Photo, HINDISIP

மேலும் பல அமைச்சர்களை நியமிக்குமாறு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்குதல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. 20 அமைச்சரவை உறுப்பினர்களுடன் இரு வாரங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட 38 இராஜாங்க அமைச்சர்களையும் சேர்த்தால் தற்போது பதவியில் இருக்கும் அமைச்சர்களின் தொகை 58 ஆகும். அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சரவைக்கு மேலும் 10 பேரையும் இராஜாங்க அமைச்சர்களாக இருவரையும் ஜனாதிபதியால் நியமிக்கமுடியும். அதற்காக அமைச்சரவையில் நிச்சயம் நிரப்பப்படவேண்டிய வெற்றிடங்கள் இருப்பதாக அர்த்தப்படுத்தமுடியாது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிபெறுவதற்கு நாடு பெரும் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் சாத்தியமானளவுக்கு குறைந்தபட்ச எண்ணிக்கை அமைச்சர்களுடன் அரசாங்க நிருவாகத்தை நடத்தவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருககும் நிலையில் மேலும் அமைச்சர்களை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை அரசியல்வாதிகளிடம்  இருந்து வந்துகொண்டிருக்கிறது.

அடுத்த அணி அமைச்சர்கள் நியமனத்தின்போது பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் மற்றும் முன்னைய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்க பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதியிடம் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்தார். எதிரணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அமைச்சரவையில் இணைவார்கள் என்று கூறிய ரணதுங்க அரசியலமைப்பின் பிரகாரம் மேலும் பத்துப் பேரை அமைச்சரவைக்கு நியமிக்கமுடியும் என்று குறிப்பிட்டார். அமைச்சரவையில் பத்து வெற்றிடங்கள் இருப்பதாக ஏதோ அவை உடனடியாக நிரப்பப்படவேண்டியவை என்ற தோரணையில் அவர் பத்திரிகையொன்றுக்கு கூறியதை காணக்கூடியதாக இருந்தது.

ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையிலான இன்றைய அரசாங்கத்துக்கும் மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் பதவியில் இருந்து இறங்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் அரசாங்கத்துக்கும் இடையில் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை. சிலரை தவிர, ராஜபக்‌ஷவின் அமைச்சரவையில் இருந்தவர்களே இன்றும் முக்கிய அமைச்சர்களாக பதவி வகிக்கிறார்கள். இராஜாங்க அமைச்சர்களைப் பொறுத்தவரையிலும் நிலைமை அதுவே. நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்நோக்குகிற அரசியல்வாதிகளை நியமிப்பதை கூட ஜனாதிபதியால் தவிர்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அவர் பொதுஜன பெரமுனவின் ‘பணயக்கைதி’யாக இருக்கிறார்.

பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தபோது கடந்த ஏப்ரல் முற்பகுதியில் கோட்டபாய கேட்டுக்கொண்டதற்கு இணங்க பதவிகளை துறந்தவர்களும் பிறகு மே மாதம் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியில் இருந்து இறங்கியபோது கலைந்த அமைச்சரவையில் இருந்தவர்களும் இன்றைய அமைச்சரவையை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இது தவறான ஆட்சிமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த நாட்டு மக்களை அவமதிப்பதாகும்.

அது போக, குடும்ப ஆதிக்க அரசியல், அதிகார துஷ்பிரயோகம், படுமோசமான ஊழல், சட்டத்தின் ஆட்சி சீர்குலைவு மற்றும் இனவாதம் என்று ஆட்சிமுறையின் கெடுதியான போக்குகள் சகலவற்றையும் உருவகப்படுத்தி நி்ற்பவர்களான ராஜபக்‌ஷர்கள் அதிகாரத்தில் இருந்து கூண்டோடு வெளியேற வேண்டும் என்பதே மக்கள் கிளர்ச்சியின் பிரதான முழக்கங்களில் ஒன்று. அரசாங்கப் பதவிகளில் இருந்து சில மாதங்கள் விலகியிருந்த ராஜபக்‌ஷர்கள் மீண்டும் தலைகாட்டத் தொடங்குகிறார்கள். ராஜபக்‌ஷர்களை பதவிகளில் மீண்டும் அமர்த்துவதை ஜனாதிபதி விக்கிரமசிங்க விரும்பவில்லை என்று கூறப்பட்ட போதிலும், அவர்களை அமைச்சர்களாக நியமிக்கவேண்டும் என்ற நெருக்குதலை அவர் எதிர்நோக்குகிறார் என்பதில் சந்தேகமில்லை.

இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தில் ராஜபக்‌ஷ குடும்பத்தின் மூத்தவர் முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான சமல் ராஜபக்‌ஷவின் புதல்வன் சசீந்திர சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார். அமைச்சர் பதவிகளுக்கு ராஜபக்‌ஷர்களின் மீள்வருகையின் ஒரு தொடக்கமாகவும் இதை நோக்கமுடியும். அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தின்போது மஹிந்தவின் மூத்த புதல்வன் நாமலை நியமிப்பதை தவிர்க்க விக்கிரமசிங்கவினால் இயலும் என்று நம்பமுடியவில்லை. தனக்கு அமைச்சர் பதவி தரப்பட்டால் அதை மனமுவந்து ஏற்று நாட்டுக்காக ‘உழைக்க’ தான் தயாராக இருப்பதாக நாமல் ஏற்கெனவே கூறியிருந்தார்.

ராஜபக்‌ஷர்களில் எவராவது ஏதோ ஒரு அமைச்சர் பதவியில் மீண்டும் அமர்த்தப்படுவதை உறுதிசெய்துவிட்டுத்தான் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ‘பொம்மலாட்டக்காரன்’ என்று வர்ணிக்கப்படும் பசில் ராஜபக்‌ஷ தனது இரண்டாவது சொந்தநாடான அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

இத்தகைய பின்புலத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் ‘சிற்றிசன் சில்வா’ அரசியல் பத்தியில் ராஜபக்‌ஷ குடும்பத்தையும் பிலிப்பைன்ஸின் மார்கோஸ் குடும்பத்தையும் ஒப்பீடு செய்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் கவனத்தைத் தூண்டுபவையாக அமைந்தன.

36 வருடங்களுக்கு முன்னர் மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் நாட்டை விட்டு தப்பியோடிய பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரி பேர்டினண்ட் மார்கோஸின் மகன் பொங்பொங் மார்கோஸ் கடந்த மே மாதம் ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்துக்கு வந்தார். இலங்கையில் ராஜபக்‌ஷ ஆட்சிக்கு எதிரான ‘அறகலய ‘ மக்கள் கிளர்ச்சி உக்கிரமடையத் தொடங்கிய நேரம் அது. ஜூனியர் மார்கோஸின் வெற்றியைக் கண்டு இலங்கையில் மாத்திரமல்ல, எமது பிராந்தியத்திலேயே மஹிந்த ராஜபக்‌ஷவையும் நாமலையும் தவிர கூடுதலாக மகிழ்ச்சியடைந்திருக்கக்கூடியவர்கள் வேறு எவரும் இருக்கமுடியாது என்று ஏற்கெனவே நாம் குறிப்பிட்டிருந்தோம்.

பிலிப்பைன்ஸ் நிகழ்வுகள் தங்களால் காலப்போக்கில் மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையை ராஜபக்‌ஷர்களுக்கு கொடுத்திருக்கும் என்பது நிச்சயம். ஆனால், அவர்களால் பொங்பொங் போன்று 36 வருடங்கள் காத்திருக்க முடியுமா என்பதுதான் சந்தேகம்.

சில தினங்களுக்கு முன்னர் கூட மஹிந்த ராஜபக்‌ஷ தங்கள் குடும்பத்தைப் பற்றி கீழ்த்தரமாக பேசவேண்டாம் என்றும் ராஜபக்‌ஷர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு அவர்களின் அருமையும் பெருமையும் புரியும்; மீண்டும் தேர்தல்களில் மக்களின் ஆதரவுடன் பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வரும் என்றும் கூறியிருந்தார்.

அவர்களைப் பொறுத்தவரை, இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் காணாத இன்றைய படுமோசமான பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவான மக்கள் கிளர்ச்சியும் ஏதோ தற்செயல் நிகழ்வுகள் என்பது போன்றும் அதில் தங்களுக்கு பெரும் பொறுப்பு இல்லை என்பதாகவும் ஒரு மெத்தன உணர்வில் கருத்துக்களை வெளியிடுகிறார்கள். தங்களது தவறான ஆட்சியின் விளைவாகவே நாடு வங்குரோத்து அடைந்தது என்பதை ஒத்துக்கொள்ளத் தயாராயில்லை. அத்தியாவசியப் பொருட்களுக்காக மைல் கணக்காக வரிசைகளில் இரவு பகலாக காத்திருந்த மக்கள் தங்களை சபித்து வசைமாரி பொழிந்ததை ராஜபக்‌ஷர்கள் சுலபமாக மறந்துவிட்டார்கள் போலும்.

