Photo, @anuradisanayake

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சகல இனங்களையும் சேர்ந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றே நிரந்தரமான தீர்வாக அமையும் என்று பேசவும் கேட்கவும் நன்றாகத்தான்  இருக்கும். எந்த இனத்தவருக்கும் பாதிப்பு இல்லாதவகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் உயரிய நோக்குடன் கூறப்படுகின்ற யோசனையாகவும் தெரியும். அதை எதிர்த்து பெரிதாக வாதிடுவதும் கஷ்டமானதாக தோன்றும். ஆனால், அவ்வாறு  நடைமுறையில் சாத்தியமானதாக உலகில் எங்குமே முன்னுதாரணம் ஒன்றை எவராலும் கூறமுடியாது.

அந்தக் கருத்தை எமது நாட்டில் எத்தனையோ தலைவர்கள் முன்னர் கூறினார்கள். தற்போது உள்ள தலைவர்களும் கூறுகிறார்கள். இந்த வரிசையில் இறுதியாக தன்னைச் சேர்த்துக்கொண்டிருப்பவர் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) இன் தலைவரான அநுரகுமார திசாநாயக்க.

ஜே.வி.பியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவராகவும் இருக்கும் திசாநாயக்க தென்னிலங்கை செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது தென்னிலங்கை மக்களால் நிராகரிக்கப்படும் எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என்றும் அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தின் மூலமோ அல்லது அதை மாற்றியமைப்பதன் மூலமோ தமிழர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வை வழங்கமுடியாது என்றும் பதிலளித்ததாக ஈழநாடு கடந்த வெள்ளிக்கிழமை முன்பக்கத்தில் தலைப்புச் செய்தி வெளியிட்டதை காணக்கூடியதாக இருந்தது.

சகல இனங்களையும் சேர்ந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலமாகவே தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படும். இதனை தமிழர்களின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனும் கூறியிருக்கிறார். எனவே, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என்றும் திசாநாயக்க தெரிவித்ததாக அந்தச் செய்தி கூறியது.

கடந்த வருடத்தைய ‘அறகலய’ மக்கள் போராட்டத்துக்குப் பின்னரான அரசியல் சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்திக்கு தென்னிலங்கை மக்களின் ஆதரவு பெருமளவு அதிகரித்திருப்பதாக நம்பப்படுகிறது. அண்மைய பல கருத்துக்கணிப்புகளின் முடிவுகளும் இதை உறுதிப்படுத்தின. நாடாளுமன்ற தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்கும் இடையில் மிகவும் நெருக்கமான போட்டி நிலவும் என்றும் அந்தக் கருத்துக்கணிப்புகள் கூறின.

இதனால் மிகுந்த உற்சாகமடைந்திருக்கும் திசாநாயக்கவும் அவரது தோழர்களும் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை தங்களிடம் ஒப்படைத்துப் பார்க்குமாறு தங்களது பேரணிகளில் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள். அத்துடன், தங்களுக்கு இருக்கக்கூடிய மக்கள் ஆதரவை நிரூபிப்பதற்கான உடனடி வாய்ப்பாக உள்ளூராட்சி தேர்தல்களை நோக்கும் அவர்கள் அதன் காரணத்தினாலேயே தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை கடுமையாக எதிர்க்கிறார்கள் எனலாம்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல்கள் மூலம் என்றாலும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதை முதலாளித்துவ அரசியல் அதிகாரவர்க்கம் எவ்வாறு நோக்கும்? எத்தகைய சூழ்ச்சித்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதைத் தடுக்க முயற்சிக்கும் என்பது பிறிதொரு கட்டுரையில் விரிவாக ஆராயப்படவேண்டிய விடயம்.

ஆனால், மக்களின் ஆதரவுடன் ஆட்சியதிகாரத்தை ஜனநாயக தேர்தல்கள் மூலமாக கைப்பற்றக்கூடிய நிலையை நோக்கி தங்களது அரசியல் பயணம் விரைவாக நகருகிறது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கடுமையாக நம்புகிறார்கள். அதன் காரணத்தினால்தான் தங்களது ஆட்சியில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்து நாட்டின் ஏனைய பிரச்சினைகளுக்கு மாத்திரமல்ல, நீண்டகால இனப்பிரச்சினைக்கும் நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என்ற அவர்களின் பேச்சுக்களை நோக்கவேண்டும்.

இதுகாலவரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கு அரசாங்கங்கள் மேற்கொண்ட சகல முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்த எதிர்மறையான ஒரு வரலாற்றை ஜே.வி.பி. கொண்டிருக்கிறது. அந்தப் போக்கில் எந்த மாறுதலையும் அவர்களிடம் இபபோதும் காணமுடியவில்லை.

1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை அடுத்து மாகாண சபைகளை அறிமுகப்படுத்துவதற்குக் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தனது அரசாங்கம் கட்டங்கட்டமாக முன்னெடுக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழாவில் வைத்து அறிவித்ததை அடுத்து அதற்கு எதிராக தென்னிலங்கையில் கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகளிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்புக்குப் பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகள் அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான பிரதான அரசியல் சக்திகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டின.

இலங்கையின் அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் 37 வருடங்களாக இருந்து வருகின்ற போதிலும் அதற்கு எதிராகவே பொதுவில் சிங்கள அரசியல் சமுதாயம் நிற்கிறது என்பதை  ஜனாதிபதியின் அறிவிப்பின் பின்னரான நிலைவரங்கள் உணர்த்துகின்றன. இந்தியாவுடனான சமாதான உடன்படிக்கையை அடுத்து கொண்டுவரப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காகவே 13ஆவது திருத்தம் இன்றுவரை நிலைத்து நிற்கிறது. அல்லாவிட்டால் எப்போதோ சிங்கள தலைவர்கள் அதை நீக்கியிருப்பார்கள்.

சமாதான உடன்படிக்கையை எதிர்த்து விஜேவீர தலைமையில் ஜே.வி.பி. 1980 களின் பிற்பகுதியில் நாட்டில் இரத்தக்களரியை ஏற்படுத்திய போதிலும் பின்னர் வந்த தலைவர்களின் கீழ் அந்தக் கட்சி குறிப்பாக 1990 களின் நடுப்பகுதியில் இருந்து மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டுவந்தது. அண்மைக்காலமாக அதன் புதிய தலைவர்கள் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக பெரிதாக பேசியதுமில்லை.

திசாநாயக்க கூட கடந்த வருட பிற்பகுதியில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் தமிழர்கள் தங்களுக்கான ஒரு தீர்வாக அந்தத் திருத்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்றால் அது குறித்து தங்களுக்கு பிரச்சினை இல்லை என்று கூறியிருந்தார். அதேவேளை, ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அறிவிப்பையடுத்து 13ஆவது திருத்தம் தொடர்பில் மூண்ட அரசியல் விவாதங்களுக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய அந்தத் திருத்தம் குறித்து தங்கள் கட்சிக்குள் விவாதம் இருக்கின்ற போதிலும் ஏற்கெனவே தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டிருப்பதால் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

ஆனால், அந்தத் திருத்தத்துக்கு எதிராக தென்னிலங்கையில் பரவலாக கிளம்பிய எதிர்ப்பு அலையில் இருந்து வேறுபட்ட ஒரு நிலைப்பாட்டை எடுப்பது தங்களுக்கு சிங்கள மத்தியில் மக்கள் வளர்ந்துவரும் ஆதரவுக்குப் பாதிப்பாக  வந்துவிடும் என்று கருதிய காரணத்தினால் போலும் அதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் வெளிப்படையாக பேசத்தொடங்கினார்கள். அதன் மூலமாக அவர்கள், பல்வேறு போதாமைகள், குறைபாடுகளுக்கு மத்தியிலும் அதிகாரப்பரவலாக்கத்துக்கான ஒரேயொரு சட்ட ஏற்பாடாக நிலைத்திருக்கும் 13ஆவது திருத்தத்தையும் ஒழித்துவிடவேண்டும் என்று கங்கணங்கட்டி நிற்கும் கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகளையே அவர்கள் இறுதியில் வலுப்படுத்தியிருக்கிறார்கள்.

அதேவேளை, தங்களது ஆட்சியில் புதிய அரசிலமைப்பின் மூலம் இனப்பிரச்சினைக்கு சகல இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் காண்பது குறித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கூறுவது கையில் இருக்கும் பிரச்சினையை கையாள்வதில் இருந்து நழுவும் ஒரு தந்திரோபாயமே.

தென்னிலங்கை மக்களினால் நிராகரிக்கப்படும் எந்தவொரு தீர்வும் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாது என்று கூறும் திசாநாயக்க தனக்கு துணையாக மூத்த அரசியல் தலைவர் சம்பந்தன் அவர்களை  இழுக்கிறார். சிங்கள மக்களும் ஆதரிக்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வே நிலையானதாக இருக்கமுடியும் என்று சம்பந்தன் அடிக்கடி கூறுவது சிங்கள மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு பரஸ்பர விட்டுக்கொடுப்புடன் தீர்வைக் காண்பதற்கு தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை விளக்கவே தவிர சிங்கள மக்கள் எதிர்ப்பதனால் எமக்கு எந்தத் தீர்வு வேண்டாம் என்று அறிவிப்பதற்கல்ல.

