ்சகமான சமய நடைமுறைகளுக்கு மாறான விதத்தில் பௌத்த மதத்தை முறையான விதத்தில் தொகுத்தல், தேரவாத பௌத்த மதத்தை முனைப்பான விதத்தில் பின்பற்ற வைத்து, கிருகஸ்தர்களை வலுவூட்டுதல், சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளில் பங்கேற்கும் பொருட்டு மகா சங்கத்தினருக்கு வலுவூட்டுதல் என்பவற்றை மேம்படுத்துவதற்கென இந்த இயக்கம் பிரசுரங்களை வெளியிடத் தொடங்கியது.

தொடக்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த சிங்கள பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் திட்டமிட்டே தேசியவாத அரசியல் மற்றும் சமயம் என்பவற்றின் ஒரு கலவையை உருவாக்கியது. அரசு மற்றும் சமயம் என்பவற்றுக்கிடையிலான பிணைப்பு மீண்டும் எடுத்து வரப்பட வேண்டுமென அதன் தலைவர்கள் குரல் எழுப்பினார்கள். வரலாறு குறித்த அவர்களது பொருள்கோடலின் பிரகாரம், சிங்கள மக்களுக்கு வரலாற்று ரீதியான ஒரு பணி இருந்து வருகின்றது என்ற கருத்தை அவர்கள் முன்வைத்தார்கள். பௌத்த மதத்தின் ஒரு காவல் கோபுரம் என்ற முறையில் ஆக்கிரமிப்பாளர்கள், காலனித்துவவாதிகள் மற்றும் ஏனைய சமயத்தவர்கள் ஆகியோரிடமிருந்து இலங்கையை பாதுகாத்துக் கொள்ளும் கடமை சிங்கள மக்களுக்கு இருந்து வருகிறது எனக் கருதப்பட்டது. இந்த உலக நோக்கு ஓரளவுக்கு மகாவம்ச வரலாற்று நூலின் செல்வாக்கைக் கொண்டிருந்தது. இந்தியாவில் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான தமிழர்களுக்கு மத்தியில் “சிறுபான்மை தாழ்வுச் சிக்கலுடன் கூடிய பெரும்பான்மை” என அழைக்கப்படும் ஒரு நிலைமை சிங்கள மக்கள் மத்தியில் தோன்றுவதற்கு மகாவம்சம் வழிகோலியது. தமிழர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் ஒரு தாயகத்துடன் பிணைக்கப்பட்டுள்ளார்கள் என்ற எண்ணக் கரு உருவாகியது. இந்த நிலைமை தொடர்ந்து நிலவி வந்ததுடன், இன்றும் மிகவும் பரவலான விதத்தில் அவ்வாறே நிலவி வருகின்றது. 1910ஆம் ஆண்டளவில் இலங்கையில் 400,000 க்கும் மேற்பட்ட இந்திய புலம்பெயர் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்து வந்ததுடன், அது நாட்டின் குடித்தொகையின் – 1931,651,000 – ஐந்தில் ஒரு பாகமாக இருந்து வந்தது. 1948 இல் சுதந்திரம் கிடைத்த பின்னர் அரசாங்கம் மேற்கொண்ட முதலாவது பாரிய நடவடிக்கை சுமார் 800,000 இந்திய வம்சாவளி தொழிலாளர்களின் பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பவற்றை பறித்தமையாகும். இதற்கு  இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் ஒரு சிலரின் ஆதரவும் கிடைத்திருந்தது. சிறுபான்மை உரிமைகள் தொடர்பாக பின்னர் தாம் முன்வைக்கப் போகும் கோரிக்கைகளை அந்நிலைப்பாடு பலவீனப்படுத்தியது.

இந்தப் பின்புலத்தில், பெரும்பான்மைச் சமூகத்தினரின் மதமான பௌத்த மதத்துக்கும், ஏனைய குழுக்களுக்கும் இடையிலான இடைத் தொடர்புகளுக்கான பல்வேறு அரசியல் யாப்பு ரீதியான ஏற்பாடுகளை எடுத்து விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இலங்கையின் ஆட்சி முறை 1801ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்ற பிரிட்டிஷ் காலனித்துவ செயன்முறையின் ஒரு வரலாறு என்ற முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. சட்ட சபையை உருவாக்கிய 1833ஆம் ஆண்டின் அரசியல் யாப்புக்கூடாக இலங்கையில் பிரதிநிதித்துவ அரசாங்கமொன்றை அபிவிருத்தி செய்வதற்கு பிரித்தானியர்கள் முயற்சித்தார்கள். இந்தச் சபை பெருமளவுக்கு அதிகாரமற்ற ஒரு சபையாக இருந்து வந்தது. பிரித்தானிய அரசாங்கம் அதன் கண்டனத்தை உதாசீனம் செய்த பொழுது, 1864 இல் இச்சபை ராஜினாமா செய்தது. இலங்கை மக்களை திருப்திப்படுத்துவதற்கென 1910, 1920 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் பிரித்தானியர்கள் வேறு பல அரசியல் யாப்புகளை முன்வைக்க முயன்றார்கள். ஆனால், இந்த அரசியல் யாப்புக்கள் உள்நாட்டு மக்கள் தமது ஆட்சியை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை.

