Photo, Kumanan Kanapathippillai

கட்டுரையின் பகுதி I

###

“ஜெனீவா தீர்மானங்களுடன் இலங்கையின் கடந்த காலமும் எதிர்காலமும்” என்ற தலைப்பிலான எனது கட்டுரை போர் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் இலங்கை நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) மற்றும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) ஆகியவற்றின் வகிபாகங்கள் குறித்து எடுத்தியம்புகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பிலான வரைவுத் தீர்மானம் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் இருந்து சில கருத்துக்களையும் நான் குறிப்பிட்டேன்.

யார்?

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீதி கேட்டு ஜெனீவாவுக்கு சென்றதை நினைவு கூர்ந்து, இன்னும் எத்தனை ஆண்டு காலத்துக்கு அவரும் அவரைப் போன்றவர்களும் ஜெனீவாவுக்குச் செல்ல வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது என வினவியது அந்த கலந்துரையாடல்களில் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக இருந்தது. முதன்முதலில் இலங்கையிலிருந்து ஜெனீவாவுக்குச் சென்ற காணாமலாக்கப்பட்டோர் குடும்ப உறுப்பினர்களில் சந்தியா எக்னெலிகொடவும் ஒருவர் ஆவார். அதன் பின்னர் பல இலங்கையர்கள் தமது குறைகளையும் கோரிக்கைகளையும் ஜெனீவாவுக்கு எடுத்துச்செல்லத் தொடங்கியுள்ளனர்.

2000 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்கள், 2006ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரையில் கொல்லப்பட்ட மாணவனின் தந்தையான கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன், இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து காணிகளை மீட்பதற்காகப் போராடும் சமூகத்தலைவர்கள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு, துன்புறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் தன்னிச்சையான கைதுகளுக்கு உள்ளான செயற்பாட்டாளர்கள் ஆகியோர் நீதி கேட்டு ஜெனீவாவிற்குச் சென்றுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து பேசுவதற்காக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜெனீவாவுக்குச் செல்கின்றனர். 1990களின் முற்பகுதியில் ஜெனீவா சென்ற முன்னாள் ஜனாதிபதியாக, பிரதமராக இருந்தவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது நண்பரான முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார ஆகியோர் ஆரம்ப காலத்தில் ஜெனீவா சென்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.

கடந்த வாரம் முதன்முறையாக ஜெனீவா சென்றவர்களில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உண்மை மற்றும் நீதிக்காக குரல் கொடுத்துவரும் பிரபல இளம் கத்தோலிக்க செயற்பாட்டாளரான ஷெஹான் மாலக்கவும் கைது உட்பட பல்வேறு பழிவாங்கல்களுக்கு ஆளானவர் ஆவார். கடந்த வாரம் முதன்முறையாக ஜெனீவாவுக்குச் சென்ற மற்றுமொருவர் ‘அறகலய’வில் முக்கியமானதொரு பங்காற்றிய மனித உரிமைச் சட்டத்தரணியான நுவன் போபகே ஆவார். இவர் ‘அறகலய’ தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்ட பலர் சார்பாக சட்ட உதவிகளை வழங்கியிருந்தார். ஜூலை மாதம் அமைதியான போராட்ட தளத்தில் நடந்த தாக்குதலின் போது மற்றொரு நபரை பாதுகாக்க முயன்றபோது போபகேயும் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

குறைந்தபட்சம் ஒரு பௌத்த பிக்கு மற்றும் கிறிஸ்தவ மதகுருமார் உட்பட சமயத் தலைவர்களும் ஜெனீவாவிற்குச் சென்றுள்ளனர். ஜெனீவா சென்ற மிக முக்கியமான சமயத் தலைவர் கொழும்பு மறைமாவட்டத்தின் கத்தோலிக்க பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள் ஆவார்.  இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரை (HCHR) கர்தினால் ரஞ்சித் சந்தித்ததோடல்லாது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றி கடந்த ஆண்டு (2021) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் தொடங்கப்பட்ட சாட்சியங்கள் சேகரிப்பினை தொடர்ந்தும் முன்கொண்டுசெல்லவும், உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதற்கான பாரபட்சமற்ற ஒரு விசாரணையை உறுதி செய்யவும் ஆதரவு வழங்குமாறு கோரினார்.

பத்து வருடங்களுக்கு முன்னர் 2012ஆம் ஆண்டில் ஒரு தமிழ் கத்தோலிக்க ஆயர் மற்றும் மதகுருக்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் எழுதி போர்க்கால அட்டூழியங்கள் குறித்து சர்வதேச விசாரணைகளைக் கோரியபோது, ​​இதே கர்தினால் ரஞ்சித் அவர்கள் “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஒரு தீர்மானத்தை முன்வைப்பதன் ஊடாக மேற்கத்திய நாடுகள் இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாக” குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இது இலங்கையர்களது “நுண்ணறிவுக்கு ஓர் அவமதிப்பு” எனவும் அவர் கூறினார்.

