Photo, Selvaraja Rajasegar

மே மாத நடுப்பகுதியில் பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவிடம் முன்வைத்திருக்கக்கூடிய வேறு நிபந்தனைகளைப் பற்றி எமக்குப் பெரிதாக தெரியாது. ஆனால், ஒரு நிபந்தனையை மாத்திரம் நாடும் உலகமும் அறியும் வகையில் அவர் முன்வைத்தார்.

அதாவது, கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி போராட்டக்காரர்கள் அமைத்திருக்கும் ‘கோட்டா கோ கம’ மீது கைவைக்கக்கூடாது என்பதும் அந்தப் போராட்டம் தொடர அனுமதிக்கவேண்டும் என்பதுமே அந்த நிபந்தனை. கோட்டபாயவும் அதற்கு இணங்கி தன்னை வீட்டுக்கு போகுமாறு கேட்ட அந்தப் போராட்டத்தை குழப்புவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அவர்களின் நலன்களைக் கவனிக்க ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் கொழும்பு மாநகர மேயர் றோசி சேனநாயக்க தலைமையில் குழுவொன்றை நியமித்தமை பிரதமராக பதவியேற்ற பிறகு விக்கிரமசிங்க செய்த முதல் காரியங்களில் ஒன்றாகும்.

இவற்றுக்கு முன்னதாக மே மாத ஆரம்பத்தில் காலிமுகத்திடல் போராட்டக்களத்துக்கு அண்மையாக பெருமளவு பொலிஸ், இராணுவ வாகனங்களைக் கொண்டுவந்து நிறுத்தி அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியபோது விக்கிரமசிங்க நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி ‘கோட்டா கோ கம’ வை குழப்புவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால்  பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகப்போவதாகவும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கத்துக்கு உதவுவதை நிறுத்தப்போவதாகவும் எச்சரிக்கை செய்திருந்தார்.

இவ்வாறாக எல்லாம் செய்த அவர் நாடாளுமன்றத்தில் ஜூலை 20 ஜனாதிபதி  தேர்தலில் வெற்றி பெற்ற மறுநாள் இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி பொலிஸாரையும் படையினரையும் கொண்டு அதிகாலை வேளையில் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை பலவந்தமாக அப்புறப்படுத்தினார். பொலிஸாரும் படையினரும் போராட்டக்களத்தை எவ்வாறு சுற்றிவளைத்தார்கள் என்பதும் போராட்டக்காரர்களுடனும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனும் எவ்வாறு முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்கள் என்பதும் இப்போது உலகறிந்த விடயம்.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை மற்றும் பிரதமரின் அலுவலகம் ஆகியவை ஆக்கிரமிக்கப்பட்ட பிறகு போராட்டக்காரர்கள் மத்தியில் இரு பிரிவினர் இருப்பதாக ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டார். அதாவது, அமைதிவழியில் போராடுகின்றவர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகள் கவனிக்கப்பட வேண்டியவை என்கின்ற அதேவேளை, போராட்டத்திற்குள் ஊடுருவி அரச கட்டடங்களை ஆக்கிரமித்திருக்கும் ‘பாசிசவாதிகள்’ சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கம் கொண்டவர்கள்  என்ற வகையில் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று அவர் கூறினார்.

அதன் பிரகாரம் அவரின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்களின் கட்டமைப்புக்களை எல்லாம் நிர்மூலஞ்செய்து அரச கட்டடங்களையும் ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து மீட்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஜூலை 22 பிற்பகல் வெளியேறிவிடுவதாக போராட்டக்காரர்கள் ஏற்கெனவே அறிவித்ததை பொருட்படுத்தாமல், அன்றைய தினம் அதிகாலையில் மிகவும் சொற்ப எண்ணிக்கையான போராட்டக்காரர்களே களத்தில் தங்கியிருந்த நிலையில் அந்த எண்ணிக்கைக்கு எந்த விதத்திலும் விகிதப்பொருத்தமில்லாமல் பெருமளவில் படையினரைக் குவித்து மேற்கொண்ட  நடவடிக்கை மூலம் ஜனாதிபதி விக்கிரமசிங்க போராட்டக்காரர்களுக்குத் தெளிவான செய்தியொன்றை தெரிவிக்க விரும்பினார் போலும். ‘கோட்டா கோ கம’ ஒரு ‘ரணில் கோ கம’ வாக மாறுவதை அனுமதிக்க அவர் தயாராயில்லை.

காலிமுகத்திடல் படை நடவடிக்கைக்குப் பிறகு அரசியல் முனையில் ஒருவித அமைதி நிலவுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மக்கள் மனதில் பீதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் கிளர்ச்சியின்போது தவிர்க்கமுடியாத வகையில் உணர்ச்சி மேலீட்டின் விளைவாக இடம்பெற்றிருக்கக்கூடிய சில சம்பவங்கள் இப்போது சட்டம், ஒழுங்குப் பிரச்சினையாக நோக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதைக் காண்கிறோம்.