1910ஆம் ஆண்டின் ஏற்பாடுகள்

1910ஆம் ஆண்டின் குருவ் – மக்கலம் அரசியல் யாப்புச் சீர்த்திருத்தங்கள் ஒரு சில தனித்துவமான சிறப்பம்சங்களை கொண்டிருந்தன. முதல் தடவையாக சட்ட சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கோட்பாடு நாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், இன ரீதியான பிரதிநிதித்துவம் கைவிடப்பட்டிருக்கவில்லை.

1910ஆம் ஆண்டு சீர்த்திருத்தங்கள் மூலம் தமக்கு வழங்கப்பட்ட பெயரளவிலான அதிகாரங்கள் குறித்து இலங்கை மக்கள் திருப்தியடையவில்லை. அதன் காரணமாக அவர்கள் 1919 இல் தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்கியதுடன், முறையான அரசியல் யாப்புச் சீர்த்திருத்தங்கள் தொடர்பாக கோரிக்கை விடுக்கத் தொடங்கினார்கள். இதற்கான ஓர் எதிர்வினையாக 1920 இல்  சட்டவாக்கச் சபை மீள உருவாக்கப்பட்டது. அதே வேளையில், அரசியல் யாப்புச் சீர்த்திருத்தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து வந்தவர்களின் அமைப்பாக இருந்து வந்த இலங்கை தேசிய காங்கிரஸ் அமைப்பின் சார்பில் சேர் ஜேம்ஸ் பீரிஸ் தேசாதிபதி மெனிங்கிடம் யோசனைகளை சமர்ப்பித்தார்.

டொனமூர் அரசியல் யாப்பு 1931

டொனமூர் அரசியல் சீர்த்திருத்தங்கள் சுதந்திரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு பாய்ச்சலை எடுத்துக் காட்டின. இச்சீர்த்திருத்தங்கள் 1931ஆம் ஆண்டில் அமுலுக்கு வந்தன. டொனமூர் சீர்த்திருத்தங்களின் ஒரு சில முக்கியமான அம்சங்கள் வருமாறு: பிராந்திய பிரதிநிதித்துவத்தின் விரிவாக்கம், சர்வஜன வாக்குரிமை அறிமுகம், அரசாங்க சபையின் ஸ்தாபிதம், நிறைவேற்றுக் கமிட்டி முறை மற்றும் அமைச்சரவை என்பவற்றின் உருவாக்கம், தேசாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை என்பன. இனத்துவ பிரதிநிதித்துவ முறையும் நீக்கப்பட்டது.

1931 – 1947 காலப் பிரிவில் செயற்பட்டு வந்த டொனமூர் அரசியல் யாப்பு இலங்கை மக்களின் அபிலாஷைகளை திருப்திப்படுத்தவில்லை. முழுப் பொறுப்பையும் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம் அல்லது டொமினியன் அந்தஸ்து வேண்டும் என அவர்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தார்கள். அதன் விளைவாக, 1944ஆம் ஆண்டில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட சோல்பரி ஆணைக்குழு ஒரு புதிய அரசியல் யாப்பை முன்மொழிந்தது. அதன் பிரதான அம்சங்களாவன: தேசாதிபதி முறை  நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக மகா தேசாதிபதி பதவி அறிமுகம் செய்து வைக்கப்பட்டமை, மக்கள் பிரதிநிதிகள் சபை மற்றும் இரண்டாவது சபை அல்லது செனட் சபை என்ற இரட்டை சட்டவாக்க அமைப்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டமை, பிரதம மந்திரியை தலைவராகக் கொண்ட அமைச்சரவை நியமனம், பகிரங்க சேவை ஆணைக்குழு மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழு என்பன ஸ்தாபிக்கப்பட்டமை.

சோல்பரி அரசியல் யாப்பு

சோல்பரி ஆணைக்குழுவின் 1945ஆம் ஆண்டின் அறிக்கை இலங்கைக்கான பிரிட்டிஷ் வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற மாதிரியொன்றை ஆதரித்ததுடன், அந்த முடிவுக்குப் பின்னாலிருந்த ஒரு சில காரணங்களையும் எடுத்து விளக்கியிருந்தது: “இலங்கை அரசியல் தலைவர்களில் பலர் இங்கிலாந்தில் கல்வி கற்றிருப்பவர்கள் என்ற விடயத்தையும், பிரிட்டிஷ் அரசியல் கருத்துக்களை உள்வாங்கியுள்ளார்கள் என்ற விடயத்தையும் இங்கு கவனத்தில் எடுப்பது அவசியமாகும். பொறுப்புக்களுடன் கூடிய அரசாங்கம் ஒன்று தமக்குத் தேவையென அவர்கள் கோரிக்கை விடுக்கும் பொழுது பிரித்தானிய நாடாளுமன்ற மாதிரியை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கமொன்றையே அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அதற்கு மாறான எந்தவொரு அரசியல் முறையையும் ‘பிரித்தானிய பொதுநலவாய நாடுகளின் சக பிரஜைகள் என்ற முறையில் தமது அந்தஸ்துக்கு குறைவானது என்றும், தமக்குக் கிடைக்க வேண்டியதிலும் பார்க்க குறைவானது என்றும் கருதி அவர்கள் வெறுத்தொதுக்க முடியும். சரியான வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், பிரிட்டிஷ் மக்களுக்கு எது சிறந்ததாக இருந்து வருகிறதோ இலங்கையர்களுக்கும் அதுவே சிறந்ததாக இருந்து வரும்.

