Photo, SRILANKACAMPAIGN

“ஏற்கனவே பனி கொட்டத் தொடங்கியிருக்கிறது….” – கார்ல் க்றோஸ்

ஹெரசல்ஸ் தனது ஐந்தாவது ஊழியத்தில் அல்பேஸ் மற்றும் பேனஸ் நதிகளை ஓகியன்  மன்னனின் தெய்வீக கால்நடை கொட்டிலுக்கூடாக திசை திருப்புவதன் மூலம் அந்தக் கொட்டிலை முழுமையாக தூய்மைப்படுத்துகிறான். அறகலயவும் இலங்கை சமூகத்தின் மீது அத்தகைய ஒரு சுத்திகரிப்புத் தாக்கத்தை எடுத்து வரும் எனப் பலர் நம்பினார்கள். அதன் இலட்சியவாத நீரோட்டத்துக்கூடாக ஆதிகால தீவிரவாதங்கள் சேர்த்து வைத்திருக்கும் அழுக்குகள் அனைத்தையும் அது கழுவிவிடும் என்றும் அவர்கள் நம்பினார்கள்.

குருந்தூர் மலை புயல் எடுத்துக் காட்டுவதைப் போல, இலங்கையில் இனத்துவ – மதவாத இனவாதம் இன்னும் மரணித்து விடவில்லை. நாடு எதிர்கொண்ட நெருக்கடியின் தீவிர நிலை மற்றும் அதன் விளைவாக ராஜபக்‌ஷர்கள் தொடர்பாக தோன்றிய விரோதம் என்பன அந்த இனவாதத்தை மங்கச் செய்திருந்தன. அல்பர்ட் கெம்யூவின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், கற்பித வரலாறுகள் மற்றும் கூட்டு நினைவுகள் என்பவற்றின் புண்ணிய ஸ்தலங்களினதும், அரசியல் நிறுவனங்களினதும் இருண்ட மூலைகளில் அந்தக் கொடிய கொள்ளை நோய் முடங்கிக்  கிடக்கின்றது. அதன் எலிகளுக்கு உயிர்ப்பூட்டுவதற்கு உசிதமான தருணம் வரும் வரையில் அது அவ்வாறு முடங்கிக் கிடக்கும்.

அந்தத் தருணம் இப்பொழுது வந்திருப்பது போல் தெரிகிறது.

அறகலய மூலம் கோட்டபாய ராஜபக்‌ஷ துரத்தியடிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் குறைவான காலப் பிரிவுக்குள் அவருடைய காவிப் படையினர் மீண்டும் களமிறங்கியிருக்கின்றார்கள்; கொஞ்சம் அதிகாரத்துக்காகவும், ஒரு சிறு நிலப்பரப்புக்காகவும் மீண்டும் நாட்டுக்குத் தீ மூட்டுவதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள். மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தொடக்கம் சிஹல ராவய அமைப்பின் அக்மீமன தயாரத்ன தேரர் வரையில் அனைவரும் களமிறங்கியிருக்கிறார்கள் (இன்றைய தமிழர்களும், முஸ்லிம்களும் புத்த பெருமானின் காலத்தில் வாழ்ந்த நிகண்டயாக்கள் என்ற குழுவுக்கு இணையானவர்கள் என்று சிரித்துக் கொண்டே கூறுகிறார் மெதகொட அபயதிஸ்ஸ தேரர். இந்த நிகண்டயாக்கள் மன்னருக்கு இலஞ்சம் வழங்கி, ஒரு கோயிலை கையகப்படுத்த முயன்றவர்கள். மறுபுறத்தில், அக்மீமன தயாரத்ன தேரர் பிரிவினை மற்றும் இரத்தம் சிந்துதல் என்பன குறித்து சூசகமாக பேசுகிறார்).