இலங்கை அதன் வரலாற்றில் இதுவரையில் காணாத படுமோசமான பொருளாதார நெருக்கடியில் திணறும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக – பெருமளவுக்கு அரசியல் தூண்டுதல் இல்லாமல் – முன்னெடுத்த கிளர்ச்சியில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெறுவது தவிர்க்கமுடியாதது. அவற்றையெல்லாம் வெறுமனே சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக நோக்குவது நாட்டுக்கு அவசரமாக தேவைப்படுகின்ற அரசியல் உறுதிப்பாட்டை கொண்டுவர உதவாது என்பதை அரசாங்கம் உணர்ந்து செயற்படவேண்டும். மக்கள் கிளர்ச்சி என்பது தெளிந்த நீரோடையோ அல்லது மலர்ப்படுக்கையோ இல்லை.

அதேவேளை, ஒரு சில மாதங்களுக்குள் தீவிரமடைந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரை பதவி கவிழ்த்த கிளர்ச்சி எந்தவொரு அரசியல் கட்சியினாலும் ஏற்பாடு செய்யப்பட்டதல்ல, பொருளாதார நெருக்கடியின் விளைவான இடர்பாடுகளுக்கு மக்கள் தன்னெழுச்சியாக வெளிக்காட்டிய பிரதிபலிப்பே கிளர்ச்சி வெற்றியின் மூலாதாரமாகும். மக்களின் கொந்தளிப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த அரசியல் கட்சிகள் பிறகு ஆதரவை வெளிக்காட்டி  தங்களையும் கிளர்ச்சியுடன் அடையாளப்படுத்துவதில் நாட்டம் காட்டின. வீதிப்போராட்டங்களில் வழமையில் அக்கறை காட்டாத நடுத்தர வர்க்கம் அண்மைய போராட்டங்களில் சமூகத்தின் ஏனைய பிரிவுகளுடன் இணைந்து  பெருமளவில் பங்கேற்றமை கிளர்ச்சியின் தன்னியல்புக்கு ஒரு சிறந்த சான்றாகும்.

‘அறகலய’ மக்கள் கிளர்ச்சிக்கு ஆதரவாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சமூக ஊடகங்களில் நிரம்பிவழிந்த பதிவுகள் அந்தப் போராட்டத்தின் முக்கிய  இயக்கு சக்திகளில் ஒன்றாக விளங்கின. ஆனால், இப்போது கடந்த சில நாட்களாக அதுவும் குறிப்பாக படை நடவடிக்கைகளுக்குப் பிறகு சமூக ஊடக பதிவுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்படுவதாக பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்த கலைஞர்கள், மாணவர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் சட்டத்தரணிகள் இப்போது முன்னைய ஆர்வத்துடன் இல்லை என்ற ஒரு மதிப்பீடும் இருக்கிறது.

போராட்டங்களில் முன்னரங்கத்தில் நின்றவர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ‘வேட்டை’ பல தரப்பினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், மக்கள் கிளர்ச்சிக்கான மூலக் காரணிகள் இன்னமும் இல்லாமல் போய்விடவில்லை.இன்னமும் மக்கள் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக நீண்ட வரிசைகளில் காத்துக்கிடக்கிறார்கள. அந்த வரிசைகளில் மக்கள் இன்னமும் மயங்கிவிழுந்து மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள். பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் ஒருவேளை உணவைத் தவிர்ப்பதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளன. மக்களின் இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதே அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய கடமையாக இருக்கவேண்டும்.

பொருளாதார நெருக்கடியின் விளைவான மக்களின் இடர்பாடுகள் போராட்ட நாட்களில் இருந்ததையும் விட எந்த விதத்திலும் இப்போது  குறைந்துவிடவில்லை. நிலைவரங்களை அரசாங்கம் எவ்வாறு கையாளுகிறது என்பதைப் பொறுத்தே மீண்டும் மக்கள் வீதிகளில் இறங்குவார்களா இல்லையா என்பதைக் கூறமுடியும். மக்களின் மனக்கொந்தளிப்பு அடங்கிப்போய்விடவில்லை. அரசியல் நோக்குடனான சக்திகள் போராட்டத்திற்குள் ஊடுருவிவிட்டன என்று கூறுவதன் மூலம் மக்களின் கவனத்தை திசைதிருப்பமுடியாது.