1972 அரசியல் யாப்பு

இலங்கை 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி பிரித்தானிய பொதுநலவாய நாடுகளுக்குள் சுதந்திர டொமினியன் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது. அதனை அடுத்து அதிகாரத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கையின் தலைவர்கள் நாட்டுக்கு ஒரு புதிய அரசியல் யாப்புக்கான தேவை இருந்து வருவதாக கருதவில்லை. 1946ஆம் ஆண்டின் சோல்பரி அரசியல் யாப்பின் மூலம் ஆளப்படுவதையே அவர்கள் விரும்பினார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த உயர் குடியினரினால் உருவாக்கப்பட்ட முன்மொழிவுகளையே பிரதானமாக சோல்பரி அரசியல் யாப்பு அடிப்படையாகக் கொண்டிருந்தது என்ற விடயம் இதற்கான பிரதானமான காரணமாகும். அவர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கொடியின் கீழ் ஒன்றிணைந்து, நாடு சுதந்திரமடைந்த பொழுது தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டனர். 1948 – 1955 காலப் பிரிவின் போது ஆளும் கட்சியாக இருந்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி, சோல்பரி அரசியல் யாப்பின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இருந்து வருவதாகக் கருதவில்லை. எவ்வாறிருப்பினும், 1955 இல் இலங்கையை ஒரு குடியரசாக மாற்றியமைக்கும் விடயம் (1948 தொடக்கம் இடதுசாரி கட்சிகள் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த ஒரு கோரிக்கை) தொடர்பாக கட்சியின் நாடாளுமன்றக் குழு கலந்துரையாடியது. ஆனால், அதன்போது எத்தகைய முடிவுகளும் எட்டப்படவில்லை. ஐக்கிய முன்னணியின் 1970 கூட்டு தேர்தல் விஞ்ஞாபனம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு புதிய அரசியல் யாப்பை வரைபு செய்து, ஏற்று, செயற்படுத்துவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த அரசியல் யாப்பு இலங்கையை சுதந்திரமான ஒரு இறைமை அரசாகவும், சுதந்திரமான குடியரசாகவும் பிரகடனம் செய்யும் எனவும் கூறப்பட்டது. 1970ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி இடம்பெற்ற மகா தேசாதிபதியின் உரையிலும் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டது. அதனையடுத்து, 1970 ஜூன் 24ஆம் திகதி அரசியல் யாப்பு சபையொன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இந்த வரைவு முடிவாக்கப்பட்டு, 1972 மே மாதம் 22ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்டது.

பௌத்த மதம் தொடர்பாக அந்த அரசியல் யாப்பின் அத்தியாயம் 2 பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

  1. இலங்கைக் குடியரசு பௌத்த மதத்துக்கு அதியுயர் ஸ்தானத்தை வழங்கும்; அதன் பிரகாரம், பௌத்த மதத்தைப் பாதுகாத்து, போஷித்து வளர்ப்பது அரசின் கடமையாக இருந்து வரும். அதேவேளையில், பிரிவு 18(1)(ந) யின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள் அனைத்து சமயங்களுக்கும் உறுதிப்படுத்தப்படும்.

அடிப்படை உரிமைகளின் கீழ் பிரிவு 18(1)(ந) பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

(ந) ஒவ்வொரு பிரஜையும் சிந்தனை, மனச்சாட்சி மற்றும் சமய சுதந்திரத்துக்கான உரிமையைக் கொண்டிருப்பர். இந்த உரிமை தாம் விரும்பும் ஒரு சமயத்தை அல்லது நம்பிக்கையை கொண்டிருப்பதற்கான அல்லது பின்பற்றுவதற்கான சுதந்திரம், தனிப்பட்ட முறையில் அல்லது ஏனையவர்களுடன் இணைந்து பொது இடங்களில் அல்லது தனிப்பட்ட இடங்களில் தனது சமயத்தை அல்லது நம்பிக்கையை அனுசரிப்பதற்கான, நடைமுறைப்படுத்துவதற்கான, போதிப்பதற்கான சுதந்திரம் என்பவற்றை உள்ளடக்கும்;

அடிப்படை உரிமைகளின் கீழான இந்த சுதந்திரங்கள், அதே உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம்  வரையறைகளுக்கு உள்ளாக்கப்பட முடியும் என்பதனையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.

(2) இந்த அத்தியாயத்தில் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் என்பவற்றை அனுபவித்தல் அல்லது செயற்படுத்துதல் என்பன, தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு, தேசிய பொருளாதாரம், பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொது சுகாதாரப் பாதுகாப்பு அல்லது ஒழுக்க நெறிகளின் பாதுகாப்பு அல்லது ஏனையவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பவற்றின் பாதுகாப்பு அல்லது பிரிவு 16 இல் எடுத்து விளக்கப்பட்டிருக்கும் அரச கொள்கை கோட்பாடுகளைச் செயற்படுத்தல் என்பவற்றின் அடிப்படையில் சட்டத்தினால் விதித்துரைக்கப்பட்டிருக்கும் வரையறைகளுக்கு அமைவானதாக இருந்து வரும்.

