Photo, Japantimes

“இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் ஜெனீவாவுக்கு வர வேண்டும்?” – காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட 2022 செப்டெம்பர் 16ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) தீர்மானம் குறித்த முறைசாரா கலந்துரையாடலில் பேசும்போது இவ்வாறு வினவினார்.

ஜெனீவாவில் உள்ள பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் ஒன்றான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) தீர்மானத்துக்கு அமைய 2006 இல் அமைக்கப்பட்டது. இது இலங்கை உட்பட 193 ஐ.நா. உறுப்பு நாடுகளை உள்ளடக்கியது. இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மாற்றீடாக நிறுவப்பட்டது. 193 ஐ.நா. உறுப்பு நாடுகளும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நாடுகளிலிருந்து 47 நாடுகளை தேர்ந்தெடுக்கின்றன. இலங்கை 2006 – 2008 வரை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமை பெற்றிருந்தது. ஆனால், 2008இல் உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் அதிகரிக்கவே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான இலங்கையின் வேட்புமனு தோற்கடிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஒரு வேட்பாளராக இலங்கை தன்னை முன்னிறுத்தவில்லை.

ஜெனீவாவில் உள்ள மற்றுமொரு முக்கியமான மனித உரிமைகள் சார்ந்த ஐ.நா. நிறுவனம் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம்  (OHCHR) ஆகும். இது HCHR தலைமையிலான பணிக்குழாம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இது 1993 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக நிறுவப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மற்றும் இலங்கை தொடர்பான மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கைகள்

2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்து ஒன்பது நாட்களுக்குப் பின்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையானது அப்போதைய இலங்கை அரசாங்கம் கோரிய வரிகளுடன் ஒரு தீர்மானத்தை அங்கீகரித்தது. அதன் ஒட்டுமொத்த தொனியானது இலங்கை அரசாங்கத்தை பாராட்டுவதாக இருந்தது.  2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில், இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் சார்ந்த நிலைமை குறித்து மென்மையான விமர்சனத்தை வெளிப்படுத்தியதுடன், பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய உள்நாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தின.  2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் இலங்கை தொடர்பில் விரிவான ஒரு விசாரணையை நடத்துமாறு கோருவதற்கு முடிவெடுத்தது. இந்தத் தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்த்தது.

2015ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்துக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்புகளை மேற்கொண்டது. இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடனான வாக்களிப்பு அற்ற “ஒருமித்த தீர்மானத்தில்” அவை பிரதிபலித்தன.  2021ஆம் ஆண்டில் புதிய அரசாங்கமானது 2015ஆம் ஆண்டின் ஒருமித்த தீர்மானத்தை இனி மதிக்க மாட்டோம் என அறிவித்ததன் பின்னர் சாட்சியங்களை சேகரித்து பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்காக வாக்கெடுப்பு மூலம் புதியதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2009 தொடக்கம் 2021 வரையிலான காலப்பகுதியில் இலங்கை மீதான ஐந்து தீர்மானங்களின் வாக்கெடுப்புகளை உற்று நோக்கும்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கான ஆதரவானது வியத்தகு அளவில் இழக்கப்பட்டதைப் பிரதிபலிக்கிறது. இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 2009, 47 இல் 29 ஆக இருந்து 2021, 47 இல் இருந்து 11 ஆக குறைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளில் 34 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் பெருமளவிலான ஆதரவு இழப்பு ஏற்பட்டுள்ளது.

2009 2012 2013 2014 2015/2017/2019 2021
இலங்கை அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோர் 29 15 13 12 வாக்களிப்பு இல்லை (ஒருமித்த தீர்மானம்) 11
இலங்கை அரசுக்கு எதிராக வாக்களித்தோர் 12 23 25 23 22
வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதோர் 6 9 9 12 14

2012ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமும் இலங்கை மீதான ஏனைய அனைத்து தீர்மானங்களும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை கண்காணித்து அதனை மீண்டும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை செய்யுமாறு மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தைக் கேட்டுக் கொண்டன. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கைகள் போருக்குப் பிந்தைய வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள், குறிப்பாக தமிழ் மக்கள், வெலிக்கடை சிறைப் படுகொலை போன்ற அடையாள வழக்குகள், ஊடகவியலாளர்கள் மற்றும் இளைஞர்கள் காணாமலாக்கப்படுல், இராணுவமயமாக்கல், கொவிட்-19 தொடர்பான கரிசனைகள், கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல் மற்றும் மத சுதந்திரம், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் நிலைமை மற்றும் அண்மைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் பொருளாதார குற்றங்கள் போன்ற பல்வேறு மட்டத்தில் இலங்கையர் எதிர்நோக்கும் முக்கியமான மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை இனங்கண்டுள்ளன.

