Photo, Selvaraja Rajasegar

தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது  கூட்டத்தொடரில் இலங்கை நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கின் வாய்மூல அறிக்கையைத் தவிர வேறு எந்த வகையிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே பொதுவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கை விவகாரத்தில்  பெரும்பாலும் சகல பிரச்சினைகள் குறித்தும் அங்கு கரிசனை காட்டப்பட்டிருக்கிறது.

உயர்ஸ்தானிகரின் வருடாந்த அறிக்கை,  மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பான மைய நாடுகளின் (Core Group of countries on Srilanka) அறிக்கை மற்றும் உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை மூன்றிலும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கையின் அக்கறையின்மை குறித்து விசனம் வெளியிடப்பட்டிருக்கிறது.

வொல்கர் ரேக் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராக 2022 அக்டோபரில் பதவியேற்ற பிறகு வருடாந்த அறிக்கையை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் வெளியிட்டது இதுவே முதற்தடவையாகும்.

அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பாக குறிப்பிடுகையில், “அவர் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களில் உள்ள அம்சங்களை இலங்கை நிராகரித்திருப்பது கவலைக்குரியதாக இருக்கின்ற போதிலும், களத்தில் செயற்படுகின்ற எமது அமைப்புக்களுடன் அது தொடர்ந்து பணியாற்றிவந்திருக்கிறது. கடந்த தசாப்தத்தில் மனித உரிமைகளுடன் தொடர்புடைய பல்வேறு  விவகாரங்களில் ஆணைகொண்ட ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் 12 தடவைகள் இலங்கைக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தனர். அவர்களின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை நான் ஊக்கப்படுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

கனடா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, மாலவி, மொன்டிநீக்ரோ, வடக்கு மெசடோனியா ஆகிய ஆறு நாடுகளைக் கொண்ட மைய நாடுகளின் அறிக்கையை ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் தூதுவர் றீட்டா பிரெஞ்ச் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் தொடங்கிய மறுநாள் ஜூன் 20 வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு;

“காணிகளை திருப்பிக் கையளித்தல், நீண்டகால தடுப்புக்காவல் மற்றும் ஊழல் தொடர்பான அக்கறைகள் தொடர்பில் இலங்கையின் ஆரம்ப நடவடிக்கைகளை நாம் வரவேற்கிறோம். இந்த நடவடிக்கைகள் சகல இலங்கையர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான செயன்முறையொன்றின் தொடக்கத்துக்கு ஒரு அடிப்படையாக அமையமுடியும்.

“பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுவருவது குறித்து நாம் விசனம் கொண்டுள்ளோம். அந்தச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய முயற்சிகளை நாம் ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை, பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுடன் ஒத்திசைவானதாக அமைவதை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

“கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தையும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தையும் பாதுகாக்குமாறு அரசாங்கத்தை நாம் கேட்டுக்கொள்கிறோம்.

“நல்லிணக்கத்துக்கான அதன் கடப்பாட்டை இலங்கை முன்னெடுக்கும்போது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், சகல தரப்புகளையும் அரவணைக்கும் அணுகுமுறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்துகிறோம். கடந்தகால பணிகளை அடிப்படையாகக் கொண்டு பயனுறுதியுடைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். முரண்நிலைகளுக்கான அடிப்படைக்  காரணிகளையும் தண்டனையின்மையையும் (Impunity)  கையாளுவதற்கு முன்வைக்கப்பட்ட  விதப்புரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும்.

“நாட்டின் தேர்தல் முறைகளின் மீதான மக்களின் நம்பிக்கையை பேணுவதன் மூலம் இலங்கை அதன் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைப் பாதுகாக்கவேண்டியதும் நிறுவனங்களினதும் ஆணைக்குழுக்களினதும் சுயாதீனத்தை உறுதிப்படுத்தவேண்டியதும் முக்கியமானதாகும்.

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடனும் அவரது அலுவலகத்துடனும் ஒத்துழைத்துப் பணியாற்றுமாறு இலங்கைக்கு அழைப்பு விடுக்கும் நாம் மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தைக் கையாளுவதில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம்.”

உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கின் சார்பில் வாய்மூல அறிக்கையை பிரதி உயர்ஸ்தானாகர் நடா அல் – நஷீவ் ஜூன் 21 மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் வெளியிட்டார்.

வொல்ர் ரேக்கின்  வருடாந்த அறிக்கையையும் மைய நாடுகளின் அறிக்கையையும் போன்று ஒப்பீட்டளவில் மென்மையானதாக வாய்மூல அறிக்கை இருக்கவில்லை. இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கடுமையான  கருத்துக்களைக் கொண்டதாக அமைந்த அந்த அறிக்கை பொருளாதார நெருக்கடி, இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் முயற்சிகள் மற்றும் கடந்த வருடத்தைய அறகலய மக்கள் கிளர்ச்சி  என்று பல்வேறு பிரச்சினைகளை பற்றிய உயர்ஸ்தானிகரின்  விமர்சன அடிப்படையிலான கருத்துக்களைக் கொண்டதாக இருந்தது.

உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் (போர்க்குற்றங்கள்) குற்றச்சாட்டுக்களை விசாரணைசெய்து குற்றச்செயல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன்னால் நிறுத்துவதற்கு நம்பகமான பொறிமுறை இல்லாத நிலையில் பல்வேறு நாடுகளின் நியாயாதிக்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் விசேட குழு ஈடுபாடு காட்டிவருவதாக பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

2021 மார்ச் 23 மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின் பிரகாரம் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் தொடர்பில் சான்றுகளையும் சாட்சியங்களையும் சேகரித்து பல்வேறு நாடுகளின் நியாயாதிக்கங்களின் கீழ்  எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய விசாரணைகளுக்கு உதவும் நோக்கில் அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலலகத்தின் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தையே (OHCHR Sri Lanka accountability project 2021) விசேட குழு என்று அவர் குறிப்பிட்டார். ஜெனீவாவில் இருந்து இயங்கும் அந்தக் குழுவின் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னைய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று நம்பத்தகுந்தவர்களுக்கு எதிராக, உலகளாவிய நியாயாதிக்கச் சட்டங்களுக்கு அமைய, வெளிநாடுகள் இலங்கையின் போர்க் குற்றவாளிகளைக் கைதுசெய்வது, அவர்களின் சொத்துக்களை முடக்குவது போன்ற நடடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

கடந்தகால உரிமை மீறல்களை நேரடியாக  ஏற்றுக்கொண்டு நம்பகமான விசாரணைகளை   முன்னெடுத்து சம்பந்தப்பட்வர்களை நீதியின் முன்னால் நிறுத்துவது அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு என்கிற அதேவேளை ‘பொறுப்புக்கூறல் பற்றாக்குறை’ (Accountability Deficit) நீடிக்கும் வரை செயன்முறைகளில் சர்வதேச சமூகம் ஆதரவை வழங்கும் பங்கை வகிக்கலாம், வகிக்கவேண்டும் என்று  கூறிய  நடா அல் – நஷீவ் தண்டனையின்மை நீடிக்கும்வரை இலங்கை மெய்யான நல்லிணக்கத்தையோ அல்லது நிலைபேறான அமைதியையோ அடையப்போவதில்லை என்று சுட்டிக்காட்டினார்.

தமிழ்க் கட்சிகளுடனான  ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் பேச்சுவார்த்தைகளை உற்சாகப்படுத்துகின்ற அதேவேளை தொல்லியல் ஆய்வு, வனப்பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நிலம் சுவீகரிக்கப்படுவதை நிறுத்துவதாக அவர் வழங்கிய உறுதிமொழியை பிரதி உயர்ஸ்தானிகர் வரவேற்றிருக்கிறார்.

பொருளாதார நெருக்கடி இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வு மீது தொடர்ந்தும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறிய அவர் சர்வதேச நாணய நிதியத்தின் 290 கோடி டொலர்கள் கடனுதவியை ‘முக்கியமான முதற்படி’ என்று வர்ணித்ததுடன் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் சுமை சமத்துவமின்மைகளை மேலும் தீவிரப்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்யுமுகமாக வலுவான  சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்  முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சி பற்றி குறிப்பிட்ட அவர் நீண்டகால சவால்களைக் கையாளக்கூடிய வரலாற்று மாறுதலை ஏற்படுத்தக்கூடியதாக கிளர்ச்சியின் முழுமையான உள்ளார்ந்த ஆற்றல் இன்னமும் முறையாகப் புரிந்துகொள்ளப்பட்டு செயல்வடிவம் கொடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

வாய்மூல அறிக்கையில் மிகவும் முக்கியமாக கவனிக்கவேண்டியது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சி பற்றிய கருத்தாகும்.

