Phtoto, AP, Eranga Jayawardena

அரச அதிகாரிகள் மற்றும் எதிர் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் சர்வதேச சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பவற்றுக்கான நீதி, உண்மையைக் கண்டறிதல் மற்றும் நட்டஈடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவைகள் பல சந்தர்ப்பங்களில் மூடி மறைக்கப்படுகின்றன. விசாரணை செய்து சட்ட நடவடிக்கைகள் மூலம் நீதியான வழக்கு விசாரணைகளுக்கு உட்படுத்துவதற்கு விருப்பு அற்ற நிலை காணப்படல், முறைமைகள் ஏற்படுத்தும் தடைகள் என்பன அதிகாரத்தை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி குறித்த குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் தாம் இழைத்த குற்றங்களுக்கு வகை கூற வைக்கப்பட முடியாத நிலையை ஏற்படுத்துகின்றது.

அரச அதிகாரிகளால் நாட்டுக்குள் இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கு அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தண்டனை பெற்றுக்கொடுப்பது சாத்தியமற்ற விடயம் எனக் கடந்த காலத்தில் கருதப்பட்ட போதும், சட்டத்தில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட விருத்திகள் இந்நிலையை மாற்றியமைத்துள்ளது. நீதி, உண்மை மற்றும் நட்டஈடுகளுக்கான கோரல்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்துவருகின்ற நிலையில் அவ்வாறான கோரல்களை பூர்த்திசெய்வதற்கு சர்வதேச பொறிமுறைகளை அமுல்படுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளின் வரலாறு

மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் யுத்தக் குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நியாய சபைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகை வழக்குகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட முதலாவது நியாய சபையாக நுரம்பேர்க்கில் ஏற்படுத்தப்பட்ட நியாய சபை அமைவதுடன் அதில் சர்வதேச இராணுவ நியாய சபையினால் 1945 தொடக்கம் 1946 வரை மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளில் நாஸி தலைவர்கள் யுத்தக் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர். நுரம்பேர்க் நியாய சபையின் பின்னர் ஏனைய வடிவங்களில் அமைந்த நியாய சபைகள் யூகோஸ்லாவியா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் யுத்தக் குற்றங்கள், படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டன.

இவ்வாறாக தேவைக்கேற்ப உருவாக்கப்படும் நியாய சபைகளின் தோற்றம் சர்வதேச குற்றவியல் சட்ட நடைமுறைகளில் மாற்றத்தை உருவாக்கியதுடன் இவற்றின் தோற்றம் ஜுலை 01, 2002 அன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உருவாக்கத்துக்கு வழிகோலியது. 2002ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை உருவாக்கிய ரோம் நியதிச் சட்டத்துக்கு கையொப்பமிட்ட நாடுகளைச் சேர்ந்த தனிநபர்களால் இழைக்கப்பட்ட குற்றங்களை மாத்திரமே அந்நீதிமன்றம் விசாரித்து தண்டனை வழங்கும் சக்தி வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. துரதிர்ஷ்டவசமாக, இலங்கை ரோம் நியதிச் சட்டத்தில் கையொப்பமிடாத தரப்பொன்றாகக் காணப்படுவதால் இலங்கையை சேர்ந்த குற்றவாளிகளை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் ஊடாகவே முன்னிறுத்த இயலுமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்டு உறுப்பு நாடுகளின் உலக அரசியல் நலன்கள் இவ்வாறான ஒரு செயன்முறைக்குத் தடையாக அமைகின்றது.