இந்த அரசியல் யாப்பு 1972ஆம் ஆண்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது தொடக்கம் பௌத்த மதம் தொடர்பான அத்தியாயம் குறித்த பொருள்கோடல்களின் வீச்சு, அதிகரித்து வரும் அரசியல் மற்றும் சமூக கரிசனைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு சட்ட ரீதியான நிவாரணங்கள் கிடைப்பதனை விரிவாக்குவதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் அதே பொறிமுறைகள் – லிபரல் அரசியல் யாப்பு உருவாக்கத்தின் பாரம்பரியங்களினால் தூண்டப்பட்ட நீதித்துறை மீளாய்வு மற்றும் அடிப்படை உரிமைகள் வழக்குகள் என்பன தொடர்பான ஏற்பாடுகள் – பௌத்த மதம் தொடர்பான அரசியல் யாப்பு ரீதியான கோரிக்கைகளை முன்வைப்பதற்கான வழிமுறைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உண்மையில் இன்று பௌத்த நலன்கள் தொடர்பாக வழக்குகளை தொடுப்பதற்கென இதன் கீழ் ஒரே சீரான, வழமையான ஒரு சட்ட ஏற்பாடு இருந்து வருவதைக் காண முடிகிறது. உண்மையில் இப்பொழுது வழக்குத் தாக்கல் செய்பவர்கள் பலர் புத்த மதத்தைப் பாதுகாப்பது எவ்வாறு என்பது தொடர்பான திட்டவட்டமான வாதங்களை முன்வைப்பதற்கென (அரசியல் யாப்பில் வழங்கப்பட்டிருக்கும்) நீதித் துறை மீளாய்வு அல்லது அடிப்படை உரிமை மனுக்கள் முறையைப் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பிட்ட ஒரு மசோதா அல்லது அரசாங்கத்தின் குறிப்பிட்ட ஒரு முன்முயற்சி, பௌத்த மதம் தொடர்பான அரசின் கடமைகளை அல்லது குறிப்பிட்ட சில அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்து வருவதாக அல்லது மீறக் கூடியதாக இருந்து வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் அதியுயர் ஸ்தானம் தொடர்பான மிகவும் விரிவான பொருள்கோடல்கள் 1977 இல் வண. சுமன தேரரின் வழக்குத் தீர்ப்பின் பெரும்பான்மை நீதிபதிகளின் அபிப்பிராயங்களிலும், முரண்பட்ட நீதிபதிகளின் அபிப்பிராயங்களிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன (உயர் நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணியாக தன்னை ஏற்று, சேர்த்துக் கொள்ள வேண்டுமென வண. சுமன தேரர் சமர்ப்பித்த விண்ணப்பம்).

1978 அரசியல் யாப்பு

ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட 1978 இன் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு, அதற்கு முன்னைய அரசியல் யாப்பிலும் பார்க்க இயல்பில் அதிகளவுக்கு எதேச்சாதிகார தன்மையை கொண்டுள்ளதாக வாதிட முடியும். இந்த அரசியல் யாப்பு பெரும்பாலான பிரிட்டிஷ் பாரம்பரியங்களை தக்கவைத்துக் கொண்ட அதே வேளையில், பல பிரெஞ்சு மற்றும் அமெரிக்க அரசியல் யாப்பு பாரம்பரியங்களையும் உள்வாங்கியிருந்தது. அந்த விதத்தில் அது ஒரு ஆக்கபூர்வமான ஆவணமாக இருந்து வந்ததுடன், அதனை உருவாக்கியவர்களின் கருத்தின் பிரகாரம் இலங்கை சமூகத்தின் தேவைகளுக்குப் பொருந்தக் கூடியதாக இருந்து வந்தது. ஆனால், அதனை எதிர்த்தவர்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்கள்: “இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு, ஐந்தாவது பிரெஞ்சு குடியரசு யாப்பை போலவே அதன் சாயலில் மட்டுமன்றி நிறுவன ரீதியான செயற்பாடுகளைப் பொருத்தவரையிலும் ஒரு கோலிஸ்ட் அரசியல் யாப்பாக இருந்து வருகிறது. எனவே, அது அந்த விதத்தில் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜயவர்தன என்ற தனி மனிதரின் கண்ணோட்டத்துக்குப் பொருந்தக் கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு ஆழமான சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாதம் என்பவற்றை பிரதிபலிப்பதுடன், கருத்தியலை உதாசீனம் செய்கின்றது. அபிவிருத்திக்கு உசிதமானது என நம்பப்படும் அத்தகைய “வலுவான நிறைவேற்றுத் தலைவர்” தொடர்பாக ஆழமாக கரிசனை கொண்டுள்ளது.” துரித பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான ஸ்திர நிலை புதிய அரசியல் யாப்பை உருவாக்கியவர்களின் முதன்மையான கரிசனையாக இருந்து வந்தது போல் தெரிகிறது. அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டிய தேவை குறித்தும், வலுவான ஒரு தலைமைத்துவத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டிய தேவை குறித்தும், நாடாளுமன்றத்தின் விருப்பு வெறுப்புக்களிலிருந்து சுதந்திரமாகச் செயற்படக்கூடிய ஒரு நிறைவேற்றுத் தலைவருக்கான தேவை குறித்தும் ஜயவர்தன கருத்துகளைத் தெரிவித்திருந்தார். ஒரு லிபரல் ஜனநாயக சமூகத்தில் நாட்டின் நிறைவேற்றுத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்து வர முடியுமா என்ற கேள்வி ஒரு புறமிருக்க, 1978 இற்கு முன்னர் இலங்கை குறிப்பாக ஸ்திரமற்றதாக இருந்து வந்ததா என்ற கேள்வியை எழுப்புவதும் பொருத்தமானதாகும். அமைதியான, சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் மூலம் காலத்துக்குக் காலம் அரசாங்கங்களை மாற்றியமைப்பதனை எந்த விதத்திலும் ஸ்திரமற்ற நிலையின் ஓர் அடையாளமாக கருத முடியாது.

