Photo, REUTERS/Dinuka Liyanawatte

வரிசைகளில் ஏற்படும் மரணங்கள், கடற்கரைகளில் இறந்த உடல்கள் கரையொதுங்குவதுடன் தொடர்பான ஆபத்து மிக்க சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இந்த வருடம் மாத்திரம் இவ்வாறான சம்பவங்கள்  ஆகக்குறைந்தது 11 பதிவாகியுள்ளன. கல்கிசையில் வீதியோரத்திலும், கொலன்னாவ பாலத்தின் கீழும், ரம்புக்கனையில் புகையிரதப் பெட்டியொன்றினுள்ளும் அதேபோன்ற இன்னும் பல பொது இடங்களிலும் இவ்வாறாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான இறந்த சடலங்கள், விசேடமாக 1980 காலகட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி அமைச்சராகவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தை, ரணசிங்க பிரேமதாச பிரதமராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும், இருந்த காலகட்டத்தில் இறந்த சடலங்கள் ஆறுகளில் மிதந்து வந்ததையும் விதீயோரங்களில் போடப்பட்டிருந்தமை போன்ற சோகமான சம்பவங்களை மீளவும் நினைவுபடுத்துவதுடன் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன.

கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் கடற்கரையில் இரு கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் இரண்டு பசளை உறைகளில் போடப்பட்டிருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி கண்டெடுக்கப்பட்ட சடலமே மிகவும் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட சடலமாகும். இன்னொரு குழந்தையொன்றின் சடலம் புத்தளம் மாவட்டத்தில் வைக்காலை பகுதியில் கண்டெடுக்கப்பட்டதுடன், அச்சடலம் வத்தளைப் பகுதியில் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஒரு தாய் ஆற்றில் வீசிய குழந்தையின் சடலமா, என்பதை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

ஏனைய அனைத்து சடலங்களும் பெரியவர்களுடையவை என்பதுடன் ஒரு சடலம் மாலைத்தீவு நாட்டு நபரொருவருடையது ஆகும். களுத்துறை மாவட்டத்தில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், கொழும்பு மாவட்டத்தில் கடற்கரைப் பகுதிகளிலிருந்து ஒன்பது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றுள் நான்கு சடலங்கள் வெள்ளவத்தைப் பகுதியிலிருந்தும், பம்பலப்பிட்டி, வத்தளை மற்றும் மட்டக்குளி ஆகிய கடற்கரைகளிலிருந்து தலா ஒரு சடலம் வீதமும் கண்டெடுக்கப்பட்டன.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ மற்றும் ஆட்சியிலிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட சகல அமைச்சர்களுக்கும் எதிராக கொழும்பில் போராட்டங்கள் மும்முரமாக இடம்பெற்ற காலி முகத்திடலின் கடற்கரையோரத்தில் ஜூலை மாதம் 29ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதிகளில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இச்சம்பவம் போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை என பலரும் கருதினர். தற்போதைய ஜனாதிபதி பதவியேற்ற மறுநாளன்று அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதுடன் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போராட்டக்காரர்களை இரவோடு இரவாக தாக்கி பலரைக் கைது செய்தனர்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று முதல் 16 நாட்களுக்குள் கொழும்பு நகரின் கடற்கரைப் பகுதிகளில் நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதும், எரிபொருள் வரிசைகளில் இடம்பெற்ற ஆறு மரணங்களும் விசேடமாக குறிப்பிடத்தக்கவையாகும். அத்துடன் பரவலாக மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளானது, புதிய ஜனாதிபதி மற்றும் அவரது கூட்டணியினர் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பாக வழங்கிய வாக்குறுதிகளில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