நடாஷா எதிரிசூரிய மற்றும் புரூணோ திவாகர ஆகியோர் வெற்றிகரமான விதத்தில் ஒடுக்கப்பட்டதுடன் இணைந்த விதத்தில் அரசியல் பிக்கு மீண்டும் வெளியில் வந்திருக்கிறார். விக்ரமசிங்க அரசாங்கம் அரசியல் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிவதற்குப் பதிலாக, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தியிருந்தால் அரசியல் பிக்கு பின்வாங்கி, இதிலும் பார்க்க உசிதமான ஒரு தருணம் வரும் வரையில் காத்திருந்திருப்பார். ஆனால், அரசாங்கம் இங்கு மிகவும் கோழைத்தனமான விதத்தில் செயற்பட்டிருக்கிறது. அது சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சமவாய சட்டத்தை (ICCPR) வெறுமனே ஒரு மத நிந்தனை எதிர்ப்புச் சட்டமாக திரிப்பதற்கு இடமளித்தது மட்டுமன்றி, அச்சட்டம் தெரிவு அடிப்படையில் – அதன் மூலம் பாரபட்சமான விதத்தில் – பிரயோகிக்கப்படுவதற்கு வாய்ப்பளித்திருக்கின்றது. எனவே, நடாஷா எதிரிசூரிய மற்றும் புரூணோ திவாகர ஆகியோர் பௌத்த மதத்தை இழிவுபடுத்திய காரணத்திற்காக இன்னமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அதேவேளையில், (சித்தார்த்த இளவரசர் அனைத்தையும் இழந்த ஒருவராக இருந்து வந்தாரா என்ற விதத்தில் சந்தேகம் தெரிவித்த) திலித் ஜயவீரவும், (கிறிஸ்தவர்களுக்கு எதிராக சிங்கள பௌத்தர்களின் ஆத்திரத்தைத் தூண்டுவதற்கு முயற்சித்த) பலங்கொடை கஸப்ப தேரரும், (பௌத்தர்கள் அல்லாதவர்கள் தமது வீடுகளிலிருந்து வெளியில் வர முடியாத அளவுக்கு ஒரு மதக் கலவரம் ஏற்பட முடியும் என அச்சுறுத்தல் விடுத்த) அக்மீமன தயாரத்ன தேரரும் சுதந்திரமாக தமது பிரிவினைவாத அரசியலை நடத்தி வருகிறார்கள்.

அரசியல்வாதிகளின் கோழைத்தனமும், சந்தர்ப்பவாதமும் அரசியல் பிக்குவை  வலுவூட்டியுள்ளன. அந்தப் பின்னணியில், குருந்தூர் மலையை நோக்கிய யாத்திரை இப்பொழுது ஆரம்பித்திருக்கிறது. குருந்தூர் மலையில் அவர்கள் வெற்றியீட்டினால் இனி ஒருபோதும் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும். இது அவர்களுக்கேயுரிய நாடாகி விடும்.

மிகிந்தலை வளவஹங்குனவாவே தம்மரதன தேரர் சரியாக அதனையே சொல்கிறார். புராதன  மன்னர்களினால் இந்நாடு புத்த பிக்குகளுக்கு (சாசன) அன்பளிப்பாக வழங்கப்பட்ட காரணத்தினால் அது மகா சங்கத்தினரின் (சாங்கிக) சொத்தாக இருந்து வருகின்றது என்கிறார் அவர். ஏனைய பிக்குகள் வடக்கு கிழக்கு காணிப் பிரச்சினைகளுக்கும், அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகளை மீளமைப்புச் செய்தல்/ விற்பனை செய்தல் என்பவற்றுக்கிடையில் ஓர் இணைப்பை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகின்றார்கள். அந்த விதத்தில், அவர்களுடைய அரசியல் நிகழ்ச்சிநிரல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார நிகழ்ச்சிநிரலுக்கு முற்றிலும் எதிரானதாக இருந்து வருகின்றது. குருந்தூர் மலை பிரச்சினையை அவர்கள் விக்ரமசிங்கவின் மற்றொரு வாக்குறுதியான 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்செய்வதுடன் இணைக்கிறார்கள். முன்னர்  ஒருபோதும் இருந்திராத விதத்தில் சிங்கள பௌத்த ஆட்சி நடைபெறும் ஒரு நாடாக இலங்கையை மாற்றியமைப்பதே அவர்களுடைய செயல்திட்டம். அத்தகைய ஒரு நாட்டில் அதிகாரப் பகிர்வு தொடக்கம் அனுமதிக்கத்தக்க வானொலி நாடகங்கள் எவை என்பது வரையில் பெரிய விடயங்கள் தொடர்பாகவும், அதேபோல சிறிய விடயங்கள் தொடர்பாகவும் புத்த பிக்குகளே இறுதி முடிவை எடுக்கக் கூடியவர்களாக இருந்து வருவார்கள். (அஹுங்கல்லே ஜினாநந்த தேரர் ICCPR இன் கீழ் முன்வைத்திருந்த ஒரு முறைப்பாட்டின் பேரில் நாடக ஆசிரியர் மாலக தேவப்பிரிய 2019 அக்டோபர் மாதம் ஒழுங்கமைந்த குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் – சக்திக சத்குமார வழக்கிலும் இந்தத் தேரரே ஒரு முதன்மையான பாத்திரத்தை வகித்திருந்தார்).