ஏன்?

குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில், மேலே குறிப்பிடப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உடனடி விசாரணை ஆணைக்குழுக்கள், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் (OMP), மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் துறை மற்றும் நீதித்துறை போன்ற உள்நாட்டு செயன்முறைகளில் நேரம், ஆற்றல் மற்றும் பணத்தை முதலீடு செய்தவர்கள் ஆவர். அவர்கள் உள்நாட்டு ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் உண்மையையும் நீதியையும் கோருவதில் ஈடுபட்டுள்ளனர். வெறும் உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் உண்மையையும் நீதியையும் தேடுவதில் உள்ள சிரமங்களை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்து இரண்டே ஆண்டுகளில் அவர் உணர்ந்தது போல், உண்மை மற்றும் நீதியைப் பெற சர்வதேச உதவியை நாடுவது குறித்தும் கர்தினால் ரஞ்சித்தின் இதயத்தில் ஒரு மனமாற்றம் நிகழ்ந்திருக்கக்கூடும்.

இதுவே தமிழ் கத்தோலிக்க மதகுருமார்களும், சந்தியா எக்னெலிகொட போன்ற காணாமலாக்கப்பட்டவர்களது குடும்பங்களும், 2000 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் தமிழர்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து கொண்ட உண்மையாகும்.

முக்கியமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இலங்கையினுள் உண்மையையும் நீதியையும் பெற இயலாத நிலைமை மற்றும் உள்நாட்டு செயற்பாடுகளில் மக்கள் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பை இழந்தமையே பல இலங்கையர்களை ஜெனீவாவின் புறமாகத் தள்ளுகிறது.

ஜெனீவா எதனை வழங்குகிறது?

அவர்களது ஏமாற்றம், கோபம், உள்நாட்டு செயன்முறைகளில் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு இன்மை ஆகியன ஜெனீவாவுக்குச் செல்வதற்கும் ஏனைய சர்வதேச ஈடுபாடுகளுக்குமான காரணங்கள் புரிந்துகொள்ளக்கூடியனவாக இருப்பினும், அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை போன்ற ஐ.நா. செயன்முறைகளில் முதலீடு செய்த நேரம், ஆற்றல் மற்றும் பணத்தின் மூலம் என்ன பெற்றார்கள் என்பது குறித்து தெளிவில்லை.

ஜெனிவாவில் மேற்கூறிய பல முயற்சிகளுடன் நான் தொடர்புபட்டுள்ளேன். பல ஆண்டுகளாக அவர்கள் அனைவரும் செவிமடுக்கப்பட வேண்டும் என ஏங்குவதை நான் உணர்ந்திருக்கிறேன்.  அதனால்தான், உரிமை மீறல்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட ஒருவரது குடும்பம், மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போன்றோர் கர்தினால் ரஞ்சித் அவர்கள் மார்ச் மாதம் செய்தது போல, போபகே கடந்த வாரம் செய்தது போல ஐ.நா. சபையில் முறைசார் அமைப்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையிலும் சந்தியா எக்னெலிகொட செய்தது போல முறைசாரா நிகழ்வுகளிலும் இன்னும் அநேகர் செய்தது போல இராஜதந்திரிகளுடனும் ஐ.நா அதிகாரிகளுடனும் ஜெனீவாவில் நடந்த மற்ற நிகழ்வுகளிலும் பேசுகின்ற வாய்ப்பைப் பெறுவது மிகவும் முக்கியமானது. முதல் கலந்துரையாடலின் முடிவில் சந்தியா எக்னெலிகொடவின் உளப்பூர்வமான கருத்துக்கள் இலங்கையர்கள் உட்பட அந்த அறையில் இருக்கும் இராஜதந்திரிகளுக்கும் ஒரு மனப்பதிவை ஏற்படுத்தியிருக்கும் என நான் நம்புகிறேன்.