பௌத்த மதம் தொடர்பான அத்தியாயம்

  1. இலங்கை குடியரசு பௌத்த மதத்துக்கு அதியுயர் ஸ்தானத்தை வழங்குதல் வேண்டும். அதன் பிரகாரம், புத்த சாசனத்தைப் பாதுகாத்து, போஷித்து வளர்ப்பது அரசின் கடமையாக இருந்து வரும். அதே வேளையில், உறுப்புரைகள் 10 மற்றும் 14 (1) (ந) இன் மூலம் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள் அனைத்துச் சமயங்களுக்கும் உத்தரவாதப்படுத்தும்.
  2. ஒவ்வொரு ஆளும் சிந்தனை, மனச்சாட்சி மற்றும் சமய சுதந்திரத்துக்கு உரித்துடையவர் ஆவார்; இது தான் விரும்பும் ஒரு சமயத்தை அல்லது நம்பிக்கையை கொண்டிருப்பதற்கான அல்லது பின்பற்றுவதற்கான சுதந்திரத்தையும் உள்ளடக்குகின்றது.

14 (1) (ந) தானே அல்லது ஏனையவர்களுடன் இணைந்து வழிபடுதல், பின்பற்றுதல், நடைமுறை மற்றும் போதித்தல் என்பவற்றின் வடிவில் பகிரங்கமாக அல்லது தனிப்பட்ட முறையில் தனது சமயத்தை அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்திக் காட்டுவதற்கான சுதந்திரம்;

14 (யு) (3) இந்த அடிப்படை உரிமைகள் தொடர்பான வரையறைகளை கவனத்தில் எடுக்கின்றது என்ற விடயத்தை இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.

(2) தேசிய பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு, ஒழுங்கீனம் அல்லது குற்றச் செயல்களைத் தடுத்தல், சுகாதாரத்தை அல்லது ஒழுக்க நெறிகளைப் பாதுகாத்தல், ஏனையவர்களின் நன்மதிப்பு அல்லது உரிமைகளைப் பாதுகாத்தல், அந்தரங்கம், நீதிமன்ற அவமதிப்பைத் தடுத்தல், பாராளுமன்ற சிறப்புரிமைகளை பாதுகாத்தல், இரகசிய அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கும் தகவல்களை வெளிப்படுத்துவதை தடுத்தல் அல்லது நீதித் துறையின் அதிகாரத்தை மற்றும் பக்கச் சார்பற்ற நிலைமையை பராமரித்து வருதல் என்பவற்றின் நலனைக் கருத்திற் கொண்டு ஒரு ஜனநாயக சமூகத்தில் அவசியமானவை என விதித்துரைக்கப்பட்டிருக்கும் வரையறைகள் தவிர, இந்த உறுப்புரையின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் உரிமைகள் தொடர்பாக எத்தகைய வரையறைகளும் விதிக்கப்பட மாட்டாது.

பௌத்த மதத்திலும் பார்க்க (சிங்களத்தில்: புத்தாகம) புத்த சாசனத்தைத் தெரிவு செய்து கொண்டிருப்பது, புத்த பெருமானின் மதக் கோட்பாடுகளின் தனித்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது; ஏனையவை அனைத்தும் வெறுமனே சமயங்களாகும். புத்த சாசனம் தெரிவு செய்யப்பட்டமை, பௌத்த மதம் தொடர்பான பிராந்திய ரீதியான வரைவிலக்கணமொன்றுக்கு சார்பாக இருந்து வந்தவர்களுக்கு ஆதரவளிப்பதாக உள்ளது. ஏனென்றால், புத்த சாசனம் என்ற பதம் புத்தரின் போதனைகளை மட்டுமன்றி அதன் ஒட்டுமொத்த மரபுரிமையையும் உள்ளடக்குகின்றது. அதாவது, சொத்துக்கள், புனித ஸ்தலங்கள், சிலைகள், விகாரைகள், ஏனைய பொருள்கள் மற்றும் புவியியல் சார்ந்த வெளிகள் என்பவற்றை அது உள்ளடக்குகின்றது. புத்த மதத்தைப் பாதுகாத்து, போஷித்து வளர்த்தல் என்ற வாசகம் தெரிவு செய்யப்பட்டதன் நோக்கம் அது பௌத்த நிறுவனங்கள் மற்றும் மடாலய வாழ்க்கை என்பவற்றின் மீதான அரச கண்காணிப்பை குறிப்புணர்த்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பதாகும்.