மக்கள் ஆணையை இழந்துவிட்டதாக நோக்கப்படுகின்ற நாடாளுமன்றத்தில் தங்களது கட்சிக்கு இருக்கின்ற பெரும்பான்மை ஆசனங்களைப் பயன்படுத்தி புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்ததையும் அவர் மீது நெருக்குதலைப் பிரயோகித்து சில காரியங்களை சாதிக்கக்கூடியதாக இருப்பதையும் வைத்துக்கொண்டு ஏதோ தாங்களே இன்னமும் ஆட்சியில் இருப்பது போன்ற ஒருவித மருட்சியில் ராஜபக்‌ஷர்கள் வாழ்கிறார்கள்.

அதேவேளை, இலங்கையின் முக்கிய அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட மக்கள் கிளர்ச்சி தீவிரமடைந்துகொண்டிருந்த ஒரு  கட்டத்தில் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ராஜபக்‌ஷர்களின் மீள்வருகை எதிர்காலத்தில்  சாத்தியமாகுமா என்று கேட்கப்பட்டபோது, “அறகலய கிளர்ச்சி ஒடுக்கப்பட்டால் அவர்கள் மீண்டும் தீவிர அரசியலுக்கு வரக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்” என்று அளித்த பதில் இச்சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சில வாரங்களுக்கு முன்னர் ‘த இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் ராஜபக்‌ஷர்களின் மீள்வருகைக்கான சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் “சகல சாத்தியப்பாடுகளும் இருக்கின்றன. ஜனாதிபதி விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்து அமைத்திருக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கு பதிலாக எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து நேர்மையான ஒரு அரசாங்கத்தை அமைத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டால்,  வரலாறு ராஜபக்‌ஷர்களுக்கு உரிய பாதையைக் காட்டும்” என்று குறிப்பிட்டார்.

இந்த இடத்தில் மார்கோஸ் குடும்பத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் பிறகு அண்மைய மீள் எழுச்சியும் இன்றைய இலங்கை நிலைவரத்துடன் ஆழ்ந்து நோக்கவேண்டியவை. அதில் பல சமாந்தரங்களை அடையாளம் காணமுடியும்.

ஒரு காலத்தில் செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக இருந்த பேர்டினண்ட் மார்கோஸ் மூன்று தடவைகள் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டவர். முதலில் இராணுவத்தில் பணியாற்றிய அவர் இரண்டாவது உலகப்போருக்குப் பிறகு வழக்கறிஞரானார். பிலிப்பைன்ஸில் மிகவும் கூடுதலான இராணுவ பதக்கங்களைப் பெற்ற போர்வீரன் என்று உரிமைகோரிக்கொண்டு அரசியலுக்கு வந்த அவர் 1949ஆம் ஆண்டு காங்கிரஸ் உறுப்பினராக தெரிவானார். படிப்படியாக அரசியலில் முன்னுக்கு வந்த அவர் காங்கிரஸ் உறுப்பினர் என்ற நிலையில் இருந்து செனட்டராக, அமைச்சராக பதவிகளை வகித்து இறுதியில் 1965 நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவானார்.

அவரது 20 வருடகால ஆட்சி குடும்ப ஆதிக்கமும் ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் அடக்குமுறையும் நிறைந்ததாக இருந்தது. அவரது காலத்தில் வெளிநாடுகளிடமிருந்து பெறப்பட்ட கடனை 36 வருடங்களாக பிலிப்பைனஸ் இன்னமும் திருப்பிச்  செலுத்திக்கொண்டிருக்கிறது. கடுமையான வறுமை, பணவீக்கம் மறறும் கடன் நெருக்கடியில் நாடு உழன்றுகொண்டிருந்த நிலையில் மக்கள் மார்கோஸ் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள்.

மக்கள் ஆதரவு இல்லாத நிலையிலும் முறைகேடுகளைச் செய்து 1986 ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதாக மார்கோஸ் பிரகடனம் செய்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கொராசொன் அக்கியூனோவின் தலைமையில் மக்கள் கிளர்ச்சி வெடித்தது. இராணுவமும் கூட கிளர்ச்சிக்கு ஆதரவளித்தது. அந்த கத்தோலிக்க நாட்டில் திருச்சபையும் முழுமையாக  மக்களுக்கு ஆதரவாகவே நின்றது.