சர்வதேச வழக்கு நடைமுறைகளுக்கான வாய்ப்புகள் குறைவாகக் காணப்பட்ட போதும், முன்னாள் சிலி நாட்டின் ஜனாதிபதியும் சிலி நாட்டின் ஆயுதப் படைகளின் பிரதானியுமான அகஸ்டோ பினோச்சேவின் கைது உலகளாவிய வழக்கு விசாரணைகள் மீள இடம்பெறும் என்ற நம்பிக்கையை புதுப்பிக்கும் விடயமாக அமைந்துள்ளது. அவர் 1973ஆம் ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் தன்னை எதிர்ப்பவர்களை கொலை மற்றும் சித்திரவதை செய்தல், வலிந்து காணாமலாக்குதல் போன்ற விடயங்களை மேற்கொள்ளும் ஒருவராக அறியப்பட்டிருந்தார். தனது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், அவர் ஐக்கிய இராச்சியத்துக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்டு தனது பதவிக்காலத்தில் அவர் இழைத்த மனித உரிமை மீறல்களுக்கான வழக்கு விசாரணைகளுக்கு முன்னிலைப்படுத்தப்பட நாடு கடத்தல் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.  மார்ச் 24, 1999 அன்று பிரபுக்கள் சபை பினோச்சே ஸ்பெயின் நாட்டுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தது. வெளிநாடு ஒன்றில் அவர் கைதுசெய்யப்பட்டமை சர்வதேச சட்டங்களின் கீழ் அரச அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட முடியாது என்று கட்டியெழுப்பப்பட்டிருந்த மாயையை தகர்த்திருந்தது. இவ்வழக்கானது தெளிவற்றதாகவும் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு மிக்கதாகவும் காணப்பட்ட சட்டத்தின் கிளையொன்றான உலகளாவிய நியாயாதிக்க வரம்பு என்ற கொள்கையின் மீது ஒளிக்கீற்றை பாய்ச்சியது.

உலகளாவிய நியாயாதிக்கம்: ஓர் அறிமுகம்  

உலகளாவிய நியாயாதிக்கம் என்ற கொள்கை “சர்வதேச சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் ஒரு நாட்டின் எல்லைக்குள் இடம்பெறாத வேளையில் கூட, அத்துடன் குற்றமிழைத்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் அந்நாட்டின் குடிமகனாக இல்லாத வேளையில் கூட குறித்த நாட்டுக்கு அக்குற்றங்களின் மேலான நியாயாதிக்க எல்லையை வழங்குகின்றது. மேலும், வெளிநாடுகளில் இடம்பெறும் சர்வதேச குற்றங்களுக்கான தீர்வுகளைப் பெறுவதற்கும், குற்றவாளிகளை குற்றவியல் பொறுப்புக்கு உட்படுத்துவதற்கும், தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுவதைத் தடுப்பதற்கும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள நீதிமன்றங்களுக்கு இக்கொள்கை அனுமதி வழங்குகின்றது.” சர்வதேச சட்டத்தின் கீழ் கொடூரமான குற்றங்கள் என வகைப்படுத்தப்படும் குற்றங்களை இழைப்பவர்கள் “முழு மனித குலத்தினதும் எதிரிகள்” எனக்கருதப்பட்டு அவர்களுக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வழியை இக்கொள்கை வழங்குகின்றது. இதன் மூலம், குற்றமிழைத்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் எத்தேசியத்தை சேர்ந்தவராக இருப்பினும் அத்துடன் குற்றம் எவ்விடத்தில் இழைக்கப்பட்டாலும் குற்றமிழைத்தவர்களை அக்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களாக்கும் அதிகாரத்தை அந்நாடு இக்கொள்கை மூலம் பெற்றுக்கொள்கின்றது.

சர்வதேச உலகளாவிய நியாயாதிக்கத்தின் வருடாந்த மீளாய்வின் பிரகாரம், உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் மொத்தமாக 125 சர்வதேசக் குற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் யுத்தக் குற்றங்களுக்காக 34 குற்றச்சாட்டுகளும், படுகொலைகளுக்காக 25 குற்றச்சாட்டுகளும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 66 குற்றச்சாட்டுகளும் முரண்பாடுகளுடன் தொடர்புபட்ட பாலியல் வன்முறைகளுக்காக 17 குற்றச்சாட்டுகளும் உள்ளடங்குகின்றன.

