Photo, The Morning
அரசாங்கம் 2021 அக்டோபர் 08 ஆம் திகதி குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை (திருத்த) சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டது. இது 144 A என்ற ஒரு புதிய பிரிவை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இப்பிரிவு, குறிப்பிட்ட காரணங்களுக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நபர் ஒருவரை நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய தேவையை இல்லாமல் செய்வதற்கு மாஜிஸ்ட்ரேட் நீதவானுக்கு அதிகாரமளிக்கின்றது. கைதுசெய்யப்படும் நபர்கள் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதை அவசியமற்றதாக்கும் காரணங்களாக, குறித்த ஒருவருக்கு உள்ள உயிருக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், சுதந்திரம் மற்றும் சித்திரவதை என்பவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை போன்ற இலங்கையர்களின் அரசியல் யாப்பு ரீதியான உரிமைகளை இல்லாமல் செய்யக் கூடிய வேறு சில காரணங்களையும் அது உள்ளடக்குகின்றது. உதாரணமாக:
- இழைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்செயல் தொடர்பான பொது மக்களின் எதிர்வினை ‘சமாதானக் குலைவை ஏற்படுத்தக் கூடியதாக இருந்து வரும் நிலை”
- அந்த நபர் வழக்கு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய சாத்தியப்பாடு
நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய தேவையை இல்லாமல் செய்ய வேண்டும் எனக் கோரும் விண்ணப்பத்தை சட்டமா அதிபர், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி (OIC) அல்லது கைதுசெய்யப்பட்டவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலையின் அத்தியட்சகர் போன்றவர்கள் மேற்கொள்ள முடியும்.
அரச வன்முறையை நிரந்தரமான, சகஜமான ஒரு செயலாக மாற்றுதல்
இலங்கையில் பொலிஸ் நிலையங்களிலும், சிறைச்சாலைகளிலும் இடம்பெறும் தடுப்புக்காவல் வன்முறை முறைமை சார்ந்ததாக இருந்து வருவதுடன், சகஜமான ஒன்றாகவும் உள்ளது. 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இன்று வரையில் 49 பொலிஸ் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் தனிநபர்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அத்துடன், ஐந்து குழு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலிஸ் தடுப்புக்காவலில் பத்து மரணங்களும், சிறைச்சாலைக் தடுப்புக் காவலில் ஐந்து மரணங்களும் இடம்பெற்றுள்ளன. சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரங்களின் விளைவாக அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த 13 பேர் கொல்லப்பட்டார்கள். இக்கலவரங்களின் போது 123 பேர் காயமடைந்ததுடன், சிறைக்குள் மூவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் தடுப்புக்காவல் வன்முறையின் முறைமை சார்ந்த இயல்பு ஓர் இரகசியமாக இருந்து வரவில்லை. இலங்கை உச்ச நீதிமன்றத்தின் முடிவுகளிலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைகளிலும், பரிந்துரைகளிலும் அது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தன்னிச்சையான கைதுகளும் சாதாரணமாக இடம்பெற்று வருகின்றன. சன்ன பீரிஸ் எதிர் சட்டமா அதிபர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தினால் எடுத்து விளக்கப்பட்டவாறு, கைதுகள் மேற்கொள்ளப்படும் விதம் உரிய செயன்முறை அப்பட்டமாக உதாசீனம் செய்யப்படுவதற்கான சிறந்த ஓர் உதாரணமாக இருந்து வருவதுடன், அது இப்பொழுது சகஜமாகியும் உள்ளது. “சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் நடைமுறைகளின் கீழ் நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கவில்லை; அவர்கள் மங்கலான சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவ்விதம் அவர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகள், தனிநபர் சுதந்திரத்துக்கான அவர்களின் உரிமைகளை கிஞ்சித்தும் பொருட்படுத்தாத விதத்தில் இருந்துள்ளது என்பதை அது காட்டியது. எனவே, ஒரு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய அவர்களது உரிமை ஓர் அவசரத் தேவையாக இருந்து வருகின்றது” என நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இந்தப் பின்புலத்தில், சித்திரவதைக்கு எதிரான பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட வேண்டிய நிலையில், உத்தேச திருத்தங்கள் தற்போதிருந்து வரும் பாதுகாப்புக்களை பலவீனப்படுத்துபவையாக இருந்து வருவதுடன், தடுப்புக் காவலில் இடம்பெறும் வன்முறையை பொலிஸாரும், சிறை அதிகாரிகளும் மறைத்துக் கொள்ளக் கூடிய மற்றொரு வழிமுறையை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கின்றது.