பௌத்த மதத்தைப் பாதுகாத்தல் என்ற இந்தக் கருத்தை – வெளிப்படையாக பௌத்த நினைவிடங்களைப் பாதுகாப்பதையும் உள்ளடக்கியதாக இருந்து வரும் இந்தக் கருத்தை – 1987, 2003 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற மூன்று வழக்குகளில் அவ்வழக்குகளை தாக்கல் செய்திருந்தவர்கள் முன்வைத்து, அதனை தேசிய ரீதியில் பிரபல்யமானதாகவும், சட்ட ரீதியில் செல்வாக்கு மிக்கதாகவும் ஆக்கியிருந்தார்கள். ஒவ்வொரு வழக்கிலும் முறையே இந்து தமிழர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து அரசாங்கம் பௌத்த இடங்களை (விகாரைகள், வரலாற்று இடங்கள், கிராமங்கள் என்பவற்றை) பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும் என பௌத்த மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அடிப்படையில் இந்த வழக்குகள் நான்கு துறைகளை உள்ளடக்கியிருந்தன – அரசிடமிருந்து பௌத்த சுயாதீனத்தைப் பாதுகாத்தல், பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், பௌத்த இடங்களைப் பாதுகாத்தல் மற்றும் மத நிந்தனையிலிருந்து பௌத்த மதத்தைப் பாதுகாத்தல்.

இலங்கைக்கான ஒரு வரைவு அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கென ரொமேஷ்டி சில்வாவின் தலைமையில் ஒரு நிபுணர்களின் கமிட்டி உருவாக்கப்பட்டது. அந்த வரைவு 2022 ஜூலை மாதம் ஒப்படைக்கப்பட்டது. தற்பொழுது அது ஓர் அறிவுத்துறை சார் அக்கறையாக மட்டுமே இருந்து வருவது போல் தெரிகிறது. ஆனால், அதேவேளையில் அந்த வரைவு பௌத்த மதத்துக்கும்,  சிறுபான்மைச் சமூகங்களுக்குமிடையிலான உறவுகளின் அபிவிருத்தி எந்த திசையில் இருந்து வருகின்றது என்பதனை எடுத்துக் காட்டுகின்றது.

2022 அரசியல் யாப்பு வரைவு

அத்தியாயம் 2: 10 இலங்கை குடியரசு பௌத்த மதத்திற்கு அதியுயர் ஸ்தானத்தை வழங்குவதுடன், அதன் பிரகாரம் புத்த சாசனத்தைப் பாதுகாத்து, போஷித்து வளர்ப்பதற்கான கடமையை அரசு கொண்டிருத்தல் வேண்டும். அதே வேளையில், உறுப்புரைகள் 26 மற்றும் 27 என்பவற்றின் மூலம் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகள் அனைத்து சமயங்களுக்கும் உத்தரவாதப்படுத்தப்படும்.

அடிப்படை கடமைகள் மற்றும் உரிமைகள் தொடர்பான அத்தியாயம் –

26 (1) ஒவ்வொரு நபரும் சிந்தனை, மனச்சாட்சி மற்றும் சமய சுதந்திரத்துக்கு உரித்துடையவர் ஆவார்.

(2) ஒவ்வொரு நபரும் தான் விரும்பும் ஒரு சமயத்தை அல்லது நம்பிக்கையைக் கொண்டிருப்பதற்கான அல்லது அதனைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தைக் கொண்டிருப்பார். தான் விரும்பும் ஒரு சமயத்தை கைவிட்டு விடுவதற்கு அல்லது பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை பாதிக்கக் கூடிய விதத்தில் எந்தவொரு நபரும் பலவந்தத்திற்கு உட்படுத்தப்படக் கூடாது.

(3) அரசியல் யாப்பு மற்றும் ஏதேனுமொரு சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுக்கமைவாக, பொருத்தமானவிடத்து, பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தமது சொந்த நம்பிக்கைகளின் பிரகாரம் தமது பிள்ளைகளுக்கு சமய மற்றும் ஒழுக்கக் கல்வியை வழங்குவதற்கான உரிமையைக் கொண்டுள்ளார்கள்.

(4) இந்த உறுப்புரையில் ‘பலவந்தம்’ என்பது பலப் பிரயோகம், ஆசை காட்டுதல் மற்றும் மோசடி என்பவற்றை உள்ளடக்கும்.

27 ஒவ்வொரு பிரஜையும் தனிப்பட்ட முறையில் அல்லது மற்றவர்களுடன் இணைந்து பகிரங்கமாக அல்லது தனிப்பட்ட முறையில் தனது சமயத்தை அல்லது நம்பிக்கையை வழிபாடு, அனுசரிப்பு, நடைமுறை, போதனை என்பவற்றின் மூலம் வெளிப்படுத்திக் காட்டுவதற்கான சுதந்திரத்தைக் கொண்டிருப்பார்.

உறுப்புரை 24 இன் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் (சித்திரவதை அல்லது குரூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் விதத்தில் நடத்துதல், தண்டித்தல் என்பவற்றிலிருந்து சுதந்திரம்) அடிப்படை உரிமைகள் மற்றும் 26 இன் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் சிந்தனை மற்றும் சமய சுதந்திரம் தொடர்பாக விதிக்கப்படக் கூடிய வரையறைகளின் வீச்சினை பிரிவு 49 விரிவுபடுத்துகின்றது என்ற விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். இங்கு விசேடமாக குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இரு உரிமைகளும் கேள்விக்குரியவையாக இருந்து வருவது ஏன்? இந்த உரிமைகள் வரையறுக்கப்படக் கூடிய நிலவரங்களின் வீச்சு, நிறைவேற்று ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றம் கருதும் எந்த ஒரு விடயம் வரையிலும் விரிவாக்கப்பட முடியும்.

