Photo, Selvaraja Rajasegar

சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் சட்டங்களை திருத்துவதற்கான பணிப்பாணையுடன் கூடிய விதத்தில் அண்மையில் ஒரு செயலணி நியமனம் செய்யப்பட்ட விடயம் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் கரிசனைகளை தோற்றுவித்துள்ளது. எனினும், இலங்கையின் அண்மைய போக்குகளை கவனத்தில் எடுக்கும் பொழுது இது எந்த விதத்திலும் ஓர் ஆச்சரியமாக இருக்க முடியாது. செயலணிகளை நியமனம் செய்யும் வழமை கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியை பொறுத்தவரையில் இயல்பான ஒரு காரியமாக மாறி வருகின்றது. கடந்த இரு வருட காலத்திற்குள் அவ்விதம் 10 செயலணிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 2019 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் பௌத்த பிக்குகள் வகித்து வந்த பாத்திரத்தை கவனத்தில் எடுக்கும் பொழுது அவர்களுக்கு முதன்மை ஸ்தானம் வழங்கும் அண்மைக்கால நடைமுறையும் ஒரு புதிய விடயம் அல்ல. ஜனாதிபதித் தேர்தலை அடுத்து ஆலோசனை அமைப்புக்கள், செயலணிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என்பவற்றுக்கு புத்த பிக்குகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களை தூண்டிய வரலாற்றைக் கொண்டிருக்கும், நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் ஒருவரை அத்தகைய ஒரு செயலணிக்கு தலைவராக நியமனம் செய்யப்பட்ட செயல் ஒரு துணிகரமான காரியமாக உள்ளது. இந்த நியமனம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. போதாக்குறைக்கு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கு இது வழிகோல முடியும். குறிப்பாக, இலங்கை தொடர்பாக கணிசமான  அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய, பெருமளவுக்கு பிரச்சினைக்குரிய திட்டவட்டமான ஒரு கதையாடலையும் இது வடிவமைத்து வருகின்றது.

செயலணிகளின் அதிகாரம்

ஜனாதிபதி ராஜபக்‌ஷவினால் நியமனம் செய்யப்பட்டிருக்கும் எண்ணற்ற செயலணிகள் அத்தியாவசிய சேவைகளின் விநியோகம், தடுப்பூசியேற்றும் திட்டங்களை அமுல் செய்தல், பொருளாதார மீட்சி மற்றும் வறுமை ஒழிப்பு என்பன தொடக்கம் காலநிலை மாற்றத்திற்கான நிலையான  தீர்வுகளைக் காணும் பசுமை சமூக –  பொருளாதாரம் ஒன்றை உருவாக்குதல் என்பன வரையில் பரந்த வீச்சில் காணப்படுகின்றன. இந்தச் செயலணிகளினால் கவனத்தில் எடுக்கப்படவிருக்கும் பன்முகப் பிரச்சினைகள் தற்போது நாட்டில் இருந்து வரும் நியதிபூர்வ  அமைப்புக்களின் அந்தஸ்து தொடர்பாகவும் கேள்விகளை எழுப்புகின்றன. அவையும் புதிய செயலணிகளும் ஒரே காரியங்களை செய்யக்கூடிய நிலை ஏற்பட முடியுமா என்ற கேள்வியும் தோன்றுகிறது. குறிப்பாக, அதிகரித்து வரும் இலங்கையின் பொருளாதார சவால்களின் பின்னணியில் இந்தப் பன்முக அமைப்புக்களை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் தேவைப்படும் வளங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.

மேலும், ஒரு சில செயலணிகள் இராணுவமயமாக்கப்பட்டிருக்கும் இயல்பையும் அவதானிக்க முடிகின்றது. 2020ஆம் ஆண்டில் ஜூன் மாதம் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையின் கீழ் இரு செயலணிகள் நியமனம் செய்யப்பட்டன – பாதுகாப்பான ஒரு நாடு, ஒழுக்கமான நற்பண்புகளுடன் கூடிய மற்றும் சட்டத்தை மதிக்கும் ஒரு சமுதாயம் என்பவற்றை கட்டியெழுப்புவதற்கான செயலணி மற்றும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமை முகாமைத்துவ செயலணி.

செயலணிகள் மூலம் ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதை நோக்கிய அதிகரித்தளவிலான நகர்வு ஒரு புறமிருக்க, இந்தச் செயலணிகளின் உறுப்பினர் உள்ளடக்கம் மற்றும் அவற்றின் உண்மையான நோக்கம் என்பனவும் பல கேள்விகளை எழுப்புகின்றன. அத்தகைய செயலணிகளில் மிகச் சமீபத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் செயலணி “ஒரே நாடு – ஒரே சட்டம்” எண்ணக்கருவை அமுல்செய்வதற்கான பணிப்பாணையுடன் நியமனம் செய்யப்பட்டிருக்கும் செயலணியாகும். அதன் பேரினவாத சாய்வு மற்றும் தமது இனத்துவ – தேசியவாத நிலைப்பாடுகள் தொடர்பாக நன்கு அறியப்பட்டிருப்பவர்கள் அல்லது பெருமளவுக்கு ஓர் அடையாளமாக நியமனம் செய்யப்பட்டிருப்பவர்கள் ஆகியோரைக் கொண்ட இந்தச் செயலணி கவலையூட்டுவதாக இருக்கின்றது. இவை அனைத்தும் சிறுபான்மை மக்கள் மத்தியில் சந்தேகத்தை தோற்றுவிப்பதற்குப் பங்களிப்புச் செய்வதுடன், அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நகர்வுகள் தம்மை மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளி விடுவதற்கும், தமது சமய நம்பிக்கைகளை சீர்குலைப்பதற்கும் வழிகோல முடியுமென அவர்கள் நம்புகிறார்கள்.

மிகச் சமீபத்திய செயலணியைப் போலவே இதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட செயலணிகள் தொடர்பாகவும் கரிசனைகள் எழுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமை முகாமைத்துவத்திற்கான செயலணியின் பணிப்பாணை மற்றும் உறுப்பினர் உள்ளடக்கம் என்பன தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. அது தவிர, நாடெங்கிலும் இருக்கும் மரபுரிமைகளை பாதுகாப்பதற்குப் பதிலாக, கிழக்கு மாகாணத்தின் மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு மட்டும் ஒரு விசேட அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுகின்றது. பாதுகாப்புச் செயலாளர் அதன் தலைவராக உள்வாங்கப்பட்டிருப்பதுடன் இணைந்த விதத்தில் உருவாகியிருக்கும் இராணுவமயமாக்கல் பரிமாணம் தவிர, இச்செயலணியில் சிறுபான்மைச் சமூகங்களுடன் எவ்வித தொடர்புகளும் அற்றவர்கள் அல்லது கிழக்கு மாகாண தொல்பொருள் பாரம்பரியம் தொடர்பான நிபுணர்கள் அல்லாத பல பௌத்த பிக்குகளும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். இந்தச் செயலணியின் நியமனம் மற்றும் கடந்த ஒரு வருட காலத்தின் போதான அதன் செயற்பாடு என்பன தொடர்ந்தும் இரகசியமாக இருப்பதுடன், சிறுபான்மைச் சமூகங்களுக்கு மத்தியில் அச்சவுணர்வுகளையும், சந்தேகங்களையும் வளர்த்து வருகின்றன. நாட்டில் இனத்துவ – பேரினவாத கொள்கைகளை திணிப்பதற்கான மற்றொரு வழிமுறையாக சிறுபான்மை மக்கள் இதனைப் பார்க்கிறார்கள்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் தேசிய மரபுரிமையைப் பாதுகாப்பதற்காக  செயற்பட்டு வருவதாக கூறிக்கொள்ளும் பல மத்திய அரசாங்க நிறுவனங்களின்  செயற்பாடுகள் குறிப்பிட்ட இந்தச் செயலணியின் தாக்கம் குறித்த அச்சங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இந்தத் துறை தொடர்பான கலந்துரையாடல்களும், ஊடக அறிக்கைகளும் தேசிய மரபுரிமையை பாதுகாத்தல் என்ற போர்வையில் அதிகாரிகள் காணிகளின் எல்லைகளை மீள நிர்ணயிக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் பல சந்தர்ப்பங்களை எடுத்துக்காட்டியுள்ளன. அத்தகைய செயற்பாடுகளின் உண்மையான நோக்கம் குறித்து உள்ளூர் மக்களுக்கு தகவல்கள் வழங்கப்படுவதில்லை அல்லது வரையறுக்கப்பட்ட அளவிலான தகவல்களே வழங்கப்படுகின்றன.

மக்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தும் அரசியல் மற்றும் சமய செயற்பாட்டாளர்கள் வெளியிட்டு வரும் அறிக்கைகள் இச்சந்தேக உணர்வை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. தேசிய மரபுரிமைகளைப் பாதுகாத்தல் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மிக மோசமான உள்நோக்கங்களை கொண்டுள்ளனவா என்பது குறித்த கரிசனைகளை இது எழுப்புகின்றது. பல தசாப்தகாலம் சிறுபான்மைச் சமூகங்களுக்குச் சொந்தமானவையாக இருந்து வந்ததுடன், அவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் காணிகளை இவ்விதம் பிரித்தெடுப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பின்விளைவுகள், மக்களிடமிருந்து  அவர்களுடைய வீடுகளையும், காணிகளையும் அபகரித்தல், இப்பிரதேசத்தில் குடிசனவியல் பரம்பலை மாற்றியமைத்தல் மற்றும் மாகாணத்தின் பல்லின இயல்பை நிலைமாற்றம் செய்தல் போன்ற விடயங்கள் குறித்து கரிசனைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

எல்லாவல மேதானந்த தேரர் போன்ற தனிநபர்களினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கைகளின் பின்னணியில் இத்தகைய அச்சங்கள் மேலும் அதிகரித்து வருகின்றன. எல்லாவல மேதானந்த தேரர் கிழக்கு தொல்லியல் மரபுரிமை முகாமைத்துவ செயலணியின் ஓர் உறுப்பினராக இருப்பதுடன், தொல்பொருள் ஆய்வுக்கென கிழக்கு மாகாணத்தில் சுமார் 2000 அமைவிடங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் அனைத்து சமய மற்றும் கலாசார மரபுரிமை இடங்களையும் பாதுகாப்பதற்குப் பதிலாக, பௌத்த மரபுரிமையை மட்டுமே பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கும் விடயம் கிழக்கு மாகாணத்தில் தனியொரு இன அடையாளம் ஒன்றை உருவாக்குவதற்கான ஒரு திட்டமாக இருக்க முடியும் என்ற அச்சங்களையும் இது தோற்றுவித்துள்ளது.

செயலணிகள் மூலம் ஆட்சியை முன்னெடுத்து வரும் இந்தக் கலாசாரத்திற்கு மத்தியிலும் கூட, மிகச் சமீபத்திய செயலணி நியமனம், ஊடக அறிக்கைகளின் பிரகாரம், ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் அமைச்சரவையிலிருக்கும் ஒரு சில அமைச்சர்களையும் உள்ளடக்கிய விதத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  மேலும், நீதி அமைச்சு சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கென பல்வேறு கமிட்டிகள் மற்றும் செயன்முறைகள் என்பவற்றை முன்னெடுத்து வரும் ஒரு சந்தர்ப்பத்தில் இது நிகழ்ந்திருக்கின்றது. இந்தப் புதிய நிலவரம் ஏற்கனவே காணப்படும் கட்டமைப்புக்களுடன் எவ்வாறு பொருந்திச் செல்ல முடியும் என்ற விடயத்தைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், தனக்கு மட்டுமே பதிலளிக்கக்கூடிய மற்றொரு செயலணியை ஜனாதிபதி நியமனம் செய்திருக்கும் விடயமும், மக்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தி வரும் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் அது செயற்படும் விடயமும் அபாய எச்சரிக்கைகளை எழுப்புகின்றன.

பௌத்த பிக்குகளின் வகிபாகம்

அண்மையில் நியமனம் செய்யப்பட்ட செயலணி குறித்த கண்டனங்களில் பெரும்பாலானவை அதன் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரருடன் சம்பந்தப்பட்டவையாகும். அவர் மக்களைப் பிரித்து, பேதப்படுத்தும் பொதுபல சேனா அமைப்பின் தலைவராக இருப்பதுடன், இலங்கையில் சமயச் சிறுபான்மையினருக்கு  (குறிப்பாக, முஸ்லிம் சமூகத்திற்கு) எதிராக வன்முறை தூண்டப்பட்ட பல கடந்த கால சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தார். அண்மைய வருடங்களில் இடம்பெற்ற திட்டவட்டமான  இரு இனத்துவ – சமய வன்முறைச் சம்பவங்கள் 2014 அளுத்கமையிலும், 2018 இல்  திகனையிலும் இடம்பெற்றன. அச்சம்பவங்களின் போது கலகொட அத்தே ஞானசார தேரர் அந்த இடங்களில் இருந்துள்ளார். அவர் அந்த இடங்களில் உரைகளை நிகழ்த்தியதுடன், அதனையடுத்தே வன்முறையும், பல மரணங்களும் இடம்பெற்றுள்ளன, அச்சந்தர்ப்பத்தில் இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில் புதிதாக ஓர் அச்சவுணர்வு உருவாக்கப்பட்டது.