உத்தேச ஒலிப்பரப்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு சட்டத்தை நியாயப்படுத்தும் ஒரு முயற்சியாக ஜனாதிபதி விக்ரமசிங்க தனது நூல்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட விடயத்தை சுட்டிக் காட்டியுள்ளார். அது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாக இருந்து வந்ததுடன், அதனைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் எடுத்து வரப்படுதல் வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அதனையடுத்து ஜனாதிபதி விக்ரமசிங்க அறகலயவுடன் சம்பந்தப்பட்ட அனைவர் தொடர்பாகவும் வெளிப்படுத்திக் காட்டிய பகைமை உணர்ச்சி, ஜனரஞ்சக இனவாத வலதுசாரிகளிலிருந்து தோன்றக் கூடிய அதே மாதிரியான ஆபத்துக்களைப் பார்க்க முடியாத ஒருவராக அவரை ஆக்கியிருக்கின்றது. தொல்லியல் பணிப்பாளர் நாயகத்துடன் இடம்பெற்ற ஜனாதிபதியின் இரண்டாவது சந்திப்பு தொடர்பாக கசிய விடப்பட்டிருக்கும் காணொளி தொடர்பாக பேசிய சிஹல ராவய அமைப்பின் செயலாளர் மதுபாஷன பிரபாத் எதனையும் கற்பனைக்கோ, ஊகத்துக்கோ விட்டு வைக்காமல் தெளிவாக தனது கருத்துக்களை சொல்லியிருக்கிறார்: “ராஜீவ் காந்திக்கு என்ன நடந்தது என்பது குறித்து ரணில் கவனம் செலுத்துதல் வேண்டும். ஏனென்றால், உங்களுக்கு அருகிலும் கூட தேசாபிமானிகள் இருந்து வருகிறார்கள்… இந்தக் காணொளி ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான ஒரு குழுவினால் கசிய விடப்பட்டிருந்தது. தன்னைச் சூழ சிங்கள பௌத்தர்கள் இருந்து வருகிறார்கள் என்ற விடயத்தை அவர் புரிந்து கொள்ள வேண்டும்… இச்சம்பவம் ஓர் உயர் பாதுகாப்பு வலயத்தில் நடந்திருக்கிறது. அத்தகைய ஓரிடத்திலிருந்து எளிதில் ஒரு காணொளியை கசிய விட முடியாது… அந்த தேசாபிமான பௌத்தர்கள் நாட்டுக்காக எதனையும் செய்வார்கள். நாடு தொடர்பாக தேவைப்படும் அனைத்துத் தலையீடுகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள்.”

தொல்லியலை ஒரு ஆயுதமாக கையிலெடுத்தல் 

முன்னர் பௌத்த ஆலோசனை பேரவைக்கு வழங்கியிருந்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ 2020 ஜூன் மாதத்தில் கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமை முகாமைத்துவத்துக்கான செயலணியை நியமனம் செய்தார். இந்தச் செயலணி முதலில் ஒரே இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்து வந்தது. ஜனாதிபதியின்  முதன்மையான சீடர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையிலான இந்தச் செயலணியில் இருந்த உறுப்பினர்களில் தெரண குழுமத்தின் உரிமையாளர் திலித் ஜயவீரவும், இரு புத்த பிக்குகளும் அடங்கியிருந்தனர். (இலங்கையில் செயல்பட்டு வரும் பல தமிழ் தொல்லியலாளர்கள் ஒருவர் கூட இந்தச் செயலணியில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை). (“ஒரு ஹிட்லராக செயற்பட்டாகிலும் நீங்கள் இதனைச் செய்ய வேண்டும்” என்ற புகழ் பெற்ற வார்த்தைகளை உதிர்த்த) வேண்டருவே உபாலி தேரரையும் உள்ளடக்கிய மேலும் நான்கு புத்த பிக்குகள் இச்செயலணியில் இருந்தனர். பின்னர் ஓர் அடையாள மதிப்புக்காக தமிழர் ஒருவரும், முஸ்லிம் ஒருவரும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

