Photo, SELVARAJA RAJASEGAR

இலங்கையில் கடந்த 45 வருடங்களாக நடைமுறையில் இருந்துவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act) பதிலீடு செய்வதற்காக அரசாங்கங்கள் புதிய சட்டங்களைக் கொண்டுவரும் முயற்சிகளில் உண்மையில் மானசீகமான அக்கறையுடன்தான்  ஈடுபட்டனவா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது.

இதுவரையில் இது விடயத்தில் இரு அரசாங்கங்கள் புதிய சட்டமூலங்களைக் கொண்டுவரும் முயற்சிகளை முன்னெடுத்தன. ‘நல்லாட்சி’ அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்தை (Counter Terrorism Bill) கொண்டுவந்தது. தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமுலத்தைக் (Anti -Terrorism Bill) கொண்டுவந்திருக்கிறது.

இந்த இரு சட்டமூலங்களிலும் உள்ள ஏற்பாடுகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விடவும் கொடூரமானவையாக இருக்கின்றன. கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும் என்று தெரிந்துகொண்டு  தற்போதைய சட்டத்தை மாற்றாமல் இருப்பதற்கான தந்திரோபாயமாக உள்நோக்கத்துடன்தான்  அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்கிறதோ என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தகுதியை கேள்விக்குள்ளாக்கி தாக்கல் செய்யப்பட்ட முப்பதுக்கும் அதிகமான மனுக்களைப் பரிசீலித்த பிறகு உயர்நீதிமன்றம் அறிவித்த தீர்மானத்தை அண்மையில் நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்‌ஷ வாசித்தார்.

“சட்டமூலத்தின் 8 பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவையாக அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. அதனால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் அவை நிறைவேற்றப்படவேண்டும். சில பிரிவுகள் சர்வஜன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தையும்  பெறவேண்டியது அவசியமாகும். உயர்நீதிமன்றத்தின் விதப்புரைகளின் பிரகாரம் சட்டமூலம் திருத்தப்படுமானால் அதை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றமுடியும்” என்று ராஜபக்‌ஷ கூறினார்.

பயங்கரவாத குற்றச்செயல்கள் என்று சட்டமூலத்தில் வர்ணிக்கப்பட்டிருப்பவை பெருமளவுக்கு சர்வதேச சட்டங்களுக்கு இசைவான முறையில் அமையவேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியிருப்பது  முக்கியமாக கவனிக்கத்தக்கது. சட்டமூலத்தில் பயங்கரவாதத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

“பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் ஐக்கிய நாடுகளின் வரைவிலக்கணத்தின் வழியில் அமையவேண்டும். அதேவேளை, 2001ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தல் (Terrorist financing ) தொடர்பான தீர்மானத்துக்கு ஏற்றதாகவும் வரைவிலக்கணம் இருக்கவேண்டும்.

“பயங்கரவாத செயல் ஒன்றுக்கான வரைவிலக்கணத்தை தீர்மானிக்கும்போது ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகளின் சட்டங்களில் கூறப்பட்டிருக்கும் வரைவிலக்கணத்தை பரிசீலனைக்கு எடுக்கவேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான இலங்கையின் சட்டத்தைத் திருத்தும்போது இந்த நாடுகளின் சட்டங்களை பரிசீலனைக்கு எடுப்பது  பயனுடையதாக இருக்கும்” என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

பயங்கரவாதத்துக்கு வரைவிலக்கணம் வகுப்பது என்பது உண்மையில் ஒரு சர்வதேசப் பிரச்சினை. அதில் ஐக்கிய நாடுகளினால் கூட இதுவரையில் உலகளாவிய கருத்தொருமிப்பைக் காணமுடியவில்லை.

ஒருவருக்கு பயங்கரவாதியாக தோன்றுபவர் இன்னொருவருக்கு விடுதலை போராளியாக தென்படுவார் என்பது ஒரு பழமொழி போன்றே மாறிவிட்டது. நாடுகள் அவை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளின் அடிப்படையிலேயே பயங்கரவாதத்துக்கு வியாக்கியானத்தைக் கொடுக்கின்றன. இலங்கையும்  அதற்கு விதிவிலக்கு இல்லை.

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நாளில் இருந்து பயங்கரவாதத்துக்கு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணம் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

தெளிவற்றதாகவும் வரம்பு மீறியதாகவும் அமைந்திருக்கும் அந்த வியாக்கியானம் அரசியல் எதிர்ப்பியக்கங்களை ஒடுக்குவதற்கும் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடியது என்பதே பரவலான அபிப்பிராயம்.

பயங்கரவாதத் தடைச்சட்டமும் வேறு குற்றவியல் சட்டங்களும் பரந்தளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவந்த இலங்கையின் கடந்த பல தசாப்தகால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் பல ஏற்பாடுகள் குறித்து சட்டத்துறைச் சமூகமும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் கடுமையான அச்சத்தை வெளியிட்டன.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவந்த படுமோசமான துஷ்பிரயோகங்கள் குறித்து உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கிளம்பிய விமர்சனங்களைத் தொடர்ந்து  மனித உரிமைகளை மதிக்கும் வகையில் முன்னேற்றகரமான சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவருவதாக உறுதியளித்த அரசாங்கம் சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளை நீக்குவதற்குப் பதிலாக பயங்கரவாதத்தின் வரைவிலக்கணத்தை மேலும் விசாலப்படுத்தும் சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறது என்று  அரசியல் கட்சிகள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் கடந்த வருடம் கவலை தெரிவித்தன.

ஒன்றுகூடுவதற்கு மக்களுக்கு இருக்கும் சுதந்திரத்தையும் பேச்சுச் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் சொத்துச்சேதம், களவு, கொள்ளை போன்ற குற்றச்செயல்களை உள்ளடக்கியதாகவும் பயங்கரவாதத்தின் வியாக்கியானத்தை விசாலப்படுத்துவதாக சட்டமூலம் அமைந்திருக்கிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான  துஷ்பிரயோகங்களினதும் அமைதிவழிப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கம்  தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளினதும் வெளிச்சத்திலேயே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நோக்க வேண்டியிருக்கிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் கொடூரமானதாக புதிய சட்டமூலம் அமைந்திருக்கிறது என்பதே உண்மை. அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் பயங்கரவாதச் செயல் என்று வியாக்கியானம் செய்வதற்கு அது வகைசெய்கிறது.

அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கத்தை அல்லது ஜனாதிபதியை பதவி விலகவேண்டும் என்று கோருவதையும் பயங்கரவாதச் செயல்களாக வியாக்கியானம் செய்யமுடியும்.

சம்பள அதிகரிப்புக்கோரி தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டங்களையும் வீதிப் போராட்டங்களையும் அத்தியாவசிய சேவைகளைச் சீர்குலைக்கும் பயங்கரவாதச் செயல்கள் என்று வியாக்கியானம் செய்யமுடியும். ஒட்டுமொத்தமாக நோக்கும்போது மீண்டும் ஒரு மக்கள் கிளர்ச்சிக்கு இடமளிக்கக்கூடாது என்பதில்  மிகவும் உறுதியாக இருக்கும் அரசாங்கம் அதற்கு ஏற்றவகையில் மக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய சட்டங்களைக் கொண்டுவருகிறது.

இத்தகைய விமர்சனங்கள் பல மாதங்களாக முன்வைக்கப்பட்டு வந்த போதிலும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ கடந்த வருடமே வெளிப்படையாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்துறைச் சமூகம், சிவில் சமூக அமைப்புக்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் முன்வைத்த நியாயபூர்வமான விமர்சனங்களை அரசாங்கம் கவனத்தில் எடுத்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் தேவையான மாற்றங்களைச் செய்யவில்லை என்பதை அண்மைய உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் தெளிவாக வெளிக்காட்டுகிறது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் விரிவான கலந்துரையாடலுக்கு கால அவகாசம் தரவேண்டும் என்று சட்டத்துறைச் சமூகமும் சிவில் சமூகமும் கேட்டுக்கொண்டன. அத்தகைய கலந்துரையாடல்களில் அரசாங்கம் பெரிதாக அக்கறை காட்டவில்லை.

தங்களால் முன்வைக்கப்பட்ட அவதானங்களை உள்ளடக்கியதாக கடந்த செப்டெம்பரில் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அமைந்திருக்கவில்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியது.

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய கையோடு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தையும் நிறைவேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்திக் கொண்டிருந்த நிலையில் உயர்நீதிமன்றம் அதன் தீர்மானத்தை அறிவித்திருக்கிறது.

அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் அரசியலமைப்புக்கு ஏற்றமுறையில் திருத்தங்களைச் செய்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றுவதில் அரசாங்கம் அக்கறை காட்டுமா? அல்லது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில் இந்தச் சட்டமூலத்தை அது கைவிடுமா? இவை பதில் வேண்டி நிற்கும் முக்கியமான கேள்விகள்.