கடந்த காலத்தில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தத் தவறிய பல ஆணைக்குழுக்களை  இலங்கை கண்டிருக்கிறது. இன்று தேவைப்படுவது உண்மை, பரிகாரம், நினைவுகூரல், பொறுப்புக்கூறலின் பல்வேறு அம்சங்களை இணைக்கக்கூடியதும் வெற்றிகரமானதும் நிலைபேறானதுமான நிலைமாறுகால நீதிச்செயன்முறை ஒன்றை சாத்தியமாக்கக்கூடிய சரியான சூழ்நிலையை தோற்றுவிக்கவல்லதுமான தெளிவான முறையில் அமைந்த ஒரு திட்டமேயாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றத் தவறியமைக்காக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அதன் முன்னைய அறிக்கைகளில் இலங்கையை பல தடவைகள் குறைகூறியிருந்தாலும் அதன் ஆணைக்குழுக்கள் மீது வெளிப்படையாக அவநம்பிக்கையை வெளியிட்டது இதுவே முதற்தடவையாக இருக்கவேண்டும்.

அதுவும் குறிப்பாக தென்னாபிரிக்க பாணியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைளை முன்னெடுத்துவரும் வேளையில் பிரதி உயர்ஸ்தானிகரிடம் இருந்து இத்தகைய கருத்து வந்திருப்பது கவனிக்கத்தக்கது.

போர்க்கால உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு, உடலாகம ஆணைக்குழு, மகாநாம திலகரத்ன ஆணைக்குழு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போன்றவற்றின் அறிக்கைகளை அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தத் தவறிய அனுபவங்களே வாய்மூல அறிக்கையில் அவ்வாறு கருத்தை அவர் வெளியிட்டதற்கான காரணமாக இருந்திருக்கவேண்டும்.

உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பின்னரான உடனடிக் காலப்பகுதியில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கேட்டிருந்தது. ஆனால், அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தானே நியமித்த அந்த ஆணைக்குழுவை அலட்சியம் செய்ததையே நாம் கண்டோம்.

அதேவேளை, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு இலங்கையில் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது இது முதற்தடவையல்ல. மனித உரிமைகள் பேரவையிடமிருந்து வந்த நெருக்குதல்கள் காரணமாக 2015, 2018 2022ஆம் ஆண்டுகளில் அத்தகைய ஆணைக்குழுவை அமைக்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அதை சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை.

மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத் தொடருக்கு முன்னதாக நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைத் திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிவித்தது. அதில் பிரதான அம்சமாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனையை காணக்கூடியதாக இருந்தது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு  மூன்று வாரங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையொன்றில் தேசிய காணி ஆணைக்குழு அமைத்தல், தேசிய காணிக்கொள்கை ஒன்றை வகுத்தல், காணாமல்போனோர் விவகார அலுவலகத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துதல் போன்ற பல யோசனைகள் நடவடிக்கை திட்டத்தில் உள்ளடங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இவற்றில் எதுவுமே புதியதில்லை. இந்த யோசனைகள் நிகழ்ச்சி நிரலில் நீண்டகாலமாக இருந்துவருகின்ற போதிலும், எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களை சமாளிப்பதற்கான தற்காலிக தேவை எழுகின்ற சந்தர்ப்பங்களில் மாத்திரமே உண்மை மற்றும் ஆணைக்குழுவை அமைக்கும் யோசனை வெளிக்கிளம்பும். பிறகு அது மறக்கப்பட்டுவிடும் என்பதே அனுபவரீதியாக நாம் கண்டது.