வரிசைகளில் ஏற்படும் மரணங்கள்

இலங்கையில், குறிப்பாக 2022 மார்ச் மாதம் முதல் சகல பிரதேசங்களிலும் மண்ணெண்ணெய், பெற்றோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு போன்றனவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசைகளைக் காணக்கூடியதாக இருந்தன. நாடு வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருகின்றது, மேலும் எரிபொருள் இறக்குமதிக்குரிய நிதி ஏற்பாடுகளை அரசாங்கத்தால் மேற்கொள்ள இயலாமை இந்த நிலைமையை மிகவும் மோசமாக்கியுள்ளது. எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய காலம் மணித்தியாலங்களிலிருந்து நாட்கள் வரையில் நீடித்தது. எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அருகே வீதியோரங்களில் கூடாரங்களை அமைத்து தங்கியிருக்கும் சம்பவங்களும் சமூக வலைத்தளங்களூடாக பரவலாக காணக்கிடைத்தன. பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரத்தன்மையின்மை, மக்கள் எழுச்சி மற்றும் எதிர்ப்புக்கள் மற்றும் கருத்து வெளிப்பாடுகளை அடக்குவதற்குரிய அரசாங்கத்தின் முயற்சிகள், எரிபொருள் வரிசைகளில் மரணங்கள் மற்றும் கடற்கரைகளில் இறந்த உடல்கள் பற்றிய சம்பவங்கள் வழமையான செய்தி அறிக்கைகளாக இருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தன.

மார்ச் மாதம் 19ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையில் வரிசைகளில் காத்திருப்பதுடன் தொடர்புடையதாக 27 மரணங்கள் சம்பவித்துள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது சராசரியாக ஐந்து நாட்களுக்கு ஒரு மரணம் வீதம் சம்பவித்துள்ளது என்பதுடன், மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் ஒரு மாதத்தில் தலா ஐந்து மரணங்கள் வீதம் சம்பவித்துள்ளதுடன் ஜூலை மாதத்தில் மாத்திரம் 12 மரணங்கள் சம்பவித்துள்ளன.

நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஆறு மாகாணங்களில் இவ்வாறான மரணங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட மரணங்கள் (14) சன நெரிசல் மிக்க மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன (களுத்துறை மாவட்டத்தில் ஆறு மரணங்களும், கம்பஹா மாவட்டத்தில் மூன்று மரணங்களும், கொழும்பு மாவட்டத்தில் ஐந்து மரணங்களும் பதிவாகின). நான்கு மரணங்கள் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் பதிவாகியதுடன், மத்திய மாகாணத்தில் நான்கு மரணங்களும், தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் மூன்று மரணங்களும், வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் ஒரு மரணமும், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மரணமும் பதிவாகியுள்ளன.

மரணித்த சகலரும் ஆண்களாவர் என்பதுடன் மரணித்தவர்களுள் பெரும்பாலானோர் மூத்த பிரஜைகளாவர். அவர்களுள் ஐந்து பேர் 60 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாவர் என்பதுடன், இன்னும் ஐந்து பேர் 70 இற்கும் 85 வயதிற்கும் இடைப்பட்டவர்களாவர். பத்து பேர் 40 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்களாவர் என்பதுடன் ஆறு பேர் 18 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டவர்களாவர். 19 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களது மரணங்களுக்குக் காரணம் விபத்துக்களும் வன்முறையுடன் கூடிய நடவடிக்கைகளுமாகும்.

இவற்றுள் ஒரு நபர் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்து அதனை எடுத்துச் சென்றுகொண்டிருந்த நபராவார் என்பதுடன் ஏனைய அனைவரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் அல்லது எரிபொருள் வரிசைகளுடன் தொடர்புடையவர்களாவர். பெரும்பாலான மரணங்கள் மாரடைப்பு போன்ற சுகயீனங்களின் காரணமாக ஏற்பட்டுள்ளன. பல்வேறுபட்ட நோய்களால் பீடிக்கப்பட்டிருந்த மூத்த வயதினர்கள் மற்றும் நோயாளிகளும் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைமை ஏற்பட்டமையே இதற்கான காரணமாகும்.

பொலிஸார் உட்பட வரிசைகளைப் பொருட்படுத்தாது இடையில் சென்று எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முற்பட்ட நபர்களின் நடவடிக்கைகளின் விளைவாக வரிசைகளில் காத்திருந்து வழமையாக அவற்றைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொள்வதற்குரிய சந்தர்ப்பங்கள் கிடைக்காமையின் காரணத்தினால் முரண்பாடுகள் மற்றும் வன்முறை ரீதியிலான நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாறாக கோபமும் ஆத்திரமும் அதிகரித்தமையின் காரணத்தினால் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக உருவாகிய வன்முறைச் சம்பவங்களால் இவ்வாறாக வரிசைகளில் மூன்று மரணங்கள் சம்பவித்துள்ளதாக பதிவாகியுள்ளன. மிக நீளமான எரிபொருள் வரிசைகள் வீதிகளில் போக்குவரத்து நெரிசல்களைத் தோற்றுவித்ததுடன் வரிசைகளில் காத்திருக்கும் வாகனங்களுக்காக பல வீதிகளையும் மூட வேண்டியேற்பட்டன. அதேநேரம் வரிசைகளின் காரணமாக ஏற்பட்ட விபத்துக்களின் விளைவாகவும் மூன்று மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன.

