Photo, THE TIMES OF INDIA

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்புக்கு அது நடைமுறையில் இருந்துவரும் நான்கரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட இருபதுக்கும் அதிகமான திருத்தங்களில் வேறு எதுவும் 13ஆவது திருத்தம் போன்று பெரும் சர்ச்சைக்குள்ளாகியது இல்லை என்று இந்தப் பத்தியில் ஏற்கெனவே சில தடவைகள்  குறிப்பிட்டிருந்தோம்.

கடந்த வருடம் நடுப்பகுதியில் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வைக் காணப்போவதாகக் கூறிக்கொண்டு 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ரணில் விக்கிரமசிங்க பேசத் தொடங்கிய நாள் முதல் அது தொடர்பில் அரசியல் சர்ச்சை தீவிரமடையத்தொடங்கியது. அரசியலமைப்பில் நீண்டகாலமாக  இருந்துவரும் ஒரு திருத்தத்துக்கு எதிராக இலங்கையில் கிளம்பியிருக்கின்றதைப் போன்ற எதிர்ப்பை அண்மைய வரலாற்றில் உலக நாடுகளில் வேறு எங்கும் ஒரு அரசியலமைப்பு ஏற்பாடு சந்தித்ததாக   நாம் இதுவரை அறியவில்லை. 

அரசியலமைப்பு மீறப்படுவதற்கு எதிராகவே போராட்டங்கள் நடத்தப்படவேண்டும். ஆனால், எமது நாட்டில் நீண்டகாலமாக தொடரும் அரசியலமைப்பு மீறல் ஒன்றை தொடருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி போராட்டங்கள் இடம்பெறுகின்றன. ஆசியாவின் பழமைவாய்ந்த ஜனநாயக நாடுகளில் ஒன்றின் அரசியல் சமுதாயத்தின் இனவாத அடிப்படையிலான கோணல் போக்கின் வெளிப்பாடு இது.

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு புறப்பட்ட ஜனாதிபதி விக்கிரமசிங்க இப்போது அதன் அதிகாரங்களைக் குறைக்கும் ஒரு செயன்முறையை, அறிந்தோ அறியாமலோ முடுக்கிவிட்டிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்.  

மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரங்களை நீக்கி அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்தொருமிப்பை எதிர்பார்த்து அரசியல் கட்சிகளிடம் அவர் ஆகஸ்ட் 15 இற்கு முன்னர் யோசனைகளைக்  கோரியிருக்கும் நிலையில், சில கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் காணி அதிகாரம் குறித்தும் கேள்வியெழுப்பத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.

கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரை தொடர்பில் முன்கூட்டியே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டுவந்து கடந்த மாத இறுதியில் (ஜூலை 26) அவர் கூட்டிய நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டில் (சர்வகட்சி மகாநாடு) அவர் வெளியிட்ட கருத்துக்களுடன் ஒப்பிடும்போது சபையில் ஆற்றிய உரை சாராம்சத்தில் பெரிய வித்தியாசத்தைக் கொண்டிருக்கவில்லை எனலாம்.

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக கூறிய விக்கிரமசிங்க ஒரு நாடு என்ற வகையில் நாம் முன்னோக்கிச் செல்வதற்கு இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டார். நாட்டின் அபிவிருத்திக்கும் எதிர்காலத்துக்கும் பொருத்தமான முறையில் அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியம் என்று கூறிய அவர் திறந்த மனதுடனான விரிவான  பேச்சுவார்த்தைகள், கலந்தாலேசனைகள் மூலம் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்தொருமிப்புக்கு வந்தால் மாத்திரமே அதைச் சாதிக்கமுடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஜூலை 26 சர்வகட்சி மகாநாடு பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் குறிக்கோள் தொடர்பில் அன்றைய தினம் கருத்தொருமிப்பு எதுவும் காணப்படவில்லை என்பதையும் அதிகாரப்பரவலாக்கப் பொறிமுறை குறித்து எந்தக் கருத்தும் வெளிப்படையாக முன்வைக்கவில்லை என்பதையும் ஒத்துக்கொண்டார்.