சிறந்த யோசனைகளை நடை முறைப்படுத்துவதில் இலங்கையில் காணப்படும் தயக்கத்துக்கு  இனத்துவ மற்றும் அரசியல் நிலைமைகளே பிரதான காரணமாகும். இலங்கையில்  உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றில் இருந்து அனுகூலமான பயன் விளைவுகளைப் பெறுவதற்கு உகந்தவையாக  அந்த நிலைமைகள் இல்லை. 30 வருடகால போரின்போது சரியானது எது பிழையானது எது என்பதில் இலங்கைச் சமூகம் மிகவும் கடுமையாக பிளவடைந்து காணப்படுகிறது. பெரும்பான்மையான சிங்கள – பௌத்தர்களைப் போலன்றி சிறுபான்மை இனத்தவர்கள் குறிப்பாக தமிழர்கள் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று கோருகிறார்கள். தென்னாபிரிக்காவில் முயற்சிக்கப்பட்டதைப் போன்று வெறுமனே  பழைய காயங்களைக் குணப்படுத்தி வழமைநிலையை ஏற்படுத்தும் முயற்சிகளை அவர்கள் விரும்பவில்லை என்று கொழும்பில் இருந்து இயங்கும் மூத்த இந்திய பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான பி.கே. பாலச்சந்திரன் கூறுகிறார்.

தென்னாபிரிக்காவை இலங்கையுடன் ஒப்பிடுவதில் உள்ள மிகப்பெரிய பிரதிகூலங்களில் ஒன்று  ஒரு குறிப்பிட்ட திசையில் மக்களை வழிநடத்தக்கூடிய பேராளுமை கொண்ட தேசியத்தலைவர் ஒருவர் இல்லாதமையாகும். தென்னாபிரிக்காவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செயற்பட்ட 1995 – 2003 காலப்பகுதியில் அது ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, அதிமேற்றிராணியார் டெஸ்மண்ட் டுட்டு போன்ற தொலைநோக்குடைய தலைவர்களின்  கண்காணிப்பில் இருந்தது. டுட்டுவே ஆணைக்குழுவின் தலைவராக இருந்தார் என்று பாலச்சந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.

இலங்கையில் அமைக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு தலைவராக சகல மக்களுக்கும் ஏற்புடைய ஒருவரை கண்டுபிடிப்பது சிரமம் என்பதை நீதியமைச்சர் ஏற்கெனவே ஒத்துக்கொண்டார் என்பது குறி்ப்பிடத்தக்கது.

அதேவேளை, இலங்கையின் இன உறவுகள் நிலைவரத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது  உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று பழைய காயங்களை குணப்படுத்துவதை விடவும் அவற்றை மேலும் ஆழப்படுத்தப்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் பாதுகாப்புப் படைகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு விசாரணையும் சமூகத்தில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் என்றும் வேறு சில அவதானிகள் கருதுகிறார்கள்.”

தற்போதைய சூழ்நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றின் வகிபாகத்தை மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்று கூறும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கலாநிதி ஜெகான் பெரேரா கடந்த கால தவறுகள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்யுமுகமாக இலங்கையிலும் வெளிநாடுகளிலும் கடந்த காலம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய பெரிய தேவை இருக்கிறது என்று கடந்தவாரம் தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்குப் பதிலைத் தரவல்ல ஒரு மந்திர மருந்து அல்ல என்பது அவரது நிலைப்பாடாக இருக்கிறது.

ஆணைக்குழுவுக்கு மிகவும் கூடுதலான அளவுக்கு நடைமுறைச் சாத்தியமான மாற்றுத் தெரிவுகளாக பின்வரும் நடவடிக்கைகளை பாலச்சந்திரன் முன்வைக்கிறார்;

“வழக்கு தொடரப்படாமல் பல வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை விடுதலை செய்தல்; அட்டூழியங்கள் தொடர்பில் நம்பகமான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வோரை தண்டித்தல்; பாதுகாப்புப் படைகளினால் அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதுடன் சந்தேகத்துக்கிடமான நோக்கங்களுக்காக அரசாங்க திணைக்களங்களினால் காணிகள் சுவீகரிக்கப்படுவதை தடுத்தல்; வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பொருளாதாரத்தை ஊக்குவித்தல்.”

வீரகத்தி தனபாலசிங்கம்