உலகளாவிய நியாயாதிக்கம் என்பது தனித்துவம் மிக்க குற்றங்களின் தொகுதி ஒன்றைச் சூழக் காணப்படும் பொதுவான சர்வதேச விதிகளின் விதிவிலக்கு ஒன்றாக அமையவில்லை. மாறாக, அது புராதன காலம் தொடக்கம் வழமையான சர்வதேச சட்டத்தின் பகுதியொன்றாகவே அமைகின்றது. எவ்வாறாயினும், அநேகமாக அரசாங்கங்கள் தமது எல்லைகளுக்கு அப்பால் நியாயாதிக்கத்தை நிலைநாட்ட குறித்த புவியியல் எல்லைகளுடன், தேசியத்துடன் இணைப்பைக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் அல்லது குறித்த விடயம் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்பு பட்டதாக அமைந்திருக்க வேண்டும். இது ஒரு தவறான வரம்பாக அமைவதுடன் அது இறையாண்மை, சமத்துவம் மற்றும் ஏனைய இறையாண்மை மிக்க நாடுகளின் உள்ளூர் விவகாரங்களில் தலையிடாதிருத்தல் என்ற கொள்கைகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதாகக் காணப்படுகின்றது.

உலகளாவிய நியாயாதிக்கத்துக்கான சட்ட அடிப்படை நடுத்தர காலம் தொடக்கம் காணப்படுகின்றது, எனினும், இது கடந்த நூற்றாண்டிலேயே அதிகம் பிரயோகிக்கப்பட்டதாகக் காணப்படுகின்றது. 1949ஆம் ஆண்டின் யுத்தங்கள் பற்றிய சட்டங்களின் ஜெனிவா ஒப்பந்தம் யுத்தக் குற்றங்களை இழைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஒப்பந்தத்தின் தரப்புகளாக அமையும் அரசாங்கங்கள் சட்டத்தின் முன் நிறுத்த அல்லது நாடுகடத்த வேண்டும் என்ற ஏற்பாட்டை உருவாக்கியுள்ளது. மேலும், வழமையான சர்வதேச சட்டம் யுத்தக் குற்றங்கள், சித்திரவதை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், படுகொலை, கடற்கொள்ளை, கடத்தல், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் ஐக்கியநாடுகள் சபையைச் சேர்ந்த நபர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளல் போன்ற சர்வதேச சமூகத்தினால் கொடூரமானவை எனக் கருதப்படும் குற்றங்கள் தொடர்பில் உலகளாவிய நியாயாதிக்கத்தை பிரயோகிக்க அனுமதிக்கும் பொதுவான உடன்பாட்டைக் கொண்டுள்ளதுடன் அது சட்ட அமுலாக்கத்துக்கு அத்தியாவசியமானதாகக் காணப்படுகின்றது. அரச தரப்புகள் உலகளாவிய நியாயாதிக்கத்தை அமுல்படுத்த வேண்டியதன் சட்ட ரீதியான கடப்பாடு 1949ஆம் ஆண்டின் ஜெனிவா ஒப்பந்தங்கள், இன ஒதுக்கலுக்கு எதிரான 1973ஆம் ஆண்டின் ஒப்பந்தம், 1984ஆம் ஆண்டின் சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தம் மற்றும் 2006ஆம் ஆண்டின் வலிந்து காணாமலாக்கப்படுவதற்கு எதிரான ஒப்பந்தம் என்பவற்றில் மேலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உலகளாவிய நியாயாதிக்கத்தின் தேவை பிரதானமாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்காகவே காணப்படுகின்றது. தாம் தமது நாட்டில் இழைத்த கொடூரமான குற்றங்களுக்கு சொந்த நாட்டில் நீதியின் பிடியில் இருந்து தப்பியவர்களுக்கு உரிய தண்டனையை நீதியின் மூலம் வழங்குவதற்கான இயங்குதளம் ஒன்றாகவே அது செயற்படுகின்றது. குற்றவாளிகள் மீது சர்வதேசத்தால் நீதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய பொறிமுறையொன்றாக சர்வதேச நியாயாதிக்கம் பயன்படுத்தப்படும் நிலையில் அது எதிர்காலத்தில் அவ்வாறான உரிமை மீறல்கள் இடம்பெறுவதை தடுக்கும் வழிமுறையொன்றாகவும் காணப்படுகின்றது. குற்றங்களை மேற்கொண்டோர் வெளிநாடுகளில் தண்டிக்கப்படுவது குறித்த நாட்டில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் சமூக சுகப்படுத்தலை அடைவதை ஊக்குவிப்பதால் உலகளாவிய நியாயாதிக்கம் சமூக நல்லிணக்கத்தை தூண்டும் ஓர் அம்சமாகவும் காணப்படுகின்றது. சம்பவம் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தும் மற்றும் உத்தியோகபூர்வ பதிவுகளை உருவாக்கும் அத்தியாவசிய கருவியொன்றாக உலகளாவிய நியாயாதிக்கம் அமைகின்றது, இது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாமல் விடுவதால் சட்டத்தின் மேலாதிக்கத்தின் மீது ஏற்படும் தடைகளை அகற்றும் ஒரு வழிமுறையாக அமைந்து சட்ட ஆட்சியை நிலை நிறுத்தும் பொறிமுறையாகவும் அமைகின்றது.

உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

அரச அதிகாரிகளுக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்கம் பயன்படுத்தப்பட்ட சம்பவங்களை நோக்கும் வேளை, கடந்த 2017ஆம் ஆண்டு தொடக்கம் மியன்மாரின் ரோஹிங்கியா மக்கள் மீது படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தமைக்காக அந்நாட்டின் அரச தலைவர் ஆங்சாங் சூகி மற்றும் இராணுவத் தளபதி மிங் ஆங் ஹிலைங் போன்றோருக்கு எதிராக ஆர்ஜன்ரீனா நாட்டின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. ஆர்ஜென்ரீனாவின் பெடரல் நீதிமன்றம் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யுமாறு நீதித்துறை அதிகாரத் தரப்புகளுக்கு பணிப்புரை விடுக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பொன்றை இவ்வழக்குக்கு வழங்கியது.

மேலும், சிரிய யுத்தத்தின் போது 2013ஆம் ஆண்டு இரண்டு இடங்களில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை, படுகொலை, யுத்தக் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை போன்ற குற்றங்களுக்காக சிரிய நாட்டின் அரச தலைவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விசேட பிரெஞ்சு அலகின் முன்னிலையில் வழக்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் உலகளாவிய நியாயாதிக்கத்தின் செயற்பாடுகள் அண்மைய வருடங்களில் ஐரோப்பாவிலும் மீள ஆரம்பிக்கப்பட்டன. சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் உள்ளடங்கலாக அந்நாட்டின் தலைவர்களுக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகள் சுவீடன் நாட்டிலும் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கையின் சூழமைவு மற்றும் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை நோக்கும் வேளை, சிவில் யுத்தத்தின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ யுத்தக் குற்றங்கள் இழைத்தார் எனவும் சர்வதேச மனித நேயச் சட்டம் மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டம் என்பவற்றை மீறினார் எனவும் அவற்றுக்காக அவர் உடனடியாகக் கைதுசெய்யப்பட வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (ITJP) சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தது. 2009ஆம் ஆண்டு அவர் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய போது அவர் ஜெனீவா ஒப்பந்தங்களை மீறி செயற்பட்டிருந்தார் எனவும் அவற்றுக்காக அவர் சிங்கப்பூர் நாட்டில் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் அந்நாட்டில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அந்த முறைப்பாட்டில் எடுத்துக் கூறப்பட்டிருந்தது. 2019ஆம் ஆண்டு சித்திரவதையால் பாதிக்கப்பட்ட 11 நபர்கள் ராஜபக்‌ஷவுக்கு எதிராக சிவில் வழக்கொன்றை கலிபோர்னியாவில் தாக்கல் செய்திருந்தனர். எவ்வாறாயினும், இவ்வழக்கு அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் வாபஸ் பெறப்பட்டது.