தொடக்கத்தில் நியமனம் செய்யப்பட்ட இரு புத்த பிக்கு உறுப்பினர்களில் ஒருவர் சிங்கள பௌத்த தொல்லியலின் பிதாமகர் என அறியப்பட்ட எல்லாவல மேதானந்த தேரர்; ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஸ்தாபகத் தலைவராகவும் இருந்த அவர் பௌத்த மதத்தை அழித்தொழிப்பதற்கு குறிப்பாக கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் முன்னெடுத்து வரும் சதிகள் குறித்து தொடர்ந்தும் பேசி வருபவர்; “புத்த பிக்குகளுக்கு மத்தியில் HIV தொற்றை பரப்புவது அவர்களுடைய திட்டத்தின் ஓர் அங்கம்” (சண்டே டைம்ஸ் 19.08.2007). முன்னர் ஒரு விகாரை அமைந்திருந்த ஓர் இடத்திலேயே கோணேஸ்வரம் கோயில் கட்டப்பட்டது என்றும் அவர் கூறுகிறார். கோட்டபாய ராஜபக்‌ஷவின் ஜனாதிபதி பதவி திடீரென முடிவுறுத்தப்படாதிருந்தால், இத்தகைய புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படும் இந்தச் செயலணி இலங்கையில் ஒரு அயோத்தியை உருவாக்கியிருக்க முடியும்.

இச்செயலணியில் உள்ளடக்கப்பட்டிருந்த மற்றைய உறுப்பினர் பனாமுரே திலகவன்ச தேரர். 2019 ஜனாதிபதித் தேர்தலை உடனடுத்து தொல்லியல் மரபுரிமை முகாமைத்துவம் தொடர்பாக அவர் தனது சொந்த தூரநோக்கினை முன்வைத்தார்: “இன்றைய தருணத்தில் இந்த நாட்டில் வாழும் சிங்கள பௌத்தர்களாகிய நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், அறிவுக் கூர்மையுள்ளவர்களாகவும் நடந்து கொண்டிருக்கின்றோம். இதோ ஒரு யுகம் உதயமாகியிருக்கிறது… அந்த துரதிர்ஷ்டவசமான கால கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், இந்நாட்டில் ஒரு புதிய சூழலையும், புதிய அரசாங்கத்தையும் அமைத்துக் கொள்வதற்கும் ஒரு யுகம் உதயமாகியிருக்கின்றது… ஒரு சிங்கள பௌத்த தலைவர் என்ற முறையில் அவர் (கோட்டபாய ராஜபக்‌ஷ) நாளை நமக்கு ஒரு சிங்கள பௌத்த தேசத்தை உருவாக்குவதற்கு முயற்சித்து வருவது குறித்து மகா சங்கத்தினர்  என்ற முறையில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். அது ஒரு பாதுகாப்பான தேசமாக இருந்து வரும்… 1980 களின் தசாப்தத்தில் திரு. சிறில் மெத்தியூ புராதன பௌத்த விகாரைகளின் இடிபாடுகளை இனங்கண்டு, அவற்றை அபிவிருத்தி செய்தார். மேலும், சிங்கள விவசாய சமூகங்களை அந்த இடங்களில் குடியேற்றினார். அவ்விதம் குடியேற்றப்பட்ட சிங்கள விவசாய சமூகங்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தொடர்ந்து வசித்து வந்திருந்தால் இந்த மாகாணங்கள் பாதுகாப்பானவையாக இருந்து வந்திருக்கும்; நெருக்கடிகள் இல்லாத பிரதேசங்களாகவும் இருந்து வந்திருக்கும்; அவை தீவிரவாதிகளின் பிடியில் இருந்திருக்க மாட்டாது.”

தொல்லியல் துறை ஜாம்பவான் சேனக பண்டாரநாயக்க தொடர்பான 2022 நினைவுப் பேருரையில் முன்னணி தொல்லியலாளர் ஜகத் வீரசிங்க தொல்லியல் தொடர்பான நமது தப்பெண்ணங்களை சுட்டிக் காட்டினார். இலங்கையில் தொல்லியல் என்ற விடயம் ஜனரஞ்சக அலைக்கு இரையாகி, “தற்போதைய மேலாதிக்க உணர்வுகளுக்கு” சேவகம் செய்யும் நிலைக்கு அது தள்ளப்பட்டிருக்கும் விடயத்தை அவர் குறிப்பிட்டார். இது தொடர்பான தனது அச்சங்களை பேராசிரியர் பண்டாரநாயக்கவுடன் பகிர்ந்து கொண்ட பொழுது, அதற்கான அவருடைய பதில் இப்படி இருந்தது என ஜகத் வீரசிங்க குறிப்பிட்டார்: “ஹோர்ட்டன் சமவெளி குறித்து சிந்தித்துப் பாருங்கள். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்று வந்த நிலையில் ஹோர்ட்டன் சமவெளியின் உயிரினவியல் சூழல் மாற்றமடையாமல் அதே விதத்தில் இருந்து வந்திருக்கிறது. உங்களுக்காகவும், உங்கள் சகாக்களுக்காகவும் ஒரு ஹோர்ட்டன் சமவெளியைக் கட்டியெழுப்புங்கள்” (சண்டே ஐலன்ட் 23.3.2022). பேராசிரியர் வீரசிங்கவின் அச்சங்கள் இப்பொழுது உண்மையாகி வருகின்றன. புத்த பிக்குகள், அரசியல்வாதிகள் மற்றும் சுயநல அக்கறை தரப்புகளுக்கு சேவகம் செய்யும் தொழில்வாண்மையாளர்கள் ஆகியோர் தொல்லியலை ஓர் ஆயுதமாகக் கையிலெடுக்கும் பொழுது அது மிகக் குரூரமான மோதல்கள் மற்றும் நீண்டகால போர்கள் என்பவற்றுக்கான விதைகளைத் தூவ முடியும். அடுத்து வரவிருக்கும் மோதல்களின் போது ஒரு ‘ஹோர்ட்டன் சமவெளி’ நிலைத்திருக்க முடியுமா என்பது ஒரு பெரும் கேள்விக் குறியாக இருந்து வரும் என்பதில் சந்தேகமில்லை.