இருதய நோயாளிகளின் அல்லது மாரடைப்பின் காரணமாக மரணித்தல்

மார்ச் மாதம் 28ஆம் திகதியன்று அத்துருகிரியவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வந்திருந்த 85 வயதுடைய இருதய நோயாளி திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணித்துள்ளார். ஏப்ரல் மாதம் 9ஆம் திகதியன்று தங்கொட்டுவை – நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பஸ்ஸுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருந்த வேளையில் ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக 47 வயதுடைய சாரதி ஒருவர் மரணித்துள்ளார். ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வாய்க்கால் (வென்னப்புவ) பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்த 51 வயதுடைய சாரதியொருவர் மாரடைப்பின் காரணமாக வாகனத்திலேயே மரணித்துள்ளார்.

ஜூன் மாதம் 16ஆம் திகதியன்று பாணந்துறை வேக்கடையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக பல மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருந்த முச்சக்கர வண்டி சாரதியொருவர் மாரடைப்பின் காரணமாக முச்சக்கரவண்டியினுள்ளேயே மரணித்துள்ளதாக பதிவாகியுள்ளது. புஸ்ஸல்லாவயில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த 71 வயதுடைய நபரொருவர் திடீர் மாரடைப்பின் காரணத்தினால் கம்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணித்துள்ளார்.

தீடீர் நோய்களின் காரணமாக மரணித்தல் அல்லது வரிசைகளில் காத்திருப்பதன் விளைவாக ஏற்படும் உடற்சோர்வுத் தன்மை

மார்ச் மாதம் 20ஆம் திகதியன்று கடவத்தையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பெற்றோல் பெற்றுக்கொள்வதற்காக வரிசையையில் காத்திருந்த 70 வயதுடைய நபரொருவர் கடுமையான வெப்பம் காரணமாக ஏற்பட்ட உடற்சோர்வின் விளைவாக மரணித்துள்ளார். மார்ச் மாதம் 19ஆம் திகதியன்று கண்டியில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த 70 வயதுடைய நபரொருவர் மரணித்ததுடன் 76 வயதுடைய நபரொருவர் மீரிகமை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலிருந்து பெற்றுக்கொண்ட பெற்றோல் நிரப்பப்பட்ட கொள்கலன்களை முச்சக்கர வண்டியில் ஏற்றும்போது மரணித்துள்ளார். ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி காலி மாவட்டத்தின் தவலம பகுதியில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்கும் போது சாரதி இருக்கையில் அமர்ந்தவாறே 43 வயதுடைய நபரொருவர் மரணித்துள்ளார். மேலும் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி ஹற்றனில் மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த 55 வயதுடைய நபரொருவரும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி களுத்துறையில் மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த 63 வயதுடைய நபரொருவரும் தீடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மரணமடைந்ததாக பதிவாகியுள்ளன.

ஜூன் மாதம் 23ஆம் திகதியன்று களுத்துறையின் அங்குறுவாத்தோட்டையிலுள்ள பட்டகொடைப் பகுதியில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் வரிசையில் காத்திருந்த 63 வயதுடைய நபரொருவரும், ஜுலை மாதம் 7ஆம் திகதி பொரளை டிக்கல் வீதியில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவரும், ஜூலை மாதம் 7ஆம் திகதி பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபன (LIOC) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 60 வயதுடைய நபரொருவரும், ஜூலை மாதம் 7ஆம் திகதி பயாகலை ஐ.ஓ.சீ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 63 வயதுடைய நபரொருவரும், ஜூலை 12ஆம் திகதி வவுனியா, பண்டாரவன்னியன் பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 44 வயதுடைய நபரொருவரும், ஜூலை 14ஆம் திகதியன்று சிலாபம் – குருணாகல் வீதியிலுள்ள முன்னேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்து செல்லும் வழியில், 37 வயதுடைய நபரொருவரும், ஜூலை 22ஆம் திகதி திருகோணமலை, கிண்ணியா பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 59 வயதுடைய நபரொருவரும், ஜூலை 22ஆம் திகதியன்று மத்துகமை, பெலவத்தை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் 70 வயதுடைய நபரொருவரும், ஜூலை 31ஆம் திகதி கம்பளையில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் 51 வயதுடைய நபரொருவரும் திடீரென மரணித்துள்ளனர்.