அத்தியாயம் 3: அரச கொள்கையின் நெறிப்படுத்தல் கோட்பாடுகள்

13 (1) அத்தியாயம் 2 (பௌத்த மதம்) மற்றும் 7 (இலங்கைக் குடியரசின் தேசிய மரபுரிமையைப் பாதுகாத்தல்) என்பவற்றில் உள்ளடக்கப்பட்டிருக்கும் அரசியல் யாப்பு ரீதியான கடப்பாட்டினை நிறைவேற்றி வைப்பதற்கெனவும், அரசாங்கம் பேரவையின் ஆலோசனையைக் கோரும் வேறு ஏதேனும் விடயம் தொடர்பாகவும் அரசாங்கத்திற்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் என்பவற்றை வழங்குவதற்கென மகா சங்கத்தினரின் ஒரு பேரவை ஸ்தாபிக்கப்படும்.

235 (4) புத்த சாசனம் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கென தேசிய அரசு பேரவை விசேட நீதிமன்றங்களை அமைப்பதற்கான ஏற்பாட்டை பயன்படுத்த முடியும்.

இறுதியாக, “மக்களிடமிருந்து அவர்களுடைய இறைமையை அபகரிக்க முடியாது” என்ற தலைப்பின் கீழ் எதேச்சையாதிகார இயல்பிலான ஏற்பாடுகள் 79 ஐ குறிப்பிடாமல் இருக்க முடியாது.

79 (1) குடியரசுக்கு உள்ளே அல்லது குடியரசுக்கு வெளியே எவரேனும் நபர் –

குடியரசின் மக்கள் தமது இறைமையை அனுபவிப்பதனை இல்லாமல் செய்தால் அல்லது இல்லாமல் செய்வதற்கு முயற்சித்தால் அல்லது அவர்களுடைய அந்த இறைமையை இல்லாமல் செய்வதற்கு சூழ்ச்சி செய்தால் அல்லது அதனை மேம்படுத்துவதை ஊக்குவித்தால்,

ஐக்கிய நாடுகள் சபை அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் எந்தவொரு அமைப்பையும், ஏனைய ஏதேனும் சர்வதேச அமைப்பையும், எந்தவொரு அரசையும் இலங்கை குடியரசுக்கு எதிராக ஆயுதப் பலத்தைப் பிரயோகிப்பதுடன் சம்பந்தப்பட்ட ஏதேனும் வழிமுறைகளைப் பிரயோகிக்குமாறு அல்லது இலங்கை அரசுடனான பொருளாதார உறவுகளை நிறுத்துமாறு அல்லது இடைநிறுத்துமாறு அல்லது தடுத்து நிறுத்துமாறு அல்லது குடியரசின் பிராந்தியத்துக்குள் அத்தகைய நபரினால் நிகழ்த்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் ஏதேனும் குற்றச்செயல் தொடர்பாக ஏதேனுமொரு நியாயாதிக்கத்தில் இலங்கைப் பிரஜை எவருக்கெதிராகவும் வழக்குத் தொடுத்து, குற்றச்சாட்டுகளை முன்வைத்தல் அல்லது தண்டிப்பதற்கு ஊக்குவித்தல், மேம்படுத்துதல் அல்லது தூண்டுதல்,

(h) பேசப்பட்ட வார்த்தைகள் மூலம், வாசிப்பதற்கென உத்தேசிக்கப்பட்ட வார்த்தைகள் மூலம் அல்லது அடையாளங்கள் அல்லது கட்புல சமர்ப்பணங்கள் மூலம் இலங்கை குடியரசின் தேசிய கொடி, தேசிய சின்னம், தேசிய கீதம் என்பவற்றை அவமதித்தல் அல்லது அவை தொடர்பாக மரியாதைக் குறைவைக் காட்டுதல் ஒரு குற்றச் செயலாக இருந்து வரும். அது தொடர்பாக குற்றத் தீர்ப்பு வழங்கப்படுமிடத்து, ஒன்றில் 20 வருடங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனை அல்லது சொத்துக்களை பறிமுதல் செய்தல் அல்லது இரு தண்டனைகளும் வழங்கப்பட முடியும்.

(2) பந்தி (1) இன் கீழ் ஏதேனும் குற்றச் செயலொன்று தொடர்பாக குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் எவரேனும் நபரின் சிவில் உரிமைகள் இருபது வருடங்களுக்கு மேற்படாத காலப் பிரிவுக்கு பறிக்கப்படும்.

(3) இந்த அத்தியாயத்தில் ‘போர்’ என்பது பயங்கரவாதச் செயல்களையும் உள்ளடக்குகின்றது.