அரசியல் புரட்சியொன்றின் பரிமாணங்களை எடுத்த மக்கள் கிளர்ச்சியின் உலகறிந்த சின்னமாக விளங்கிய ‘கோட்டா கோ கம’ படையினரால் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றதே தவிர அந்தக் கிளர்ச்சியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. புதிய மொந்தையில்  பழைய கள் என்பது போன்று ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையில் அமைந்திருக்கும் அரசாங்கம் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய தகுதியுடன் இருக்கிறது என்று எவரும் நம்பவில்லை.

மக்கள் கிளர்ச்சியின் காரணமாகவே தன்னிடமிருந்து இதுகாலவரை நழுவிக்கொண்டிருந்த நாட்டின் அதியுயர் பதவியான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி தனது கைகளில் சிக்கியது என்பதை விக்கிரமசிங்க புரிந்துகொள்ளவேண்டும். ராஜபக்‌ஷர்களை அதிகாரத்தில் இருந்து விரட்டிவிட்டு விக்கிரமசிங்கவை அரியாசனத்தில் அமர்த்துவதற்காகவா மக்கள் இவ்வளவு நாளும் இரவு பகலாக போராடினார்கள்? நிச்சயமாக இல்லை. தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணக்கூடியதும் ஊழலற்றதுமான அரசாங்கம் ஒன்றை மக்கள் வேண்டிநிற்கிறார்கள். புதியதொரு அரசியல் கலாசாரம் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் அபிலாசை.

மக்கள் கிளர்ச்சி உண்மையில் அரசியல் அதிகார வர்க்கத்தின் அத்திபாரத்தை ஆட்டங்காண வைத்திருக்கிறது. இதே நிலைவரத்தை அந்த வர்க்கம் தொடர்ந்து அனுமதிக்கப்போவதில்லை. மீண்டும் மக்கள் கிளர்ச்சி உருவாகாமல் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அது மேற்கொள்ளும். மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்து கிளர்ச்சிக்கான சூழ்நிலைகளை இல்லாமல் செய்வதென்பது அதிகாரவர்க்கத்தினால் சாதிக்கமுடியாத ஒன்று. பதிலாக அடக்குமுறை நடவடிக்கைகளின் ஊடாகவே கிளர்ச்சி மூளாதிருப்பதை உறுதிசெய்வதில் அவர்கள் முழுமூச்சாக செயற்படுவார்கள். அரச இயந்திரம் அந்த நோக்கத்துக்காக முழுவீச்சில் பயன்படுத்தப்படும். இது வரலாறு  கற்றுத்தந்த பாடம்.

அதனால் முறைமை மாற்றம் (System Change) என்பது வெறுமனே அரசாங்க மாற்றத்துடன் வந்துசேருகின்ற ஒன்றல்ல. தற்போதைய அரசியல் அதிகார வர்க்கம் பயன்படுத்துகின்ற அதே அரச இயந்திரத்தை வைத்துக்கொண்டு முறைமை மாற்றத்தை செய்யமுடியாது என்பதை புதிய போராட்ட சக்திகள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்தப் பின்னணியில்தான் ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி பற்றி இப்போது எழுதுகின்ற பல சர்வதேச அரசியல் அவதானிகள் கடந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் அரபுலகை ஆக்கிரமித்த ‘அரபு வசந்தம்’ மக்கள் புரட்சிக்கு நேர்ந்த கதி இதற்கும் ஏற்படுமா என்று எழுப்புகின்ற கேள்வியை நோக்கவேண்டியிருக்கிறது. ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட அரபு நாடுகளில் எல்லாம் குழப்பநிலைக்கு மத்தியில் அரசியல் உறுதிப்பாட்டை மீளநிலைநிறுத்துவது என்ற பெயரில் மீண்டும் எதேச்சாதிகாரிகளே அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். பழைய முறைமையே புதியவர்களின் தலைமையில் நடைமுறையில் இருக்கிறது கூடுதல் இராணுவ பலத்துடன்.

இன்னொரு முக்கிய விடயம், ‘அறகலய’ போராட்டக்காரர்களுக்கு கூட்டிணைவான தலைமைத்துவம் ஒன்று இருக்கவில்லை. பல்வேறு அரசியல் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல்களை முதன்மைப்படுத்துவதற்கான களமாக போராட்டம் தவிர்க்கமுடியாத வகையில் மாறியது. மற்றையது, பதவியில் இருந்த ஆட்சியை விரட்டிய பின்னர் அடுத்து உடனடியாக செய்யவேண்டியது குறித்து போராட்டக்காரர்கள் மத்தியில் திட்டமெதுவும் இருக்கவில்லை. அதனால், தொடர்ந்தும் கிளர்ச்சி என்பது தொடர்ந்தும் குழப்பநிலையோ என்ற ஒரு பீதி மக்கள் மனதில் தோன்றவும் ஆரம்பித்தது.

வீரகத்தி தனபாலசிங்கம்