உதாரணமாக, கைதுசெய்யப்பட்ட நபரொருவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டிய அவசியத்தை இல்லாமல் செய்வதற்கென மாஜிஸ்ட்ரேட் நீதவானுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படைகள், பரவலானவையாகவும், நிகழப் போவதை அனுமானித்துக் கூறுபவையாகவும் இருந்து வருகின்றன. அதாவது,பொலிஸ், சிறைச்சாலைகள், சட்ட மா அதிபர் ஆகிய தரப்புக்களால் முன்வைக்கப்படும் வேண்டுகோள், என்ன நடக்க முடியுமென அவர்கள் கருதுவதை அடிப்படையாக கொண்டதாகும். அது நபரொருவருக்கு அரசியல் யாப்பு ரீதியில் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்புக்களை இல்லாமல் செய்வதனை நியாயப்படுத்துவதற்கு போதியதாக இருந்து வர முடியாது. மேலும், இந்த உத்தேச திருத்தம் மாஜிஸ்ட்ரேட் நீதவான் தனது முடிவுக்கு அடிப்படையாக கொள்ளக் கூடிய புறவயமான நிர்ணய அளவுகோல்களை குறிப்பிட்டிருக்கவில்லை. அதன் பொருள், நபரொருவர் ‘வழக்கு நடவடிக்கைகளை சீர்குலைக்க முடியும்” என்பதனை எடுத்துக் காட்டும் அனுமானம் குறித்து அகவயமான புரிதல் மற்றும் தனிப்பட்ட காழ்ப்புக்கள் என்பவற்றால் உருவாக்கப்பட முடியும் என்பதாகும்.
தடுப்புக்காவல் வன்முறை இருந்து வரவில்லை என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு ஒரு சில பரீட்சிப்புக்கள் இருப்பதனை அரசாங்கம் சுட்டிக் காட்டக்கூடிய விதத்தில் குறிப்பிட்ட சில ஏற்பாடுகளையும் உத்தேச சட்டத்திருத்தம் உள்ளடக்குகின்றது. அதாவது, வழக்கை அழைத்து 48 மணித்தியாலத்துக்குள் மாஜிஸ்ட்ரேட் நீதவான் போய், கைதுசெய்யப்பட்ட நபரைப் பார்க்க வேண்டிய தேவை போன்ற ஏற்பாடுகள். எவ்வாறிருப்பினும், இந்த ஏற்பாடு வழக்கு அழைக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாஜிஸ்ட்ரேட நீதவான் அங்கு போக வேண்டுமென வெளிப்படையான விதத்தில் அவசியப்படுத்தவில்லை. ஒரு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான வழக்குகள் அழைக்கப்படும் பின்னணியில், வழக்கு அழைக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் 48 மணித்தியாலத்துக்குள் மாஜிஸ்ட்ரேட் நீதவான் அங்கு விஜயம் செய்யக் கூடிய சாத்தியம் இருந்து வருகின்றதா? குறிப்பாக, பெருந்தொகையானவர்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட வேண்டிய உரிமை இல்லாமல் செய்யப்படுமிடத்து, இதனை மேற்கொள்ள முடியுமா?