இவ் அறிக்கைகள் இலங்கையரின் மனித உரிமைகள் மீதான நேர்மறை மற்றும் எதிர்மறையான தாக்கங்களை ஆய்வு செய்து நிறுவன ரீதியான, சட்டரீதியான மற்றும் கொள்கைசார் மாற்றங்கள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பிலும் விசேடமாக குறித்துக்காட்டியுள்ளன. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பரிந்துரைகளில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்தல், பொறுப்புக்கூறலை மேம்படுத்த உலகளாவிய அதிகார எல்லையினைப் பயன்படுத்துதல், அத்துடன் சொத்து முடக்கம் மற்றும் பயணத்தடை போன்ற நடவடிக்கைகளும் உள்ளடங்குகின்றன.

புதிய தீர்மானம்

கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற இலங்கை தொடர்பிலான முக்கிய நிகழ்வானது மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான மிக சமீபத்திய அறிக்கையாகும். இது எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருவதால், இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு, பின்னர் பொதுவெளியில் வெளியிடப்பட்டு திறந்த விவாதத்திற்காக முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான வரைவுத் தீர்மானத்தின் மீது நான் கவனம் செலுத்துகிறேன்.

செப்டம்பர் 16ஆம் திகதியன்று ஜெனீவா நகரில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, வடக்கு மசிடோனியா, மொண்டிநீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய குழுவைக் கொண்டமைந்த “உள்ளீட்டுக் குழு” தலைமையில் “முறைசாராதவை” எனப்படும் இரண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வரைவு தீர்மானத்தைத் நிராகரித்து அவை நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உள்ள பெரும்பான்மையான அரசாங்கங்கள் முன்வைக்கப்பட்ட வரைவின் வாசகங்களின் வழியே ஒருவேளை தீர்மானத்தை ஆதரிக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டு இலங்கை அரசாங்கமானது தீர்மானத்தின் உரையை கடுமையாக நீர்த்துப்போகச் செய்யத்தக்க முன்மொழிவுகளை முன்வைத்தது. வகைக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கான எந்தவொரு சர்வதேச தலையீட்டையும் அது நிராகரித்ததோடு, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் அன்றைய அரசாங்கம் 2015இல் வழங்கிய உறுதிமொழிகள் பற்றிய குறிப்பையும் நிராகரித்து 2021ஆம் ஆண்டின் தீர்மானம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது எனவும் வலியுறுத்திக்கூறியது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை நிறுவிய ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் தீர்மானமானது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் உட்பட அனைத்து மனித உரிமைகளையும் மேம்படுத்துவதற்கான பேரவையின் அதிகாரத்தை வெளிப்படையாகக் குறிப்பிட்ட போதிலும், இலங்கை அரசாங்கம் பொருளாதார நெருக்கடி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கட்டளைக்கு அப்பாற்பட்டது என்றும் கூறியது.

கியூபா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஈரான், மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்தன. அயர்லாந்து, பின்லாந்து, சுவீடன், நோர்வே, பிரான்ஸ், லக்சம்பர்க், நெதர்லாந்து, லிச்சென்ஸ்டைன், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் வரைவுத் தீர்மானத்தை ஆதரித்தபோதிலும் வரைவுத் தீர்மானத்தை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கவில்லை.

மொத்தம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இரு கலந்துரையாடல்களின் போது இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அரச சார்பற்ற பேச்சாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 15 நிமிடங்களில் பேசிய நால்வரில் சந்தியா எக்னெலிகொடவும் ஒருவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீதி தேடி ஜெனிவாவுக்குப் பயணித்ததை நினைவு கூர்ந்த அவர், இன்னும் எத்தனை வருடங்கள் தானும் தன்னைப் போன்றவர்களும் ஜெனீவா நகருக்கு வர வேண்டும் என அரசாங்கங்கள் எதிர்பார்க்கின்றன என்று வினவினார்.

