வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தின் கல்கமுவ பிரதேச செயலாளர் பிரிவில் தேவகிரிபுர கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள வடமேல் வனஜீவராசிகள் வலயத்தின் பிரதான யானை வழித்தடத்தை மறித்து பாரிய விவசாயத் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதால் இப்பிரதேசத்தில் யானை – மனித மோதல் மிகவும் அபாயகரமாக ஏற்படும் நிலைமை காணப்படுகின்றது.
வடமேல் மாகாணத்தில் கல்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தேவகிரிபுர கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள தேவகிரிபுர ரஜமஹா விகாரைக்குச் சொந்தமான ஒரு காணியில் அமைந்துள்ள சுமார் 40 ஏக்கர் காடு இவ்வாறு பாரியளவிலான கொய்யாப் பழச்செய்கைத் திட்டத்திற்காக அழிக்கப்பட்டு வருகின்றது. அதற்காகப் பாரிய அகழியொன்றையும் நிர்மாணிப்பதற்குத் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அதன்மூலம் பாலுகடவல நீர்த்தேக்க வனப்பகுதியில் இருந்து கல்கமுவ தேக்கவத்த ஊடாக தப்போவ சரணாலயத்திற்கு யானைகள் இடம்பெயர்வது முற்றாக தடைசெய்யப்படுவதால், அப்பகுதியில் பாரதூரமான மனித-யானை மோதல் இடம்பெறுவதை தவிர்க்க முடியாமல் போகலாம்.
வடமேல் வனவிலங்கு வலயத்திலுள்ள பெரும்பாலான யானை வாழிடங்கள் வனவிலங்கு சரணாலயங்களுக்கு வெளியே அமைந்துள்ளன, இவ்வாறு யானைகள் சரணாலயங்கள் மற்றும் யானை வழித்தடங்கள் அழிக்கப்படுகின்றன. இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காததால் இப்பிரதேசத்தில் யானை வாழிடங்களை அழித்து மேற்கொள்ளப்படும் பாரியளவிலான பயிர்ச்செய்கைத் திட்டங்கள் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
இதற்கு முன்னர் எஹெடுவெவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நாகொலகனே கிராம அலுவலர் பிரிவு நாகொலகனே ரஜமஹா விகாரை மற்றும் கல்கமுவல மஹநன்னேரியல தொரவமைலேவ, தொரவமைலேவ புராண ரஜமஹா விகாரைக்குச் (திஸ்ஸ பப்பதாராமய) சொந்தமான காணிகளில் அமைந்துள்ள காடுகளை அழித்து பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு பயிர்ச்செய்கைத் திட்டங்களுக்காக விகாராதிபதி பிக்குமாரினால் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்கீழ் விசேடமாக பாழுகடவல வாவிக்கு மேல் அமைந்துள்ள யானைகளின் விசேட வாழிடமாகவுள்ள வனப்பகுதி புல்டோசர்களாலும் அழிக்கப்பட்டுள்ளது. அந்த காணிகள், எஹெடுவெவ, நாகொலகனே ரஜமஹா விகாரைக்குச் சொந்தமானதாகும். மேலும், தோரவமைலேவ புராண ரஜமஹா விகாரையைச் சுற்றியுள்ள வனப் பகுதி தப்போவ மற்றும் கல்கமுவ பகுதியில் வாழும் யானைகளுக்கு இகினிமிடிய பிரதேசம் வரை இடம்பெயருவதற்கு யானை வழித்தடமாக அமைந்துள்ளது. அவ்வாறிருக்கும் போது, வடமேல் வனஜீவராசிகள் வலயத்தைப் பாதுகாப்பதற்கு அத்தகைய காட்டு யானைகளின் வாழிடங்களை கம்பனி உரிமையாளர்களுக்கு வழங்கி விகாராதிபதிகள் தமது நிதியைப் பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியின் நீட்சியாகவே தேவகிரிபுர ரஜமஹா விகாரைக்குச் சொந்தமான வன நிலங்களினது அழிவினை அடையாளப்படுத்தலாம்.
இவ்வாறான காரணங்களினால், அதிகரித்து வரும் மனித யானை மோதலை குறைப்பதற்காகவே வில்பத்து தேசிய பூங்காவில் யானைகளை அடைத்து வைப்பதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்களே தவிர, யானை – மனித மோதலுக்கான காரணத்தை இதுவரை கண்டறியவில்லை. மிகவும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இவ்வாறு பிரதேசத்தில் காட்டு யானைகள் வாழ்விடங்களில் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கைத் திட்டங்களால், காட்டு யானைகள் வாழ்வதற்கும் நடமாடுவதற்கும் தேவையான வசிப்பிடங்கள் மற்றும் யானை வழித்தடங்கள் அழிந்து வருவதால், அப்பகுதியில் மனித – யானை மோதல் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. கிராமங்களுக்கு அவ்வாறு பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ள முடியாததால் யானைகள் கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குக் குறுக்கே பயணிக்க முயற்சித்தல் மற்றும் உணவைப் பெற்றுக்கொள்வதற்கு விவசாய நிலங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களை ஆக்கிரமித்தல் இயற்கையானதாகும்.
வடமேல் மாகாணத்தில் உள்ள யானைகளில் சுமார் ஒரு சதவீதமானவை வனவிலங்கு சரணாலயங்களுக்கு வெளியே வாழ்கின்றன. தப்போவ மற்றும் கஹல்ல – பல்லேகல சரணாலயங்களிலும் வில்பத்து தேசிய பூங்காவிலும் தன்னிச்சையாகவும், அநீதியாகவும், விஞ்ஞான ரீதியற்ற வகையிலும் அடைத்து, பல தசாப்தங்களாக அப்பகுதியில் யானை – மனித மோதலை கட்டுப்படுத்த முயன்று தோல்வியடைந்துள்ளனர். எனவே, யானைகளை அவற்றின் பூர்வீக வாழ்விடங்களில் பாதுகாப்பதன் மூலம் யானை – மனித மோதலுக்குத் தீர்வுகாண வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்தாகும். அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் பலதரப்பு நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட “இலங்கையில் யானை – மனித மோதலைக் குறைப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின்” மூலமும் அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வடமேல் வனஜீவராசிகள் வலயம் இலங்கையில் அதிக மனித – யானை மோதலைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிலைமையைத் தடுப்பதற்காக கிராமப்புற மின்வேலிகள் மற்றும் சமகால வயல் மின்வேலிகள் போன்ற சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட முறைகள் மூலம் இந்த நிலையைத் தடுக்க இந்தப் பகுதியில் உள்ள ஆதரவற்ற ஏழை விவசாயிகள் பெரும் முயற்சிகளை எடுக்க வேண்டியிருந்தது. அதன்மூலம் வடமேல் வனஜீவராசிகள் வலயத்தில் மனித – யானை மோதல் முகாமைத்துவமானது இதுவரை ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அந்த வெற்றியை இழந்து பல மனித உயிர்களையும் காட்டு யானைகளையும் பலிவாங்கும் வகையில் ஒரு சில வியாபாரிகளும் பௌத்த பிக்கு ஒருவரும் இவ்வாறு நடந்து கொள்வது கேவலமானதாகும்.