ஒரு புறத்தில் பௌத்த மதத்தின் ஸ்தானம் மற்றும் அரசின் வகிபங்கு என்பனவும், மறுபுறத்தில் ஏனைய சமயங்களுக்குரிய இடமும் அரசியல் யாப்பு ஏற்பாடுகளின் பிரகாரம் ஏற்றத் தாழ்வானதாக இருந்து வருகின்றது. பௌத்த மதத்தின் தெளிவான மேலாதிக்கம் காணப்படுகிறது; அது தவிர, 1978 யாப்பிலும் இது காணப்படுகின்றது. இந்த நிலைமை முரண்பாடு மற்றும் வன்முறை ஏற்படக்கூடிய சாத்தியப்பாட்டை கொண்டுள்ளது. இலங்கையின் இனத்துவ – சமய வன்முறையின் அடிமட்டத்தில் மூன்று முதன்மையான தூண்டுதல் காரணிகள் இருந்து வருவதாக கெஹான் குணதிலக்க குறிப்பிடுகிறார்.

முதலாவதாக, சிங்கள பௌத்த சமூகம் பல தசாப்தகாலமாக சமூகமயமாக்கல் செயன்முறையொன்றுக் கூடாக சென்றிருப்பதுடன், அது தனித்துவமானதொரு உரித்துச் சிக்கலை அவர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சிக்கல், அச்சமூகத்தைச் சேர்ந்த பலர் தாம் இலங்கையின் அசல் உரிமையாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் என்ற கருத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவர்களைத் தூண்டியுள்ளது. இந்த மேலாதிக்க அந்தஸ்திற்கு ஒரு சிறுபான்மைச் சமூகத்தினால் ஏற்படக்கூடிய எந்தவொரு பாரதூரமான அச்சுறுத்தலும் கடும் எதிர்ப்புடன் எதிர்கொள்ளப்பட்டு வந்ததுடன், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது வன்முறைக்கு வழிகோலியுள்ளது.

இரண்டாவதாக, தமிழர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோர் தொடர்பான உலகளாவிய அடையாளங்கள் சிங்கள பௌத்த மக்களுக்கு மத்தியில் ஒரு சிறுபான்மை தாழ்வுச் சிக்கலை உருவாக்கியுள்ளன. அவர்கள் அவசியமாகவே இலங்கை மட்டுமே தமது தாய் நாடு என்ற கண்ணோட்டத்தை கொண்டுள்ளார்கள். அந்த விதத்தில் சுயாதிக்கத்துக்கான தமிழர் கோரிக்கைகள், கிறிஸ்தவ சமய பிரசாரம் மற்றும் இஸ்லாமியமயமாக்கல் என்பன சிங்கள பௌத்த சமூகத்துக்கு மத்தியில் இருப்பியல்வாத அச்சங்களை தோற்றுவித்துள்ளன. அந்த அச்சங்கள் காரணமாகவே தீவிரவாதக் குழுக்களின் கடுமையான தேசியவாத கோஷங்களில் அடிக்கடி சிங்கள – பௌத்தர்கள் என்ற பதம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், இனத்துவ சமய பதற்ற நிலைமைகள் மிக எளிதில் வன்முறையாக வெடிக்க முடியும் என்பதையும் அவை எடுத்துக் காட்டுகின்றன.

மூன்றாவதாக, பௌத்த பிக்குகள் இலங்கையில் மிக வலுவான ஒரு சமூக அரசியல் சக்தியாக இருந்து வருவதுடன், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசின் சட்டம் அவர்களுக்கு அடிபணிந்ததாக காணப்படுகின்றது. மதவாதிகள் தொடர்பான இந்த விதிவிலக்கு தண்டனை விலக்குரிமை கலாசாரமொன்றை உருவாக்கியுள்ளது. இனத்துவ – சமய வன்முறைகளை நிகழ்த்தும் நபர்களை அதற்குப் பொறுப்புக் கூற வைக்கும் விடயத்தில் சட்டத்தை அமுல் செய்யும் முகவரகங்கள் தயக்கம் காட்டும் ஒரு நிலையை இது உருவாகியிருக்கிறது. குறிப்பாக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புத்த பிக்குகளின் தூண்டுதலின் பேரில் உள்ளூர் மட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறும் பொழுது இந்நிலைமை காணப்படுகின்றது. இந்த மூன்று காரணிகளும் ஒன்றாக இணைந்து இலங்கையின் கலாசார, சமூக – அரசியல் மற்றும் அரச கட்டமைப்புக்குள் இனத்துவ – சமய வன்முறையை வேரூன்றச் செய்து வருகின்றன. இந்நிலைமை தொடர்ந்து நீடிக்கும். அது உலகில் ஏனைய பாகங்களில் இடம்பெறும் பிரச்சினைகள் தொடர்பான பகுத்தறிவு ரீதியான புரிந்துணர்விலும் பார்க்க, பெருமளவுக்கு உணர்ச்சித் தூண்டல் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

அரசியல் யாப்பின் வரைவு இறுதியில் ஒரு பாளி பாடலை கொண்டுள்ளது. அதன் மொழிபெயர்ப்பு வருமாறு:

உரிய நேரத்தில் மழை பொழியட்டும்

பயிர்கள் அமோகமாக செழித்து வளரட்டும்

மக்கள் மகிழ்ச்சியாக வாழட்டும்

ஆட்சியாளர்கள் நேர்மையானவர்களாக இருக்கட்டும்

நாங்களும் இதற்கு உடன்படுவதுடன், இந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்.

நிஹால் அபேசிங்க

The Constitution of Sri Lanka, Buddhism and Other Minorities என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.