சில கட்சிகள் அவற்றின் கருத்துக்களை முன்வைப்பதற்கு தயக்கம் காட்டுகின்றன. வேறு சில கட்சிகள் அவநம்பிக்கையுடனேயே மகாநாட்டுக்கு வந்தன. கடந்த கால சர்வகட்சி மகாநாடுகளின் எதிர்மறையான அனுபவங்கள் அதற்கு காரணமாக இருக்கலாம். இனிமேல் இந்த நிலைமையை மாற்றுவோம் என்று கூறிய விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சகல  செயற்பாடுகளையும் எதிர்ப்பதே எதிர்க்கட்சியின் பங்கு என்று நோக்கும் மரபில் இருந்தும் எதிர்க்கட்சியின் கருத்துக்களை பொருட்படுத்தாமல் அரசாங்கம் செயற்படும் வழக்கத்தில் இருந்தும் விலகியிருப்போம் என்று ஒரு புதிய அரசியல் கலாசாரம் பற்றியும் பிரசங்கம் செய்தார்.

நாடாளுமன்றத்தின் இணக்கப்பாட்டுடன் மாகாண சபைகள் சட்டங்களை மீளாய்வு செய்வதற்கும் புதிய சட்டங்களைக் கொண்டு வருவதற்குமான திட்டங்கள் குறித்து பேசிய அவர் உத்தேச மாற்றங்களில் வாக்களிப்புக்கு மாவட்ட விகிதாசார முறையைக் கடைப்பிடித்தல்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வகைசெய்தல், பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக அல்லது அதற்கும் கூடுதலாக அதிகரித்தல் போன்ற நோக்கங்கள் அடங்குவதாக குறிப்பிட்டார்.

இலங்கை அரசியல் விவகாரங்கள் குறித்து இடையறாது எழுதிவரும் இந்திய மூத்த அரசியல் ஆய்வாளரான என். சத்தியமூர்த்தி ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரை குறித்து கருத்து வெளியிடுகையில், “13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது நாட்டின் அபிவிருத்திக்கும் எதிர்காலத்துக்கும் அவசியம் என்று கூறிய விக்கிரமசிங்க அதை எவ்வாறு என்று விளக்கிக் கூறவில்லை. அதேபோன்றே அதன் நடைமுறைப்படுத்தலுக்கு அரசியலமைப்பு திருத்தங்களும் மாகாண சபைகள் சட்டங்களில் மாற்றங்களும் தேவை என்று குறிப்பிட்டார். ஆனால், அது குறித்தும் விளக்கமாகக் கூறவில்லை. அவர் இதுவரையில் கூறியதெல்லாம் மாகாண சபைகள் பொலிஸ் அதிகாரங்களை எதிர்பார்க்கமுடியாது என்பதேயாகும். ஆனால், மாகாண சபைகளுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களே இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையின் மையக்கூறாகவும் 13ஆவது திருத்தத்தின் அடிப்படையாகவும் அமைந்தன” என்று கூறியிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, விக்கிரமசிங்க தனதுரையில், ” கடந்த 36 வருடங்களாக 13ஆவது திருத்தத்தின் மூலமாக மாகாண சபைகளை நடைமுறைப்படுத்துவதில் நாம் வெற்றி கண்டிருக்கின்றோமா? அல்லது அது ஒரு தோல்வியாகப் போய்விட்டதா? இந்த  விளைவுகளுக்கும் பங்களிப்புச் செய்த காரணிகள் எவை?” என்று ஏதோ எதுவும் அறியாதவர் போன்று கேள்விகளை வேறு கிளப்பியிருக்கிறார்.

இப்போது இறுதியாக 13ஆவது திருத்தத்தை அதன் அதிகாரங்களில் குறைப்புச்செய்தாவது நடைமுறைப்படுத்துவதை முற்றுமுழுதாக நாடாளுமன்றத்தின் பொறுப்பில் ஜனாதிபதி விட்டுவிட்டார்.

நாடாளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்ட காரணத்தினால் மாத்திரமல்ல, முன்னைய எந்தவொரு ஜனாதிபதியையும் போன்று இல்லாமல் நாடாளுமன்றத்தில் அடிக்கடி உரையாற்றிவரும் ஜனாதிபதியாகவும் விக்கிரமசிங்க விளங்குவதால் அவரை ‘நாடாளுமன்ற ஜனாதிபதி’ என்று அரசியல் விமர்சகர்கள் சிலர் வர்ணிக்கிறார்கள். அவரும் சட்டரீதியாக தன்னால் செய்யக்கூடிய பல கடமைகளையும் கூட நாடாளுமன்றத்தின் பொறுப்பில் விட்டுவிட்டு தனக்கு சேதம் இல்லாத ஒரு வலயத்திற்குள் நின்றுகொள்கிறார்.

இந்நிலையில், ராஜபக் ஷகளின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தற்போதைய நாடாளுமன்றத்தினால் 13ஆவது திருத்தம் தொடர்பில் காணப்படக்கூடிய கருத்தொருமிப்பின் இலட்சணம் எவ்வாறிருக்கும் என்பதை விளங்கிக்கொள்வதில் எவருக்கும் சிரமம் இல்லை.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, 13ஆவது திருத்தம் தொடர்பில் கிளம்பியிருக்கும் சர்ச்சையில் ஒரு புறத்தில்  இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண விரும்புகின்ற ஒரு தலைவராகவும்  அதேவேளை மறுபுறத்தில் சிங்கள தேசியவாத சக்திகளின் அக்கறைகளை கருத்தில் எடுத்து செயற்படுகின்ற தலைவராகவும் தன்னை காட்சிப்படுத்தக்கூடிய அணுகுமுறைகளை கடைப்பிடிக்கிறார். 

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் சிங்கள மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க எவரும் இல்லை. விக்கிரமசிங்கவும் கூட தனது நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கு முயற்சிக்கப்போவதில்லை. அதேவேளை அந்தத் திருத்தத்துக்கு எதிரான சக்திகளே முன்னெப்போதையும் விட வலுவடைந்துகொண்டிருக்கின்றன. 

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள சிங்கள கட்சிகளில் எதுவுமே கருத்தொருமிப்பைக் காண ஒத்துழைப்பதற்குப் பதிலாக அடுத்துவரக்கூடிய தேர்தல்களில் சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக முன்னரையும் விட கூடுதலான அளவுக்கு சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிரான தேசியவாத நிலைப்பாடுகளை எடுப்பதிலேயே அக்கறை காட்டும். 

13ஆவது திருத்தத்தை அரசியலமைப்பில் இருந்து முற்றாக நீக்கிவிடவேண்டும் என்ற கோரிக்கை தென்னிலங்கையில் ஓங்கி ஒலிக்கத்தொடங்கிவிட்டது. அடுத்துவரக்கூடிய எந்தவொரு தேர்தலிலும் தென்னிலங்கையில் சிங்கள தேசியவாத அரசியல் நிகழ்ச்சி நிரலே முன்னுரிமை பெறக்கூடிய சூழ்நிலை தோற்றுவிக்கப்படுகிறது. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இராணுவ அதிகாரிகளை 13ஆவது திருத்தத்துக்கு எதிராக தூண்டிவிடும் செயற்பாடுகளையும் சிங்கள தேசியவாத அரசியல் சக்திகள் முன்னெடுக்கின்றன. 

அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிப்பது நாட்டுப்பிரிவினையை தடுக்க தங்கள் உயிர்களை தியாகம் செய்த படைவீரர்களுக்கு செய்யும் துரோகம் என்று கூறி மீண்டும் அரசியலில் இராணுவவாதப் போக்கிற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் முயற்சிகள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காண்பதற்கு ஆதரவான சக்திகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக அதற்கு எதிரான சக்திகள்   முழுவீச்சில் களத்தில் இறங்குவற்கு வாய்ப்பான சூழலையே இறுதியில்  தென்னிலங்கையில் உருவாக்கியிருக்கின்றன. அது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலும்  அவருக்குப் பாதகமாகவே அமையக்கூடும்.

வீரகத்தி தனபாலசிங்கம்