உள்நாட்டுப் போரின் விளைவுகளினால் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அரசியல் உரிமைகள் பற்றிய பிரச்சினை என்று வரும்போது இன அடிப்படையில் சிங்கள மக்கள் பாதிக்கப்படவில்லை. அவ்வாறு பாதிக்கப்படாத மக்களின் இணக்கத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வைக் காண்பது என்பது அதுவும் இலங்கையின் இதுகாலவரையான அனுபவங்களின் அடிப்படையில் நோக்கும்போது நடைமுறையில் சாத்தியப்படுவதற்கில்லை.

இதுகாலவரையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்றால் 1957 பண்டா  – செல்வா ஒப்பந்தம், 1965 டட்லி  – செல்வா ஒப்பந்தம் தொடக்கம்  மைத்திரிபால சிறிசேன – விக்கிரமசிங்க தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கம் முன்னெடுத்த புதிய அரசியலமைப்பு வரைவு முயற்சிவரையானவையே அவை.

இவற்றில் எதை தென்னிலங்கை மக்கள் ஆதரித்தார்கள்? அல்லது அந்த முயற்சிகளுக்கு அந்த மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு எந்த சிங்கள தலைவர் மானசீகமாக முயற்சிசெய்தார்? எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுத்து தாங்கள் எடுத்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தும் துணிவு எந்தத் தலைவருக்கு வந்தது? வரவில்லை. மக்களின் தவறான உணர்வுகளுக்கு அல்லது கருத்துக்களின் பின்னால் இழுபட்டுச்செல்வதற்கு தலைவர்கள் தேவையில்லை. பிழையான சிந்தனைகளைச் சுட்டிக்காட்டி அவற்றினால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை மக்களுக்கு விளக்கி சரியான மார்க்கத்தில் அவர்களை வழிநடத்திச் செல்வதற்கே தலைவர்கள் தேவை. அத்தகைய பாத்திரத்தை வகிக்க இதுவரையில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த எந்த சிங்கள தலைவருக்கும் அரசியல் துணிவாற்றல் வரவில்லை என்பதே வரலாறு.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திசாநாயக்க தன்னை அந்தத் தலைவர்களிடம் இருந்து வேறுபட்டவராக காட்டிக்கொள்ளவேண்டுமே தவிர, மக்களின் உணர்வுகளின் தவறான உணர்வுகளுக்கு பின்னால் இழுபட்டுச் சென்ற பாரம்பரிய சிங்கள அரசியல் தலைவர்களின் பாதையிலேயே செல்லக்கூடாது.

தங்களது கட்சி சமகால சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்குப் பொருத்தமான முறையில் அதன் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் மாற்றிக்கொண்டுள்ளதாக அண்மையில் திசாநாயக்க கூறியிருந்தார். ஆனால், இனப்பிரச்சினை விவகாரத்தில் அவர்களின் நிலைப்பாட்டில் மாறுதல் ஏற்பட்ட அறிகுறியைக் காணமுடியவில்லையே.

இனப்பிரச்சினைக்கு உருப்படியான அரசியல் தீர்வொன்றைக் காணத்தவறியதால் நாடும் மக்களும் பல தசாப்தங்களாக அனுபவித்த அவலங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு முன்னைய தவறான போக்குகளில் இருந்து தென்னிலங்கை மக்களை விடுவிக்கவேண்டிய பொறுப்பை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உணர்ந்து செயற்படவேண்டும். தேர்தல் அரசியல் என்று வரும்போது நாளடைவில்  இயல்பாகவே சந்தர்ப்பவாத அணுகுமுறைகளை கடைப்பிடிக்கவேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிடுகிறது.

இதில் இருந்து விடுபடுவதற்கு அடுத்த தேர்தலுக்கு அப்பால் நாட்டினதும் மக்களினதும் எதிர்கால நலன்களைப் பற்றிய மானசீகமான அக்கறையுடன் கூடிய அரசியல் நேர்மையும் துணிவாற்றலும் தேவை. அவற்றை வரவழைத்துக்கொள்வதற்கு தயாரில்லாத தலைவர்களினால் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடமுடியாது.

வீரகத்தி தனபாலசிங்கம்