அரசாங்கம் தனது பதவிக் காலத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் சாத்தியங்கள் இல்லை என்று பெரும்பான்மையானவர்கள் (64% வீதமானவர்கள்) தெரிவித்திருக்கின்றனர் என சோஷல் இன்டிகேட்டரின் “ஜனநாயக ஆட்சி தொடர்பான நம்பிக்கைச் சுட்டி” ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என 30% வீதத்தினரும் – ஆனால், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை குறைத்தல் வேண்டும் என நான்கில் ஒரு பகுதியினரும் – பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்தல் வேண்டும் என நான்கில் ஒரு பகுதியினரும் எதிர்பார்க்கின்றனர் எனவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அதேவேளை, ஒரு வலுவான தலைவர் இருத்தல் (75%) மற்றும் நாடு தொடர்பான முக்கிய விடயங்கள்சார் முடிவுகளை அரசியல்வாதிகள் அல்லாத நிபுணர்கள் தீர்மானித்தல் (87%) போன்ற கருத்தியல்களுக்கு மக்கள் ஆதரவு இன்னும் இருப்பதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மேற்படி விடயங்கள் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் (CPA) கணிப்பீட்டாய்வுப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் (Social Indicator) மேற்கொள்ளப்பட்ட “ஜனநாயக ஆட்சி தொடர்பான நம்பிக்கைச் சுட்டி” எனும் அபிப்பிராய ஆய்வு அறிக்கையில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களாகும்.

2021, செப்டெம்பர் 19 முதல் அக்டோபர் 16 வரையான காலப்பகுதியில், நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள சிங்கள, தமிழ், மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய நான்கு இனத்தவர்களுடன், கட்டமைக்கப்பட்ட கேள்விக்கொத்தை பயன்படுத்தி 62 தரவு சேகரிப்பவர்களைக் கொண்டு தொலைபேசி ஊடான நேர்காணல்கள் மூலம் இவ்வாய்வு நடாத்தப்பட்டுள்ளது.

ஆய்வின் முழுமையான ஆங்கில அறிக்கை, தமிழ் சாராம்சம்

இந்த ஆய்வின் முக்கியமான முடிவுகளை உள்ளடக்கிய இன்போகிரபிக்ஸ் கீழே தரப்பட்டுள்ளன.