கோட்டபாய ராஜபக்‌ஷவின் செயலணி வரலாற்றை மீள எழுதுவதற்கும், கள யதார்த்தத்துக்கு மாறான விதத்தில் ஊகங்களை உருவாக்குவதற்குமென மிகுந்த முனைப்புடன் தனது வேலைகளை ஆரம்பித்தது. ஆனால், பனாமுரே தேரர் முன்னெடுத்த ‘மரபுரிமை பாதுகாப்பு’ எந்த அளவுக்கு உச்சத்தை எட்டியது என்றால், செயலணியின் தலைவர் – அவருடைய அப்பழுக்கற்ற பேரினவாத சார்பு நிலைகளுக்கு மத்தியிலும் கூட – அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஓய்வு பெற்ற ஜெனரல் குணரத்னவுடன் 2021 பெப்ரவரி மாதம் இடம்பெற்ற ஒரு சந்திப்பின் போது மாவட்டச் செயலாளர்கள் அந்தத் தேரரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அளவிலான காடழிப்புச் செயற்பாடுகள் தொடர்பாக முறைப்பாடு செய்ததாக  கூறப்படுகிறது. ஜெனரல் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட புத்த பிக்கு அது தொடர்பாக ஒப்புக்காக ஒரு மறுப்பை வெளியிட்டு விட்டு, தனது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார்.

கோட்டபாய ராஜபக்‌ஷ வெளியேறிய பொழுது இந்தச் செயலணி அதன் செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டது. ஆனால், (சிங்கள பௌத்தத்துக்கு உரியது எனக் கூறுவதன் மூலம்) கிழக்கு மாகாணத்தை அபகரித்துக் கொள்வதற்கான அரசியல் பிக்குகளின் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தன. தேசிய மரபுரிமை பாதுகாப்புக்கான அமைப்புக்களின் சம்மேளனம் என்ற ஓர் அமைப்பு 2022 நவம்பர் மாதம் மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் அனுசரணையின் கீழ் துவக்கி வைக்கப்பட்டது. இராணுவ முகாம்களுக்கு அருகில், இராணுவ அனுசரணையுடன் புதிய விகாரைகளை அமைப்பதற்கென பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு சம்பவத்தின் போது (ஏப்ரல் 2023, புல்மோட்டை) அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அரசியல் பிக்கு ஒருவரின் மெய்க்காவலர் ஒருவர், ஓர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு காணொளி வெளியிடப்பட்டது. (பொலிஸ் பேச்சாளரின் கருத்தின் பிரகாரம், புத்த பிக்குகளையும் உள்ளிட்ட விதத்தில் அரசியல்வாதிகள் அல்லாத நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கென 5400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர். தர்மத்தின் பிரகாரம் வாழ்பவர்கள் அந்த தர்மத்தினால் பாதுகாக்கப்படுவார்கள் என புத்த பெருமான்  சொன்னார்; மெய்ப் பாதுகாவலருடன் கூடிய புத்த பிக்குகள் ஒன்றில் புத்த பெருமானின் போதனைகளைப் பொருட்படுத்துவதில்லை; அல்லது அந்தப் போதனைகள் தம்மை உள்ளடக்கவில்லை என்பதை அறிந்திருக்கிறார்கள்.)