விபத்துக்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக வரிசைகளில் ஏற்படும் மரணங்கள்

வரிசைகளில் நிற்கும் போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களின் காரணமாக ஏற்பட்ட மூன்று மரணங்களில் முதலாவது மரணம் மார்ச் மாதம் 20ஆம் திகதியன்று கம்பஹா மாவட்டத்தில் நிட்டம்புவ, ஹொரகொல்லவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலிருந்து பதிவாகியுள்ளது. மரணித்த நபர் 29 வயதுடையவர் என்பதுடன் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்கும் போது நிகழ்ந்த தகராறு காரணமாக அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை மாதம் 08ஆம் திகதியன்று காலி மாவட்டத்தில் மாகல்லை பகுதியில் அமைந்துள்ள லாஃப் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக 25 வயதுடைய நபரொருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் நான்கு பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர். அதேபோன்று ஜூலை மாதம் 25ஆம் திகதியன்று கொழும்பு மாவட்டத்தில் பொரளை காசல் வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்து 40 வயதுடைய நபரொருவர் கூறிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொள்ளப்பட்டுள்ளார்.

வரிசைகளுடன் தொடர்புடைய விபத்துக்கள் காரணமாக மூன்று மரணங்கள் சம்பவித்துள்ளதாக அறிக்கைகள் பதிவாகியுள்ளன. ஜூன் 24ஆம் திகதியன்று புத்தளம், அனுராதபுரம் வீதியில் அமைந்துள்ள பண்டலுகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த 19 வயது நபர் மீது கொள்களன் வண்டியொன்று மோதியுள்ளது.

ஜூன் 29 அன்று, அளுத்கம, தர்கா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலிருந்து வெளியேறத் தயாராகிக்கொண்டிருந்த 53 வயதுடைய நபர் ஒருவர், ​​லொறியில் மோது உயிரிழந்துள்ளார். ஜூலை 31 அன்று, மீட்டியாகொடையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலிருந்து அருகாமையிலுள்ள கடைக்கு நடந்து சென்றுகொண்டிருந்த 41 வயதுடைய நபரொருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

மருத்துவக் கருத்துக்கள்

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் நிபுணத்துவ மனோவியல் வைத்தியர் ரூமி ரூபனின் கருத்தை மேற்கோளாகக் காட்டியுள்ள ‘தி மோர்னிங்’ பத்திரிகை, வரிசைகளில் காத்திருப்பதனூடாக ஏற்படக் கூடிய மனோவியல் ரீதியிலான அழுத்தம், போஷாக்கின்மை, நீரிழப்பு மற்றும் மருந்துக்களைப் பெற்றுக்கொள்ளாமை போன்ற பல காரணங்கள் வரிசைகளில் காத்திருக்கும் போது மரணம் நேருவதற்கு காரணமாக உள்ளன.

வரிசைகளில் பல மணித்தியாலங்கள் அல்லது பல நாட்கள் காத்திருக்கும் போது மன அழுத்தம் மற்றும் நிச்சயமற்ற தன்மை போன்றவற்றை உணரக்கூடியதாக இருக்கும் என வைத்தியர் ரூபன் தெரிவித்துள்ளார். ரூபனின் கூற்றுப் படி, இவ்வாறான சந்தர்ப்பங்களில் மாரடைப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாகும். இவ்வாறான மரணங்கள் யாவும் கொலையாகக் கருதப்படல் வேண்டும் என இலங்கை பாலியல் சுகாதாரம் மற்றும் மானிட நோயெதிர்ப்புக் குறைபாட்டு வைரஸ் (HIV) கல்லூரியின் தலைவரும் விசேட வைத்தியருமான திரு சித்திரான் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

ருக்கி பெர்னாண்டோ மற்றும் ஜயனி சுவாரிஸ்

ருக்கி பெர்ணாண்டோ மனித உரிமைகள் செயற்பாளரும், பயிற்றுவிப்பாளரும் சுதந்திர ஊடக இயக்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் ஆவார். ஜயனி சுவாரிஸ், சமூகம் மற்றும் சமயத்திற்கான நிலையத்தின் ஆய்வு உதவியாளராவார்.

2022 ஆகஸ்ட் 10ஆம் திகதி ‘தி மோர்னிங்’ பத்திரிகையில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு.