படம் | SILAN MUSLIM

மத நல்லிணக்கத்தையும், தேசிய ஐக்கியத்தையும் பிரதானமாகக் கொண்டு கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிறைவுபெற்றது. வரலாற்றில் என்றும் இல்லாதவாறு தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் ஜனாதிபதி ராஜபக்‌ஷவிற்கு எதிராகத் தமது வாக்குகளைப் பயன்படுத்தினர். தமிழ், முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை மைத்திரிபால சிறிசேனவுக்கே அள்ளிக் கொடுத்தனர்.

30 வருடகால யுத்தம் முடிவடைந்த பின்னர் வடபுலத்தில் குறிப்பிட்ட பௌதீக அபிவிருத்தி ஏற்பட்டிருந்தாலும் மக்களின் இதயங்கள் வெல்லப்படவில்லை என மைத்திரிபால சிறிசேன தேர்தல் மேடைகளில் முழங்கினார். தமிழ், முஸ்லிம் மக்கள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதையிட்டு தனது அரசு கவனம் செலுத்தும் என்றும் அவர் பிரகடனப்படுத்தினார்.

அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஆளுநர் பதவிகளை வகித்த இராணுவ அதிகாரிகளுக்குப் பதிலாக சிவில் அதிகாரிகளை மைத்திரிபால சிறிசேன நியமித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தரப்பினரும் இதனை வரவேற்றனர்.

ஆனால், அரச தரப்பைச் சேர்ந்த ஒரு சிலர் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தடையாகச் செயற்படுவதாகத் தோன்றுகிறது. மஹிந்த ராஜபக்‌ஷ அரசின் கீழ் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு என ஒரு புதிய அமைச்சு நடைமுறையில் இருந்தது. மேற்படி அமைச்சுக்குப் பொறுப்பாக வாசுதேவ நாணயக்கார செயற்பட்டார். ஆனால், புதிய அரசு அமைச்சுக்களை உருவாக்கும்போது தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் கடமைகள் பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி, பௌத்த சாசன அமைச்சில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் கருஜயசூரிய இந்த அமைச்சுக்குப் பொறுப்பாக இருக்கிறார்.

2010.11.25ஆம் திகதிய 1681/3 வர்த்தமானி அறிவித்தலின்கீழ் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு உருவாக்கப்பட்டது. அரச கரும மொழிகள் திணைக்களம், அரச கரும மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் என்பன இந்த அமைச்சின் கீழ் செயற்பட்டன. இந்த அமைச்சின் விடயப் பரப்பை உள்ளடக்கக்கூடிய வகையில் போதிய நிதிவளங்கள் கிடைக்காத நிலையிலும்கூட அமைச்சர் வாசுதேவ குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்களை அமுல்படுத்தினார் என ஏற்றுக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக அரச நிறுவனங்களில் இருமொழிக் கொள்கையை அமுல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், மும்மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தியது. 30 ஆண்டுகளாக நீடித்த யுத்தத்திற்கு மொழிப் பிரச்சினை ஒரு பிரதான காரணியாக அமைந்தது. தமிழ்மொழி பேசுவோர் தமிழ் மொழியில் கருமமாற்றக்கூடிய பல ஏற்பாடுகள் தேசிய மொழிகள் அமைச்சின் ஊடாக அமுலாக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளை மிகப் பரந்துபட்ட முறையில் செயற்படுத்துவதற்கான வசதிகளைத் தொடர்வதே தற்போதைய அரசு மேற்கொள்ள வேண்டியிருந்தது.

பிரஜைகளின் மொழி உரிமை மீறப்படுவது தொடர்பான முறைப்பாடுகளைச் செய்வதற்கு அமைச்சு 1956 என்ற உடனடித் தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்திருந்தது. செய்யப்படும் முறைப்பாடுகளையும், அதற்குரித்தான நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் சிற்சில குறைபாடுகள் காணப்பட்டாலும் இது காலத்திற்கு உசிதமான நடவடிக்கைகள் எனலாம்

அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் ஊடாக நீதியை நிலைநாட்டுவதற்கு முறைப்பாடுகள் செய்த பின்னர் விசாரணை நடவடிக்கைகளுக்கு கொழும்பை நோக்கி வரவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் இருந்தது. எனவே, கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்போது மாவட்ட மட்டத்தில் அரசகரும மொழி ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இன்றைய அரசு, ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக ஒரு பொறிமுறையை அமைத்திருக்க வேண்டும். ஆனால், அது இதுவரை உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை. அரசகரும மொழிகள் ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்களை புதிய அரசு இன்றுவரை நியமிக்கவில்லை. அது இன்று செயலிழந்த நிலையில் உள்ளது. தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின் நடவடிக்கைகள் மத்திய அரசினால் அமுலாக்கப்பட்டாலும் அந்த விடயத்திற்கு உரித்தான நிறுவனக் கட்டமைப்புக்கள் மாகாண சபைகளினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எனவே, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு விடயம், மாகாண சபைகளின் விடயமாகவும் உள்வாங்க வேண்டியது இன்றைய கட்டத்தில் இன்றியமையாததாகும். இது விடயமாக ஒரு பரந்துபட்ட கலந்துரையாடல் இடம்பெற வேண்டும்.

முன்னைய தேசிய மொழிகள் அமைச்சின் கீழ் சுமார் 2000 மொழிச் சங்கங்கள் பதிவுசெய்யப்பட்டன. இம்மொழிச் சங்கங்கள், குறித்த பிரதேசங்களில் சிவில் சமூகத்துடன் ஒருங்கிணைந்து, மொழி உரிமைகளை வென்றெடுப்பதற்கான பல பிரயோசனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டன. சிங்களம், தமிழ் ஆகிய அரசகரும மொழிகளை சாதாரண மக்களுக்கு அறிமுகம் செய்து கற்பித்தல், அரச நிறுவனங்களோடு மொழி உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல்கள், பேரம்பேசல்கள், அறிவூட்டல் நிகழ்சிகள் என்பன மூலம் புரிந்துணர்வு கொண்ட ஒரு சூழமைவின் கீழ், இரு மொழிக் கொள்கை ஓரளவேனும் நடைமுறைப்படுத்தப்பட்டது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இயங்கிய மொழிச் சங்கங்கள் சட்டரீதியான இடையீடுகளையும் மேற்கொண்டு, பிரஜைகளின் மொழி உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தன.

ஆனால், தற்போதைய அரசு இம்மொழிச் சங்கங்கள் தொடர்பாக எதுவிதமான முன்னேற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அரசகரும மொழிகளை சாதாரண மக்களுக்குப் போதிக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் தற்போது செயலிழந்துள்ளன. தற்போதைய நல்லாட்சிக்கான அரசு மேற்படி மொழிச்சங்க பொறிமுறையை மேலும் வலுப்படுத்தி இயக்குவித்திருக்க வேண்டும். பொதுநிருவாக விடயத்திற்கு மேலதிகமாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் பௌத்த சாசன விடயம் ஒரே அமைச்சரின் கீழ் கொண்டுவருவதன் மூலம் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின் நடவடிக்கைகள் செயலிழந்துள்ளன. நல்லாட்சியையும், ஜனநாயகத்தையும் நோக்கமாகக் கொண்டு செயற்படும் ஓர் அரசிற்கு இது பொருத்தமுடையதாகாது.

தேசிய மொழிகள் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு அமைச்சரின் கீழ் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களதும், சுயாதீன அறிவு ஜீவிகளினதும் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் அரசகரும மொழிகளின் அமுலாக்கம் குறித்தும் அக்கொள்கை பற்றியும் அடிக்கடி கலந்துரையாடப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அரசகரும மொழிக் கொள்கையின் அமுலாக்கத்தின் முன்னேற்றம், நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் புதிய யோசனைகள் என்பன இந்த நிபுணர் குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. இந்த மீளாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கையாகும். அமைச்சர் நேரடியாகவே இக்கலந்துரையாடலில் தனது சக அதிகாரிகளுடன் கலந்துகொண்டு மொழிக் கொள்கையை அமுலாக்குவதில் அடிக்கடி இடையீடு செய்தார். ஆனால், அவை அனைத்தும் தற்போது செயலிழந்த நிலையிலேயே உள்ளன.

சமூக ஒருங்கிணைப்பு ஏற்பட வேண்டுமாயின் அதற்கென அர்ப்பணித்த நிகழ்ச்சித்திட்டம் ஊடாக மாத்திரமே அது சாதத்தியமாகும். வெறுமனே சமாதானத்தையும், சகவாழ்வையும் ஜெபிப்பதன் மூலம் மாத்திரம் இந்த நோக்கத்தை அடைய முடியாது. இதற்கு நடைமுறை வேலைத்திட்டம் ஒன்று இருக்க வேண்டும்.

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு, மொழிகள் தொடர்பான ஏற்பாடுகள், அறிவித்தல்கள், LLRC பரிந்துரைகள், மொழி உரிமைகள் தொடர்பான வழக்குத் தீர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டு, அவற்றை நடைமுறைப்படுத்தல், இவை ஒவ்வொன்றுடன் தொடர்பான வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு உசிதமான சூழமைவை உருவாக்குதல் மிக முக்கியமானது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இது மிகவும் சிறந்த மார்க்கமாகும்.

எனவே, பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு மேலதிகமாக இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம் மக்களின் பெரு விருப்பையும், எதிர்பார்ப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டு புதிய ஜனாதிபதியும், புதிய அரசும் தேசிய ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மொழிக்கொள்கையை அமுல்படுத்துவதற்குக் கூருணர்வுடன் செயற்படுவதும் இன்றியமையாதது. யுத்தம் ஓய்ந்தாலும் அதன் கசப்பான அனுபவங்களால் விரிசலடைந்துள்ள வடக்குத் தெற்கு மக்களின் இதயங்களை ஒருங்கிணைத்தல் இன்றியமையாதது அதனை அமுலாக்குவதாயின், முதலில் அது குறித்து முன்னோடியான சிந்தனையுடன் இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். போரினால் மனிதத் தன்மையே தோல்வி காண்கிறது. யுத்தத்தினால் வெற்றி கண்டவர் எவரும் இல்லை. அநாவசியமான வெற்றி மனப்பான்மை செயற்கையாக உருவாக்கப்பட்டமையால் அது நல்லிணக்கத்திற்கு பாரிய தடையாகவே அமைகிறது. இதன் பெறுபேறாகவே தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தென்னிலங்கையின் சிங்கள சமூகம் மீதும், தென்னிலங்கையின் சிங்கள சமூகம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் சமூகங்கள் மீதும் சந்தேகத்தோடு நோக்குகின்றன.

எனவே, அர்ப்பணிப்புடனான மொழிப் பிரச்சினை பற்றிய சரியான புரிந்துணர்வையும், தேசிய நல்லிணக்கத்திற்கு அவசியமான பொறிமுறையை இயங்க வைப்பதும், தற்போதைய அரசின் முக்கிய கடமையாகும். சிங்களம் பேசும், தமிழ் பேசும் மக்களின் கலாசார வாழ்வில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்கு கலை, இலக்கியம் ஆகிய ஊடகங்களை சிறந்த முறையில் பயன்படுத்த முடியும்.

வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்கள் தமக்கே உரித்தான கலையையும் கலாசாரத்தையும் மேம்படுத்துவதற்கு ‘கூத்து’ போன்ற அருகிவரும் நாடக மரபுகளுக்கு உயிரூட்ட வேண்டும். இன்று தமிழ் நாட்டின் வாணிபக் கலை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பொழுதுபோக்காகவும், இரசனையாகவும் மாறியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்களின் கலாசார மரபுரிமைகளை அடையாளம் கண்டு அவற்றை மேம்படுத்துவதற்கு மத்திய அரசின் கலாசார அமைச்சு செயற்பட வேண்டும். தேசிய ஐக்கியத்தை உருவாக்கும்போது கலை, இலக்கியம் மற்றும் நாட்டார் கலைகள் போன்ற கலாசார அங்கங்கள் மூலமும் பாரிய நற்பணியை மேற்கொள்ள முடியும். இத்தகைய சகல வகைப்பொறுப்புக்களையும் ஏற்கக் கூடிய தேசிய மொழி சமூக ஒருங்கிணைப்பு கலாசார நிகழ்ச்சித்திட்டங்களுடனான சுயாதீன அமைச்சொன்றை உருவாக்குவதற்கு அரசு தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். மாகாண சபைகள் என்ற விடயப் பரப்பின் நிகழ்ச்சித்திட்டங்களையும் இந்த அமைச்சு உள்வாங்கி உறுதுணை புரியவேண்டும். வடக்கையும், கிழக்கையும், தெற்கையும் இணைக்கும் முதல் நடவடிக்கையாக இதனை அமைத்துக்கொள்ள முடியும்.

லயனல் குருகே

சிரேஷ்ட ஆய்வாளர்

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்