Photo, Ishara Kodikara, AFP, FRANCE24

இலங்கையின் புதிய பிரதமர் ஒருவர் கடந்தவாரம் பதவியேற்றுக்கொண்டார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவரது நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான கால அரசியல் வாழ்வில் ஏற்கெனவே பிரதமர் பதவியை பல தடவைகள் வகித்திருக்கிறார்.

இலங்கை சுதந்திரத்துக்குப் பின்னரான அதன் வரலாற்றில் முன்னென்றுமே கண்டிராத பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாட்டை நிலைப்படுத்துவதற்குரிய ஒரு நபராகவே அவரை நாடாளுமன்றம் நினைக்கிறது என்பது தெளிவானது. ஆனால், அபகீர்த்திக்குள்ளாகியிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ பதவி விலகவேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்களினால் திரும்பத்திரும்ப முன்வைக்கப்படுகின்ற முக்கியமான கோரிக்கைக்கு இணங்காமல் இது வெறுமனே ஆட்களை மாற்றுகின்ற ஒரு விளையாட்டாகவே இருக்கிறது.

கொழும்பு ஒரு தீப்பற்று பெட்டியாக காணப்படுகிறது. நாடு வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது. பொருட்களுக்கு பாரதூரமான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், மனிதாபிமான நெருக்கடியொன்று மூண்டுகொண்டிருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்வு அத்தியாவசிய பொருட்களுக்காக நீண்ட வரிசைகளில் காத்துநிற்பதிலேயே கழிவதால் எந்த நிமிடத்திலும் தன்னியல்பான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறக்கூடிய சூழ்நிலையே காணப்படுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்ற அதேவேளை, பொதுவேலை நிறுத்தங்கள் அடிக்கடி நாட்டை முடக்குகின்றன. 70 வருடகாலத்தில் ஏற்பட்டிருக்கும் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் குழப்பகரமான தீய ஆட்சியே முற்றிலும் பொறுப்பு என்று மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். அவர் பதவிவிலகவேண்டும் என்று மாதக்கணக்காக விடுக்கப்பட்டு வருகின்ற கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காயின. அதனால் பெரும் முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டிருக்கிறது.

அவரின் சகோதரர் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியில் இருந்து அண்மையில் விலகினார். ஆனால், அது ஆர்ப்பாட்டக்காரர்களை பெரிதாக அமைதிப்படுத்தவில்லை.அவர் பதவியில் இருந்து விலகியபோது இறுதியாக நடந்துகொண்ட விதம் இன்றைய நெருக்கடிக்கு வழிவகுத்த நடத்தைகளை அம்பலப்படுத்தி நிற்கிறது. பதவிவிலகவேண்டும் என்றுகோரி நடைபெற்றுவந்த மாதக்கணக்கான ஆர்ப்பாட்டங்களை அலட்சியம் செய்த அவர் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகை முன்பாகவும் காலிமுகத்திடலிலும் அடாவடித்தனத்துக்கு காரணமானார். இறுதியில் அவர் நாட்டின் இன்னொரு அந்தலையில் இருக்கும் இராணுவ முகாமில் தஞ்சமடையவேண்டியேற்பட்டது. அவர் நாட்டை விட்டு வெளியேறமுடியாதவாறு நீதிமன்றம் தடையுத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. ஐக்கிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவதற்காக வழிவிடுவதற்காகவே தான் பதவியில் இருந்து விலகியதாக கூறும் அவர் நாட்டில் பயங்கரமான முரண்பாடுகளை விதைத்துவிட்டே சென்றார்.

முன்னாள் பிரதமர் நேரடியாக வன்முறைக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றபோதிலும், அவரது சகபாடிகளும் உதவியாளர்களும் பஸ்களில் குண்டர்களை ஏற்றிவந்து ஆத்திரமூட்டும் உரைகளை நிகழ்த்தினர். அது அந்தக் குண்டர்கள் அமைதிவழி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொல்லுகளாலும் இரும்புக்கம்பிகளாலும் தாக்குதல் நடத்தத்தூண்டியது. இதையடுத்து எதிரணிக்குழுக்கள் உடனடியாகவே பதிலடி கொடுக்க ஆரம்பித்தன. பஸ்கள் தலைகீழாக புரட்டிவிடப்பட்டன. அரசாங்க சார்பு அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தீவைக்கப்பட்டன. ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் 200 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். நாடளாவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கலவரம் விளைவிப்பவர்களை கண்ட இடத்தில் சுடுவதற்கு துருப்புகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து அடுத்து வந்த நாட்களில் அமைதி திரும்பியது.

உணவு வகைகள், எரிபொருட்கள் மற்றும் மருந்துவகைகளின் விலைகள் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்திருக்கின்றன. நாட்டு மக்கள் பொறுமையின் எல்லைக்கு சென்று மனக்கலக்கம் அடைந்திருக்கிறார்கள். இலங்கை இன்று பிச்சைப்பாத்திரத்துடன் உலக நாடுகளின் கதவைத் தட்டவேண்டிய அளவுக்கு தரமிறங்கியிருக்கிறது. ஆனால், அது கூட குழப்பத்துக்குள்ளாகியிருக்கிறது. அரசாங்க அதிகாரிகள் அவசரகால நிதிக்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருக்கிறார்கள். இலங்கையின் வெளிநாட்டு நாணயக்கையிருப்பு வெறுமனே 5 கோடி டொலர்களாக வீழ்ச்சி கண்டுவிட்டது.