இந்தப் பின்னணியிலேயே ஜனாதிபதி விக்ரமசிங்க 2023 மே மாதத்தில் தொல்லியல் பணிப்பாளர் நாயகத்துடனான தனது முதலாவது சந்திப்பை மேற்கொண்டார். தொல்லியல் திணைக்களம் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் மீது இயல்புக்கு மாறான விதத்தில் உயர் அளவில் கவனம் செலுத்தி வருவது குறித்து கேட்கப்பட்ட பொழுது, பேராசிரியர் அநுர மனதுங்க அதற்கு இரண்டு விளக்கங்களை முன்வைத்தார். போர் இடம்பெற்ற காலப் பிரிவின் போது இப்பிரதேசத்தில் எத்தகைய தொல்லியல் அகழ்வுகளையும் மேற்கொள்ள முடியாதிருந்தது. மேலும், இப்பிரதேசங்களில் இடம்பெற்று வரும் தொல்லியல் செயற்பாடுகளுக்கு வெளியாட்கள் முக்கியமாக புத்த பிக்குகள் நிதிப்படுத்தலை வழங்கி வருகின்றார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால், பண பலத்துடன் கூடிய புத்த பிக்குகள் தொல்லியல் திணைக்களத்தின் நிகழ்ச்சிநிரல் முன்னெடுக்கப்பட வேண்டிய விதம் தொடர்பாக பணிப்புரைகளை வழங்குவதற்கென பண நன்கொடைகளை வழங்கி வருகின்றார்கள்.

தொல்லியல் திணைக்களம் ஒரு தனியார் நிறுவனம் அல்ல என்ற விடயத்தையும், வெளி வளங்கள் திணைக்களத்திலிருந்து மட்டுமே அது நிதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற விடயத்தையும் ஜனாதிபதி சரியாகவே பணிப்பாளர் நாயகத்துக்கு நினைவூட்டினார். “(தொல்லியல் மதிப்பைக் கொண்ட) ஏதேனும் ஒரு வஸ்து கண்டுபிடிக்கப்பட்டால் எவரும் அந்த இடத்தில் ஒரு வீட்டையோ அல்லது பௌத்த கோயிலையோ அமைக்க முடியாது” என அவர் கூறினார். “அது நாட்டுக்குச் சொந்தமானது.” ஆனால், பணிப்பாளர் நாயகம் வேறு விதத்தில் சிந்தித்திருப்பது போல் தெரிகிறது. அதுவே இரண்டாவதும், பிரபல்யமானதுமான சந்திப்புக்கு வழிகோலியிருந்தது.

மரபுரிமை என்ற விளையாட்டின் விதிகள்

போர் வெற்றியை உடனடுத்து, அந்த வெற்றியை நினைவு கூரும் பொருட்டு அநுராதபுரத்தில் ஒரு நினைவுத் தூபியை நிறுவ வேண்டுமென மஹிந்த ராஜபக்‌ஷவும், கோட்டபாய ராஜபக்‌ஷவும் தீர்மானித்தார்கள். எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக கியூ வரிசைகள் ஆரம்பமாகியிருந்த நிலையிலும், நாட்டு மக்களில் நான்கில் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்கள் ராஜபக்‌ஷர்கள் “மீட்டெடுத்த” தேசத்திலிருந்து வெளியேறிச் செல்வதற்கு எதிர்பார்த்திருந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த நினைவுத் தூபி 2021 நவம்பர் மாதம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது (“இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் என்பவற்றின் வீரர்களின் அழியாத நினைவுகளும், பெறுமதிமிக்க தியாகங்களும் மீண்டுமொரு முறை அமரத்துவம் அடைந்திருப்பதுடன், புனிதப்படுத்தப்பட்டுள்ளன” என டெய்லி நியூஸ் பத்திரிகை உரத்த குரலில் பிரகடனம் செய்தது. அதாவது, வன்முறையுடன் கூடிய ஒரு போரைக் கொண்டாடுவதற்கு அகிம்சையில் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு மதத்தைக் கீழ்மைப்படுத்தும் விதத்தில் அது அப்படி எழுதியிருந்தது). சந்தஹிரு சேய என்ற பெயரிலான இந்தப் போர் நினைவுத் தூபி தொல்லியல் ரீதியில் மிகவும் நிர்ணயகரமான இந்த  அமைவிடத்தில் ஒருபோதும் நிர்மாணிக்கப்பட்டிருக்கக் கூடாது என முன்னாள் தொல்லியல் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்க கூறினார். இந்தக் கருத்திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் தனக்கு ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். இரத்தத்தையும், கண்ணீரையும் கொண்டு கிழக்கில் தொல்லியல் மரபுரிமையைப் பாதுகாப்பதற்கு பிரதிக்ஞை அளித்திருக்கும் பெரும்பாலான அரசியல் பிக்குகள், ராஜபக்‌ஷர்கள் இவ்விதம் இந்த இடத்தை இரு விதத்தில் களங்கப்படுத்தியிருப்பது குறித்து மௌனம் சாதித்தார்கள்.