ஐ.நா. போன்ற அரசுகளுக்கிடையேயான அமைப்புகளில் சர்வதேச அரசியல் நிலவுவதை தவிர்க்க முடியாது என்ற போதிலும், சந்தியா எக்னெலிகொட மற்றும் அவரைப் போன்றவர்களது உணர்வுகள், மனக்குமுறல்கள் மற்றும் கோரிக்கைகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (மற்றும் 2010-2011 காலப்பகுதியின் ஐ.நா. பொதுச்செயலாளரின் நிபுணத்துவக் குழாம் உள்ளிட்ட முன்னைய அமைப்புகளின்) அறிக்கைகளிலும் குறைந்த அளவில் ஐ.நா. மனித உரிமை பேரவையிலும் தீர்மானங்களிலும் பிரதிபலிக்கின்றன. உயிர் பிழைத்தவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் அனுபவங்களையும் உணர்வுகளையும் நெருக்கமாகப் பிரதிபலிக்கும் ஒரு கதையை அவை உலகிற்கு முன்வைப்பதோடு, அது இலங்கை அரசாங்கத்தின் கதையிலிருந்து மிகவும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது.

உதாரணமாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் போருக்குப் பிந்தைய மிகப்பெரிய படுகொலை எனவும், ஒரு “பெரும் அரசியல் சதி” எனவும் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் 2020 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் எழுத்துமூலமான இற்றைப்படுத்தலிலோ, 2021 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட விரிவான அறிக்கையிலோ இந்த தாக்குதல்கள் தொடர்பான தெளிவான குறிப்புகள் எதுவும் காணப்படவிலை. கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களின் சில முனைப்புடன் கூடிய பரப்புரைகளுக்குப் பிறகு, 2021 செப்டெம்பர் மாதம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வாய்மொழி மூலமான புதுப்பிப்பில் ஒரு சிறு குறிப்பும், 2022 மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையின் எழுத்துமூலமான இற்றைப்படுத்தலில் மேலதிகமான விரிவான குறிப்பும் இடம்பெற்றிருந்தன. .

2022 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் விரிவான அறிக்கையில் “ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான தொகுதிகளும் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும்” மற்றும் “சர்வதேச உதவியுடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முழுப் பங்கேற்புடன் இன்னும் சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணையைத் தொடர வேண்டும்” ஆகிய கோரிக்கைகள் உட்பட மிகவும் வலுவானதொரு குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. எனினும் ஏமாற்றமளிக்கும் வகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மையும் நீதியும் இல்லாதது குறித்து தற்போது நடைபெற்று வரும் இலங்கை தொடர்பான வரைவுத் தீர்மானத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. இதனால்தான் தாக்குதல்கள் தொடர்பான முழுமையான உண்மையையும், நீதியையும் முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளவர்கள் இவ்விடயம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கவனத்தை ஈர்ப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னுமொரு உதாரணமாக “அமைதியான போராட்டங்கள் மூலமாக ஜனநாயக முறைமைகளை வலுப்படுத்துதல், திறம்படச் செயற்படுத்துதல், ஜனநாயகச் செயன்முறைகளின் வளர்ச்சி மற்றும் சட்டவாட்சி ஆகியவற்றுக்கு சாதகமான பங்களிப்பை வழங்க முடியும்” என்பதையும், “அமைதியான போராட்டங்களில் பங்கேற்பது, அமைதியான முறையில் ஒன்றுகூடலுக்கான சுதந்திரம், கருத்துச்சுதந்திரம், ஒன்றிணைந்து செயற்படல் மற்றும் பொது விவகாரங்களை நடத்துவதில் பங்கேற்பதற்கான சுதந்திரம் என்பனவற்றுக்கான உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு முக்கிய வடிவமாகும்” என்பதையும் வலியுறுத்தி இலங்கையில் (முன்னாள் ஜனாதிபதிகள் கோட்டபாய ராஜபக்‌ஷ மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான) ஊழல், இனவெறி மற்றும் சர்வாதிகாரம் நிரம்பிய ராஜபக்‌ஷ ஆட்சியை அகற்றிய சமீபத்திய எதிர்ப்பு ஆர்ப்பாடங்களை வரைவுத்தீர்மானம் அங்கீகரித்தமையைக் குறிப்பிடலாம். மேலும் இந்த வரைவுத் தீர்மானம் ஆழமான இராணுவமயமாக்கல், நிர்வாகத்தில் பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தண்டனையின்மை உட்பட தற்போதைய நெருக்கடிக்கு பங்களித்த ஆட்சிமுறை சார் காரணிகள் மற்றும் அடிப்படையான காரணங்களை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் ஒப்புக் கொண்டுள்ளது.