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற 268 உயிர்களைக் காவு கொண்ட கொடூரமான குற்றமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பான ISIS அமைப்பின் பிரிவுக்கு ஆதரவளித்தனர் என்ற குற்றச்சாட்டை மூன்று இலங்கையர்கள் மீது முன்வைத்தது. அவர்கள் மீது 2020ஆம் ஆண்டு லொஸ் ஏன்ஜல்ஸ் பெடரல் நீதிமன்றம் இக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. தற்பொழுது அவர்கள் இலங்கை அதிகாரத் தரப்புகளின் தடுப்புக் காவலில் உள்ளனர். எவ்வாறாயினும், அவர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட வேண்டியுள்ளதுடன் அதற்கான தொடர்பாடல் இலங்கை அதிகார தரப்புகளினால் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.

உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து நழுவிக் கொள்வதற்காக பல நாடுகள் தமது சட்டங்களில் தேசிய மன்னிப்பை உள்ளடக்க முயற்சிக்கின்றன. 2021ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தவிசாளரான G.L பீரிஸ் சாத்தியமான யுத்தக் குற்ற வழக்கு நடவடிக்கைகளில் இருந்து தமது ஆயுதப்படைகளை பாதுகாக்க அரசியலமைப்பின் ஊடான பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், உலகளாவிய நியாயாதிக்க வரம்புகளினுள் சட்ட பூர்வமாக தங்கியிருக்கும் வழக்குகளை தேசிய பொதுமன்னிப்பினால் தடுக்க முடியாது என்பது இங்கு கவனிக்கத்தக்க விடயமாகும்.

உலகளாவிய நியாயாதிக்கத்தின் குறைபாடுகள் மற்றும் அதன் மீது காணப்படும் தடைகள்

உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் அதற்கேயுரிய தடைகள் மற்றும் குறைபாடுகளைக் கொண்டனவாகக் காணப்படுகின்றன. உதாரணமாக, உலகளாவிய நியாயாதிக்க கொள்கை காலவோட்டத்தில் விருத்தி செய்யப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் பல தெளிவற்ற விடயங்கள் காணப்படுவதன் காரணமாக உலகளாவிய நியாயாதிக்கத்தின் அடித்தளம் ஸ்திரமற்றதாக அமைந்துள்ளது, அது நீதியின் அமுல்படுத்தலுக்கு தடையாக அமைந்துள்ளது. மேலும், உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க முனையும் நாடுகளின் சட்டத்தின் சட்டக வடிவமைப்பின் உருவாக்கம் மோசமாக அமைந்துள்ளதுடன் உலகளாவிய நியாயாதிக்கம் மற்றும் சர்வதேச சட்டங்களைப் பிரயோகிக்க அவசியமான தொடர்புடைய தேசிய சட்டங்கள் அந்நாடுகளில் காணப்படுவதில்லை.

உலகளாவிய நியாயாதிக்கம் தொடர்பான புரிதல் மற்றும் அறிவு உள்ளூர் நீதிமன்றங்களில் காணப்படாமை அத்துடன் உள்ளூர் சட்டங்களை சர்வதேச சட்டத்துடன் இணைத்தல் ஆகிய நடைமுறை அம்சங்களைப் பிரதிபலிக்கும் வேளை, நாடுகள் சர்வதேச சட்டங்களை தமது உள்ளூர் சட்டக வடிவமைப்புக்குள் உள்வாங்கும் தேவை காணப்படுகின்றது.