மேலும், 2010ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதி இரவு ஆயுதம் தாங்கிய ஒரு கும்பல் பாணம்பத்துவில் அமைந்திருக்கும் ஒரு புராதன சிங்களக் கிராமமான றாகம்வெல கிராமத்தை தீயிட்டுக் கொளுத்திய பொழுது இவர்கள் எவரும் வாய் திறக்கவில்லை. றாகம்வெல கிராமவாசியான  முதியன்சேலாகே பண்டார இது தொடர்பாக இப்படிக் கூறுகிறார்: “அவர்கள் எம்மை எமது இடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, கொலை செய்வதாக அச்சுறுத்தினார்கள். அவர்களிடம் இரண்டு ரி 56 துப்பாக்கிகள் இருந்தன. நான் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றேன். ஆனால், அதற்குள் அவர்கள் எல்லா இடங்களையும் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது நான் திரும்பி வந்தேன்” (பிபிசி 18.7.2010). ஒரு சில கிராமவாசிகள் உதவி நாடி அருகிலிருந்த விசேட அதிரடிப்படை காவலரணுக்கு ஓடிச் சென்ற பொழுது, அங்கிருந்த அதிரடிப்படை ஆளணியினர் அந்த விடயத்தில் தலையிடுவதற்கு மறுத்தனர். தீயிட்டுக் கொளுத்தப்பட்ட தமது கிராமங்களுக்கு கிராமவாசிகள்  திரும்பி வருவதனை பொலிஸார் தடுத்து நிறுத்தினார்கள். வெல்லஸ்ஸ – திகாமடுல்ல பிரதம சங்கநாயக்க தேரர் கிராமத்தின் விகாரையில் ‘வஸ்’ அனுஷ்டிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதே போல, றாகம்வெல கிராமத்திலிருந்த புராதன தொல்லியல் அமைவிடம் ஒன்றான சமுத்ரகிரி பன்சலையை கடற்படையினர் அழித்ததாக கூறப்படுகிறது. றாகம்வெல மற்றும் ஏனைய பாணம கிராமங்களைச் சேர்ந்த மக்கள் – தமது தமிழ் மற்றும் முஸ்லிம் அயலவர்கள் செய்து வருவதைப் போலவே – தாம் இழந்த  காணிகளைப் பெற்றுக் கொள்வதற்காக இன்னமும் போராடி வருகின்றார்கள்.

புத்த பெருமான் இப்படிச் சொன்னார்: “பிக்குகள் தாமாகவே உங்களை ஒரு தீவாக ஆக்கிக் கொள்ளுங்கள்; நீங்களே உங்களிடம் சரணடையுங்கள்; வேறு எவரும் தேவையில்லை; தம்ம உங்களுக்கான தீவாகவும், உங்களுக்கான சரணாலயமாகவும் இருந்து வரட்டும். வேறு எதுவும் தேவையில்லை” (அட்டாதிபா சூத்தர). அரசியல் பிக்கு இந்தக் குறிப்பிட்ட தீவு தமது சொத்து என உரிமை கோருகிறார். சித்தார்த்த இளவரசர் ஆன்ம ஒளியைப் பெற்றுக் கொள்வதற்கான தனது தேடலின் போது உலக வஸ்துக்களை துறந்தார். அரசியல் பிக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக உலக வஸ்துக்களை குறிப்பாக – காணிகளை – சேர்த்துக் கொள்வதற்கு புத்த மதத்தைப் பயன்படுத்தி வருகிறார். வலுவான, குரலை உச்ச மட்டத்தில் உயர்த்தும் ஆற்றலுடன் கூடிய இந்தத் தரப்பை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற அச்சத்தில் அனைத்து வண்ணங்களையும் சேர்ந்த அரசியல்வாதிகள் அவர்களுடன் சேர்ந்து செயற்பட்டு வருகின்றார்கள். ஜனாதிபதி விக்ரமசிங்க இது தொடர்பாக மிகவும் அரிதான ஒரு விதிவிலக்காக இருந்து வருகிறார்; அவர் தான் சொல்வதைச் செய்வாரா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மரபுரிமை பாதுகாப்பு என்ற போர்வையில் இக்காணிகளைக் கையகப்படுத்திய பின்னர், அவற்றில் விவசாயம் செய்து வருபவர்கள் குத்தகைக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என பணாமுரே தேரர் கூறி வருவதாக இப்பொழுது நன்கு பிரபல்யமடைந்திருக்கும் இந்தச் சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். அவ்வாறு செய்வதற்கு புத்த பிக்குவுக்கு உரிமை இருந்து வருகின்றது எனக் கூறியதன் மூலம், ஆசிரிமலை புனித பிரதேசத்துக்குள் இருக்கும் காணிகள் குத்தகைக்கு விடப்பட்டு வருவதாகக் கூறப்படும் விடயத்தை மெதகொட அபயதிஸ்ஸ தேரர் நியாயப்படுத்தினார். எல்லாவல மேதானந்த தேரர் மேலும் ஒரு படி முன்னே சென்று, குருந்தூர் மலை கோயில் தொடர்பாக உரிமை கோரப்பட்ட காணிகளை மட்டுமன்றி, அதனைச் சூழவுள்ள காணிகளையும் சிங்கள பௌத்தர்கள் அல்லாத எவருக்கும்  வழங்க முடியாது எனக் கூறினார்.