‘மஞ்சள் புரட்சி’ என்றழைக்கப்பட்ட மக்கள் கிளர்ச்சியை அடுத்து 1986 பெப்ரவரி 27 குடும்பத்துடன் மார்கோஸ் விமானப்படை விமானத்தில் அமெரிக்க உதவியுடன் நாட்டை விட்டு தப்பியோடினார். அவரது 20 வருடகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து அக்கியூனோ ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

மார்கோஸ் அதிகாரத்தில் இருந்த காலப்பகுதியில் அவரது குடும்பமும் நெருங்கிய பரிவாரங்களும் நாட்டின் செல்வத்தை சூறையாடி வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் பெறுமதியான சொத்துக்களை வாங்கிக் குவித்தார்கள். அமெரிக்கா அவரது குடும்பத்துக்கு ஹவாய் தீவில் அரசியல் தஞ்சம் வழங்கியது. அமெரிக்காவில் இறங்கியபோது 3 இலட்சம் டொலர்கள் பெறுமதியான தங்கத்தை அவர்கள் கொண்டுவந்ததாக அந்த நேரத்தில் கூறப்பட்டது. அஞ்ஞாதவாசத்தின்போது தனது 72 வயதில் மார்கோஸ் மரணமடைந்தார்.

ஆடம்பர வாழ்க்கைக்குப் பெயர்போன முன்னாள் அழகுராணியான மனைவி இமெல்டா பிறகு  பல வருடங்கள் கழித்து கணவரின் உடலை பிலிப்பைன்ஸுக்கு கொண்டுவந்து அடக்கம் செய்தார்.

நாட்டை விட்டு தப்பியோடிய நேரத்தில் மார்கோஸினதும் இமெல்டாவினதும் தனிப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 500 – 1000 கோடி டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டது. ஊழல்தனமான அந்த குடும்பம் பிலிப்பைன்ஸ் மக்களிடம் களவாடிய பேரளவிலான பணத்தைப் பிறகு ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் ஒருபோதும் மீட்கக்கூடியதாக இருக்கவில்லை. விளங்கிக்கொள்ள முடியாத காரணங்களுக்காக இமெல்டாவும் பிள்ளைகளும் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இன்று அவர்கள் மார்கோஸ் செய்த பாவங்களுக்கு எந்த பிராயச்சித்தமும் செய்யவேண்டிய அவசியமோ நெருக்குதலோ இல்லாமல் வசதியாக வாழ்கிறார்கள்.

2010 நாடாளுமன்றத்துக்குத் தெரிவான இமெல்டா மார்கோஸ் 2019 வரை அதன் உறுப்பினராக இருந்தார். அவரது மகள் இமி மார்கோஸும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். பிறகு அவர் தங்களது மாகாணத்தின் ஆளுநராக பதவிவகித்து இப்போது செனட்டராக இருக்கிறார். அவை எல்லாவற்றுக்கும் மேலான விசித்திரம் என்னவென்றால் மார்கோஸின் இரண்டாவது பிள்ளையும் ஒரே மகனுமான பொங்பொங் அந்த நாட்டு  மக்களினால் நான்கு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமையேயாகும் (அதற்கு முதல் 2010 –2016 அவர் செனட்டராகவும் இருந்தார்).


{நடுவில், இமெல்டா மார்கோஸ் (இடது), பொங்பொங் மார்கோஸ் (வலது), Photo, AFP}

தங்களிடம் சூறையாடிய செல்வத்துடன் நாட்டை விட்டு தப்பியோடிய குடும்பத்தின் ஒரு வாரிசை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்வதில் பெரும்பான்மையான பிலிப்பைன்ஸ் மக்கள் எந்த அசௌகரியத்தையும் நோக்கவில்லை?

மார்கோஸ் நாட்டைவிட்டு தப்பியோடிய பின்னரான கடந்த மூன்றரை தசாப்தங்களில் பிலிப்பைன்ஸில் பதவியில் இருந்த அரசாங்கங்களின் ஊழலும் முறைகேடுகளுமே பொங்பொங்கின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று அரசியல் அவதானிகள் அபிப்பிராயம் தெரிவித்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

சண்டே ரைம்ஸ் சிற்றிசன் சில்வாவின் பத்தியின் முடிவு வாசகங்கள் தான் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியவை;

“எனக்கு வயதாகிக்கொண்டு போகிறது. இன்னும் ஓரிரு தசாப்தங்களுக்கு நான் உயிருடன் இருக்கமாட்டேன் என்பது நிச்சயம். ஆனால், எனது வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

“பொங்பொங் மார்கோஸைப் போன்று ராஜபக்‌ஷ குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவர் காலப்போக்கில் தனது குடும்பத்தின் உரிமை என்று கூறிக்கொண்டு ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிட வருவார். தேர்தல் பிரசாரத்துக்கு நிதியை தேடுவதிலோ மக்களின் வாக்குகளை பணம்கொடுத்து வாங்குவதிலோ அவருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்பது எனக்கு நிச்சயம்.”

வீரகத்தி தனபாலசிங்கம்