சான்றுகளை சேகரிப்பதுடன் தொடர்புடைய நடைமுறை அம்சங்கள் பிரதான தடையாக அமைகின்றன. இச்சான்றுகள் முதன்மையாக குற்றம் இடம்பெற்ற நாடுகளில் காணப்படுமேயன்றி வழக்கு நடவடிக்கைகள் இடம் பெறும் நாடுகளில் அல்ல. விசாரணை, ஆவணங்கள், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோரை அடையாளம் காணல் அத்துடன் அவர்களைப் பாதுகாத்தல் போன்ற அம்சங்களில் சான்றுகள் தொடர்பான பிரச்சினைகள் எழுகின்றன.

2005ஆம் ஆண்டு நேபாளத்தில் மாவோ கிளர்ச்சி ஏற்பட்ட போது சித்திரவதைகளை மேற்கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட கேணல் குமார் லாமா 2013ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். வழக்கு நடவடிக்கைகளின் போது தேவையான சான்றுகளைப் பெறுவதில் காணப்பட்ட சிரமங்கள் மற்றும் அவற்றைப் பெறுவதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு இன்மை என்பவற்றால் யதார்த்தங்களை நியாயமான சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவுவதற்கு வழக்கு தொடர்ந்த தரப்பினரால் முடியாமல் போது. எவ்வாறாயினும், தொழில்நுட்ப முன்னேற்றத்துடன், வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வோர் தகவல்களை எளிதாகப் பெறவும், சந்தேகத்துக்குரிய ஒருவர் எல்லைக்குள் நுழையும் வேளை விழிப்புடன் இருக்கவும் வழிகள் காணப்படுவதால், கடந்த ஆண்டுகளில் வினைத்திறன் மிக்க சட்ட நடவடிக்கைகளை தடுக்கும் நடைமுறைக் கட்டுப்பாடுகள் குறைந்துள்ளன.

குற்றம்சாட்டப்பட்ட தரப்புகள் தாம் தங்கியிருக்கும் வெளிநாட்டில் தமக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன என்ற விடயத்தை அறிந்தவுடன் விரைவாக அந்நாட்டை விட்டு வெளியேறுவது உலகளாவிய நியாயாதிக்க செயற்பாடுகளை மேலும் தடுக்கின்றது. அவ்வாறான நிலையொன்று இராணுவத்தின் 57ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட ஜகத் டயஸ் என்பவரின் விடயத்தில் இடம்பெற்றது. அவர் ஜேர்மனியில் இலங்கைத் தூதுவராக செயற்பட்ட வேளை செப்டெம்பர் 2011ஆம் ஆண்டு அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நிலையத்தினால் (ECCHR) மற்றும் TRIAL International ஆகிய அமைப்புகளினால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட வேளை அவர் அங்கிருந்து திருப்பி அழைக்கப்பட்டார்.

சர்வதேச ரீதியாகக் காணப்படும் தண்டனை விலக்கும் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வழக்கு நடவடிக்கைகளுக்குத் தடையாக அமைகின்றது. எவ்வாறாயினும், சர்வதேச நீதிக்கான நீதிமன்றத்தில் கொங்கோ நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தொடர்பில் கொங்கோ எதிர் பெல்ஜியம் (2022) வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் உருவாக்கப்பட்ட சட்டத்தினால் இந்நிலை மாற்றமடைந்தது. அதிகாரி ஒருவர் தனது தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட குற்றம் ஒன்று யுத்தக் குற்றமாக அல்லது மனித குலத்துக்கு எதிரான குற்றமாக இருப்பினும் அதற்கு குறித்த அதிகாரி பொறுப்புக்கூற வேண்டிய நிலையை இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு எடுத்துரைத்தது.

உலகளாவிய நியாயாதிக்கம் குறைபாடுகள் உள்ளதாகக் காணப்பட்ட போதும், அதிகாரிகள் தமது நாடுகளில் மேற்கொள்ளும் வன்முறை மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு நீதியில் இருந்து தப்பிக்கும் நிலையில், அவர்களை அந்நடவடிக்கைகளுக்கு வகைகூற வைப்பதற்கு காணப்படும் சாத்தியமான தீர்வுகளில் ஒன்றாகவே கருதப்படுகின்றது.

நிலுஷி தேவப்புர