ஆகவே, மரபுரிமை பாதுகாப்பு என்ற விளையாட்டின் விதிகள் இப்படித் தான் இருந்து வருகின்றன. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறி ஓரிடத்தை அடையாளப்படுத்துதல்; அதனை ஒரு புனித பூமியாக உரிமை கோருதல்; அதன் பாதுகாவலராக ஒரு பிக்குவை நியமனம் செய்தல்; அந்தக் காணிகளை குத்தகைக்கு விடுவதனையும் உள்ளடக்கிய விதத்தில் தான் எதனைச் செய்ய வேண்டுமென விரும்புகின்றாரோ அதனைச் செய்வதற்கு அந்தப் பிக்குவுக்கு இடமளித்தல். அதன் விளைவாக, தொல்லியல் அமைவிடங்கள் நாசமாக்கப்படுதல் மற்றும் காடுகள் அழிக்கப்படும் நிலைமைகள் என்பன தோன்றும் பொழுது அரச அதிகாரிகள் செவிடர்கள், ஊமையர், குருடர்கள் போல இருந்து வருவார்கள். அதாவது, தாய்லாந்து நாட்டில் பிறந்த கொம்பன் யானையான முத்துராஜா யானையை அதன் பாதுகாவலர்களான கந்தே விகாரை பிக்குகள் கொடூரமாக நடத்திய சம்பவத்தை உதாசீனம் செய்த அதே விதத்தில் அதிகாரிகள் இது தொடர்பாகவும் நடந்து கொள்வார்கள்.

முத்துராஜா யானை அதிர்ஷ்டவசமாக இலங்கையில் பிறந்திருக்கவில்லை. அந்த யானைக்கு நேர்ந்திருக்கும் கதி தாய்லாந்துக்கு தெரிய வந்த பொழுது, அதனை மீண்டும் அந்நாட்டுக்கு எடுத்துச்செல்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மூன்று தசாப்த காலம் இந்த சிங்கள – பௌத்த நரகத்தில் வாழ்ந்ததன் பின்னர் இறுதியில் முத்துராஜா சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் சாதாரண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், காணிப் பசியில் இருந்து வரும் அரசியல் பிக்குகளின் அடாவடித்தனங்களினால் பாதிக்கப்பட்ட நிலையில் எத்தகைய நிவாரணங்களும் இல்லாமல் இருந்து வருகின்றார்கள். வறியவர்களாகவும், எத்தகைய தொடர்புகளும் இல்லாதவர்களாகவும் இருந்து வரும் மண்ணின் மைந்தர்களான இந்த மக்களுக்கு வேறு போக்கிடமில்லை. துன்பத்திலும், வெறுப்பிலும் அமிழ்வதைத் தவிர அவர்கள் வேறு என்ன செய்ய முடியும்? அவ்விதம் கையறு நிலைக்குத் தள்ளப்படுவது மிகவும் ஆபத்தான ஒரு நிலைமை. இன்றைய அரசியல் பிக்குகள் தமது புவியியல் ரீதியான சிங்களம் மட்டும் நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்த விதத்தில் அடுத்தக் கட்ட மோதல்களுக்கான விதைகளை தூவி  வருகின்றார்கள். அவர்களுடைய முன்னோர்கள் 1956இல் சிங்களம் மட்டும் கொள்கையின் மூலம் செய்த அதே காரியத்தை இவர்கள் இப்போது செய்து வருகின்றார்கள்.

திசரணி குணசேகர

18.06.2023 அன்று Kurundi: A Runway to ’56? என்ற தலைப்பில் Groundviews தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.