தீர்மானத்தின் உள்ளடக்கத்தை வலுப்படுத்துதல்

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் செயன்முறையானது 2009ஆம் ஆண்டு முதல் மெதுவான முன்னேற்றத்தைக் கண்டு வந்ததோடு, 2014ஆம் ஆண்டு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினது தலைமையிலான விசாரணை, 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் உறுதிமொழிகள் மற்றும் 2021ஆம் ஆண்டு சாட்சியங்களை சேகரிக்கும் செயன்முறை ஆகியன அதன் மைல்கற்களாகக் கருதப்படுகின்றன. இந்நிலையில், 2022ஆம் ஆண்டினது வரைவுத் தீர்மானமானது 18 மாதங்களுக்கு முன்னதாக 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து எந்தவொரு முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

தற்போதைய வரைவுத் தீர்மானமானது பொருளாதார நெருக்கடி, பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடலுக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எதிரான உரிமை மீறல்கள் என்பனவற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான சில புதிய வாசகங்களைத் தவிர்த்துப் பார்க்கும்போது 2021ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கை மீதான தீர்மானத்தை ஒத்ததாகவே உள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, தீர்மானத்தை வலுப்படுத்துவதற்கான முன்மொழிவுகள் எதுவும் இல்லை.

இலங்கையின் நிலைமையை சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில் வரைவுத் தீர்மானத்தை வலுப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் பின்வருமாறு:

  • நிகழ்ந்து வரும் உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறலில் இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஒரு சுயாதீன நிபுணர் பொறிமுறையை நிறுவுதல், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, ஐ.நா. பொதுச்சபை ஆகியவற்றுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக அறிக்கை அனுப்புதல்.
  • தீர்மானத்தைச் செயற்படுத்துவதற்கு ஒத்துழைக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தல் (அவ்வாறான அழைப்பு 2014 தீர்மானத்தில் இருந்தது. ஆயினும் 2021 தீர்மானத்திலும், தற்போதைய வரைவிலும் அது இல்லை)
  • தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஐ.நாவுடன் ஒத்துழைக்கும் இலங்கையர்களைப் பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தல்.
  • தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஒத்துழைப்பு வழங்கியமைக்காக பழிவாங்கல்களுக்கு முகங்கொடுக்கூடியவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவு அடிப்படையிலான பொறிமுறைகளை நிறுவ ஐ.நா. உறுப்பு நாடுகள் மற்றும் ஐ.நா. அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தல். தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இது மிகவும் அவசியமாகும்.
  • மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான சமீபத்திய அறிக்கையில் மிகவும் குறிப்பிடத்தக்க புதிய சேர்க்கைகளில் ஒன்றாக “பொருளியல் குற்றங்கள்” என்ற வார்த்தையைப் பிரயோகித்தல்.
  • பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வதன் முக்கியத்துவத்தை குறிப்பிடுகையில், போர்க்கால அட்டூழியங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் பொருளாதார குற்றங்கள் ஆகியவற்றை விசேடமாகக் குறிப்பிடுதல். (செயற்பாட்டுப் பந்தி [OP] 8)
  • இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றுக்கு இடையேயான பணிக்குழாம் மட்டத்திலான உடன்படிக்கையை வரவேற்கும்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் காரணமாக மனித உரிமைகள் மீது ஏற்படத்தக்க எதிர்மறை தாக்கங்களுக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பான எச்சரிக்கை செய்தல் (முன்னுரை பந்தி [PP] 8).
  • அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும்போது முன்னைய அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான முயற்சிகளில் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்களது உள்ளீடு மற்றும் பணிகளை கருத்திற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை கவனித்தல் (முன்னுரை பந்தி 13).
  • ஐ.நா. விசேட நடைமுறைகளின் பரிந்துரைகளை (பரிசீலிப்பதோடு மட்டும் நில்லாது) நடைமுறைப்படுத்தவும், ஐ.நா. கூட்டு ஒப்பந்த அமைப்புகளால் செய்யப்பட்ட பரிந்துரைகளையும் உள்ளடக்குவதற்கும் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தல் (செயற்பாட்டுப் பந்தி 2).
  • சிவில் சமூகத்தை வேவு பார்த்தல், அச்சுறுத்துதல் மற்றும் துன்புறுத்துதல் என்பன தொடர்பில் அக்கறையை வெளிப்படுத்தும்போது மாணவர் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள், மதத் தலைவர்கள், வழக்கறிஞர்கள், காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஆகியோரை விசேடமாகக் குறித்துரைத்தல் மற்றும் அவர்களது பாதுகாப்புக்காக அழைப்பு விடுத்தல் (செயற்பாட்டுப் பந்தி 5 மற்றும் செயற்பாட்டுப் பந்தி 13).
  • தாமதங்கள் மற்றும் ஜனாதிபதி மன்னிப்பு (OP7) ஆகியவற்றுக்கு மேலதிகமாக அடையாள வழக்குகளில் சட்டமா அதிபரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவும் குற்றச்சாட்டுகளை வாபஸ் பெறுவதனால் நீதி குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவது பற்றி குறிப்பிடுதல் (செயற்பாட்டுப் பந்தி 7).
  • அடையாள வழக்குகள் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளில் வழக்குத்தொடுத்தல் தொடர்பில் குறிப்பிடும்போது இவ் அனைத்து வழக்குகளிலும் வழக்குத்தொடுத்தல் நிகழ வேண்டுமென்பதால் பிரயோகிக்கப்பட்டிருக்கும் இடங்களில் “எனின்” என்ற வார்த்தைகளை அகற்றுதல் (செயற்பாட்டுப் பந்தி 10 மற்றும் செயற்பாட்டுப் பந்தி 11).
  • 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐந்தாவது அமர்விற்குப் பதிலாக 2023 மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 52ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான அடுத்த வாய்மொழி மூலமான முன்னேற்ற அறிக்கையை முன்வைக்குமாறு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தைக் கோருதல் (செயற்பாட்டுப் பந்தி 18).