அவசர உதவி தேவைப்படுகிறது. ஆனால், அதற்கு கொடுக்கவேண்டிய விலை என்ன? குழப்பகரமான நிலையில் நாட்டுக்குத் தலைமை தாங்கும் ஜனாதிபதி தீண்டத்தகாதவராக மக்களால் கருதப்படுகின்ற அதேவேளை, நாடாளுமன்றத்தில் ஒரேயொரு ஆசனத்தை மாத்திரம் கொண்டிருக்கும் ஒருவரை பிரதமராக நியமிப்பதன் மூலம் மக்களின் சீற்றத்தை அடக்கிவிடமுடியாது என்பதை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தும் அரசாங்க அதிகாரிகள் தெரிந்துகொள்ளவேண்டும். தவிர்க்கமுடியாத சிக்கன நடவடிக்கைகளை தாங்கிக்கொள்ளவேண்டியிருக்கின்ற சூழ்நிலையின் ஊடாக நாட்டை வழிநடத்த மதிப்புக்குரிய நம்பகத்தன்மையான தலைவர் ஒருவர் தேவை. மற்றும்படி மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

ராஜபக்‌ஷ வீட்டுக்கு போகவே வேண்டும். அதை விடுத்து வேறு வழி தேடினால் மேலும் உறுதிப்பாடின்மையும் வன்முறையுமே நேரும். மாற்றத்துக்கான அரிய வாய்ப்பும் பாழடிக்கப்படும். ராஜபக்‌ஷ என்ற குடும்பப் பெயரைக்கொண்ட வேறு மூன்று அமைச்சர்கள் ஏற்னெவே கடந்தவாரம் பதவிவிலகினார்கள். மிகவும் நீண்டகாலமாக ஊழல்தனமான ஒரு குடும்பத்தினாலேயே தாங்கள் ஆளப்பட்டுவந்தார்கள் என்பதையும் அவர்களில் எவருமே இனிமேல் அதிகாரத்தில் விட்டுவைக்கப்படக்கூடாது என்பதையுமே இது நாட்டு மக்களுக்கு நினைவூட்டுகிறது.

பரந்தளவு ஆதரவைக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதை மாத்திரம் விரும்பவில்லை. அவரது தவறான முகாமைத்துவத்துக்காகவும் ஊழல் மற்றும் பல தசாப்தங்களாக முன்வைக்கப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளுக்காகவும் அவர் பொறுப்புக்கூறவேண்டும் என்றும் அவர்கள் கோருகிறார்கள். பழையவர்களை மாற்றிமாற்றி அமைச்சர்களாக நியமிப்பதையல்ல, புதியதொரு இலங்கையை ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடிநிற்கிறார்கள். ஆனால், பழையவர்களே இன்னமும் பொறுப்பான பதவிகளில் தொடரும் நிலையில் அரசியலில் அடிப்படையான மாற்றம் நிகழமுடியாது.

ராஜபக்‌ஷர்களுக்கு சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளிப்பது குறித்த சிந்தனையை அரசியல்வாதிகள் வளர்த்துக்கொள்ளக்கூடாது. அவ்வாறு செய்வதை துரோகச்செயலாகவே மக்கள் நோக்குவார்கள்.

ராஜபக்‌ஷ எந்தளவுக்கு அதிகாரத்தில் இருக்கிறாரோ சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அவசர உதவிகளைப் பெறுவது அந்தளவுக்கு தாமதமாகும். மக்கள் பட்டினி கிடக்கவேண்டிவரும். எந்தளவு தூரத்துக்கு மக்கள் பட்டினி கிடக்கிறார்களோ அந்தளவு தூரத்துக்கு ஆர்ப்பாட்டங்கள் இடைவிடாமல் தொடரும். அமைதியின்மை எந்தளவுக்கு கூடுதலாக இருக்கிறதோ அந்தளவுக்கு ராஜபக்‌ஷ கூடுதல் வன்முறையிர் நாட்டம் காட்டக்கூடிய ஆபத்து இருக்கிறது.

மக்களின் இந்த அமைதிவழிப் போராட்ட இயக்கத்தை ஒடுக்குமாறு பிறப்பிக்கப்படக்கூடிய உத்தரவுகளை பொலிஸும் இராணுவமும் பின்பற்றுவதை அரசாங்கத்தினால் நிச்சயமாக உத்தரவாதப்படுத்த முடியாது. சாதாரண படைவீரரினதும் பொலிஸ்காரர்களினதும் குடும்பங்கள் அதே பொருளாதாரப் பிரச்சினையால் கஷ்டப்படுகின்றன. கோட்டையில் வெடிப்புகள் தோன்றுகின்றன. தவிர்க்கமுடியாத வீழ்ச்சி எம்மெல்லோரையும் நசுக்கிவிடக்கூடாது என்று நம்புவோமாக.

கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

Rajapaksa not only needs to go, he needs to face accountability என்ற தலைப்பில் 20.05.2022 அன்று அல் ஜஸீரா தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.