ஐ.நா. தீர்மானங்கள் மற்றும் அறிக்கைகள் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் போன்ற சில உள்நாட்டு நிறுவனங்களை நிறுவுதல், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட சில நிலங்களை விடுவித்தல், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் மற்றும் கொலைகள் தொடர்பில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சிறை அதிகாரிகளுக்கு எதிராக சில வழக்குகள் தொடுக்கப்படுதல், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கிய இலங்கைக்குள் நிகழ்ந்த சில நேர்ப்பாங்கான முன்னேற்றங்கள் என்பனவற்றுக்குப் பங்களிப்பை நல்கியுள்ளன. மேலும் 2014 மார்ச் மாதம் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கிளிநொச்சியில் வைத்து நான் கைது செய்யப்பட்டபோது ​​ஐ.நா. மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட பல தலையீடுகள் ஒப்பீட்டளவில் விரைவாக நாம் விடுதலை செய்யப்பட்டமைக்கு பங்களித்திருக்கக்கூடும் என தனிப்பட்ட முறையில் நானும் நம்புகிறேன்.

மிகவும் தாமதமாக நிறுவப்பட்டாலும் 2021இல் நிறுவப்பட்ட சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையானது, கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை முடக்குதல் மற்றும் மீட்டெடுத்தல், போர்க்கால அட்டூழியங்கள், உயிர்த்த ஞாயிறு படுகொலைகள், பொருளாதார குற்றங்கள் மற்றும் ஊழல்களுக்காக அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்குத்தொடுத்தல் ஆகியவற்றுக்குப் பங்களிக்கக்கூடும்.

ஜெனீவாவுக்குச் செல்பவர்கள் துரோகிகளா?

நான் உட்பட ஜெனீவாவுக்குச் செல்லும் மேற்கூறிய பலரும் அடிக்கடி துரோகிகள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நான் கைது செய்யப்பட்ட போது நான் ​​ஜெனீவாவுக்கு மேற்கொண்ட பயணங்கள் தொடர்பாக விரிவாக என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் அந்தக் கைது தொடர்பான உத்தியோகபூர்வ பத்திரத்தில் கூறப்பட்ட மூன்று காரணங்களில் ஒன்று “வெளிநாட்டிற்கு தகவல் அனுப்பியது” என்பதாகும்.

சந்தியா எக்னெலிகொட தனது கணவர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் போது, ​​ஜெனீவா சென்றமை குறித்து அவரிடம் கடுமையாக கேள்வி எழுப்பப்பட்டது. அவர் ஜெனீவாவிற்கு சென்றது கணவர் காணாமலாக்கப்பட்ட பிறகே ஆகும். அதற்கும் காணாமலாக்கப்படுதலுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தக் கேள்விகளின் தொனிகள் ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு தனது கதையை கூறியதற்காகவும், அவரது கணவர் காணாமலாக்கப்பட்டது தொடர்பாக உண்மையையும் நீதியையும் கோரி சர்வதேச உதவியை நாடியதற்காகவும் அவரை இழிவுபடுத்துவதற்கும் துன்புறுத்துவதற்குமான ஒரு முனைப்பாகவே தோன்றின.

இது அரசியல்வாதிகள், ஊடகங்கள், சமயத் தலைவர்கள் போன்றவர்களால் பரப்பப்படும் “நாட்டிற்கு எதிரான தீர்மானம்/அறிக்கை” என்ற பிரபலமான பரப்புரை குறித்து இலங்கையர்கள் மறுபரிசீலனை செய்து கேள்வி எழுப்ப வேண்டிய தருணம் ஆகும். ஐ.நா. தீர்மானம் அல்லது அறிக்கை அரசாங்கத்தை விமர்சிக்கக்கூடும், பரிபூரணமற்றதாக இருக்கவும் கூடும். ஆனால், கடந்த சில தசாப்தங்களை உற்று நோக்கினால், காணாமலாக்கப்பட்ட அல்லது கொலைசெய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தொடர்பிலும் வேறு கவலைகள் சார்ந்தும் உண்மையையும் நீதியையும் தேடும் இலங்கை மக்களுக்கு அவர்கள் எதிரானவர்கள் அல்ல என்பது புலனாகிறது.

உண்மையையும் நீதியையும் கோரி ஜெனீவா செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் பூச்சாண்டி காட்டுவதை விடுத்து அரசியல்வாதிகள், ஊடகங்கள், சமயத் தலைவர்கள், நிபுணர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் அவர்களது கவலைகளை உணர்ந்து இலங்கையின் வீதிகளில், நீதிமன்றங்களில், ஊடகங்களில் அத்துடன் ஜெனிவா போன்ற சர்வதேச வெளிகளிலும் நீதி கேட்டுப் போராடுபவர்களின் அபிலாஷைகளுக்கும் போராட்டங்களுக்கும் தார்மீக ஆதரவை வழங்க வேண்டும்.

ருக்கி பெர்னாண்டோ

(2022 செப்டம்பர் 21ஆம் திகதி ‘தி மோர்னிங்’ பத்திரிகையில் பிரசுரமான கட்டுரையின் தமிழாக்கம்)