அத்துடன், இப்பகுதியில் பாரியளவிலான விவசாயத் திட்டங்கள் இவ்வாறு விரிவுபடுத்தப்படுவதால் யானைகள் மனித மோதலால் மக்கள் பாதிக்கப்படுவது மாத்திரமல்ல. மற்றொரு பிரச்சினை என்னவெனில், வணிகப் பயிர்ச்செய்கைக்கு இப்பகுதியில் நிலத்தடி நீர் பெரிய அளவில் கிடைப்பதால் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு நல்ல உதாரணம் நாகொலகனே ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள குழாய் கிணற்றின் கதியாகும். இப்பகுதியில் மாம்பழச் செய்கைத் திட்டங்களுக்கு அதிக அளவில் தண்ணீர் பெற்றுக்கொள்வதால், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த குழாய் கிணற்றினை முற்றிலும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான காடழிப்பு நாட்டில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடுமையாக மீறும் செயலாகும் என்பதும் வருந்தத்தக்கது. திருத்தப்பட்ட 1980ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் பிரிவு 23ப இன் அடிப்படையில் வெளியிடப்பட்ட 1993ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 772/22 இன் படி 1 ஹெக்டயாரிற்கு அதிகமான காணியிலுள்ள வனத்தை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு முன்னர் அல்லது 50 ஹெக்டயார்களுக்கும் அதிகமான காணிகளை காடழித்து துப்புரவாக்க முன்னர் சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு முன் எழுதப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்பட வேண்டும். மேலும், இந்தச் சட்டத்தின் 23ப பிரிவின்படி வெளியிடப்பட்ட 1995 பெப்ரவரி 23ஆம் திகதிய வர்த்தமானி இல. 859/14 இன் படி, ஒரு பொது வாவியொன்றினது உயர் மேலோட்ட நிலைத் திரட்சியிலிருந்து 100 மீட்டருக்குள் ஏதேனும் ஒரு அபிவிருத்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறையின் படி எழுத்துப்பூர்வ முன் அனுமதி பெறப்பட வேண்டும்.
மேலும், குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்கள் உள்ளடங்கும் வடமேல் மாகாணத்தினுள் நடைமுறைப்படுத்தப்படும் சுற்றாடல் சட்டமாகிய 1990ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வடமேல் மாகாண சுற்றாடல் கட்டளைச் சட்டத்தின்படி வெளியிடப்பட்ட 1998ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதிய 1020/21ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின்படி, 1 ஹெக்டயாரிற்கு அதிகமான காணியிலுள்ள வனத்தை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு முன்னர் 20 ஹெக்டயாரிற்கு அதிகமான நிலப்பரப்பினை துப்புரவாக்குவதற்கு அல்லது பொது ஏரியில் மேல் உபரிநீர் மட்டத்திலிருந்து 100 மீட்டருக்குள் ஏதேனும் அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னர் சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்பட்டு முன் எழுதப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், அந்தச் சட்டங்கள், விதிமுறைகள் அனைத்தையும் மீறி இந்தக் காடுகளை அழித்தல் நடைபெறுகின்றது.
1940ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க திருத்தப்பட்ட தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் 23அ மற்றும் 47ஆம் பிரிவுகளின் படி, 2000 ஒக்டோபர் 04ஆம் திகதிய 1152/14ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 2001ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க செயற்றிற்ற பணி நடைமுறை ஒழுங்குவிதிகளின்படி ஹெக்டயார் இரண்டிற்கு அதிகமான நிலப்பரப்பினை காடழித்து துப்புரவாக்குவதற்கு முன், தொல்பொருள் சேத மதிப்பீட்டினை மேற்கொண்டு அதற்கு ஒப்புதல் பெற வேண்டும்.
எனவே, காடழிப்பைத் தடுப்பதற்கு அவசியமான துரித நடவடிக்கைகளை எடுப்பதற்கும் வடமேல் வலயத்தில் காட்டு யானைகளின் வாழ்விடங்களை நிலையான முறையில் பாதுகாப்பதன் மூலம் பிரதேசத்தில் யானை – மனித மோதலை குறைப்பதற்கும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் வேண்டிக் கொள்கின்றோம்.
சுபுன் லஹிரு பிரகாஷ்
වයඹ වනජීවී කලාපයේ ප්රධාන අලිමංකඩක් අවහිර කරමින් පේර වගාවට සැරසෙයි என்ற தலைப்பில் விகல்ப தளத்தில் ஜனவரி 18 2022 அன்று வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.