முன்னோக்கிய வழி

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் அணுகுமுறையானது மேலும் கால அவகாசம் கோருதல் மற்றும் புதிய வாக்குறுதிகளை வழங்குதல் என்பதாகவே தெரிகிறது. ஆனால், களத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளாது வழங்கப்படும் வாக்குறுதிகள் பெரிதாக கருத்திற்கொள்ளப்பட வாய்ப்பில்லை. தனது பொதுமக்களுக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் வாக்குறுதிகளை வழங்குவதும் அவற்றை மீறுவதும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களின் தனிச்சிறப்பாகக் காணப்படுவது கண்கூடு.

உதாரணமாக, மூன்று மாதங்களுக்கு முன் ஜூன் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இறுதி அமர்வில் அன்றைய வெளியுறவு அமைச்சர் பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்வதை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். ஆனால், கடந்த மாதம் மூன்று மாணவர் தலைவர்கள் PTA இன் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  2015ஆம் ஆண்டு அன்றைய அரசாங்கம் (பிரதமராக விக்கிரமசிங்கவும் இருந்தார்) வெளிநாட்டு நீதிபதிகள், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள், அங்கீகரிக்கப்பட்ட வழக்குத்தொடுநர்கள் மற்றும் புலனாய்வாளர்களைக் கொண்ட நீதித்துறை பொறிமுறையை அமைக்க ஒப்புக்கொண்டது. ஆனால், வரைவுச் சட்டத்தை கூட நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தை ஆகியவற்றின் கண்காணிப்பு மற்றும் விமர்சனபூர்வமான கருத்துரைகளை நிறுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கான ஒரே வழி தற்போது நிகழ்ந்துவரும் உரிமைகள் தொடர்பான மீறல்களை நிறுத்துவது அல்லது குறைந்தபட்சம் குறைப்பது மற்றும் போர்க்கால அட்டூழியங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், பொருளியல் குற்றங்கள், ஊழல், ஒடுக்குமுறை உள்ளிட்ட கடந்தகால உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையையும் நீதியையும் உறுதிப்படுத்துவது மட்டுமே ஆகும்.

ருக்கி பெர்னாண்டோ

2022 செப்​டெம்பர் 20ஆம் திகதி ‘தி மோர்னிங்’ பத்திரிகையில் Sri Lanka’s past and future with Geneva resolutions என்ற தலைப்பில் பிரசுரமான கட்டுரையின் தமிழாக்கம்.