திகன வன்முறைச் சம்பவங்களை நேரடியாக பார்த்தவர்களுடன் நான் நடத்திய கலந்துரையாடல்கள் அப்பிரதேசத்தில் வன்முறை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்ற விடயத்தை ஊர்ஜிதம் செய்தன. அதாவது, அங்கு முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் அடையாளப்படுத்தப்பட்டு, தாக்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில், பெரும்பான்மைச் சமூகத்தினருக்குச் சொந்தமான சொத்துக்களுக்கு எத்தகைய சேதங்களும் விளைவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த இரு  சம்பவங்களும் தவிர, முஸ்லிம் அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள் ஆகியோருக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதனையும் உள்ளடக்கிய விதத்தில் வன்முறையைத் தூண்டிய வேறு பல சம்பவங்களுடனும் இந்தப் பிக்கு சம்பந்தப்பட்டிருந்தார். 2019இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் தோன்றிய திடீர் ஆவேச உணர்வின் போது, அமைச்சரவையிலிருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆகியோர் பதவிவிலக வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டதுடன், தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாட்டில் வன்முறை வெடிக்கும் என்ற அச்சுறுத்தலையும் விடுத்திருந்தார். மிக அண்மையில் ஒரு தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இஸ்லாமிய சமய உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் இந்தத் தேரர் பேசியிருந்தார். இந்தக் கருத்துக்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும் அவருக்கெதிராக எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளின் போது அவர் நடந்து கொண்டிருக்கும் விதம் உண்மையிலேயே துர்திஷ்டவசமானதாக இருந்து வந்திருப்பதுடன், மக்களை வன்முறைக்குத் தூண்டிய பல சம்பவங்களில் அவர் வகித்து வந்த வகிபாகத்தை எடுத்துக் காட்டும் ஆவணங்களும் இருக்கின்றன. ஆனால், ஒன்றபின் ஒன்றாக வந்த அரசாங்கங்கள் அவரை இது தொடர்பாக கண்டனம் செய்வதற்கோ, விசாரணைகளை நடத்தி பொறுப்புக்கூற வைப்பதற்கோ எத்தகைய நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.

வன்முறை மற்றும் வன்முறைக்குத் தூண்டுதலளித்தல் சம்பந்தப்பட்ட சம்பவங்களுக்கு அவர் பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை. அதே வேளையில், 2018ஆம் ஆண்டில் ஹோமாகம மாஜிஸ்ட்ரேட் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்து, அரச வழங்கறிஞரை அவமதித்து, பாதிக்கப்பட்டவரை பயமுறுத்திய சம்பவத்தின் போது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரர் தண்டனை பெற்றிருந்தார். அவர் நிகழ்த்திய குற்றச் செயலின் பாரதூரமான இயல்பு மற்றும் இலங்கையின் நீதித்துறையில் அது ஏற்படுத்திய தாக்கம் என்பவற்றை பொருட்படுத்தாமல், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு பொது மன்னிப்பை வழங்கினார். அது நாட்டிற்கு ஏற்பட்ட பாரிய ஒரு பின்னடைவை ஏற்படுத்திய அதே வேளையில், இந்தத் தேரருக்கும், அவருடைய ஆதரவுத் தளத்திற்கும் மேலும் உற்சாகமூட்டிய ஒரு நிகழ்வாக இருந்து வந்தது.

மேலும், இச்செயற்பாடுகள் அனைத்தும் விளிம்பு நிலையில் செயற்பட்டு வந்த ஓர் தீவிரவாத அமைப்பின் செயற்பாட்டாளர் என்ற நிலையிலிருந்து நாட்டின் மைய நீரோட்ட அரசியலுக்கு அவரை எடுத்து வந்துள்ளன. மிகச் சமீபத்திய நியமனம் அரச அனுசரணையின் மீது தங்கியிருக்கும் அவருடைய ஆற்றலை மட்டுமன்றி, அதன் சலுகைகளை அனுபவிக்கக் கூடிய அவருடைய ஆற்றலையும் எடுத்துக் காட்டுகின்றது. பல வருட காலம் நாட்டில் இனவாதத்தையும், வெறுப்பையும் தூண்டி வருபவர் என்ற விதத்தில் அடையாளம் காணப்பட்டிருக்கும் அத்தகைய ஒரு  தனிநபர்,  நாட்டின் சட்டத்தின் ஆட்சியை துச்சமாக மதித்துச் செயற்பட்டு வந்திருக்கும் ஒருவர் இப்பொழுது இலங்கையில் “ஒரே நாடு – ஒரே சட்டம்” என்ற விடயத்திற்கு வரைவிலக்கணம் வழங்கப் போகும் செயலணிக்கு தலைமை தாங்குகிறார்.

மேலும், ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அண்மையில் ஒரு ஊடகச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்ததுடன், தனது உத்தியோகபூர்வ அந்தஸ்து தொடர்பாக பேசுவதற்கு அந்தத் தேரருக்கு ஒரு வாய்ப்பையும் வழங்கியிருந்தது. இந்தச்  செயற்பாடு அவருக்குக் கிடைக்கும் ஆதரவை மட்டுமன்றி, அவருடைய செயற்பாடுகள் சட்ட ரீதியானவையாக ஆக்கப்படுவதனையும் எடுத்துக் காட்டின. மேலும், அவர் அனுபவித்து வரும் தண்டனை விலக்குரிமையையும் அது எடுத்துக் காட்டியது. அவரும் அவருடைய செயலணியைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்களும் தமது பணிப்பாணையை நிறைவேற்றி வைப்பதற்கு (இப்பணிப்பாணை 2022 பெப்ரவரி 28ஆம் திகதி வரையில் உள்ளது) பல மாதங்கள் இருக்கும் நிலையில், அத்தகைய பிரச்சார தந்திரங்களை அடுத்து, அவர் தனக்கே உரித்தான அரசியலையும், வெறுப்பையும், அச்சத்தையும் பரப்புவதற்கு ஊடகங்களைப் பயன்படுத்தப்படுத்திக் கொள்ள முடியும் எனத் தோன்றுகின்றது.

இலங்கையின் கொள்கை உருவாக்கத்தில் பௌத்த பிக்குகள் அதிகரித்தளவில் பிரச்சினைக்குரிய ஒரு வகிபாகத்தினை வகித்து வரும் ஒரு பின்புலத்திலேயே இவை அனைத்தும் நிகழ்ந்து வருகின்றன. இங்கு குறிப்பிடத்தக்க ஓர் அமைப்பு, முக்கியமான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்குகென மாதாந்தம் அவரைச் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் பௌத்த ஆலோசனை சபையாகும். பௌத்தம் மற்றும் பௌத்த மரபுரிமை என்பவற்றை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை அமுல் செய்வற்கான ஓர் அரசியல் போர்வையை இந்தச் சபை பயன்படுத்திக் கொள்கிறது. அத்தகைய நடவடிக்கைகள் ஏனைய சமூகங்கள் மீதும், இலங்கையின் சமய மற்றும் கலாசார அமைவிடங்கள் மீது ஏற்படுத்தக்கூடிய பின்விளைவுகள் குறித்து சிறுபான்மைச் சமூகங்களுக்கு மத்தியில் அச்சங்களை தோற்றுவித்து வருகின்றன.

இவை அனைத்தும் – குறிப்பிட்ட ஒரு கதையாடலை முன்னெடுப்பதற்கென செயலணிகளின் நியமனம், பௌத்த பிக்குகளின் பங்கேற்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்குவிப்பு என்பன – சமூகத்தில் அவர்கள் வகித்து வரும் மிக முக்கியமான ஸ்தானத்தை எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன், கேள்விக்குட்படுத்தாத விதத்திலான வழிபாடு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தண்டனை விலக்குரிமைக்கு வழிகோலுகின்றது என்பதனையும் அது நினைவூட்டுகின்றது.

தனியொரு கதையாடலை முன்வைப்பதன் ஆபத்து

“தனியொரு கதையாடலை முன்வைப்பதன் ஆபத்து” என்ற தலைப்பிலான தனது பிரபல்யமான உரையில் சிமாமந்தா அடிச்சி (Chimamanda Adichie), தனியொரு கதையாடலின் தாக்கம் குறித்தும், அத்தகைய தனியொரு கதையாடல் அரைகுறையான அனுமானங்கள் மற்றும் முடிவுகள் என்பவற்றுக்கு வழிகோல முடியும் என்ற விடயம் குறித்தும் பேசுகிறார். அது ஒரு சமூகத்தில் நிலவிவரும் நுண்ணிய வேறுபாடுகள் மற்றும் பன்முக கதையாடல்கள் என்பவற்றை இல்லாதொழித்துவிட முடியும். மேலும், கதை சொல்வதன் சக்தி, யார் கதை சொல்கிறார் என்ற விடயம், எவ்வாறு  அது மேற்கொள்ளப்படுகின்றது, குறிப்பிட்ட ஒரு கண்ணோட்டத்திற்கு அது எவ்வாறு பங்களிப்புச் செய்ய முடியும் என்ற விடயங்கள் குறித்தும் அவர் பேசுகிறார். அது தவிர, ஒரு குறிப்பிட்ட கதை – அந்தக் கதை மட்டுமே தொடர்ந்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வரும் பொழுது – முக்கியமான ஒரு கதையாக எவ்வாறு மாற்றமடைகின்றது என்பதனையும் அவர் குறிப்பிடுகிறார்.

குறிப்பிட்ட கதையை சொல்வதற்கும், திட்டவட்டமான ஒரு கதையாடலை வடிவமைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இலங்கையை பொறுத்தவரையில் புதியவை அல்ல. போரின் முடிவை அடுத்து வந்த காலப் பிரிவில் அப்போதைய மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் ஆட்சியில் அத்தகைய பல முயற்சிகள் இடம்பெற்று வந்தன. போரின் இறுதிக் கட்டத்தின் போது, (அதற்கு மாறான விதத்தில் சான்றுகள் இருந்து வந்த போதிலும்) “பூச்சிய அளவிலான மரணங்கள்” மற்றும் “மனிதநேயச் செயற்பாடுகள்” என்ற விதத்தில் இந்தக் கதை முன்னெடுக்கப்பட்டது. இந்தக் கதை வலிமை மிக்கது என்ற விடயம் அப்பொழுது நிரூபிக்கப்பட்டிருந்ததுடன், பலர் இலங்கையின் அண்மைய வரலாறு குறித்த இந்தக் கதையாடலை நம்பினார்கள்.

மேலும், முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தும் புதிய மட்டங்களிலான முயற்சிகளை போருக்கு பிற்பட்ட இலங்கை பார்த்திருப்பதுடன், தீவிரவாத சக்திகள் முஸ்லிம் சமூகத்தை “புதிய எதிரியாக” அடையாளப்படுத்தியிருந்தன. தனது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்வதற்கென இந்தத் திட்டவட்டமான கதையாடலுக்கும், வெறுப்பு மற்றும் அச்சம் என்பவற்றுடன் கூடிய அரசியலுக்கும் ராஜபக்‌ஷ அரசாங்கம் ஆதரவளித்து வந்தது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை அடுத்து இந்தக் குறிப்பிட்ட கதையாடலை வடிவமைக்கும் சக்தி ஒரு புதிய உத்வேகத்தை பெற்றுக்கொண்டது. பெரும் குழப்ப நிலை, அச்சம் மற்றும் பயம் என்பவற்றுக்கு மத்தியில் ஒரு புதிய தலைவருக்கான கோரிக்கை எழுச்சியடைந்தது. சம்பந்தப்பட்ட கதையாடலின் வலிமை, இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் முடிவையும், இன்றைய இலங்கையின் அரசியலையும் நிர்ணயித்தது.

“ஒரே நாடு – ஒரே சட்டம்” என்ற போர்வையில் இனத்துவ – பேரினவாத சாய்வுடன் கூடிய விதத்தில் அண்மையில் உருவாக்கப்பட்ட செயலணி, குறிப்பிட்ட ஒரு தனிக் கதையாடலை வடிவமைப்பதற்கென மேற்கொள்ளப்பட்ட தொடரான முயற்சிகளில் மிகப் பிந்திய முயற்சியாக இருந்து வருகின்றது. அது எவ்வாறு வடிமைக்கப்பட்டு வருகின்றது, எவ்வாறு சட்டபூர்வமாக்கப்படுகின்றது என்ற வலிமையான செயற்பாடு இந்தப் பிக்குமார் மற்றும் செயலணிகள் ஆகிய தரப்புக்களின் தயவினால் ஏற்கனவே இடம்பெற்று வருகின்றது. ஜனநாயக ரீதியில் இத்தகைய முயற்சிகளுக்கு சவால்விடுக்கப்பட்டாலே ஒழிய,  இது மிக விரைவில் முதன்மையான மற்றும் காலப் போக்கில் இலங்கையின் ஒரேயொரு கதையாடலாக உருவாக முடியும்.

பவானி பொன்சேகா