மேலும், அத்தகைய காரணங்களின் அடிப்படையில் நேரடியாக ஆஜராக வேண்டிய தேவையை இல்லாமல் செய்யக் கூடிய உச்ச மட்ட காலப் பிரிவினை இந்த சட்டமூலம் குறிப்பிடவில்லை. எனவே, பல வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு கூட நேரடியாக ஆஜராக வேண்டிய தேவை இல்லாமல் செய்யப்பட்டால், அந்த நபர் நீதித்துறை கண்காணிப்பின் பாதுகாப்பினை இழக்கக் கூடியவராக இருப்பார். மாஜிஸ்ட்ரேட் நீதவான் ஒரு விஜயத்தை மேற்கொள்ளத் தவறுமிடத்து, குறிப்பட்ட நிவாரணம் கிடைக்காத காரணத்தினால் நிலைமை மேலும் மோசமடைய முடியும்.
குற்றவியல் நீதி முறைமை தவறிழைக்க முடியாது என்ற கருத்து: ஒரு கட்டுக்கதை
தற்போது போதிய அளவிலான பாதுகாப்புகள் இல்லாத விடயம், உச்ச நீதிமன்றத்தின் முடிவுகளினால் எடுத்துக் காட்டுப்பட்டுள்ளவாறு, தடுப்புக்காவலில் இருக்கும் நபர்கள் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் நீதவானின் மேற்பார்வை நிலவி வந்த போதிலும், அவர்கள் எதிர்கொண்டு வரும் பலவீனங்களை எடுத்துக் காட்டுகின்றது.
கைதுசெய்யப்பட்ட நபரொருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதை தவிர்த்துக் கொள்வதற்குப் போலியான காரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தற்போதைய பாதுகாப்புக்களை இல்லாமல் செய்யும் விடயத்தில் பொலிஸார் ஒரு முக்கியமான வகிபாகத்தை வகித்து வருகின்றனர். விதானாச்சி எதிர் சிரில் ஹேரத் மற்றும் ஏனையோர் வழக்கில் எடுத்து விளக்கப்பட்டவாறு, பொதுவாக பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்று, குறிப்பிட்ட நபரை மாஜிஸ்ட்ரேட் நீதவானின் வீட்டில் ஆஜர்படுத்துவதாகும். இந்த வழக்கில் சந்தேக நபர்களை நீதிபதிகளின் வீடுகளில் ‘ஆஜர்படுத்தும்’ நடைமுறையை நீதிமன்றம் கண்டித்திருந்ததுடன், அது ஒரு தரப்பின் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராவதை தடுப்பதற்கும்… சந்தேக நபர் ஒருவர் சார்பில் ஏதேனுமொரு ஒரு விண்ணப்பம் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்குமென பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு ‘பொதுவான’ நடைமுறை என அந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டியிருந்தது.
ஏக்கநாயக்க எதிர் ஹேரத் பண்டா வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: “மனுதாரர் வீட்டுக்கு வெளியில் இருந்த பொழுது, அவரைப் பார்ப்பதற்கு மாஜிஸ்ட்ரேட் நீதவான் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்தார்.” இது அரசியல் யாப்பின் 13 (2) உறுப்புரையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் நீதவான் ஒருவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய அவரது உரிமையை மீறும் ஒரு செயலாக இருக்கின்றதென நீதிமன்றம் முடிவு செய்தது. “ஆஜர்படுத்துவது என்பது நீதித்துறை அதிகாரிக்கு காட்டுவது அல்லது காட்சிப்படுத்துவது என பொருள்பட மாட்டாது; மேலும், அது சரீர ரீதியில் அவருக்கு அருகில் இருப்பதையும் குறிப்பிட மாட்டாது. ‘ஆஜர்படுத்துவது’ என்பது ஆகக் குறைந்தது தொடர்பாடலுக்கான ஒரு வாய்ப்பை வழங்குவதாக இருந்து வர வேண்டும். மனுதாரருக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. எனவே, 1989ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற கைது தொடர்பாக உடனடியாக ஒரு முறைப்பாட்டை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அப்பெண்மணிக்கு மறுக்கப்பட்டிருந்தது. கைதுக்கான காரணமும், 1989ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி அவர் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைக்கான காரணமும் அவரிடம் தெரிவிக்கப்படவில்லை.”
‘தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நபர்கள் தொடர்பான நீதித்துறையின் மேற்பார்வை தவறுகளுக்கு அப்பாற்பட்டது” என கேள்விக்கு உட்படுத்தாத விதத்தில் அனுமானிப்பதன் மூலம், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு இழைக்கப்படும் பாரிய தீங்கு கொடிதுவக்கு நிஹால், பொலிஸ் சார்ஜன்ட் கொத்தலாவல மற்றும் ஏனையவர்கள் வழக்கில் எடுத்துக் காட்டப்பட்டிருந்தது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இப்படிக் குறிப்பிட்டிருந்தது: “1994 மார்ச் 06ஆம் திகதி வழங்கப்பட்ட மாஜிஸ்ட்ரேட் நீதவானின் விளக்கமறியல் கட்டளையின் இறுதிப் பகுதி மற்றும் தடுத்துவைப்பதற்கான கட்டளைப் பத்திரத்தில் மேல் மூலையில் அவர் எழுதியுள்ள குறிப்பு என்பன, அவர் அந்த விளக்கமறியல் கட்டளையை வழங்கிய போது மனுதாரர் நேரடியாக அவர் முன்னர் பிரசன்னமாகியிருக்கவில்லை என்ற விடயத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அவ்வாறு ஆஜர்படுத்தப்படாவிட்டால் அவற்றுக்கு எந்தப் பொருளும் இல்லை. அவை அநாவசியமானவையாகும். அத்தகைய விளக்கமறியல் கட்டளையொன்றை வழங்குவதற்கு மாஜிஸ்ட்ரேட் நீதவான் ஒருவருக்கு அனுமதி வழங்கும் எத்தகைய சட்ட ஏற்பாட்டையும் எம்மால் கண்டறிய முடியாதுள்ளது. அத்தகைய கட்டளைகள் சம்பந்தப்பட்ட நபரின் சுதந்திரத்தை மிக மோசமான விதத்தில் இல்லாமல் செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த விடயத்தின் பாரதூரமான தன்மை, பொருத்தமானது என அவர் கருதும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அது தொடர்பாக அறிவித்தல் விடுக்க வேண்டுமென இந்த நீதிமன்றத்தின் பதிவாளரை பணிப்பதற்கு எம்மை நிர்ப்பந்திக்கின்றது.”
தடுப்புக் காவல் தொடர்பான நீதித் துறையின் தற்போதைய கண்காணிப்பின் போதாமையை எடுத்துக் காட்டும் மேலும் ஒரு சம்பவம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நபர்களின் அனுபவமாகும். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகளிலிருந்து வெளியில் ஏனைய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். அத்தகைய தடுப்பு நிலையங்கள் அதிகாரமளிக்கப்பட்டவையாகவும், அதிகாரமளிக்கப்படாதவையாகவும் இருக்கின்றன. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID), குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) போன்ற கைது செய்யும் அதிகார அமைப்புக்களால் விசாரணைக்களுக்கென அவ்விதம் அவர்களுடைய தடுப்புக் காவல் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவு 7 (3) இதற்கான இயலுமையை வழங்குவதுடன், அப்பிரிவு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் புலன் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு அந்த நபரை அணுகுவதற்கான உரிமையையும், ‘நியாயமான மணித்தியாலங்களின் போது விசாரணை செய்யும் நோக்கத்திற்கென, எந்தவொரு இடத்திற்கும் அழைத்துச் செல்வதற்கான உரிமையையும், புலனாய்வு நோக்கங்களுக்கென இடத்துக்கிடம் அழைத்துச் செல்வதற்கான உரிமையையும் வழங்குகின்றது.”
நபரொருவர் விளக்கமறியலிலிருந்து வெளியே அழைத்தப்பட்ட பின்னர், அவரை தடுத்துவைக்கக் கூடிய உச்சமட்ட கால அளவு பிரிவு 7 (3) இல் குறித்துரைக்கபட்டிருக்கவில்லை. மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றமொன்றிலிருந்து ஒரு கட்டளையைப் பெற்றுக்கொண்ட பின்னர் நபரொருவர் சிறைக் காவலிலிருந்து வெளியில் அழைத்துச்செல்லப்பட்ட போதிலும், கீழே உள்ள ஆதாரங்கள் எடுத்து விளக்குவதை போல, அந்த ஆட்கள் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்:
“அவர்கள் என்னை விளக்கமறியலில் தடுத்துவைத்ததன் பின்னர், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மீண்டும் என்னை 74 மணித்தியாலங்களுக்கு அவர்களின் பொறுப்பில் எடுத்தனர். என்னை சட்ட மருத்துவ அதிகாரி (JMO) முன்னர் ஆஜர்படுத்தினார்கள். என்னை சிறையிலிருந்து வெளியில் அழைத்துச்சென்று பத்து நாட்களுக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் என்னை களுத்துறை சிறைச்சாலைக்கு அழைத்து வந்தார்கள்”.
“குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) உத்தியோகத்தர்கள் மீண்டும் ஒருமுறை (இரண்டாவது தடவையாக) என்னை தனது தடுப்புக் காவலில் எடுத்தார்கள். அவர்கள் என்னிடமிருந்தும், எனது மனைவியிடமிருந்தும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டார்கள். (விளக்கமறியலிலிருந்து) மீண்டும் என்னை தமது காவலுக்கு எடுத்த பொழுது அவர்கள் என்னை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள். நான்கு நாட்களின் பின்னர் என்னை சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னால் ஆஜர்படுத்தியதுடன், அதே தினத்தன்று களுத்துறை சிறைச்சாலைக்கு அழைத்து வந்தார்கள். எனது கையில் புதிய காயங்கள் இருந்தன.”
மற்றொரு நபர் இப்படிக் கூறியிருந்தார்: “கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் XX/XX/2007 அன்று நான் தடுத்துவைக்கப்பட்டேன். பின்னர் 2009 இல் துறைமுகப் பொலிஸார் வந்து என்னை விளக்கமறியலிலிருந்து வெளியில் அழைத்துச் சென்றார்கள். அவர்கள் ஒன்றரை மாத காலம் அல்லது இரண்டரை மாத காலம் என்னை ஒரு பொலிஸ் சிறை அறையில் தடுத்துவைத்தார்கள். உண்மையை கூற வேண்டும் என்று கூறி என்னை அடித்தார்கள். ஒரு நபரைக் காட்டி இவரை அடையாளம் காட்ட முடியுமா என்று கேட்டார்கள். எனக்குத் தெரியாது என்ற போது மீண்டும் என்னை அடித்தார்கள். அதனையடுத்து, ஏதோ ஒரு ஆவணத்தில் கையொப்பமிடுமாறு என்னிடம் சொன்னார்கள். அது என்ன என்று நான் வினவிய போது, என்னை சிறைக்காவலிலிருந்து அழைத்துவந்திருக்கும் காரணத்தினால் மீண்டும் சிறைக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு நான் கையொப்பமிட வேண்டிய ஓர் ஆவணமாக அது இருந்து வருகிறது என்று அவர்கள் சொன்னார்கள். நான் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, கையொப்பமிட்டேன். பின்னர் அது ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் என்று எனக்குத் தெரிய வந்தது. அவர்கள் அந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் என் மீது இன்னுமொரு வழக்கைச் சேர்த்தார்கள்.”
புலனாய்வு அதிகாரிகள் கட்டளையைப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்திலேயோ அல்லது அவர்கள் அந்த நபர்களை சிறைக்காவலுக்கு திருப்பி அனுப்பிய சந்தர்ப்பத்திலேயோ மாஜிஸ்ட்ரேட் நீதவான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டிருக்கவில்லை என்ற விடயம் சித்திரவதையை சாத்தியப்படுத்தியிருந்தது. நபர்களை சிறைக் காவலிலிருந்து வெளியில் அழைத்துச் செல்வதற்கு முன்னரும், சிறைக் காவலுக்கு மீண்டும் திருப்பி அனுப்ப முன்னரும் உடல் பரிசோதனையொன்றை மேற்கொண்டு, வெளியில் தெரியும் காயங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரு தேவை இல்லாத நிலை காரணமாக, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர்கள் சித்திரவதைக்கு உள்ளாகும் அவர்களது பலவீன நிலை அதிகரித்துள்ளது. இந்த நடைமுறை பொறுப்புக்கூறல் சம்பந்தப்பட்ட கேள்விகளையும் எழுப்புகின்றது. ஏனெனில், விசாரணைக்கென நபரொருவர் சிறையிலிருந்து வெளியில் அழைத்துச் செல்லப்பட்டு, அவர் மீது மோசமான சித்திரவதைகள் இழைக்கப்பட்ட பின்னர் சிறைக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டு, சித்திரவதையின் தாக்கங்கள் காரணமாக சிறையில் மரணமடைந்தால், தமது காவலின் கீழ் இருக்கும் பொழுது மரணம் நிகழ்ந்திருக்கும் காரணத்தினால் சிறை அதிகாரிகள் அதற்கான சட்டப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.
60 சட்டங்களை திருத்துதல்: ஒரு படி முன்னே, எத்தனை படிகள் பின்னே?
சுமார் 60 சட்டங்கள் திருத்தப்பட வேண்டியுள்ளன என்றும், “எதிர்காலத்தில் தான் அமுல்செய்ய திட்டமிட்டிருக்கும் முற்போக்கு சட்ட அமைப்பின்” ஒரு பாகமாக இருந்து வரும் பொருட்டு அவற்றை நவீனமயப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது என்றும் நீதி அமைச்சர் அறிவித்திருந்தார். எனினும், குற்றவியல் நடைமுறை சட்டக் கோவைக்கு உத்தேசிக்கப்பட்டிருக்கும் திருத்தம் முக்கியமாக அரசியல் யாப்பு ரீதியில் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் உரிமைகளை இல்லாமல் செய்கின்றது.
அத்தகைய நபர்கள் சட்டத்தரணிகளுக்கு ஊடாக தமது தரப்பை முன்வைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், கட்புல, செவிப்புல சாதனங்களுக்கு ஊடாக வழக்கு நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்தச் சட்டமூலம் அவசியப்படுத்திய போதிலும், இது சித்திரவதையிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை இழப்பை கவனத்தில் எடுக்கவில்லை. ஏனெனில், நபரொருவர் தான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்குள் இருந்து மட்டும் நீதவானுடன் பேசக்கூடிய நிலை காணப்பட்டால், அவர் சித்திரவதை சம்பவங்கள் தொடர்பான ஏதேனும் முறைப்பாடுகளை எத்தகைய அச்சமும் இல்லாமல் நீதவானிடம் சுதந்திரமாக கூறக் கூடிய நிலை காணப்படாது.
நபரொருவரை மாஜிஸ்ட்ரேட் நீதவான் ஒருவர் முன்னிலையில் ஆஜர்படுத்துவதன் முக்கியத்துவம் உச்ச நீதிமன்றத்தினால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. சன்ன பீரிஸ் எதிர் சட்டமா அதிபர் மற்றும் ஏனையோர் வழக்கில் அவ்விதம் ‘ஆஜர்படுத்தப்படுவதெ’ மெய்யானதாகவும், சட்டநுட்ப ரீதியான ஆஜர்படுத்தல் அல்லாமலும் இருந்து வருமிடத்து மட்டுமே ‘நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவதற்கான உரிமை கைது செய்யப்படும் நபரைப் பொறுத்த வரையில் பயனுள்ளதாக இருந்து வரும்; விடுதலையை கோரும் நபருக்கு உசிதமானதாகவும் இருந்து வரும். உதாரணமாக, நபரொருவர் நீதிபதியின் வீட்டுக்கு வெளியில் வாகனமொன்றில் வைக்கப்பட்டிருக்கும் பொழுது, பொலிஸ் உத்தியோகத்தர் மட்டும் நீதிபதியை சந்தித்து, அவரது கட்டளையைப் பெற்றுக் கொள்வது வெறும் சட்ட நுட்ப செயல் மட்டுமே ஆகும்.”
வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் நபரொருவர் நேரடியாக வழக்கு விசாரணையில் பிரசன்னமாகாதிருந்தால், அது நியாயமான வழக்கு நடைமுறை ஒன்றுக்கான அவரின் உரிமையை மீறும் செயலாக இருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் நபரொருவரை நேரடியாக ஆஜர்படுத்த வேண்டிய தேவையை இல்லாமால் செய்வதற்கு மாஜிஸ்ட்ரேட் நீதவானுக்கு அதிகாரமளிப்பது அவரின் சுதந்திரத்துக்கான உரிமை, சித்திரவதையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை மற்றும் நியாயமான வழக்கொன்றை எதிர்கொள்வதற்கான உரிமை என்பன மீறப்படுவதற்கு வழிகோல முடியும்.
ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு என்பன சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காரணமாக நபரொருவரை நீதிமன்றமொன்றில் ஆஜர்படுத்தாதிருப்பதற்கான சட்ட ஏற்பாட்டை மேற்கொள்வதற்குப் பதிலாக – அந்த விடயம் ஏற்கனவே, நடைமுறையில் போதிய அளவில் கையாளப்பட்டுள்ளது – ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதை தவிர்த்துக் கொள்வதே இதன் உள்நோக்கமாக இருந்து வருவது போல் தெரிகின்றது. ஏனெனில், இந்த நபர்கள் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் பொழுது, அவர்களின் பிரசன்னம் ஊடகங்களில் செய்திகளாக வருவதுடன், அவர்களை சிறைப்படுத்துவதற்கு வழிகோலிய அரசின் செயல்பாட்டையும், அதன் அநீதியான இயல்பினையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. குறிப்பாக, சமூக ஊடகங்களின் பாவனை அதிகரித்து வந்திருப்பதுடன் இணைந்த விதத்தில் நீதிமன்றங்களின் முன்னால் தோன்றுவது ஒரு வகையான பிரச்சார வடிவமாக உருவாகியுள்ளது. அதாவது, தடுத்து வைக்கப்பட்டிருக்கும், சிறையிலிருப்பவர்களின் பரிதாப நிலையை பொது மக்களுக்கு நினைவுபடுத்தும் ஒரு வழிமுறையாகவும், நீதியைக் கோரும் ஒரு வழிமுறையாகவும் அது இருந்து வருகின்றது. ஒரு சில சந்தர்ப்பங்களில் அது பொதுமக்களின் எதிர்ப்புக்கும் வழிகோலுகின்றது. நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதிருப்பதற்கான நியாயப்படுத்தலாக அது பயன்படுத்தப்பட முடியும்.
ஹிஜாஸின் விடயத்தைப் பொறுத்தவரையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தவறுவது அவருடைய ஆளுமையின் பின்னணியில் ஆத்திரத்தினை தூண்ட முடியும். எவ்வாறிருப்பினும், தகுதி வாய்ந்த சட்டத்தரணிகள் மூலம் தம்மைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியாத நிலையில் இருந்து வரும் வசதிவாய்ப்புக்கள் எவையுமற்ற சமூக பொருளாதார பின்னணிகளைச் சேர்ந்த நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாவிட்டால் அந்த விடயம் எவருக்கும் தெரிய வர மாட்டாது. உரிமை மீறல்களுக்கு உள்ளாகக் கூடிய அவர்களுடைய பலவீனத்தை அது மேலும் தீவிரப்படுத்த முடியும்.
உத்தேச திருத்தங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மற்றும் சிறையிலிருக்கும் நபர்கள் என்ற ஒரு பிரிவினர் இருந்து வருகின்றார்கள் எந்த விடயத்தை அனைவரும் மறந்து விடும் ஒரு நிலையை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றது. பார்வைக்குத் தென்படாதவர்களை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
அம்பிகா சற்குணநாதன்