உயர்நீதிமன்றத்தின் விதப்புரையில் குறிப்பிடப்பட்டிருந்த திருத்தங்கள் பலவற்றை உள்ளடக்காமல் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலத்தை கடந்த மாதம் அரசாங்கம் அவசர அவசரமாக நிறைவேற்றியது போன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல விவகாரத்தில் நடந்துகொள்வது சாத்தியமில்லை என்றே தெரிகிறது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு போன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டுவரும் முயற்சியும் என்றென்றைக்குமே நழுவிக்கொண்டே போகுமா?

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இசைவானதாக அமைவதற்கு அவசியமானவை என்று உயர்நீதிமன்றம் விதந்துரைத்த சகல திருத்தங்களையும் சேர்க்காமல் அரசாங்கம் நிறைவேற்றியதை சபாநாயகர் சான்றுப்படுத்தி பெப்ரவரி முதலாம் திகதி முதல் சட்டமாக்கியதை அரசியலமைப்பை மீறும் செயல் என்று கூறி இரு அடிப்படை உரிமை மீறல்  மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

முதலாவது மனுவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி மதியாபரணம் ஆபிரகாம்  சுமந்திரனும் இரண்டாவது மனுவை ஐக்கிய நூற்றாண்டு முன்னணி (United Centenary Front) என்ற அமைப்பின் நான்கு உறுப்பினர்களும் தாக்கல் செய்தனர்.

“ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு இசைவான முறையில் ஒருபோதும் சட்டமாக்கப்படவில்லை. 2024ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் என்று வெளியிடப்பட்ட ஆவணத்தில் உயர்நீதிமன்றம் கூறிய பல திருத்தங்கள் இல்லை. அதனால் சபாநாயகர் பொதுமக்களின் நம்பிக்கையை மீறிச் செயற்பட்டிருக்கிறார்.

“அந்தச் சட்டத்தை இடைநிறுத்தி தடையுத்தரவொன்றை உயர்நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும்.  சட்டத்தை சபாநாயகர் சான்றுப்படுத்தியது சட்டப்படி செல்லுபடியாகாது என்றும் சபாநாயகர் அரசியலமைப்பை மீறிவிட்டார் என்றும் பிரகடனம் செய்யவேண்டும். எந்த ஆலோசனையின் அடிப்படையில் சபாநாயகர் அவ்வாறு செயற்பட்டார் என்பதை தீர்மானிக்க அவரிடமிருந்து பதிவுகளைக் கோரவேண்டும்” என்று சுமந்திரன் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடைநிறுத்தப்பட்டிருந்த நாட்களில் சபாநாயகர் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை சான்றுப்படுத்தியதால் அது அரசியலமைப்புக்கு முரணான செயல். சட்டப்படி செல்லுபடியாகாது என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், உகந்த நடைமுறைகளைப் பின்பற்றியே ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியிருக்கிறது என்று கூறியிருக்கும் சட்டமா அதிபர் சஞ்சய் இராஜரத்தினம், சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு அரசியலமைப்புக்கு முரணான முறையில் அமைந்திருக்கிறது என்பதால் அதை தள்ளுபடி செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தைக் கேட்டிருக்கிறார்.

அதேவேளை, ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் நிறைவேற்றியதில் கடைப்பிடித்த தவறான நடைமுறைகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் கிளம்பியிருப்பதற்கு மத்தியில் அந்தச் சட்டத்தில் அரசாங்கம் செய்யவிருக்கும் திருத்தங்களின் பட்டியல் ஒன்றை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அமைச்சரவையில் சமர்ப்பித்தார். நான்கு நிபுணர்களைக் கொண்ட  குழுவினால் வரையப்பட்ட அந்தத் திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருக்கிறது.

சட்டமூலம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் நடைபெற்றபோது உயர்நீதிமன்றம் விதந்துரைத்த சகல திருத்தங்களும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியபோதிலும், அரசாங்கம் அதற்கு செவிசாய்க்காமல் சட்டமூலத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது.

அந்த வேளையில் அமைச்சர் டிரான் அலஸ் பின்னர் ஒரு கட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவரலாம்  என்று கூறியது சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட முறையில் இருந்த பாரதூரமான குறைபாட்டை அம்பலப்படுத்தியது.

குறைபாடுகளுடன் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தைச் சான்றுப்படுத்துவதற்கு முன்னதாக சந்தித்துப் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் கால அவகாசம் கேட்டபோதிலும், சபாநாயகர் அதற்கு இடங்கொடுக்கவில்லை.

சபாநாயகர் அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் விடயத்தில் உயர்நீதிமன்றம் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பது முக்கியமான இன்னொரு கேள்வி. நாடாளுமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் இடையில் அரசியலமைப்பு ரீதியான தகராறு மூளவும் கூடும்.

வீரகத்தி தனபாலசிங்கம்